முள்பாதை 49

This entry is part [part not set] of 39 in the series 20101002_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

ராஜேஸ்வரி விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று சொன்னது முதல் அப்பாவுக்கு என் மீது கோபம் வந்து விட்டது போலும். முன்னை போல் என்னிடம் கலகலவென்று பேசுவதை நிறுத்திவிட்டார்.
ராஜேஸ்வரி அம்மாவை விட அப்பாவிடம்தான் நெருக்கமாவாள் என்றும், அப்பா அவளை அபூர்வமாக பார்த்துக் கொள்வார் என்றும் ஆசைப்பட்டேன். என் நினைப்புக்கு மாறாக ராஜேஸ்வரி அம்மாவிடம்தான் உரிமை, சுதந்திரம் ஏற்படுத்திக் கொண்டாள்.
அம்மாவின் கிளப்பில் ராஜேஸ்வரி பாட்டு பாடப் போவது அன்றுதான். அதைக் கேட்டது முதல் அவளை கலாட்டா செய்யத் தொடங்கினேன். “இவளை எதுக்கு செலக்ட் செய்தீங்க மம்மீ! வெறும் பயந்தாங்குளி. அங்கே கூட்டத்தைப் பார்த்து நினைவு தப்பி கீழே விழுந்து விடுவாளோ என்னவோ.”
நான் அவளைக் கிண்டலடிப்பதை மம்மீ புரிந்து கொண்டு விட்டாள். அன்பு ததும்பும் பார்வையுடன் என்னைப் பார்த்துக் கொண்டே கடிந்து கொள்ளவும் செய்தாள். “போதுமே… வாயை மூடு. மனிதர்களுக்கு கோழைத்தனத்தைப் புகட்டுவதில் நீயும் உன் அப்பாவும் ஒன்று. ராஜேஸ்வரி நினைவு தப்பி விழுவாளோ இல்லை நன்றாக பாடி எல்லோருடைய பாராட்டையும் பெறும்போது அதைப் பார்த்து நீ நினைவு தப்பி விழப் போகிறாயோ, நீயே பார்க்கத்தானே போகிறாயே” என்றாள். ராஜேஸ்வரியின் திறமையைப் பாராட்டுவது போல் பேசினாலும், தன்னுடைய தேர்வு பொய்த்துப் போகாது என்ற நம்பிக்கையும் அந்தப் பேச்சில் எதிரொலித்தது.
ராஜேஸ்வரியின் ஆடைகள் விஷயத்தில் அம்மா ரொம்ப கவனம் எடுத்துக் கொண்டாள். என்னுடைய உடைகளைத் தேர்ந்தெடுக்கும் போது புதுப்புது டிசைனுடன் பார்த்ததுமே நன்றாக இருக்கே என்று சொல்வது போல் தேர்வு செய்தாள். ராஜேஸவரியின் புடவைகள் ரொம்ப சிம்பிளாக இருக்கும்படி பார்த்துக் கொண்டாள். ஆனால் என் பக்கத்தில் எளிமையாக இருப்பதே ராஜேஸ்வரியின் சிறப்பை அதிகப்படுத்துவதை அம்மா உணர்ந்திருக்க மாட்டாள். எனக்கும் ராஜேஸ்வரியை போல் லைட் கலர் புடவையில் ஆடம்பரமாக இல்லாமல் இருக்கணும் என்று தோன்றும்.
ராஜேஸ்வரி கிளப்பில் ரொம்ப நன்றாகப் பாடினாள். நிகழ்ச்சி முடிந்ததும் சாரதி ராஜேஸ்வரியிடம் வந்து பாராட்டினான். அவன் பாராட்டும் போது ராஜி தன்னை இல்லை என்பது போல் தலையைக் குனிந்து கொண்டிருந்தாள்.
“இதென்ன? பாராட்டு தெரிவிக்கும் போது பேச்சு வராதவள் போல் பார்க்கிறாயே? தேங்க்ஸ் என்று சொல்லு.” பெரிய மனுஷி போல் எச்சரித்தேன்.
“மனித்ர்களைக் கலங்கடிப்பதில் உங்க சிநேகிதியை யாராலும் மிஞ்ச முடியாது. பண்பு, நாகரிகம் என்ற பெயரில் அடிக்கடி சில வார்த்தைகளை ஒப்புவிக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு. உங்களிடம் அந்தப் பழக்கம் இல்லை என்று எனக்குத் தெரியும். அதை உங்களுடைய தனித்தன்மையாக என்றோ உணர்ந்துவிட்டேன்.” சாரதி முறுவலுடன் சொன்னான்.
அந்த நிமிடம் சாரதியைப் பார்க்கும் போது ‘அட! சாரதிக்கு இப்படியெல்லாம் பேசத் தெரியுமா?’ என்று வியப்பாக இருந்தது. ராஜேஸ்வரியின் தனிதன்மையைப் பற்றி அவன் பாராட்டியதை அம்மா கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மறுநாள் சாரதி எனக்கு போன் செய்தான். தானாக போன் செய்து என்னிடம் பேசவது ரொம்ப அரிதுதான். ராஜேஸ்வரி வந்து எனக்கு போன் வந்திருப்பதாக சொன்னாள். நான் போய் பேசினேன். ஏதோ பெனி·பிட் ஷோவுக்கு டிக்கெட்டை அவன் தலையில் கட்டிவிட்டார்களாம். அவனுக்குப் போவதற்கு நேரமில்லையாம். நானும் ராஜேஸ்வரியும் போக வேணடுமாம். ராஜேஸ்வரியைத் தனிப்பட்ட முறையில் அவன் நினைவு வைத்திருந்தது சந்தோஷமாக இருந்தது. இசைக்கு முக்கியத்துவம் இருக்கும் சினிமா என்பதால் ராஜேஸ்வரியைக் கட்டாயமாக அழைத்துப் போகச்சொல்லி அறிவுரை வழங்கினான்.
