உலகங்கள் விற்பனைக்கு

This entry is part [part not set] of 33 in the series 20100725_Issue

ராபர்ட் ஷெக்லி தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா


(Robert Shecley- 1928-2005) -அமெரிக்க எழுத்தாளர். கேலக்ஸி என்ற அறிவியல் புனைகதைகளுக்கான இதழில் முதல் அறிவியல் புனைகதையை தமது பதினெட்டு வயதில் எழுதியிருந்தார். 1950லிருந்து தீவிரமாக எழுதத் தொடங்கிய அவர் சிறுகதைகள் பெருங்கதைகளென நிறைய படைத்திருக்கிறார். அவரது படைப்புகள் மனிதவாழ்க்கையின் அபத்தங்களுக்கெதிராக கடுமையான விமர்சனமாகும். Journey beyond Tomorrow(1962), Dimension of Miracles, (1968) ஆகியவை அவற்றில் குறிப்பிடத் தகுந்தவை. The Store of the Worlds(1959) என்ற இச்சிறுகதை, தற்போதுள்ள பொருளாதாரச் சூழலுக்கும் எத்தனைக் கச்சிதமாக பொருந்துகிறதென்று வாசிக்கிறபோது புரியவரும்.)

ஒருவழியாக சாம்பல்நிற இடிபாடுகளையெல்லாம் கடந்து கடைசியாக அந்த இடத்திற்கு வந்ததும், ‘உலகங்கள் விற்பனைக்கு’ என்ற பெயர்ப்பலகைகொண்ட அக்கடை சட்டென்று எதிர்கொண்டது. மரப்பலகைகள், மோட்டார் வாகனங்களின் ஓட்டை உடைசல்கள், நெளிந்தும் வளைந்துமிருந்த உலோகத்தகடுகளுகள், பழைய செங்கற்களிலான தடுப்புகளென்று கடை அச்சு அசலாக நண்பர்களின் தகவல்களுக்குக் கச்சிதமாக பொருந்தியது.

தம்மையாரும் பின்தொடர்ந்து வந்திருக்கக்கூடுமோ என்ற அச்சத்தில் மிஸ்டர் வைய்ன் தலையைத் திருப்பி வந்தவழியைப் பார்த்தார். ஒருவருமில்லை என்ற திருப்தியில் கைவைசமிருந்த பொதியை இறுகப் பிடித்தபடி, கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தார். இத்தனை துணிச்சல் தமக்கு எங்கிருந்து வந்ததென்று அவருக்கு வியப்பு.

– வணக்கம்! வாங்க.. என்ற கடைகாரரைப் பார்த்தார். சிறிய கண்கள், நல்ல உயரம். வயது முதிர்ந்தவர் என்பதோடு பலே ஆசாமியாகவும் தெரிந்தார். டாம்க்கின்ஸ் என்ற பெயர்கொண்ட அவரைப்பற்றிய தகவல்களிலும் நண்பர்கள் உண்மையைச் சொல்லியிருக்கிறார்கள். மனிதர் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நாற்காலியின் முதுகுப்பக்கமாக கரும்பச்சைநிறத்தில் ஒரு கிளியொன்று உட்கார்ந்திருந்தது. கூடுதலாக அங்கே ஒரு நாற்காலியும் மேசையுங்கூட இருந்தன. மேசைமீது ஒரு சிரிஞ்சியும் துருபிடித்த ஊசியொன்றுமிருந்தன.

– உங்கள் கடையைப் பற்றி நண்பர்கள் சொல்ல நிறைய கேள்விப்பட்டு வந்திருக்கிறேன்.

– அப்போது உங்களுக்கு அதற்கான விலையென்னவென்று தெரியும். புதிதாக நானெதுவும் சொல்லவேண்டியதில்லை. கொண்டுவந்திருக்கிறீர்களில்லையா?

– ஆமாமாம், என்றவாறு கைவசமிருந்த சிறுபொதியைக் கடைகாரரிடம் கொடுக்கப்போனவர் சில நொடிகள் தயங்கினார். அதற்குமுன்னே எனக்கு சில விபரங்கள் தெரிந்தாக வேண்டுமே.

– ம்.. இங்கே வருகிறவர்கள் எல்லோருமே ஒரேமாதிரிதான் இருக்கிறார்கள், – தம் கிளியைப் பார்த்து கண்ணைச் சிமிட்டினார் கடைகாரர்.

– நீங்கள் தப்பாக எடுத்துகொள்ள மாட்டீர்களென நினைக்கிறேன். உண்மையில் என்ன நடக்கிறதென்று தெரிந்து கொள்ளவேண்டுமென்ற ஆர்வம் எனக்கு அதிகம்.

