பொங்கிவரும் பெரு நிலவு – குறுநாவல்

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

உஷாதீபன்



சாரதா அந்தத் திரையரங்கை விட்டு வெளியே வந்தவுடன் மனதில் வந்து ஒட்டிக் கொண்டது அந்தத் துக்கம். இதே மனநிலையில்தானே மாலையிலும் இருந்தேன். பின் எப்படி இதை ஒதுக்கிவிட்டு உள்ளே நுழைந்தேன் என்று அவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.
ஆனாலும் இந்த ஆண்கள் பெரிய சாமர்த்தியசாலிகள். எப்படியாவது மனநிலையை மாற்றி தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்கிறார்கள். சட்டென்று இந்த நினைப்பு வந்தபோது பின்னால் அவனும் வருகிறானா என்று திரும்பிப் பார்த்தாள். படிகளில் இறங்கிக் கொண்டிருந்தான் பாண்டியன். தான் கிளம்பிய பின்னால் நிச்சயம் அவனுக்குப் படம் பார்க்க ஓடாது என்பது அவளுக்குக் கண்டிப்பாகத் தெரியும்தான். இருந்தாலும் அதைச் சோதித்துப் பார்க்கவென்று நீ வருவதானால் வா, நான் போகிறேன் என்பதுபோல் விருட்டென்று எழுந்து வந்து விட்டாள்.
கொடுக்கைப் பிடித்துக் கொண்டதுபோல் அலைகிறான். தன் மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பதாகக் காட்டிக் கொள்கிறானே, இது உண்மைதானா? அல்லது வேறு ஏதேனும் நோக்கம் கொண்டதா? அப்படி வேறு நோக்கங்கள் கொண்டதாக இருக்குமேயானால் அது இதற்குள் தெரிந்திருக்காதா? அவனின் பேச்சின் ஏதேனும் ஒரு ரூபத்தில் வெளிப்பட்டிருக்குமே? அப்படியான எதுவொன்றையும் அடையாளம் காண முடியவில்லையே இன்றுவரை!
ஐயோ! இவனிடம் என் மனம் ஏன் இப்படிப் பறிபோகிறது? குழந்தைத்தனமாக என்னையே சுற்றிச் சுற்றி வருகிறானே? அதனாலேயா? அலுவலகத்திலாகட்டும், வெளியிலாகட்டும் என் கவனமாகவே இருக்கிறானே அதனாலேயா? முழுக்க முழுக்க என் மீது பற்று வைத்திருக்கும் ஒரு ஆண்மகன் எனக்கு வேண்டும் என்று என் மனம் அவாவியதே அது இதுதானா? அப்படிப்பட்ட ஒருவனை நான் கண்டுகொண்டேனா?
“சாரதா, காபி சாப்பிடுறீங்களா? கூல் டிரிங்க்ஸா?”
“எனக்குத் தலை வலிக்கிறதுபோல இருக்கு…காபிதான் வேணும்…” ;சொல்லிக் கொண்டே எழுந்தாள்.
“நீங்க இருங்க…இந்தக் கூட்டத்தக் கடந்து வர வேண்டாம்…நா போய் வாங்கிட்டு வர்றேன்…” – சொல்லிவிட்டு எத்தனை உற்சாகமாகப் போனான்? அடியில் கைக்குட்டையை வைத்து அவன் காபி கப்பைப் பிடித்துக் கொண்டு வந்து கொடுத்த விதம்…சூடு ஆறிடுமோன்னு வேகமா வந்தேன்…” என்றவாறே காபியைத் தன்னிடம் கொடு;த்த போது தன் கை பட்டு விடக் கூடாது என்பதில் அவனின் ஜாக்கிரதை உணர்வு!! இவனுக்குத் தன் மீது இருப்பது காதலா? கரிசனமா? வெறும் கரிசனம் என்றால் இப்படி உற்சாகமாக சினிமாவிற்குக் கூட்டிக் கொண்டு வருவானா? தன் மீது உள்ள அன்பின் உந்துதல் காரணமாகத்தானே இதைச் செய்திருக்கிறான்.
பொதுவாகவே ஆண்களுக்குத் திருமணத்திற்கு முன்பு பெண்களிடம் ஏற்படும் ஈர்ப்பும், பிரேமையும் அவர்களைத் தடங்கலற்ற, வரைமுறைகளற்ற மனிதர்களாக ஆக்கி விடும் என்பதுதானே உண்மை! ;இவனிடம் அந்த மாதிரி எந்தவித எல்கை தாண்டுதலும் இல்லாமல் ஒரு நிதானம் தென்படுகிறதே…இந்தத் தனிமையைப் பயன்படுத்திக் கொண்டு பொதுவாக ஆண்கள் அவசரப்படுவதுதானே இயற்கை. ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்வது மூலம் இவன் தன் செய்கைகளில் என்னமாதிரி உயர்ந்து நிற்கிறான்?
“இந்தத் தியேட்டர்ல சீட் நம்பர்,வரிசைங்கிறதெல்லாம் இல்ல…எங்க வேணாலும் உட்காரலாம்…உங்களுக்குப்; பிடித்தமான இடத்துல உட்காருவோம்..”
இவள் அந்தக் கடைசி வரிசை இருக்கையைத்தான் தேர்ந்தெடுத்தாள். தலைக்கு மேல் காற்றாடி இல்லை. ஆனாலும் பரவாயில்லை…தனக்குப் பின்னாடி சுவர்தான் இருக்கிறது. ஆட்கள் கிடையாது. இருந்தால்தானே கவனிக்க? இருப்பவர்கள் எல்லோரும் முன்னால்தான். தாங்கள்தான் அவர்களைக் கவனிக்க வேண்டும். அல்லது சினிமாவைப் பார்க்க வேண்டும். இரண்டில் எது ஸ்வாரஸ்யமாக இருக்கப் போகிறதோ? இடத்தைத் தேர்ந்தெடுத்து உட்கார்ந்த தன் மனதில் ஓடிய எண்ணங்கள் இவைதானே? அப்படியானால் தன் இதயத்தில் உள்ள அளவிற்குக் கூட அவனின் மனதில் உற்சாகமோ, கிளுகிளுப்போ இல்லையா? இடத்தைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தபோதே அவன் தன் மனதை அறிந்திருக்க வேண்டாமா?
இப்படி வெறும் கட்டையாக உட்கார்ந்து படம் பார்க்கவா வந்தான்? நான் அருகில் இருப்பது அவனுக்கு எந்த உற்சாகத்தையும் வழங்கவில்லையா? அவன் மனதை மகிழ்ச்சிப் படுத்தவில்லையா? எனது அங்க லாவண்யங்கள் அவனுக்கு எந்த முனைப்பையும் உண்டு பண்ணவில்லையா? இத்தனை எதிர்பார்ப்பும் தன்னிடம்தானா? பண்பாடு காப்பதற்கும் ஒரு அளவில்லையா?
சே! என்ன ஒரு எதிர்பார்ப்பு இது? வெட்கங்கெட்ட எதிர்பார்ப்பு? ஒரு ஆண் மகன் பற்றிய சிந்தனை இப்படியா மனதைப் பற்றிக் கொள்ளும்? நான்தான் வலிய விழுந்து கிடக்கிறேனா? அவன் நிதானமாகச் செயல்படுகிறானோ?
எண்ண அலைகளில் ஆட்பட்டு என்ன படம் பார்த்தோம் என்பதே தெரியாமல் வெளியே எழுந்து வந்ததுதான் மிச்சம். மோகத்தின் வாசலில் நின்று தினமும் தான் தத்தளிக்கும் தத்தளிப்பு அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
“போவோமா…ஆட்டோ வந்தாச்சு…” – சொன்னபோதுதான் தன்னுணர்வுக்கு வந்தாள் சாரதா.
“நீங்க கிளம்புங்க…நா பணம் கொடுத்துட்டேன்…நாளைக்கு ஆபீசுல பார்க்கலாம்…” – சொல்லிவிட்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தான் பாண்டியன். ஆட்டோ வளைந்து திரும்பியபோது, அந்தப் பெரிய கட்அவுட் அவள் பார்வையில் பட்டது. கண்களில் தீ ஜ்வாலை எரிய கழுத்தில் கிடந்த தாலிக் கொடியை இழுத்துப் பிடித்து அறுக்க முனைவதுபோல் இருந்த அந்தக் கோபாவேசக் காட்சி அவள் மனதை ஒரு நிமிடம் உலுக்கிப் போட்டது.
( 2 )
“சாரதா, இப்டி எல்லாரோடையும் உறால்ல வந்து படுத்துக்கோயேம்மா…அந்த ரூம்ல காற்றே வராதே…” – குரலில் குழையும் கழிவிரக்கத்தோடு மரகதம்மாள் அவளை அழைத்தபோது ‘இல்லம்மா இருக்கட்டும்…’ என்று இவள் பதில் சொல்ல அதனைத் தொடர்ந்து வந்த சாம்பசிவத்தின் கனமான சத்தத்தில் மரகதம்மாள் பதறித்தான் போனாள்.
“அவளுக்கு எங்க இஷ்டமோ அங்க படுத்துட்டுப் போறா…இதல்லாம் சொல்லணுமா…பேசாமத் தூங்கு…”
“இதக் கொஞ்சம் மெதுவாச் சொல்ல வேண்டிதானே…எதுக்கிப்படிக் கத்துறீங்க…பக்கத்து வீட்டுக்குப் பளிச்சுன்னு கேட்கும்…அவங்க அப்புறம் கண்ணு காது மூக்கு வச்சுப் பேசவா…?”
“உனக்கு எல்லாத்துக்கும் பயம்தான்…யார் என்ன பேசினா என்ன? நம்ம பாடு நமக்கு…அவுங்க பாடு அவுங்களுக்கு…”
“இப்டி நீங்க சொல்லலாம்…அவங்க அப்டி இருக்கிற மாதிரித் தெரிலயே…? ஊர் வாயை உலை மூடி வச்சா மூடமுடியும்?”
“சரி…சரி….தூங்கு…உன் பாட்டெல்லாம் காலைல கேட்டுக்கலாம்…”;;.
இருளுக்கு நடுவே அமைதி பரவியது. எதிர்த்த உறாலில் குப்புறப்படுத்துக் கொண்டிருந்த சாரதாவுக்கு உறக்கம் வர மறுத்தது. ப+மியை அணைத்தது போல் படுத்துக் கொள்வதில் எப்போதும் அவளுக்கு ஒரு மகிழ்ச்சி. திருப்தி. தனக்கு ஆதரவு அந்த ப+மித்தாய்தான் என்று அவள் மனம் சொல்லியது. இரு கைகளை நீட்டி அணைத்து இழுத்துத் தன் மார்போடு சேர்த்து ஆலிங்கனம் செய்து கொள்வாள். நெஞ்சில் உள்ள துயரங்களெல்லாம் புகையாய் வெளியேற, தன்னை லேசாக உணருவாள் அந்தக் கணத்தில். கண்கள் செருகிக் கொண்டு வர எப்பொழுது தூங்கினோம் என்பதே தெரியாமல் உடல் அயர்ந்திருப்பாள்.
அந்த மாதிரியான ஒரு தூக்கத்தைத்தான் இன்றும் எதிர்பார்த்தாள். ஆனால் ஏனோ நினைவலைகள் வளையம் வளையமாய் அவளைச் சுற்றிச் சுற்றி வந்து பின்னலிட்டுக் கொண்டிருந்தன. எங்கு திரும்பினாலும் பாண்டியனின் நினைவுகளே அவளை மொய்த்தன. அவனின் பார்வை, மென்மையான உதட்டோரப் புன்னகை, அளந்து பேசும் வார்த்தைகள், கண்ணியத்தோடு பழகும் முறை, அலுவலகப் பணிகளை அக்கறையோடு பொறுப்பாகச் செய்யும் பாங்கு, துளிக் கூட நேரத்தை வீணாக்காமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று கவனம் சிதறாமல் முழு நேரத்தையும் அர்ப்பணிப்பு உணர்வோடு எதிர்கொள்ளும் அளவு கடந்த பொறுப்புணர்வு, இப்படி என்னென்னவோ எல்லாம் அவளைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டேயிருந்தன.
