முள்பாதை 48

This entry is part [part not set] of 34 in the series 20100926_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

ராஜேஸ்வரி வந்த புதிதில் எங்கள் வீட்டில் இருப்பதற்கு கூண்டில் அடைபட்ட பறவை போல் தவித்தாள். பிறகு எதிர்பாராமல் எங்களுக்கு ஏற்பட்ட இடைஞ்சல் காரணமாக தன்னை அறியாமலேயே பழக்கப்பட்டு விட்டாள். நாங்கள் ஊரிலிருந்து வந்த மூன்றாவது நாளே திருநாகம் மாமி கொல்லையில் வழுக்கி விழுந்தாள். கால் சுளுக்கிக் கொண்டதுடன் இடுப்பும் பிடித்துக் கொண்டு விட்டதில் நான்கு நாட்கள் படுக்கையை விட்டு எழுந்து கொள்ள முடியாத நிலைமை.
மாமி இல்லை என்றால் அம்மாவுக்கு ஒரு நிமிடம் கூட கழியாது. அடுத்த வாரம் லேடீஸ் கிளப்புக்கு அமைச்சர் வரப் போவதால் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருநாகம் மாமியால் எழுந்து நடமாட முடியாமல் போனதால் அம்மாவின் பாடு திண்டாட்டமாகி விட்டது. தெரிந்தவர்கள் வீட்டுக்கு போன் செய்து தற்காலிகமாக பத்துநாட்களுக்கு சமையல்காரி யாராவது கிடைப்பாளா என்று முயற்சி செய்தாள். ஆனால் யாரும் கிடைக்கவில்லை. மாமிக்கு சரியாகும் வரையில் தங்கள் வீட்டுக்கு சாப்பிட வரச்சொல்லி மிஸெஸ் ராமன் திரும்பத் திரும்ப சொன்னாள். ஆனால் அம்மா சம்மதிக்கவில்லை. நட்பு விஷயத்தில் அம்மா சில எல்லைகளை வைத்தக் கொள்வாள். அவற்றைத் தாண்டி போக மாட்டாள். அம்மா மறுத்து விட்டதற்கு மிஸெஸ் ராமன் வருத்தப்பட்டுக் கொண்டாள். தான் எப்படியோ சமாளித்துக் கொள்வதாகவும், தங்களுடைய சமையல்காரியை வேண்டுமானாலும் அனுப்பி வைப்பதாக சொன்னாள். அம்மா அதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை. கடைசியில் சமையல்காரி கிடைக்கும் வரையில் ஹோட்டலிலிருந்து சாப்பாடு வரவழைப்பதாக முடிவு செய்யப்பட்டது.
அம்மா கிளப்புக்குப் போய்விட்டாள். அப்பா கோர்ட்டுக்கு கிளம்பும் முன் “பார்த்தாயா மீனா! உன்னை சமையல் கற்றுக் கொள்ளச் சொல்லி எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்?” என்றார் குறைப்படடுக் கொள்வது போல்.
தவறு செய்து விட்டவள் போல் தலையைக் குனிந்து கொண்டேன். சமையல் கற்றுக்கொள்ள எனக்கும் விருப்பம்தான். ஆனால் என்ன செய்வது? எப்பொழுதாவது ஆசைப்பட்டு நான் சமையல் அறைக்குள் காலடி வைத்தால், உடனே திருநாகம் மாமி ஓடிவந்து தடுத்து விடுவாள். “என் உடம்பில் உயிர் இருக்கும் வரையில் நீங்க இந்த காரியம் எல்லாம் செய்யக் கூடாது. முதலில் நீங்க வெளியில்போய் விடுங்கள். அம்மா பார்த்தாங்கன்னால் என்னை கொன்று போட்டு விடுவாங்க” என்று ஆர்ப்பாட்டம் செய்வாள். அம்மாவிடம் ஒரு தடவை அப்பா நான் சமையல் கற்றுக் கொள்ளணும் என்று ஆசைப்படுவதாக சொன்னார்.
