தண்ணீர் குளூக்கோஸ் மற்றும் ஜுஸ்

This entry is part [part not set] of 35 in the series 20100905_Issue

எஸ் சங்கரநாராயணன்


எப்படியும் நேற்றிரவு அப்பா இறந்து விடுவார் என அவன் எதிர்பார்த்தான். அப்பாவுக்கு மூச்சுத் திணறியது. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு படுக்கையில் அப்பா திண்டாடினார். திக்குமுக்காடினார். தவித்தார். கண்ணுக்குள் வலி அம்புகள் சொருகின. இடுக்கிக்குள் பிடிபட்ட பாம்பைப் போல அப்பா உடம்பை முறுக்கினார்.

ஆயிற்று. செத்துப்போகிற வேளை வந்துவிட்டது, என்று சபாபதி நினைத்துக் கொண்டான். அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தான். இராத்திரி முச்சூடும் அவன் தூங்கவில்லை. சாகப் போகிறவர்கள் ஏனோ தண்ணீர் வாங்கிக் குடிக்கிறார்கள். இருக்கிற தண்ணிக் கஷ்டத்தில் – திடீரென்று தண்ணீய் எனச் சத்தம் வரக் கூடும். கூட அப்போது இருப்பது ஒரு மகனாக அவனது கடமை. மனைவியும் முழித்துக் கொண்டிருந்தாள். ”வேண்டாம். போய்ப்படு” என்று சொல்லி விட்டான்.

வேணுன்னா உங்கய்யா பக்கத்துல போய் உக்காந்துக்கோ… (அவரு வேற தண்ணி கேப்பாரு!)

கொஞ்சநேரத்தில் அவள் குறட்டை கேட்க ஆரம்பித்தது. பின்கட்டு முள்வெளிப் பன்றி உள்ளே வந்து விட்டாப் போலிருந்தது. அப்பா பயந்துறாதே.

போய் அப்பாவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். அப்பா திணறிப் பாய்ந்து அவனைப் பிடித்துக் கொண்டார். அவர் உடம்பு கிடுகிடுவென்று நடுங்கியது. (தண்ணீர் தயாராய் வைத்திருந்தான்.) ”ஒண்ணுமில்லப்பா.” ஒரு புன்னகையுடன் அதைச் சொல்ல விரும்பினான். புன்னகைக்க அவனால் முடியவில்லை. அவன் கன்னங்கள் துடித்தன.

”நெஞ்சு வலிக்கறதுடா…”

”ஒத்துக்காத ஐட்டம் எதாவது சாப்பிட்டீங்களா?”

அவரது நெஞ்சைத் தடவிவிட்டான். உள்ளங்கையில் ஐஸ்குச்சி எலும்புகள் உறுத்தின. ஒரு சின்னக் குழந்தைபோல் அப்பா அழுவதாகப் பட்டது. உயிரெழுத்து அழுகை. ஊ என்றால் அழுகை.

அப்பா அவன்-குழந்தையாக மாறி விட்டாப்போல… அதற்காக ஒரு மொத்து மொத்தவா முடியும்?

”பார்வதி, வேணா வெந்நீர் போட்டு எடுத்துண்டு வரியா?”

உர்ர்… என்றாள் பார்வதி உறுமலாய். சரி, என்கிறாளா, குறட்டைதானா தெரியவில்லை… மருமக புண்ணியம் பண்ணியிருந்தாதான் மாமியா மாமனார் படுக்கைல நோகாமச் சாவா, என்பது பழமொழி.

அப்பா குப்புறப் படுத்துக் கொண்டார். ”ஏண்டா, தத்- தர்மாஸ்பத்திரிலயாச்சும் எ… என்னச் சேத்துரேன்?”

”அங்கெல்லாம் சரியா கவனிக்க மாட்டாங்கப்பா…”

ஆளைப் பார் மூஞ்சியும் மொகரையும்… (சனி, என்னை மாதிரியே…) மவனே நீ சரியாக் கவனிச்சிக்கிட்டா, நான் ஏண்டா தர்மாஸ்பத்திரி தேடறேன்…

தர்மாஸ்பத்திரி… ஆட்டோவில்தான் போக வேண்டும். தர்ம ஆட்டோ கிடைக்காது. பிரசவத்துக்கு மட்டுந்தான் இலவசம். வயிற்றுவலி என்றால்கூட, கிடையாது… பிரசவம் கூட போன ஜோரில் ஆகவில்லை யென்றால் காசு கேட்பார்களாக இருக்கும்…

அட பிரசவத்துக்கும் வயித்து வலிக்கும் முன்ன பின்ன வித்தியாசம்… அதனால் என்ன?

ஐயா வீட்டுக்குள்ளவே வளையவர முடியாமல் அவரே வளைஞ்சிட்டார். எப்படிக் கூட்டிச் செல்ல முடியும்? ஆட்டோ குலுக்கலில் எலும்புக் குவியலாய்த்தான் போய்ச் சேருவார்.

பரிசுச்சீட்டுக் கடைக்காரனிடம் கேட்டான் ஆட்டோ டிரைவர் – குலுக்கல் எப்போ?

தெருவில் யாராவது உண்டியல் குலுக்கினாலே ஐயாவுக்கு வலிக்கிறாப் போலிருந்தது.

பிறகு அப்பா பேசவில்லை. குடும்ப நிலைமை அவருக்குத் தெரியாததல்ல. நாலு மாசமாயிற்று. கம்பெனி லாகவ்ட். பேச்சுவார்த்தை இல்லாமல் பிரச்சனை அப்படியே நிற்கிறது. திரிசங்கு நிலை – அதும் சொர்க்கமா நரகமா தெரியாத நிலை. கம்பெனி மூடிக் கிடப்பதில் ‘வீட்டிலேயே’ பேச்சுவார்த்தை சரியாக இல்லை.