தான் கூட அவனளவு இருந்திருக்கிறோமா என்று நினைத்துப் பார்த்தபோது இல்லை என்றுதான் தோன்றியது அவளுக்கு. யாரிடமும் மனம் சிணுங்காமல், வார்த்தை சொடுக்காமல், சிரித்த முகத்தோடு, கடுமையான சகிப்புத்தன்மையோடு அவனால் எப்படிச் செயல்பட முடிகிறது? ஒரு முழு நாளின் எந்தவொரு நிமிடத்திலும் நிதானம் இழக்காமல் தன் பணியைச் செவ்வனே செய்ய எங்கேயிருந்து வரம் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறான் அவன்? இவனே இப்படியிருந்தால் இவனின் பெற்றோர்கள் எந்தளவுக்குப் பண்பாடு உள்ளவர்களாக இருக்க முடியும்?
அவர்களின் அடையாளம்தானே இவனின் திறமைகளாக வெளிப்படுகின்றன?
அவனைப் பற்றி நினைக்க நினைக்க அவளுக்கு உறக்கம் கலைந்தது. ஆனால் மனசு மயக்கம் கொண்டது. அந்த மயக்கத்தில் தான் மூழ்கிக் கிடப்பதால்தானே இன்று அவனோடு திரைப்படம் பார்க்கச் சம்மதித்துப் போய் வந்தது. அலுவலகத்திலிருந்தே தாமதமாய் வந்ததாக நினைத்துக் கொண்டு அத்தை எதுவும் கேட்கவில்லை. மாமாதான்; எதுவுமே கேட்க மாட்டாரே! யாராவது தன்னைக் கண்டித்துக் கேட்டால் பரவாயில்லை போல்தான் இருக்கிறது. தான் செல்லும் வழி சரிதானா என்பதில் குழப்பம் நிலவுகிறதே! அதை பகுத்துப் பார்த்து உணர்ந்து கொள்ளும் திறன் தனக்கு இருக்கிறதா என்பதிலேதான் ஊசலாட்டம். எப்படிச் சொல்லுவேன் இவர்களிடம்?
“ஏம்மா லேடீஸை பொழுது சாயறதுக்கு முன்னாடி வீட்டுக்கு அனுப்பிச்சிற மாட்டாங்களோ? இவ்வளவு நேரமா வேலை செய்ய வைப்பாங்க?”
“ஒவ்வொரு நாளைக்கு சில வேலைகளை முடிச்சிட்டுத்தான் வர வேண்டிர்க்கு அத்தை…இல்லன்னா நாம லாயக்கில்லைன்னு பேராயிடும்…அப்புறம் வேறே எங்கேயாவது மாத்திட்டாங்கன்னா…?”
“பொம்பளைங்களை அப்படி மானாங்கணியா திடீர்னு மாத்திடுவாங்களாம்மா…அவுங்களுக்கும் தெரியாதா என்ன? நாமதான் சொல்லணும,;..வீட்டுல தேடுவாங்கன்னு….”
“சரி அத்தை, இனிமே சொல்லிடுறேன்….”
அத்தோடு பேச்சை முடித்துக் கொண்டாள் சாரதா. அரசாங்க அலுவலகமானாலும், தனியார் நிறுவனமானாலும் அங்கே பணியாளர்களின் பணியை வரன்முறை செய்ய என்று ஒரு கால நிர்ணயம் வைத்திருக்கிறார்களே. அதுவரையாவது அவர்களின் மனம் கோணாமல், கெட்ட பெயர் ஏற்படாமல், வேலையை உறுதி செய்து கொள்ள வேண்டாமா? பயந்து பயந்துதானே செய்தாக வேண்டியிருக்கிறது. எதிலாவது நம்மையறியாமல் தவறு வந்து விடுமோ என்கிற அச்சம் எந்நேரமும் இருந்துகொண்டுதானே இருக்கிறது? அலுவலகத்தின் வேலைப் பகிர்மாணங்கள், நடைமுறை வர்த்தகங்கள் இன்னும் முழுமையாகப் பிடிபடாதவகையில் ஜாக்கிரதையாகத்தானே இருந்தாக வேண்டும். உடன் வேலை பார்ப்பவர்களைப் பார்த்தாவது தெரிந்து கொள்ள வேண்டுமே! எல்லோரும் நேரத்தை எவ்வாறு செலவழிக்கிறார்கள், தங்கள் பணி சார்ந்து எவ்வாறு உழைக்கிறார்கள், தங்களின் திறமையை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள், என்று எல்லாமும்தான் அவளை முனைப்பாக்குகின்றன.
வாழ்க்கையின் ஆதாரமான இந்த வேலையை வைத்துத்தான் தானும் சமூகத்தில் ஒரு அந்தஸ்துள்ள பிரஜை என்பதாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என்பதில் அவளின் மனம் எத்தனை உறுதிப்பட்டிருந்தது.
என்னென்னவோ சிந்தனைகளெல்லாம் அவளைப் புரட்டிப் போட்டு அல்லாட வைத்த வேளையில் உடல் மீறிய அசதியில் தன்னை மறந்து உறங்கிப் போனாள் சாரதா.
அவள் கனவில் அன்று அவன் வந்தான். அவன்தான் அவன். அவளின் முதல் கணவன். அத்தை மாமாவின் அருமந்தப் பிள்ளை. பால்ய சிநேகிதத்திற்காக என் பெண்ணை உன் பிள்ளைக்குத்தான் தருவேன் என்று ஒத்தைக் காலில் நின்று தங்களின் அத்யந்த நட்பினை நிலைநாட்டிக் கொண்டவர்கள்.; அப்பாவும் மாமாவும். ஒரே குறியாய் நின்று வேறெதையும் பற்றி சிறிதளவும் நினைக்காமல் வாழ்க்கையைத் தொடரப் போகும் ஜீவன்களின் விருப்பம் என்னவாக இருக்கும் என்பது பற்றி இம்மியும் கவலைப் படாமல் கூடாத இரு துருவங்களை இணைத்து வைத்து என்ன பாடு படுத்தி விட்டார்கள்?
( 3 )
“சாரதா, இங்கே தனிமைல உட்கார்ந்திட்டு என்னம்மா செய்ற?”- கேட்டுக் கொண்டே கொல்லைப் புறக் கிணற்றடியில் துவைக்கும் கல்லில் அமர்ந்திருந்த அவளின் முன்னே வந்து நின்றார் ரங்கநாதன்.
“ஒண்ணுமில்லேப்பா…சும்மா வேடிக்கை பார்த்திட்டு உட்கார்ந்திருக்கேன்…”- சொல்லியபடியே அவள் கண்களைத் துடைத்துக் கொள்வதைக் கவனித்து விட்டார் அவர்.
“இந்த பார் நீ இப்டி அழுது அடம் பிடிக்கிறதிலே அர்த்தமேயில்லை. நா சொன்னா சொன்னதுதான். உனக்கு எது நல்ல இடம்னு எனக்குத்தான் தெரியும்…அந்தக் குடும்பத்த எத்தனை வருஷமா நான் கவனிச்சிட்டு வர்றேன்…? அப்படி மானாங்கணியா எங்கேயாவது உன்னைக் கொண்டு தள்ளிடுவேனா? உங்கப்பா மேலே உனக்கு நம்பிக்கை வேண்டாம்?”
பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள் சாரதா. அதுவே ரங்கநாதனுக்கு மேலும் எரிச்சலைக் கொடுத்தது.
“மனசுல வேண்டாத கற்பனைகளையெல்லாம் வளர்த்துக்கிறது. சினிமாவையும், டி.வி.யையும் பார்த்துப் பார்த்து எல்லாமும் கெட்டுப் போச்சு…காதலிக்கிறது, ஓடியாடறது, இதெல்லாம் சினிமாவுக்குத்தான். நடைமுறை வாழ்க்கைக்கு இல்லே…யதார்த்தமான வாழ்க்கைங்கிறதே வேறே. எதெதெல்லாம் யதார்த்தமான வாழ்க்கைல நடக்காதோ அதையெல்லாம்தான் சினிமாவாக் காண்பிக்கிறான். அதப் பார்த்து கண்டமேனிக்கு கற்பனை பண்ணிட்டு உட்கார்ந்திருக்கிறது, மனசைக் கெடுத்துக்கிறது, அதில காண்பிக்கிற மாதிரியே காட்சிகள்ல மிதக்கிறது இதெல்லாம் நடைமுறைக்கு உதவாதம்மா…நீ படிச்ச பொண்ணு…உன்னை உன் அம்மா இருந்து வளர்த்திருந்தான்னா உனக்கு மனசு இப்போ இப்டியெல்லாம்; வேலை செய்யாது. அதுக்கு நா கொடுத்து வைக்கலை. ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு உன்னைக் கண்காணிச்சு வளர்த்திருக்கேன்…அதுக்குக் கெட்ட பேர் ஏற்படுத்திக் கொடுத்திடாதம்மா…”
“என்னப்பா…என்னென்னவோ பேசுறீங்களே…நா இதுவரைக்கும் உங்க மனம் கோணறமாதிரி என்னிக்காச்சும் நடந்திருக்கேனா? இந்த ஒரு விஷயத்துல என்னைக் துளிக் கூடக் கேட்காம முடிவு செய்திட்டீங்களேப்பா…எனக்கு நீங்க செய்ற நல்லது இதுதானா?”
“எது நல்லது எது கெட்டதுன்னு எனக்குத் தெரியும்…என் இத்தனை வயசு அனுபவத்துல நா கண்டுடாததை நீ எனக்குச் சொல்லித் தரப் போறியா? சாம்பசிவம் குடும்பத்தை பால்ய காலத்துலேர்ந்து அறிவேன் நான்;. நானும் அவனும் ஒண்ணாப் படிச்சவங்க…அவன் கேரக்டர் எனக்குத் தெரியும்…என் கேரக்டர் அவனுக்கு நல்லாத் தெரியும்…ஒருத்தரை ஒருத்தர் ஆழமாப் புரிஞ்சவங்க…இஇதவிடச் சிறந்த இடம் ஒண்ணை உனக்குப் பிடிச்சிட முடியும்னு எனக்குத் தோணலை. உறவுகள்லயே தேடிப் பிடிச்சிடலாம்தான். ஆனா வாரிசு இல்லாமப் போகுறதுக்கு வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க…அவன் குடும்பத்தோட அவங்கப்பா, தாத்தா காலத்துலேர்ந்து பழக்கம் நமக்கு. ஒண்ணோட ஒண்ணா இருந்தவங்க, படிச்சவங்க…வளர்ந்தவங்க…படிப்படியா இடம் பெயர்ந்து வந்ததுலேயும் அந்த ஒற்றுமை உண்டு. எல்லாத்தையும் யோசிச்சுத்தான் இந்த முடிவு. இது இப்போ எடுத்த முடிவில்லே. என் பால்ய கால நண்பனோட பால்ய வயசுல படிச்சு வளர்ந்த காலத்துலயே நாங்க ஒருத்தருக்கொருத்தர் பேசி வச்சிக்கிட்டது இது. அப்படீன்னா எவ்வளவு நெருக்கமா இருந்திருப்போம்னு நினைச்சுப் பாரு…அவனுக்கொரு பொண்ணு இல்லாமப் போயிடுச்சு…இருந்திருந்தா உங்கண்ணனுக்கு என்னைக்கோ பேசி முடிச்சிருப்பேன்…இப்பவும் ஒண்ணும் குடிமுழுகிப் போயிடலை…அவுங்க உறவுல வேறே யார் இருக்கான்னு பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்…வசமாக் கிடைச்சா உங்கண்ணனுக்கு முடிச்சிடுவேன். அவன் நிச்சயம் உன்னை மாதிரி அழுதிட்டிருக்க மாட்டான். நா சொல்ற இடத்துல சரின்னுவான்…உன்னை நினைச்சாத்தான் எனக்குப் பெருத்த கஷ்டமாயிருக்கு. இன்னும் உன் பேர்ல நம்பிக்கை வர மாட்டேங்குது எனக்கு. தினசரி பயமாத்தான் இருக்கு. சாம்பசிவம் ஏதோ கோயில் குளம்னு வேண்டிக்கிட்டிருக்கான். குலதெய்வ வழிபாடுன்னு ஒண்ணு இருக்காம்…அதயும் முடிச்சிக்கிறேன். அப்புறம் கல்யாணத்தை வச்சிக்குவோம்னு சொல்றான்…நிச்சயத்தையே பிறகுதான் நிர்ணயம் பண்ணனும்ங்கிறான். என் பேரைக் காப்பாத்தும்மா…அவனுக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாத்தும்மா…இப்போ என் மானம், மரியாதை, என் கௌரவம் எல்லாமும் உன் கையிலதான்….” – குலுங்கிக் குலுங்கிச் சிறு குழந்தையைப் போல் அழுத தந்தையின் நிலை பார்த்து வாயடைத்துப் போனாளே சாரதா.