அம்மா அலட்சியமாக ஒரு பார்வையை வீசிவிட்டு “சமையல் கற்றுக்கொள்வது பெரிய விஷயமா என்ன? உன் திறமையை மற்ற விஷயங்களில் காட்டு” என்று கடிந்து கொண்டாள்.
அதற்குப் பிறகு நான் மறுபடியும் அந்தப் பேச்சையே எடுக்கவில்லை. தண்ணீர் குடிப்பதற்குக் கூட டம்ளரை எடுக்க வேண்டிய அவசியம் வந்தது இல்லை எனக்கு. அப்படி இருக்கும் போது சமையல் செய்ய வேண்டிய அவசியம் எப்படி வரும்?
ஆனால் இன்று அப்பா இப்படி சொன்னதும் என் மனதில் உறுத்தல் ஏற்பட்டது. அப்பாவுக்கு அல்சர் பிர்சனை இருந்தது. ஹோட்டால் சாப்பாடு ஒத்துக்கொள்ளாது.
அன்று நான் மாமியின் வீட்டுக்கு போய்விட்டு வந்தேன். வழக்கம் போல் ராஜி என் அறையில் ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டோ, புத்தகத்தைப் புரட்டியபடியோ தென்படவில்லை.
“ராஜீ!” என்று அழைத்தேன். பதிலுக்குக் குரல் வரவில்லை. என் இதயம் வேகமாக துடித்தது. வீட்டில் யாரும் இல்லாத சமயமாக பார்த்துவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டிருப்பாளோ. வேக வேகமாகக் கீழே இறங்கி வந்தேன். அப்பாவின் அறைக்கு ஓடினேன். அங்கேயும் தென்படவில்லை. சமையலறையின் பக்கம் ஓட்டமும் நடையுமாம போய்க் கொண்டிருந்தவள் திடீரென்று நின்றுவிட்டேன். அங்கே தென்பட்ட காட்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது.
அப்பா உணவு மேஜை அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்ருந்தார். ராஜி பரிமாறிக் கொண்டிருந்தாள். பிரமித்துப் போனவளாக அருகில் சென்றேன்.
அப்பா என்னைப் பார்த்ததும், “வா மீனா! இத்தனை நாட்கள் கழித்து நம் வீட்டில் புது விதமான சமையல் தொடங்கியிருக்கிறது. ரொம்ப நன்றாக இருக்கிறது. நீயும் உட்கார்” என்றார்.
நான் சமையலறைக்குள் சென்றேன். பின்னாலேயே வந்த ராஜி தவறு செய்து விட்டவள் போல் என்னிடம் விளக்கம் சொன்னாள். “அண்ணி! சும்மா உட்கார்ந்து கொண்டால் எனக்கு பொழுதே போகவில்லை. வேலை இருந்தால் தவிர எனக்கு நிம்மதியாக இருக்காது. சமையலுக்கு ஆள் கிடைக்காமல் நீங்க கஷ்டப்படுவதைப் பார்க்கும் போது என்னால் சும்மா இருக்க முடியவில்லை” என்றாள்.
“நல்லதுதானே. உனக்கு விருப்பமான பொழுதுபோக்கு கிடைத்துவிட்டது” என்றேன் முறுவலுடன்.
அம்மா கிளப்பிலிருந்து வந்ததும் இந்தச் செய்தியைத் தெரிவித்தேன். அம்மாவுக்கு உள்ளூர சந்தோஷம் ஏற்பட்டதை அந்த முகமே பறைச்சாற்றி விட்டாலும், வெளியில் மட்டும், “ச்ச… ச்ச… அந்தப் பெண்ணிடம் வேலை வாங்குவதாவது?” என்றாள்.
ஆனால் சாப்பிட்ட பிறகு ராஜேஸ்வரியை பாராட்டாமல் அம்மாவால் இருக்க முடியவில்லை. “உனக்கு வரப் போகும் கணவன் யாரோ ரொம்ப கொடுத்து வைத்தவன்” என்றாள்.
