முள்பாதை 46

This entry is part [part not set] of 37 in the series 20100912_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

மாலையாகும்போது வீடு முழுவதும் நிசப்தமாகிவிட்டது. சிரிப்பும், கும்மாளமும் நிரம்பியிருக்க வேண்டிய அந்த இடம் மனிதர்களே இல்லாதது போல் சந்தடியற்று இருந்தது.
நான் போய் கொல்லைப்புறம் அமர்ந்து கொண்டேன். என் வருகை இந்த வீட்டுக்கு நல்லது இல்லையோ என்ற சந்தேகம் என்னை அலைக்கழித்தது. நல்லது செய்ய வேண்டுமென்று கிளம்பிவந்தால் என்னால் இவர்களுக்கு நடந்தது என்ன? நான் வராமலேயே இருந்திருக்கணும். வந்தாலும் தஞ்சாவூரில் கிருஷ்ணனை சந்தித்துப் பேசிவிட்டு அப்படியே திரும்பி ஊருக்குப் போயிருக்கணும்.
அத்தையிடம் போன போது என்னைப் பார்க்க விருப்பம் இல்லாதது போல் பார்வையைத் திருப்பிக் கொண்டாள். என்னால் அவள் மனம் எவ்வளவு காயப்பட்டிருக்குமோ புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை. இங்கிருந்து நான் போக வேண்டும் என்றால் கிருஷ்ணன் வரவேண்டும். அதுவரையில் நான் இருந்தாக வேண்டும். தரையில் விழுந்த மீன் போல் என் மனம் தவித்துக் கொண்டிருந்தது.
கொல்லைத் திண்ணையில் அமர்ந்து கன்னத்தில் கையை வைத்தபடி ரோம்ப ரேநம் யோசித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று தோளில் யாருடைய கையோ பதிந்ததும் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். பக்கத்தில் ராஜி நின்று கொண்டிருந்தாள். அவள் நெற்றியில் காலையில் நான் இட்டுவிட்ட திலகம், கன்னத்தில் திருஷ்டி பொட்டும் இன்னும் அப்படியே இருந்தன. அழுது அழுது முகமும், கண்களும் உப்பியிருந்தன.
“அண்ணீ! இங்கே உட்கார்ந்திருக்கிறாயோ? உள்ளே வா” என்றாள்.
நான் இமைகளை உயர்த்தி நேராக அவள் முகத்தைப் பார்த்தேன். அந்த முகத்தில் எந்த மாற்றமும் இருக்கவில்லை. அந்தக் கண்களில் கொஞ்சம் கூட என்பால் கோபம் தென்படவில்லை. என் இதயத்திலிருந்து பெரிய பாரம் நீங்கியது போல் இருந்தது.
“ராஜீ!” என்றேன்.
“உள்ளே வா. அம்மாவுக்கு பிட்ஸ் வந்திருக்கு. அம்மாவிடம் யாரும் இல்லை. அங்கே போய் உட்கார்ந்து கொள்வோம்” என்றாள்.
ராஜியின் கையைப் பிடித்துக் கொண்டே உள்ளே போனேன். அத்தை பாயின் மீது படுத்திருந்தாள். சற்று தொலைவில் சின்ன தாத்தா டிரங்க் பெட்டியின் மீது அமர்ந்திருந்தார். ராஜி போய் தாயின் அருகில் அமர்ந்து கொண்டாள். நான் கால்மாட்டில் உட்கார்ந்து கொண்டேன்.
அத்தை அழுது கொண்டிருந்தாள். அந்த அழுகை மெல்லிய சங்கிலியாக மாறி என் இதயத்தை இறுக்குவது போல் இருந்தது. அத்தையின் துக்கத்தை என்னால் தீர்க்க முடியாதா? இதற்கெல்லாம் காரணம் நான்தான் என்பதால் இந்தப் பிரச்னையை நான்தான் தீர்க்க வேண்டும். “அத்தை! கவலைப்படாதீங்க. பிரச்னையை நான் தீர்த்து வைக்கிறேன்” என்று சொல்லி அத்தைக்கு மனநிம்மதி தரும் நாள் என்றாவது வருமா?