சபாபதிகூட எல்லாருடனும் போய் உண்ணாவிரதத்தில் உட்கார்ந்துவிட்டு வந்தான். முடிந்தவுடன் ஜுஸ் கொடுப்பார்கள், கல்யாணத்தில் தாலி கட்டினாப் போல. நிர்வாகத்தோடு ஒத்துப்போனால், தாலி கட்டினாப் போலத்தானே…

யாரோ தோழன் ஆக்ரோஷமாய் மைக்கில் பேசினான். பேச்சுவார்த்தைக்கு அழை, என மிரட்டவா முடியும், என்றிருந்தது. தவிர அவனது ஆவேசம் பார்த்தால் உண்ணாவிரதக்காரன் என்றே நம்ப முடியவில்லை. அதிகாலையிலேயே சாப்பிட்டு விட்டானோ?… குறைந்தபட்சம் லாகிரி வஸ்து? – சட்டென்று நினைவு கலைந்து சபாபதி எல்லோருடனும் கைதட்டினான். அடுத்து ஜுஸ்.

நன்றி தெரிவிக்கு முன் எல்லா மக்களும் எழுந்து போயாச் – மைக்செட் காரனைத் தவிர. தோழன் தனியே வந்து அவனுக்கு நன்றி தெரிவித்தான்! – நீதான் உண்மையான தொண்டன். (நன்றி அறிவிப்பு இல்லன்னா, நானே போயிருப்பேன்!)

பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை. முதலாளி சாதாரணமாகவே ஹியரிங் எய்ட் பார்ட்டி…. இன்னும் எத்தனைச் சத்தமாய் மைக் வைப்பது? எங்க காதப் பாத்துக்கண்டாமா?… அடுத்தகட்ட நடவடிக்கை, என்று கோஷமிட்டபடி பிரதான சாலைகளில் ஊர்வலத்துடன் போய்வந்தான். கம்பெனிக்கு எதிர் திசையில் ஊர்வலம் போனார்கள். பேச்சுவார்த்தைக்கு எப்படிக் கூப்பிடுவார்கள்? கைதட்டிக் கூப்பிடக் கூடும். எதிரே சித்தப்பா வந்தபோது, கூச்சத்துடன் கையைத் தளர்த்திக்கொண்டு, வேறுபக்கம் பார்த்தபடி போனான்.

இன்குலாப்!

ஜிந்தாபாத்!
ஒர்க்கர்ஸ் யூனியன்!

ஜிந்தாபாத்!

யாருக்குல்லாம் சம்பளம் அதிகம் வேணும் கைதூக்குங்க! –

ஐய வேட்டி சரியாக் கட்டலயா!

முதலாளி வீட்டு வாசலில் எல்லாரும் தார்ணா பண்ண ஒருநாள் முடிவெடுத்தார்கள். எதிர்பாராத் திருப்பம். அன்று முதலாளி ஊரிலேயே இல்லை. வீடு பூட்டிக் கிடந்தது. சுவரில் கரி வாசகங்கள் எழுதினார்கள்… ஒருத்தன் பழக்கதோஷத்தில் ஆட்டின் அம்பு வரைந்தான். அங்கேயே வாசலில் வீராவேசக் கூட்டம்.

சேற்றில், சோற்றில் –

எரிமலை –

என்னா எரிமலை. வயிறெனும் எரிமலையா? ஜுஸ் ஊத்தி அணைங்கப்பா! –

தூங்கும் புலி இடறிய குருடன், புறநானு}றா அகநானு}றா தெரியாது. ஆ புலிக்கும் கண் தெரியவில்லை. இவனுக்கும் தெரியவில்லை… என்ன சிச்சுவேஷன்! – தூ.பு. இ. குருடனே முதலாளியா, இல்லை தொழிலாளிதான் முதலாளி என்கிற தூங்கும் புலியை இடறிவிட்டானா, தெரியாத நிலை… தொழிலாளர்களில் பாதிப்பேர் அப்பவே தூங்க ஆரம்பித்திருந்தார்கள்.

தூங்கும் எலி.

தெருக்கூட்டி கயிறுமேல் நடக்கிறா மாதிரி எதோ வித்தை, என்று பார்க்க வந்த ஜனங்கள், பாவம், என்றபடி கலைந்து போனார்கள்.

”நாளைக்கு யூனியன் மீட்டிங், வந்திருங்க தோழர்.”

”வீட்லகாட்டியும் என்னா வேல கீது? ஜுஸ் உண்டா தோழர்?”

எப்படியும் எல்லாம் சரியாகி விடும்… கட்டுக்குள் வந்துவிடும், என எல்லாரும் நம்பினார்கள். நம்புவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லாதிருந்தது.

அப்பாவுக்கு ரொம்ப முடியவில்லை. இடுப்பு வேட்டியையே அவரால் முடிய முடியவில்லை. முன்னெல்லாம் வீட்டுக்குள்ளாவது எழுந்து வளைய வருவார். வளைந்தமுதுகுடன் வளைய வருவார். ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளைந்தே விட்டது.

அவர் பின்கட்டுக்குப் போனால் துணைக்கு என்று கூட யாராவது போவார்கள். இவனோ, பார்வதியோ, குட்டியோ, அவர் வரும்வரை கிணற்று மேட்டிலோ துணிதுவைக்கும் கல்லிலோ காலாட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். இரவுக்கான ஒலிகள். எங்கோ குழந்தை ஒன்று அழ, எரிச்சல்பட்டு தாய் ஒரு மொத்து மொத்தி, அழுகையை அதிகப் பண்ணுகிறாள்… ஏட்டி முதுகா துவைக்கிற கல்லா?

இருட்டில் முட்புதர்ப் பக்கம் பன்றியுருமல். வெளியேவரும்போது. உர்ர் என்று தாத்தாவைத் துரத்தி வரக் கூடாதே, என்று திகிலாய் யோசித்தபடி காத்திருப்பார்கள்.

