பரிமளவல்லி – 14. மஞ்சள் கேக்

This entry is part [part not set] of 39 in the series 20101002_Issue

அமர்நாத்


14. மஞ்சள் கேக்

“ஹாய், பரி மாமி!” என்று ‘இன்ஃபினிடி’யிலிருந்து இறங்கிய மாதவியின் குரல் கேட்டுத்தான் பரிமளாவுக்கு அவள் வீட்டிற்குமுன் நிற்பது நினைவுக்கு வந்தது.
“ஹாய் மாதவி!”
மாணவப்பருவத்தில் நீண்டு பரந்திருந்த தலைமயிர் இப்போது குட்டையாக வெட்டப்பட்டிருந்தது. சரியான நேரத்தில் சாப்பிடாததாலோ, வேலைபளுவினாலோ இளைத்திருந்த உடல். முகம்கூட சிறிதாகி வேறொருத்தியைப் பார்ப்பதுபோல் இருந்தது.
“சாரி மாமி, நீங்க வரும்போது வீட்டிலிருப்பேன்னு நினைச்சேன். மணி ரெண்டாயிடுத்து. ஏன் வெளியிலேயே நிக்கறேள்?”
“வெயில்லே நிக்கறது நன்னாத்தான் இருக்கு.”
வீட்டின் பரிமாணத்தையும் மாதவியின் சொகுசான காரையும் கணக்கிலெடுத்தால், “எல்லாம் எப்படிப்போகிறது?” என்கிற கேள்விக்கு அவசியமில்லை. ஆளுக்கொரு பெட்டியைத்தள்ளி நடந்தார்கள். நுழைந்ததும் காலணிகளுக்கென்றே ஒரு அறை. அதைக்கடந்து சமையலறையைப் பார்த்த ஒருமூலை. சதுரமேஜையின் அடுத்த பக்கங்களில் அமர்ந்தார்கள். ஆளுயர ஜன்னல் வழியாக வெளியில் பார்த்தபோது தொலைவில் கால்ஃப் கொடி பறந்தது. மாதவியின் பேச்சில் பெரும்பாலும் ஆங்கிலம். வேலையிலும் குழந்தைகளோடு பேசுவதிலும் வந்த பழக்கம். பரிமளாவும் அவளைப் பின்பற்றினாள்.
“உன்னைப்பாத்து பத்துவருஷத்துக்கு மேலேயே இருக்கும்.”
“இருக்கும், இருக்கும். உங்களைப் பார்க்க வரவேண்டுமென நினைப்பேன். வேலையின் நெருக்கடியில் முடிந்ததில்லை.”
“நீலாவையும் ஷீலாவையும் வேறு கவனிக்க வேண்டுமே!”
“ம்! வாரநாட்களில் வேலையிலிருந்து வந்து சமைத்துச் சாப்பிட்ட பிறகு அவர்களைக் குளிப்பாட்ட மல்லுக்குநிற்க வேண்டும். சனி ஞாயிறென்றால் பாலே ப்ராக்டிஸ், கோவிலில் ஸ்லோக வகுப்பு, இதுக்கெல்லாம் அவர்களை அழைத்துக்கொண்டு போகத்தான் நேரம். உங்களுக்குக் குடிக்க என்ன தரட்டும்?”
“இப்பத்தானே அவர்கள் வீட்டில் சாப்பிட்டேன். நீயும் வேலையிலிருந்து வந்திருக்கிறாய். கொஞ்சநேரம் நிம்மதியாக உட்காரேன்!”
“காஃபி தயாரிக்கிறேன். பிறகு குடிக்கலாம்.” மாதவி எழுந்து காஃபி மேக்கரில் பொடிபோட்டு தண்ணீர் ஊற்றி அதை இயக்கினாள். ஆவிகலந்த வெந்நீர் கொட்டும் சத்தமும், காப்பிப்பொடியின் வாசனையும் உரையாடலின் சுமுகத்தை வளர்த்தன.
“அவர்களை எப்படித் தெரியும்?”
“சாமி, சரவணப்ரியா, நான் மூன்றுபேரும் பி.எஸ்ஸி. ஒரே சமயத்தில் படித்தோம், ஆனால் வௌ;வேறு பாடங்களில். அதற்குப்பிறகு இப்போதுதான் அவர்களைப் பார்க்கிறேன்.”
“அப்படியா? பேசுவதற்கு நிறைய விஷயம் இருந்திருக்குமே.”
“தூங்காத நேரத்திலெல்லாம் பேச்சுதான்.”
“அதற்குத்தான் இங்கே வந்தீர்களோ?”
“உண்மையைச் சொல்லப்போனால் இது வியாபாரப் பயணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் பழையநட்பைப் புதுப்பிக்கும் வருகையாக அமைந்துவிட்டது.”
“புரியவில்லையே.”
“ஒரு கூட்டு ப்ராஜெக்டில் பங்குபெற சரவணப்ரியா என்னை அழைத்தாள்.”
சிறுமௌனத்திற்குப் பிறகு, பதில் தெரிந்தாலும் வெறும் உபசாரத்திற்காக மாதவி கேட்டாள். “எப்படி போயிற்று?”
“கடந்த இரண்டுமூன்று வாரங்களாக எனக்கு கிருஷ்ணபட்சம். என் தூரதிருஷ்டம் இங்கேயும் தொடர்ந்திருக்கிறது. சென்றவாரம் வரையில் க்ரான்ட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருந்ததாம். நான் இங்கே வந்த ஒரேநாளில் அது தகர்ந்துவிட்டது.”
மாதவி நீண்ட யோசனையில் ஆழ்ந்தாள். கடைசியில், “ரொம்பவும் எதிர்பார்த்து வந்தீர்களோ?” என்று அக்கறையுடன் கேட்டாள்.