இரவு ரொம்ப நேரமாகிவிட்டது. சாமிகண்ணு ஆட்களை அழைத்து வந்து வீட்டை ஒழுங்குபடுத்தி விட்டுப் போய்விட்டான். எத்தனையோ கோலாகலமாக நடக்க வேண்டிய திருமணம் சண்டை சச்சரவு வந்து நின்று போனதும் குழந்தைகள் முகத்தைத் தொங்க போட்டுக் கொண்டு சீக்கிரமாகவே உறங்கி விட்டார்கள். அத்தைக்கு விழிப்பு வந்தாலும் எழுந்து கொள்ளாமல் அப்படியே படுத்திருந்தாள். ராஜி சமையலறையில் ஹார்லிக்ஸ் கலந்து கொண்டிருந்தாள். நானும் உதவி செய்தேன். ராஜி தாயை வலுக்கட்டாயமாக ஹார்லிக்ஸ் குடிக்கச் செய்தாள்.
தாத்தாவும் படுத்துக் கொண்டுவிட்டார். ராஜி களைத்துப் போய்விட்டவள் போல் தாயின் பக்கத்தில் ஒரு ஓரமாக படுத்துக் கொண்டாள். அவள் கண்களில் நீர் நிரம்பியிருந்ததை நான் கவனிக்காமல் இல்லை.
முன் அறையில் பாயின் மீது குழந்தைகளுடன் படுத்துக் கொண்டிருந்த நான் தூக்கம் வராததால் எழுந்து கொல்லைப்புறம் வந்தேன். நிலவின் வெளிச்சம் மங்கலாக இருந்தது. கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் தவிர எங்கே எந்த பொருள் இருக்கிறதென்று தெரியவில்லை. சற்று நேரம் திண்ணை மீது உட்கார்ந்து கொள்வோம் என்று ஒரு அடி முன்னால் வைத்தவள் அப்படியே நின்றுவிட்டேன்.
எதிரே எப்போதும் சின்னதாத்தா அமர்ந்திருக்கும் சாய்வு நாற்காலியில் கிருஷ்ணன் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தான். அவன் விழித்துக் கொண்டு இருக்கிறானோ இல்லை தூங்கிக் கொண்டிருந்தானோ அல்லது ஆழ்ந்த யோசனையில்தான் இருந்தானோ தெரியாது. என் வருகையை உணரவில்லை.
கண்கள் மீது கையை பதித்து சாய்ந்தவாக்கில் அமர்ந்திருந்தான். அவன் வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறா§¡? எவ்வளவு பாவி நான்! ஒரே சமயத்தில் இத்தனை பேரில் மனதிற்கு துக்கத்தை ஏற்படுத்திவிட்டேன்.
நான் வந்ததே அவனுக்குத் தெரியாதபடி திரும்பிப் போய் விடலாமா என்று கூட நினைத்தேன். திரும்பியும் விட்டேன். ஆனால் என் மனம் ஒப்பவில்லை. என்னையும் அறியாமல் என் கால்கள் என்னை அவன் அருகில் கொண்டு போய் சேர்த்தன.
சுய உணர்வு இல்லாதவன் போல் படுத்திருந்தவனை பார்த்துக் கொண்டு ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டேன்.
அவன் பால் எனக்கு இருக்கும் நட்பு. நெருக்கம், அன்பு எல்லாமாக சேர்ந்து என்னை முழ்கடித்துவிட்டன. என்னையும் அறியாமல் என் கையை அவன் தலைமீது வைத்தேன். எவ்வளவு சுயநினைவு இல்லாமல் இருந்தானோ, தூக்கிவாரி போட்டதுபோல் அவன் திடுக்கிட்டதிலிருந்து எனக்குப் புரிந்தது
சட்டென்று கண்களைத் திறந்தவன் என்னைப் பார்த்து “நீயா!” என்றான். அவன் முகத்தில் வேதனை தென்பட்டது.
நான் பதில் பேசவில்லை.
“நீ இன்னும் தூங்கவில்லையா?” என்று கேட்டான்.
அதற்கும் நான் பதில் சொல்லவில்லை. கிருஷ்ணன் மெதுவாக தலைமீது இருந்த என் கையை விலக்கினான்.
அவனிடம் ஏதோ சொல்ல வேண்டும் போல் இருந்தது. தொண்டை குழியில் சிக்கிக்கொண்டது போல் ஒரு வார்த்தையும் வெளி வரவில்லை. தலை குனிந்தபடி புடவைத் தலைப்பபை விரலால் நீவி விட்டுக் கொண்ருந்தேன். நடந்ததை நினைத்து நான் எவ்வளவு வேதனைப்படுகிறேனோ நான் சொன்னாமலேயே அவன் புரிந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
கிருஷ்ணன் தலைக்குக் கீழே இரு கைகளையும் கோர்த்துக் கொண்டு என்னையே பார்த்தான். பிறகு கேட்டான். “நீ எப்போ கிளம்புகிறாய்?”