உள்ளே அம்மா. வெளியேயானால் பன்னி…

அப்பா இப்போது யார் உதவியும் இல்லாமல் எழுந்துகொள்ளவே சிரமப் பட்டார். பொதுவாக வயசாளிகள் எப்பவுமே மழையில் நனைந்தாப் போல சிறு ஆட்டம் ஆடிக் கொண்டிருப்பார்கள். கிளம்பத் தயாரான பஸ்… தலைசுற்றி உடம்பு கிடுகிடுவென்று ஆடியது. சுவரைப் பிடித்துக்கொள்ள கையை நீட்டினால் சுவரே தானாய் அவரை நோக்கி… ஆனால் அவர்தான் தள்ளாடி விழத்தெரிந்தார் பிறகு. அவயவங்கள் தங்கள் சுயபலத்தை இழந்திருந்தன. மூளைசொல் கேட்கவில்லை அவை.

மின்சாரத்துறை அலுவலகத்தில் வேலை யாரும் செய்யவில்லையானால் ஊருக்கு சுபிட்சம் என்பார்கள். கரண்ட் கட் ஆனால்தானே அவர்களுக்கு வேலை?

அதேபோல, கால்கள் ஒத்துழைத்தன என்றால்… இடதும் வலதும், எதிர்த்திசையில் நடக்க வேணும். ஒண்ணு முன்னால் போக அடுத்தது பின்தங்க வேண்டும்… கால்கள் ஒரே திசையில் தயங்கி நின்றால் என்னாகும்? தாத்தாவுக்கு அவ்வகையில் கால்கள் ஒத்துழைத்து சிரமப் படுத்தின…

மூளையே அலுத்திருந்தது. உடம்பே சுருங்கி, வற்றிவிட்டாப் போல, ஒரு வால்போல ஆகிவந்தது. முகம் இருளடித்துக் கிடக்கிறது. வலியின் ரேகைகள்.

தனியே எக்ஸ்ரே என்று எடுக்கத் தேவையில்லாத நெஞ்சு.

முதலில் ஒரு டாக்டர் வந்து அப்பாவைப் பார்த்துவிட்டுப் போனார். வேட்டி கட்டிய எளிய மருத்துவர். அவரே சற்று தளர்ச்சியாய் உற்சாகமற்று மெடிக்கல் காலேஜ் எலும்புக் கூடாட்டம் இருந்தார். குனிந்து உள்ளே வந்தார். அப்பா கையைப் பிடித்தபடி தன் வாட்சைப் பார்த்தார். ராஜா ராணி கதைகளில் ராஜகுமாரனை மாயக்கண்ணாடியில் பார்ப்பார்கள்… உயிரைத் தேடுகிறாப்போல இருக்கும்… இதே ஜோசியனாய் இருந்தால் கையைத் திருப்பி ஆயுள்ரேகை பார்க்கிறான் – (????)

”ம்” என்றார் டாக்டர். ஊசி போட்டார். அப்பா எதோ சொல்ல வந்தபோது தெர்மாமீட்டரை வாயில் வைத்தார். தாத்தாவுக்கு இருமல் வந்து அவர் இரும முடியாமல் உடம்பே மருந்து பாட்டில் போல குலுங்கியது. மருந்தைக் குடிக்கையில் மறந்துட்டாப்லியா?

சபாபதி வந்து கையை மடித்தபடி நின்றுகொண்டான். எஸ் பாஸ்!

டாக்டர்கள் தெய்வத்துக்கு சமானம்.

தெய்வம் நின்று கொல்லும்.

”எப்டியிருக்கு டாக்டர்?’

”ம்”

”எது சாப்பிட்டாலும் பிடிக்கலன்றாரு டாக்டர்.”

”ம்”

”என்ன குடுக்கலாம் டாக்டர்?”

”கஞ்சி.”

”அதான் தேவலன்றாரு.”

”அதையோ கன்டினியூ பண்ணுங்க.”

”இருமும்போது தொண்டைல…”

”எல்லாம் சரியாய்ப் போகும்” என்று கையலம்பிக் கொண்டார்.

சரியாய்ப் போகவில்லை. அப்பா நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது. ராஜசேகர் முதலில் அம்பது ரூபாய் கொடுத்தான். கேட்டது இருநூறு. மணிவண்ணனிடம் பத்து பத்தாய் மூணுதரம். கேட்டது ஐம்பது. அதற்கு மேல் கேட்கலாம்… மொத்தத்துக்கு இல்லை என்றுவிடக் கூடும்.

பார்வதியின் ஒரு மோதிரம் அடகுபோனது.

”வாங்க வாங்க, செய்னை மீட்டுப் போலாம்னு வந்தீங்களா?”

பார்வதி ஒரு பெருமூச்சுடன் மோதிரத்தைக் கழட்டிக் கொடுத்தாள். அடகுக்காரன் கைநீட்டினான்… அவன் கையில் எத்தனை மோதிரங்கள்.

தாத்தா நடக்கும் சக்தியை இழந்திருந்ததால், வெந்நீர் போடும் பெரிய அண்டாவுக்குக் கால் முளைத்தது. அவர்கள் வீட்டில் பெரிய பாத்திரம் அதுதான்.

கனமான பாத்திரம். தூக்க முடியவில்லை. வெளியே போக மறுத்தது. சனியனே நீ வெளிய போகாட்டி தாத்தாவை வெளியே தூக்கிப் போக வேண்டியிருக்கும்… அண்டாவைக் கிடைத்த விலைக்கு விற்றார்கள்.

பிறகு ஒரு கம்பவுண்டர் வந்தான். டாக்டரை விட கம்பவுண்டர்கள் மலிவு.