“இங்கே வந்திறங்கிய ஒருமணிக்குள் ஏதோ சரியில்லையென்று தெரிந்தது. முதலில் துளி ஏமாற்றம், அது உடனே மறைந்துவிட்டது.” ‘அதற்குபதிலாக, விலைமதிப்பற்ற உறவு திரும்பக்கிடைத்த சந்தோஷம்.’
“ப்ராஜெக்டில் உங்கள் பங்கு என்ன?”
“நான் புள்ளிவிவரங்களை கவனிக்க வேண்டும்.”
“நீங்கள் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியை என்றுதான் எனக்குத் தெரியும்.”
“நீ கேட்டதால் பெருமை அடித்துக்கொள்கிறேன். பள்ளியில் கணக்கு சொல்லிக்கொடுத்தாலும் நான் ஆராய்ச்சியை முழுக்க விட்டுவிடவில்லை. அதற்காக என் மென்டோர் ஸ்ரீஹரிராவிற்கு நன்றிசொல்லியாக வேண்டும். இதுவரை ஒவ்வொரு கோடையிலும் கோர்னேலில் ஒரு ஸ்டாட் ப்ராஜெக்ட்டில் பங்குகொள்ள என்னை அழைப்பார். அதைவைத்து ஒரு கட்டுரையாவது எழுதுவேன். அப்படி இருபது. அதுதவிர, பள்ளிக்கூடத்தில் அதிபுத்திசாலி மாணவர்களுடன் குட்டி ஆராய்ச்சிகள் செய்வதுண்டு. அவற்றில் பல ‘இன்டெல்’ போட்டிகளில் பரிசுபெற்றிருக்கின்றன. இரண்டு பிரசுரமாகியிருக்கின்றன.”
“உங்களுக்கு என்று ஒரு பெயர் இருக்கும்போல் தெரிகிறதே” என்கிற பாராட்டில் ஆச்சரியமும் கலந்திருந்தது.
“இருக்கு, ஆனா பெத்தபேரில்லை” என்றாள் பரிமளா புன்னகையுடன்.
“பெயர் பெயர்தானே?”
அப்போது மாதவிக்கு வந்த அழைப்பிற்காக பேச்சு நின்றது. அவள் அலைபேசியில் அழைத்தவரின் பெயரைப் பார்த்தாள். ஆனால் உடனே பதில்சொல்லவில்லை.
“நான் உங்கள் அறையைக் காட்டுகிறேன்” என்று அவள் எழுந்து பரிமளாவின் பெட்டிகளில் ஒன்றை எடுத்துக்கொண்டாள். மாடியில் தனிவீடு என்றே சொல்லக்கூடிய ஒருபகுதி. படுக்கை, குளியலறைகளைத் தவிர, தொலைக்காட்சியும், சோஃபாக்களும் கொண்ட கூடம்.
“வீட்டில்தானே இருக்கப்போகிறேன். உடை மாற்றிக்கொண்டு வரட்டுமா?”
“உங்கள் சௌகரியம்.”
கீழேவந்த மாதவி படிக்கட்டிற்கு எதிரிலிருந்த அலுவலக அறைக்குச்சென்று தொலைபேசியில் தொடர்புகொண்டாள்.
“யெஸ் பாஸ்?”
“சாரி மாட்! நீ கிளம்பிச் சென்றபிறகுதான் தெரிந்தது” என்றார் பட்லர் மன்னிப்புக்கோரும் குரலில்.
“பரவாயில்லை, சொல்லுங்கள்!”
“1-ப்ரோமோப்ரோபேன் கட்டுரை தயாராகிவிட்டதா?”
“முடிந்த மாதிரிதான்.”
“இன்னும் என்ன பாக்கி?”
“நாம் எப்போதும் செய்வதுபோல், நம்மை வெளிப்படுத்தாமல் மதிப்பிற்குரிய ஒரு நிபுணரின் பெயரில் அந்தக் கட்டுரையை வெளியிட வேண்டும். யாரை அணுகலாமென்ற யோசனை.”
“அதை உடனே அச்சில் கொண்டுவர முடியுமா?”
“ஒருமாதத்திற்குள் ‘வொர்க்கர் சேஃப்டி’யில் பிரசுரம் செய்துவிடலாம். அதில் பல கட்டுரைகளை நாம் வெளியிட்டிருக்கிறோம். என்ன அவசரம்?”
“மார்க்ஸ் க்ளீனிங் சர்வீஸின் வழக்கை மாநில நீதிமன்றம் எடுத்துக்கொள்ளப் போகிறது எனத் தெரிகிறது. அந்தக்கட்டுரை விரைவில் வெளிவந்தால் நமக்கு பலம்சேர்க்கும்.”
“நான் கவனித்துக்கொள்கிறேன்.”
“தாங்க்ஸ் மாட்! உன்பொறுப்பில் விட்டபிறகு எனக்கு கவலை கிடையாது.”