அந்த விதமாக ராஜேஸ்வரியின் உதவியால் எங்கள் வீட்டில் தற்காலிகமாக ஏற்பட்ட இடைஞ்சல் நீங்கிவிட்டது.
வீட்டு வேலைகளை சுறுசுறுப்பாக செய்யத் தெரிந்த பெண் ஒருத்தி கண்ணெதிரில் தென்பட்டதும் மாமியின் கால் சுளுக்கு குறைய இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிடது. கால் வலி கொஞ்சம் தேவலையானதும் அந்த அம்மாளுக்கு மூட்டு வலி வந்து விட்டது. கட்டிலை விட்டு எழுந்துகொள்ள முடியாதது போல் முனகிக் கொண்டிருந்தாள். இந்த நாடகத்தைக் கண்டு பிடித்ததும் எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.
அன்று இரவு கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருந்த அம்மாவிடம் போய் கோபமாக கேட்டேன்.
“என்ன மம்மீ! ராஜியை சாசுவதமாக நம் வீட்டில் சமையல்காரியாக வைத்துக் கொண்டு விடலாமா?”
அம்மா பதற்றத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். “என்ன நடந்தது? யார் அப்படிச் சொன்னது?”
“நான்தான் சொல்கிறேன். இல்லாவிட்டால் என்ன? இந்த வீட்டில் ராஜேஸ்வரி இருக்கும் வரையில் திருநாகம் மாமிக்கு மூட்டுவலி தேவலையாகாது என்று நினைக்கிறேன்.”
அம்மாவின் முகம் சிவந்து விட்டது. “வர வர உன் வாய் ரொம்ப நீளுகிறது. கொஞ்சம் குறைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும். எப்போ எதை செய்ய வேண்டுமோ எனக்குத் தெரியும். முதலில் இடத்தை காலிபண்ணு.”
“ராஜேஸ்வரிக்கு நாம் ஏதாவது உதவி செய்யப் போகிறோமோ இல்லையோ தெளிவாக சொல்லிவிட்டால் நல்லது. சும்மா ஆசைகாட்டி வேலை வாங்குவது மரியாதை இல்லை.”
“வாயை மூடிக் கொண்டு வெளியே போகப் போகிறாயா இல்லையா?” அம்மா கணக்கு புத்தகத்தை மேஜைமீது வீசிவிட்டு எழுந்து கொண்டாள்.
நான் வெளியில் வந்து விட்டேன்.
என் அறையில் அமர்ந்துகொண்டு இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ராஜேஸ்வரி சொன்னாள். “அண்ணீ! என்ன பேச்சு இது? நான்கு நாட்கள் சமையல் செய்தால் நான் சமையல்காரி ஆகிவிடுவேனா?”
“ஆகமாட்டாய். இருந்தாலும் நாளைக்கு இந்த விஷயம் தெரிந்தால் உங்க அண்ணன் என்ன நினைப்பான்?” என்றேன் கோபமாக.
“உனக்கு அண்ணனைப் பற்றி கொஞ்சம் கூட தெரியாது. ஒரு தேவை ஏற்பட்டால் நம் வீட்டு வேலைகளை நாமே செய்து கொள்வது தவறு என்று அண்ணன் ஒருநாளும் சொல்ல மாட்டான்.”
“அப்படி என்றால் இதை உன் வீடாக நினைக்கிறாயா ராஜி? உண்மையைச் சொல்லு. மனப்பூர்வமாக அப்படி நினைக்கிறாயா?” உணர்ச்சி வசப்பட்டவளாகக் கேட்டேன்.
ராஜேஸ்வரி தலையைக் குறுக்காக அசைத்தாள். “இந்த வீடு என்னுடையதோ இல்லையோ தெரியாது. ஆனால் இந்த அண்ணி மட்டும் முழுக்க முழுக்க எங்களுக்குத்தான் சொந்தம்” என்றாள் முறுவலுடன்.
