புறநகர் ரயில்

This entry is part [part not set] of 28 in the series 20100829_Issue

மணி


தளத்தில் கூட்டம் அளவுக்கதிகமாய் நிரம்பி வழிந்தது. மோட்டார் மேன்கள், மின்சார புறநகர் ரயில் ஓட்டுநர்களின் முதல் நாள் உண்ணாவிரத வேலை நிறுத்தம். வண்டிகள் ஓடின, அவர்கள் சாப்பிடாமலே வண்டி ஓட்டுகிறார்கள். ஒரு நூதன போராட்டம்.

சில சமயம், தாமதமாகி வேகவேகமாக படியில் இறங்கி வரும்போது கையசக்கிற மொகித்தே அங்கிள் ஞாபகம் வந்தது. அவர்தான் எஞ்ஞனில் நின்றிருப்பார். சிறப்பான கையசப்பிற்கு பின் ஒரு சில விநாடிகள் காத்திருந்து வண்டி எடுப்பார். இறங்கி ஓடிப்போகும்போது நன்றியை சின்ன சிரிப்போடு ஏற்றுக்கொள்வார். ஏற்கனவே ரொம்ப ஓல்லி அவர். இன்று சாப்பிடாமலே வண்டி ஓட்டவேண்டும்.

தளம் முழுவதும் வழியும் கூட்டம். இந்த கூட்டத்தில் ஏறுவது முடியுமா.. முடியத்தான் வேண்டும். முதல் ரயில் விட்டாலும் இரண்டாவதில் பிடித்து விடலாம். கொஞ்சம் கஸ்டம்தான்.

பேசாமல் போன் செய்துவிட்டு வீட்டுக்கு போகலாமா. எதுக்கு அநாவாசியமாய் லீவை வேஸ்ட் பண்ணிட்டு. காமன் ஹாலிடே கொடுக்க மாட்டாங்களா என்ன

ஓகே. கொஞ்ச நேரம் இருந்து ட்ரை பண்ணி பாக்கலாம். என்ன கொஞ்சம் ஓடிப்போய் ஏறணும்.. வீடியோ கோச்சுல* கூட்டம் குறைவாயிருக்கும்..

ஹோமா வந்திருக்காளா, சூரஜ் வந்திருக்கானா, அனுஜ் மேடம் வந்திருக்காங்களா என்று பார்வை துழவ சூரஜ் மட்டும் வந்திருந்தான்.

அந்த ரயில் உள்புக, பேக்கை இடுக்கிக்கொண்டு கொஞ்சம் சுடிதாரை லேசாக தூக்கிக்கொண்டு உடல் அநிச்சையாய் தயாரானது.

*

காலையில் வண்டி பிடித்தது சரியான நேரம்தான். பின்பு மெல்ல மெல்ல ஓவ்வொரு ஸ்டேசனிலும் நின்று போவதற்குள் உயிர்போயிற்று. ஓவ்வொரு சிக்னலிலும் அதுவாய் நின்றி இளைப்பாறி கொண்டது. ஓடாத வண்டியில் காலை சூரியனின் தகிப்பில் புழுக்கத்தின் கூடுதல் வெம்மை.

குறிப்பிட்ட ஸ்டேசனுக்கு பிறகு ஆள்மாற்றி உட்கார வேண்டும் என்பது எழுதப்படாத விதி. நிற்பவர்கள், சீட்டில் உட்கார்ந்திருப்பவர்கள் மாறிக்கொள்வார்கள். ரொம்ப தூரத்திலிருந்து வருபவர்களுக்கு அது வரப்பிரசாதம். ஆனால் இன்று அந்த ஸ்டேசன் வருவதற்குள் கால் முட்டி கழன்று விடும்போல.

ஏற்கனவே உட்கார்ந்திருக்கிற கழுதைகள் கொஞ்சம் எழுந்து மாற்றிக்கொண்டால்தான் என்ன, தூங்குவது போல நடிக்கும் உள்ளூர் குரங்குகள். அந்த குறிப்பிட்ட ஸ்டேசன் வந்ததற்கு பிறகு தான் மேக்கப் எல்லாம் முடித்துவிட்டு எழுந்தது. என்ன செய்ய, இப்போதாவது எழுந்திருக்கிறதே, சிரித்து கொண்டே நன்றி சொல்லவேண்டியிருக்கிறது. தினமும் பாத்து தொலைக்கவேண்டிய முகம்.

ஐம்பது நிமிடப்பயணம் இரண்டரை மணி நேரமானது. அங்கிருந்து நடந்து அலுவலகம், மதிய நேரத்திற்கு முன் போய் சேர்தல். பக்கத்திலிருக்கிற புறநகர் காரன்கள், காரிகள் ஏற்கனவே இருக்கை நிரப்பியிருந்தனர்.