“;…எனக்குப் பிடிக்கலைப்பா…” – தன் அழகிலும் வனப்பிலும் தன்னையே இழந்திருந்த அவளின் அதீதக் கற்பனைக் கோட்டைகள் எல்லாமும் சரிந்தன. அவளின் விருப்பத்தை வாய் விட்டு, மனம் விட்டுக் கேட்க என்று யாருமே இல்லை. எல்லோருமே சொல்லிக் கொண்டார்கள்.
‘;தங்கமான பொண்ணு….என்ன அழகு…என்ன குடும்பப் பாங்கு…ராஜப்பாவுக்கு யோகம்தான்…”
( 4 )
மணவறையில் கழுத்தில் தாலி ஏறும்போது கூட கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தாள் சாரதா.
“பொண்ணு முகத்துல ஏன் சந்தோஷமேயில்ல?” – கேட்கத்தான் செய்தார்கள்.
“தாயில்லாத பொண்ணு…அம்மா நினைப்பு வந்திருக்கும்…அண்ணனும் அப்பாவும் இருந்து முடிச்சு வச்சிருக்காங்க…என்ன பாடு பட்டிருப்பாங்க…இப்போதானே மன பாரமெல்லாம் இறங்கியிருக்கும்….”
காதில் விழுந்த பேச்சுக்கள் எல்லாம் அவர்களுக்கு ஆதரவாகத்தான் வந்தனவே தவிர தனக்கு, தன் உள் மன எண்ணங்களுக்கு மதிப்பளித்து ஒன்று கூட இல்லையே…!
கண்ணீரோடுதான் புறப்பட்டு வந்தாள் சாரதா.
“உன் மனசுக்கு முழு இஷ்டமில்லாமத்தான் இந்தக் கல்யாணத்தப் பண்ணியிருக்கேன். எனக்கே நல்லாத் தெரியத்தான் செய்யுது…ஆனாலும் உன் வாழ்க்கை நல்லாயிருக்கணும்ங்கிற ஆதங்கம்தாம்மா…இப்போ நீ போகிற இடத்துல நிச்சயம் நீ சந்தோஷமா இருப்பே…நாளாவட்டத்துல உன் மனசு மாறும்…ஆறுதலடையும்…உன் வாழ்க்கை நலம் பெறும்…போயிட்டு வாம்மா…”
( 5 )
“நீ ரொம்ப அழகாயிருக்கே தெரியுமா?” – ராஜப்பா அவள் தாடையை விரல்களால் திருப்பி ஆசையாய்ச் சொன்னான். முகத்துக்கு நேரே அருகில் தன் முகத்தை வைத்துக் கொண்டு ஆசை பொங்கப் பொங்கப்; பார்த்தான் அவளை. அப்பொழுதுதான் வரைந்து வண்ணமிட்ட சித்திரம் போல் இருந்தாள் சாரதா. அவளின் அகன்ற நெற்றியை அதில் முன்னே வந்து விழுந்திருக்கும் முடிக் கற்றையை, தீட்டப்பட்டது போல் சீராகப் காணப்படும் இமைகளை, அவளின் கூர்மையான மூக்கினை, இருபுறமும் அழகுற மென்மையாய் மடிந்து லேசாய்ச் சிவந்து வளைந்து நிற்கும் அவள் காதுமடல்களை என்று ஒவ்வொன்றாய்ப் பார்த்துப் பார்த்து ரசித்தான்.
“இந்தக் காதுகளுக்குப் பின்னால, ப+னை முடி வளர்ந்து, சிவப்பா, தளதளன்னு இருக்கே அங்கே ஒரு முத்தம் கொடுக்கலாமா? அழக எங்கெங்கெல்லாம் ஒளிச்சு வச்சிருக்கான் இறைவன்…பெண்களுக்கே தங்களோட அழகு இப்டி இப்டியெல்லாம் வியாபிச்சிருக்குன்னு தெரியாது போலிருக்கு…அதை ஆண்கள் ரசிச்சுச் சொல்றபோதுதான் அவங்களாலேயே உணர முடியுதுன்னு நினைக்கிறேன்…நீ எனக்குக் கிடைச்சது என்னோட பெரிய அதிர்ஷ்டம்…”
“அது சரி, நான் உங்களை ஒண்ணு கேட்கலாமா?”
“இதென்ன கேள்வி? தாராளமாக் கேளேன்…என்ன தயக்கம்?”
“உங்களுக்கெதுக்கு ராஜப்பான்னு பேர் வச்சிருக்காங்க….?”
“இந்தப் பெயர் பிரச்னையை சின்ன வயசிலேயிருந்து நானும்தான் அனுபவிச்சிக்கிட்டே இருக்கேன்…முன்னோர்கள் பெயர் வைக்கணும்ங்கிறது மரபு. அப்பத்தான் சந்ததியோட தொடர்ச்சி ஞாபகத்துல வந்துக்கிட்டேயிருக்கும்பாங்க…ஆனா அந்தப் பெயர்கள் நல்ல அழகான பெயர்களா இருந்தாத்தான் போச்சு…இல்லன்னா வைக்கிறதுக்கு ஒண்ணு, கூப்பிடறதுக்கு ஒண்ணுன்னு வச்சிடறாங்க…அப்டி அமைஞ்சதுதான் என்னோட பெயரும்…ஆனா என்னை எல்லாரும் ராஜா ராஜான்னுதான் கூப்பிடுவாங்க…நீயும் அப்டியே கூப்டிட்டுப் போயேன்…எம்பேரு என்னெவோ இருந்திட்டுப் போகுது…இதிலென்ன வந்தது உனக்கு?”
அதிலிருந்துதான் ஆரம்பித்தது ஒவ்வொன்றாய். அவனின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் புதிது புதிதாய் இருந்தன சாரதாவுக்கு. ஒரு ஆபீஸில் வேலை பார்ப்பவன் இப்படியா இருப்பான்?
“என்ன நீங்க, சினிமா நடிகர் படத்தையெல்லாம் உங்க பெட்டில ஒட்டி வச்சிருக்கீங்க?”
“அவர் என்னோட உயிர் நடிகர். அவர் நடிப்புன்னா எனக்கு அவ்வளவு உசிரு…அதனாலதான்…” சாதாரணமாய்ச் சொன்னான் ராஜப்பா.
“அதுக்கும் ஒரு வயசில்லையா? நீங்க ஒரு ஆபீஸ்ல வேலை பார்க்கிறவரு…வெட்டியாத் திரியறவன் செய்ற வேலையெல்லாம் செய்தீங்கன்னா?”
“இந்தா பாரு, இது உனக்குச் சம்பந்தமில்லாத வேலை…நீ வர்றதுக்கு முன்னாடியிருந்து பல வருஷமா நா இப்டித்தான் இருக்கேன்…என்னை எவனும் ஒண்ணும் சொன்னதில்லை. எங்கப்பா உட்பட. இப்போ புதுசா நீ ஆரம்பிக்காதே…”
“இனிமே இந்தச் சினிமாப் பத்திரிகையெல்லாம் வாங்குறத நிறுத்திடுங்க…அநாவசியமாக் காசை செலவழிக்காதீங்க…டெய்லி ஒரு நிய+ஸ் பேப்பர் மட்டும் வேணா வாங்குங்க…அவ்வளவுதான்…”
“தடை போடுறியா…நேத்து வந்தவ நீ…இன்னைக்கு என் காரியங்களுக்குத் தடை போடுறியாக்கும்…போடீ ஒன் ஜோலியப் பார்த்திட்டு…”
எந்தவொன்றையும் கேட்கக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டவன் போல் இருந்து கொண்டிருந்தான் ராஜப்பா. மனைவி என்பவள் தனக்கு அடங்கிக் கிடப்பவள் என்பது ஒன்றே அவனின் எண்ணமாக இருந்தது. எனக்கு அட்வைஸ் பண்ற வேலையை விட்டிடு…உன் ஜோலியப் பார்…இதுதான் அவனின் பதிலாக இருந்தது.
சினிமாப் புத்தகங்களாக வாங்கி நிறைப்பது…சினிமாப் பாடல் கேசட்டுகளாக, சி.டி.க்களாக வாங்கி வாங்கிக் குவிப்பது, சதா சர்வ காலமும் கேட்டுக் கொண்டேயிருப்பது, தூங்கும் நேரம் தவிர, ஆபீஸ் நேரம் தவிர (இல்லை, ஆபீஸில் வேறு என்ன செய்கிறானோ!) எந்நேரமும் சினிமாவும், பாட்டும், கூத்துமாகவே இருந்தான். இது சாரதாவுக்குத் தாங்க முடியாத எரிச்சலை ஏற்படுத்தியது. அவனின் அப்பா அம்மாவே அவனை ஒன்றும் சொல்வதில்லையே! என்ன பிள்ளை வளர்த்திருக்கிறார்கள்? ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கக் கூடியவனின் தினசரி நடவடிக்கைகளா இவை?
அவனது செயல்பாடுகளில் எந்தவொரு முதிர்ச்சியும் இல்லையே? வயது வளர வளர ஆளுக்கும், அவனது செய்கைகளுக்கும் ஒரு அனுபவ முதிர்ச்சி வேண்டாமா? சரியான தருணம் ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்; சாரதா.

( 6 )
அப்பொழுதுதான் அவனுக்கு மாறுதல் வந்தது. அன்றாடம் போய் வந்து விடக் கூடிய தூரமாய் இருந்தால் பரவாயில்லை. ஆனால் அப்படி அமையவில்லை. முன்னூறு கி.மீ. க்கு அப்பால் கொண்டு போட்டால்? என்ன காரணத்திற்காக இந்தத் திடீர் மாற்றம்? என்று கேட்ட போது அவன் சொல்லவேயில்லை. மாநிலம் முழுக்க எங்கே வேணாலும் போடுவாங்க…யார் கேட்க முடியும்? கிளம்பு…கிளம்பு…என்றான் சர்வ சாதாரணமாய்.
தனிமையின் சுதந்திரம் பிடித்துத்தான் இருந்தது அவளுக்கு. இங்கேயாவது ஒவ்வொன்றுக்கும் தன் அம்மாவையும், அப்பாவையும் கேட்டுக் கொண்டிருந்தான். இனிமேல் தன் பேச்சைத்தானே கேட்டு ஆக வேண்டும் என்பதை நினைத்த போது ஒரு திருப்தியும் ஏற்பட்டது அவளுக்கு.
ஆனால் அங்கு சென்ற இடத்தில் அவன் இப்படி மாறுவான் என்று யார் கண்டது?
“வாங்க மாலினி…சும்மா உள்ளே வாங்க…” – கையைப் பிடித்து இழுக்காத குறையாக ஒரு பெண்ணைக் கூட்டி வந்து நின்ற போது அதிர்ந்து போய்விட்டாள் சாரதா.
“இவுங்க என் ஆபீஸ்ல கம்ப்ய+ட்டர் ஆபரேட்டர். பேரு மாலினி…” – அவன் சொன்ன போது ‘உறலோ’ என்று சொல்லிக் கொண்டு அவள் கை கொடுக்க வந்தபோது ஓங்கி அவள் கன்னத்தில் பளார் என்று ஒன்று கொடுக்கலாமா என்றுதான் வந்தது இவளுக்கு. தொலையட்டும் என்று கைகளைக் குவித்து வணக்கம் சொல்லி வைத்தாள். அவளை அழைத்துக் கொண்டு மாடி ரூமுக்குப் போன ராஜப்பா வெகு நேரம் கீழே வராதது வேறு அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. பெரிய அதிர் வேட்டுச் சிரிப்பும், கைதட்டலும், கேட்டுக் கொண்டேயிருந்தது.
“ஏ…சாரதா…”எங்க ரெண்டு பேருக்கும் காபி கொண்டு வா…” என்று அவன் சொன்ன போது வேண்டா வெறுப்பாகத்தான் செய்தாள். அப்பொழுது கூட அவள் முன் திட்டுகிறோமே என்ற உணர்வு இல்லாமல் அவன் சொன்னான்.
“சூடாக் கொண்டு வரணும்னு கூடவா உனக்குத் தெரியாது. இப்டி ஆறிப் போய்க் கொண்டு வந்திருக்கியே? போய் சுட வச்சுக் கொண்டுவா…” என்றபோது அவள்கூட “இருக்கட்டும் ராஜா…பரவால்ல இதையே குடிப்போம்…” என்றாள்.