டாக்டர்கள் •பீஸ் வாங்கிக் கொள்வது தவிர, மருந்து ”போதும் போதும்” என்று பதறும் அளவு தாள்ப்பூரா கிறுக்குவார்கள்… மெடிக்கல் ஸ்டோர் போய், ”போட்றாதீங்க. எவ்ளாகும் சொல்லுங்க” – சிலசமயம் எழுதித் தந்ததில் பாதியளவு வாங்கித் திரும்புவர் மக்கள்…

வாங்காமலேயும்! – எல்லாம் தானாவே சரியாப் போகும். போறவழிக் கோயில்ல ஒத்தைக் கும்பிடு. கடவுள் கருணையுள்ளவர்! என்றாலும் கடன் கேட்கேலாது.

கம்பவுண்டர்களோவெனில் டாக்டர் வாங்கும் அதே தொகையில் மருந்தும் தந்து விடுகிறார்கள்.

அல்லது கையில் இருக்கும் மாத்திரைகளையே மருந்தாய்த் தருவதும் உண்டு.

சில டாக்டர்கள் வீடு தேடி வர மாட்டார்கள். கம்பவுண்டர்கள் அவர்களே நம்மை வீடு தேடி வந்து பார்க்கிறார்கள். அவர்களுக்கு கிளினிக் இல்லை. கம்பவுண்டர்களின் பெருந்தன்மை அளவிடற்கரியது. டாக்டர் இல்லாத நேரம் அவர்களே நோயாளிகளைப் பார்த்து அனுப்புவார்கள். சில ஆஸ்பத்திரிகளில் டாக்டர் இல்லாத நேரம் கூட்டம் நெரிக்கிறது. திறமையற்ற டாக்டர்களின் திறமையான கம்பவுண்டர்கள். டாக்டர் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் இருந்தே அவர்கள் கம்பவுண்டர்கள். நோ பிரமோஷன்.

அட பல சந்தர்ப்பங்களில் டாக்டர்கள் கைவிட்ட கேசுகளை அவர்கள் எடுத்துக் கொள்வதும் உண்டு.

அவசரம் என்றால் டாக்டர்களுக்கே வைத்தியம் பார்ப்பார்களா தெரியவில்லை.

கம்பவுண்டன் ரொம்ப உற்சாகமான மனுசன். அறிவாளி. வந்து உட்கார்ந்து உலக விஷயங்களைச் சத்தமாய்ப் பேசியபடி காத்திருந்தால் காபி கிடைக்கும் என அவன் அறிவான். எதற்கும் டோன்ட் ஒரி, என்பான். நன்னம்பிக்கை அளித்தல் கம்பவுண்டர் கடனே… என்பது மூதுரை.

காசில்லை என்று மாத்திரம் சொல்லக் கூடாது. ஒர்ரியாகி விடுவான்.

”சார், தலை வலிக்கறதுன்றார் அப்பா…”

ரெண்டு மாத்திரை.

”இருமும்போது தொண்டை எரியுது…”

இருமச் சொல்லாதீங்க, எரியாது! – அவன் மெளனமாய்ப் புன்னகைத்தபடி, தந்தான் இன்னும் இரண்டு மாத்திரை.

”எனக்குக் கூட லேசாத் தலைவலி!”

வேறு மாத்திரை தந்தான். அந்த மாத்திரை ஸ்டாக் தீர்ந்து விட்டது போல…

அப்பா கஞ்சியைவிட மாத்திரை அதிகம் சாப்பிட்டார்.

டாக்டர், எல்லாம் சரியாய்ப் போகும், என்றாவது சொன்னார். அவன் சொல்லவில்லை. இவர்களும் கேட்கவில்லை.

”நேத்து ராத்திரி அப்பா தூங்கவே இல்லை சார்!”

”டோன்ட் ஒர்ரி!” என்று ரெண்டு மாத்திரை தந்தான். எல்லாத்துக்கும் ரெண்டு மாத்திரை அவன் ஸ்டைல்… எல்லா வியாதிக்கும் குபீர் குபீரென்று அவன் பையில் இருந்து மாத்திரைகள் வெளிவந்தன. வியாதியின் சகல கட்டங்களையும் எதிர்பார்த்திருப்பான் போல. எத்தனை அறிவாளி!

மாத்திரை வள்ளல்!

”இன்னும் சாவு வரமாட்டது…” என்றால், அதற்கும் ”டோன்ட் ஒர்ரி” என்று மாத்திரை தருவானா?
மனுஷாளுக்கு மாத்திரம் அல்ல, சிலசமயம் ஆடு மாடுகளுக்கும் அவன் வைத்தியம் பார்க்கப் போனான். பரம்பரை வைத்தியனாமே!

ஒருமுறை மாடுமுட்டி தனக்கே வைத்தியம் பார்த்துக் கொண்டான்!

இரண்டு மாசமாய் அவன் வருவதும் நின்று போனது. வயதான வேறு நோயாளிகளைப் பார்க்க அவன் போயிருப்பான். நாட்டில் வயசாளிகளுக்கும் பஞ்சம் கிடையாது. அவனிடம் மாத்திரைகளுக்கும் பஞ்சமில்லை.

வழியில் சபாபதி அவனை ஒருநாள் பார்த்தான்.

”அப்பா….”

”ச்” என்றான் சபாபதி.

”ஐயய்ய எப்ப.”

”அப்டியேதான் இருக்கு அவருக்கு!” என்றான் பதறி.

”நல்ல மனுசன். சனி. ஏழரை நாட்டுச் சனி… அதான் படுத்தறது,” என்றான். ஏழரை நாட்டுச் சனிக்கு எதும் மாத்திரை தரப்டாதா, என்றிருந்தது.

சபாபதி அவனை வீட்டுக்குக் கூப்பிடவும் இல்லை. அதை அவன் எதிர்பார்க்கவும் இல்லை. ஏழரைநாட்டுச் சனிக்கு அவனிடம் வைத்தியம் இல்லாதிருக்கலாம்.