ஏதோ ஒரு குற்றவுணர்வு, பந்த செய்பவர்களை நோக்கிய திட்டல். என்னை மீறியவற்றால் அலுவலகம் லேட்டாய் அடைந்ததற்காய் கோபம் – அலுவலகத்தில் அப்படியென்றும் கிழிக்கப்போவதில்லையென்றாலும் கண்ணுக்குத்தெரியாமல் விளையாடும் சதுரங்கத்தில் என் காய்கள் வெட்டப்பட்டதான உணர்வு. அது அவர்கள் கேட்கும் துக்கத்தில் மேலும் அதிகரிக்கும்.

*

” என்னாச்சு..”

“எத்தனை மணிக்கு ரயில் பிடிச்ச..”

“ஓ.. காட்.. அவ்வளவு நேரமா..”

“ உன்னோட லைன்லயாவது பரவாயில்லை. அடுத்த லைன் காரங்க இதவிட லேட்டாம்.. “

“ வண்டியிலேயே லஞ்சு சாப்பிட்டிருக்க வேண்டிதான..”

“ ஓகேயார்.. நோ ப்ராப்ளம் யார்.. பாஸ்கிட்ட நான் அப்பவே சொல்லிட்டேன்..”

பேச்சு. பேச்சு. அதே பேச்சு. அதே கதை. அதே சாரம். கிட்டதட்ட ஒரே கேள்விகள், அதே பதில்கள். மாற்றி மாற்றியடிக்கப்ப்டும் புரோட்டா போல அலுவலக வார்த்தை தளம்.

“பாவம். ரொம்ப தூரத்திலிருந்து வர்றாங்க.. “ அநுதாபக்குரல்கள்.

“ ஸோ.. ட்ரயின் லேட்.. “ சிரித்தபடி நடந்து போகும் பாஸ். ஓடிப்போய் அவன் சூம்பிய குண்டியில் உதைக்கவேண்டும் போல எழும் ஆசை. எப்போதும் கொஞ்சம் லேட்டாய் வருபவன், இப்போது மட்டும் சரியான நேரத்திற்கு வ்ந்திருப்பான். அதைவிட தான் நகரத்திலே வசிப்பதால், புறநகர் மின்சார வண்டியை உபயோகிக்காததால் இந்த பிரச்சனைகளின்றி சரியான நேரத்தில் வந்ததை – சரியாய் அமுக்கமாய் சொல்லிக்காட்டப்பட வேண்டும் என்பதில் கவனமானவன்.

புறநகர் வசிப்பின் மீது அழுத்தம் விழுகிற கணங்கள் அவைகள். ச்சை.. !!

*

“மழையில.. எல்லா ஸ்டேசனும், ரயிலும் பந்த்.. என் வீட்டில தங்கிட்டு மெல்ல நாளைக்கு போலாமே.. “

மாநகரத்தில் வழக்கமான அரசியல், ஊதிய உயர்வு போராட்டங்கள் விடுத்து மழைக்காலங்களில் இயற்கையும் கொஞ்சம் விளையாட்டு காட்டும். அதீத மழையினால் நிரம்பி வழியும் நீர், புறநகர் மின்சார ரயிலின் பாதைக் கம்பிகளை முழுதாக மூட நகரம் ஸ்தம்பிக்கும். அதன் நகரும், இரும்பு இதயமான புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிலைகுலைந்து நிற்கும்.

கவலையோடும், வெறுப்போடும், பயத்தோடும் கூடவே அத்தகைய நாட்களுக்காய் மனதிற்குள் ஒரு மெல்லிய காத்திருப்பு ஒளிந்திருக்கும்.

அப்போது அவனுடைய அல்லது அவளுடைய வீட்டிற்கு போகவேண்டும். இடம் பழக வேண்டும். அது அது அதனது இடத்தில் இருந்தவைகள் தாங்களால் மாற்றப்படுதல் கண்டு உயிரற்றவைகளே கொஞ்சம் துக்கப்படுவதாய் தெரியும்.

குளித்து, (வேண்டுமா, வேண்டாமா, புதிய உடைகளை நாம் உபயோக்கலாமா, வேண்டாமா..இருப்பதையே காயவைத்து உபயோகித்து கொள்ளலாமா..) உண்டு,
அங்கயே உறங்கி, அடுத்த நாள் வெறித்த வானம் பார்த்து மெல்ல நகர்வது,
புது அநுபவம்தான். ஆனால் முழுக்க முழுக்க சுகந்திரமான சந்தோசமான அநுபவமாக மட்டுமில்லை.