“அது எதுக்கு? காபின்னாலே அது சூடா இருந்தாத்தான் நல்லாயிருக்கும்..ஆறிப்போயா குடிக்கிறது? எது சூடுன்னு உனக்குத் தெரியுமா, இல்ல அதையும் சொல்லித் தரணுமா? எது குடிக்க முடியாதோ அதுதான் சூடு…தெரிஞ்சிக்கோ…” – சொல்லிவிட்டு அவன் பெரிதாகச் சிரித்தபோது அவளும் உடன் சேர்ந்து சிரித்தது தாங்க முடியாத வேதனைதான் அன்று.
அவள் கிளம்பும்போது அவன் சொன்னான். “இவுங்கதான் எனக்குக் கம்ப்ய+ட்டர் சொல்லித் தர்றாங்க எங்க ஆபீஸ்ல…ஆகையினால தினசரி சாய்ந்திரம் லேட்டாத்தான் வருவேன்…சும்மா மொண மொணங்கிற வேலை வச்சிக்காதே….”
அவன் சொன்னதோடு நின்றதா அவள் பழக்கம்? எத்தனை தூரத்திற்குக் கொண்டு சென்று விட்டது அவனை?
பொறி கலங்கிப் போய் எழுந்தாள் சாரதா. தலை கனத்தது. விண் விண் என்று தெறித்தது.உடம்பெல்லாம் வியர்த்திருந்தது. தலை முடிக்குள் கைகளை விட்டுக் கோதினாள். வியர்வை கொப்பளித்திருந்தது. அவனோடு வாழும் காலத்திலும் தன்னைக் கலங்கடித்தவன், இன்று தூக்கத்திலும் இந்தப் பாடு படுத்தி விட்டானே? இப்படியா தொடர்ச்சியாகக் கனவுகள் வரும்? ஒரு நிகழ்வு கூட விடுபடாது வரிசையாக வந்து தொல்லைப் படுத்துகின்றனவே?
அவனோடு தனியாகப் போய் என்ன பாடு படுத்தி விட்டான்? அப்பா, அம்மாவிடம் அத்தனையையும் சொல்லியிருந்தால் நம்பியிருப்பார்களா அல்லது அவனுக்கு ஆதரவாகப் பேசுவார்களா? காலத்தின் கோலத்தில் அவனுக்கு அந்த அதிர்ச்சி மட்டும் ஏற்படாமலிருந்தால், அதனால் அவன் மரிக்காமல் இருந்திருந்தால் ஒரு வேளை அவனது அட்டூழியங்களையெல்லாம் இவர்கள் தெரிந்து கொண்டிருக்கக் கூடுமோ?
அன்று அதற்கு மேல் தூக்கம் பிடிக்க மறுத்து விட்டது அவளுக்கு. கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் அமர்ந்தவளாய் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்வதில் முனைப்பானாள் சாரதா.
( 7 )
“மிஸ்டர் பாண்டியன், நாளைக்கு சென்னைல நடக்கப் போற கோ-ஆர்டினேஷன் மீட்டிங்கிற்கு என்னோட நீங்களும் வர்றீங்க…அதுக்கான ரிப்போர்ட்ஸெல்லாம் தயார் பண்ணிக்குங்க…பட்ஜெட் ஃபிகர்ஸெல்லாம் கரெக்டா இருக்கட்டும்…குறிப்பா நமக்கு ஒவ்வொரு nஉறட்லயும் இன்னும் எவ்வளவு தேவைங்கிறதைக் கரெக்டா எடுத்து வச்சிக்குங்க…நா கேம்ப் போறேன்…நாலு மணிக்கு வர்றேன். வந்ததும் நாம உட்கார்ந்து டிஸ்கஸ் பண்றோம்…ஓ.கே…”
சொல்லிவி;ட்டு சீஃப் கிளம்பிப் போனதும் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டான் பாண்டியன். திடீரென்று இப்படிச் சொன்னால் எப்படி? ஒரு இரண்டு நாள் கால அவகாசமாவது வேண்டாமா? தன் அறையிலிருந்து அலுவலகத்தின் உள்ளே பார்த்தான். பெரும்பாலான சீட்கள் காலியாகக் கிடந்தன. அந்த எல்லோரையும் கேட்டுத்தான் பாஸ் சொல்லிப் போன எல்லாவற்றையும் இவன் தயாரித்தாக வேண்டும். குறிப்பாக சாரதா செக்ஷன்தான் முக்கியம். பட்ஜெட் சம்பந்தப்பட்டது ப+ராவும் அவள் பிரிவில்தான் உள்ளன. அவளிடமும் எல்லாமும் தயாராய் இருக்கின்றனவோ என்னவோ? இல்லையென்றால் தானே எல்லாவற்றையும் தயார் செய்தாக வேண்டும். மலையையே புரட்டிப் போடுவது போலான வேலைகளைச் சுமத்தி விட்டுப் போய் விட்டார். எப்படி முடிப்பது என்ற மலைப்புடனேயே கணினிக்கு முன் அமர்ந்து ஒவ்வொரு கோப்புகளாகத் திறந்து தேவையானவைகளைத் தேட ஆரம்பித்தான் பாண்டியன்.
தன் அறையிலிருந்து சாரதாவின் இருக்கை இவனுக்கு நன்றாகத் தெரியும். அவளின் பார்வை அடிக்கடி இங்கே பதிந்திருப்பதை இவன் இங்கிருந்தே கவனித்துக் கொண்டுதான் இருந்தான். சமீபகாலமாகத் தான் அவள் மனதை மிகவும் சஞ்சலப்படுத்தி விட்டோமோ என்று தோன்றியது இவனுக்கு. தன்னையறியாமல் அவள் மேல் ஒரு கவனம் தனக்கு விழுந்திருப்பதை உணர்ந்தான் இவன். அதுவே அலுவலகப் பணிகளில் அவனுக்கு ஒரு கவனச் சிதைவை ஏற்படுத்தியிருந்தன. அதையும் உணர்ந்துதான் இருந்தான். இம்மாதிரி அவன் என்றுமே இருந்ததில்லை. ஆனாலும் மனதை ஒன்று கூட்டி எதிலும் கவனத்தைச் செலுத்த முடிய வில்லை அவனால். சிதைந்த தன்னின் கனவுகளுக்கு முன்னால் நளினிதான் அடிக்கடி வந்து கைகொட்டிச் சிரிக்கிறாள். அவளை, அவளின் இருப்பினை இவனால் கட்டுப் படுத்த முடியாது போனது தன்னின் பெரிய பலவீனம் என்ற நினைப்பு இவனை வாட்டி எடுக்கிறது இன்று வரையிலும்.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு கதையிருக்கிறது. அவரவர்களின் அனுபவங்கள் அவர்களை எங்கெங்கோ கொண்டு நிறுத்தி விடுகின்றன. யாரைச் சொல்லி என்ன பயன்? வாழ்க்கை சிறப்பாகத்தான் அமையும், சந்தோஷமாகத்தான் வாழ்வார்கள் என்று எதிர்பார்த்து, ஆசீர்வதித்து, அனுப்பி வைக்கிறார்கள் பெரியோர்கள். ஆனால் காலம் எப்படியெல்லாம் கைகொட்டிச் சிரிக்கிறது? யாருக்கு எது எப்படி அமையும் எப்படி நடக்கும் என்பதை எவராலுமே அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லையே? நளினியைப்பற்றி இப்பொழுது நினைக்க ஆரம்பித்தால், அந்தச் சிந்தனைக்குள் புகுந்தால் இன்று இங்கே செய்து முடிக்க வேண்டிய பணிகளைச் செவ்வனே முடிக்க முடியாது. ஆகையினால் அதைத் தூக்கி மூலையில் போடு என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் பாண்டியன். கணினியில் திறந்த ஒவ்வொரு அட்டவணைகளிலும், இன்றைய தேதியில் இருக்கும் பணி முன்னேற்றத்திற்கான எண்களைச் சேர்க்க ஆரம்பித்தான். அவற்றை முழுமையாக உறுதி செய்து கொள்ள அவன் அந்த அலவலகத்தின் ஒவ்வொரு பிரிவாகச் செல்ல வேண்டியிருந்தது. ஒவ்வொரு பிரிவிலும் இருந்தவர்களிடம் கெஞ்சிக்; கூத்தாடி தேவையானவைகளைப் பெற்றுக் கொண்டு, கடைசியாக அவன் சாரதாவின் இருக்கைக்கு வந்தான். அப்போது மதியச் சாப்பாட்டிற்கு உணவு அறைக்குப் போவதற்காகக் கிளம்பிக் கொண்டிருந்தாள் சாரதா.
( 8 )
“இன்னிக்கு சீக்கிரமே பசிச்சிடுச்சோ? கரெக்டா ஒன் தர்ட்டிக்குக் கிளம்பிட்டீங்க…?” – கேட்டுக் கொண்டே பாண்டியன் எதிரே போய் நின்றான். ரொம்பவும் உரிமையோடு அவள் எதிரிலே போய் அத்தனை நெருக்கமாக நின்றது அவளையே சற்றுக் கூச்சப்படுத்தத்தான் செய்தது. சுற்று முற்றும் அவள் பார்வை ஒரு முறை சென்று மீண்டது.
“சொல்லுங்க…ஏதாச்சும் தேவைன்னா கொடுத்துட்டுப் போறேன்…அவ்வளவுதானே?”- சொல்லியவாறே காரியரை அருகே வைத்து விட்டு மீண்டும் அமர்ந்தாள் சாரதா.
“கொடுத்துட்டுப் போறேன்னு நீங்க சொல்றதுலேர்ந்தே தயாரா எல்லாம் வச்சிருக்கீங்கன்னு அர்த்தமாகுது…எல்லாரும் அப்டி இருந்துட்டாப் பரவாயில்லே…”
“இல்லாம என்ன? அவுங்கவுங்க சீட்ல எல்லாரும் பர்ஃபெக்டாத்தான் இருப்பாங்க…”
“எப்டி இருக்காங்களோ தெரியாது…ஆனா ஏதாச்சும் ரிப்போர்ட்சுக்குன்னு கேட்கப் போனா முதல்ல சங்கடப்படுறாங்க…அது தெரிஞ்சிருக்கு எல்லாருக்கும்…யாரும் இந்தாங்க பிடிங்கன்னு தூக்கிக் கொடுக்கிறதில்லை…அப்டிக் கொடுத்திட்டாங்கன்னா என் வேலை சுலபமாயிடும்…”
“என் சீட்ல உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க…தரத் தயாரா இருக்கேன்…”
“வேறென்ன மேடம்…சோஃபார் எக்ஸ்பென்டிச்சர்…ப்ரொப்போஸ்டு எக்ஸ்பென்டிச்சர்…அமௌன்ட் ரெக்கொயர்டு, ப்ரொப்போஸ்டு ஃபார் நெக்ஸ்ட் இயர்…இதுதான்…”
“இந்தாங்க பிடிங்க…” – அழகாக ஒரு அட்டவணையை எடுத்து அவள் நீட்டியபோது அசந்து விட்டான் பாண்டியன்.
“என்ன மேடம்…இப்டித்தான் நான் கேட்பேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்…ரெடியா வச்சிருக்கீங்க…?”
“இது என் சீட்ல யாருக்கும் பதில் சொல்றதுக்கு ஏதுவா நானா தயார் பண்ணி வச்சிருக்கிறது. இதுக்கு ஒவ்வொண்ணுக்கும் ஸ்பிலிட் அப் வேணுமா சொல்லுங்க…அதையும் வேணா தர்றேன்…”
“அது எதுக்கு?”
“ப்ரொபோஸ்டு ஐடெம்ஸ் இருக்குல்ல…அதுல வேறுபடலாமில்லியா? ஏன் இவ்வளவு கேட்குறீங்கன்னு கேட்டா பதில் சொல்லணுமே…பதில் ரீசனபிளா இருந்தாத்தானே கேட்டது கிடைக்கும்…”
“கேட்டமாதிரியே அத்தனையையும் கொடுத்துடுற காலமெலெல்லாம் இப்பொ இல்லையே! எவ்வளவுதான் நீங்க திட்டமிட்டு ப்ரபோஸ் பண்ணினாலும் மேலே எவ்வளவு கொடுக்கிறாங்களோ அவ்வளவுதான்….”
“இருந்தாலும் ஒரு மீட்டிங்குக்கு தயார் நிலைல போக வேண்டியது நம்ம கடமையில்லையா?”