இருவரும் சினிமாவுக்குப் போனோம். உள்ளே போகும் போது சாரதியின் கார் வந்து நின்றது. என்னைவிட முன்னாடி ராஜேஸ்வரி சாரதியை பார்த்துவிட்டாள். “அதோ! உங்களவர் வந்து விட்டார்” என்றாள். திரும்பிப் பார்த்தேன். சாரதி அங்கிருந்தே எங்களுக்கு கைகாண்பித்துவிட்டு காரை பார்க் செய்து கொண்டிருந்தான்.
ராஜேஸ்வரி என் கையை பிடித்துக் கொண்டாள். “அவர்தான் வந்து விட்டாரே. நான் எதுக்கு? வீட்டுக்குப் போய் விடுகிறேன்” என்றாள்.
சாரதியும் நானும் இருக்கும் போது ராஜேஸ்வரி எங்களுடன் இருப்பதற்குக் கொஞ்சம்கூட விருப்பப்பட மாட்டாள். பரவாயில்லை என்று எத்தனை தடவை சொன்னாலும் காது கொடுத்து வாங்க மாட்டாள்.
சாரதி அருகில் வந்தான். “வருவதாகச் சொன்ன பிரண்ட் வரவில்லை. சும்மா இருப்பானேன் என்று கிளம்பி வந்தேன்” என்று நான் கேட்காமலேயே விளக்கம் தந்தான். அதுகூட நேர்மையாக இருக்கவில்லை. பூசணிக்காய் திருடன் தோளைத் தடவிக் கொண்டது போல் இருந்தது.
எப்படி புரிந்துவிடுமோ தெரியாது. ஆனால் சில விஷயங்கள் நம் உள்மனதிற்கு சட்டென்று புரிப்பட்டு விடும். “ராஜி வீட்டுக்குப் போய் விடுவதாகச் சொல்கிறாள்.” புகார் சொல்லுவது போல் சொன்னேன்.
நான் எதிர்பார்த்தது போலவே அவன் முகத்தில் மாறுதல் தென்பட்டது. “அடடா! நீங்க போவதாவது? மீனா உங்களிடம் சொல்லவில்லையா? இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட படம் இது. வாங்க… போகலாம்” என்று சொல்லிக்கொண்டே வழி நடந்தான்.
பெனி·பிட் ஷோ என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. மூன்று பேரும் ஒரே வரிசையில் அமர்ந்துகொண்டோம். சாரதி நன்றாகப் பேசுவான் என்று தெரியும். ஆனால் என் முன்னால் அவன் இதுபோல் கலகலவென்று பேசுவது இதுதான் முதல் தடவை.
சினிமா தொடங்கி விட்டது. உண்மையிலேயே இசை நன்றாக இருந்தது. எனக்கு முன் வரிசையில் அமர்ந்திருப்பவர் ரொம்ப உயரமாக இருந்ததால் நான் கழுத்தை வளைத்துப் பார்க்க வேண்டியிருந்தது. என் சங்கடத்தை சாரதி கவனித்துவிட்டான் போலும். எழுந்துகொண்டு தன்னுடைய இருக்கையில் என்னை உட்சாரச் சொன்னான். நான் அமர்ந்துகொண்டேன். எனக்கும் ராஜேஸ்வரிக்கும் நடுவில் உட்கார்ந்திருந்த சாரதி நடுநடுவில் படத்தின் பின்னணி பாடகர்களைப் பற்றி ராஜியிடம் விவரமாக சொல்லிக் கொண்டிருந்தான். எனக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. நன்றா பாடத் தெரிந்த, ரொம்ப எளிமையாக இருக்கும் ராஜேஸ்வரியை அம்மாவைப் போலவே சாரதிக்கும் பிடித்து விட்டது.
இன்னொரு விஷயமும் என் மனதில் தோன்றியது. சாரதி என்னுடைய வருங்காலக் கணவன். இந்த காலத்தில் பண்பு, மரியாதை என்ற போர்வையில் தம்மை மறைத்துக் கொண்டு விடுவதால் ஒருவருடைய உண்மையான சுபாவத்தைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கிறது.
சாரதியின் சுபாவத்தை, தனித்தன்மையை நான் ஏன் பரீட்சை செய்து பார்க்கக் கூடாது? அம்மாவின் கண்ணோட்டத்தில் சாரதி புத்திசாலியாக இருக்கலாம். அவனுடைய தனித்தன்மை அம்மாவுக்குப் பிடித்திருக்கலாம். ஆனால் எனக்கு? எனக்கு கணவனாக வரப் போகிறவன் விஷயத்தில் அம்மாவின் மதிப்பீட்டை வைத்துக் கொண்டு முடிவு செய்யக் கூடாது. அவனுடைய உண்மையான சபாவம் என்னவென்று நான் புரிந்துகொள்ளணும். அது எனக்குப் பிடித்ததாக இருக்கணும்.