இரண்டு மாசமாய் கம்பவுண்டர் வருவதும் நின்று போனது. அப்பா சபாபதியை ஜாடையாய்க் கேட்டபோது ”அவன் வீடுமாத்திப் போயிட்டாம்ப்பா” என்றான்.

‘எப்ப?”

”இந்தவீடு ராசியில்லைன்றான்…”

”ஏன்?”

”அவங்கப்பா செத்திட்டாரு!…”

”என்னாச்சி, இவன் வைத்தியம் பாக்கலியா?”

”இவன்தான் வைத்தியம் பாத்திருக்கான்!”

நான் செத்தபின் இவனும் வீட்டை மாற்றுவானா, தெரியவில்லை.

ராசியான வீடு, என்று மாற்றாமல் இருக்கலாம்!

அப்பா கண்ணை மூடிக் கொண்டார். அடிக்கடி கண்ணிலிருந்து மாடாட்டம் சூடாய்க் கண்ணீர் வழிகிறது. மூச்சுவிட முடியவில்லை. வலி. நுரையீரல்களை யாரோ தேனடையாய்க் கசக்குகிறார்கள். தேனுக்கு பதில் சளி. ‘ஹ ஹ’வென்று பெரிசு பெரிசாய் மூச்சு விட்டார். தனித் தமிழ்ப் பிரியர்கள் அ அ என மூச்சுவிடுகிறார்கள்… பெருசு விடும் மூச்சு. பெருமூச்சு. ஜன்னல் பக்கமிருந்து உருவங்கள் தெரிகிறதாகத் தோணிக்கொண்டேயிருந்தது. பின்னிரவில் ஓவெனப் பதறி அவர் எழுந்தார். ”யா…ரோ என்னைக் கூப்பிடறாங்கடா…” என்று நடுங்கி அழுதார்.

தனித் தமிழ்ப் பிரியர்கள், துரோகி, என்கிறார்களா ஜன்னல் வழியே.

அடுத்த பெரிய பாத்திரத்தைக் கீழே இறக்கி வெச்சிருந்தான் சபாபதி.

”பேசாமல் படுங்கப்பா. நடுராத்திரில, என்ன இது?” என்று சபாபதி சத்தம் போட்டான். இவருக்கு முன்ன நான் செத்துட்டாக் கூட தாவலை… சாமி என்னையே மலையேத்தீரும் போலுக்கய்யா. அவனைக் கடன்காரர்கள் வாசல்தட்டிக் கூப்பிட ஆரம்பித்திருந்தார்கள்.

அப்பா அழுகையை நிறுத்தி அவனைப் பார்த்தார்.

”இங்க வாடா” என முனகினார்.

”என்ன?”

”மு… முடியலடா எனக்கு.”

”ம்”

”என் கையப் பிடிச்சிக்க…”

அவன் அவர் கையைப் பிடித்துக் கொண்டான்.

”ஆஸ்பத்திரி…”

”அங்கல்லாம் சரியாப் பாக்க மாட்டாங்கப்பா. உங்களுக்குத் தெரியாது…”

அப்பா அவன்கையை உருவிவிட்டு ஒருக்களித்துத் திரும்பிப் படுத்துக் கொண்டார். கோபம் போலிருந்தது.

”நான் வேணா அப்பா பக்கத்ல படுத்துக்கறேன் பார்வதி. லைட்டை அணைச்சிட்டுப் போ.”

”லைட் இருக்கட்டும்” என்றார் அப்பா. யார் கூப்பிடுகிறார்கள் என்று இருளில் தெரியவில்லை போலும்!

மாத்திரைகளை நிறுத்தி இரண்டு மாசமாகிறது. மாத்திரை உண்ணா விரதம். இன்குலாப் ஜிந்தாபாத். சாகும்வரை போராடுவோம்! அப்புறம்? செத்துப் போவோம்!

இரவுகளில் தாகமாயிருந்தால் குளுகோஸ் தண்ணி கலந்து கொடுத்தார்கள். ஐஸே போடவில்லை யானாலும் சில்லென்ற சற்றுச் சுவையான தண்ணீர். ”போதுமா, போதுமா” என்று அப்பா வாயில் ஊற்றிவிட்டு, மீதியிருந்தால் அவனும், அவனையே பார்த்திருந்த பார்வதியும் குடித்தார்கள்.

வயிறாற ஒருவேளைக்குமேல் சாப்பிடுவதையே அவர்கள் நிறுத்தி யிருந்தார்கள். சபாபதி சாப்பாட்டு நேரம், காபி நேரம் பார்த்து நண்பர்கள் வீட்டுக்குப் போக முயன்றான். திரும்பி வந்தபோது அவன் பெண்டாட்டி, யாரோ நண்பர் வந்து தேடிவிட்டுப் போனதைத் தெரிவித்தாள்!

அவனுக்கும் சாப்பாட்டு நேரம்தானே?

•பாக்டரிக்குப் போகிற சைக்கிளை வேறு வழியில்லாமல் கிடைத்த விலைக்கு விற்றுவிட வேண்டியதாயிற்று. யூனியன்லீடர் தோழர்களிடையே வட்டிக்கு விடுகிறவன். ”உனக்காகத்தான் வாங்கிக்கறேன்” என்றபடி அவன் பணங் கொடுத்தான்.

அவன் வாங்கிக்கிட்டு இவனையே ஓட்டிக்கச் சொல்லி குடுத்திருவானா?

குட்டி பள்ளிக்கூடம் போகிறதால் வயிற்றுக்கு வஞ்சனை செய்யேலாது. மதியம் அவளுக்குத் தினமும் மோருஞ்சாதமும் ஊறுகாயும்.

”ப்…பா!”

”எடுத்திட்டுப் போம்மா. இதோ •பாக்டரி திறந்திரும்…” என்றான் சபாபதி.

”எப்பப்பா தொறப்பாங்க?” என்று கேட்டாள் குட்டி. அப்பா கண்ணைத் திறந்து சபாபதியைப் பார்த்தார் ஆர்வத்துடன்.