“யெஸ்…யெஸ்…ஐ அக்ஸெப்டட்…ஓ.கே. நா வெயிட் பண்றேன்…நீங்க போய் சாப்டிட்டு வாங்க…”
சரி என்று கிளம்பினாள் சாரதா.
கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்தான் பாண்டியன். ஏனோ அந்த இடத்தை விட்டுப் போக மனசு வரவில்லை அவனுக்கு. சாரதா இல்லையென்றாலும், எதிரே அவள் இருப்பது போல் கற்பனை செய்து கொண்டு அப்படி அமர்ந்திருப்பதில் ஒரு ஆறுதலிருந்தது. அவள் இருக்கையின் மேல் அவன் பார்வை மெல்ல ஓடிக் கொண்டிருந்தது. மேஜையில் அறிக்கைகளை அவள் அடுக்கி வைத்திருந்த விதம், சைடு ராக்கில் கோப்புகள் வகை வாரியாகப் பிரித்து அடுக்கப்பட்டிருந்த தன்மை, அவைகளுக்கு அவள் தலைப்புக் கொடு;த்திருந்த பெயர்கள், எல்லாமும் ஒரு தேர்ந்த பணியாளரின் அடையாளமாகத் தெரிந்தன. புதிதாக யார் அங்கே பொறுப்பெடுத்தாலும், உடனடியாக அமர்ந்து வேலைகளைக் கவனித்து விட முடியும் என்கிற விதமாய் அந்த இருக்கைக்கென்று இன்னின்ன பணிகள்தான் என்பதை அவள் சீராக வரையறுத்திருந்த விதமும், மேஜையின் தகவல் பரப்பில் என்னென்ன அறிக்கைகள் எந்தெந்தத் தேதியில் அனுப்பப்பட வேண்டும் என்பதும், எது எது எந்தெந்தத் காலங்களில் தலைமை நிலையத்திலிருந்து கேட்கப்படும் என்பதும், அவை அனுப்பப்படு வதற்கான கால வரையறையும், வகுக்கப்பட்டு, குறிக்கப்பட்டிருந்த விதம் இவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. தான் கூட இந்தளவுக்குக் கூர்மையாக இருக்கிறோமா என்று சந்தேகம் வந்தது பாண்டியனுக்கு. அந்த அலுவலகத்தின் எல்லாரும் இவளைப் போலவே இருந்து விட்டால் தனக்கு எவ்வளவு வசதியாயிருக்கும், அலுவலகமும் எத்தனை தலை நிமிர்ந்து நிற்கும் என்பதாக நினைத்துப் பார்க்கத் தோன்றியது.
அவ்வப்போது அறிக்கைகளெல்லாம் காலத்துக்கு வருவதில்லை என்று தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளும், தபால் அழைப்புகளும், கணினித் தகவல்களும் வரும்போது எல்லாவற்றிற்கும் சேர்த்து தான்தானே பதில் சொல்லியாக வேண்டியிருக்கிறது. அந்தந்தப் பிரிவினில் நடக்க வேண்டிய வேலைகள் தாமதமின்றி நடக்குமேயானால் இந்த மாதிரிக் கேட்புகளும் இருக்காது. பதில் சொல்ல முடியாமல் தானும் திணற வேண்டி வராது. இந்தத் தொல்லையினால் அடிக்கடி விடுப்பு எடுத்துக் கூட அல்லவா தப்பிக்க வேண்டியிருக்கிறது என்பதை நினைக்க முற்பட்டபோது அம்மாதிரி ஒரு நாள் கூட சாரதா விடுப்பு எடுத்ததில்லை என்பதாகத்தான் தோன்றியது இவனுக்கு. எல்லாவற்றிலும் அவள் வித்தியாசமாகத்தான் இருக்கிறாள். யார் எப்படி இருந்தால் என்ன, நான் இப்படி இருக்க வேண்டும் என்கிற திட்டமிருக்கிறது அவளிடம். தனது திட்டப்படியான நடப்பு இருக்கிறது. அதில் லவலேசமும் பிறழாத மனநிலை அவளைத் தொடர்ந்து இயக்குகிறது.. இப்படிப்பட்ட கட்டுப்பாடான ஒருத்திக்கு இந்த வாழ்க்கை மட்டும் ஏனிப்படிச் சரியாக அமையாமல் போனது? என்ன பாவம் செய்தாள் அவள்? அவளுக்கு மட்டுமா அப்படி? தனக்கும்தான். தான் என்ன பாவம் செய்தோம்? தனது பெற்றோர் என்ன பாவம் செய்தார்கள்? ஆயினும் தனது வாழ்க்கையும் ஏனிப்படி சரியான நேர் கோட்டில் இல்லாமல் போனது?
சிந்தனைகள் எங்கெங்கோ சிறகடித்துப் பறக்க ஆரம்பித்துவிட்டது அவனுக்கு. அலுவலகத்தில் வந்து அந்த வேலைகளைக் கவனிப்பதற்குப் பதிலாக இப்படி எங்கெங்கோ கொண்டு சென்று விடுகிறது தன்னை. இந்த எண்ணங்களைச் சிறைப் பிடித்து ஏன் வைக்க முடியவில்லை? என்னதான் முழுமனதோடு ஈடு பட்டாலும், அவற்றிலிருந்து எப்படியாவது விலகி மனசு எங்கெங்கோ சென்றுதான் விடுகிறது. கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத அளவிற்கு சொந்த வாழ்க்கையின் பாதிப்புகள் பிற பணிகளைச் சிதறடிக்கின்றன. யாரிடம் போய்ச் சொல்வது இந்த அநித்தியத்தை? நினைத்துக் கொண்டேயிருந்தவனுக்கு வயிறு பசிப்பது போல் தோன்றவே சாரதா சாப்பிட்டு வருவதற்குள் தானும் சென்று தனது மதிய உணவை முடித்துவிட்டு வந்து விடலாம் என்று எழுந்தான். அப்பொழுது சாப்பாட்டை முடித்துக் கொண்டு பாத்திரங்களைக் கழுவ என்று குழாய்ப் பக்கம் சென்று கொண்டிருந்தாள் சாரதா. அத்தனை நேரம் வெட்டிச் சிந்தனையில் தன் நேரம் நழுவி விட்டதை எண்ணிச் சங்கடப்பட்டுக்கொண்டே எழுந்தான் பாண்டியன். மதிய இடைவேளை அரை மணி நேரம் என்று வரையறுத்திருப்பதைக் கூடச் சரியாகக் கடைப் பிடிக்கும் சாரதாவை எண்ணியபோது, அந்த அலுவலகத்தின் பல்வேறு பணியாளர்களின் பலபடியான இருப்பு அவனுக்குப் பெரும் உறுத்தலை உண்டாக்கிற்று. தானும் கூடப் பல சமயங்களில் அதில் ஒருவனாக இருந்திருப்பதும் மனதில் தோன்றி, சாரதாவுக்கு ஏற்றாற்போல் தன்னை இன்னும் பல விஷயங்களில் தான் மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது என்று தோன்றியது அவனுக்கு.
( 9 )
“இவ்வளவு நேரம் இங்கேயா உட்கார்ந்திருந்தீங்க? அடப் பாவமே! சொல்லியிருந்தீங்கன்னா கொடுத்துட்டே போயிருப்பேன்லயா?”
“பரவால்ல மேடம்…உங்க லஞ்ச் டைம் மாறக் கூடாது…ஒரு சிஸ்டத்தோட இருக்கிறவங்க அதை விட்டுடக் கூடாது…அது ரொம்ப முக்கியம்…”
தன்னுடைய பழக்கத்தின் மீது அவனுக்கிருந்த மரியாதையை எண்ணிக் கொண்டாள் சாரதா. பிறரின் நல்ல வழக்கங்களை மதிக்கத் தெரிந்த ஒருவனின் பண்பாட்டினை நாமும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
“சரி…நீங்க போய் சாப்டிட்டு வாங்க…நான் எடுத்து வைக்கிறேன்…”
“இருக்கட்டும் மேடம்…என்னோட சாப்பாடு எப்பவும் மதியம் மூணு மணி ஒட்டிதான்…நீங்க கொடுங்க…வாங்கிட்டுப் போயிடுறேன்…”
சாரதா எடுத்து வைக்க ஆரம்பித்தாள். தான் கேட்டது எல்லாமே அவளிடம் தயார் நிலையில் இருப்பது ஆச்சரியமாகத்தான் இருந்தது இவனுக்கு. எதையும் புதிதாகத் தயாரித்துத் தர வேண்டும் என்கிற நிலை இல்லை. இப்படி அந்த அலுவலகத்தில் ஒருவர் கூட இல்லை என்றுதான் தோன்றியது இவனுக்கு. அவரவா வேலைகளை அவரவர் சரியாகப் பார்த்து விட்டால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லைதான். ஆனால் எத்தனை பேரிடம் இதை வாய்விட்டுச் சொல்ல முடியும்?
ஒவ்வொரு தனி மனிதனும் நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் இருந்து விட்டால் யாருக்கும் எந்தப் பிரச்னையுமில்லையே! கேட்ட எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு சாரதா அடுத்த வேலைக்குப் போய் விட்டாள். இவன்தான் காரணமில்லாமல் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தான். சட்டென்று அது உறுத்த ஓ.கே மேடம்…என்று விட்டு எழுந்து விட்டான்.
“ஒரு தாங்க்ஸ்” கூடக் கிடையாதா?” – சிரித்துக் கொண்டே கேட்டாள் சாரதா.
“உங்களுக்குத்தான் கோடி தாங்க்ஸ்…ஏன்னா எந்த சீட்ல நிறையத் தேவைப் படுதோ அது சுலபமா முடிஞ்சிடுச்சு பாருங்க…இனி மத்த சீட் விஷயங்களை நாந்தான் சமாளிச்சிக்கணும்…எப்பவும் அப்படித்தானே பண்ணிக்கிட்டிருக்கேன்…”
சொல்லிவிட்டு எழுந்தான் பாண்டியன். சாரதாவை ஒப்பிடுகையில் நளினியை எங்கே கொண்டு வைப்பது? அத்தனை வேலைகளுக்கும் நடுவினில் அவன் நினைவினில் நளினி வந்து துன்புறுத்திக் கொண்டிருந்தாள்.
“நமக்குள்ளயோ ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கு…நாம எப்படி சேர்ந்து இருக்கிறது? ஊருக்கும் உலகத்திற்கும் காண்பிக்கணும்ங்கிறதுக்காக மெப்பனையான வாழ்க்கை எதுக்கு வாழணும்? ஒருத்தருக்கொருத்தர் பிடிக்கலைன்னா பிரிஞ்சிட வேண்டிதானே? அவுங்கவுங்க நிம்மதியா இருக்கலாமில்லியா? அவரவர் சுதந்திரமாவது மிஞ்சுமில்லியா? நாம பிரிஞ்சுடறதுதான் சரின்னு எனக்குத் தோணுது…” – கடைசியாகத் தெளிவாக அவள் பேசிய பேச்சுக்கள். இவன் சிந்தனையில் வந்து குடைய ஆரம்பித்தன.
( 10 )
“பாண்டியன், அந்த வெஉறிக்கிள் ப்ரபோசல்ஸை எடுத்துக்கிட்டீங்களா? அதுதான் ரொம்ப முக்கியம். நாம் இந்த வருஷம் டார்கெட் அச்சீவ் பண்ணனும்னா நமக்கு ஒன்பது ஜீப் வேணும். அப்பத்தான் தடையில்லாம ஃபீல்டுகளுக்குப் போக முடியும்…எல்லாமே இன்டீரியர் லொகேஷனா இருக்கு. பல இடங்கள்ல ஜீப்களை ஒரு குறிப்பிட்ட இடத்துலதான் நிறுத்த முடியுது…இறங்கி நடந்து போக வேண்டிர்க்கு…சில மலைப்பகுதிகள்ல குதிரைல கூடப் போக வேண்டிர்க்கு…போயிட்டுதான் வந்தேன்…என்ன பண்ணச் சொல்றீங்க…அதுக்காகக் குதிரை வாங்கிக் கொடுங்கன்னு கேட்க முடியுமா? அநேகமா அடுத்த வருஷம் டார்கெட் அதுவாத்தான் இருக்கும்…ஏன்னா ஏரியா அந்த மாதிரி மலைச்சரிவுகள்லதான் அமையும் போலிருக்கு….”