**********
சாரதியும், நானும் தனியாக உட்கார்ந்து பேசும்போது அடிக்கடி ராஜியைப் பற்றி பேசிக் கொண்டிருப்போம். நான்தான் வேண்டுமென்றே ஏதோ விதமாக அந்தப் பேச்சை எடுப்பேன். சாரதி ஆர்வத்துடன் கேட்டுக்கொள்வான். யதேச்சையாகக் கேட்பதுபோல் ராஜியைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வான். நேரம் போவதே தெரியாமல் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருப்போம்.
சிலசமயம் நான் வேண்டுமென்றே ராஜி வெறும் மக்கு என்றும், சுறுசுறுப்பு போறாது என்றும் சொல்லுவேன். ராஜி விஷயத்தில் நான் தவறாக நினைப்பதாக சாரதி நினைத்தக் கொண்டு அதைச் சரி செய்யப் பார்ப்பான். ராஜி அப்படிப்பட்ட பெண் இல்லை என்றும், நான் அவளைச் சரியாகப் புரிந்து கொள்ளாதது போலவும் விளக்கம் கொடுப்பான்.
நான் அவனை நன்றாக சீண்டிவிட்டு, அவனுக்கு ஆவேசம் வருவதுபோல் பேசி, நடுவில் திடீரென்று “போது விடுங்கள். நான்கு நாட்கள் நம்மிடம் அடைக்கலம் தேடி வந்தவளுக்காக நாம் அனாவசியமாக சண்டை போட்டுக் கொள்வானேன்?” என்று அந்தப் பேச்சை அத்துடன் நிறுத்தி விடுவேன்.
சாரதியின் முகம் கன்றிச் சிவந்து விடும். முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டுப் போய்விடுவான். அவன் பேச்சில், செயல்களில் அவனுடைய உண்மையான சுபாவத்தை அறிந்து கொள்வதற்காக நான் செய்யும் இந்த முயற்சியை அவன் உணரவில்லை போலும். உணர்ந்திருந்தால் நிச்சயமாக கவனமாக இருந்திருப்பான்.
ஒருநாள் பேச்சுவாக்கில் அவனிடம் ராஜேஸ்வரிக்கு ரேடியோவில் பாட வேண்டும் என்று ஆர்வம் இருப்பதாகவும், ஆனால் அம்மா எதாவது நினைத்தக் கொள்வாளோ என்று பயப்படுவதாகவும் சொன்னேன். உண்மையில் ராஜி அப்படி சொல்லவே இல்லை. ரேடியோவில் பாட வேண்டும் என்ற எண்ணம்கூட அவளுக்கு இருக்கவில்லை.
ராஜேஸவரியின் விருப்பத்திற்கு அம்மா முட்டுக்கட்டையாக இருப்பதாக சாரதி நினைத்து விட்டான் போலும். ஒருநாள் நாங்கள் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்திருந்த போது ராஜி ரேடியோவில் பாடினால் நன்றாக இருக்கும் என்று தானாக சஜெஸ்ட் செய்தான். செய்ததோடு சும்மா இருக்கவில்லை. இரண்டு மூன்று முறை நினைவுப்படுத்தி ராஜியை விட்டு அப்ளிகேஷன் போட வைத்தான். பத்து நாட்களில் ராஜிக்கு ரேடியோ ஸ்டேஷனிலிருந்து ஆடியோ டெஸ்ட்டுக்கு அழைப்பு வந்தது.
அம்மா என்ன நினைத்துக் கொண்டாளோ என்னவோ. தானே சுயமாக ராஜி¡ய வானோலி நிலையத்திற்கு அழைத்துச் சென்றாள்.
சாரதி தனக்கு மிகப் பெரிய உதவியைச் செய்திருப்பதாக ராஜி நினைப்பதாகவும், தன்னுடைய நன்றியைத் தெரிவிக்கச்சொல்லி என்னிடம் சொன்னதாகவும் சாரதியிடம் சொன்னேன்.
நாங்கள் எதிர்பார்த்ததை விட சீக்கிரமாகவே ரேடியோ ஸ்டேஷனிலிருந்து ராஜிக்கு புரோகிராம் கொடுக்க அழைப்பு வந்தது. அம்மா, சாரதி போன்றவர்கள் நினைத்த காரியத்தை எவ்வளவு சீக்கிரமாக முடிப்பார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
அன்றுதான் ராஜி ரேடியோ ஸ்டேஷனில் முதல்முறையாக பாடப் போகிறாள். காலையில் எழுந்தது முதல் என்னை வாய் நிறைய புகழ்ந்து கொண்டே இருந்தாள்.
“போதும் நிறத்து ராஜி! புகழ்ச்சி என்¡றல் எனக்குப் பிடிக்காது என்ற விஷயம் உனக்குத் தெரியாது போலிருக்கு.” செல்லமாகக் கடிந்து கொண்டேன்.
“உண்மையைச் சொன்னால் அது புகழ்ச்சி எப்படி ஆகும்? நீ இல்லாவிட்டால் இது எல்லாம் எப்படி நடக்கும்?” அப்பாவியாக கேட்டாள்.
