அர்ச்சனை

This entry is part [part not set] of 41 in the series 20110102_Issue

எஸ் ஜெயலட்சுமி



டிவி யில் மிருதுவான அதிரசம் செய்வது எப்படி என்று சொல்லிக் கொண்டி ருந்தாள் ஒரு பெண்மணி. சமையல் குறிப்புக்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள் லலிதா. போன் ஒலிக்கவே
எடுத்தாள். மறுமுனையில் அவள் தங்கை விஜயா,
“அக்கா, எனக்கொரு ஹெல்ப் பண்ணணுமே!” என்றாள்.
”என்ன விஷயம் சொல்லு” ஏதாவது வாங்கி அனுப்பணுமா?
“அதெல்லாம் வேண்டாம் இது வேற விஷயம். விஷயம் இது தான்

விஜயாவுக்கு ஃபரீதாபாத்தில் கோமதி என்றொரு சிநேகிதி இருக்கிறாள்.அவளுக்கு ஜோஸ்யம் தெரியும் என்று சொல்லிக் கொள்வாள். அவளுக்கு, விஜயா அவள் கணவர் இரு குழந்தை களின் ஜாதகம் மனப்பாடம். விஜயா போன மாசம் நீ கீழே விழுந்து கையில் கட்டுப் போட்டுக் கொண்டாயே அதுக்கு சனியின் பார்வை தான் காரணம். உன் கணவர் மேல் ஸ்கூட்டார்காரன் இடிச்சுட்டுப் போனானே, அதுக்கு குரு வக்ர கதியில் போனது தான் காரணம். உன் பையன் பரீக்ஷையில் மார்க் கொறஞ்ச துக்கும் ராகு தான் காரணம். அதனால் ஏதாவது பரிகாரம் பண்ணணும் என்று சொல்லி யிருக்கிறாள்.

கோமதி இப்படிச் சொல்லி விட்டதால் குறைந்த பக்ஷம் ஒரு அர்ச்சனையாவது செய்து அந்த கிரகங்களைக் குஷிப்படுத்த வேண்டும் என்று விஜயா தீர்மானம் செய்த்திருக்கிறாள் அவள் இருக்கும் ஃபரீதாபாத்தில் அதற்கு வசதி இல்லாததால்
அக்காவிடம் அர்ச்சனை செய்து விடுகிறாயா என்று
கேட்கலாமே என்று தோன்றியதாம்.

”சரி, யார் பேருக்கு அர்ச்சனை செய்யவேண்டும்? நக்ஷத்திரம் ராசி எல்லாம் சொல்லு” என்றாள் லலிதா. விஜயா, அவள் கணவர் இருவருடைய நக்ஷத்திரம். ராசி இரண்டையும் சொல்லிவிட்டு வியாழன், சனி இரண்டு நாட்களும், 6 மாதங்களுக்கு அர்ச்சனை செய்யும் படி சொன்னாள். லலிதாவுக்கும் அவள் கணவருக்கும் பொதுவாக அர்ச்சனை வைப்பதில் அவ்வளவாக நம்பிக்கை கிடையாது என்றாலும் விஜயா இருக்கும் இடத்தில் வசதி இல்லாததால் முகத்தில் அடித்தாற்போல் முடியாது என்று சொல்லத் தயக்கமாக இருக்கவே சரி என்று ஒப்புக் கொண்டாள்

முன்பொரு தடவை லலிதா வின் மன்னி அவள் பையனுக்காக வியாழக் கிழமை தோறும் அர்ச்சனை செய்யச் சொன்ன போது நடந்த விஷயம் ஞாபகம் வந்தது. லலிதாவின் அப்பா வெகு தூரம் சென்று அர்ச்சனை செய்து வந்தார். 2,3, தடவை கள் போய் வந்த பின் அர்ச்சகர் 108 நாமங்களையும் முழுவதும் சொல்வதில்லை பாதி நாமங்கள் கூடச் சொல்வதில்லை என்று குறைப் பட்டுக் கொண்டார். அப்பாவுக்கு குருபகவானின் அஷ்டோத்திரம் மனப்பாடம்.

நாலாவது தடவை போன போது, ”நான் வேண்டுமானால் அஷ்டோத்திரம் சொல் லுகிறேன் நீங்கள் அர்ச்சனை செய்யுங்கள்” என்று சொல்ல அவர் முடியாது என்று மறுத்து விட்டார் அப்பாவுக்கு அரைகுறையாக அஷ்டோத்திரம் சொல்வதில் உடன்பாடில்லை. அதன் பின் அர்ச்ச னைக்குப் போவதை நிறுத்தி விட்டுத் தானே வீட்டி லேயே பேரனுக்காக அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார்.

இன்னொரு அனுபவமும் லலிதாவுக்கு நினைவுக்கு வந்தது. லலிதா தன் மாமா வுடன் எதிரே இருந்த ராமர் கோவிலுக்குச் சென் றிருந்தாள். மாமா ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றும் படி சொல்லியிருந்தார். அன்று கோவிலில் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஒரு அர்ச்சகர் மூல ஸ்தானத்தில் அர்ச்சனை செய்து
கொண்டிருந்ததால் இன்னொரு அர்ச்சகர் ஆஞ்சநேய ருக்கு அர்ச்சனை செய்ய வந்தார். நக்ஷத்திரம் பெயர் எல்லாம் கேட்டுக் கொண்ட பின் அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார்.