மாதவியின் எதிரில் தொலைக்காட்சி போன்ற அகலமான திரையுடன் ஒரு கணினி. அவள் பேசும்போதே திரையில் ஒளிபரவியது. பரிமளா கோலப்பனை கூக்கிலில் தேடினாள். அந்தப்பெயரில் அவள் ஒருத்திதான். விஞ்ஞானிகள் வரிசையில் அவளைப்பற்றிய விவரங்கள். அவள்பெயர் தாங்கிய கட்டுரைகளின் தொகுப்பு, மொத்தம் இருபத்தொன்பது, தரமான சஞ்சிகையில் வெளியாகியிருந்தன. முதல் பத்து கட்டுரைகளைத் தவிர்த்து மற்றவை பரிமளாவின் தலமையில். சமீபத்தில் வெளிவந்த இரண்டைப் பிரித்தாள். எழுதியவர்களின் குறிப்புகளில் பரிமளா கோலப்பனின் விவரங்கள் தரப்பட்டிருந்தன. கட்டுரைகளை மேலோட்டமாகப் படித்தாள். அவற்றின் முடிபுகளில் அவளுக்கு ஒப்புதல் இல்லாவிட்டாலும், அவை பரிமளாவின் மேதாவிலாசத்தைக் காட்டின. கடைசியாக அவள் பெயரில் ஒருபுத்தகம். ஊர்பேர் தெரியாத ஒரு பதிப்பகம் வெளியிட்டிருந்தாலும், ‘சயன்ஸ் நியுஸி’ல் அதை சிலாகித்து ஒரு விமர்சனம்.
பரிமளாவிற்கு க்ரான்ட் மூலம் வந்திருக்கக்கூடிய பணம் கிடைக்காமல் போனதால், அதற்கு பிராயச்சித்தமாக எதாவது செய்ய வேண்டும்.
மாடியிலிருந்து இறங்கிய பரிமளா கண்ணாடிக்கதவு வழியாக மாதவியைக் கண்டவுடன் அலுவலக அறைக்குள் நுழைந்தாள். அவள் கையில் ஒருபெரிய அலங்கார டப்பா. அவளைக்கண்டதும் மாதவி திரையை அணைத்தாள்.
“திரும்பி வரச்சே தொலைஞ்சு போயிட்டேன்.”
“இங்கேவந்து ஒருமாசமாச்சு. இன்னும் எங்களுக்கு இந்தவீடு பழக்கமாகலை.”
“குழந்தைகளுக்கு மைசூர் பாக் பிடிக்கும்னு சொன்னியே. பண்ணி எடுத்துண்டுவந்தேன்.”
“ஞாபகம் வச்சிண்டிருக்கேளே. தாங்க்ஸ், மாமி!” என்று டப்பாவை வாங்கிக்கொண்டாள்.
சமையலறைக்கு வந்து இரு கோப்பைகளில் பாலும் சர்க்கரையும் கலந்த காப்பி தயாரித்து ஒன்றை பரிமளாவுக்கு நீட்டினாள்.
“குடிச்சுப்பாத்து இன்னும் எதாவது வேணுமான்னு சொல்லுங்கோ!”
“கொஞ்சம் சுடப்பண்ணலாம்.”
அந்தக்கோப்பை நுண்ணலை அடுப்பின் தட்டில் அரைநிமிடம் சுற்றிவிட்டு அவள் கைக்குத் திரும்பிவந்தது.
மேஜையில் அமர்ந்து நிதானமாகக் குடித்தபோது மாதவி, “மாமி! உங்கள் வருகையை மறுபடி வியாபாரமாக மாற்றிவிடலாமா?” என்று கேட்டாள்.
பரிமளா நெற்றியைச் சுருக்கிப் பார்த்தாள்.
“நீங்கள் ‘கெம்-சேஃப்’ நிறுவனத்தைக் கேள்விப்படாதிருந்தால் ஆச்சரியமில்லை. அரசாங்கத்திற்கும், வணிக நிறுவனங்களுக்கும் நாங்கள் பின்னணியில் மறைந்துநின்று உதவுகிறோம். எங்கள் முயற்சியில் பலதரப்பட்ட விஞ்ஞானிகள். ஒரு துறையில் இருப்பவர்களுக்கு மற்ற துறைகளைப் பற்றியும் தெரியவேண்டுமென மாதமொரு நிபுணரின் பேச்சை ஏற்பாடு செய்வேன். மினியாபோலிஸில் இன்று பத்தங்குலம் பனிபெய்ததால் நாளை பேசவேண்டிய ஒருவர் வரவில்லை. அவருக்குபதிலாக நீங்கள் பேசமுடியுமா?”
எதிர்பாராத அழைப்பில் பரிமளா திகைத்தாள். “நானா? எதைப்பற்றி? ஒரு நாளைக்குள் நான்… எப்படி…”
மாதவி பரிமளாவின் மறுப்பை ஏற்பதாக இல்லை. “ஆஃப்ரிகாவில் எய்ட்ஸ் பரவுவதைத் தடுக்க சர்கம்சிஷன் உதவுமா என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறீர்களே.”
“அது சர்ச்சைக்குரிய விஷயம்.”
“சரி, உங்கள் புத்தகத்திலிருந்து எதாவதொரு பொருளில் பேசுங்களேன்!”
“நான் நாளைகாலை சான்ஹொசே திரும்புகிறேனே” என்று பரிமளா தட்டிக்கழிக்கப் பார்த்தாள்.
மாதவி விடவில்லை. “வெள்ளிக்கிழமைக்கு மாற்றிவிட்டால் போகிறது. உங்களுக்குத்தான் இந்த வாரம் முழுக்க விடுமுறையாயிற்றே. பயணத்தைத் தள்ளிப்போடுவதற்கு அபராதம் இருந்தால் நாங்கள் அதைத் தந்துவிடுகிறோம். எந்த ஏர்லைன்?”
“சௌத்வெஸ்ட்.”
“அதில் மாற்றுவது சுலபம். டிக்கெட்டின் விவரங்களைக் கொடுங்கள்!”
பரிமளா மாடிக்குச்சென்று கைப்பையை எடுத்துவந்தாள். அவள் தந்த டிக்கெட்டின் எழுத்துகளை மாதவி கணினியில் பதித்தாள்.
“வெள்ளி நேரடியான ஃப்ளைட்டில் இடமில்லை. சிகாகோவில் மூன்றுமணி காத்திருக்க வேண்டும்.”