– ஆரம்பிச்சாச்சா? ம். சலித்துக்கொண்ட கடைகாரர் தொடர்ந்தார். எனக்குவேண்டிய கட்டணத்தைச் செலுத்தினீரென்றால் உங்களுக்கொரு ஊசி ஏற்றுவேன், நீங்கள் மயக்கமடைவீர்கள். பிறகு கடையில் சிறியதொரு கருவியுண்டு அதன் மூலம் உங்கள் ஆன்மா விடுதலை பெற ஏற்பாடு செய்வேன், அது தவிர வேறென்ன, என்றவர் தமது பேச்சை கிளியிடம் பகிர்ந்துகொள்ள விரும்பி அதன்பக்கமாக நமட்டுச் சிரிப்பொன்றினை வெளிப்படுத்தினார்.

– அப்புறம்?

– அப்புறமென்ன, ஒவ்வொரு நொடியும் தனக்கிணையாக பல உலகங்களை பூமி வெளியேற்றிக்கொண்டிருக்கிறதில்லையா அவற்றிலொன்றை உடலிலிருந்து விடுதலைபெறும் உங்கள் ஆன்மா தேர்வு செய்தாக வேண்டும்.

இம்முறை கடைகாரர் ஓரளவு கூடுதலாகவே எள்ளலுடன் சிரித்தார். பிறகு சட்டென்று ஒர் இளைஞருக்கான உத்வேகத்துடன் சாய்வு நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

– நீங்கள் நம்பமாட்டீர்களென்று தெரியும். ஒன்று சொல்லட்டுமா, என்றைக்கு எரியும் சூரியனின் வயிற்றிலிருந்து பூமி வெளியேற்றப்பட்டதோ அன்றைக்கே தம்மையொத்த உலகங்களை அது படைக்க ஆரம்பித்துவிட்டது. பிரார்த்தனை மணிமாலையைக் கையிலெடுத்ததுபோல இடைவிடாமல் அது தொடர்கிறது. குளத்தில் கல்லெறிகிறபோது அடுக்கடுக்காய் பிறக்கும் அலைகள்போல சின்னவை பெரியவை, அலெக்ஸாண்டர்கள் அல்லது அமீபாக்களென வரிசைவரிசையாய் சாத்தியப்படும் வகைகளில் உலகங்கள் பூமியிலிருந்து தோன்றியவண்ணமிருக்கின்றன. தாய்பூமியைப் பற்றிச் சொல்கிறபோது அதற்கு நான்கு பரிமாணங்கள் என்கிறோம். அதன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு மூன்று பரிமாணங்கள். கணங்கள்தோறும் ஒன்று மற்றொன்றை முடிவின்றி பிரசவித்துக்கொண்டிருக்கிறது. இங்கே கோடிக்கணக்கில் உலகங்கள் இருப்பதென்பது கற்பனையல்ல நிஜம். ஆக என்னால் விடுவிக்கபட்ட ஆன்மா அவற்றிலொன்றில் சிறிது காலம் வாழ்ந்து திரும்பும்.

கடைகாரர் பேச்சு பொருகாட்சித் திடலில் எல்லாபிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் அதிசயப்பொருள் தம்மிடமிடமிருக்கிறதென கதையளக்கும் விற்பனையாளர்களை நினைவூட்டியது. மிஸ்டர் வைய்னுக்கு அவைகளை நம்புவதா கூடாதா என்பதில் குழப்பம். தவிர வைய்ன் வாழ்க்கையில் இன்னதுதான் என்றில்லை வியப்பூட்டும் வகையில் என்னென்னவோ நடந்திருக்கிறது. அப்படியிருக்கிறபோது கடைகாரர் பேச்சையும் நம்பினால் என்ன கெட்டுவிடப்போகிறதெனவும் நினைத்தார்.

– மிஸ்டர் டாம்க்கின்ஸ் என்னுடைய நண்பர்கள் வேறு சிலதையும் கூறினார்கள்.

– தொழிலில் நான் சுத்தமான ஆசாமி என்றிருப்பார்கள், இல்லையா?

– இல்லை. சொல்ல வந்ததுவேறு. நான் கொஞ்சம் வெள்ளந்தியான ஆசாமி, அதனாலே நண்பர்கள் என்ன சொன்னார்களென்றால்…. மிஸ்டர் வைய்ன் வாக்கியத்தை முடிக்கவில்லை கடைகாரர் குறுக்கிட்டார்.