ராஜேஸ்வரி என்னை அண்ணீ என்று அழைக்கும் போது சிலசமயம் என் எண்ணங்கள் வேறு விதமாக ஓடும்.

********

அதற்குப் பிறகு அம்மா என்ன நினைத்துக் கொண்டாளோ என்னவோ. மறுநாள் மாலையில் சாரதி தேநீர் சமயத்தில் வந்த போது எனக்கும் ராஜேஸ்வரிக்கும் காதில் விழுவது போல் நல்ல வரன் ஏதாவது இருந்தால் பார்க்கச் சொன்னாள்.
“எப்படிப்பட்ட பையன் வேண்டுமென்று ராஜேஸ்வரி நினைக்கிறாள்?” சாரதி கேட்டான்.
“நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பையனாக இருக்கணும்” என்றாள் அம்மா.
அம்மா வற்புறுத்தியதற்கு இணங்கி சாரதி அன்று இரவு எங்கள் வீட்டில் சாப்பிட்டான். நானும் ராஜேஸ்வரியும் சேர்ந்து பரிமாறினோம். அம்மா, சாரதி இரண்டு பேரும் சமையலை புகழ்ந்த போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
மேலும் ஒரு வாரம் போவதற்குள் ராஜேஸ்வரி அம்மாவுக்கு ரொம்ப வேண்டியவளாகிவிட்¡ள். கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள், வெளி உலகத்து அனுபவம் இல்லை என்றாலும் ராஜிக்கு எதிராளியின் மனதை அனுசரித்து நடந்து கொள்ளும் திறமை இருந்தது.
அம்மா எந்த குணங்கள் எதிராளியிடம் இருக்கணும் என்று எதிர்பார்ப்பாளோ அவையெல்லாம் ராஜியிடம் இருந்தன. அம்மாவுக்கு யாரும் எதிர்த்து பேசக் கூடாது. ராஜேஸ்வரியிடம் அந்தப் பழக்கம் அசலுக்கே இல்லை. எந்த வேலை செய்தாலும் நேர்த்தியாக செய்வது, பெரியவர்களிடம் காட்டும் பணிவு. மென்மையான சுபாவம்… இவையெல்லாம் அம்மாவை ஈர்த்து விட்டன.
அம்மாவிடம் ஒரு சுகுணம் இருந்தது. அபிமானம் ஏற்பட்டாலும், ஆத்திரம் ஏற்பட்டாலும் அதை எதிராளியிடம் அப்படியே மழையாய்ப் பொழிந்து விடுவாள். ராஜேஸ்வரி விஷயத்தில் அந்த அதிர்ஷ்டம் என்னுடையதோ அவளுடையதோ தெரியாது. ஆனால் அம்மாவுக்கு ராஜேஸ்வரியிடம் அளவு கடந்த பிரியம் ஏற்பட்டு விட்டது. அதனால் அவளை ரொம்ப அன்புடன் நடத்தினாள். அவ்வப்பொழுது தன்னுடன் கிளப்புக்கு, அங்கே இங்கே என்று வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்றாள். மிஸெஸ் ராமன் போன்றவர்கள் யார் இந்த பெண் என்று கேட்டால் முறுவலுடன் “என்னுடைய வளர்ப்பு மகள்” என்று பதில் சொன்னாள். நாலுபேருடன் பழகும் போது எப்படி நடந்து கொள்ளணுமோ ராஜேஸ்வரிக்கு கற்றுக் கொடுத்தாள். இயற்கையிலேயே சட்டென்று புரிந்துகொள்ளும் ராஜேஸ்வரிக்கு எதையும் இரண்டாவது முறை சொல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை.
அம்மா வெளியே போகும் போது ராஜேஸ்வரியை எதற்காக அழைத்துப் போகிறாளோ போகப் போகத்தான் எனக்குப் புரிந்தது. ராஜேஸ்வரி வீட்டில் இருந்தால் எனக்கும் சாரதிக்கும் தனிமை கிடைக்காது என்பது அம்மாவின் அபிப்பிராயம்.