“நடக்க வேண்டியதெல்லாம் நம் தலையில் முன்னாடியே எழுதப்பட்டிருக்கும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். நீ கேள்விப்பட்டதே இல்லையா?”
“இருந்தாலும்…” ராஜி விடவில்லை. என்னால்தான் தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்று ராஜி நம்பினாள். அசல் காரணம் எனக்குத் தெரியும்.
அன்று அம்மாவுக்கு ஜலதோஷம் பிடித்துக் கொண்டு விட்டது. கண்ணும் மூக்கும் சிவந்து தலைபாரமாக இருந்தது. அதனால் என்னை அழைத்து ராஜிக்குத் துணையாக ரேடியோ ஸ்டேஷனுக்கு போகச் சொன்னாள். நானும் சரி என்றேன்.
இருவரும் தயாராகி ப,றப்ப்டுக் கொண்டிருந்த போது சாரதி வந்தான். எனக்கு எனோ சரியாக இந்த நேரத்திற்கு அவன் வருவான் என்று உள்ளுணர்வு எச்சரித்துக் கொண்டே இருந்தது. அதேபோல் வந்துவிட்டான். எங்களை ரேடியோ ஷ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்று கேட்டேன். உடனே ஒப்புக்கொண்டான். நாங்கள் கிளம்பும் முன் அம்மா ராஜியை அழைத்து நிகழ்ச்சி முடிந்ததும் நேராக வீட்டுக்கு வரச்சொல்லி எச்சரித்தாள்.
சரி என்பதுபோல் ராஜேஸ்வரி தலையை அசைத்தாள். நான் வெளியில் வந்து காரில் உட்காரப் போகும்போது பின்னாலிருந்து திருநாகம் மாமி ஓடிவந்தாள். “உங்களுக்கு போன் வந்திருக்கு” என்றாள். காரில் ஏறப் போனவள் நின்றுவிட்டேன். ராஜேஸ்வரியை காரில் உட்காரச் சொல்லிவிட்டு, சாரதியிடம் “இதோ வருகிறேன் ஒரு நிமிடம்” என்று உள்ளே வந்தேன்.
வெளியில் ஏதாவது வேலை இருந்து வீட்டுக்கு வர முடியாமல் போனாலோ, கெஸ்ட் யாராவது வீட்டுக்கு வந்து அவர்களிடம் ஏதாவது செய்தி அவசரமாக சொல்ல வேண்டியிருந்தாலோ அப்பா எனக்கு போன் செய்வது வழக்கம். அதனால் அப்பாவாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டே ரிசீவரை எடுத்து “ஹலோ!” என்றேன்.
“ஹலோ!” மறுமுனையில்கேட்ட குரல் அப்பாவுடையது இல்லை.
“லாயர் ஆனந்தராவின் வீடுதானே?” என்று கேட்டார்கள்.
“ஆமாம்” என்று நான் சொல்லும்போதே “மீனா! நான்தான்” என்று கேட்டது.
ஒரு நிமிடம் என் இதயம் நின்று விட்டாற்போல் இருந்தது. அந்தக் குரலை அடையாளம் கண்டுபிடித்துவிட்டேன். “நீயா! ஊரிலிருந்து எப்போ வந்தாய்?” தடுமாற்றமும், பதற்றமும் என் குரலில் வெளிப்பட்டன.
“இன்று காலையில்தான்.”
“எங்கிருந்து பேசுகிறாய்?”
“மதூவுடைய வீட்டிலிருந்து. ராஜி எங்கே?”
“இருக்கிறாள்.”
“நீங்க இருவரும் இங்கே வாங்க.”
“இப்பொழுதா?”
“ஆமாம். ஏன் வேலை இருக்கா?” என்றான்.
“இப்போ உடனே கிளம்ப முடியாது.”
“அப்போ அவளை மட்டும் தனியாக அனுப்பு. நான் இங்கே காத்திருப்பேன்.”
“ஆகட்டும். வீடு எங்கே இருக்கோ சொல்லு.”
கிருஷ்ணன் சொன்னான். அது எங்கள் வீட்டிலிருந்து ரொம்ப தொலைவு இல்லை.
“இப்பொழுதே வருகிறோம்.” போனை வைத்துவிட்டேன். என் இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. நல்ல வேளை! கிருஷ்ணன் நேராக எங்க வீட்டுக்கு வரவில்லை. வந்திருந்தால் எவ்வளவு ரகளை ஆகியிருக்கும்? இப்படி ஒரு நினைப்பு வந்ததற்கு என் மீதே எனக்கு வெறுப்பாக இருந்தது. ஆனால் இப்போ அவனிடம் எப்படிப் போவது? போகாமல் இருந்தால் எதிர்பார்த்துக் கொண்டு இருப்பானோ?
நேரமாகிவிட்டது போல் சாரதி கார் ஹாரனை அழுத்தினான். அதைக் கேட்டதும் வாசலுக்கு ஓடிவந்தேன். நான் ஏறிக்கொண்டதும் கார் புறப்பட்டது.
“போன் செய்தது யாரு? டாடீயா?” சாரதி கேட்டான். சாரதி அப்பாவை டாடீ என்றுதான் விளிப்பான். மாமா என்றோ அங்கிள் என்றோ சொல்ல மாட்டான்.
ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தேன். கிருஷ்ணன் சொன்ன தெருவின் பக்கத்தில் ஒரு மெயின்ரோட் இருந்தது. அதன் வழியாகத்தான் நாங்கள் போகவேண்டும். இப்போ போகவில்லை என்றால் பின்னால் அவனைச் சந்திக்க முடியுமோ முடியாதோ. நான் ஒருத்தி மட்டுமாவது போய் ராஜிக்கு ரேடியோ புரோகிராம் இருப்பதாக சொல்லிவிடுவது நல்லது.
கார் சரியாக அந்த சாலை வழியாக போய்க் கொண்டிருந்தது. சாரதியை ஒரு நிமிடம் காரை நிறுத்தச் சொன்னேன். சாரதியிடம் “இங்கே என் பிரண்ட் ஒருத்தி இருக்கிறாள். அவசரமாக வரச்சொல்லி போன் செய்தாள். போய் என்னவென்று விசாரித்துவிட்டு அங்கிருந்து ரேடியோ ஸ்டேஷனுக்கு வந்து விடுகிறேன். நீங்க போய்க் கொள்ளுங்க்” என்றேன்.
“அப்படி என்றால் நானும் கூட வருகிறேன்.” ராஜேஸ்வரி இறங்கப் போனாள்.
நான் அவளை இறங்க விடவில்லை. கையைப் பிடித்து தடுத்துவிட்டு கதவைச் சாத்திவிட்டேன். “நீ வரவேண்டாம். அந்தப் பெண் என்னுடன் மற்றவர்கள் வருவதை விரும்ப மாட்டாள். என்னை தனியாக வரச் சொன்னாள். பின்னால் விஷயத்தைச் சொல்லுகிறேன்” என்றேன்.
ராஜேஸ்வரி குழப்பமடைந்தவள் போல் பார்த்தாள்,.
“போகட்டும். வீடு வரையிலும் ட்ராப் செய்து விட்டு அப்படியே போய் விடுகிறோம்” என்¡றன் சாரதி. அவனுக்கு என் பேச்சு, நடவடிக்கை எல்லாம் செயற்கையாக, முரண்பாடாக இருப்பதுபோல் அவன் புருவங்கள் முடிச்சேறியிருந்த விதத்திலேயே புரிந்து கொள்ள முடிந்தது.
“வேண்டாம். உங்களுக்கு நேரமாகிவிடும். வீடு பக்கத்தில்தான். நடந்து போய்க்கொள்கிறேன். நீங்க ராஜியை ரேடியோ ஸ்டேஷனுக்கு அழைத்துப்போங்க” என்றேன்.
சாரதி என்ன நினைத்துக் கொண்டானோ என்னவோ. மெற்கொண்டு பேச்சை வளர்க்கவில்லை. ஆனால் நடுவழியில் திடீரென்று இப்படி நான் நடந்து கொண்டது அவனுக்குக் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அது எனக்குப் புரிந்தாலும் நான் லட்சியப்படுத்துவதாக இல்லை.
ராஜேஸ்வரி மூளை கலங்கிவிட்டவள் போல் அமர்ந்திருந்தாள். அவள் கண்களில் முதல் தடவையாக கோபத்தைப் பார்த்தேன். யார் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். நான் கிருஷ்ணனைச் சந்திக்கணும். அதுவும் தனியாக. அங்கேயே நின்றுகொண்டு கார் கண் மறைவாக ஆகும் வரை பார்த்தேன். பிறகு பிரதான சாலையிலிருந்து திரும்பி தெருவுக்குள் நுழைந்தேன். கிருஷ்ணன் சொன்ன க்ரே கலர் பங்களா தென்பட்டது. வேகமாக துடிக்கும் இதயத்துடன் அந்த வீட்டை நோக்கி நடந்தேன். வாசல் கேட்டைத் திற்ந்து கொண்டு மெதுவாக உள்ளே போகும் போது கிருஷ்ணன் வராண்டாவின் படிகளில் வேகமாக இறங்கி என் எதிரே வந்தான்.
“இதென்ன? நடந்து வருகிறாயே இந்த வெயிலில்?” என்றான் அக்கறையுடன்.
“நடந்து வராமல் என்ன செய்யச் சொல்கிறாய்? நீ பல்லாக்கை அனுப்பி வைத்திருந்தாயா என்ன ஏறிக் கொண்டு வருவதற்கு?” சிரித்துக் கொண்டே டபாய்ப்பது போல் கேட்டேன். இப்படி அம்மா அப்பாவுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக அவனைச் சந்திப்பதில் இனம் புரியாத சந்தோஷம் ஏற்பட்டது.
கிருஷ்ணன் கண் இமைக்காமல் என் பக்கம் பார்த்தான். அவன் கண்களில் துள்ளி எழும்பிய குறும்பை வார்த்தையாக வெளியில் வந்துவிடாமல் உதட்டுடன் கட்டுப்படுத்தி விட்டது போல் தோன்றியது.
“உள்ளே வா” என்றான்.
அவனை பின்பற்றி உள்ளே போனேன். வசதியிருப்பவர்கள் போலும். வீட்டில் விலை உயர்ந்த பர்னிச்சர் மற்ற பொருட்கள் இருந்தன. ஆனால் வீட்டில் வேறு மனிதர்கள் இருப்பது போல் சந்தடி எதுவும் கேட்கவில்லை.
