பல்லி ஜென்மம்

This entry is part 16 of 49 in the series 19991203_Issue

கிரேஸி


(மளையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு ஸ்ரீபதிபத்மநாபா)

அந்த நகரத்தின் புகழ்பெற்ற ஒரு ஆஸ்பத்திரியில் ஒரண்டு பல்லிகள் வசித்துவந்தன. ஓர் ஆண்பல்லி, ஒரு பெண் பல்லி. கொடுந்துயரமான ஆஸ்பத்திரி வாழ்க்கையை ஒரு தொடர்நாடகம் போல் பார்த்து அலுத்துப் போன அவை, உடல் நலத்துக்கு தீங்கானது என்ற முன்னறிவிப்பை கிழித்தெறிந்து தாம்பத்யம் அனுபவிக்க ஆரம்பித்து கொஞ்சநாட்கள்தான் ஆகியிருந்தது. அந்தக் கவர்ச்சி முழுதும் தீர்ந்துவிட்டபிறகு தெளிந்த பார்வையுடன் அவை அறை முழுதையும் நோட்டமிட்டன.

சோர்ந்து போய்க் கிடக்கிற இளைஞனும் அவனுடைய காலடியில் அமர்ந்திருக்கும் இளம் பெண்ணும் அப்போது நிச்சலனக் காட்சியாகவே இருந்தார்கள். அந்த இளம்பெண்ணின் கண்களில் எந்த இதயத்தையும் பிளந்து விடுகிற வெறுமையைக் கண்ட ஆண்பல்லி அமைதியிழந்து தவித்தது. இரண்டு பாதங்களின் குளம்படிச் சத்தம் கேட்டு அதன் கவனம் அறையின் கதவு நோக்கி திரும்பியது. நெட்டுக் குத்தலாய் இருட்டைப் பதித்தது போல் அறையில் நுழைந்த அந்தப் பெண்மணியைப் பார்த்து ஆண்பல்லி பெண்பல்லியிடம் சொன்னது.

இங்கே பார், இந்தப் பெண்மணிக்கு சாககிடக்கிற இந்த இளைஞனிடமோ அவனுடைய அழகான மனைவியிடமோ கொஞ்சமும் அனுதாபமோ கருணையோ கிடையாது. நோயில்லாதவன் நோயாளியைப் பார்க்க வருவதே, தன்னுடைய ஆரோக்கியத்தைப் பறைசாற்றி அந்தப் பாவப்பட்டவனின் நிலையை இன்னும் மோசமாக்கத்தான். நிம்மதியாக சாகக்கூட விடமாட்டார்கள் இந்த வர்க்கங்கள். அந்தப் பெண் பேசுவதைக் கேட்டாயானால் உனக்கு அது புரியும்.

அந்தப் பெண்மணி, சித்திரம் வரைந்தது போல் அமர்ந்திருக்கிற இளம்பெண்ணின் தோளில் கைவைத்துப் பெருமூச்சு விட்டாள்.

இதே மாதிரித்தான் என்னோட கஸின் ஒருத்தன் ஆக்ஸிடென்ட் ஆகி, அப்புறம் மஞ்சக்காமாலையில் போயிட்டான்.

இளம்பெண்ணிடமிருந்து பதிலொன்றும் இல்லாமல் போகவே பொங்கி வருகின்ற நிராசையை அடக்கிக் கொண்டு அந்த பெண்மணி தொடர்ந்தாள்.

நீ தளர்ந்துவிடாதே ஆரதி.. உனக்கு சின்ன வயசுதானே ? இதோடேயெல்லாம் வாழ்க்கை முடிஞ்சுடாது. நீ ப்ரெக்னென்டொன்னும் இல்லியே. அப்படி இருந்தா அதை அபார்ட் பண்ணிடு. இந்தக் காலத்தில அப்பன் இல்லாத குழந்தைய வளர்க்கறதுங்கறதெல்லாம் ரொம்பக் கஷ்டம்.