நானும் சாரதியும் பேசிக்கொண்டு இருக்கும் போது தானும் அங்கே இருக்க வேண்டி வந்தால் ராஜேஸ்வரி இருப்புக் கொள்ளாமல் தவிப்பாள். கூடுமான வரையிலும் அம்மாவுடன் வெளியே போய் விடணும் என்று துடிப்பாள். ஆனால் ராஜேஸ்வரி எங்களுக்கு இடையே இல்லாவிட்டாலும் நானும் சாரதியும் அவளைப் பற்றிதான் அதிகமாக பேசிக் கொண்டிருந்தோம். சாரதி பேசிய தோரணையிலிருந்து ராஜேஸ்வரியின் நிலைக்கு அவன் இரக்கப்படுவதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அதிர்ஷ்டம் இருந்ததால்தான் என்னுடைய பக்கபலம் அவளுக்கு கிடைத்தது போலவும் பேசுவான்.
அப்பாவும் தொடக்கத்தில் ராஜேஸ்வரி இங்கே தங்கியிருப்பதை விருப்பப்படவில்லை என்றாலும் நாளடைவில் அம்மாவும் ராஜேஸ்வரியும் சேர்ந்து சுற்றுவதை ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்தார். அம்மா வீட்டு கணக்கு வழக்குகளை கூட ராஜேஸ்வரியின் பொறுப்பில் விட்டுவிட்டாள். திருநாகம் மாமிக்கு மட்டும் ராஜியைப் பார்க்கும் போது பொறாமையும், எரிச்சலும் இருப்பது போல் எனக்குத் தொன்றியது. ஒரு தடவை மாமி வீட்டு விவகாரத்தில் தலையிட்ட போது அம்மா கண்டிப்பது போல் சமையல் வேலையை மட்டும் கவனித்தால் போதும் என்றும் மற்றதை ராஜி பார்த்துக் கொள்வாள் என்றும் சொல்லிவிட்டாள். அதைக் கேட்டதும் மாமியின் முகம் தீய்ந்துபோன தோசையைப் போல் கறுத்துவிட்டதை நான் கவனித்தேன்.
நான் இங்கே வந்து மூன்று றாள் கழித்து கிருஷ்ணனுக்குக் கடிதம் எழுதினேன். ராஜியை அவன் சொன்னது போல் மதுசூதன் வீட்டுக்கு அனுப்பாமல் நேராக எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டதாகவும், அதற்கு அவனுக்கு என் மீது கோபம் வந்தால் தண்டனை கொடுக்கச் சொல்லியும் எழுதினேன். அவன் கொடுக்கப் பொகும் தண்டனை எதுவாக இருந்தாலும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன் என்றும் எழுதினேன்.
என் கடிதம் அவனுக்குக் கிடைத்ததோ இல்லையோ தெரியாது. அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
எங்கள் வீட்டில் ராஜேஸ்வரியின் மீது அம்மா காட்டும் அன்பு நாளுக்கு நாள் கூடுதல் ஆவதைப் பார்க்கும் போது எனக்கு வேடிக்கையாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. ராஜேஸ்வரி இன்னார் என்று தெரிந்த பிறகு அம்மாவின் முகத்தில் மாறும் உணர்ச்சிகளைப் பார்க்க என் மனம் துடித்துக்கொண்டிருந்தது.
அம்மா ஒரு வார்த்தை சொன்னால் சொன்னதுதான். ராஜேஸ்வரியின் திருமணத்தைத் தான் செய்து வைக்கப் போவதாக அம்மா அடிக்கடி எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அம்மா சொன்னது போல் அந்தத் திருமணம் நிச்சயமாகி எங்கள் வீட்டிலேயே அந்த சுபகாரியம் நடைபெற வேண்டும். அப்பொழுதுதான் நான் நினைத்த காரியம் முழுமை பெறும். இந்தத் திருமணம் அம்மாவின் கையால் நடந்தால் அவளுடைய பெருந்தன்மை கிருஷ்ணனுக்கும் புரியும். அம்மாவும் கிருஷ்ணனும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் வாய்ப்பு இந்த நிகழ்ச்சியின் மூலமாக கூடி வரவேண்டும்.