“வீட்டில் யாரும் இல்லை. பெங்களூருக்குப் போயிருக்கிறார்கள்.” கிருஷ்ணன் சொன்னான்.
நான் அங்கே இருந்த சிங்கிள் சோபாவில் அமர்ந்துகொண்டேன்.
“ராஜி எங்கே?”
“வரவில்லை. நான் இங்கே வருவதாக அவளிடம் சொல்லவில்லை.” விளக்கம் தருவது போல் பார்த்தேன்.
என் எதிரில் இருந்த சோபாவில் உட்காரப் போனவன் நின்றுவிட்டு “குடிக்க தண்ணீர் வேண்டுமா?” என்று கேட்டான்.
“வேண்டாம். தாங்க்ஸ்.”
கிருஷ்ணன் உள்ளே போனான். நான் வீட்டை பார்வையிட்டுக்கொண்டிருந்தேன். கிருஷ்ணன் ராஜியை அழைத்துப் போவதற்காக வந்திருக்கிறானோ என்னவோ. எப்படி அவனைத் தடுப்பது? வாதத்தை என் பக்கத்தலிருந்து தொடங்கினால் வெற்றி எனக்குக் கிடைக்கும். வேகமாக யோசிக்கத் தொட்கினேன்.
கிருஷ்ணன் திரும்பி வந்தான். அவன் கையில் சிறிய தட்டில் பிஸ்கெட்டுகள் இருந்தன. என் முன்னால் இருந்த டீபாய் மீது வைத்துவிட்டு “எடுத்துக்கொள்” என்றான்.
“அடுத்தவர் வீட்டில் இந்த உபசாரம் எல்லாம் எதுக்கு?” என்றேன்.
கிருஷ்ணன் என் எதிரில் இருந்த சோபாவின் அமர்ந்து கொண்டான். சொல்ல வந்த விஷயத்தைத் தாமதம் செய்வது அம்மாவைப் போலவே கிருஷ்ணனுக்கும் பழக்கம் இல்லை போலும். “ராஜியை அழைத்துப் போகத்தான் வந்தேன். நீ அவளை நேராக ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தால் இன்று இரவு வண்டிக்கு புறப்படுகிறேன்” என்றான்.
நான் உடனே பதில் சொல்லவில்லை. கிருஷ்ணன் போன்றவர்களிடம் பிரச்னையே இதுதான். மற்றவர்களிடம் அறிவுரை கேட்டுக் கொண்டு இருக்க மாட்டார்கள். தங்களுக்கு சரி என்று தோன்றியதை நேராக செய்து கொண்டு போவார்கள்.
“இப்போ என்ன அவசரம்?” என்றேன்.
“வேறு ஒரு வரன் பார்த்திருக்கிறேன். பெண் பார்க்க வியாழன் அன்று வருகிறார்கள்.” டீபாய் மீது இருந்த புத்தகத்தை எடுத்து புரட்டிக் கொண்டிருந்தான்.
இமைகளை உயர்த்தி அவன் பக்கம் பார்த்தேன். அவன் முகம் துளைக்க முடியாத கோட்டையைப் போல் கடினமாக இருந்தது. என் கெஞ்சல்கள் மிஞ்சல்கள் அவனிடம் இந்த நிமிடம் வேலை செய்யாது என்று புரிந்து விட்டது. நானும் ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டிக் கொண்டிருந்தேன். மௌனத்தைக் கடைபிடிப்பதுதான் சிறந்த வழி என்று தோன்றியது.
இரண்டு பேரும் ஐந்து நிமிடங்கள் அந்தப் பழைய புத்தகங்களில் எங்கள் வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்ட முக்கியமான விஷயங்கள் இருப்பது பொல் புரட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தோம்.
இந்த வீட்டில் கால் எடுத்து வைத்து அவனைப் பார்த்த அந்த நிமிடத்தில் என் மனதில் பொங்கிய உவகை அப்படியே காணாமல் போய்விட்டது.
“வேறு என்ன விசேஷம்?” என்றான். புத்தகத்தில் சுவாரசியம் போய்விட்டது போல் டீபாய் மீது வீசிக் கொண்டே.
“என்ன இருக்கும்? எதுவும் இல்லை.” உலர்ந்த குரலில் சொன்னேன்.
“எல்லோரும் நலம்தானே?”
“எல்லோரும் என்றால்?” வேண்டுமென்றே அழுத்தமாகக் கேட்டேன்.
என் முகத்தில் பதிந்திருந்த அவன் பார்வை கால்மாட்டில் புரண்டு கொண்டிருந்த புடவையின் மீது நிலைத்துவிட்டது.
மறுபடியும் எங்களுடைய உரையாடல் நின்றுவிட்டது. கிருஷ்ணன் யோசனையில் ஆழ்ந்துவிட்டவன் போல் உட்கார்ந்திருந்தான். ராஜியை அனுப்புவதில் எனக்குக் கொஞ்சம்கூட விருப்பம் இல்லை. ஆனால் இரவு ரயிலுக்கு புறப்பட்டு விட வேண்டும் என்ற கிருஷ்ணனின் ஆணையை மீற முடியாது போல் இருந்தது.
“இனி நான் கிளம்பட்டுமா?”
