பரிமளவல்லி அத்தியாயம் 5. ‘டாக்ஸ்-எய்ட்’

This entry is part [part not set] of 35 in the series 20100801_Issue

அமர்நாத்


5. ‘டாக்ஸ்-எய்ட்’

மர்மக்கதைகளில், யாரோ தன்னை மறைந்திருந்து கவனிப்பதை உள்ளுணர்வால் அறிந்தாள் கதாநாயகி. என்று படிக்கும்போது அது எப்படி சாத்தியமென்று பரிமளா ஆச்சரியப்பட்டது உண்டு. அந்த வெள்ளிக்கிழமை அப்படிப்பட்ட உணர்வு அவளுக்கே இருந்தது. வீட்டிற்கு வந்ததிலிருந்து விளக்கம் சொல்லமுடியாத சிறு ஒலிகள். பெரியவீட்டில் தனியாக இருப்பதால் எங்கோ நடக்கும் சிறு அதிர்வும் மனதுக்குத் தெரிகிறதோ?
இருபத்திநான்கு ஆண்டுகளுக்குமுன் பரிமளா யூ.எஸ். வந்ததற்கு தனியாக வாழவேண்டும் என்கிற ஆசையும் ஒன்று. ‘புடவையைப் படுக்கை மேலே போடாம உடனே மடிச்சு வைச்சா என்னவாம்?’ என்று மன்னி குறைப்பட்டுக் கொள்வதைக் கேட்கவேண்டாம். அவள் குழந்தைகள் ‘எப்போ டிவி பாக்கணும், எப்போ பாடம் படிக்கணும்னு எங்களுக்குத் தெரியும்’ என்று அலட்சியம் செய்வதைப் பொறுத்துப்போக வேண்டாம். கோர்னேல் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. செய்தபோது, ‘பெண் ரூம்-மேட் தேவை’ என்கிற விளம்பரக் குறிப்புகளை மின்தூக்கிகளிலும், மாணவர் அறிவிப்புப் பலகைகளிலும் பார்த்தது உண்டு. அவற்றின் கீழே கொடுத்திருக்கும் தொலைபேசி எண்களை ஞாபகத்தில் வைத்து அழைத்ததில்லை. இதாகாவில் அவளுக்கு நாலைந்து இந்திய மாணவிகளைத் தெரியும். சிலமாதங்களுக்கு ஒருமுறை யார் வீட்டிலாவது சாப்பிட ஒன்றுசேர்வார்கள். அவர்களுக்கெல்லாம் அவளைவிட பத்துப்பதினைந்து வயது குறைவு. அவர்களுடன் இரண்டு அல்லது மூன்று படுக்கைஅறைகள் கொண்ட அபார்ட்மென்ட்டைப் பகிர்ந்துகொள்ளப் பிடிக்கவில்லை. நடக்கும் தொலைவில் ஒற்றை அறையில் வாழ்க்கை. அதன் ஒருமூலையில் சமையல். இன்னொருபக்கம் கால்வைப்பதற்கு மட்டும் இடமளித்த ஒருகுளியலறை. துணிகளைப் படுக்கையில் எறியலாம். புத்தகங்கள் சோஃபாவின்மேல் இறைந்து கிடக்கலாம். சமைக்க சோம்பலாக இருந்தால் காய்பழங்களையும், வறுத்த வேர்க்கடலையையும் தின்று சமாளித்துவிடலாம். அழுக்குப் பாத்திரங்கள் தொட்டியில் நிறைந்துவிட்டன என்று மற்றவளுக்கு நினைவூட்டத் தேவையில்லை. இந்தவாரம் குளியலறையைச் சுத்தம் செய்வது யாருடையமுறை என்று விவாதிக்க வேண்டாம்.
மூன்று படுக்கையறைகள் கொண்ட அந்தத் தனிவீடு அவளொருத்திக்குப் பெரிதுதான். ஒதுக்குப்புறத்தில் இன்னொரு வீட்டுடன் ஒட்டியிருந்த சிறிய வீட்டின் விலைக்கே போக்குவரவு நிறைந்த சாலையைப்பார்த்த இந்தத் தனிவீடு கிடைத்தது. வீட்டுவாசலில் கார்களின் ஓட்டம் என்பதைத் தவிர வேறு குறையில்லை. பள்ளிக்கூடம் செல்ல பத்துநிமிஷம்தான். சாப்பிடும் இடத்துடன் கூடிய சௌகரியமான சமையலறை, அதை ஒட்டிய பெரிய கூடம். அவள் பயன்படுத்தும் பிரதான படுக்கை அறைக்கு எதிரில் அவள் அலுவலக அறை. பெரியமேஜையின் ஒருமூலையில் கணினி. மீதி இடத்தில் காகிதங்கள், வகுப்புப்பாடங்களின் சுருக்கங்கள், மாணவர்களின் தேர்வுத்தாள்கள். சுவர் தெரியாதபடி அலமாரிகள். அவற்றில் தாறுமாறாக அடுக்கிய புத்தகங்கள். அறையின் ஓரத்தில் உடற்பயிற்சிக்கான ஒற்றைச்சக்கர சைக்கிள். அதன் கைப்பிடியில் புத்தகத்தைப் பிரித்துவைக்க ஒரு பிளாஸ்டிக் தட்டு.