சபாபதி சுவரைப் பார்த்தபடி ”தொறந்திருவாங்க” என்றான்.

எதிர்பாராமல் நேற்றிரவு அப்பாவுக்கு ரொம்ப மோசமாகி விட்டது. மூச்சு விட முடியவில்லை. உள்ளே போன மூச்சு வெளியே வரவில்லை. வெளி மூச்சு உள்ளிறங்கவில்லை. அரேபிய டியூனுக்குப் போல அப்பா படுக்கையைக் குடைந்தார்… சபாபதி அப்பாவைப் பார்த்தான். எல்லாம் இதோ முடிந்துவிடும் போலிருந்தது. ஒருதடவை வந்தால்தான் கிளைமாக்ஸ். கிளை கிளைமாக்ஸ்கள் சுவாரஸ்யமில்லை… ”ஒண்ணில்லப்பா” என்று பரபரப்புடன் கிட்ட வந்தான். அவர் நெஞ்சை நீவி விட்டான்.

”குடிக்கத் தண்ணி வேணுமா?”

”வேணா” என்றார் அப்பா.

”உள்ள அடைக்கறதுடா. ரொம்ப ஓஹ்…” என்று தேவநகரியில், மேலுலக பாஷையல்லவா அது – ”திண் – டாட்டமா யிருக்கு… தா…” கெட்ட வார்த்தையோ?

”தாகமா இருக்கா?”

”-த்தாள முடியல்ல…” என்றார். பக்கத்தில் மூடிய தட்டுடன் தண்ணீர் இருந்தது அப்படியே, அவனே எடுத்துக் குடித்தான். தம்பிக்குத் தந்தியடித்து விடலாமா? அவன் வந்து உட்கார்ந்து, செலவு அதிகமாகி விட்டால் என்ன செய்வது? குழந்தை குட்டிகளுடன் வந்து சேர்வான். பெரியப்பா, எனக்கு பொம்மை வாங்கித் தரியா?

வசதியில்லாத பெரியவர்கள், குழந்தைகளுக்கு விளையாட என்று, உயிரோடு பொம்மைகள் ஏற்பாடு செய்கிறார்கள். ஒரு குழந்தைக்கு மற்றது பொம்மை! ஒழுங்கா வைத்துக் கொண்டு விளையாடினாத் தாவலை. அதுகள் ஒன்றையொன்று முடியைப் பிடித்திழுத்துக் கொள்கின்றன. பொம்மைகள் அழா. நிஜ பொம்மைகள் அழுகிறது மட்டுமில்லை. தூக்க வந்த ஆளையே சமயத்தில் ஒரு கக் – கடி!

வலி ஒருபுறம். சாவுமேல் பயம் ஒருபுறம். ஆஸ்பத்திரி போய்விட்டால் தான் எப்படியும் பிழைத்து விடுவோம், என அப்பா நம்புவதாகப் பட்டது.

அவனைத் தன் பக்கத்திலேயே வைத்துக்கொள்ள அவர் விரும்பினார். ஒண்ணுக்குப் போகக் கூட அவனை விடவில்லை. ஒமக்கு செளரியம், படுக்கையிலேயே விட்ருவீரு. நான் எழுந்து போனாத்தான தாவலை, என்றிருந்தது.

”எங்க போனாலும் சொல்லிட்டுப் போ.” தெரிந்து என்ன செய்யப் போகிறார், என்றிருந்தது. அது சரி, நீரு சொல்லாமக் கொள்ளாமக் கிளம்பீறண்டாம். ”சீக்கிரம் வந்துரு” என்பார்.

நல்ல காற்றுக்காக சபாபதி ஜன்னல்களைத் திறந்து வைத்தான். அப்படியே ரெண்டு கையையும் தூக்கிக் கொண்டு நின்றான். தூய காற்று! ஜிந்தாபாத்! – சீ வரவர தூக்கத்திலேயே ஜிந்தாபாத் என்று புரள்கிறான். கடன் கேட்டு அலைகிறான்… அக்குள்பக்கம் காற்று கிச்சுகிச்சு மூட்டியது…

இரவு ஊரடங்கிக் கிடந்தது. திறந்த ஜன்னல் பார்த்து அப்பா பயப்படக் கூடும். கொப்பும் கிளையுமாய் ஆடும் மரம் பூதங்களை நினைவுபடுத்தக் கூடும்.

சப்தங்கள் சீசாவுக்குள் பூதமாய் ஒடுங்கி யிருந்தன. சர்ர் சர்ர்ரென்ற அப்பாவின் மூச்சு ஒலிநாடாக்கள் அறையெங்கும் வலை பின்னினாற் போலிருந்தது. தானறியாத முனகல்களை வெளியேற்றினார் அப்பா. உயிரே மரங்கொத்திப் பறவையாய் அவரை உள்ளே கொத்திக் கொண்டிருந்தது.

குட்டி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். குட்டி நனைத்திருந்தாள் ஜெட்டி. அவன்போய் அவள் தலையணையை உருவிவிட்டு, அதையும் கொண்டுவந்து அவர் தலைக்கு உயரத்தை அதிகப் படுத்தினான். மூச்சுவிட ஓரளவு செளகர்யப்படும்… சாய்ந்தும் படுத்துமான நிலையில் கிடந்தார் அப்பா.

பெரிதாய்த் திறந்த வாய் – இருட்டுக்குழி. காற்று ஒரு குச்சிபோல உள்ளே அவரைக் கூழ்கலக்குகிறாப் போலக் கலக்கியது. கிட்டே போய் அவரைப் பார்த்தான். அப்பாவின் நெஞ்சு ஏறியேறி இறங்கியது. மீண்டும் எழுந்து போனான்.

•பாக்டரி சீக்கிரம் திறந்தாக வேண்டும். நிறைய நாட்கள், மாதங்கள் ஆகிவிட்டன. வேறு வேலை என்று எதுவும் தெரியாது. இந்த வேலையே சரியாய்த் தெரியாது.