தொடக்கத்தில் ராஜி கூச்சப்பட்டுக் கொண்டு ஒதுங்கியிருந்தாலும் போகப் போக அம்மா காண்பித்த அன்பின் காரணமாக சகஜமாக பழக ஆரம்பித்தாள். அம்மாவிடம் மிக நெருக்கமாக பழகும் ராஜியைப் பார்க்கும் போது அம்மா என்னிடம் காண முடியாத குணங்களை ராஜியிடம் முழுமையாக உணருவது போலவும், அதில் அம்மாவுக்கு ரொம்ப திருப்தி ஏற்பட்டிருப்பது போலவும் தோன்றியது.
ராஜியும் அம்மாவின் தனித்தன்மையினால் ஈர்க்கப்பட்டு விட்டாள். ஒருநாள் நானும் அவளும் மட்டுமே இருக்கும் போது “அண்ணி! மாமி போன்றவர்கள் லட்சத்தில் ஒருத்தர்தான் இருப்பார்கள். அப்படிப்பட்ட நபரை அம்மாவாகக் கொண்டிருக்கும் நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி” என்றாள்.
அம்மாவின் பேச்சில், செயல்களில் இருக்கும் விசேஷமே அதுதான். அவளுடைய நல்ல முகம் மட்டும்தான் வெளியில் தெரியும். மென்மையான குணம் படைத்தவளாக, பண்பு நிறைந்தவளாகத் தென்படும் அம்மாவிடம் தன் விருப்பு வெறுப்புகளை கச்சிதமாக நிறைவேற்றிக் கொள்ளும் சர்வாதிகாரி மறைந்திருப்பதை அப்பாவுக்கும் எனக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
ராஜேஸ்வரி கமலா அத்தையின் மகள் என்று தெரிந்த பிறகு அம்மா என்னை, ராஜேஸ்வரியை எப்படியெல்லாம் திட்டுவாளோ என்னால் சுலபமாகவே ஊகித்துக் கொள்ள முடியும். அதனால் ராஜி யாரென்று தெரியாமலேயே அவள் மீது அம்மாவுக்கு அபரிமிதமான பிரியம் ஏற்படும் விதமாகச் செய்து அம்மாவின் வாய்க்கு முன்கூட்டியே பூட்டு போட்டு விடப் போகிறேன். நான் இன்னார் என்று தெரிந்த பிறகும் கிருஷ்ணனும், அத்தையும் என்னை ஆதரித்தார்கள். அன்பு காட்டினார்கள்.
ஆனால் அம்மா அப்படி நடந்து கொள்வாளா? இன்னும் சொல்லப் போனால் அம்மா அவர்களை எந்த அளவுக்கு வெறுத்தாளோ அதைவிட இருமடங்கு திரஸ்காரம் கிருஷ்ணனுக்கு அம்மாவிடம் இருந்தது. யோசித்துப் பார்க்கும் போது அம்மாவுக்கும், கிருஷ்ணனுக்கும் சுபாவத்தில் நிறைய ஒற்றுமைகள் இருப்பது போல் தோன்றியது. தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற தற்பெருமை அம்மாவுக்கு இருந்தது. மற்றவர்களை முட்டாளாக எண்ணும் பழக்கம் சுபாவத்திலேயே படிந்து போய் விட்டது.
கிருஷ்ணனிடம் அது இல்லை. எதிராளியிடம் ஏதாவது நல்ல குணம் இருந்தால் அதைத்தான் முதலில் காண முயற்சி செய்வான்.
