வாரிசு

This entry is part [part not set] of 34 in the series 20101128_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


அரசருக்கு உடல்நிலை நாளுக்குநாள் மோசமாகிக் கொண்டே வந்தது. எத்தனையோ வைத்தியர்கள் வந்து பார்க்கிறார்கள். அவரைக் குணப்படுத்தவே முடியவில்லை. அரசாங்க நடவடிக்கைகள் திகைத்துப் போயிருந்தன.

எப்போது வேண்டுமானாலும் அரசருக்கு மரணம் சம்பவிக்கலாம், என்ற நிலை. அரசரி ன் அந்திமக்காலம் இது, என்று அரண்மனைப் பெரிய ஜோதிடர் உறுதி செய்கி றார்.

ஊரெங்குமே ஜனங்கள் மத்தியில் அடுத்த அரசர் யார், என்ற பேச்சு கிளம்பி விட்டது. பிரச்சனை என்னவென்றால் ,அரசருக்கு வாரிசு இல்லை.

மகாசபை கூடியது. பட்டத்து யானையிடம் மாலையைத் தந்து, அது யாருக்கு மாலையிடுகிறதோ, அவரே அல்லது அவளே அடுத்து ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும், என்கி றதாய்த் தீர்மானிக்கப் பட்டது.

அழகாக அலங்கரிக்கப்பட்டது பட்டத்து யானை. மாலையைத் தந்து அது நகரவீதி களில் பவனிவர ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.

தளபதி வந்து யானைப்பாகனின் காதில் ரகசியமாய்ப் பேசினார். ‘யானையை என் மகன் கழுத்தில் மாலையைப் போடச்சொல். அவனே அரசனாக வேண்டும். உன்னை நான் வெகுமதிகள் வழங்கிக் கெளரவிப்பேன்.’

தலையாட்டினான் யானைப்பாகன்.

பாகன் எதிர்பார்க்கவேயில்லை. ஜோதிடர் வந்து தனியே அவனிடம் பேசினார். ‘யானையை விட்டு என் மகள் கழுத்தில் மாலையைப் போடப் பழக்கப்படுத்து. அவளே அரசியாக வேண்டும். உன்னைப் பெரும் பரிசுகள் வழங்கி நான் கெளரவிப்பேன்…’

சரி, என்று தலையாட்டினான்.

யானையிடம் மாலையைத் தந்து, வீதிகளில் உலாவர அனுப்பினார்கள். விறுவிறுவென்று வீதிகளைக் கடந்து பொதுமக்கள் திடலுக்கு அது வந்தது.சிரித்தபடி தளபதியின் மகன் அந்தப் பக்கம் நின்றிருந்தான். இன்னொரு பக்கத்தில் எதிர்பார்ப்புடன் ஜோதிடரின் மகள்.

யானை மாலையைப் போட்டது,

பாகனின் மகன் கழுத்தில்.

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்