நடைவழியின் இறுதியில் சற்று ஒதுங்கியிருந்த அறையில் ஒரு படுக்கை, ஒரு மேஜை-நாற்காலி, அதற்கென்று ஒருதனி குளியலறை. வீதியின் ஓசை அங்கே இலேசாக காதில் விழும். அதனால் அதன் கதவு சாத்தியே இருக்கும். அது யாராவது விருந்தினர் வந்தால் தங்குவதற்கு. அப்போதுதான் அதைச் சுத்தம்செய்ய அங்கே போவாள்.
சான்டா க்ளாரா வந்தபோது, அந்த வீட்டைச் சுற்றிக்காட்டிய விற்பனைப்பெண் கலிNஃபார்னியாவில் வீட்டின்விலை ஏறிக்கொண்டுதான் இருக்குமென்று சத்தியம் செய்வதுபோல் சொன்னாள். அவள் வார்த்தை சமீபகாலம்வரை சரியாகத்தான் இருந்தது. கடந்த ஆறுமாதங்களில் விலை சரியத்தொடங்கி வாங்கியவிலைக்குக் கீழேயும் இறங்கிவிட்டது. அதுதான் அந்த வாரத்தின் முதல் கவலைதரும் செய்தி. மறுநாள், வங்கிகளும், கார் கம்பெனிகளும் படுத்ததால் கலிNஃபார்னியா ஆசிரியர் ஓய்வுக்கால சேமிப்பின் மதிப்பு சிலமாதங்களுக்குமுன் இருந்ததில் பாதியாகக் குறைந்துவிட்டதென இன்னொரு அறிக்கை. அதெல்லாம் போதாதென்று நேற்று வெண்டைக்காய் நறுக்கியபோது ஏதோ நினைவில் இடது கட்டைவிரலை ஆழமாகக் கீறிக்கொண்டுவிட்டாள். காகிதத்துண்டுகளால் காயத்தை அழுத்தினாலும் இரத்தம் உறையவில்லை. பயம் பிடித்துக்கொண்டது. இரத்தம் வடிவது நிற்காவிட்டால் உதவிக்கு யாரைக் கூப்பிடுவது? பத்துநிமிஷப் பிரயத்தனத்திற்குப்பின் ஆறாவது பான்ட்-எய்ட் இரத்தப்போக்கை மட்டுப்படுத்தியதுபோல் தோன்றியது. அடுத்த ஒருமணியில் இன்னுமிரண்டுமுறை இரத்தத்தில் ஊறிய பான்ட்-எய்டை சிரமப்பட்டு வலதுகையால் அழுத்தி மாற்ற வேண்டிவந்தது. நறுக்கிய காய்களைமட்டும் வைத்து கறியமுது செய்தாள். பாத்திரங்களைத் தேய்க்கக் கையுறை அணிந்தாள். இன்றும் அந்த விரலில் அடிபட்டால் இரத்தம் கசிந்தது. சென்ற வியாழனுக்கும் இன்றைக்கும் எவ்வளவு வித்தியாசம்?
சாதத்தையும் பருப்பையும் ப்ரெஷர் குக்கரில் சமைத்தபோது தரைப்பலகையில் காலூன்றுவதுபோல் சத்தம். முன்னொருமுறை பக்கத்துவீட்டுப் பூனை வீட்டினுள் நுழைந்து வெளியேறத் தெரியாமல் தொந்தரவு கொடுத்திருக்கிறது. வேலையை நிறுத்திவிட்டு சமையலறையையும் அதையொட்டிய கூடத்தையும் சுற்றிவந்தாள். அவளுடைய காலடிச்சத்தம்தான், எதுவும் கண்ணில் படவில்லை. பிறகு சாப்பிட்டு முடிக்கும்வரை எதிர்பாராத ஒலி எதுவுமில்லை.