யோசனையில் ஆழ்ந்து போயிருந்த நான் தோளில் கை படிந்ததும் திடுக்கிட்டேன். என் எதிரில் ராஜேஸ்வரி நின்றிருந்தாள். அம்மாவும் ராஜியும் அப்பொழுதுதான் கிளப்பிலிருந்து திரும்பி வந்தார்கள். சமீபகாலமாக ராஜி அம்மாவின் நிழலாகவே மாறி விட்டிருந்தாள்.
“அண்ணி! தனியாக உட்கார்ந்திருக்கிறாயே?” என்றாள்.
“சில சமயம் இப்படித் தனியாக உட்கார்ந்திருப்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும்” என்றேன் முறுவலுடன்.
ராஜேஸ்வரி என் கையைப் பற்றி உலுக்கினாள், “இன்னிக்கு என்ன நடந்தது தெரியுமா?”
ஒரு நிமிடம் அவள் கண்களைக் கூர்ந்து பார்த்தேன். விருப்பமானதேதோ நடந்திருப்பது போல் அவள் கண்கள் மின்னிக் கொண்டிருந்தன.
“ரொம்ப அதிசயமான விஷயம் ஏதோ நடந்திருக்கிறது. சரிதானே” என்றேன்.
“வியாழக்கிழமை அன்று கிளப்பில் நடக்கப் போகும் விழாவில் நான் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப் போவதாக முடிவு செய்யபட்டது. மாமி கிளப்பில் கமிட்டீ மேம்பர்களுக்கு முன்னால் இன்னிக்கு என்னை பாடி காட்டச் சொன்னாள். பாடினேன். எல்லோருக்கும் பிடித்துவிட்டது. இனி கிளப் சார்பில் எப்போ எந்த விழா நடந்தாலும் நான்தான் இறை வணக்கம் பாடணும் என்று எல்லோரும் ஒரு மனதாகச் சொல்லிவிட்டார்கள்.”
அவளுடைய சந்தோஷத்தைப் பார்க்கும் போது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. “உண்மையாகவா?” என்றேன் நம்ப முடியாதது போல் நடித்துக் கொண்டே.
“உண்மைதான். வேண்டுமானால் மாமியிடம் கேட்டுக்கொள்.”
“அம்மா எங்கே?”
“கீழே இருக்கிறாள். உன் வருங்காலக் கணவர் வந்திருக்கிறார். பேசிக்கொண்டிருக்கிறாள். புடவையை மாற்றிக் கொண்டு வருகிறேன்” என்று உள்ளே போனாள்.
எத்தனை முறை வேண்டாம் என்று சொன்னாலும் ராஜி சாரதியை அப்படித்தான் குறிப்பிடுவாள்.
திருநாகம் மாமி மாடிக்கு வந்து “மாப்பிள்ளை வந்திருக்கிறார். அம்மா உங்களைக் கீழே வரச்சொன்னாள்” என்று தகவல் தெரிவித்து விட்டுப் போனாள். ராஜி புடவையை மாற்றிக் கொண்டு வந்தாள்.
“அண்ணி! அண்ணனிடமிருந்த கடிதம் ஏதாவது வந்ததா?”
“வரவில்லை. நானும் அ¨த்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.”
ராஜேஸ்வரியின் முகம் வாடி விட்டது. “அண்ணாவுக்கு என்மீது கோபம் வந்து விட்டதோ என்னவோ. நான் இங்கே சந்தோஷமாக இருக்கிறேன்” என்றாள்.
“ராஜி அந்த வார்த்தையை மனப்பூர்மாகத்தான் சொல்கிறாயா?”
ராஜேஸ்வரி வியப்புடன் பார்த்தாள். “ஏன் அண்ணீ அடிக்கடி இப்படி கேட்கிறாய்? நான் இங்கே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன் தெரியுமா? இங்கே எனக்கு என்ன குறை?”
