பச்சை ரிப்பன்

This entry is part [part not set] of 34 in the series 20100926_Issue

ராம்ப்ரசாத்


ம‌ர‌த்தாலான‌ சிறிய‌ டீபாயில், ஒரு சிறிய கோப்பையில் இருந்த தேனீரை யாருடைய முன் அனுமதியுமின்றி ஆற்றிக்கொண்டிருந்தது, மாலை நேரத் தென்றல் காற்று. அந்த ஆறிக்கிட‌ந்த‌ டீக்கோப்பையில் தொடர்ந்திருந்தது 60 வ‌ய‌து ராம‌ச்ச‌ந்திரனின் த‌ளர்ந்த மன நிலையையும், அவரது சிந்தனையை வேறெதோ ஆக்கிரமித்திருந்ததையும். ராமச்சந்திரன் மங்களம் தம்பதிக்கு மூன்று பெண்கள். மூத்தவள் பிரியா அழகானவள், 30 வயதுக்காரி. திருமணமாகி 5 வயது மகளுடன் இருக்கிறாள். பி.காம் படித்தவளானாலும் புகுந்த வீட்டில் வேலை செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டபடியால் வேலைக்குச்செல்லவில்லை. முதல் பெண் திருமணம் என்பதால், ராமச்சந்திரன் செலவு பற்றிப் பார்க்காமல் தடபுடலாய் செய்தார். அதனால் நிறைய பாடங்கள் கற்க நேர்ந்தது.

இந்த திருமணங்கள், ஒவ்வொரு முறையும் புதிதாக பாடங்கள் கற்றுக்கொடுக்கத் தவறுவதே இல்லை. யாரொருவர் அனேக திருமணங்களை நடத்தியிருக்கிறாரோ, அவரிடமிருந்து கற்றுக்கொள்ள அந்த பாடங்கள் இருக்கும். அடுத்தவர் திருமணங்களில் இம்மாதிரியான பாடங்கள் ஒரு வகையில் லாபம், கூடமாட ஒத்தாசை செய்பவருக்கு.

இரண்டாமவள் சந்திரிகா, மூத்தவள் அளவுக்கு அழகில்லை என்றாலும் அடுத்த நிலை அழகு. அவளும் பி.காம் படித்திருந்தாள். வயிற்றுப்பிள்ளைக்காரி. பிரசவம் இப்போதோ அப்போதோ என்றிருக்கிறது. சென்ற வருடம் தான் திருமணம் செய்துவைத்தார். மூத்தவளின் திருமணத்தில் கற்ற பாடங்களில் சற்றே சுதாரிப்புடன் தான் செய்தார் சந்திரிகாவின் திருமணத்தை.

கடைக்குட்டி மஞ்சுளா, சற்றே சுமாரானவள். படிப்பிலும் அத்தனை சுட்டி இல்லை. இருந்தாலும் பெயருக்கு பி.ஏ. படிக்க வைத்தார். அவளுக்கும் மாப்பிள்ளை பார்த்துவிட்டார். மாப்பிள்ளை ஒரு அரசுப்பள்ளியில் ஆசிரியராக வேலையில் இருக்கிறார். திரும‌ண‌ம் அடுத்த‌ மூன்றாவ‌து மாத‌த்தில் ஒரு நாள் ந‌ட‌த்த‌லாம் என்று நிச்ச‌யிக்க‌ப்ப‌ட்ட‌து. ம‌ஞ்சுளா மாப்பிள்ளைப்பைய‌னுட‌ன் தொலைப்பேசி உரையாட‌லில் தொலைந்து போய்விட‌, ம‌ற்ற‌ இர‌ண்டு பெண்க‌ள் அவ‌ர‌வ‌ர் புகுந்த‌ வீட்டிற்கு சென்றுவிட‌, ம‌ங்க‌ள‌மும் ராம‌ச்ச‌ந்திர‌னும் வ‌ழ‌க்க‌ம்போல் க‌டைக்குட்டியின் திரும‌ண‌த்தைத் திட்ட‌மிட‌லில் ஆகும் செலவைக் க‌ண‌க்குப்போட்ட‌தில் வ‌ந்த‌ ஒரு வித‌ ம‌லைப்புதான் அவ‌ரின் த‌ற்போதைய‌ த‌ள‌ர்ந்த‌ ம‌ன‌ நிலைக்குக் கார‌ண‌ம்.