மாதத்தின் முதல்தேதி என்பதால் சம்பளத்தின் விவரம், அனுப்பவேண்டிய பில்கள் எல்லாவற்றையும் அலுவலக மேஜைமேல் பரப்பிவைத்து நிதிநிலையை ஆராய்ந்தாள். வரிகள், சோஷியல் செகுரிடி, மெடிகேர், ஓய்வுக்கால நிதி, மருத்துவ இன்ஷ{ரன்ஸ் போக கைக்குவரும் சம்பளம் நாலாயிரத்துக்குக் கொஞ்சம் அதிகம். வீட்டுக்கடன், மின்சாரம், தண்ணீர், தொலைபேசி ஆகியவற்றின் பில்கள் மட்டுமே மூவாயிரத்தை எட்டின. கடன் அட்டையின் மாதாந்திரப் பட்டியலை ஆராய்ந்தாள். சூபர் மார்க்கெட், படேல் கடை, ‘லோடஸ்-ஈடர்ஸி’ல் சாப்பிட்டது, காருக்கு இரண்டுமுறை நிரப்பிய ‘காஸ்’, அதற்கு எண்ணெய் மாற்றிய செலவு, மருத்துவ சோதனைக்குக் கைவிட்டுக் கொடுத்த பணம் என்று மொத்தம் அறுநூற்றுச் சொச்சம் டாலர் காட்டியது. அனாவசிய செலவென்று எதைத் தவிர்த்திருக்க முடியும்? செக் புத்தகத்தில் காப்பீடுகளின் ஆறுமாதக் கட்டணம் செலுத்தியதற்கான பதிவுகள். காருக்கும், வீட்டிற்கும் பாதுகாப்பு அவசியம். அவள் உயிருக்கு இனி தேவையில்லை. அவள் இறந்தால் யாருக்கு நஷ்டம்? யோசனையில் பார்வையைத் திருப்பியபோது கண்ணாடி ஜன்னலில் நிழல்படிந்ததுபோல் ஒருதோற்றம். கூடத்திற்குச் சென்று வீட்டின் பின்புறத்து விளக்கைப் போட்டாள். சிறிய தோட்டத்தைச் சுற்றிலும் ஆளுயர மரவேலி. அங்கே யார் வரமுடியும்? திரும்பிவந்து வேலையைத் தொடர்ந்தாள்.
முந்தைய ஆண்டின் சம்பளம், செலுத்திய வரி ஆகியவற்றைக் குறிப்பிடும் ‘டபில்யு-2’ காகிதம் அன்று வந்திருந்தது. வரிப்படிவங்களை அனுப்ப ஏப்ரல் பதினைந்துவரை ஏன் காத்திருக்க வேண்டும், ஒருவேளை அரசாங்கத்திடமிருந்து பணம் திரும்பிவரலாமென்ற நப்பாசை. வரிகளைக் கணக்கிட ‘டாக்ஸ்-எய்ட்’ என்றொரு மென்பொருள். அதைத் துவக்கியதும் திரையில் கச்சிதமாக உடையணிந்த ஒருபெண் தோன்றி, “நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில்சொன்னால் போதும், மீதியை நாங்கள் பார்த்துக்கொள்வோம்” என்று இனியகுரலில் மொழிந்தாள்.
பெயர்?
பரிமளா கோலப்பன்
முகவரி?
123 பீட்மான்ட் வே, சான்டா க்ளாரா, கலிNஃபார்னியா.
பிறந்த தேதி?
நவம்பர் 14, 1949
திருமண உறவு?
தனித்துவாழும் பெண்.
சார்ந்தவர்களின் எண்ணிக்கை?
பூஜ்யம். முன்பு அவள் அண்ணனின் இரண்டு குழந்தைகளுக்கும் நிறைய செலவுசெய்திருக்கிறாள். கண்ணாடி போட்டுக்கொள்ள வேண்டும், கல்லூரியில் சேர தலைவரி, சேர்ந்தபிறகு இருசக்கர வண்டி, இப்படி ஏதாவது விண்ணப்பம் வந்துகொண்டே இருக்கும். ஆனால் அவர்களை வரிக்கணக்கில் சேர்க்க சட்டம் அனுமதித்ததில்லை.
குடியரசுத்தலைவர் தேர்தலுக்கு காணிக்கையாக மூன்று டாலர்?
தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.
தொழிலும், வேலைசெய்யும் நிறுவனமும்?
ஆசிரியை. வில்பர்ட் உயர்நிலைப்பள்ளி, சான்டா க்ளாரா, கலிNஃபார்னியா.
ஆண்டு சம்பளமும் செலுத்திய வரிகளும்?
59,755 டாலர். மத்திய அரசின் வரி 8,400. கலிNஃபார்னியா வரி 3,000.
பிற வருமானம்?
கோர்னேல் பல்கலைக் கழகத்திலிருந்து டாலர் 12,500. ஒவ்வொரு கோடையிலும் பரிமளா எட்டுவாரங்கள் அங்கே சென்று ஸ்ரீஹரிராவின் ஆராய்ச்சியில் உதவி செய்வாள். அந்த சமயத்தில் ஊரில் இல்லாத பேராசிரியர் இல்லங்களில் தங்க அதிகம் செலவில்லை. எட்டாயிரம் டாலராவது மிஞ்சும். அத்துடன் பாடத்தை மறக்காத திருப்தி. பலவருஷங்களாக நடப்பதால் வரும் ஆண்டிலும் அதை எதிர்பார்த்தாள். ஆனால், இரண்டு நாட்களுக்குமுன் ஸ்ரீஹரிராவிடமிருந்து வந்த ஏமாற்றம் தரும் மின்-தபால். மானியத்தில் பெரும்பகுதி வெட்டப்பட்டதால் பணநெருக்கடி. வரும் கோடையில் அவளை ஆதரிக்க இயலாததற்கு வருத்தம் தெரிவித்திருந்தார். அவரே தன் சம்பளத்தில் இருபது சதவீதம் குறைத்திருந்தார். அவளை உற்சாகப்படுத்த வேறு ஏதாவது வாய்ப்பு தெரியவந்தால் உடனே தொடர்புகொள்வதாகக் கடிதத்தை முடித்திருந்தார்.