“ஊம்.” வந்த வேலை முடிந்து விட்டது போல் உடனே சம்மதம் சொன்னான்.
எனக்கு ரொம்ப ஏமாற்றமாக இருந்தது. கிருஷ்ணன் நிமிர்ந்து என் பக்கம் பார்க்கவும் இல்லை. ஒருக்கால் பார்த்தாலும் என் மனதில் இருப்பதைப் புரிந்து கொள்ளும் ஆர்வம் அவனுக்கு இருக்காதோ என்னவோ. விருப்பம் இல்லாமலேயே எழுந்துகொண்டேன்.
“ஒரு நிமிடம் உட்கார்ந்துகொள். உள்ளே சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். காபி குடித்துவிட்டு போகலாம்.”
“போதும் உன் அதிதி மரியாதைகள்! வந்த மனுஷியிடம் வாய்விட்டு நாலுவார்த்தை இதமாகப் பேசாமல் வெறுமே காபி டிபன் கொடுத்தால் உன் விருந்தொம்பல் முடிந்து போய்விடுமா?”
அவன் வியப்புடன் பார்த்தான்.
“ராஜியை அனுப்பி வைக்க வேண்டுமாம். பெரிய மனிதன் சொல்ல வந்து விட்டான். இப்போ அவளை எந்தப் போக்கத்தவனுக்கோ கட்டி வைத்தால் தவிர உனக்குத் தூக்கம் வரவில்லையா? இப்போ அவளுடைய திருமணத்திற்கு என்ன அவசரம் வந்து விட்டது? திருமணம் ஆகவில்லையே என்று அவள் நொந்து நூலாக இருக்கிறாளா?”
என் மனதில் இருப்பதைக் கண்டுபிடித்து விடணும் என்பதுபோல் கிருஷ்ணன் என் பக்கம் தீட்சண்யமாக பார்த்தான். நான் கோபமாக இருப்பதைப்போல் நடிப்பதை அவன் கண்டுபிடித்து விடக்கூடும் என்று பயந்தேன். அவன் பக்கம் பார்க்காமலேயே சொன்னேன்.
“ராஜிக்கு நீ ஒன்றும் வரன் பார்க்க வேண்டியதில்லை. நல்ல வர¨ன் பார்த்து நாங்களே கல்யாணத்தை செய்து வைக்கிறோம். போதுமா? ராஜி உன்னுடன் வருவது நடக்காத காரியம். நீ போய்க் கொள்ளலாம். வேண்டுமென்றால் அத்தைக்குக் கடிதம் எழுதிக் கொள்கிறேன்.”
“ஒரு நிமிடம் உட்கார்” என்றான். அவன் குரலில் வெளிப்பட்ட கோபம் எனக்குப் புரியாமல் இல்லை.
“மாட்டேன். ஒருக்கால் உட்கார்ந்து கொண்டாலும் ராஜியை உன்னுடன் அனுப்பி வைக்க மாட்டேன்.”
“முதலில் உட்காரந்துகொள். சமையல்காரன் வருவான். வித்தியாசமாக நினைத்துக்கொள்ளக் கூடும்.”
“நினைக்கட்டுமே. எனக்கு என்ன?”
சொன்னேனே தவிர ட்ரோயுடன் உள்ளே வந்த சமையல்காரனைப் பார்த்ததும் பிடிவாதமாக இருக்க முடியாமல் உட்கார்ந்து விட்டேன்.
சமையல்காரன் டீயை எங்கள் முன்னால் வைத்துவிட்டுப்போய்விட்டான்.
கிருஷ்ணன் டீ கோப்பையை என் கையில் கொடுத்தான். வாங்கிக்கொண்டு மறுபடியும் ட்ரேயில் வைத்து விட்டேன்.
“குடிக்க மாட்டாயா?” முறுவலுடன் கேட்டான்.
“குடிக்கணும் போல் இல்லை.” சீரியஸாக சொன்னேன்.
கிருஷ்ணன் கோப்பையை எடுத்து மறுபடியும் நீட்டினான். “உன்னைச் சமாளிப்பது கஷ்டம்தான். பாவம் சாரதி!” குறும்புடன் சிரித்தான்.
நான் பதில் சொல்லவில்லை. நான் இப்படி திடீரென்று பாதிவழியில் இறங்கிக் கொண்டதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி சாரதியின் மனதை குடைந்து கொண்டே இருக்கும். இன்று இல்லாவிட்டால் நாளைக்காவது நான் சந்திக்கப் போன அந்த நபர் யாரென்று விசாரிக்காமல் இருக்கமாட்டான்.
“இத்தனைக்கும் நீ என்னதான் சொல்கிறாய்? ராஜிக்கு நான் வர்ன் பார்க்க வேண்டாம் என்று சொல்கிறாயா?” டீயைக் குடித்துக் கொண்டே கிருஷ்ணன் சீரியஸாக கேட்டான்.
ஆமாம் என்து போல் தலையை அசைத்தேன்.
“இதுவரையில் நடந்த அனர்த்தங்கள் போறவில்லையா?”