திடீரென்று அர்ச்சனை தடம் புரண்டு போவதாகத் தோன்றியது லலிதாவுக்கு. ப்ருந்தாவன சஞ்சாரிணே நம:, ஸ்யமந்தக மணி. சத்யபாமா தராய என்ற வார்த்தைகளைக் கேட்டதும்
லலிதாவுக்குத் தூக்கி வாரிப்போட்டது. அவள் மாமா வும் ஒரு மாதிரி தவித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
அர்ச்சனை ஆஞ்சநேயரிலிருந்து க்ருஷ்ணருக்குத் தாவி விட்டது! சர்வம் க்ருஷ்ணார்ப்பணம்! இந்த இரண்டு விதமான அனுபவங்களுக்குப் பின் லலிதா
கோவிலில் அர்ச்சனை செய்வதையே விட்டு விட்டாள்.

இப்பொழுது முடியாது என்று சொன்னால் தங்கை கணவர் என்ன நினைத்துக் கொள்வாரோ என்று நினைத்தாள். எல்லா அர்ச்சகரும் ஒரே மாதிரியாகவா இருப்பார்கள்? விதி விலக்காக எத்தனையோ பேர் இருக்கலாமே என்று சமாதனம்
செய்து கொண்டாள்.

பொதுவாகவே வியாழன், சனி இரண்டு நாட்களுமே கோயிலில் கூட்டம் அதிக மாக இருக்கும். அதிலும் சனிக்கிழமை என்றால் கேட் கவே வேண்டாம். சனி பகவானிடத்தில் பக்தி இருக் கிறதோ இல்லையோ பயம் அதிகமாகவே இருக்கிறது! சனிக் கிழமைகளில் அவள் போகும் பொழுது 10, 15 பேராவது இருப்பார்கள். ஒவ்வொருவர் கையிலும் பேப்பர் இருக்கும். அதில் சுமார் 7.8 பெயர்களும் அவர்களது நக்ஷத்திரம் ராசிகளும் எழுதப்பட்டிருக்கும்.

அர்ச்சனைக்கு வந்தவர்கள் அந்தப் பெயர்கள், நக்ஷத்திரங்கள், ராசிகளைச் சொல் லச் சொல்ல அர்ச்சகரும் கிளிப்பிள்ளை மாதிரி திருப் பிச் சொல்வார். இவ்வளவு ஆசாமிகளின் பெயர்களை யெல்லாம் அக்கறையோடு சொன்னவர் அந்தத் தெய் வங்களுக்குரிய 108 நாமங்களை மட்டும் முழுவதும் சொல்வதேயில்லை. கூடிப் போனால் 10,12 நாமங்க ளோடு நிறுத்தி விடுவார். பக்த கோடிகளில் ஒருவரும் இதைப் பற்றிக் கவலைப் படுவதாகவும் தோன்ற வில்லை. அப்பா முன்பு சொன்னது ஞாப கத்துக்கு வந்தது.

வரவர அர்ச்சனைகளின் என்ணிக்கை அதிகமானது. ஆசாமிகளின் பெயர்களை
உச்சரிப்பதும் அதிகமானது! லலிதாவுக்கு மனம் ஒப்ப வில்லை. அவளிடம் எல்லா அஷ்டோத்திரங்கள் அடங்கிய புத்தகம் இருப்பது நினைவுக்கு வந்தது. சுமார் 40 வருடங்களுக்கு முன் எட்டு கிரகங்கள் ஒன்று சேர்ந்தபோது கூட இப்படி யாரும் விழுந்து விழுந்து அர்ச்சனை செய்யவில்லை!. மகா பெரியவர் கள் எல்லோரையும் கோளறு பதிகம் தானே படிக்கச் சொன்னார்!

மறு நாளே விஜயாவுக்கு போன் செய்தாள். “விஜயா, கோயிலுக்குப் போய் அர்ச்சனை செய்தேன். ஆனால் அங்கு ஸ்வாமிகளின் பெயர்களை விட ஆசாமிகளின் பெயர்களே அக்கறையாக சொல் லப் படுகின்றன. செய்யும் தொழிலே தெய்வம் என்ற எண்ணம் தெய்வ சந்நிதியிலேயே இல்லை! உங்களி ருவருக்கும் நேரம் சரியாக இல்லை என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் இருவரும் ஏன் அந்தத் தெய்வங் களின் நாமங்களைப் பாராயணம் செய்யக் கூடாது? உங்களுடைய உடம்பு சரியில்லை என்றால் நீங்கள் தானே மருந்து சாப்பிட வேண்டும்? பத்தியம் இருக்க வேண்டும்?”
”நான் ஒரு புத்தகம் அனுப்பறேன். அதில் இருக்கும் குரு சனி இரண்டு கிரகங்களின் அஷ்டோத்திரத்தை முழுவதையும் சொல்லுங்கள். அதோடு கோளறு பதிகத்தையும் பாரா யணம் செய்யுங்கள். இங்கு அர்ச்சனைக்குச் செல வழிக்கும் பணத்தை ஒரு ஏழையின் பசி தீர்க்கச் செல விடு. அதுதான் நல்லது என்று தோன்றுகிறது. அப்பா அடிக்கடி சொல்லுவாரே

”நடமாடும் நம்பர்க்கு ஒன்று ஈகீராயின்
படமாடும் பகவர்க்கு அது ஆமே”
அது போல ஏழைகளுக்குக் கொடு” என்று சொல்லி போனை வைத்தாள்.

சொன்னபடியே அர்ச்சனையை நிறுத்தி விட்டு அவளிடமிருந்த அஷ்ட்டோத்திரங்கள் அடங்கிய புத்தகத்தையும் கோளறு பதிகத்தையும் கூரியர் மூலமாக தங்கை விஜயாவுக்கு அனுப்பி வைத்தாள் லலிதா.

*******************************************************

Series Navigation

எஸ் ஜெயலட்சுமி

எஸ் ஜெயலட்சுமி