மாநகரங்களில் உடன் உழைப்போர் அகத்திற்கு செல்வதென்பது அந்தரங்களில் நுழைவது போன்றது. அலுவலக முகமும், பேச்சும் கொடுத்த தளத்தை தாண்டிவதே ஒரு விதமான மனச்சிக்கலை இருவருக்கும் கொடுக்கும்.
அது ஏற்கனவே வரையப்பட்ட பிம்பத்திலிருந்து மாறுவதை யாரும் விரும்புவதில்லை.

“ சரிகா.. புலம்பற மாதிரி அவ புருசன் ஒன்னும் அப்படி அசிங்கமில்லடி.. இவதான் ரொம்ப..டிமெண்ட் பண்றாளோன்னு தோனுது..”

“ பாஸ். பெண்டாட்டி பாத்தியா..வீடு குப்பை மாதிரி வெச்சிருக்கா.. எல்லாம் நார்த்காரங்க ’ஸோ ஆப்’ மேக்கப் ரொம்பவே அதிகம்னு தோனுது.. பெட்ரூமில பார்த்தேன்.. நிறைய ஆர்டிபிசல்தான்.. பாவம் அதுதான் மனுசன் இப்படி நேச்சருக்கு அலையறது போல..”

“ ஜிக்னா..மாமியார்கிட்ட பேசவே விடலை பாத்தியா..ஏதோ பயப்படறாருடி..”

“ ராகியோட அம்மாவோட பார்வையும் பேச்சும் கொஞ்சமும் சரியில்லை.. என்னமோ நாம கிராமத்து சேரியிலிருந்து வந்தமாதிரி பில்டப் கொடுக்கிறா. வீட்டோடு இப்ப வெலை என்ன, ஒரு தடவை கூட மழைல ப்ராப்ளமே வந்திதில்லைன்னு.. அப்படி இப்படினு.. ஒரே புராணம்..”

முதல் சில வருடங்கள் ஓன்றும் தெரியவில்லை. பின் மெல்ல மெல்ல ஏதோ அடிவயிற்று கோபம் கனன்று ஒரு முறை யார் வீட்டிற்கும் போகாமல் முக்கிய ஸ்டேசனில் பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் கும்பலாய் படுத்திருந்தது நிம்மதியாயிருந்தது.

ஓரே பேச்சு. ஓரே பாட்டு. சில மகளிர் காவலர்களும் ‘அந்தாக்சரியில் ‘ கலந்து கொண்டார்கள். அங்கிருப்பவர்களே காசு போட்டு சுடச்சுட சாயும், வடாபாவும் வரவழைத்து கொடுத்தார்கள். பேசிக்கொண்டு, புதியவர்களோடு கலந்து கொண்டே நிறைய சாயி. நிறைய வடா பாவ்.

வரவேற்பு வேலை பார்க்கும் பெண், கணிப்பொறி பெண், நட்சத்திர ஹோட்டலில் அறை துடைக்கும் பெண், தொலைபேசி அதிகாரி, மின் துறை
பொறியாளர், நிறைய ஸ்டோனக்கள், அக்கெளவுண்டன்கள், அரசாங்க குமாஸ்தக்கள். கொஞ்சம் தள்ளி மீன்கூடையோடு உட்கார்ந்திருந்த மும்பை சொந்தக்காரர்கள். கூட்டம். பெண்கள் வழிகிற கூட்டம்.

போன வருடத்திற்கு முந்தைய வருடம். பாதி வழியில் மின்சார ரயில் நிற்க, காத்திருக்க பொறுமை இழந்து, ஒரு சாதிக்கும் மனநிலையில், பெட்டியிலிருந்து குதித்து, ட்ராக் வழியாகவே ஏழு மணி நேரம் நடந்தே இரவு பத்து மணிக்கு வீட்டிற்கு போனபோது உடல் வலித்தாலும் மனதிற்குள் ஏதோ ஒரு சந்தோசம்.

ரயிலின் வருத்தத்தை, நகரின் வலியை தப்பித்து போகாமல் தானும் கொஞ்சம் பங்கிட்டு கொண்டதான பெரிய மனது ஆறுதல்.

*

மதிய உணவு இடைவேளை முடிந்தவுடன் அலுவலத்தில் அதே பேச்சு. சன்னமாய் சூம்பிய குழந்தையாய் நகரும் வேலை. வீட்டிலிருந்து வரும் விசாரிப்புகள்.

“என்ன பத்திரமா போய் சேந்திட்டயா.. ரொம்ப கஸ்டமா.. சரி சீக்கிரம் கிளம்பிரு.. லேட் பண்ணாத..”

“இன்னிக்கு போகாமலே இருந்திருக்கலாம்ல..”

“ குழந்தைய கூட்டிட்டு போயிருங்க.. என்ன நிலமையே ட்ரெயின்ல எனக்கு.. நான் அப்புறம் உங்களுக்கு போன் பண்றேன்.”