“சனி?”
“இருக்கிறது. அதுவரை நீங்கள் இங்கேயே தங்கலாம்.”
“எதற்கும் சரவணப்ரியாவை ஒருவார்த்தை கேட்கிறேன். வெள்ளிக்கிழமைகளில் வேலை செய்வதில்லையென்று அவள் சொன்னதாக ஞாபகம். உனக்கு எதற்கு கஷ்டம்?”
மாதவி கட்டாயப்படுத்தவில்லை.
பரிமளா சரவணப்ரியாவை அழைத்து, “ப்ரியா! நான் மாதவி வீட்டிலேர்ந்து பேசறேன். உன்னைத் தொந்தரவு பண்ணறதுக்கு சாரி!” என்றாள்.
“நமக்குள்ள எதுக்கு இந்த சம்பிரதாயமெல்லாம்? என்ன விஷயம், சொல்லு!”
“இன்னிக்கிக் கார்த்தாலே உங்க வீட்டுக்கு மறுபடி வந்தாலும் வருவேன்னு சொன்னேனே, அது இத்தனை சீக்கிரம் பலிக்கும்னு நினைக்கலை.”
“எப்போ வரப்போறே?”
“ஊருக்குப் போறதைத் தள்ளிப்போட வேண்டியிருக்கு. நான் நாளை பதினோரு மணிக்கு ‘கெம்-சேஃப்’லே ஒரு ‘டாக்’ கொடுக்க ஒப்புத்துனுட்டேன். அதனாலே, மத்தியானமா உங்க வீட்டுக்கு வந்துட்டு சனி காலைலே கிளம்பலாமா?”
“தாராளமா.”
“தாங்க்ஸ், ப்ரியா!”
அவர்கள் உரையாடலைக் கேட்ட மாதவி டிக்கெட்டை சனிக்கிழமைக்கு மாற்றினாள்.
“இப்போ ‘ப்ரீ-ஸ்கூல்’லே குழந்தைகள் தூங்கியெழுத்திருப்பா. போய் ரெண்டுபேரையும் அழைச்சிண்டுவரேன்” என்று மாதவி கிளம்பிச்சென்றபிறகு பரிமளா தன்னறைக்குச்சென்று தன் கணினியைத் திறந்தாள். அவள் புத்தகத்திற்குத் தயாரித்த எல்லா படங்களும், அட்டவணைகளும் ஒருகோப்பில் இருந்தன. அவற்றில் முப்பதைப் பொறுக்கியெடுத்து மறுநாளின் உரைக்கேற்ப ‘பவர்பாய்ன்ட்’டில் வரிசைப்படுத்தினாள். சாமியை மறுபடி சந்திக்கப்போகும் ஆவல் பின்னணியில் நின்றது.

கராஜின் கதவு திறக்கும் சத்தம்கேட்டதும் பரிமளா கீழே இறங்கிவந்தாள். மாதவியுடன் அவள் பெண்கள்.
“நீலா! ஷீலா! ஆன்ட்டிக்கு ஹாய் சொல்லுங்கள்!”
“ஹாய், ஆன்ட்டி!” என்று சொன்னது போதாதென்று நீலா அருகில்வந்து பரிமளாவை இறுக்கக் கட்டிக்கொண்டாள். அவள் செய்ததை ஷீலாவும் பின்பற்றினாள். சதுரமேஜைக்குச் சென்று அமர்ந்தார்கள்.
நீலா தன்பையிலிருந்து ஒரு மாலையை எடுத்து பரிமளாவுக்கு பெருமையாக காட்டினாள். பல வண்ண பிளாஸ்டிக் மணிகள். எந்தவித ஒழுங்குமின்றி (ரான்டமாக) கோர்க்கப்பட்டிருந்தன. “நானே செய்தது.”
“வெரிகுட்! ரொம்ப அழகு.”
“மாம்மி! உனக்காகத்தான் நான் இதைச் செய்தேன். போனால் போகிறதென்று ஆன்ட்டிக்குத் தரட்டுமா?”
பரிமளாவுக்கு புன்னகையை அடக்கமுடியவில்லை.
“நாசுக்கு என்பது என் குழந்தைகள் அகராதியில் கிடையாது” என்றாள் மாதவி.
“இருந்தால் சுவாரசியம் போய்விடும்.” பரிமளா நீலாவைக் கட்டிக்கொண்டு, “தாங்க்ஸ், நீலா! நான் இப்போதே மாலையைப் போட்டுக்கொள்கிறேன்” என்றாள்.
அதைக்கண்டு ஷீலாவுக்கு முகம்கோணியது. அதைக் கவனித்த மாதவி, “ஷீலா! போனவாரம் ‘சக்-ஈ-சீஸி’ல் உனக்குக் கிடைத்த பிளாஸ்டிக் மாலையை ஆன்ட்டிக்குத் தா!” என்று அதைச் சமையலறையின் இழுப்பறைகளில் தேடியெடுத்துக் கொடுத்தாள்.
பரிமளா அதையும் கழுத்தில் அணிந்து, “தாங்க்ஸ், ஷீலா” என்று அவளையும் கட்டிக்கொண்டாள்.
“ஆன்ட்டி! உன் பேரென்ன?”
“பரி.”
“பரி! எங்கள் அறையைப் பார்க்கிறாயா?”
“நீலா! என்ன மரியாதை இல்லாம?”
“பரவாயில்லை, மாதவி! குழந்தைகள் இவ்வளவு ஒட்டுதலாக இருக்கும்போது மரியாதை என்னத்துக்கு?”