ஏற்க‌ன‌வே ரிடைய‌ர்டு ஆகிவிட்ட‌வ‌ர். வ‌ரும் பென்ஷ‌ன் ப‌ண‌த்தில் தான் வீட்டு வாட‌கையும், ஜீவ‌ன‌மும். சொந்த‌மாக‌ இருந்த‌ நில‌ம் நீச்சைக‌ளை விற்றுத்தான் ம‌ற்ற‌ இர‌ண்டு பெண்க‌ளின் திரும‌ண‌த்தை முடித்தார். க‌டைக்குட்டி ம‌ஞ்சுளாவின் திரும‌ண‌த்தையும் முடித்துவிட்டால் போதும். மீதிக்கால‌த்தை வ‌ரும் பென்ஷ‌னில் ச‌மாளித்துவிட‌லாம். ஆனால், மஞ்சுளா திரும‌ண‌த்திற்குக் குறைந்த‌து மூன்று ல‌ட்சாமாவ‌து தேவைப்ப‌டும். கையில் ஒரு லட்சம் தான் இருக்கிறது. ச‌ந்திரிகாவின் திரும‌ண‌த்தில் மாப்பிள்ளை வீட்டார் பாதித் திரும‌ண‌ செல‌வை ஏற்றுக்கொண்டாலும், வ‌ர‌த‌ட்ச‌ணையாக 4 ல‌ட்சம் பெறுமானமுள்ள நகை கேட்ட‌ன‌ர் என்றுதான் ஊரிலிருந்த‌ சொந்த‌ நில‌த்தை விற்று நகையாக 35 சவரன் போட்டு திரும‌ண‌ம் முடித்தார்.

இப்போது ம‌ஞ்சுளாவிற்கும் அதே நிலைதான். ப‌ண‌த்திற்கு என்ன‌ செய்வ‌து என்று 2 நாட்க‌ளாக‌ யோசித்து யோசித்து கிறுகிறுத்து போனது ராமச்சந்திரனுக்கும், மங்கல‌த்திற்கும். ஒரு மாற்றம் தேவை என்கிற காரணத்தாலும், பிள்ளைதாய்ச்சிக்காரி சந்திரிகாவைப் பார்த்தும் சில நாட்களாகிப்போய்விட்டதாலும், அவளைப் பார்க்க தம்பதிகள் இருவரும் புறப்பட்டனர். சந்திரிகாவின் வீடு அடுத்த 15வது கிலோமீட்டரில் தான் உள்ளது. பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆட்டோ பிடித்து அவள் வீடு சென்றனர் தம்பதிகள். வழக்கமான உபசரிப்புகளுடன் தொடங்கியது விருந்தோம்பல், பின் அதைத் தொடர்ந்த உரையாடல் பேச்சுக்களில் மஞ்சுளாவின் திருமணம் தொடர்பான பேச்சுக்கள் மீதான ஆர்வம் சந்திரிகாவின் மாமியார், மாமனார், மாப்பிள்ளை தரப்பிலிருந்து வராதது கண்டு எதையோ உணர்ந்தவராய், பெட்ரூமில் மகளுடன் பேசிக்கொண்டிருந்த மங்கலத்தைக் கிளம்பும்படி சமிஞ்கை செய்தார் ராமச்சந்திரன். சந்திரிகாவின் புகுந்த வீட்டினர், மஞ்சுளாவின் திருமணத்திற்கு எங்கே தங்களிடம் பணம் கேட்டுவிடுவாரோ என்று நினைத்திருக்கலாம் என்றே நினைத்திருந்தார் ராமச்சந்திரன்.

புறப்படும் முன் குங்குமம் எடுக்க பீரோவை சந்திரிகா திறந்து மூடியதில், சந்திரிகாவின் பள்ளிப்பருவ பச்சை ரிப்பனில் சந்திரிகாவிற்கு போட்ட 35 சவரன் நகைகள் ஒன்றாக முடிந்து கிடந்தது தெரிந்தது. மஞ்சுளாவிற்கும் அதே போன்று செய்து போட வேண்டும். விந்தை உலகம். யாருக்கும் பயணில்லாமல் 35 சவரன் தங்கம் பீரோவில் உறங்குகிறது. ஆனாலும் இதற்குத்தான் மீண்டும் ஓட வேண்டியிருக்கிறது இந்த வயதான காலத்தில். ராமச்சந்திரன் நினைத்துக்கொண்டார். அலுத்துக்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். தம்பதிகள் தங்கள் வீடு திரும்பினர்.