– புரியுது புரியுது, நல்ல மனிதரான உங்களிடம் அந்தரங்க ஆசைகள் சிலவற்றை நிறைவேற்றிக்கொள்ளவும் இங்கே வழியுண்டென்று உங்கள் தப்பான நண்பர்கள் சொல்லியிருக்கக்கூடும். சரிதானே?

– உண்மை. நான் விரும்பியவற்றை அல்லது வேண்டியவற்றை இந்த அனுபவக்காலத்தில் பெறலாமென்று நர்கள் கூறியிருந்தார்கள்.

– நிச்சயமாக! அப்படி இல்லையெனில் இதிலே உங்களுக்கு என்ன லாபம். உங்கள் ஆன்மாவிற்கு என்னவெல்லாம் ஆசைகளுண்டோ அவைகளெல்லாம் உங்களுக்குக் கிட்டும். நீங்கள் தேர்வு செய்யவிருக்கிற உலகம் உங்கள் ஆன்மாவின் விருப்பங்களைச் சார்ந்தது. இன்னும் சொல்லப்போனால் மிகவும் இரகசியமான, தீராத ஆசைகளையெல்லாம் தீர்த்துவைப்பதுதான் இதன் உண்மையான நோக்கம். உதாரணமாக வெகுநாட்களாக கொலைசெய்யும் ஆசையிருந்து அதைத் தள்ளிப்போட்டு வந்தீர்களென்றால் அதைக்கூட இப்போது பூர்த்திசெய்துகொள்ளலாம்.

– அய்யய்யோ சத்தியமா அதுபோன்ற ஆசைகளெல்லாம் என்னிடத்திலில்லை.

– மனிதர்வதையிலும், கொடூரமாக கொலைபுரியும் செயல்களிலும் ஆர்வம்காட்டிய சீசரையோ, சேடையோ அல்லது உங்களுக்குப் பிடித்த வேறு உதாரணபுருஷர்கள் இருப்பின் அவர்களையோ மிஞ்சும் விதத்தில் இரத்தம்சொட்டசொட்ட கொலையொன்றைச் செய்து ஆறுதல் அடைவதற்கான உலகமொன்றை தேர்வுசெய்யலாம். அல்லது உலமனைத்தும் தங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து இருக்கவேண்டுமென்ற கனவுகள் ஏதேனும் உண்டென்றால் கடவுளாகவு மாறலாம். இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமெனில் ஜெகன்மாதாவாக அவதாரமெடுத்து இரத்த சாந்தி பெறலாம் அல்லது கருணையும் ஞானமுங்கொண்ட புத்தராக மாறலாம். எதுவென்றாலும் உங்கள் விருப்பம்.

– அதுபோன்ற ஆசைகளெதுவுமில்லை.

– அப்போது வேறு ஆசைகளிருக்கிறதா? இங்கே எதுவும் கிடைக்கும். குறிப்பிட்டுச்சொல்ல இயலவில்லை என்றாலும் பிரச்சினைகளில்லை. அதிலொன்று இதிலொன்றென கலந்தும் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளலாம். சொர்க்கம் நரகம், வகைவகையான பாலியியல் இன்பங்கள், பெருந்தீனியாளர்க்கு உணவுவகைகள், போதை, காதல், புகழ்..உங்களுக்கு எதுவேண்டும் சொல்லுங்கள்?

– அவ்வளவா? ஆச்சரியமாக இருக்கிறது.

– தவிர ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் ஏராளமான உட்பிரிவு விருப்பங்கள், விருப்ப பரிமாற்றங்களென்று இருக்கின்றன, அவற்றை நான் பட்டியலிடவில்லை. திட்டவட்டமாக இதுதானென பிரித்து அறியமுடிமெனில் நல்லது. அச்சமின்றி தீவொன்றில் வாழநேரும் உயிரொன்றின் எளிமையும் இனிமையுமான அனுபவத்தைக்கூட விரும்பினால் பெறமுடியும்.

– இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்- முதன்முதலாக மிஸ்டர் வைய்ன் தமது திருப்தியைத் தெரிவித்துக்கொண்டார்

– அந்தரங்க ஆசைகளை பலர் அலட்சியம் செய்துவிடுகிறார்கள், அது நல்லதல்ல. முயற்சியின்போது உயிரிழக்கும் அபாயமுண்டு என்பதையும் நான் மறக்காமல் உங்களிடம் சொல்லிவிடவேண்டும்.

– அடிக்கடி நடப்பதுண்டா? மிஸ்டர் வைய்ன் கேள்வியில் பதட்டமிருந்தது.

