மூடிக்கோ

This entry is part [part not set] of 45 in the series 20110130_Issue

உஷாதீபன்


சஞ்சீவி போட்ட சத்தத்தில் பதறித்தான் போனாள் மல்லிகா. இத்தனைக்கும் வீட்டுக்குள் இருந்துதான் கத்தினான் அவன். அது தெருப் ப+ராவும் கேட்கும்படி இருந்தது.
“ஏன் இப்டிக் கத்துறீங்க? மெதுவாச் சொன்னாப் போதாதா? உள்ளே வாடீங்கிறதை இத்தனை சத்தமாவா சொல்லணும்? வந்துட்டேன்…எதுக்குக் கூப்டீங்க?”
“ஏண்டீ, தலை வாரிக்கிறதை வாசல்ல நின்னா செய்யணும்…ஊருக்கே காண்பிக்கிற மாதிரி?”
“என்ன நீங்க? நீங்கதான சொன்னீங்க…வீட்டுக்குள்ளன்னா அங்கங்க முடி கொத்துக் கொத்தாப் பறக்குதுன்னு…அதுனாலதான் வாசலுக்குப் போனேன்…”
“உனக்குக் கொஞ்சமாவது கூர் இருக்கான்னு கேட்குறேன்…வாசலுக்குப் போனா திண்ணைல ஒரு ஓரமா உட்கார்ந்து ஆற அமர தலை சீவுவாங்கன்னு கண்டிருக்கு…நீ என்னடான்னா ரோட்டுல போறவங்களுக்கெல்லாம் நல்லாத் தெரியற மாதிரி ரெண்டு கையையும் தூக்கிகிட்டு இழுத்து இழுத்துச் சீவிக்கிட்டிருக்கே…ஊருக்கே இடுப்பைக் காண்பிச்சிட்டு நிக்கிறியே, கூச்சம் இருக்கா உனக்கு? போறவன் வர்றவனெல்லாம் உத்து உத்துப் பார்த்துட்டே போறான்…”
“ஐயோ கடவுளே…நா ஒண்ணும் அப்டி நிக்கலே…எதையாச்சும் சொல்லாதீங்க…”
“நிக்கலியா…நா பார்த்தேங்கிறேன்…நிக்கலேங்கறே? அடக்க ஒடுக்கம் வேணும்டி…அது ஒனக்கு ஆரம்பத்துலேர்ந்தே கிடையாது…இந்த வயசுலயா வரப்போகுது…?”
“போதும் உங்க பேச்சு…வயசு அம்பது தாண்டியாச்சு உங்களுக்கு…இஇன்னமும் பேச்சு மாறலை…ஆறேழு வயசு சின்னவ நான்…இனிமேத்தான் நாம இதெல்லாம் பார்க்கணுமாக்கும்…வேல செஞ்சு வேல செஞ்சு எனக்கு உடம்பே முறிச்சுப் போட்ட மாதிரிக் கிடக்கு…நீங்க என்னடான்னா என்னத்தையோ பேசிட்டிருக்கீங்க…”
“அடிப் பாவீ…என்னடீ இப்டிச் சொல்ற? அப்போ இதெல்லாம் பார்க்க வேண்டாமா? நீ பாட்டுக்குத் திறந்த மேனிக்கு இருப்பியா?”
“அப்டி யாராவது கிடப்பாங்களா? ரொம்பத்தான் சொல்லாதீங்க…”- சலித்துக் கொண்டாள் மல்லிகா.
“அது அப்டியில்லடீ.…பொதுவாப் பெண்களுக்கே ரெண்டு மூணுன்னு பெத்த பின்னாடி, உடம்பைப் பத்தி அத்தனை கவனம் இருக்கிறதில்லை…அவுங்கபாட்டுக்குத் திறந்து போட்டுட்டுக் காத்தாடத்தான் திரியறாங்க…இதுல நீ கொஞ்சம் தாராளம்….”
“ஆமா, நீங்கதான் கண்டீங்க…இத்தன வருஷம் கழிச்சு இப்பத்தான் புதுசாக் கண்டு பிடிச்சிருக்கீங்க…”
“எப்பவோ கண்டு பிடிச்சதுதான்…அப்பப்போ சொல்லிட்டேதான் இருக்கேன்…நீதான் ஒண்ணையும் கண்டுக்கிறதேயில்லை…ஆனாலும் உனக்குக் கொஞ்சம் காத்து அதிகமாத்தான் வேண்டிர்க்கு…”
“கண்டுக்கிறதில்லைன்னா கிடக்கட்டும்…நீங்கதான இருக்கீங்க வீட்டுல…பார்த்தா பார்த்துட்டுப் போங்க…பையனோ பொண்ணோ இருந்தாத்தானே சங்கடம்…அந்தக் கடமைகளோ முடிஞ்சாச்சு…இனி என்ன இருக்கு…?”