பெண்பல்லி சத்தமிட்டு தன் பலமான எதிர்ப்பைக் காட்டியது.

கஷ்டம்தான் இது! உண்மையை இத்தனை நிர்தாட்சண்யமாய் சொல்லலாமா, ஒரு தன்மையேயில்லாமல் ?

ஆண்பல்லி பொறுமையிழந்து கேட்டது.

நீ ஏன் இப்போது சத்தமிட்டாய் ? மனிதர்கள் எத்தனைதான் முன்னேறியிருந்தாலும், பல்லி சத்தமிட்டால் அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கையுண்டு என்று உனக்குத் தெரியாதா ? முக்கியமாக புதன் கிழமை தென்மேற்கு திசையிலிருந்து பல்லி கத்தினால் பந்து மரணம் நிச்சயம் என்பது அவர்களின் சாஸ்திரம். கொஞ்சநாட்களாய் அந்த இளம்பெண் சந்தேகித்துக் கொண்டிருந்த விஷயத்தில் இதோ இந்த நிமிடம் தீர்ப்பாகிவிட்டது.

பெண்பல்லி குற்ற உணர்வுடன் தலையைத் தாழ்த்திக் கொண்டது.

ச்சே! நான் இந்த அளவுக்கு யோசிக்கவில்லையே!

ஆண்பல்லி தன் இருப்பை உறுதி செய்து கொண்ட பாவத்தில் தொடர்ந்தது.

இப்போதைய மனிதர்கள் தலைச்சோற்றுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதயத்துக்கு அல்ல. நீயே யோசித்துப் பார். தந்தையைத் தின்னி என்ற பட்டத்துடன் பாவம் அந்தக் குழந்தை இந்த உலகத்துக்கு வந்தால் என்ன நிலையாகும் ? அதன் பின் வாழ்க்கையே சூன்யமாகிவிடாதா ?

அறையில் மெளனத்தின் நிழல் அடர்வது கண்டு அந்தப் பெண்மணி கடுத்த வெறுப்புடன் எழுந்தாள்.

நான் இனிமேல் இங்க இருந்தா சரிப்பட்டுவராது. டாக்டர் ரவுண்ட்ஸ் வர்ற நேரமாயிடுச்சு, ம்… மறுபடியும் பார்க்கலாம்.

பட்டுப்புடவையில் மினுப்பு கதவுக்கு வெளியே மறைந்தபோது இளைஞனின் கறுத்துப் போன உதடுகள் அசைந்தன.

ஆரதீ, நீ அப்படிச் செய்வியா ?

இளம்பெண் திடுக்கிட்டாள்.

என்ன ?

என் குழந்தையை நீ கொன்னுடுவியா ?

இளம்பெண்ணின் கண்களிலிருந்து இரண்டு நீர்த்துளிகள் பயணம் தொடங்கின.

முகத்தின் ஓரத்தில் ஒரு நிமிடம் யோசித்து நின்று சூட்டில் விம்முகின்ற நெஞ்சில் வீழ்ந்தன.

அப்போது டாக்டரும் அவர் குழுவும் வேகமாய் அறைக்குள் வந்தனர். ஆண்பல்லி பெண்பல்லியிடம் சொல்லியது.

உண்மையில் இந்த இளைஞனை மரணத்திற்குத் தள்ளியது இந்த பயங்கரமானவன்தான். இந்த ஆள் சாகப்போவது விபத்தினாலுண்டான காயத்தினால் அல்ல. ஜெனரல் பிஸிஷியனுக்கு ரெபர் செய்திருந்தால் அவர் மஞ்சல்காமாலைக்கு சிகிச்சையளித்திருப்பார். இவனுடைய ஈகோ அதற்கு இடம் கொடுக்கவில்லை. இனி சாவது அல்லாமல் வேறு என்ன கதி ?

பெண்பல்லி தன் கணவன் முகத்தை ஆச்சரியமாய் பார்த்தது. அதைப் பார்க்காதது போல் ஆண்பல்லி தனக்குள்ளே சொல்லிக்கொண்டது.