– அடிக்கடியென்று சொல்ல முடியாது. ஆனால் எப்போதாவது அப்படி நேர்வதென்னவோ உண்மை.

– எனக்குச் சாகவேண்டுமென்ற ஆசைகளில்லை.

– கவலைப் படாதீர்கள். மிக மிக அரிதாகத்தான் அது நடக்கிறது. மிஸ்டர் வைய்ன் கைவசமிருந்த பொதியின்மீது மீண்டும் கடைகாரர் கவனம் சென்றது.

– கவலைப் படவேண்டாமென்கிற உங்கள் வார்த்தைகளை எந்த அளவிற்கு நம்புவதென தெரியவில்லை. நீங்கள் வாங்குகிற கட்டணமும் அதிகம். எங்கள் சேமிப்புகள் அனைத்தையும் பெற்றுக்கொண்டு நீங்கள் போடுவதென்னவோ ஒரே ஒரு ஊசி, அதைத் தொடர்ந்து ஒரு கனவு. ஒரு டோஸ் ¦?ரோயினுக்காக அலங்காரமான உங்கள் வாக்குறுதிகளை நம்பி, கடினமான வாழ்க்கைக்கிடையில் மிச்சம்பிடித்ததை மொத்தமாக உங்களிடம் கொடுக்க முடிவெடுப்பது அத்தனை சுலபமல்ல, ரொம்பவே யோசிக்கவேண்டியிருக்கிறது.

– என்ன நடக்கிறது என்று அனுபவித்து பார்த்தபிறகு சொல்லவேண்டிய விஷயம். செய்யவிருக்கும் பயணமோ, காணவிருக்கும் கனவுகளோ அனைவருக்கும் ஒன்றுபோலவே இருக்காதென்று நான் உத்தரவாதம் தர முடியும். சொல்வதை உறுதிபடுத்துவதுபோல ட்டாம்ப்கின்ஸ் உதட்டில் புன்னகை.

– இந்த அனுபவம் உண்மையென்றால், ஏன் எனக்கு விருப்பமான அந்த உலகத்திலேயே என்னை விட்டுவைக்கக்கூடாது?

– உங்கள் கோரிக்கையைக் கட்டாயம் அடுத்தகட்டமாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்கிறேன். இப்படியெல்லாம் சிலயோசனைகள் இருப்பதாலேயே கூடுதல் கட்டணத்தை வாங்கவேண்டியிருக்கிறது. இதுபோன்ற முயற்சிகளுக்கென்று உபகரணங்கள்தேவை. நிறைய முதலீடு வேண்டும். இதில் உங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. உங்களைப் போன்றவர்களுக்கென்று நிரந்தரமாக ஒரு சாலைஅமைத்துதரும் முயற்சியும் உண்டு. பூமியோடு சம்பந்தப்பட்ட மனிதரின் தொப்புழ்க்கொடி உறவை துண்டிப்பதென்பது அவ்வளவு எளிதானதல்ல, நான் ஏற்கனவே பலமுறை முயன்று தோல்விகண்டிருக்கிறேன். சிலசமயங்களில் மரணங்கள்மூலமாகத் தந்திரமாக அதைத் சாதித்துக்கொண்டதுண்டு என்று சொல்லலாமேயன்றி, வேறு வழிகளில்லை. ஆனாலும் நான் சோர்ந்துபோகமாட்டேன்.

– அப்படியொன்று நடந்தால் உங்களைப் பலரும் பாராட்டுவார்கள். உங்கள் புகழ் உலகெங்கும் பரவும்.

– நீங்கள் சொல்வது புரிகிறது. அப்படி நடந்தால், அபாயத்திலிருக்கும் பலரையும் மீட்டு நம்பகமான ஓர் இடத்திற்கு அழைத்துச் செல்லும் தலைவாசலாக இத்தரித்திரம்பிடித்த கடை மாறக்கூடுமென நினைக்கிறீர்கள். எலிகளும் புழுக்களும் மிகுந்த துர்நாற்றம்பிடித்த இப்பூமியிலிருந்து விடுபட்டு ஒவ்வொருவரும் கனவுகாணும் பிடித்தமான ஓருலகைத் தேர்வு செய்து அங்கேயே வாழ்தல் நல்லதென்பது உங்கள் எண்ணம்.