“ராஜியின் திருமணம் நின்று போனது அனர்த்தம் ஒன்றுமில்லை. அது அவளுடைய அதிர்ஷ்டம்தான். அதைப் பின்வரும் நாட்களில் நீயே ஒப்புக்கொள்ளப் போகிறாய். இனி உன் திருமண விஷயம் என்கிறாயா? அது அனர்த்தமாக இருக்கலாம். ஒப்புக்கொள்கிறேன்.” அவசர அவசரமாக டீயைக் குடித்துவிட்டு டீபாய் மீது கோப்பையை வைத்தேன். கடியாரத்தைப் பார்த்துக் கொண்டே எழுந்து கொண்டேன்.
“இனி நான் கிளம்புகிறேன். வேலை இருக்கிறது.”
“ராஜியை மாலையில் அழைத்து வா மீனா! அவளுடன் பேசுகிறேன்.” வேண்டுகோள் விடுப்பது போல் கேட்டான்.
“அழைத்து வர மாட்டேன். நீ அவளை மிரட்டுவாய். ஏற்கனவே அவள் பயந்தாங்குளி. நான் தடுத்தாலும் நிற்க மாட்டாள். உன்னுடன் கிளம்பி வந்து விடுவாள்.”
“இவ்வளவு தூரம் வந்துவிட்டு அவளைக் கண்ணால் கூட பார்க்க விடாமல் போகச் சொல்கிறாயே? இது உனக்கு நியாயம்தானா?”
சட்டென்று அவன் பக்கம் பார்த்தேன். அவனுடைய பணிவான தோரணையின் மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. “நீ அவளை ஒன்றும் சொல்லமாட்டேன் என்றால் அழைத்து வருகிறேன்.” நிபந்தனையை விதித்தேன்.
“சரி. அழைத்துவா.”
“இங்கே வருவதற்குத் தோதுபடாது. நீயே வேறு இடத்திற்கு வா.”
“எங்கே வரணுமோ நீயே சொல்லு.”
ஒரு நிமிடம் யோசித்தேன். மாமியின் வீடு நினைவுக்கு வந்தது. அங்கே வரச்சொன்னேன். கிருஷ்ணன் சட்டைப் ¨யிலிருந்து டைரியை எடுத்து முகவரியை குறித்துக் கொண்டான்.
“இது ஆனாலும் அநியாயம். என் தங்கையை நான் பார்ப்பதற்கு இத்தனை நிபந்தனைகளா? இத்தனை குறுக்கு வழிகளா?”
கிருஷ்ணனின் உத்தேசம் எனக்குப் புரிந்து விட்டது. ராஜியை அவ்வளவு தைரியமாக அழைத்துப் போய் தங்க வைத்துக் கொண்டேனே ஒழிய ஒரு பேச்சுக்குக் கூட அவனை எங்கள் வீட்டுக்கு வரச்சொல்லி அழைக்கவில்லை. மறுநாள் குறிப்பிட்ட நேரத்தில் மாமியின் வீட்டிற்கு வரச்சொல்லி அவனிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
“எப்படிப் போவாய்?” தானும் எழுந்துகொண்டே கேட்டான்.
“இரண்டு கால்களால் நடந்து.”
“மெயின் ரோட் வரைக்கும் நானும் வரட்டுமா?”
“உனக்கு வீண் சிரமம் ஏன்?”
கிருஷ்ணன் என்னுடன் மெயின் ரோட் வரையில் வந்தான். சமயத்திற்கு டாக்ஸி எதுவும் வரவில்லை. ஆட்டோ ஒன்று அந்தப் பக்கமாக வந்தது. நான் அதில் ஏறிக்கொண்டே கிருஷ்ணன் பக்கம் திரும்பினேன். “இன்னிக்கு உன்னைச் சந்தித்ததில் எனக்கு திருப்தியே இல்லை.”
“எதனால்?” வியப்புடன் பார்த்தான்.
“நீ சரியாக பேசவில்லை” என்று சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறப்போனேன்.
கிருஷணன் சட்டென்று என் தோளைப் பற்றி நிறுத்திவிட்டான். “அப்படி என்றால்? விளக்கமாக சொல்லு” என்றான்.
நானா வாயைத் திறந்து ஏதோ சொல்லப் போனேன். அதற்குள் என் பார்வை தொலைவில் நாங்கள் நடந்து வந்த தெருமுனையிலிருந்து இந்த பக்கமே வந்து கொண்டிருந்த பெண்மணியின் மீது விழுந்தது. மிஸெஸ் ராமன்!
என் இதயத்தில் இடி விழுந்தாற்போல் இருந்தது. மிஸெஸ் ராமன் என்னைப் பார்த்துவிட்டாள். வேகமாக என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.
“நடுத்தெருவில் என்ன இது?” ஒரே உதறலில் கிருஷ்ணனின் கையை உதறிவிட்டு ஆட்டோவில் ஏறிக் கொண்டோன். ஆட்டோ ஸ்டார்ட் ஆகிவிட்டது. ஆட்டோ புறப்படும் முன் நான் தலையைத் திருப்பிப் பார்த்தேன். மிஸெஸ் ராமன் ஓட்டமும் நடையுமாக வந்துகொண்டே என்னை இருக்கச் சொல்லி கையை அசைத்தாள்.
நான் கவனிக்காததுபோல் தலையைத் திருப்பிக் கொண்டு “சீக்கிரம் போகட்டும்” என்றேன். அந்த அவசரத்தில், பதற்றத்தில் மறுபடியும் கிருஷ்ணன் பக்கம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்