“பார்த்தியா,பார்த்தியா, நா சொல்றதை நீ தப்பாவே எடுத்துக்கிறே? அப்டி இருக்கக் கூடாதுடீ! அதப் புரிஞ்சிக்கோ…வயசாக ஆகத்தான் சில விஷயங்கள்ல நாம பிடிவாதமா இருக்கணும்…அப்பத்தான் அந்த ஒழுங்குங்கிறது கடைசி வரைக்கும் நம்ப கூடவே வரும்…ராத்திரி ஒண்ணுக்கு வருது…பாத்ரூம் பக்கத்துல இருக்குங்கிறதுக்காக உடம்பு முடிலன்னிட்டு அங்கயேவா போயிடறோம்? அடுத்தாப்புல தள்ளி இருக்கிற டாய்லெட்டுக்குள்ள போய்த்தானே போறோம்…அதப்போல, என்ன வயசானாலும், எவ்வளவு உடல் கஷ்டமானாலும் சில விஷயங்கள நாம கட்டாயமாப் பிடிவாதமாக் கடைப் பிடிச்சாகணும்டீ…மாராப்ப இழுத்து விட்டுக்கிறது…இடுப்பை மறைச்சிக்கிறது, பின் பக்கம் பாவாடை தெரியாம புடவையை இழுத்துச் செருகிறது, முழங்கால் தெரியறமாதிரிப் புடவையைத் தூக்காம இருக்கிறது, தொடை தெரியற மாதிரி வழிச்சிட்டு உட்காராம இருக்கிறது, உடம்பு தளர்ந்து போச்சுன்னாலும் உள்ளாடைகளைக் கச்சிதமாப் போட்டுக்கிறது…இதெல்லாம் கண்டிப்பா, பிடிவாதமாப் பெண்கள் கடைப்பிடிச்சாகணுமாக்கும்…”
“பெண்கள்னு பொத்தாம் பொதுவாச் சொல்லாதீங்க…அப்புறம் சண்டைக்கு வந்துடப் போறாங்க…”
“பொத்தாம் பொதுவாத்தானே சொல்றேன்…அதிலென்ன தப்பு…தெருவுல போயி டமாரமா போடறேன்…யாரையாவது குறிப்பிட்டுச் சொன்னாத்தான் தப்பு…உங்கிட்டதானே சொல்றேன்…நீ இப்டியெல்லாம் இருக்கணும்னுங்கிறது என்னோட விருப்பம்…அதனால சொன்னேன்…கேட்டா கேளு…இல்லாட்டி விடு…”
சஞ்சீவியை நினைத்துப் பரிதாபமாகத்தான் இருந்தது மல்லிகாவுக்கு. இத்தனை வயசான பின்னாடியும் அவனின் இந்தக் குணம் இன்னும் அவனிடமிருந்து போகவில்லையே என்று தோன்றியது. ஆரம்பத்தில் கல்யாணமான புதிதில் அவனின் இப்படியான பேச்சு அவன் தன் மீது சந்தேகப் படுகிறானோ என்றுதான் தோன்றியது அவளுக்கு. பின்னால்தான் அவன் குணமே அப்படித்தான் என்பது தெரிய வந்தது.
ஆண்களுக்கும் எல்லாமும் உண்டு என்பான். கைலி கட்டியிருந்தால் உள்ளே ஜட்டி கண்டிப்பாகப் போட வேண்டும் என்பான். அது இல்லாமல் ராத்திரிப் படுப்பதுகூட அவனுக்குப் பிடிக்காது. யாராவது வீட்டுக்கு வந்தால், தன் வீடுதானே தனக்கில்லாத சுதந்திரம் என்ன வந்தது என்றெல்லாம் இருக்க மாட்டான். உடனே சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு உடம்பை மறைத்துக் கொண்டுதான் அவர்களோடு பேசுவான். அதிலும் பெண்மணிகள் யாரேனும் வந்து விட்டால் ரொம்ப கவனம். வெறுமே துண்டைப் போர்த்திக் கொண்டு நிற்றல் என்பதெல்லாம் அவனிடம் என்றுமே கிடையாது. அதையேதான் தன்னிடமும் வற்புறுத்துகிறான். எப்படி மறுப்பது? உடம்பு சள்ளைக் கடுப்பாகத்தான் கிடக்கிறது. ஆனாலும் இவன் பாடு பெரும்பாடாக இருக்கிறதே!