“நீ எப்போ கிளம்பச் சொல்கிறாயோ அப்போ.”
கிருஷ்ணன் பதில் சொல்லவில்லை. அவன் பார்வை என்மீது நிலைத்திருந்தாலும் நினைவு வேறு எங்கேயோ இருப்பது புரிந்தது.
“நேற்றே நீ என்னை அனுப்பியிருந்தால் பிரச்னை இவ்வளவு தூரத்திற்கு வந்திருக்காது. உன் பேச்சைக் கேட்காமல் நானே ஊருக்கு கிளம்பியிருந்தாலும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அதன் விளைவு இப்படி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. என் வருகை உங்க எல்லோருக்கும் இவ்வளவு வேதனையை ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்தால் இங்கே வந்திருக்கவே மாட்டேன். தஞ்சாவூரிலிருந்து அப்படியே திரும்பிப் போயிருப்பேன்.”
கிருஷ்ணன் மௌனமாக என் விளக்கத்தை கேட்டுக் கொண்டிருந்தான். காலை முதல் உள்ளூர நான் அனுபவித்துக்கொண்டிருந்த வேதனையை வெளியில் சொல்லிவிட்டேன்.
“உண்மையாகவே சொல்கிறேன். நான் இங்கே வந்ததே தவறு. வந்தாலும் சுந்தரி இங்கே இருக்கும் போது உன்னிடம் அப்படி உரிமையுடன் பழகியது முட்டாள்தனம். நான் இங்கிருந்து போய் விட்டாலும் என் மனம் அமைதியாக இருக்காது. என் காரணமாக இந்தத் திருமணம் நின்றுவிட்டதென்ற வருத்தம் என்னை துரத்திக் கொண்டே இருக்கும். அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிந்தால் எவ்வளவு வருத்தப்படுவாரோ, என்னை எப்படி கோபித்துக் கொள்வாரோ உனக்குத் தெரியாது.”
“மாமாவுக்கு இந்த விஷயம் தெரியவேண்டிய அவசியம் என்ன இருக்கு?” சாதாரணமான குரலில் சொன்னான்.
“தெரியாமல் எப்படி இருக்கும்?”
“சரி, இதற்கெல்லாம் நீ ஒருத்திதான் பொறுப்பாளி இல்லை. எனக்கும் இதில் பங்கு இருப்பதாக மாமாவிடம் சொல்லு.”
தலையை குறுக்காக அசைத்தேன். “ஊஹ¤ம். உனக்கு எந்த பங்கும் இல்லை. நான்தான் வேண்டாத பேச்செல்லாம் பேசி உன்னை தூண்டிவிட்டேன். நான் செய்த தவறுக்கு உனக்கு தண்டனை கொடுப்பது நியாயம் இல்லை. எனக்குத் தெரியும், நான் பாட்டுக்குக் கிளம்பி ஊருக்கு போய்விடுவேன். இந்த அவமானத்திலிருந்து வெளியேறுவதற்கு உங்களுக்கு எவ்வளவு நாட்கள் ஆகுமோ? எவ்வளவு சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ?”
“நீ அப்படி எல்லாம் நினைக்கத் தேவையில்லை. எது எப்படி நடக்கணும் என்று எழுதியிருக்கிறதோ அப்படித்தான் நடக்கும். இன்னார்தான் அதற்குக் காரணம் என்று நினைப்பது வெறும் பிரமை.”
எனக்கு ஏனோ அவனை நெருங்கி ஆறுதல் சொல்ல வேண்டும் என்றும், நட்பாகப் பேசி அவன் களைப்பைப் போக்கடிக்க வேண்டும் என்றும் தோன்றியது. ஆனால் பாஷாணமாக அவனிடம் தென்பட்ட கம்பீரம் என்னை தொலைவிலேயே நிற்க வைத்துவிட்டது. இருவரும் மௌனமாக ரொம்ப நேரம் அப்படியே இருந்துவிட்டோம். என் மூளை சுறுசுறுப்பாக ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தது.
சற்று நேரம் கழித்து கிருஷ்ணன் சொன்னான். “போய் படுத்துக்கொள் மீனா.”