வட்டி, பங்கு வருமானம்?
க்ரெடிட் யுனியன் மற்றும் வான்கார்டின் மூலம்: 1,253 டாலர்.
வாடகை வருமானம்?
இதுவரை இல்லை.
ஓய்வுக்கால சேமிப்பிற்கு?
மதிப்பை இழந்தாலும் ஓய்வுக்கால நிதியில் கொஞ்சம் பணம் போட்டுத்தானாக வேண்டும், வேறுவழி?
எல்லா விவரங்களையும் ஜீரணித்து ‘டாக்ஸ்-எய்ட்’மங்கை கொடுத்த பதில் பரிமளாவுக்கு சந்தோஷம் தரவில்லை. ஏற்கனவே அவள் செலுத்தியதுபோக, இன்னும் 3,600 டாலர் கூட்டு அரசுக்கும், 1,500 டாலர் மாநில அரசுக்கும் ஏப்ரல் பதினைந்துக்குள் செலுத்த வேண்டும். அவளுடைய மொத்த வரிகளையும் கூட்டிப்பார்த்தாள். ஆண்டு வருமானத்தில் மூன்றிலொரு பங்குக்கும் அதிகம். அந்தக்காலத்து அரசர்கள் தேவலை, ஆறிலொரு பங்கோ, நான்கிலொரு பங்கோதான் வாங்கினார்களாம். பரிமளாவின் வரிச்சுமையின் முக்கிய காரணம், சட்டங்கள் தனியாக வாழும் ஒருத்திக்கு ஆதரவாக இருப்பதில்லை. எல்லா பெண்களையும்போல் குடும்ப வாழ்க்கையை ஏற்காதற்கு அரசாங்கம் தரும் தண்டனை. இதே சம்பளத்தில் கணவன், நான்கு குழந்தைகளுடன் வாழுமொருத்திக்கு ஆயிரம் டாலர் வரிதான். பரிமளாவின் பணத்தை வைத்துத்தானே அரசாங்கம் அந்த நான்கு குழந்தைகளுக்கு உதவ வேண்டும். அந்தப் புண்ணியம் அவளுக்கா, அரசாங்கத்திற்கா?
அவள் எழுந்து பல்தேய்த்தபிறகு படுக்கச்சென்றாள். படுக்கையை ஒட்டி அங்குமொரு அலமாரி. புத்தகங்களின் முதுகுகளில் பெரும்பாலும் சமஸ்க்ருத எழுத்துக்கள். அவள் கையில் கிடைத்த புத்தகம் வால்மீகியின் சுந்தரகாண்டம். கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டு, படுக்கையில் படுத்துக்கொண்டே சிறிதுநேரம் படித்தாள்.
கல்யாணீ ப3த காதே2யம் லௌகிகீ ப்ரதிபா4தி மே
ஏதி ஜீவந்தமாநந்தோ3 நரம் வர்ஷதாத3பி
என்ற சுலோகம் வந்தபோது அதை வாய்விட்டு இரண்டுமுறை படித்தாள். மனம் சாந்தமடைந்தது.
படிக்கும் விளக்கைத் தொட்டவுடன் அது அணைந்தது. ஆனால் தூக்கம் உடனே வரவில்லை. வருமானம் குறைந்ததால் அதை ஈடுசெய்யும் வழிகளை மனம் தேடியது. ஒவ்வொரு ஆண்டும் பீடர் பெல்லானியைப் போன்ற சிறந்த மாணவர்களைப் பல போட்டிகளுக்குத் தயார்செய்திருக்கிறாள். அதற்காக பள்ளிக்கூடம் தரும் சம்பளத்திற்குமேல் யாரிடமும் சன்மானம் வாங்கியதில்லை. இப்போது கேட்பது அற்பமாகப் பட்டது. மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பாடம் சொல்லித்தரும் சில்வன், குமான் போன்ற நிறுவனங்களுக்கு உதவி வேண்டுமா என்று கேட்டுப் பார்க்கலாம். மாலைவேளைகளிலும் சனிக்கிழமைகளிலும் வேலைக்குச் சென்றால் போதும். ஆனால் அதுபோன்ற குறுக்குவழிகளில் கல்விகற்பது தவறென்று நினைக்கிறவள் தன் கொள்கையை விட்டுக்கொடுப்பது நியாயமா? அத்துடன், இத்தனை ஆண்டுகளாக அவள் வளர்த்துக்கொண்ட வழிமுறைகளை மறந்துவிட்டு அவர்கள் வரையறுக்கும் முறையில்தான் பாடத்தைப் புகட்டவேண்டும். ஆசிரியைக்குரிய சுதந்திரத்தை இழப்பது அவசியமா?