திறக்கிற அறிகுறியே இல்லை. சாவியைக் கீவியைத் தொலைச்சிறாம இருக்கணும்…

ஒரு கோஷ்டி அதே சம்பளத்துக்கு வேலைக்குப் போய்விடலாம், பரவாயில்லை என்று பேச ஆரம்பித்தது. அதெப்பிடி? – அட நாயே! வெளிய இந்தச் சம்பளமே உனக்குக் கிடைக்காது! – சபாபதிக்கு எந்தப் பக்கம் சேர்வது தெரியவில்லை.

முந்தாநாள்க் கூட்டம் மணிவண்ணன் வீட்டில்… அவன் சம்சாரம் மோர் கலந்து உப்பு போட்டு எல்லார்க்கும் கொடுத்தாள். கூட்டம் வர வர அந்த மோர் நீர்த்துக் கொண்டே வந்தது… நல்ல கூட்டம். வந்தவரில் பாதிப்பேர் யூனி•பார்ம் அணிந்துதான் வந்திருந்தார்கள். தொழிலாளிகளில் அநேகர், வீட்டில்கூட யூனி•பார்ம் அணிந்துதான் இருந்தார்கள். அவர்களுக்கு புது யூனி•பார்ம் வந்ததும், பழையதை வெட்டி அல்லது பையன் அழுதால் புதியதை வெட்டி, டவுசராக்கி விடுகிறார்கள்.

அவர்கள் துணி கிழிந்து, பையன் டவுசரை எடுத்து அணிந்து நடமாடுகிறவரும் உண்டு.

அடுத்த வாரம் சைக்கிள் பேரணி வெச்சிருக்கு…

வேணாம், என்றார்கள் நிறைய பேர்.

எல்லாவனும் சைக்கிளை வித்துத் தின்னுருக்கானுகள்!

சுமுகமாய் ஆரம்பித்த பேச்சு, நேரமாக ஆக கூச்சல் குழப்பமாய் ஆகிப் போனது. ஆளாளுக்குக் கத்தினார்கள். யார் என்ன பேசினார்கள் தெரியவில்லை. பேசுகிறாளுக்கே தான் பேசுவது புரியவில்லை.

சபாபதியால் அங்கே உட்கார முடியவில்லை. இவர்கள் எந்த முடிவுக்கும் வரமாட்டார்கள் என்று தோன்றியது. எப்போது முடிப்பார்கள் என்று தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் மோர் கிடைத்தால் நல்லது. அவர்களில் கடைசியாக வந்த நாலைந்து பேருக்கே மோர் இல்லை… அப்பாவை நினைத்தபடி எழுந்து வந்து விட்டான்.

”என்னடா?” என்றார் அப்பா.

”ம்”

”என்ன பேசினாங்க?”

”ச்” என்றான். ஒற்றெழுத்து மொழிமுதலாய் வராது. ச். இலக்கணப் பிழை. ஒத்துக் கொள்கிறேன். ம்.

கரண்ட் கட்டானது திடீரென்று. அப்பாவைத் திரும்பிப் பார்த்தான். அவரிடம் அசைவில்லை. ஒருவேளை தூங்கி யிருக்கக் கூடும். இருட்டின் வியாபகம். ஜன்னல் வழியே வானத்தைப் பார்த்தான். எதுவுமே தெரியவில்லை. இருட்டு. மழைபோல இருட்டும் மலையில் இருந்து இறங்கி ஓடி வருகிறதா? இங்கேயிருந்து இருட்டு எவ்வளவு உயரம் இருக்கும். பிரமிப்பாய் இருந்தது. நிலக்கரிச் சுரங்கத்தின் அடியாழத்தில் நான் மாட்டிக் கொண்டிருக்கிறேன்… என நினைத்துக் கொண்டான்.

திடீரென்று பரபரப்புடன் அப்பா கிட்ட வந்து நெஞ்சைத் தொட்டான்.

”ம்” என்றார் இலக்கணப் பிழையாய்.

”ஒண்ணில்லப்பா” என்றபடி படுத்துக் கொண்டான். இந்த இருட்டில் தண்ணியைத் தேடி, கொட்டிவிடக் கூடாது.

ஆ, பாவம் அப்பா. நல்ல விஷயம் – அவர் உயிருடன் இருக்கப் போராடுகிறார். அப்பா என் போராட்டத்தை விடு. உன் போராட்டம் வெல்க. உயிரை உள்ளே பூட்டிக் கதவடை!…

தைரியமான அப்பா. நானும் தைரியமாய் இருக்க வேண்டும். ச். எல்லாம் சரியாகி விடும்… கொட்டாவி வந்தது. அ முதல் ஆ வரை யாரோ சொல்லச் சொன்னாப் போல.

மீண்டும் கரண்ட் வந்து மின்விசிறி ஓடத் துவங்கியது. அவனுக்குத் தெரியாது. எப்பவோ உறங்கி யிருந்தான்.

கிளைமாக்ஸ் என்றால் மோசமான விஷயமா என்ன?

மறுநாள் அரிசிக் கடையில் அவன் கடன்கேட்டு நிற்கையில் ”வணக்கம் தோழர்” என்று குரல் கேட்டது.

ராஜசேகர் முட்டைக் கடையில் இருந்து சிரித்தான்.

”வணக்கம் தோழர். என்ன முட்டைல்லாம்… வீட்ல விருந்தாளியா…” என்று இவன் சிரித்தான்.

”எல்லாம் நல்ல விஷயந்தான். பேச்சு வார்த்தைக்குக் கூப்ட்ருக்காங்க!”

”அட” என்றபடி சபாபதி கிட்ட வந்தான்.

”அப்ப இனி பிரச்சனையில்லை…” முட்டைக் கடைக்காரன் சிநேகிதமாய்ச் சிரித்தான்.