“முதலில் நீங்கள் சாப்பிடவேண்டும். ஆன்ட்டி உங்களுக்கென்று ‘மஞ்சள் கேக்’ செய்து வந்திருக்கிறாள்.”
ஒரேமாதிரியான இரண்டு தட்டுகளில் ஒரு மைசூர் பாக்கும், சில பிஸ்கெட் துண்டுகளும். அத்துடன் சிறுதம்ளர்களில் பால். அவற்றைச் சாப்பிட்டவுடன் அதற்காகக் காத்திருந்ததுபோல் நீலா, “எங்கள் அறையைக் காட்டுகிறேன்” என்றாள்.
பெண்களின் ஓட்டத்திற்கு ஈடுதர முடியாமல் பரிமளா படிகளில் மெதுவாக ஏறினாள். மாடியில் பரிமளாவின் அறைக்கு அடுத்ததாக ஒரு பெரிய அறையும் அதை ஒட்டி இரு சிறுஅறைகளும். ஒருகடை வைக்கலாம்போல் விளையாட்டு சாமான்கள் இறைந்துகிடந்தன. பாதிக்குமேல் பொம்மைகள். ஜன்னலுக்கு எதிர்ப்புறத்தில் இரண்டடுக்கு கொண்ட படுக்கை.
“மேல்தட்டில் தூங்குவது யார்?
“நான்தான். ஷீலா கீழே விழுந்துவிடுவாள்.”
“எனக்கும் ஏறத்தெரியும், பார்க்கிறாயா? பரி!” என்றாள் ஷீலா. பதிலுக்குக் காத்திராமல் குறுகலான ஏணியில் ஏறினாள்.
“பரி! நீயும் ஏறுகிறாயா?”
“மாட்டேன். எனக்கு பயம்.”
“ஷீலாமாதிரி ஏணியைப் பிடித்துக்கொண்டு ஏறேன்.”
“அவள் சின்னப்பெண்.”
“என் அம்மா ஏறுவாளே.”
“அவளும் சின்னப்பெண்தான்.”
ஏணியில் ஏறுவதிலிருந்து தப்பிக்க, “வெளியே நடந்துவிட்டு வரலாம்” என்று அழைத்தாள்.
“நடக்கும்போது அஷ்வின் வீட்டைக் காட்டட்டுமா?”
“காட்டேன்! யார் அஷ்வின்?”
“என் நண்பன்.”
“எனக்கும்தான் அவன் நண்பன்” என்று சொல்லியபடி ஷீலா மேல்தட்டிலிருந்து இறங்கினாள்.
“நீங்கள் இப்படியே வரலாம். வெளியேபோக நான் உடைமாற்றி வருகிறேன்.”

ரங்கனாதன் வேலையிலிருந்து திரும்பியபோது நீலாவும் ஷீலாவும் பரி ஆன்ட்டி பற்றியும், அவளுடன் அவர்கள் செய்த காரியங்களையும் சொன்னார்கள்.
சாப்பிட உட்கார்ந்தபோது, பரிமளாவின் இரண்டு பக்கங்களில் நீலாவும், ஷீலாவும்.
ஸ்பாகெட்டி, கார்ன் ப்ரெட் என்று பரிமளா அடிக்கடி சாப்பிடாத உணவு.
“ரெண்டு பேரும் படுத்தாமல் தட்டிலே போட்டதையெல்லாம் சமத்தா சாப்பிட்டுட்டா. நீங்க இன்னும் ரெண்டுநாள் இங்கேயே இருக்கலாமே” என்றான் ரங்கனாதன்.
“என் மந்திரம் ஒருநாளைக்குத்தான் பலிக்கும்.”
பல் தேய்த்தபிறகு, “நான் பரியோடுதான் படுப்பேன்” என்றாள் நீலா.
“பரி ஆன்ட்டி நிம்மதியாக தூங்கட்டும். நாளை அவள் பலருக்குமுன்னால் நின்று பேசவேண்டும்.”
“தூங்கும்வரை அவர்களோடு படுக்கிறேன்” என்று பரிமளா விட்டுக்கொடுத்தாள். “ஆனால், கீழடுக்கில்தான்.”
மூவரும் ஒண்டிக்கொள்ள பரிமளா டோராவின் புத்தகம் படித்தாள். அதில் ஏழெட்டு கதைகளாவது இருக்கும். முதலில் டோராவின் தம்பி டியாகோ காணாமல்போன கதை. அது முடிவதற்குள் அவர்கள், “குட்நைட்!” சொன்னார்கள். டியாகோ எப்படிக் கிடைத்தானென்று தெரியாமலே பரிமளா தன்அறைக்குத் திரும்பி படுக்கையில் படுத்தாள்.
சிறுகுழந்தைகளுடன் உறவாடி எத்தனை காலமாயிற்று? எப்போதோ அண்ணன் குழந்தைகளைத் தூக்கி வளர்த்திருக்கிறாள். தூங்கப்பண்ண, ‘அத்தைமடி மெத்தையடி’ பாட்டுகூட பாடியிருக்கிறாள். கொஞ்சம் விவரம்தெரிந்ததும் அவர்கள் மன்னியின் ஆதிக்கத்திற்குள் சென்றுவிட்டார்கள். கமலாவின் பையனைத் தூக்கினாலே அவனுக்கு உடலில் ஒருவிறைப்பு. கீழே இறக்கும்வரை முகத்தின் இறுக்கம் குறையாது. இந்தப் பெண்கள்மாதிரி பேரக்குழந்தைகள் ஒட்டுதலோடு இருந்தால் அவர்களுடன் பேசிக்கொண்டே நடந்துசெல்லலாம். அவர்களுக்கு கதை படிக்கலாம். அவர்கள் தள்ளிநின்று வேடிக்கை பார்க்கும்போது மஞ்சள் கேக் என்கிற மைசூர் பாக் தயாரித்து அதை அவர்கள் கீழும்மேலும் சிந்திக்கொண்டு தின்பதை ரசிக்கலாம். எல்லாம் சரிதான், குழந்தையே இல்லாதபோது பேரக்குழந்தைகள் எங்கிருந்து வரும்?