தேவையற்ற பேச்சு எதற்கென்று கடைகாரர் நினைத்திருக்கவேண்டும். தமது தொழிலுக்கு நேர்மையாக நடந்துகொள்ள தீர்மானித்தவர்போல உரையாடலை முடிவுக்குக் கொண்டுவர எண்ணி:

-எனது மனம் என்ன சொல்கிறதோ அதன்படி நடக்கிறேன். இங்குள்ள நரகவாழ்க்கையிலிருந்து நிரந்தரமாக மனிதர்களைத் தப்பிக்கவைக்கும் மார்க்கத்திற்கு தற்போதைக்கு என்னிடம் பதிலில்லை. உயிரிழக்கும் அபாயங்களும் அதிகமில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்குமென சொல்லமுடியாது. ஒருவேளை எனது முயற்சிகளுக்குப் பலனில்லாமலும் போகலாம். என்னால் முடிந்ததெல்லாம் உங்களுக்கு சில நாட்களுக்கு விடுதலை அளிப்பது. புத்தம்புது புகையை ஒரு மிடறு விழுங்கிப்பாருங்கள். உட்கொண்டவுடன் மனதிலிருக்கிற இரகசிய ஆசைகளை ஒருமுறை பரிசீலனை செய்யுங்கள். என்னுடைய கட்டணம் எவ்வளவு என்பதெல்லாம் நீங்கள் அறிந்ததுதான். சரக்கில் திருப்தியில்லையென்றால், கட்டணமாக செலுத்தியவற்றைத் திருப்பிக் கொடுத்துவிடுவேன்.

கடைகாரர் கூறியவற்றை அக்கறையுடன் கேட்ட மிஸ்டர் வைய்ன்:

– நேர்மையான பேச்சு. இன்னுமொரு சந்தேகம், அனுபவத்தில் முடிவில் நமது ஆயுளில் பத்தாண்டுகள் குறையக் கூடுமென்று என் சிநேகிதர்கள் கூறியிருந்தார்கள், அப்படியா?

– மோசமான பின்விளைவுதான், ஏற்றுக்கொள்கிறேன். இல்லையென்று மறுக்கப்போவதில்லை. அப்படியான விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல, அதற்கு கட்டணத்தையும் திருப்பிக் கொடுக்க முடியாது. எனது வழிமுறையில் சிலருக்கு நரம்பு மண்டலங்கள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகின்றன. அதன் விளைவாக மனிதர் வாழ்நாளும் குறுகிப்போகிறது. நமது அரசாங்கமும் அதைக் கருத்திற்கொண்டே இம்முறையை கடுமையாக எதிர்க்கிறது.

– ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இதில் உங்களைமட்டும் குற்றஞ் சொல்ல என்ன இருக்கிறது.

– இல்லைதான். எனது முறைகள் சட்டத்திற்குப் புறம்பானவையெனச் சொல்கிறார்கள். ஆனால் அச்சட்டங்களை செயல்படுத்தும் அதிகாரிகளும் ஊழியர்களும் பிறமனிதர்களைப்போலவே இந் நரக வாழ்க்கையிலிருந்து விடுபடவேண்டுமென்று நினைக்கிறார்கள் என்பது உண்மை.

– உங்கள்மீதான குற்றச்சாட்டிற்கு நீங்கள் வாங்குகிற கட்டணமும் ஒரு காரணமாக இருக்கவேண்டும். கணநேரம் காணவிருக்கும் விலையுயர்ந்த கனவுகளுக்காக ஆயுளில் பத்தாண்டுகாலத்தை இழக்க தயாராக இருக்கவேண்டுமென்கிறீர்கள், கொஞ்சம் யோசித்துத்தான் ஆகவேண்டும். கையிலிருந்த பொதியை இறுக்கமாகப் பிடித்தபடி, மிஸ்டர் வைய்ன் முனுமுனுத்தார்.

– வழிநெடுக கொஞ்சமென்ன நிறையவே யோசியுங்கள். கடைகாரரிடமிருந்து இயல்பாக பதில் வந்தது.

திரும்ப பயணித்தபோது, வழியெங்கும் மிஸ்டர் வைய்ன் கனவுகளில் சஞ்சரித்தார். போர்ட்வாஷிங்டனில் இரயில் நின்றதுகூட தெரியாமல் சிந்தனை வயப்பட்டிருந்தார். இரயில் நிலையத்திலிருந்து காரில் வீட்டிற்குத் திரும்புகிறபோதுகூட கடைகாரரின் தந்திரமான முகமும், சொப்பன உலகங்களும், நிறைவேற்றிக்கொள்ளவேண்டிய அந்தரங்க ஆசைகளும் இடைவிடாமற் நினைவில் தோன்றி அவரை அலைக்கழித்தன. எல்லாமே வீட்டை அடையும்வரைதான். இவருக்காகக் காத்திருந்த மனைவி ஜேனட் வீட்டுக்குள் நுழைந்தாரோ இல்லையோ, வேலைக்காரி அதிகம் மது குடித்திருந்ததாகக் கூறி, அவளை கண்டிக்க வேண்டுமென்றாள். டோமி என்கிற மகனுக்கு மறுநாள் வீட்டிலிருந்து படகை நீரில் இறக்க அப்பாவின் உதவி வேண்டுமாம். சிறுமியான மகளுக்குத் தனது மழலையர் பள்ளியில் அன்றைக்கு என்ன நடந்தது என்பதை விபரமாகத் தந்தையிடம் சொல்லியாகவேண்டும்.

