நீங்க போட்ட எட்டு

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

T.V.ராதாகிருஷ்ணன்


தனக்கு இதுபோன்றதொரு நிலைமை வரும் என தர்மலிங்கம்..அந்த நிமிடம் வரை
நினைக்கவில்லை.

அந்த ஊரில் இருந்த ஒரு பள்ளியில் எட்டாவது வகுப்பு ஆசிரியர்
அவர்.கிட்டத்தட்ட இருபத்தைந்து வருட அனுபவம்.

அவரிடம் படித்த மாணவர்கள் பலர்..இன்று பல துறைகளில் பெரும் புள்ளிகளாக
இருக்கின்றனர்.ஆனால் அந்த தர்மலிங்கம் என்ற ஏணியோ எட்டாம் வகுப்பிலேயே
நிரந்தரமாக இருக்கிறது.

கண்டிப்புக்குப் பெயர் போனவர் அவர்.அவரைக் கண்டால் அத்தனை
மாணவர்களுக்கும் பயம்.அவர் வகுப்பிற்கு
படிக்காமலேயோ..வீட்டுப்பாடங்களைச் செய்யாமலோ எந்த மாணவனும்
வரமுடியாது.அப்படி வந்தால்..அந்த மாணவனின் அரைக்கைச் சட்டையை சற்றே
தூக்கி ‘எட்டு’ போடுவது போல..ஒரு கிள்ளு..கிள்ளி விடுவார்.உயிரே
போய்விடும்.

அந்த மாணவன் வீட்டில் போய் சொன்னாலும்..அவனைப் பெற்றோரும் தங்கள்
பிள்ளைக்கு ஆதரவாகப் பேசமாட்டார்கள்.’நீ என்ன தப்பு
செஞ்சியோ..வாத்தியார்கிட்டே அடி வாங்கிக் கிட்டு வந்து நிக்கறே..அடியாத
மாடு படியாது..நல்லா அடி வாங்கு..’ என்று கூறிவிடுவார்கள்.

ம்..அதெல்லாம்..அந்தக்காலம்.

இப்ப..கொஞ்சம் கோபமாக பேசினாலும்..கண்டனத்திற்கு ஆளாக நேரிடும்.

தர்மலிங்கத்திற்கு ..அன்று போதாத காலம் போலிருக்கிறது.அவர் வகுப்பில்
படிக்கும் விக்ரம் என்னும் மாணவன்..முதல் நாளன்று கொடுத்திருந்த
வீட்டுப் பாடங்களை ஒழுங்காக செய்யவில்லை.

அந்த மாணவனை கொஞ்ச நாட்களாகவே கவனித்துக் கொண்டுதான் வருகிறார்.அவன்
நடவடிக்கை சரியில்லை.அவனை இப்போது திருத்த முயற்சிக்கவில்லை என்றால்
அவனது எதிர்காலமே கேள்விக் குறி ஆகிவிடும் என அவரது உள்மனம்
சொல்ல..அவனுக்கு எட்டு போட்டு விட்டார்.மாணவனும் மயங்கி விழுந்து
விட்டான்.

பள்ளியே..அல்லோலகலப்பட்டது.ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று சொன்னார்கள்.அவனை
அருகாமையில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்கள்.மாணவனின்
பெற்றோருக்கும்..காவல் துறையினருக்கும் விவரம் தெரிவிக்கப்பட்டது.

என்ன செய்வது..என்று அறியாது..தர்மலிங்கம் தானே சரணடையும் நோக்கத்தில்
காவல் நிலயத்திற்கு சென்றார்.அங்கு காவல்துறை அதிகாரி இல்லாததால்..இருந்த
நாற்காலி ஒன்றில் அமர்ந்தார்.

சிறிது நேரத்தில் அதிகாரி வர..எழுந்து நின்று தர்மலிங்கம் பள்ளியில்
நடந்தவற்றை அவரிடம் கூறினார்.

பொறுமையாக…எல்லாவற்றினையும் கேட்டுக் கொண்டிருந்த அதிகாரி..தன்
அரைக்கை சட்டையின் கைகளை சற்றே உயர்த்தி..அந்த கருமை நிற வடுவைக்
காண்பித்தார்.

இந்த வடுவைப் பார்த்தீங்களா..இது எனக்கு நீங்க போட்ட எட்டு…என்னைத்
தெரிகிறதா உங்களுக்கு..நான்தான் அருணாசலம்..உங்க பழைய
மாணவன்.ஒருநாள்..நான்..பக்கத்து பையன் பையிலிருந்து பணத்தைத்
திருடிட்டேன்.அதைத் தெரிஞ்சுக்கிட்ட நீங்க கொடுத்த பரிசு
‘டேய்..அருணாசலம்..இனிமே நீஒரு தப்பும் செய்யக்கூடாது.ஏதாவது
செஞ்சா..அந்த நேரம் இந்த காயம் எப்படி ஏற்பட்டதுங்கற எண்ணம் உனக்கு
வரணும்..இந்த காயத்தால ஏற்படப் போகும் வடு..உன்னை ஒரு நேர்மையானவனாக
மாற்றும்’ என்று சொன்னீங்க…அன்னிக்கு நீங்க எனக்கு இந்த தண்டனை
கொடுக்கலைன்னா..நான் இன்னிக்கு இப்படி ஒரு நேர்மையான காவல்துறை
அதிகாரியாய் மாறியிருப்பேனான்னு தெரியாது.

‘நீ…நீ.. நீங்க..அருணாசலமா ..இப்படி..ரொம்ப மகிழ்ச்சி…ரொம்ப
..ரொம்ப..மகிழ்ச்சி’ தர்மலிங்கத்தின் கண்களில் கண்ணீர்…ஆனந்தக்
கண்ணீர்.

‘ஐயா..அன்னிக்கு நான் நடந்துகிட்ட மாதிரி..ஒரு மாணவன் தப்பா நடந்துகிட்டு
இருக்கான்..நீங்களும் அன்னிக்கு ..எனக்கு கொடுத்த அதே தண்டனையைக்
கொடுத்திருக்கீங்க.அவன் பயத்திலே மயங்கி விழுந்துட்டான்.இது பெரிய தவறா
எனக்குத் தெரியலை..உங்க மேல எதாவது புகார் வந்தா..நான்
பார்த்துக்கறேன்..நீங்க போங்க…கான்ஸ்டபிள்..சாரை..நம்ம ஜீப்ல
கொண்டுபோய் வீட்டில விட்டுட்டு வா’ என்றார்.

தர்மலிங்கம்..இரு கைகளையும் கூப்பி விடை பெற்றார்..’இன்று..இந்த
ஆசிரியரின் தண்டனையைப்பெற்ற மாணவன் நாளைக்கு நிச்சயம் என்னைப்போல
நேர்மையானவனாக வருவான்.ஏனெனில் அந்த மாணவன் என் ரத்தம்’ என்று
எண்ணியவாறே..வேறு யாரும் பார்க்காதபடி..தன் கண்களைத் துடைத்துக்
கொண்டார் அருணாச்சலம்.

Series Navigation