தளர்ந்த நீலத்துணியில் பான்ட்ஸ{ம், கோட்டும், வெளிர்நீலத்தில் பட்டுச்சட்டையும். திரும்பிச் செல்கையில் போட்டுக்கொள்ள வைத்திருந்த உடைகள். மாதவியுடன் சென்றபோது பரிமளா அவற்றை அணிந்திருந்தாள். இன்ஃபினிடியை அவள் செலுத்தும் அழகை ரசித்தாள். காரின் ஒலிஇயக்கத்தில் வெளிப்பட்ட ரகுமானின் இசையை அனுபவித்தாள்.
காலையில் மற்றவர்கள் எழுந்திருக்குமுன்பே பரிமனா தன் பேச்சை ஒத்திகை பார்த்தாள். குளித்து வெளியேசெல்லத் தயாரானதும் தன் பொருட்களை சேகரித்து இரண்டு பெட்டிகளில் இன்னொருமுறை நிரப்பினாள்.
நீலாவையும் ஷீலாவையும் குழந்தைகள்பள்ளிக்கு அழைத்துச்செல்லும் காரியம் ரங்கனாதனுடையது. அது தினத்தைவிட அன்று கடினமாக இருந்தது. முதலில் பரியுடன் அமர்ந்து பாலில் தோய்ந்த சர்க்கரை சீரியலைத் தின்பதற்கு ஏகப்பட்ட நேரம். பிறகு, எந்த உடை அணிவது என்ற சர்ச்சை. கடைசியில், “நாங்கள் திரும்பிவரும்போது பரி இருப்பாளா?” என்று திரும்பத்திரும்பக் கேட்கப்பட்ட கேள்வி
குழந்தைகளிடம் மாதவி பொய்சொல்ல விரும்பவில்லை. “ஆன்ட்டி ஊருக்குத் திரும்பிப்போக வேண்டும். இப்போதே ‘பை’சொல்லுங்கள், பார்க்கலாம்!” உடனே இருபெண்கள் முகத்திலும் அழுகைக்கு முன்னதாக வரும் ஏமாற்றம். அதைக்கண்டதும் பரிமளாவுக்கு அடுத்த இரண்டு நாட்களும் அங்கேயே தங்கலாமா என்றொரு சபலம். அவர்களின் தினப்படி வாழ்க்கையில் அதனால் உண்டாகும் தொல்லைகளை உணர்ந்து அந்த எண்ணத்தைக் கைவிட்டாள்.
“ஆன்ட்டியை நாம் சான்டா க்ளாராவில் போய்ப் பார்க்கலாம்” என்ற சமாதானத்தால் நீலா, ஷீலா இருவரும் பரிமளாவைக் கட்டிக்கொண்டு, “வீ வில் மிஸ் யு, பரி!” சொன்னார்கள்.
‘கெம்-சேஃப்’ வளாகத்தில் இன்ஃபினிடி நின்றது. கட்டடத்தின் நுழைவிடத்தில் உற்சாகமும் இளமையும் வீசிய வரவேற்புப்பெண். அவள் காட்டிய புத்தகத்தில் கையெழுத்திட்டு பரிமளா தன்வருகையைப் பதிவுசெய்தாள்.
“உங்கள் கணினியைக் கொடுத்தால் அதிலிருந்து உரையின் ‘பவர்பாய்ன்ட்’டை எடுத்துக்கொள்வோம்.”
அவளிடம் அதைத் தந்தபோது பரிமளா, “ரான்டம் தாட்ஸ் என்கிற தலைப்பில் படங்கள் கணினியின் முகப்பிலேயே இருக்கின்றன” என்றாள்.
முதலில் மாதவியின் அலுவலக அறை. அவளுடன் நிதானமாக அருந்திய ஒரு கோப்பை உயர் ரகக் காப்பி. பிறகு தலைவர் பட்லரின் அறிமுகம். அவளுடைய ஆராய்ச்சி அனுபவங்களைக் கேட்டார். மாதவி கட்டடத்தைச் சுற்றிக்காண்பித்தாள். மிக சுத்தமான ஓய்வறைகள், பெயர்தெரியாத உபகரணங்கள் நிறைந்த ஆய்வுக்கூடங்கள், அடங்கின பேச்சுக்குரலோடு அதிநவீன கணினிகள் அழகுசெய்த அலுவலகங்கள். அங்கெல்லாம் பலருடன் முகமன்கள், கைகுலுக்கல்களோடு முடிந்துவிட்ட சந்திப்புகள்.
பத்தரை மணிக்கு ஒலிக்கூடத்தில் உரை. எல்லோரும் கவனமாகக் கேட்பதுபோல் தோன்றியது. சம்பிரதாயத்திற்காக கேட்கப்பட்ட இரண்டு கேள்விகள். கடைசியில், பட்லர் ‘போக்கரி’ல் எப்படி ஜெயிக்கலாம் என்றும், அவர் பெண்ணுக்கு எப்படிப்பட்ட கணவன் அமையவேண்டும் என்றும் அறிவுபூர்வமாக விளக்கிய டாக்டர் கோலப்பனுக்கு நன்றி தெரிவிக்க, கூட்டம் சீராகக் கலைந்தது.