கஷ்டம்தான்! கிஷோர்லாலின் வர்க்கத்தினருக்கு இன்னும் அகந்தை இருக்கிறது. அவருக்கு இறுதியாய் உண்டான ஞானம் இவர்களுக்கு கிடைக்கவும் செய்யாது.

பெண்பல்லிக்கு ஆர்வத்தை அடக்கமுடியவில்லை.

யார் இந்த கிஷோர்லால் ?

ஆண்பல்லியின் கண்களில் போனஜென்மத்தின் நினைவு அறுபட்டு விழுந்த வால்போல் துடித்தது.

அது பொன்குன்னம் வர்க்கியின் ஒரு கதாபாத்திரம். பிரபலமான ஒரு டாக்டர்.

பெண்பல்லியின் வட்டமான கண்களில் அறியாமை நிறைந்து நின்றது.

பொன்குன்னம் வர்க்கியா ?

ஆம், அவர் மலையாளத்தில் ஒரு கதாசிரியராக இருந்தார்.

தன்னுடைய கணவனின் பொது அறிவைக் குறித்து பெண்பல்லிக்கு பெருமதிப்பு தோன்றியது. அதை வெளிப்படுத்தவும் செய்தது.

நீங்கள் வெறும் ஒரு பல்லிதானே ? பிறகு இதெல்லாம் எப்படித் தெரிந்தது ?

ஒரு பெருமூச்சோடு ஆண்பல்லி சொன்னது.

நான் முன் ஜென்மத்தில் ஒரு கதாசிரியனாக இருந்தேன். என் கதைகள்தான் மலையாளத்தின் மிகச்சிறந்த கதைகள் என்று அபிமானம் கொண்டேன். அதனால்தான் இந்த ஜென்மத்தில் மேற்கூரை தாங்குகிற ஒரு பல்லியாக ஆனேன்.

பெண்பல்லி சுயவெறுப்புடன் தலையில் அடித்துக் கொண்டது.

கஷ்டம்! எனக்கு முன்ஜென்மத்தைப்பற்றிய ஒரு நினைவும் வர மாட்டேனென்கிறது. நான் யாராக இருந்தேன் என்றறிய எனக்கு விருப்பமாயிருக்கிறது.

ஆணின் அகந்தை பல்லி ஜென்மத்திலும் கொஞ்சம்கூட தேய்ந்து போயிருக்கவில்லை.

அதற்கு ஞானோதயம் வேண்டும். எல்லோருக்கும் உள்ளே ஒரு போதிமரம் இருக்கிறது. அதைக் கண்டறிந்து போதிமரச்சுவட்டில் தியானத்தில் அமரவேநும். புத்தன் செய்ததுபோல்.

பெண் பல்லி ஆர்வமாய்க் கேட்டது.

சரி உங்களுக்கு என்ன ஞானம் உதித்ததாம் ?

ஆண்பல்லி ஒரு கணம் திடுக்கிட்டது. அதனாலேயே அவரத்தில் அனாவசியமான ஒரு பிரசங்கத்துக்குள் வீழ்ந்தது.

பெண்கள் உங்களுக்கு ஒருபோதும் சாத்தியமில்லாத ஒரு காரியத்தை செய்தான் புத்தன். பிரபஞ்ச துக்கத்தின் காரணத்தை கண்டறிய அரண்மனையையும் கிரீடத்தையும் கைவிட்டான். கட்டிய மனைவியையும் அவள் தந்த செல்லக் குழந்தையையும் நிராகரித்தான். போதிமரச் சுவட்டில் அமர்ந்து தியானத்தின் கதவைத் திறந்தான். அப்போது எல்லாமே தெளிந்து வந்தது.

ஆண்பல்லியின் இணை, பெண்களுக்கே முதலான பிடிவாதத்தை விடுவதற்கு தயாராக இல்லை.

என் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை!

ஆண்பல்லி மீண்டும் திடுக்கிட்டது. வட்டமான கண்களை ஒன்றிரண்டு முறை சிமிட்டி ஒரு வழியாய்ச் சொல்லி முடித்தது.