எதிரே அமர்ந்து அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான் பாண்டியன். அவன் மனம் ப+ராவும் சாரதா நிறைந்திருந்தாள். நளினியின் நினைப்பு எப்பொழுது வந்ததோ அந்த நிமிடத்திலிருந்து சாரதா ப+ரணமாக அவன் மனதை நிறைக்க ஆரம்பித்து விட்டாள். இவளைப் போன்றவளாக அந்த நளினி அமைந்திருந்தால் கூட வாழ்க்கை நன்றாக இருந்திருக்குமே? பணக்கார வீட்டுப் பெண் வேண்டாம் என்று எத்தனை முறை சொன்னேன் அப்பாவிடம்? கேட்கவில்லையே? அதுனாலேயே மோசமா இருப்பான்னு நீயா ஏன் கற்பனை பண்ணிக்கிறே? என்றார். நான் கற்பனை பண்ணிக்கொண்டது அவ்வாறா? வசதி வாய்ப்பு பெருகிக் கிடக்கும் இடத்தில் வளர்ப்பும் அதற்குத் தகுந்தாற்போல்தானே இருக்கும். இதை அப்பா உணரவில்லையே? அவளின் அப்பா நிர்வகிக்கும் நிறுவனத்தில் அப்பா வேலை பார்த்தார் என்பதற்காக, தான் சற்றும் எதிர்பார்க்காத வரன் தன் முதலாளியிடமிருந்தே வந்தவுடன் மலைத்து விட்டாரே? அந்தக் கம்பெனியிலேயே தான் வேலை பெற்றிருக்கக் கூடும்தான். அவளுக்குக் கொஞ்சம் ஈடு கொடுத்து இருந்திருந்தால் வாழ்க்கை சுகமாக் இருந்திருக்கும்தான். ஆனால் ஆண்மை என்று ஒன்று இருக்கிறதல்லவா? அதை விற்று விட்டு ஒருவன் எப்படியிருப்பது? கயிற்றில் சுற்றப்பட்டிருக்கும் பம்பரமா நான். அவர்கள் இஷ்டம்போல் என்னைக் கையில் விட்டு சுற்றும் அழகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பார்களா? சாட்டைக்கு அடங்கிய பம்பரமா நான்? அதை அப்பாவும் விரும்புகிறாரா? நிச்சயம் அப்பா அப்படித்தான் விரும்பியிருக்கக்கூடும். சுமார் நாற்பது ஆண்டு காலத்திற்கும் மேலல்லவா அங்கே அப்பா குப்பை கொட்டியிருக்கிறார்? அந்த நன்றியுணர்ச்சி இல்லாமல் போகுமா? நன்றியுணர்ச்சி இருக்கட்டும். யார் வேண்;டாம் என்றது? அது அடிமையுணர்ச்சியாகவல்லவா போய்விட்டது. சொல்வதற்கெல்லாம் ஆடுவது என்றால்? நல்ல வேளை அப்பா ஓய்வு பெற்றுவிட்டார். இல்லையென்றால் அந்த நிறுவனத்திலேயே அவருக்கு என்னவெல்லாம் கேடு வந்திருக்குமோ? தன் மீது உள்ள கோபங்கள் அப்பா மேல் திசை மாறி அவரை என்னவெல்லாம் பாடு படுத்தியிருக்குமோ? என்ன ஆனாலும் பணத் திமிர் என்பது இல்லாமல் போகுமா? திருமணத்திற்கு முன்பே இதை அப்பாவுக்குக் கோடிகாண்பித்தும் அவர் உணர்ந்து கொள்ளவில்லையே?
“என்ன மிஸ்டர் பாண்டியன், எங்க இருக்கீங்க? உடம்பு சரியில்லையா உங்களுக்கு? ரொம்ப டயர்டா தெரியுது உங்களப் பார்த்தா? ஏதோ யோசனையிலேயே இருக்கிறமாதிரி…..”
“இல்ல ஸார்…அப்டியெல்லாம் ஒண்ணுமில்ல….” சொல்லியவாறே எழுந்தான்.
“என்ன எழுந்துட்டீங்க? உட்காருங்க…இன்னும் முழுசும் பார்த்து முடிக்கலையே?” சொன்னவாறே அவன் தயார் செய்து வைத்திருந்த அறிக்கைகளைப் பார்வையிட ஆரம்பித்தார். அவரின் ஆழமான பார்வை இன்னும் கொஞ்ச நேரம் ஆகும் என்பதாக எண்ண வைத்தது இவனை. அந்தக் கொஞ்ச நேரத்தில் இனி தான் தடுமாறக் கூடாது என்ற நினைப்பில் தன் நினைவுகளை முழுமையாக அங்கே குவிக்க முற்பட்டான் பாண்டியன்.
“ஆங்ங்….இதத்தான் கேட்கணும்னு நினைச்சிட்டிருந்தேன்…இந்த டாட்டா ஆப்பரேட்டர் போஸ்டை ஏன் இன்னும் ஃபில் அப் பண்ணாம வச்சிருக்கோம்? பட்ஜெட்ல பணம் கொடுத்திருக்காங்கல்ல?”
“நிறைய அப்ளிகேஷன்ஸ் வந்திருக்கு ஸார்…பட் அதை என்ன ரூல்ஸ் ஃபாலோ பண்ணி ஃபில் அப் பண்றதுங்கிறதுக்கு க்ளாரிஃபிகேஷன்ஸ் கேட்டிருக்கோம். டேரக்டா இப்டி நிரப்பிடலாமா அல்லது nஉறட் ஆபீஸ்லேர்ந்து ஸ்டேட் வைடு வேறே ஏதேனும் மெதேட் ஃபாலோ பண்றாங்களான்னு கன்ஃபார்ம் பண்ணிக்கணும்….”
“டெம்ப்ரரி போஸ்ட்தானே…எம்ப்ளாய்மென்ட் மூலமா நிரப்பிட்டுப் போக வேண்டிதானே…எதுக்கு சென்னைல கேட்கணும்? “
“அதக் கன்ஃபார்ம் பண்றதுக்குத்தான் எழுதியிருக்கோம் ஸார்…”
“அப்போ அதையும் கேட்டுட்டு வரணும்ங்கிறீங்க…சரி…குறிச்சிக்குங்க….நானும் நோட் பண்ணிக்கிறேன்….”
பாண்டியன் மணியைப் பார்த்தான். ஏழு நெருங்கிக் கொண்டிருந்தது. அலுவலகம் அமைதியில் முழ்கிக் கிடந்தது. அவர்கள் இருந்த அறையில் மட்டும் மின் விளக்குகள். எல்லோரும் போயாயிற்று. தினமும் பொழுதுகள் இப்படித்தான் கழிகின்றன. இரவு குறைந்தது ஒன்பதுவரை இங்கேயே கழிந்து விடுகிறது. பிறகு வீடு போய் சாப்பிட, பிணம் போல் விழ, அடித்துப் போட்டதுபோல் தூங்க, காலையில் எழுந்து மீண்டும் ஓடிவர, இப்படித்தான் வாழ்க்கை கழிகிறது. ஆனால் இன்று அப்படி முடியாது. இனிமேல் வீடு சென்று, பெட்டியில் ஆடைகளை எடுத்து வைத்துக் கொண்டு தயாராகி தான் சென்னை செல்லும் பஸ்ஸைப் பிடிக்க வேண்டும். அத்தோடு விட்டால் போதும் என்றுதான் தோன்றியது.
“ஆல்ரைட் மிஸ்டர் பாண்டியன்…நாளைக்கு காலைல நாம மீட்டிங் சேம்பர்ல சந்திப்போம்…நீங்க கிளம்பலாம்….”
என்ன அதிசயம்! இத்தனை சீக்கிரம் அவனை விட்டு விட்டாரே! இவனால் நம்பவே முடியவில்லை. அதுவே சரியான தருணம் என்று எழுந்து விட்டான். இன்னும் ஒரு நிமிடம் தாமதித்தால் கூட அவரின் சிந்தனை மாறி விடக் கூடும். அதற்குள் ஓடி விட வேண்டும். கிளம்பினான் பாண்டியன். அப்போதைக்கு மறு நாளைய கோ-ஆர்டினேஷன் கூட்டத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டுமே என்ற சிந்தனை மட்டும் அவன் மனதை நிறைத்திருந்தது.
அவற்றினூடே இன்னும் இரண்டு நாட்களுக்குச் சாரதாவைப் பார்க்க முடியாதே என்ற ஏக்கமும் தோன்றி அவன் மனதை மெல்ல வருத்த ஆரம்பித்தது.
( 11 )
பாண்டியனின் மனநிலை எப்படியிருந்ததோ அப்படியேதான் சாரதாவின் மனநிலையும் மாறிப் போயிருந்தது. இந்த மனதை எவ்வகையிலும் கட்டுப் படுத்த முடியவில்லை. அதற்குத்தான் நியமங்கள் அது இது என்று பெரியவர்கள் ஆக்கி வைத்திருக்கிறார்கள். அவற்றை தினசரி நாம் கடைப்பிடிக்க முற்படும்பொழுது நாளடைவில் அவை நம் கைக்குள் வருகின்றன. சராசரி மனிதனுக்கு இம்மாதிரியான பயிற்சியில்தான் எதுவும் சாத்தியம் என்பது தெரிந்துதானே இவை எல்லாமும் ஆக்கப்பட்டிருக்கின்றன? ஆனாலும் இந்த நியமங்களும், நேம நிஷ்டைகளும் வாழ்க்கைப் பாதை சரியாக அமைந்தவர்களுக்குத்தானே? அவர்களால்தானே ஓரளவு மனதைத் திடப்படுத்திக் கொண்டு இவற்றையெல்லாம் கடைப்பிடிக்க இயலும். வாழ்க்கைப் பாதையே சிதிலமடைந்து போனவர்கள் என்னதான் செய்வார்கள்? அவர்களை, அவர்கள் மனதைத் தேற்றுவது எப்படி? தனக்குத்தானே ஆயிரம் கேள்விகளைக் கேட்க முனைந்தாள் சாரதா. ரொம்பவும் சாதாரணமான, சாதுவான பெண்ணாக இருந்த தன்னை கேள்விகளைக் கேட்க வைத்தவன் அவன். வாழ்க்கை எல்லோருக்கும் நினைத்தபடி அமைவதில்லை என்ற பரி பக்குவம் பெற்ற மனநிலையைத் தான் எய்துவதற்குக் காரணமாக இருந்தவன். அமைந்த வாழ்க்கையை அழகாக ஆக்கிக் கொள்வதுதான் ஒரு பெண்ணுக்கான அடிப்படை அழகு என்ற எண்ணத்தைத் தன்னுள்ளே உறுதிபடச் செய்தவன். எப்படியெல்லாம் தன்னைப் படுத்தி எடுத்து விட்டான்?
“மாலினி தனக்கு ஒரு துணை வேணும்னு எதிர்பார்க்கிறா…அதைக் கொடுக்கிறதுல என்ன தப்பு?”
“துணை வேணும்னா முறைப்படி ஒரு கல்யாணத்தப் பண்ணிக்கிட்டு துணையோட இரு…இப்படிச் சுத்தணும்னு நினைக்காதேன்னு நீங்கதானே அவளுக்கு சொல்லணும்…”
“ஏய் இந்தா பார்…அவளுக்கு அட்வைஸ் பண்றதுக்கு நான் யாரு? என்னுடைய துணை அவளுக்குப் பிடிச்சிருக்கு…நான் கம்பனி கொடுக்கிறேன்…அதிலென்ன தப்பு?”
“ஒரு பெண் தனியா உறாஸ்டல்ல இருக்கான்னா அவளோட பெற்றோர்கள் எந்த நம்பிக்கையோட, வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருப்பாங்கன்னு உங்களுக்குத் தெரியுமில்ல? நீங்க அவளுக்குப் பாதுகாப்பா இருக்கணுமே தவிர உங்களுக்கான சந்தர்ப்பத்தைத் தேடுற ஆளா இருக்கக் கூடாது….”
“ஏய் என்ன சொல்றே?”
“ஒரு திருமணமான ஆளு இன்னொரு பெண்ணோட இப்டி இருக்கிறது தப்புன்னு சொல்றேன்…இது ஒண்ணும் புரியாத விஷயமில்லியே? ஏன் இப்படி உங்கள நீங்களே ஏமாத்திக்கிறீங்க? நீங்களும் ஒண்ணு ரெண்டு சகோதரிகளோட பிறந்திருந்தீங்கன்னா அந்தப் பெண்ணோட அருமை தெரியும்…அது கிடைக்கல உங்களுக்கு…அதுக்காகத் தப்பாப் போகணும்னு இருக்கா? எத்தனை புத்தகம் படிக்கிறீங்க? எத்தனை சினிமாப் பார்க்கிறீங்க…அதெல்லாம் சொல்லித் தரல்லியா இது தப்புன்னு? முதல்ல இந்த மாதிரி அந்தப் பெண்ணோட சுத்தறதுங்கிறது வெட்கங்கெட்ட செயல்ன்னு உங்களுக்குத் தோணலியே? அத நினைச்சுப் பார்த்தீங்களா?”