”எப்ப ராஜ_?”

”யூனியனுக்கு லெட்டர் வந்திருக்கு. ஜெராக்ஸ் எடுத்து யூனியன் நோட்டிஸ் போர்டுல போட்ருக்காங்க…”

”முட்ட வேணுமா சார்?” என்றான் கடைக்காரன். அவனுக்கு முட்டை மீந்திருந்தது. அடுத்த ஸ்டாக் சாய்ந்தரம் வந்துவிடும்.

”வேணா…” என்றான் சபாபதி.

”வாங்கிட்டுப் போ சபாபதி. அதான் நாலுமாத அரியர்ஸ் வருமில்ல… குடுத்திர்லாம்…” என்றான் ராஜசேகர்.

அரியர்ஸ்! மொத்தப்பணம். முக்கினாலும் சேர்க்க முடியாத பணம்! – சபாபதி மகிழ்ச்சியுடன் ‘நடந்து’ வீடுதிரும்பினான். சைக்கிள்… ச். பரவாயில்லை.

அவன் பையில் ஐந்து கிலோ அரிசி, காய்கறிகள், முட்டைகள் கனத்தன.

”அப்பா?” என்று கூப்பிட்டுக் கொண்டே சபாபதி வீட்டுக்குள் நுழைந்தான்.

மதியம் போய் யூனியன் ஆபிசில் பார்த்து விட்டு வந்தான். வெற்றி வெற்றி என்று பெரிது பெரிதாய் எழுதிப் போட்டு நடுவில் ஜெராக்ஸ் ஒட்டியிருந்தார்கள். எல்லார் முகத்திலும் ஒரு தேஜஸ், தமிழில் ஜ்வலிப்பு, ஸாரி தமிழில் பொலிவு, வந்திருந்தது. அவன் போன இடமெல்லாம் நண்பர்கள் பரபரப்பாய் இருந்தார்கள். சிலர் சாராயக்கடைக்குப் போயிருந்தார்கள். அங்கே இப்போது கடன் தருவான் போலிருந்தது…

பேச்சு வார்த்தை தோல்வி, என்ற நிலை வரப்டாது, என்று யூனியனிடம் சொல்லப் போவதாக அவர்கள் பேசிக் கொண்டார்கள். நாம என்னடா உண்ணாவிரதம் இருக்கறது, அவனே இருக்க வெச்சிட்டானே!

மணிவண்ணன் அவனை வீடுவரை சைக்கிளில் கொண்டு விட்டுவிட்டுப் போனான்.

அப்பா அவனைக் கூப்பிட்டார். அவரிடமும் மகிழ்ச்சியுடன் விவரம் எல்லாம் பல் தெரியப் பேசினான். மெல்ல அவனைப் பற்றிக் கொண்டு அப்பா எழுந்து உட்கார்ந்தார்.

”இப்ப எப்பிடி இருக்கீங்க?”

”பரவால்ல” என்று புன்னகைத்தார்.

”நாளைக்கு ஒரு கம்பவுண்டரை வரச் சொல்லீர்க்கேன்…”

”ம்” என்றார் அப்பா இலக்கணப் பிழையாய். இம், என எழுதிக் கொள்ளலாம்.

”பாப்பம். ஒண்ணுஞ் சரியா அமையலையின்னா ஆஸ்பத்திரில வெச்சிப் பாப்பம்…”

”சரி” என்று தலையாட்டினார் அப்பா பல் தெரிய… மனசுக்குள் பல்ப் எரிய.

பார்வதி கிழவருக்கு மட்டும் தனியே ஒரு முட்டை அவித்துத் தந்தார். ரொம்ப நேரமாய் அவர் அதைக் கொஞ்சம் கொஞ்சம் பிட்டுச் சாப்பிட்டார்.

”பாத்து நெஞ்ச அடைச்சி விக்கப் போவுது. தண்ணி குடுக்கவா…”

”வ்… வேணா” என்றார் அப்பா. எப்பிடியும் முழுசா முடிக்கிறதில் தீர்மானமாய் இருந்தார்.

அவன் அப்பா பக்கத்தில் உட்கார்ந்திருக்க, கதவைப் பிடித்தபடி பார்வதி நிற்க, குட்டி எதோ பாடி இடுப்பை வெட்டி வெட்டி ஆடிக் காட்டியது எல்லாரும் பல் தெரியச் சிரித்தார்கள். வீடே பிரகாசமாய் ஆகியிருந்தது.

”அப்பா அப்பா நான் கேட்டேனே பொம்மை…” என்றது குட்டி.

உயிர்ப் பொம்மையே தர முடிவு செய்தான் சபாபதி.

அன்றிரவு சபாபதி உள்ளே படுத்துக் கொள்கிறேன், என்றபோது அப்பா அதை ஆட்சேபிக்கவில்லை. அடிக்கடி வெளிய போய் என்ன நிலவரம் எனப் பார்த்துவிட்டு வர அவர் அனுப்பத் தயாராய் இருந்தார்.

கிளைமாக்ஸ் என்றால் மோசமான விஷயம் மட்டும்தானா? நல்ல விஷயம், சபாபதி எதிர்பார்த்த விஷயம்.

அப்பா அன்றிரவு செத்துப் போனார்.

மூடிவைத்த தண்ணீர் அப்படியே இருந்தது. எல்லாரும் உள்ளே வந்தார்கள். குட்டி குனிந்து அந்த குளூக்கோஸ் டப்பாவை எடுத்துக் கொண்டது. இனி அது தாத்தாவுக்குத் தேவைப்படாது.

(1991 சாவி வார இதழில் வெளியான கதை. சிறந்த மாதக்கதை என இலக்கியச் சிந்தனை பரிசு. தூர்தர்ஷனில் ஒரு மணிநேரக் குறும்படம்.)

Series Navigation

எஸ் சங்கரநாராயணன்

எஸ் சங்கரநாராயணன்