கதவை மிகமிக மெதுவாகத் திறப்பதுபோன்ற ஒலி. கவலையில் தன்னுடைய பிரமையாக இருக்குமென்று சமாதானம் செய்துகொண்டாள். அவள்வீடு பாதுகாவல் நிறுவனத்தின் கண்காணிப்பில் இருந்தது. பகல்நேரத்தில் யாரும் வந்திருக்கமுடியாது. அவள் வீட்டிற்குள் வந்தவுடனேயே ரகசிய எண்களை மானிடரில் பதித்துவிட்டாள். பிறகு புகுவதற்கு வாய்ப்பில்லை. யாராவது வந்திருந்தால் அவளுடன் நுழைந்திருக்க வேண்டும். வீட்டுக்குள் வந்ததை நினைத்துப்பார்த்தாள். இந்தியஉணவு கடைக்கும், அதன் பக்கத்திலேயே இருந்த சூபர் மார்க்கெட்டிற்கும் சென்றுவந்தாள். வழக்கமாக வாங்கும் சாமான்களுடன் ஐஸ்க்ரீம். கார் கராஜில் நுழைந்து பாதிவழியில் நிற்கிறது. காலையில், காலியான பிளாஸ்டிக் பால்புட்டியைக் கூடையில் எறிந்தபோது அது கவிழ்ந்து அதிலிருந்த மற்றபுட்டிகளும் தரையில் சிதறின. கிளம்பும் அவசரத்தில் எடுத்துவைக்க நேரமில்லை. அவற்றை அகற்றினால்தான் கடைசிவரை கார் செல்லமுடியும், கராஜின் கதவையும் இறக்கமுடியும். அதற்குமுன் ஐஸ்க்ரீமைக் கவனிப்பதுதான் முக்கியம். அது உருகுவதற்குள் அதைக் கையிலெடுத்து வீட்டினுள் நுழைந்து ஃப்ரீஸரில் வைத்துவிட்டுத் திரும்புகிறாள். அரைநிமிடம்கூட கடந்திருக்காது. பால்புட்டிகளைப் பொறுக்கி கூடையில் அடுக்கிக் காரை முன்னால் நகர்த்தி கராஜின் கதவை சாத்துகிறாள். இரண்டு நிமிடங்கள், அவ்வளவுதான்.
இப்போது சமையலறையிலிருந்து சத்தம் வந்தது. சந்தேகமே இல்லை, யாரோ இருக்கிறார்கள். பாதுகாவல் நிறுவனத்தை அழைப்பதா, இல்லை போலிஸ_க்குத் தெரிவிப்பதா என்றுதான் கேள்வி. அனாவசிய அழைப்புகளால் தூக்கம் கெடுவதைத் தவிர்க்க பரிமளா படுக்கைக்கு அருகில் தொலைபேசி வைத்துக்கொள்ளவில்லை. கண்ணாடியை மாட்டிக்கொண்டு மெதுவாகக் காலடிவைத்து கூடத்தின் பக்கம் பார்த்தபோது ரெஃப்ரிஜரேட்டரின் கதவைத் திறந்ததால் தரையில் பரவிய வெளிச்சம். நிஜமாகவே அவளை பயம் பற்றிக்கொண்டது. அலுவலக அறைக்குள் வேகமாக நுழைந்து தொலைபேசியைக் கையிலெடுத்து…
“மிஸ் பரி! தயவுசெய்து யாரையும் கூப்பிடாதே! நான்தான்.”
திரும்பிப்பார்த்தாள். நடைவழியின் விளக்கு எரிந்தது. அதன் மங்கிய ஒளியில் பதினெட்டுவயதுப் பெண். உடலோடு ஒட்டிய ஜீன்ஸ், அதற்குமேல் சான்ஹொசே ஸ்டேட் பல்கலைக்கழகம் பெயர்போட்ட மஞ்சள்சட்டை, முதுகில் மட்டுமின்றி சட்டைக்கு முன்னாலும் படிந்த நீண்ட கூந்தல், இளமையின் துடிப்பைக் காட்டும் முகம்.
‘ஏபி ஸ்டாட்’ வகுப்பில் படிக்கும் அனிடா ஜென்சென். “ஐ’ம் சாரி, மிஸ் பரி!” என்றாள் மன்னிப்புக்கோரும் குரலில்.
நிம்மதியாக ஒலிவாங்கியை அதனிடத்தில் வைத்த பரிமளாவுக்கு அனிடாமேல் கோபம் ஏற்படவில்லை. இருந்தாலும் ஆசிரியைக்குரிய அதிகாரத்தைக் குறைக்காமல், “நீ வந்தது தப்பில்லை. ஆனால் என்னை இப்படி பயமுறுத்தியிருக்க வேண்டாம். தனியாக வசிக்கும் எனக்கு எப்படி இருக்குமென்று யோசித்துப்பார்!” என்றாள்.
அனிடா தலைகுனிந்தாள். “உன்னைப் பயப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை, மிஸ்!”
“எப்போது, எப்படி வந்தாய்?”
“நீ வீட்டிற்கு வரும்வரை வாசலில் புதருக்குப் பின்னால் ஒளிந்திருந்தேன். நீ கராஜின் கதவை மூடாமல் வீட்டிற்குள் சென்றபோது அதில் நுழைந்தேன். நீ ஐஸ்க்ரீமை வைத்தபோது சாப்பாட்டுமேஜைக்கு அடியில் குனிந்தேன். பிறகு நீ கராஜிற்குள் சென்று மற்ற சாமான்களை எடுத்துவருவதற்குள் கோடி அறைக்குப் போய்விட்டேன்.” பரிமளா ஊகித்த பதில்தான்.