அகந்தைதான் எல்லா துக்கங்களுக்கும் காரணம் என்ற ஞானம் உதித்தது.

பெண்பல்லி உரக்கச் சிரித்து சப்தமிட்டது.

இதைக் கண்டறியத்தானா பாவம் அந்த ராஜகுமாரன் இத்தனை தியாகங்களையும் சகித்தான்! கஷ்டம்! சமையலறைச் சுவர்களுக்குள் புகையும் கரியும் பிடித்துக் கிடக்கிற பெண்களுக்கு கூடத் தெரியுமே இது!

ஆண்பல்லியின் அபிமானம் உடைந்துபோனது.

அறையிலிருந்து திடாரென எழுந்த அழுகை அவற்றின் கவனத்தை கீழ்நோக்கி திருப்பியது. விஷயம் விளங்கியபோது பெண்பல்லியின் கண்கள் நிறைந்தன.

அதோ பாவம். அந்த இளைஞன் இறந்து கொண்டிருக்கிறான். அவன் உதடுகளில் இப்போதும் என் குழந்தை! என் குழந்தை என்கிற சங்கடம் துடித்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பாவப்பட்டவனின் ஆத்மாவுக்கு பித்ருயோகத்தில் அனுமதி கிடைக்காமல் அலைந்து திரிய வேண்டிய நிலை வருமென்று தோன்றுகிறது.

ஆண்பல்லி கனத்த குரலில் கூறியது.

அந்த இளம்பெண் அவளின் ரத்தத்திலிருக்கின்ற குழந்தைக்கு வெளிச்சத்தை காண்பிக்கவே மாட்டாள், இது நிச்சயம். இன்னொரு வாழ்க்கை அவளுக்காய்க் காத்துக்கொண்டிருக்கிறது.

பெண்பல்லி சிந்தனை வசப்பட்டது. பிறகு அவசரமாய்ச் சொன்னது.

கொஞ்ச நிமிடங்களுக்குள் இந்த அறையில் உறவினர்கள் கூடிவிடுவார்கள். அதற்கு முன் நான் அந்த இளம்பெண்ணின் பையில் அடுக்கி வைத்திருக்கிற உடைகளுக்கிடையில் சென்று ஒளிந்து கொள்ளப் போகிறேன். இனி வருகிற அவளின் வாழ்க்கையைக் குறித்து அறிய எனக்கு மிகவும் ஆவலாக இருக்கிறது.

ஆண்பல்லி திடுக்கிட்டு விட்டது.

பெண்ணே, அபத்தம் ஏதாவது செய்துவிடாதே! அவளுடைய வாழ்க்கையை அவள் வாழ்ந்துகாத்துக் கொள்வாள். நீ உன்னுடைய வேலையைப் பார். என் குழந்தைகளுக்கு அம்மாவாக வேண்டியவள் நீ என்பதை மறந்துவிடாதே.

வாலை ஆட்டிக் கொண்டு பெண்பல்லி திரும்பிப் பார்த்தது.

உங்கள் குழந்தைகளுக்கு அம்மாவாக எந்தப் பெண்பல்லியினாலும் முடியும். ஆனால் இதுநானே கண்டறிய வேண்டிய விஷயம். அது மட்டுமல்ல, பெண்களால் என்னவெல்லாம் சாதிக்கமுடியும் என்றும் எனக்கு அறிய வேண்டும்.

இத்தனையையும் சொல்லிவிட்டு பெண்பல்லி கீழே குதித்து, ஆண்பல்லியின் வாழ்க்கையில் இருந்து மறைந்தது.

***

இந்தியா டுடே பெண்கள் மலர், 95

***

திண்ணை நவம்பர் 20, 1999

***

Thinnai 1999 December 3

திண்ணை

Series Navigation<< சுழலும் மின் விசிறிவிழாக் கொண்டாட வருக >>

கிரேஸி

கிரேஸி