வைய்ன் வேலைக்காரபெண்ணை பக்குவமாகக் கண்டித்தார். நீரில் இறக்குவதற்கு முன்பாக மகன் படகிற்கு பாதுகாப்பிற்காக அடிக்கப்படும் பெயின்ட்டொன்றை உடனிருந்து அடித்தார். பிற பிள்ளைகளோடு தனக்கேற்பட்ட அனுபவங்களைக் பெகி கூற அமைதியாகக் கேட்டார். வீட்டிலிருந்த சிறியவர்களெல்லாம் ஒருவழியாக உறங்கச் சென்றதும், கணவும் மனைவியுமாக வரவேற்பறையில் தனித்து இருந்தார்கள். ஜேனட் அவருக்கேதேனும் பிரச்சினகளா? என்று கேள்விஎழுப்பினாள்.

– பிரச்சினைகளா? எனக்கா?

– உங்கள் முகத்தைப் பார்க்க அப்படித்தான் தெரிகிறது. அலுவலகத்தில் ஏதேனும் நடந்ததா?

– இல்லையே.

ஜேனட் என்றில்லை, பிறமனிதர்களிடங்கூட ‘உலகங்கள் விற்பனைக்கு’ என்ற அதிசயமான பேர்கொண்ட கடைக்குச் சென்றுவந்ததையும் அங்கே டாம்க்கின்ஸ் என்ற வியாபாரியைச் சந்திக்க நேர்ந்ததையும் மிஸ்டர் வைய்னுக்குச் சொல்ல விருப்பமில்லை. அதுமட்டுமல்ல இப்பூமியில் வாழ்கிற ஒவ்வொரு மனித உயிரும் வாழ்நாளில் ஒருமுறையேனும் தங்கள் அந்தரங்க ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள அங்கே போகவேண்டுமென்று வைய்ன் நினைத்தார். ஆனால் ஜேனட் போன்ற திடமான சிந்தனைகொண்ட பெண்களை நம்பவைப்பது எளிதில்லையென்று அவர் அறிவார்.

மறுநாள்முதல் குவிந்துக்கிடந்த அலுவலகப் பணிகளில் மிஸ்டர் வைய்ன் மூழ்கிப்போனார். மத்திய கிழக்கு நாடுகளிலும், ஆசிய கண்டத்திலும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. அந்தரங்க ஆசைகள், அவைகளை நிறைவேற்றும் வகை, கட்டணத்திற்கென்று தம் கையிருப்பினை மொத்தமாகக் கொடுப்பது, பத்தாண்டுகால ஆயுளை கண நேர சுகத்திற்காக தியாகம் செய்வதென அவ்வளவையும் மறந்து அலுவலகப் பணிகளில் மூழ்கினார். சில நேரங்களில் வயதான டாம்க்கின்ஸை நினைக்க கோபமும் வந்தது. ‘அவன் கிடக்கிறான் பைத்தியக்காரன்’ எனச் சொல்லிக்கொண்டார்.

வார இறுதி டோமியுடன் என்றாயிற்று. இருவருமாக படகில் கழித்தார்கள்; இத்தனைவருடங்களுக்குப் பிறகும் படகு நன்றாகவே நீரில் மிதந்தது. ஒரு சொட்டு நீர்க்கூட உள்ளே புக இல்லை. டோமிக்கு சிறியதொரு சொகுசுப்படகு வாங்கவேண்டுமென்று விருப்பம். மிஸ்டர் வைய்ன் அதைக் கடுமையாக ஆட்சேபித்தார். பங்குச் சந்தை மீண்டும் நல்ல நிலைக்குத் திரும்பினால் அடுத்த ஆண்டு அது பற்றி யோசிக்கலாமென்றும் அதுவரை பழையபடகை வைத்தே ஒப்பேற்றுவோமென்றார்.