“இவ்வளவு நேரம் சாப்பிடாததால் பசி. என் புத்தகப்பையிலிருந்த சீரியல் பார் எப்போதோ ஜீரணமாகிவிட்டது. நீ தூங்கிவிட்டதாக நினைத்து ‘ப்ரிஜ்’ஜைத் திறந்தேன்.”
“சரி, முதலில் எதாவது சாப்பிடு!”
கூடத்தின் வழியாக சமையலறைக்கு வந்தார்கள். சாப்பாட்டு மேஜையருகில் மெத்தைவைத்த நாற்காலியைப் பரிமளாவிற்கு ஒதுக்கிவிட்டு சற்றுத்தள்ளி கைப்பிடி இல்லாத மர நாற்காலியில் அனிடா அமர்ந்தாள்.
பரிமளா சுற்றிலும் பார்வையை ஓடவிட்டு, “நீ சாப்பிடும்படி என்ன இருக்கிறதென்று பார்க்கலாம்” என்றள். “ஏழுதான்யங்கள் போட்ட சீரியல், முழுக்கோதுமை ப்ரெட், நானே தயாரித்த பனானா-நட் மஃபின், எது வேண்டும்?”
“அத்தனையும்” என்று சிரித்தாள் அனிடா.
அவற்றை அவள்முன் வைத்துவிட்டு பரிமளா அவளுக்குரிய நாற்காலியில் உட்கார்ந்து அனிடா சாப்பிடும் வேகத்தைக் கண்டு பிரமித்தாள். சீரியலை விழுங்கி, மஃபினைத் தின்று, வெண்ணெய் போடாத டோஸ்ட் ஒன்றை முடித்து, “இன்னொன்று, ப்ளீஸ்!” என்றாள்.
அதைத் தந்ததும் பரிமளா, “சரி! எதற்கு வீட்டைவிட்டு ஓடிவந்தாய்?” என்று கேட்டாள்.
“மிஸ் பரி! கவலைப்படாதே!” என்று அவள் பரிமளாவை சமாதானப்படுத்தினாள். “நான் வீட்டிலிருந்து ஓடிவிடவில்லை. பள்ளிக்கூடம் முடிந்ததும் இரண்டுமைல் நடந்துதான் இங்கே வந்தேன். என்ன செய்வது? பள்ளிக்கூட பஸ் இங்கே வருவதில்லையே. வீட்டில் என் அம்மாவும் அப்பாவும்தான். என் சகோதரியைப் பார்க்க அவர்கள் காலையிலேயே ரீனோவுக்குக் கிளம்பிவிட்டார்கள். ஞாயிறுமாலைதான் திரும்புவார்கள். உன்னைச் சந்திக்கத்தான் வந்தேன்.”
“இன்று வகுப்புகள் முடிந்ததும் ஒருமணி பள்ளியில்தானே இருந்தேன். அங்கேயே என்னைக் கேட்டிருந்தால் உன் சந்தேகத்தைத் தீர்த்திருப்பேனே.” எப்போதும் மாணவர்களைப் பரிமளா ஒருவேலிக்கு வெளியில் வைத்திருந்தாள். அவர்களும் அந்த எல்லையின் மறுபுறத்திலிருந்துதான் அவளுடன் பேசுவது வழக்கம். மாணவர்கள் அவளை அணுகினால், ஒன்று பாடத்தின் சந்தேகத்தைத் தீர்க்க, அல்லது பல்கலைக்கழக விண்ணப்பத்திற்குப் பரிந்துரை கேட்க. மற்றபடி, யாரும் அவளிடம் அரசியலை விவாதித்ததில்லை, சொந்தப்பிரச்சினையைச் சொல்லத்துணிந்ததில்லை. பீடர் பெல்லானியிடம்கூட அவள் கடவுள்நம்பிக்கை பற்றிப்பேசவில்லை.
“இது பாடம் சம்பந்தப்பட்டதல்ல. உன் உலக அறிவுக்காக.” உன் என்பதை அனிடா அழுத்திச்சொன்னாள். “ரீனோவில் இருக்கும் என் அக்கா க்ரிஸ்ஸி, என்வயது சினேகிதிகள், யாரிடமும் அதைக் கேட்கமுடியாது.”
பரிமளாவுக்கு ஆச்சரியம். அவளுடைய அமெரிக்க வாழ்க்கை விரிவானதென சொல்வதற்கில்லை. எந்தப் பல்கலைக்கழகத்தில் எந்தப் பாடம் படிக்கலாம் என்று சொல்லலாம். படித்தபின் எப்படிப்பட்ட வேலைவாய்ப்புகள் காத்திருக்கும் என்றும் அறிவுரை தரலாம். மற்றபடி?