“நீ இன்னார் என்று அம்மாவிடம் நான் சொல்லாததில் உனக்கு ஏதாவது…”
“அதுவா!” ராஜி என் அருகில் வந்தாள். என் கையை அன்புடன் பற்றிக் கொண்டாள். “அண்ணி! என்னைப் பற்றி மாமியிடம் ஏன் சொல்லவில்லை என்று என்னால் புரிந்து கொள்ள முடியும். நான் யாரென்று தெரிந்தால் மாமி என்னை மதிக்க மாட்டாள். அன்புடன் நடத்தமாட்டாள் என்று பயப்படுகிறாய் இல்லையா? நானும் இரண்டு மூன்று நாட்ளாக இதைப் பற்றி யோசித்துக் கொண்டு இருக்கிறேன். சமயம் பார்த்து மாமியிடம் நானே இந்த விஷயத்தைச் சொல்லி விடுகிறேன். நான் யாரென்று தெரிந்தாலும் மாமி என்னை அன்புடன் நடத்துவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.”
“ராஜி!” நம்ப முடியாதவள் போல் பார்த்தேன்.
எதிராளியை இவ்வளவு நன்றாகப் புரிந்து கொள்ளும் திறமை அவளுக்கு இருக்குமென்று கனவில் கூட நான் நினைக்கவில்லை.
ராஜி மேலும் சொன்னாள். “மாமியைக் கண்டால் அண்ணனுக்கு எதற்காகப் பிடிக்காதோ எனக்குப் புரியவில்லை. காரணம் என்னவென்றும் தெரியாது. ஆனால் மாமியின் விஷயத்தில் அண்ணன் நினைப்பது தவறு என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.”
“ராஜி!” கழுத்தைச் சுற்றிலும் கைகளை பிணைத்து அவளை இறுக அணைத்துக்கொண்டேன். அப்பாவியாக, வாய் வார்த்தையே வராததுபோல் தென்படும் கிராமத்துப் பெண் ராஜிதானா இப்படி பேசுவது? நிறைகுடம் தளும்பாது என்று சொல்லுவார்கள். இதுதான் போலும்.
“அண்ணீ! நீ மறுபடியும் அண்ணாவுக்கு கடிதம் எழுது. நானும் எழுதுகிறேன். இங்கே நான் சந்தோஷமாக, எந்தக் குறையும் இல்லாமல் இருக்கிறேன் என்றும், என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் எழுதுகிறேன்” என்றாள்.
ராஜியும் நானும் கைகளைப் பிணைத்தபடி கீழே இறங்கி வந்தோம். கீழே ஹாலில் சாரதியும், அம்மாவும் இருந்தார்கள். அம்மா முதுகைக் காட்டியபடி உட்கார்ந்திருந்ததால் எங்களுடைய வருகையை கவனிக்கவில்லை. சாரதி பார்த்து விட்டான். அவன் பார்வை ராஜேஸ்வரியின் மீது நிலைத்து விட்டதை நான் கவனிக்காமல் இல்லை. அவனைப் பார்த்ததும் ராஜேஸ்வரி என் கையை மெதுவாக விடுவித்துக் கொண்டாள்.
நான் வந்து சாரதி பக்கத்தில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டேன். அம்மா ஏதோ பேப்பர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ராஜேஸ்வரி அம்மா உட்கார்நதிருக்கும் சோபாவின் பின் பக்கமாக நெருங்கி தாழ்ந்த குரலில் கேட்டாள்.
“டீ கலந்து எடுத்து வரட்டுமா?”
“ஊம்” என்றாள் அம்மா நிமிர்ந்து பார்க்காமலேயே. ராஜேஸ்வரி உள்ளே போய்விட்டாள்.
சாரதி வந்திருக்கும் போது ராஜேஸ்வரி எங்களுடன் சேர்ந்து உட்கார மாட்டாள். அவன் அந்தப் பக்கம் வருகிறான் என்றால் இந்தப் பக்கம் போய்விடுவாள். மின்னல் போல் காட்சி தந்து மாயமாகிவிடும் ராஜேஸ்வரிக்காக சாரதியின் கண்கள் ஆர்வத்துடன் தேடுவது எனக்கு வியப்பாக இருக்கவில்லை.

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்