நாளை மீதான பயம், என்ன நடக்குமோ என்பதில் இருக்கும் ஒரு தெரியாத தன்மை, எக்குதப்பாக ஏதாவது நடந்துவிட்டால் தன்மானத்தையும், சுயகவுரவத்தையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம், அதற்குத் தேவை செல்வம், இந்த எண்ணமே செல்வத்தைப் பதுக்குவதில் முடிகிறது. மனிதன் எப்போது மனிதத்தின் மேல் நம்பிக்கை வைக்க மறந்தானோ, மனிதத்தை புரிந்து கொள்ள மறந்தானோ, இயற்கை இதுதான் என்றும், இயற்கையை இப்படித்தான் கையாளவேண்டும் என்று தான் நினைத்த தவறான ஒன்றை ஆணித்தரமாக நம்பத்தொடங்கினானோ அப்போதுதான் தொடங்கியிருக்க வேண்டும் இது போன்ற முகமூடித்தனங்கள்.

மறு நாள், வரவு செலவுக் கணக்குத்தீர்க்க தன் முந்தை வருட கையேட்டை புரட்டிக்கொண்டிருந்த போது ராமச்சந்திரனின் கண்ணில் பட்டது அந்த விசிட்டிங் கார்டு. அது 5 வருடம் முன்பு தான் வேலையில் இருந்த போது, ஒரு நாள், விப‌த்தில் சிக்கிக்கொண்ட‌ ஒருவ‌ரை ம‌ருத்துவ‌ம‌னைக்கு கொண்டு சென்று காப்பாற்றிய‌த‌ற்காக‌, அந்த‌ ந‌ப‌ர் ‘என்ன‌ உத‌வியானாலும் தொட‌ர்பு கொள்ளுங்க‌ள்’ என்று த‌ந்த‌ அவ‌ரின் கார்டு. அவர் பெயர் கூட உசைன். ராம‌ச்ச‌ந்திர‌ன் கிட்ட‌த்த‌ட்ட‌ அதை ம‌ற‌ந்தே போயிருந்தார். இப்போது நினைவுக்கு வ‌ந்த‌து. அவ‌ர் சொந்த‌மாக ஏதோ வைத்திருந்து வாட‌கைக்கு விடுவ‌தாக‌ சொன்ன‌து நினைவுக்கு வ‌ந்த‌து. என்ன‌ வைத்திருந்தார் என்று நினைவில் இல்லை. ஒரு வேளை அது திரும‌ண‌ ம‌ண்ட‌ப‌மாக‌ இருந்தால் ம‌ண்ட‌ப‌ செல‌வு குறையுமே என்று தோன்றிய‌து ராம‌ச்ச‌ந்திர‌னுக்கு. ஏன் குழ‌ப்ப‌ம். ஒரு எட்டு போய் பார்த்துவிட்டுத்தான் வ‌ருவோமே என்று கிள‌ம்பினார் அந்த‌ முக‌வ‌ரிக்கு.

அந்த‌ முக‌வ‌ரி உசைனின் வீடு. உசைனுக்கு ந‌ன்றாக‌ நினைவில் இருந்த‌து. ராம‌ச்சந்திர‌னைப் பார்த்த‌தும் க‌ண்டுகொண்டார். கைப்ப‌ற்றி வ‌ர‌வேற்று அம‌ர‌வைத்து, குடுப்ப‌த்தினர் அனைவ‌ரையும் அறிமுக‌ப்ப‌டுத்தினார். மிக‌வும் நெகிழ்ந்தார். ராம‌ச்ச‌ந்திர‌ன் த‌ன்னை காப்பாற்றியிராவிட்டால் தானே இல்லை என்ப‌துபோல் பேசினார். பேச்சுக்க‌ள் வெகு நேர‌ம் தொட‌ர்ந்த‌து. ம‌ஞ்சுளாவின் திரும‌ண‌ம் ப‌ற்றி பேசினார். பேச்சு வாக்கில், உசைன் வைத்திருப்ப‌து ஒரு ஷாப்பிங் காம்பிள‌க்ஸ் என்ற‌றிந்த‌து ச‌ற்றே ஏமாற்ற‌ம‌ளித்த‌து. ம‌ஞ்சுளாவின் திரும‌ண‌ம் ப‌ற்றி அறிந்த‌ உசைன் தானே உத‌வுவ‌தாக‌வும், த‌ன்னைக்காப்பாற்றிய‌த‌ற்கு கைமாறாக‌ செய்ய‌ நினைப்ப‌தாக‌வும் சொன்னார். ஒரு வார‌த்தில் 35 ச‌வ‌ர‌னுக்கான‌ ப‌ண‌த்தை த‌ருவ‌தாக‌ வாக்க‌ளித்தார் உசைன். ராம‌ச்ச‌ந்திர‌ன் நெகிழ்ந்தே போனார்.