விலையுயர்ந்த விடுதியில் பட்லர், மாதவி தவிர இரண்டு பெரியபுள்ளிகளுடன் சாவகாசமாக மதிய உணவு. பரிமளாவுக்கு பழக்கமாக இல்லை. சாப்பிடும்போது வீட்டுவிலைகளின் சரிவு பற்றிய அரட்டை. அது அவளுக்குப் அனுபவப்பட்ட விஷயம்.
இரண்டுமணிக்கு விடைபெறும் நேரம். மாதவி பரிமளாவை நுழைவிடத்திற்கு அழைத்துவந்தாள்.
“எங்கள் கம்பெனி கார் உங்களைக் கூட்டிச்செல்லும். உங்கள் பெட்டிகளை என்காரிலிருந்து அதற்கு மாற்றியாகிவிட்டது. டிரைவரிடம் நீங்கள் போகவேண்டிய முகவரி இருக்கிறது.”
“தாங்க்ஸ் மாதவி!”
“திடீரென்று கேட்டதும் நீங்கள் பயணத்தைத் தள்ளிப்போட்டு உரையாற்ற சம்மதித்தீர்களே, அதற்காக நான்தான் நன்றிசொல்ல வேண்டும்.”
“இதுவரை நடந்தது எனக்கொரு புதுஅனுபவம்.”
“இன்னும் அது முடியவில்லை” என்ற புதிரோடு மாதவி புன்னகைத்தாள்.
கட்டடத்திலிருந்து வெளியேறுவதைக் குறிக்க மறுபடி ஒருகையெழுத்து. அந்த சம்பிரதாயத்தை நிறைவேற்றியதும், வரவேற்புப்பெண் பரிமளாவின் கணினியைத் திருப்பித்தந்தாள். அதைப் பரிமளா தன் தோள்பையில் பத்திரப்படுத்திய பிறகு, அந்தப்பெண் ஒருமெல்லிய காகித உறையை மேஜையின் மேல்தட்டிலிருந்து எடுத்தாள். அதில் என்ன இருக்கிறதென்று பரிமளாவுக்குத் தெரியும். உரை வழங்கியதற்கு சன்மானம். மாதவியைப் பலகாலமாகத் தெரியும் என்றாலும் அவள் நிறுவனம் அளிக்கும் சிறுதொகையை மறுப்பது பண்பல்ல. நன்றிசொல்லி பரிமளா அதை ஏற்றுக்கொள்ள கையை நீட்டினாள்.
உறை கைமாறுவதற்குள், “பார்டன் மீ!” என்று மாதவி வேகமாக குறுக்கே பாய்ந்து அதைப் பறித்துக்கொண்டாள். பிறகு அறையோரமாகச் சென்று மெல்லிய குரலில் யாரையோ அழைத்தாள். பதில் அவளுக்குத் திருப்தி தரவில்லை என அவள் முகத்தில் தெரிந்தது. பரிமளாவிடம் திரும்பிவந்து, “டாக்டர் பரிமளா! ஒருசிறு தவறு நடந்திருக்கிறது. உங்களுக்கு நியாயமாகச் சேரவேண்டிய சன்மானம் இன்றைக்குள் உங்களுக்கு வந்துசேரும்” என்றாள்.
“என்ன அவசரம், மாதவி? என்வீட்டிற்கு அடுத்தவாரம் அனுப்பினாலும் போதும்.”
“இல்லை, இல்லை. உடனே தருவதுதான் எங்கள் கடமை. ‘கெம்-சேஃபி’ன் கௌரவம் என்னவாகிறது?”
‘கெம்-சேஃப்’ பெயர்தாங்கிய பென்ஸ் காரில் சாமியின் வீடுவரை சொகுசான பயணம். பரிமளா இறங்கியதும் வண்டியை ஓட்டியவன் பின்னாலிருந்த அவள் பெட்டிகளைத் தூக்கி வீட்டுப்பாதையில் வைத்துவிட்டுச் சென்றான்.
சூரியன் பிரகாசமான ஒளிக்கதிர்களை வீசினாலும் காற்றோடு சேர்ந்த குளிர் பரிமளாவை நடுங்கவைத்தது. சரவணப்ரியாவை அழைத்து, “நான் வீட்டுக்கு வந்துட்டேன்” என்றாள்.
“முன்னமே சொல்லியிருந்தா நாங்க சீக்கிரமா வந்திருப்போமே. இன்னொரு வீட்டுசாவி மூணாவது வீட்டு ப்ரேமாகிட்ட இருக்கு. ஆனா அவங்களும் நாலுமணிக்குத்தானே வருவாங்க.”
“நான் திடீர்னு இவ்வளவு குளிராப்போகும்னு எதிர்பாக்கலை” என்றாள் நடுக்கத்துடன்.
“இப்பத்தான் ஒரு ‘கோல்ட் ஃப்ரன்ட்’ வந்து பதினைஞ்சு டிகிரி கீழே இறங்கிட்டுது.” சிறிது யோசித்துவிட்டுத் தொடர்ந்தாள். “வெயில்லே எங்க பழைய நீலக்கார் நிக்கறது. அதை நாங்க பூட்டறதில்லை. அதுக்குள்ள போய் உட்கார்! நாங்க வந்திட்டே இருக்கோம்.” பரிமளா அப்படியே செய்தாள். சூரியவொளியால் காருக்குள் பரவியிருந்த வெப்பம் இதமாக இருந்தது. காற்றும் கத்தியால் வெட்டுவதுபோல் அவளைத் தாக்கவில்லை.