சொல்லி முடிக்கவில்லை. ராஜப்பாவின் கை அவள் கன்னத்தில் பளீர் என்று இறங்கியது. அப்படியே கன்னத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு நிலை குலைந்து அமர்ந்து விட்டாள் சாரதா. தலை கிர்ரென்று சுற்றியது அவளுக்கு. அப்பப்பா என்ன ஒரு அடி? இத்தனை முரடனா இவன்? கட்டின பெண்டாட்டியை இப்படிக் கை நீட்டி அடிப்பது என்பது இவனுக்குத் தவறாகத் தோன்றவில்லையா? அது ஒரு அநாகரீகமான செயல் என்று இவன் உணரவில்லையா? ஆண் என்றால் மேலேதான் என்ற மொட்டையான நினைப்பில் இருப்பவனோ? வேறே அறிவு ப+ர்வமான சிந்தனை இவனிடம் எதுவும் கிடையாதோ? சாதாரணச் சராசரியாக இருக்கிறானே? இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இப்படி மனைவியைக் கை நீட்டி அடிக்கும் ஒரு சர்வ சாதாரண சராசரியாக இருக்கிறானே? இவ்வளவுதான் இவன் இத்தனை வயது அனுபவத்தில் கற்றுக் கொண்டதா? இவனது அனுபவமே இவ்வளவுதானா? டி.வி. சீரியல்களில் காண்பதெல்லாம் அப்படியேதான் என்று நினைத்துக் கொண்டு அதுபோலவே செய்கிறானோ? சுத்தக் கிறுக்குத்தனமாகவல்லவோ இருக்கிறது இவன் செயல். அடித்த கையை அப்படியே பிடித்திருக்க முடியும் இவளால். அது அடுத்த முறை நடக்கும். அதற்குள் அவன் தானே விலகி விடுவது நல்லது. இல்லையென்றால் தன்னிடம் கேவலப்பட்டுத்தான் பிரிய வேண்டியிருக்கும். நினைத்துக் கொண்டாள் சாரதா. அந்தக் கேவலத்திற்கும் தயாராகத்தான் இருந்தான் ராஜப்பா! ( 12 )
“பகல்ல அவ…ராத்திரி நானா?”- சாரதாவின் பளீர் பேச்சில் துணுக்குற்றான் ராஜப்பா.
“அப்டியெல்லாம் இல்ல…அவ கூட, ஜஸ்ட் சுத்தறேன்…அவ்ளவுதான்…அவளுக்கு என் கம்பனி தேவைப்படுது…என்னோட இருக்கிறது அவளுக்குப் பிடிச்சிருக்கு…அதனால ப்ரன்ட் மாதிரிக் கூட இருக்கேன்…இது போய் ஒரு தப்பாயிடுமா?”
“உங்க மனசுக்குத் தப்பாத் தெரில…திருமணமான ஒருத்தர் இன்னொரு பெண்ணோட சுத்தறது உங்க மனசுக்கு ஆறுதலான ஒரு விஷயமா இருக்கு…கிளி மாதிரிப் பெண்டாட்டி இருந்தாலும், குரங்கு மாதிரி ஒரு வப்பாட்டி வேணும்னு நினைப்பாங்களாம் ஆண்கள்…அந்த வேலைதான் நடந்திட்டிருக்கு உங்ககிட்டே…இது எங்க போய் முடியுமோ?”
“எங்கயும் போய் முடியாது…ஆபீஸ் முடிஞ்சு வீதி வீதியா வந்திட்டிருக்கு…ஏதாச்சும் ஒரு Nஉறாட்டல்ல நிக்குது…உள்ளே போயி வெளியே வருது…பிறகு வீதில மறுபடியும் ஆரம்பிக்குது…ஒரு இடம் வந்தவுடனே பிரிஞ்சிடுது…அவ்வளவுதான்…இத ஏன் நீ பெரிசா எடுத்துக்கிறே?”
“இப்படிச் சொல்ற எத்தனை பேரோட கதைகளை நான் படிச்சிருக்கேன்…தொலைக்காட்சில இந்த மாதிரியான சீரியல்கள் தானே நிறைய வந்திட்டிருக்கு…ஒரு வேளை அதையெல்லாம் பொழுது போகாமப் பார்த்துப் பார்த்து நீங்களும் அந்த மாதிரி அடிக்ட் ஆயிட்டீங்களோ என்னவோ?”
“இந்த மாதிரியெல்லாம் பேசாதே சாரதா. எனக்கு உன்னைத்தான் பிடிக்கும். உன் அழகுதான் என் மனசுல எப்பவும் நிறைஞ்சு இருக்கு…உன் நிறம்தான் என் மனசுல ஒட்டியிருக்கு. உன் மணம்தான் எனக்குப் பிடிச்ச ஒரே மணம்! உன் வாசனை இல்லாம என்னால இருக்கவே முடியாது. பாரு உன் காலடியிலயே கிடக்கனே…உன் கால்களை எவ்வளவு கொஞ்சறேன்…ஏதாச்சும் அசிங்கம் பார்க்கிறனா? அதுல எவ்வளவு அழுக்கு ஒட்டியிருக்கு…சங்கடப்படுறனா? ஏன்னா உன்னோட கால் விரல்கள் எனக்குப் பிடிச்சிருக்கு. அந்தச் சுண்டு விரல் இருக்கு பாரு…அது திராட்சைப் பழம் மாதிரி இனிக்குது…உன் காலடில கிடக்கிறது கூட ஒரு சந்தோஷம்தான்…அதத் தூக்கி என் மார்பு மேல போட்டுக்கிட்டுத் தூங்குறதுல ஒரு சுகம் இருக்கே…அந்த இன்பமே தனி…உன் உடலழகு யாருக்கு வரும்? உன் இடையழகு எந்தப் பெண்ணுக்கும் இல்ல…அந்த மடிப்புல தேனுல்ல வடியுது…அந்த ருசியை யாரால உணர முடியும் தெரியுமா? ஒரு தேர்ந்த ரசிகனாலதான் உணரமுடியுமாக்கும்…அந்த ரசிகன் நான் தான். இதெல்லாம் உனக்குச் சட்டுன்னு புரியாது. அழகை ரசிக்கத் தெரியாதவன் என்ன மனுஷன்? பெண்கிட்ட அவளோட அழகைப் புகழ்ந்து சொல்லத் தெரியாதவன் புருஷனாயிருந்து என்ன பிரயோஜனம்? பெண்களுக்கு அவங்களோட அழகைப் பத்தி அவுங்களுக்குத் தெரியவே தெரியாது. புருஷன்காரன் சொல்லும்போதுதான் சந்தோஷத்துல இன்னும் அழகாவாங்க…அந்த புகழ்ச்சியோட உச்சில இருக்கும்போது ரெண்டு பேரும் கலந்தாங்கன்னு வச்சிக்கோ…அப்போ பிறக்கிற குழந்தை நிச்சயம் பொம்பளப் புள்ளயாத்தான் இருக்கும்…எழுதி வச்சிக்கோ….நீ எனக்கு பெண் குழந்தை பெத்துத் தருவியா அல்லது ஆணா?” – அவனது புகழ்ச்சியில் கிறங்கித்தான் போயிருக்கிறாள் சாரதா. வாழ்க்கை தனக்கும் மெல்லிய ப+ங்காற்றாக மாறும் என்று அவளும் நினைக்கத்தான் செய்தாள். அப்பா திருமணம் செய்து வைத்த பையனை மனதாரத் தன் துணைவனாக ஏற்றுக்கொண்டு சீராக நடத்திச் செல்லலாம் என்பது அவளின் உறுதியாகத்தான் இருந்தது. வாழ்க்கை என்ன அத்தனை கஷ்டமான ஒன்றா என்ன? அதைச் சவாலாக ஏற்று ஒரு கை பார்த்து விட வேண்டியதுதானே? என்பதுதான் அவளின் எண்ணமாக இருந்தது.
தன் மகள் இத்தனை சாதுர்யமாக மாறுவாள் என்று ரங்கநாதன் எதிர்பார்க்கவேயில்லை. அமைந்த வாழ்க்கையைச் சரி செய்து கொண்டுவிட்டாள் என்றுதான் அவரும் நினைத்தார். ஆனால் காலம் வேறு மாதிரி நினைத்தது.
( 13 )
“எனக்கு வெளிய+ர் மாத்தியிருக்காங்க…தர்மபுரி…நாளைக்கு நான் போயாகணும்…?” இப்படிச் சொல்லிக்கொண்டு ராஜப்பா ஒரு நாள் வந்து நின்றபோது அதிர்ந்தே போய்விட்டாள் சாரதா.
“மூணு வருஷத்துக்கு மாத்தவே மாட்டாங்கன்னு சொன்னீங்களே…அதுக்குள்ளேயுமா…?”
“சென்னைலயிருந்து ஒரு பிரிவு தர்மபுரிக்கு வருது…அதுல ஒர்க் பண்றதுக்குன்னு கட்டாயமாச் சில பேரை சென்னைலயிருந்தும் இன்னும் பல ஊர்களிலேர்ந்தும் மாத்தியிருக்காங்க…அதுல எங்க ஆபீஸ்ல நாலஞ்சு பேரு…அதுல நா ஒருத்தன்…கட்டாயம் போய்த்தான் ஆகணும்….”
“அப்போ பேசாம குடும்பத்தையே ஷிப்ட் பண்ணிடுவோம்…நானும் வந்துடறேன்…அவ்வளவுதான்…”
“அது முடியாது சாரதா…அதப்பத்தி பிறகுதான் யோசிக்கணும்…”-அவன் வார்த்தைகளில் உள்ள உறுதியைக் கண்டு சற்று அதிரத்தான் செய்தாள் சாரதா. ஆனாலும் மனதுக்குள் ஒரு சிறு சந்தோஷம். அவன் அந்த மாலினியை விட்டுப் பிரிகிறான். அது போதும் இப்போதைக்கு. அமைதி காத்தாள். அவன் விருப்பத்திற்கே விட்டுப் பிடிப்போம்…ஒரு மாதம் போகட்டும். பிறகு யோசிப்போம் இதுபற்றி என்று அப்போதைக்கு அதை ஒத்திப் போட்டாள் சாரதா. மாதம் ஒன்றானது இரண்டானது மூன்றானது. வெறும் தொலை பேசிப் பேச்சோடு நின்றது. அவன் வருவதாயில்லை. அவளையும் அழைத்துச் செல்வதாயில்லை. கிளம்பி விட்டாள் சாரதா. அதை அவனிடம் சொல்லவில்லை. சொல்லாமல் போய் நிற்பதுதான் அவனிடம் உள்ள உண்மைகளைக் கண்டறிய உதவும் என்று நினைத்தாள். உண்மையிலேயே உண்மைகளைக் கண்டறியத்தான் செய்தாள்.
பேருந்து நிலையத்தில் போய் அவள் இறங்கிய போது அது அவள் கண்களில் பட்டது.
( 14 )
பொழுது விடியும் வேளையில் அவளோடு எங்கிருந்து இறங்கி வருகிறான் இவன். ‘அடிப்பாவி…கட்டின கணவன் கூட இத்தனை நெருக்கமாக நான் கூட இருந்ததில்லையே…? கைகளைப் பிடித்துக் கொண்டு தோளில் சாய்ந்து கொண்டு, இத்தனை பொது வெளியில் இப்படியா ஒரு பெண் வருவாள்? அவள் கால்கள் தள்ளாடுவது போல் தோன்றியது சாரதாவுக்கு. என்ன இது? போதையில் இருக்கிறாளா? அல்லது போதை தெளியவில்லையா? பெண்ணுமா இப்படியெல்லாம் செய்வாள்?