“உன்கண்ணில் படாமல் வீட்டிற்குள் வருவது சவாலாக இருந்தது. வந்தவுடன் நீ என்ன சொல்வாயோ என்று பயம். கோடிஅறைக்குச் சென்று மறைந்துகொண்டேன். நீ பார்க்காதபோது நழுவிவிட நினைத்தேன். பிறகு, நீ தனியாக எப்படிப்பட்ட வாழ்க்கை நடத்துகிறாய் என்று தெரிந்துகொள்ள ஆவல். திருட்டுத்தனமாக கவனித்தேன்.”
“நீ கடைசி அறையில் இருந்துகொண்டு, என்னை எப்படி கவனித்திருக்க முடியும்?”
அனிடாவின் குறும்புப் புன்னகை பரிமளாவை மயக்கியது. “நீ செய்ததெல்லாம் சொல்லட்டுமா? கடையில் வாங்கிவந்த சாமான்களை எடுத்துவைத்தாய். உடை மாற்றிக்கொண்ட பிறகு வானொலியில் ‘ஆல் திங்ஸ் கன்சிடர்ட்’ கேட்டுக்கொண்டே சமைத்தாய். நல்ல வாசனை. அப்போதே என்னை வெளிப்படுத்திக் கொள்ளலாமா என்று ஆவல். ஆனால் கட்டுப்படுத்தினேன். சமையல்வேலை முடிந்ததும் அலுவலக அறையில் சீரியஸாக ஒருமணி. படுக்கச்சென்ற பிறகு சிறிதுநேரம் படித்தாய். ஒருசமயம் சத்தமாக ஏதோ சொன்னாய். கேட்க காதுக்கு இனிமையாக, மனதுக்கு அமைதியாக இருந்தது, ஆனால் அது எனக்குத் தெரியாத மொழி. சரியா?”
“கிட்டத்தட்ட. நீ புத்திசாலி என்பதில் சந்தேகமில்லை. போன செமிஸ்டரில் செப்டம்பர் மாதத்திற்கு வகுப்பின் சிறந்த மாணவியாக உன்னைத் தேர்ந்தெடுத்தேன், நினைவிருக்கிறதா? சமீபத்தில் உன்கவனம் குறைந்துவிட்டது. அதற்காக ஸ்டாட் கணிதப்போட்டிக்கு நான் ஆனந்த் கிருஷ்ணாவை அனுப்ப முடிவுசெய்தேன்.”
“நீ செய்தது முற்றிலும் சரி. தவறு என்மேல்தான்.”
“நானே உன்னை அழைத்து புத்திமதி சொல்லவேண்டுமென இருந்தேன். உனக்கு என்ன ஆயிற்று?”
அனிடா அவள் கேள்விக்குப் பதில்சொல்லாமல் மழுப்பினாள். “யு நோ வாட், மிஸ் பரி! உன்னுடைய மாலைப்பொழுது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்று பாராட்டினாள்.
“தாங்க்ஸ்!”
“என்னுடய வீட்டில் நடப்பதோடு பார்த்தால்…” என்று சேர்த்தாள். “என் அம்மா ஆறுமணிக்கு பசியோடு வருவாள். வந்ததும் சத்தமாக டிவி பார்த்துக்கொண்டே தட்டுநிறையத் தீனி தின்பாள். அப்பா வருவது ஏழுக்குமேல். பிறகுதான் எதாவது சமைக்கலாமா என்ற யோசனை. அவரவருக்குப் பிடித்தமான டிவி டின்னர், இல்லையென்றால் கடையிலிருந்து தருவிக்கப்பட்ட சாப்பாடு. காலைவரை பாத்திரங்கள் குழாயடியில் அப்படியே கிடக்கும். தூங்கப்போக பன்னிரண்டாவது ஆகும். அதுவரை அற்ப விஷயங்களைப் பற்றி அர்த்தமற்ற பேச்சு. எனக்குப் பாடம்படிக்க வேண்டுமென்ற ஆசையே இருக்காது. நீ சமைத்துச் சாப்பிட்டபோது நான் ஹோம்வொர்க்கை முடித்துவிட்டேன். இங்கே அப்படியொரு அமைதி, அறிவைப் பெருக்கும் சூழ்நிலை.”
“நீ இருந்த அறையில் கார்கள் போகும் சத்தம் கேட்டிருக்குமே.”
“அதுகூட தொந்தரவாக இல்லை. அப்புறம், அங்கே ஒருபெட்டியில் நீ வெளியிட்ட ‘ரான்டம் அன்ட் சான்ஸ்’ புத்தகங்கள். ஒன்றை எடுத்துப் பார்த்தேன். சுவாரசியமாக இருக்கும்போல் தெரிகிறது. ‘வின்டர் ப்ரேக்’கில் படிக்க நான் எடுத்துச்செல்லலாமா?”
“படித்துவிட்டு நீயே வைத்துக்கொள்ளலாம்.”
“தாங்க்ஸ், மிஸ் பரி!”
“எல்லாம் சரிதான், இங்கே எதற்கு வந்தாய்?” பரிமளா அவளை விடவில்லை.
“எனக்கொரு பிரச்சினை.”