ஒரு வார‌ம் க‌ட‌ந்த‌து. தன் வீட்டில் வைத்து 4 ல‌ட்ச‌ம் ரூபாயை ராமச்சந்திரனுக்கு அளித்தார் உசைன். திருப்பித்த‌ர‌ வேண்டிய‌தில்லை என‌வும், ம‌ஞ்சுளா த‌ன‌க்கும் ம‌க‌ள் தானென்றும் ம‌ஞ்சுளா திருமணத்தில் குடும்ப சகிதம் சந்திப்பதாகவும், திருமணத்திற்கான வேலைகளை மேற்கொண்டு கவனிக்கும்படியும் சொல்லிய‌னுப்பினார். ராம‌ச்ச‌ந்திர‌ன் ப‌ஸ்ஸில் வீடு திரும்புகையில் ம‌ழை ச்சோவென‌ பெய்ய‌த்தொட‌ங்கியிருந்த‌து. ராம‌ச்ச‌ந்திர‌னுக்கு ஏனோ அன்றைய‌ ம‌ழை உசைனின் நிமித்த‌ம் பெய்கிற‌தோ என்று ப‌ட்ட‌து.

வீடு நுழைந்த‌தும் ச‌ந்திரிகாவின் அழும் குர‌ல் ச‌ன்ன‌மாக‌ கேட்டுக்கொண்டிருந்த‌து. ச‌ந்திரிகாவின் வீட்டுல் எல்லோரும் ஒரு திரும‌ண‌த்திற்கு சென்றிருந்த‌ போது பீரோ புல்லிங் கும்ப‌லால் அவ‌ள் பீரோவில் இருந்த‌ 35 ச‌வ‌ர‌ன் ந‌கை திருடு போயிருந்த‌தை அழுகையுட‌ன் ச‌ந்திரிகா விள‌க்கிக்கொண்டிருக்க‌ ம‌ங்க‌ள‌மும், ம‌ஞ்சுளாவும் தேற்றிக்கொண்டிருந்த‌ன‌ர். அங்கே உசைன் த‌ன் ரூமில் தொலைப்பேசியில் க‌ட்ட‌ளையிட்டுக்கொண்டிருந்தார்.

‘ஃப‌ர்ஹான், கோட‌ப்பாக்க‌த்துல‌ ஒரு வீடு ஒரு 10 நாளா பூட்டியே கிட‌க்கு. நான் விசாரிச்சிட்டேன். பெரிய பணக்காரன் வீடுதான் அது. நீ கை வ‌ச்சிடு. எல்லா ப‌ண‌மும் ஒரே இட‌த்துல‌ குவிஞ்சிட்டா அப்புற‌ம் ம‌த்த‌வ‌ங்க‌ எப்ப‌டி வாழ‌ற‌து. நீ கை வ‌ச்சிடு. எவ்ளோ ந‌கைன்னு சொல்லு. நான் சேட்கிட்ட‌ பேச‌னும்’.

அவ‌ருக்குப் பின்னால், திற‌ந்திருந்த‌ பீரோவில், ஒரு ப‌ச்சை ரிப்ப‌ன் காற்றில் தொங்கவிடப்பட்டு ஆடிக்கொண்டிருந்த‌து.

– ‍ ராம்ப்ரசாத், சென்னை (ramprasath.ram@googlemail.com)

Series Navigation

ராம்ப்ரசாத்

ராம்ப்ரசாத்