பிஎச்.டி. முடிக்கும் தறுவாயில் பரிமளா ‘கெம்-சேஃப்’ போன்ற தனியார் நிறுவனங்களில் வேலைத்தேர்வுக்காகச் சென்றது உண்டு. எதாவதொன்றில் உத்தியோகம் கிடைத்திருந்தால் இப்போது எப்படி இருக்கும் என்று சிந்தனை ஓடியது. இன்னும் இரண்டு ஆசிரியைகளுடன் ஒரு சிறுஅறையைப் பகிர்ந்துகொள்ளாமல் தனியாக பெரிய அலுவலகஅறை. அதன் கதவில் ‘டாக்டர் பரிமளா ‘பரி’ கோலப்பன், புள்ளிஇயல் தலைவர்’ என்று உலோகத்தில் பொறித்த தகடு. அவள் பெயரில் ஒருமில்லியன் டாலராவது சேர்ந்திருக்கும். ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கும், புத்தகத்திற்கும், பீடர் பெல்லானி போன்ற மாணவர்களின் நன்மதிப்பிற்கும் பதிலாக ஒருபெரிய வீடு, அதில் நுழைந்ததும் நாற்பது வௌ;வேறு விதமான காலணிகள் வைப்பதற்கென்றே தனிஅறை, ஒரு அறைமுழுக்க விலையுயர்ந்த ஆடைகள். ஏழாண்டுகளைப் பார்த்த நிஸான் சென்ட்ரா நிற்குமிடத்தில் சமீபத்திய லெக்சஸ். விருந்துகளில், வேலைசெய்யும் நிறுவனத்தின் பெயரையும், பதவியையும் சொன்னதுமே மற்ற இந்தியர்கள், க்ருஷ்ண பகவானை தரிசனம் செய்ததுபோல் புருவத்தை உயர்த்திக்காட்டும் மரியாதை. இவையெல்லாம் அவளுடைய தனிமைஉணர்வைக் குறைத்திருக்குமா, இல்லை அதிகப்படுத்தியிருக்குமா? பதில் கிடைக்கவில்லை.
சரவணப்ரியாவோடு பேசி அரைமணியாவது இருக்கும். சூரியன் எதிரிலிருந்த வீடுகளுக்குப் பின்னால் தாழ்ந்ததால் காரின் சூடு தணிந்துவிட்டது. அவர்கள் சீக்கிரம் வந்தால் நன்றாக இருக்கும். தெருக்கோடியில் பஸ்ஸிலிருந்து இறங்கிய இரண்டு இடைநிலைப்பள்ளி மாணவிகள் பேசிக்கொண்டே குளிரைப் பொருட்படுத்தாமல் சாவகாசமாக நடந்துவந்தார்கள். சிலநிமிடங்கள் கழித்து ஒருசில பெண்கள் வீட்டிலிருந்து வெளியேவந்து, பஸ் நிற்குமிடத்திற்குச் சென்று தொடக்கப்பள்ளிக் குழந்தைகளை அழைத்துச்செல்லக் காத்திருந்தார்கள். வேலைக்குச் செல்லாத அவர்களின் வாழ்க்கை எப்படியிருக்கும்? ஒருவன் தன்னைக் காப்பாற்றுவான் என்கிற நம்பிக்கையில் சுகமான வாழ்க்கை. அப்படித்தான் மனித சரித்திரத்தில் பெரும்பாலான பெண்களுக்கு நடந்திருக்கிறது. அவளுக்கு ஏன் நடக்கவில்லை?
தெருவில் வண்டி நிற்கும் சத்தம் கேட்டு பரிமளா கதவைத்திறந்து இறங்கினாள். ஆனால், வந்தது சாமியின் காரில்லை. அதிலிருந்து இறங்கியவன் அவளருகில் வந்து, “ஹாய் டாக்டர் கோலப்பன்! இன்றுகாலை என்னைச் சந்தித்ததை நீங்கள் மறந்திருக்கலாம்” என்றான்.
“முகம் நினைவிருக்கிறது, பெயர் ஞாபகமில்லை.”
“நான் டாக்டர் ரங்கனாதனின் உதவியாளன். அவள் இதை உங்களிடம் தரச்சொன்னாள்” என்று காகித உறை ஒன்றை நீட்டினான்.
அதை கையில் வாங்கியதும், “தாங்க்யூ! எதற்கிந்த சிரமம்?” என்றாள்.
“ஒரு சிரமமுமில்லை. என்வீடு பக்கத்தில்தான். பை!” என்று அவன் அகன்றான்.
மாதவி சொன்னபடியே பணத்தை அனுப்பியிருக்கிறாள். ஆனால் உறை சற்று தடியாக இருந்தது. ‘அப்படி என்ன இருக்கும்?’ என்ற ஆவலுடன் அதைப் பிரிப்பதற்குள் மணல்நிறக் கார் வந்துநின்றது. அதிலிருந்து சாமியும், சரவணப்ரியாவும் இறங்கினார்கள். அவர்களைக் கண்டதும் பரிமளா உறையைத் தன் கைப்பையில் திரும்பப் போட்டுக்கொண்டாள்.
“சாரி! வர்றவழிலே சின்ன விபத்து, நேரமாயிட்டுது” என்றாள் சரவணப்ரியா.
“போன மச்சி திரும்பிவந்தா ரெண்டு பொட்டிகளோட” என்று சாமி பரிமளாவின் பெட்டிகளை ஏற்றமான வீட்டுப்பாதையில் இழுத்தான்.
“ப்ரியா! தொடர்கதை மாதிரி நான் திரும்பிவந்துட்டேன்.”
“இன்னும் ஒண்ணரைநாள், அதுக்குப்பிறகு ‘புத்தாடை பரிமளவல்லியின் நாஷ்வில் விஜயம்’ கதைக்கு முற்றும் போட்டுக்கலாம்” என்றாள் சரவணப்ரியா.

Series Navigation

அமர்நாத்

அமர்நாத்