மாலை வேளைகளில் எப்போதாவது ஜேனட்டும் அவருமாக படகுசவாரி செய்வதுண்டு. சிலுசிலுவென்று வீசும் காற்றுடனும், அமைதியாகவும் அந்நேரத்தில் லாங் ஐலண்ட் நீர்ச்சந்தி இருப்பதுண்டு. பொன்னிறத்தில் ஜொலிக்கும் முழுநிலவைத் தேடி பயணிக்கும் படகுபோல எச்சரிக்கை மிதவைகளை ஒட்டி படகு நிதானமாக வெகு தூரம் நீரில்செல்லும்.

– உன்னிடத்தில் ஏதோ பிரச்சினைகளிருக்கிறது, வைய்ன். ஜேனட் அவரிடம் அடிக்கடி உபயோகிக்கும் வாக்கியம்.

– நீ நினைப்பது போல இல்லை, டியர்

– பொய். நீ எதையோ மறைக்கிறாய்.

– எதையும் மறைக்கவில்லை, உண்மை.

– சத்தியம் செய்யேன் பார்ப்போம்.

– சத்தியம். போதுமா?

– உன் வார்த்தைகளை நம்பறேன். என்னை அணைத்துக்கொள். நீரோட்டத்தைத் தொடர்ந்து படகு முன்னேறியது.

விருப்பங்களும் அதை நிறைவேற்றிக்கொள்வதற்கான வழிமுறைகளும் கவனிப்பாரற்று இருந்தன. இலையுதிர்காலம் பிறந்தது. படகு அதன் துறைக்குத் திரும்பவேண்டிய காலம். இனி அதற்கு வேலையில்லை. பங்குச் சந்தையும் ஓரளவு நிதானத்திற்கு வந்திருந்தது. பெகிக்கு தட்டம்மை போட்டிருந்தது. தினசரி செய்திகளில் இடம்பெற்ற சாதாரண வெடிகுண்டுகள், ¨?டிரஜன் வெடிகுண்டுகள், கோபால்ட் குண்டுகள் போன்ற பெயர்களுக்கிடையேயான வேறுபாடுகளைக்கேட்டு மகன் டோமி தொந்தரவு செய்தான். தந்தை தகப்பனார் தமக்குத் தெரிந்ததை விளக்கிச் சொன்னார். வேலைக்காரி திடீரென்று ஒரு நாள் சொல்லாமற் கொள்ளாமல் நின்றுபோனாள்.

அந்தரங்க ஆசைகளென்று ஏதேனும் உண்டா? மனதை ஒரு முறைக்கு இருமுறை ஆழமாக அலசிபார்த்தால் ஒருவேளை கொலைசெய்ய விருப்பம் இருக்கலாம். அல்லது தீவொன்றில் நாட்களைக் கழிக்கலாமென்ற ஆசையும் இருக்கலாம் யார் கண்டது. ஏதாவது இருந்து தொலைக்கட்டும் தற்போதைக்கு உடனடியாகச் சில கடமைகள் அவருக்கு இருக்கின்றன. தவிர இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தை என்றவகையிலும், இவரைக்காட்டிலும் எல்லாவற்றிலும் மேம்பட்டவளாக இருக்கும் மனைவிக்குக் கணவனென்ற வகையிலும் சில பொறுப்புகளிருக்கின்றன. வாய்ப்பிருந்தால் அடுத்த கிறிஸ்துமஸ¤க்கு மனதிற் புதைந்துள்ள ஆசைகளைப் பூர்த்திசெய்துக்கொண்டால் போகிறது…

எதுதான் நாம் நினைக்கிறபடி நடக்கிறது. நல்ல பனிக்காலத்திலா தீவிபத்து உண்டாகவேண்டும். விருந்தினர்களுக்கான அறையில் மின்கசிவினால் விபத்து ஏற்பட்டிருந்தது. விரைந்துவந்த தீயணைக்கும் படையினர் அதிக சேதாரமின்றி தளவாடங்களைக் காப்பாற்றினார்கள். மனித உயிர்களுக்குத் தீங்கில்லை. ஆனால் வீட்டை பராமரித்தலிலும் விருந்தினர்களை உபசரிப்பதிலும் அக்கறைகொண்ட குடும்பத்திற்கு தண்டனை மிகவும் அதிகம். விருந்தினர் அறையைப் புதுப்பிக்க மிஸ்டர் வைய்ன் கணிசமாக செலவிட வேண்டியிருக்க ‘உலகங்கள் விற்பனைக்கு’ என்ற கடையையும், அதன் முதலாளி பற்றிய நினைவையும் சுத்தமாகக் குழிதோண்டி புதைத்தார்.