“நாகரத்னா போர்டிங் அன்ட் லாட்ஜிங்”
ஒதுங்கித் தன்னை மறைத்துக் கொண்டு பார்த்த சாரதாவுக்கு அந்த அவன் ராஜப்பாதான் என்பதை உறுதி செய்து கொள்ள சற்று நேரம் பிடித்ததுதான். அவளைத்தான் முதலில் அடையாளம் கண்டு கொண்டாள். ஒரு நாள் பார்த்ததுதான். அவள் உருவம் அப்படியே தன் மனதில் பதிந்திருந்தது. அந்த இடது பக்கக் கன்ன மச்சம்? அது அவளாக வைத்துக் கொண்டதா அல்லது இயற்கையா? இன்றும் அவளுக்கு அந்தச் சந்தேகம் உண்டுதான். அந்த மச்சத்தைப் பற்றி என்னவெல்லாம் உளறியிருக்கிறான் இந்தக் கிராதகன். வெட்கங்கெட்டவன். ஒழுக்கமில்லாதவன். இவனுக்கெல்லாம் பொறுப்புள்ள அலுவலகங்களில் வேலை கொடுத்ததே தவறு. இவன் ஒரு விஷக் கிருமியைப் போல. தன்னையும் கெடுத்துக் கொண்டு மற்றவர்களையும் கெடுத்து விடுவான் இவன். சுற்றியிருக்கும் மனிதர்களை அவர்களின் உள்ளங்களைச் சலனப்படுத்துவான். பல நல்லவர்களும் இவனால் கெடக் கூடும். தீய பழக்கங்களைப் பெருமையாக நினைத்துச் செய்து கொண்டிருப்பவன். அவைதான் வாழ்க்கை என்கிற போலியான சந்தோஷத்தில் அறியாமை படல் கொண்டு மூடப்பட்டவன். அந்தப் படலை நீக்கிக்கொணடு அவன் வெளியேறப் பல காலம் ஆகும். அதிலே இன்னும் அவன் மூழ்கி முக்குளித்துக் கொண்டுதான் இருக்கிறான். இந்த அவனின் போலித்தனம் அவனை அழிவில்தான் கொண்டு விடும். அவன் அழிந்து படுவதில் தீவிரமாய்த் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளான். அதுபற்றி அவன் அறியாமலிருக்கிறான். இவனுக்கு முடிவு என் மூலம்தான். அந்த முடிவை இவனுக்குத் தேடிக் கொடுப்பதன் மூலம் இன்னொரு பொறுப்புக்கும் நான் ஆளாகிறேன். அது காலம் ப+ராவும் நான் மேற்கொள்ள வேண்டிய கடமை. இவனைப் பெற்ற பாவத்திற்காக அந்தப் பெரியவர்களை நான் ஆட்கொண்டுதான் ஆக வேண்டும். அவர்கள் என் கவனிப்பில், பராமரிப்பில் ஆயுட்காலம் இருப்பார்கள். அவர்களின் முதியகாலம் நன்றாகவே கழியும். அதற்கு நான் பொறுப்பு. இவனைக் கை கழுவி விட்டவர்கள் அவர்கள். தாங்கள் பிச்சையெடுத்தாலும் பரவாயில்லை என்று துணிந்தவர்கள் அவர்கள். இவனைப் பெற்ற பாவத்திற்காகக் கோயில் கோயிலாக அலைந்து கொண்டிருப்பவர்கள். அவர்களின் ஆயுட்காலம் என்னின் பொறுப்பு. அந்தக் கடமையிலிருந்து நான் கிஞ்சித்தும் தவற மாட்டேன். இது சத்தியம். இப்பொழுது நான் செய்யப் போவதும் நிச்சயம். எவளை விட்டு விலகித் தன் நம்பிக்கையின் அடையாளமாய் ஒழுங்கே தன் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டு தனக்கு உகந்தவனாக இருப்பான் என்று நினைத்துக் கொண்டிருந்தாளோ அவளுடனேயே சுற்றிக் கொண்டிருக்கிறான். அப்படியானால் அவளும்தான் இவனோடு இங்கே மாறுதலில் வந்திருக்கிறாள். அதைத் தன்னிடம் மறைத்திருக்கிறான் இவன். அந்தக் கேடு கெட்டவளோடு திட்டமிட்டு தன்னைத் தனிமைப் படுத்தியிருக்கிறான். நீ என்னைத் தனிமைப் படுத்தவில்லை. உன்னை அவ்வாறு ஆக்கிக் கொண்டிருக்கிறாய். உன் முடிவை நீயே தேடிக் கொண்டிருக்கிறாய். என்னை ஏமாளி என்று நினைத்து இங்கே வந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறாய். ஒரு பெண் எப்பொழுது தன்னை முழுதும் தயார் படுத்திக் கொள்கிறாள் என்பதை நீ அறிய மாட்டாய். அந்த மேன்மையான சிந்தனைகளெல்லாம் உனக்கு வராது. நீ கீழ்த்தரமானவன். கேடு கெட்டவன். உன் வாழ்க்கையின் முடிவினை நீயே தேடிக் கொண்டவன்.
நேரே போலீஸ் ஸ்டேஷனில் போய் நின்றாள் சாரதா. தன் இருப்பு, தன் கடமைகள், தன் வருகை, தன் சரித்திரம் என்று ஒன்று விடாமல் விலா வாரியாக எழுதினாள். புகார்க் கடிதம் தீயாய்ப் பறந்தது. ராஜப்பாவும், மாலினியும் முன் நிறுத்தப்பட்டார்கள். வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவளைப் பொறுத்தவரை அப்பொழுதே முடிந்தது வழக்கு. கண்களில் கனல் பொறிய அவன் முன்னே, அந்த எல்லோர் முன்னே அறுத்தெறிந்தாள் தாலிக் கொடியை. வீசினாள் அவன் முகத்தை நோக்கி.
வாழ்க்கை அத்தோடேவா முடிந்து விடுகிறது. இவன் யார் நிர்ணயிப்பதற்கு தன் வாழ்க்கையை? அது என்னால் முடிவு செய்யப்படும். வாழ்வதா, சாவதா என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். நீ யார் அதை கடிவாளம் போட்டு நிறுத்த. லகான் என் கையில். அது என் இஷ்டப்படிதான் ஓடும். அது எனக்கு அடங்கிய ஒன்று. என் சீரிய திட்டங்களில் வழி நடத்தப்படும் ஒன்று. எனது மேலான பார்வையில் என் ராஜபாட்டை எனக்கு நானே போட்டுக் கொண்டது.
உழைப்பு…உழைப்பு…கடுமையான உழைப்பு…இதோ தேவையானவைகளைத் தனக்குத்தானே தேர்ந்தெடுத்துக் கொண்ட சாரதா இன்று வாழ்க்கையின் ஆதுரமான பிடியில் ஒரு நல்ல வேலையில். அந்த வேலை அவள் முயற்சியில்; பிடித்தது. சொந்தத் திறமையில் முன்னேறியது. தன் அடிப்படைத் தகுதிகளைத் தானே உயர்த்திக் கொண்டது. வெறி…வெறி…வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வெறி. எவனோ வருவானாம்…இடைப்பட்ட காலத்தில் தனக்குக் கணவன் என்பானாம். தன்னை அடக்கி ஆழ்வானாம். தன்னை நம்ப வைத்து ஏமாற்றுவானாம்…அவனுக்கு முன்னே அழுது வடிந்து கொண்டு சுருங்கி முடங்கிப் போவேன் என்று நினைத்தானோ?
“நீ நாங்க பெத்தெடுக்காத பெண்ணும்மா…எங்களை வச்சு இப்படிக் காப்பாத்தணும்னு உனக்கென்ன விதியா? எங்க பிள்ளையே எங்களை உதறி எறிஞ்சிட்டுப் போயிட்டான். உனக்கென்னம்மா வந்தது இந்தக் கடமை? எந்த ஜென்மத்துக் கடன் இது? உன் வாழ்க்கையைப் பாழாக்கினானே பாவி…அவன் நன்னாவேயிருக்கமாட்டான். அழிஞ்சி போயிடுவான்….புழுத்துப் போய்த்தான் சாவான்…”
நாளும் பொழுதும் கதறிக் கதறி அழும் இரு ஜீவன்கள். இன்றும் தன் பராமரிப்பில்.
( 15 )
பாண்டியனோடு தான் சேருவதை இந்த ஜீவன்கள் ஏற்குமா மறுக்குமா? ஏற்பதற்கும் மறுப்பதற்கும் நாங்கள் யார்? நாங்கள் உன்னைத் தேடி வந்த பாவப்பட்ட ஜீவன்கள். உன் பராமரிப்பில் வாழ்பவர்கள். எங்;களின் உயிர் உன்னின் ஜீவனத்தில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. தாய் தந்தையரின் ஸ்தானத்தில் எங்களை நீ வைத்திருப்பதே நாங்கள் செய்த பெறும் பேறு. நீ பல்லாண்டு காலம் பெறும் பேறுகளோடு வாழ வேண்டும். அதுவே எங்களின் ஆத்மாவின் விருப்பம். காலம் எல்லோரையும் பொய்த்துப் போகச் செய்யாது. இந்தச் சக்கரம் சுழலும். சுழலும்…சுழன்று கொண்டேயிருக்கும். அங்கே உன் போன்ற நல்ல உள்ளங்கள் மேலே வரும். உலகுக்குப் பறை சாற்றும்.
( 16 )
“சாரதா, நீ எனக்குக் கிடைப்பேன்னு கனவுல கூட நா நினைக்கலே…”
“ஏன் அப்படி ஒரு சந்தேகம் உங்களுக்கு?”
“வாழ்க்கைல இத்தனை போராட்டங்களுக்குப் பிறகு வெற்றியின் உச்சில உட்கார்ந்திருக்கிற உனக்கு இந்தச் சாதாரண லௌகீக வாழ்க்கைல நம்பிக்கையே இல்லாமப் போயிருக்குமோன்னு எனக்கு பெருத்த சந்தேகம் ஏற்பட்டுப் போச்சு…அதான்…”
“பெண் எவ்வளவுதான் உயரத்துக்குப் போனாலும், எத்தனைதான் திறமைசாலியா இருந்தாலும், எத்தனைதான் சோதனைகளைச் சந்திச்சாலும், அவளோட அடி மனசு இந்தத் திருமண பந்தத்தை விட்டு விலகிப் போறதேயில்லை…அதுலதான் அவளோட எல்லா சந்தோஷங்களும் அடங்கியிருக்கிறதா நினைப்பா…இந்தக் குடும்பம்ங்கிற அமைப்புல, குழந்தை குட்டிகளோட, தாய்ங்கிற ஸ்தானத்தை அடைஞ்சு, குழந்தைகளுக்கு ஒரு நல்ல அம்மாவா, கணவனுக்கு ஒரு ஆத்மார்த்தமான மனைவியா, எல்லாரையும் அரவணைச்சுப் போகிற அன்பின் சக்தியா, சக்தி சொரூபியா விளங்குறதைத்தான் கால காலமா எல்லாப் பெண்களும் வேண்டி விரும்பி ஏத்துக்கிட்டிருக்காங்க…அதையேதான் நானும் எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருந்தேன். அதை அடையறதுக்கு இத்தனை காலமாகியிருக்கு எனக்கு. எல்லாருக்கும் எல்லாமும் இந்த வாழ்க்கைல சுலபமாவா கிடைச்சிருது? சிலருக்குக் கொஞ்சம் தாமதமாத்தான் கிடைக்குது. ஆனா அந்தத் தாமதமான கிடைப்புல இருக்கிற ஆழமான புரிதல்னு ஒண்ணு இருக்கு பாருங்க, அதுக்கு ஈடுன்னு எதையுமே சொல்ல முடியாது. வாழ்க்கையை புரிஞ்சு அனுபவிக்கிறதுலதான் சந்தோஷமும் நிறைவும் இருக்கு…இப்போ அது எனக்கு முழுமையாவே கிடைச்சிருக்கு….” கண்கள் கலங்க உணர்ச்சி வசப்பட்டுப் பொழிந்து தள்ளிய சாரதா அப்படியே தன்னைப் பாண்டியனிடம் ஒப்புவித்துக் கொண்டாள்.
அவளை அப்படியே இறுகக் கட்டியணைத்த பாண்டியன் அந்த அணைப்பின் இறுக்கத்தில் காலத்திற்கும் காற்றுக்கூட இடையே நுழைந்து விடக் கூடாது என்று நினைக்கத் தலைப்பட்டான். அவள் வாழ்க்கை பாண்டியனின் ராஜ்யத்தில் இனிக் கொண்டாட்டமாயும், கோலாகலமாயும் நிச்சயம் அமையும். அந்தச் சந்தேகம் எள்ளளவும் யாருக்கும் இல்லை என்று நம்பலாம். என்ன உங்களுக்கும்தானே!!!

Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்