யூ.எஸ்.ஸில் அழகான பிளாட்டினநிறக் கூந்தலோடு இருக்கும் ஓர் இளம்பெண்ணின் பிரச்சினை எதுவாக இருக்கும் என்பதில் பரிமளாவுக்கு துளிக்கூட சந்தேகமில்லை. படிப்பில் அவள் அக்கறைவேறு குறைந்திருக்கிறது. “நீ தவறான இடத்திற்கு வந்திருக்கிறாய், பெண்ணே! நான் என் வாழ்நாளில் ‘கான்டோமை’ப் படத்தில்தான் பார்த்திருக்கிறேன். நீ பள்ளிக்கூட நர்ஸிடம் அறிவுரை கேட்டிருக்கலாம். அதைவிட ‘ப்ளான்ட் பேரன்ட்வுட்’ உடனே போவது இன்னும் நல்லது. இரண்டுநாட்களுக்குள் நடந்ததென்றால் ‘ப்ளான் பி’ தருவார்கள். அதையும் தாண்டிப்போயிருந்தால் கருவைக் கலைக்க பெற்றோர்களின் அனுமதி தேவையில்லை, இது கலிNஃபார்னியா, மிசிசிப்பி இல்லை. அவர்கள் என்னமோ ஊரிலில்லை என்று சொன்னாய்.”
அனிடா பலமுறை கையை உயர்த்தினாள். அவள் குறுக்கீட்டைக் பொருட்படுத்தாமல் பரிமளா தான் சொல்லவந்ததை வேகமாகச் சொல்லிமுடித்தாள்.
“நீ என்ன நினைக்கிறாய் என்று தெரியும். என் பிரச்சினை அதுவல்ல. உண்மையில் அதற்கு எதிரானது.”
அப்படியென்றால் சினேகிதன் வற்புறுத்துகிறான் போலிருக்கிறது. அதற்கும் பரிமளா பதில்வைத்திருந்தாள். “என்னிடம் அறிவுரை கேட்பதில் அர்த்தமில்லை. நீ பிற்பகல் ரேடியோவில் எல்லோரையும் எடுத்தெறிந்து பேசும் டாக்டர் தாராவைக் கேட்டால் தொந்தரவுதரும் பாய்-ஃப்ரென்டை எப்படி சமாளிப்பதென்று விவரமாகச் சொல்வாள்.”
“சில் இட்! மிஸ் பரி! நீ ஏன் என்னைத் துரத்துவதில் இ;வ்வளவு அவசரம் காட்டுகிறாய்?”
பரிமளாவுக்கும் தன்னுடைய பரபரப்பு அனாவசியமாகப் பட்டது. “நீ என் நிலையை உணரவேண்டும்! எனக்கு இப்போது எதிர்பாராத பல பிரச்சினைகள். அவற்றுடன் இன்னொன்றைச் சேர்க்க இஷ்டமில்லை, அதனால்தான்.”
எப்போதோ சாப்பிட்டு முடித்திருந்த அனிடா எழுந்தாள். “நாம் ஒரு ஒப்பொந்தம் செய்துகொள்வோம். என் பிரச்சினைக்கு நீ அறிவுரை தந்தால் உன் பிரச்சினைகளில் நான் உதவிசெய்கிறேன்.”
அதை ஏற்பதுபோல் பரிமளா மௌனமாக இருந்தாள்.
அனிடா தான் சாப்பிட்ட தட்டுகளையும், ஏற்கனவே தொட்டியில் ஊறவைத்த பாத்திரங்களையும் கழுவி வடிகட்டியில் சாய்த்தாள். “காலையில் விவரமாகச் சொல்கிறேனே. பதினோருமணிக்கு மேலாகிறது. ஏற்கனவே உன் தூக்கத்தைக் கலைத்துவிட்டேன்.”
பரிமளாவுக்கும் அமைதி தேவைப்பட்டது. “அனிடா! நீ ஒளிந்திருந்த அந்தக் கடைசி அறையில் தூங்கலாம்” என்று எழுந்தாள். “என் அண்ணனின் பெண் விட்டுச்சென்ற ‘நைட்-கௌனை’த் துவைத்து அலமாரியில் மாட்டியிருக்கிறேன். அதைப் போட்டுக்கொள்!”
“அப்படியே செய்கிறேன்” என்று அந்த அறையை நோக்கிக் காலடிவைத்த அனிடா நின்று, பரிமளாவை நேராகப் பார்த்தாள். குரலில் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் தயக்கம். “மிஸ் பரி! சிறுபிள்ளையைப்போல் முடிவை யோசிக்காமல் திருட்டுத்தனமாக உன் வீட்டில் நுழைந்ததும், உன்னிடமிருந்து ஒளிந்திருந்ததும் தவறு. நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது” என்றாள்.
“பரவாயில்லை, அதைச் சரிப்படுத்த முடியுமா என்று நாளை பார்க்கலாம். குட்நைட், அனிடா!”
“குட்நைட், மிஸ் பரி!”

Series Navigation

அமர்நாத்

அமர்நாத்