“நீ எனக்கு ஒரு வாக்குக் கொடுக்கணும்” திடீரென்று நிமிர்ந்து பார்த்துக் கொண்டே சொன்னேன்.
“என்ன அது?”
“முதலில் நான் கேட்கப் போவதை நிறைவேற்றி வைக்கிறேன் என்று சொல்லு.”
“அது உனக்கும் எனக்கும் இடைஞ்சல் ஏற்படுத்தாது என்றால் சரி.”
“ராஜியை என்னுடன் அழைத்துப் போகிறேன். அப்பாவிடம் எல்லாம் சொல்லி விடுகிறேன். என்னால்தான் அவள் கல்யாணம் தடைபட்டு விட்டது. இதைவிட நல்ல வரனாகப் பார்த்து அவள் கல்யாணத்தை முடித்து வைக்கிறேன்.”
களைப்பாக இருந்த அவன் முகத்தில் முறுவல் மலர்ந்தது. “சரிதான்!” என்றான்.
“இலலை. நான் சீரியஸாகத்தான் சொல்கிறேன். நீ அவளை அனுப்பும் வரையில் நான் இங்கிருந்து போக மாட்டேன்.” அடம் பிடிப்பது போல் சொன்னேன்.
“போகட்டும். ராஜியின் திருமணம் முடியும் வரையில் இங்கேயே தங்கிவிடு.” அவன் கண்களில் குறும்பு எட்டிப் பார்த்தது.
“ஊஹ¤ம். விளையாட்டுக்காக சொல்லவில்லை. உன் தங்கையை உயிருக்கும் மேலாக பார்த்துக் கொள்கிறேன். எங்க வீட்டில் அவளுக்கு எந்த குறையும் வர விடமாட்டேன். இந்த விஷயத்தில் மறுப்பு சொல்லாதே.”
கிருஷ்ணன் என்னை வித்தியாசமாக பார்த்தான். “தயவு செய்து பிடிவாதம் பிடிக்காதே. இப்போ நடந்ததை விட இன்னும் பெரிய சங்கடத்தில் என்னை மாட்ட வைத்தவள் ஆவாய்.”
ஒரு அடி முன் வைத்து அவன் கையை என் கையில் எடுத்துக் கொண்டேன். “ஒரு விஷயம் கேட்கிறேன். உண்மையைச் சொல்லு. நான் உனக்கு நெருக்கமானவள். உண்டா இல்லையா?”
“அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லையே?”
“ஏன் இல்லை. நிச்சயமாக இருக்கு. நான் இப்படி கேட்பது உனக்காகவோ, ராஜிக்காகவோ இல்லை. எனக்காக, என்னுடைய திருப்திக்காக. வேண்டுமானால் சீக்கிரமாக அனுப்பி வைக்கிறேன். என் பேச்சை தட்டாதே. மாட்டேன்னு சொன்னால் என்ன செய்வேன் தெரியுமா?”
கிருஷ்ணன் என் பக்கம் கேள்விக்குறியுடன் பார்த்தான்.
“நீ சொன்னதை உண்மையாக்கிவிடுவேன். இங்கே இருந்து கொண்டே ராஜியின் திருமணத்திற்கு முயற்சி செய்வேன். அவள் திருமணம் முடியும் வரையில் இங்கிருந்து நகரவே மாட்டேன். அம்மா அப்பா என்ன சொன்னாலும் சரி. இப்போ சொல்லு. நான் கேட்டது போல் ராஜியை என்னுடன் அனுப்பி வைக்கிறாயா? இல்லை என்னை இங்கேயே இருந்துவிடச் சொல்கிறாயா?”
கிருஷ்ணன் சிரித்தான். அழகான பல்வரிசை மங்கலான வெளிச்சத்தில் பளீரென்று மின்னியது.
“நல்ல ஆள்தான் போ. உண்மையிலேயே எனக்கு மூக்கணாங்கயிறு போடப் பார்க்கிறாய்.”
ஏறத்தாழ ஒரு மணிநேரம் விடாமல் பேசி, கோபித்துக்கொண்டு, கடைசியில் எப்படியோ ராஜேஸ்வரியை என்னுடன் அழைத்துப் போவதற்கு அவனிடமிருந்து சம்மதம் வாங்கிவிட்டேன்.
அவன் சிரிப்பைப் பார்த்த பிறகுதான் எனக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. காலை முதல் என் மனதை பாறாங்கல்லாக அழுத்தி கொண்டிருந்த குற்ற உணர்வு நீங்கிவிட்டது.

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்