“என் ப்ரதரே ஆனாலும் நீ தள்ளி நின்னுதாண்டீ கொடுக்கணும்…அதென்ன காபியை அத்தனை பக்கமாக் கொண்டு கொடுக்கிறே? ரெண்டடி தள்ளிதாண்டி நிக்கணும். அவன் பார்வை எங்க போச்சு பார்த்தியா? உன் இடுப்பு மேலே…அதத் தெரிஞ்சிக்கோ…கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டாங்கன்னு வச்சிக்கோ, தொட்டுக் கிள்ளினாலும் கிள்ளிப் புடுவானுங்க…மோசமானவனுங்களாக்கும்…தம்பி பொண்டாட்டின்னெல்லாம் பார்க்க மாட்டானுங்க…புத்தி வேலை செய்யாது அந்தச் சமயத்துல…எவனும் இந்த விஷயத்துல யோக்கியன் இல்லடீ…அப்டி மீறிக் கையை வச்சான்னா அப்புறம் என்ன நடக்குதுங்கிறது வேறே…அது தனிக் கச்சேரின்னு வையி…நா சொல்ல வர்றது இதான்….அதுல நீ வேறே ரொம்பத் தளுக்கு புளுக்குன்னு இருக்கியா? கேட்கவே வேண்டாம்…எவனையும் நம்பக் கூடாதாக்கும்…அவன் ஊருக்குக் கிளம்பறேங்கிறான்…நீ ராத்திரி இருந்துட்டுப் போலாமேன்னு சொல்ற? அதையே எனக்குச் சொல்லத் தெரியாதா? நீ என்ன முந்திரிக் கொட்டை? நீ விகல்பமில்லாமத்தான் சொல்ற…ஆனா அத அந்த சென்சுல அவன் புரிஞ்சிக்கணுமில்ல…கெட்ட புத்திக்காரங்ஞளாக்கும்…எனக்குத்தான் தெரியும் எங்கண்ணனைப் பத்தி…புரியுதா? என்ன, ஏதுன்னு கேட்காத…வாழ்க்கைல இந்த மாதிரிச் சொல்ல முடியாத, வாய்விட்டுப் பேச முடியாத எத்தனையோ விஷயங்கள் இருக்காக்கும்…எல்லாத்தையும் வெளிப்படையாச் சொல்லிட்டிருக்க முடியாது…எல்லா எடத்துலயும் எல்லாமும் இருந்திருக்கும்…அதான் ஒலகம்…புரிஞ்சிக்கோ, அவ்வளவுதான்….”
விஷயம் தெரியாதவன் என்று அவனை இவளால் ஒதுக்கியும் விட முடியவில்லை. காரணம் அவனின் பேச்சு அத்தனை தெளிவாய் இருந்தது. தன் மீதுதான் எத்தனை ஆசையாய் இருக்கிறான். ஐம்பது தாண்டிய இந்த வயசிலும் அவனின் குறும்புகள் அவளால் மறக்க முடியாதவை. இப்பொழுதும் கூடத் தான் எதிர்பாராத சமயங்களில் வந்து தன்னைக் கட்டியணைத்து பச் பச்சென்று முத்த மழை பொழிந்து விடுகிறான்? ஐம்பதிலும் ஆசை வரும் என்பது எத்தனை சரி? இருபத்தைந்தில் கொடுத்த அதே வேகம், அதே ஆழம்!!
“ஐயே !போதும்…போதும்…விடுங்க…பிள்ளையில்லாத வீட்டுல கிழவன் துள்ளி விளையாடினானாம்…போயி கண்ணை மூடிட்டு சாமி முன்னால உட்காருங்க…ஒரு அரை மணி நேரம் தியானம் பண்ணுங்க…”
“அட நீ என்னடீ…இது அலுத்தாத்தாண்டீ அங்க போகணும்…அதுக்கு முன்னாடி போயி கண்ணை மூடிட்டு உட்கார்ந்தாச் சரியாப் போச்சா…உடனே மனசு பக்குவப் பட்டுடுமா? இல்ல பயிற்சிலதான் சாத்தியமா?மனசு தானா நம்மளை அங்க கொண்டு விடணும்டீ…அப்பத்தான் அங்க உண்மை இருக்கும்… இதுவே பெரிய ஆன்மீகம் அது தெரியுமா உனக்கு? …ஆன்மீகம்ங்கிறது எல்லாத்துலயும் இருக்குதாக்கும்…கடவுளைக் கும்பிடுறதுலயும், தியானம், யோகான்னு பண்ற பயிற்சில மட்டும் இல்லை. முழுமையான ஈடுபாட்டோட இருக்கிற நேர்த்தியான உடலுறவுங்கிறது கூட ஒரு தேர்ந்த ஆன்மீகம்தாண்டீ…எத்தன பேரு அத அந்த வகைல புரிஞ்சு அனுபவிச்சிருக்கான்? நா உணர்ந்திருக்கேன்;…என் மனைவீட்ட அதைப் ப+ரணமா நா அனுபவிச்சு ஆத்மார்த்தமா உணர்ந்திருக்கேன்…நீ எப்டியோ…நா அதை அப்டித்தான் அணுகியிருக்கேன்…தெய்வீகத் தன்மைங்கிறது எல்லாத்துலயும் இருக்காக்கும்…இல்லன்னா கோயில் கோபுரங்கள்ல சிற்பங்களா அது வடியுமா?”