“ சாப்பிடல்லாம் இருக்குடா. வர்றதுக்கு லேட்டானா.. நீயே சாப்பிட்டு க்ளாஸ் போயிடு “

“ அவளுக்கு என்ன ஆச்சு தெரியுமா.. பூஜா வேற லைன்ப.. இன்னும் அதே ஸ்டேசன்ல தான் வண்டி நிக்குதாம்..”

“ செலினா நீ போய் சேந்திட்டயா.. நான் ஸ்டேசன்ல இருந்து திரும்பிட்டேன்.. வந்து டீவி பாத்துகிட்டிருக்கேன்.. அப்புறம் என்ன வேலை நடக்குது.. யாரெல்லாம் வந்திருக்காங்க .. அவ எப்படி வந்தா.. ”

“ சாயங்காலத்துக்குள்ள எல்லாம் சரியாயிரும்.. நான் வந்துருவேன்மா.. நோ வெர்ரி“

“ இன்னிக்கு எதுவும் நடக்காது.. யாரும் வரலைன்னு போன்ல சொல்லு. டெய்லி தான் லொக்கு லொக்குனு பதில் சொல்ல வேண்டியிருக்கு. இன்னிக்கு முடியாது .. எல்லாம் நாளைக்குதான் சொல்லு.. யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க.. “

கடிகாரத்தோடு யுத்தம். நேரக் கொலை.

*

மதிய நாள் என்கிற நண்பகல் செய்தித்தாள் சூடச்சுட செய்திகள் கொண்டு வந்தது. உண்ணாவிரத்தோடு உழைத்ததால் சில மோட்டர் மேன்கள் கவலைக்கிடமாகி மருத்துவ சிகிச்சை பெற்றதாய் காலைச் செய்திகள். மாநில அரசு மற்றும் மத்திய அரசுகள் சில அறிக்கைகள் விடுத்தன.

மொகித்தே அங்கிள் தரையில் படுத்திருக்க, டாக்டர்கள் அவரை சோதித்தபடியே ஒரு போட்டோ.

ஒன்னுமிருக்காது. மனம் சமாதனம் செய்து கொண்டது. இன்னிக்கு ஈவினிங் ட்ரெயினுக்கு மொகித்தே அங்கிள் இருக்க மாட்டாரு.. அப்ப புதுசாய் யாராவது ஒருத்தர் .. புதுதாய் வருகிற் ஆள் ஓரிரு விநாடிகள் ஏறி, இறங்க ரயிலை தாமதிப்பாரா.. ?

பதிவுபோல அந்த புறநகர் மின்சார ரயில்கள் புறப்படும் முக்கிய நிலையத்தில் பெருங்கூட்டம். வண்டிகள் நின்று கொண்டேயிருந்தன. காலையிலிருந்தே நின்று கொண்டு வந்த கால்வலி ஞாபகப்படுத்திற்று. இரண்டாம் நாள் வேறு.

புறசத்தம் விடுத்து அகம் குவிந்து எழுந்தது. இன்று முழுவதும் இரயில்கள் இயக்கபட மாட்டா என்று அறிவிக்கப்பட்டால், அப்படியே மழைக்கால இரவு போல படுத்திருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்..

வலி மீறி மனதிற்குள் மெதுவாய் அது அரும்பிற்று.

வீட்டிற்கு போன் போட்டு சொல்லவிட வேண்டும். பத்திரமாய் வந்துவிடவேன் என்று. தலைக்கு ஹோண்ட்பேக் வைத்து, சூடான சாயி, வடாபாவ், கொஞ்சம் ஈரமான காத்து, அதில் கலந்து வரும் மீன்வாடை, அசதியாய், விடுதலையாய், வீடு விடுத்த பெண்கள் கூட்டம், பாட்டுப்பாடும் பெண் காவலர்கள், ஆண்கள் வாசனையற்ற பெண்கள் கூட்டம் – விடிய விடிய.. பிரம்ம முகூர்த்ததில் நகர் தூங்கும் நேரம் பிறப்பட்டு, காக்கைகள் மட்டும் கூவும் யாருமற்ற புறநகர் ரயில் தளத்தை பார்த்தபடியே தூங்கி வழிந்து..

நினைப்பு.. அதே நினைப்பு.. “போங்ங்ங்ங்ங்ங்க்க்க்க்க்க்..” நினைப்பை அறுத்தபடி மின்சார ரயில் தன் புறப்பட சத்தமிட்டது. சுடிதாரை தூக்கி பிடித்து, ஹோண்ட் பேக்கை இறுக்கியபடி வீடியோ கோச் நோக்கி பாய உடம்பு அநிச்சையாய் தயாரானது.

*
mani@techopt.com

Series Navigation

மணி

மணி