“ஐயோ போதுமே….எல்லாத்தையும் இப்டி வெட்ட வெளிச்சமாச் சொல்லணுமா? கேட்க முடியலை…”
“நமக்குள்ளதானே பேசிக்கிறோம்…இஇதெல்லாம் ஒரு தப்பே இல்லடீ…நாமளா நினைச்சிக்கிறதுதாண்டீ…எப்படிப் பார்க்கிறோம்ங்கிறதைப் பொறுத்தது. அவ்வளவுதான்…இதையே ஒரு ஆன்மீகச் சொற்பொழிவாளர் நீட்டி முழக்கிச் சொன்னா அமைதியாக் கேட்டுக்கிறோம்ல…அதையேதான் நா சொல்றேன்…கேட்டுக்கயேன்…”
சஞ்சீவியின் பேச்சு ஒவ்வொன்றும் பட்டவர்த்தனமாகத்தான் இருக்கும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல் என்பதெல்லாம் அவனிடம் கிடையாது. அதுதான் இவளுக்குப் பிடித்திருந்தது. நல்லதைத்தானே சொல்கிறான். என்ன, கொஞ்சம் சத்தமாகச் சொல்கிறான். வெட்ட வெளிச்சமாகச் சொல்கிறான். ஆனால் நல்லவன். அன்பானவன். கள்ளமும் கபடமும் அறிந்து வைத்து, அதைப் பயன்படுத்தாத பண்பாளன்.
அவன் பேச்சுக்குக் கட்டுப்பட்டு, மல்லிகா உள்ளே வந்து நடு உறாலில் அக்கடா என்று உட்கார்ந்து சாவகாசமாகத் தலை சீவ ஆரம்பித்தாள்.
சுற்றிலும் பறந்த தலைமுடிகளை ஓடி ஓடிப் போய்ப் பிடித்து, சுருட்டி எடுத்து வெளியே வீசியவன், சற்றும் எதிர்பார்க்காதவாறு வந்து சட்டென்று அவள் மடியில் விழுந்தான.;
“அய்யய்ய…இதென்ன புதுப் பழக்கம்?”- வாசல் கதவு திறந்திருக்கிறதா என்று நோட்டமிட்டவளாய், அதிர்ந்து போய்க் கூசினாள் மல்லிகா.
“பேசாம இரு…பேசாம இரு…யாரும் வரமாட்டாங்க…எனக்கு எங்கம்மா நினைப்பு வந்திடுச்சு திடீர்னு….அதுதான் உன் மடில வந்து படுத்தேன்…நீயும் ஒருவகைல எனக்கு அம்மா மாதிரிதான். நானும் உனக்குக் குழந்தை மாதிரிதான்…பெண்கள்தான் ஒரு குடும்பத்தோட எல்லாவிதமாவும் இருக்காங்க…ஆதார ஸ்ருதியே அவுங்கதான்… இப்போ எங்கம்மா இங்க இருந்தாங்கன்னு வச்சிக்கோ…படுத்துக்கோடா…சும்மாப் ;படுத்துக்கோன்னுதான் சொல்லுவாங்க…அந்தளவுக்கு ரசனையும் அன்போட ஆழமும் தெரிஞ்சவங்களாக்கும்…”
“நல்ல அம்மா…நல்ல பிள்ளை…”-கண்களில் கசிந்த கண்ணீரை அவனுக்குத் தெரியாமல் துடைத்தவாறே அதீதக் கூச்சத்தில் நெளிய ஆரம்பித்தாள் மல்லிகா. ———————————

உஷாதீபன்

Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்