பங்குச்சந்தை நிலையற்றதாக இருந்தது. உலக நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பங்குச் சந்தையையும் பாதித்திருந்தது. அணுகுண்டுகள், ஏவுகணைகள், ஸ்புட்னிக்குகள் வடிவில் பிரச்சினகளுக்கு ரஷ்யா, கீரீஸ், சீனா, அரபுநாடுகள் காரணமாயின. மிஸ்டர் வைய்ன் அலுவலகத்தில் வெகு நேரம் பணிபுரிய வேண்டியிருந்தது. சில நாட்களில் இரவெல்லாங்கூட விழித்திருந்து வேலைபார்த்தார். டோமி பொன்னுக்குவீங்கியால் அவதிப்பட்டான். வீட்டின் மேற்கூரையில் ஒரு பகுதி ஓடுகளை மாற்றவேண்டிய கட்டாயம். அடுத்து வசந்த காலம் பிறந்ததும் மறுபடியும் படகைத் தயார்செய்யவேண்டும்.

ஒராண்டுகாலம் கடகடவென்று ஓடிவிட்டது. இந்த ஓராண்டுகாலத்தில் மிஸ்டர் வைய்ன் அவரது அந்தரங்க ஆசைகளைச் சுத்தமாக மறந்துபோனார். இதற்கிடையில் ஒருநாள்

– எப்படி இருந்தது அனுபவம்? என கேட்டபடி கடைகாரர் வந்தார்.

– நன்றாகத்தானிருந்தது. – வைய்ன் கண்களைக் கசக்கியபடி எழுந்தார்.

– கட்டணத்தைத் திரும்பக் கேட்கமாட்டீரென நினைக்கிறேன்.

– குறைசொல்ல ஒன்றுமில்லை? எனக்குப் பரம திருப்தி.

– என்னிடத்தில் வருகிறவர்கள் எல்லோருமே கடைசியில் இதைச் சொல்வார்கள், என்ற கடைகாரர் டாம்க்கின்ஸ் பின்புறம் அமர்ந்திருந்த கிளியைப் பார்த்துச் சிரித்தார். பின்னர் ஏதோ நினைத்தவராய்:

– என்ன நடந்தது?

– நான் சென்றுவந்தது அண்மைக்கால உலகொன்றிர்க்கு

– இருக்கலாம், பலபேருக்கு அப்படி நடந்திருக்கிறது. உங்கள் அந்தரங்க ஆசை என்னவென்று கண்டுபிடித்தீர்களா? கொலை செய்வதா அல்லது தீவொன்றில் உல்லாசமாகப் பொழுதைக் கழிப்பதா?

– தவறாக நினைக்கவேண்டாம். அதுபற்றி பேச எனக்கு விருப்பமில்லை. -மிஸ்டர் வைய்ன் நாசூக்காக மறுத்தார்.

– இந்த விஷயத்திலேயும் நீங்க பிறரைபோலத்தான் நடந்துகொள்கிறீர்கள். தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொள்ள ஒருவரும் முன்வராததற்கு என்ன காரணமோ?

– சந்தேகமென்ன ஒவ்வொருத்தருக்கும் மனதிலுள்ள அபிலாஷைகளென்பது பிறரிடம் அவை பகிர்ந்துகொள்ள கூடியதல்ல, ரகசியமாகப் போற்றி பாதுகாக்கப்படவேண்டியது. அது தவிற வேறென்ன காரணம் இருக்க முடியும். மற்றபடி உங்களுக்குச் சொல்லக்கூடாததென்றில்லை. அதிருக்கட்டும், இந்த அனுபவத்தை நிரந்தரமாகப் பெற சாத்தியமுண்டா, அதாவது என்றென்றும் கனவுலகில் வாழும் வாய்ப்பு எந்த அளவிலுள்ளது.

– ம். முயற்சிக்கிறேன். வெற்றிபெற்றால் உங்களுக்குத் தெரிவிப்பேன். உங்களுக்கு மட்டுமில்லை அனைவருக்கும் தெரிவிப்பேன்.

– நியாயமான பதில். – என்ற மிஸ்டர் வைய்ன் தாம் கொண்டுவந்த சிறு பொதியை அவிழ்த்து மேசையில் விரித்தார்: ராணுவ வீரர்கள் உபயோகப்படுத்தும் ஒரு ஜோடி பூட்ஸ்கள், ஒரு சிறிய கத்தி, இரண்டு டாய்லட் பேப்பர்ரோல்கள், மூன்று பதப்படுத்தப்பட்ட இறைச்சியடைத்த டப்பிகளென்று அதிலிருந்தன.

– தேவையான கட்டணத்தோடுதான் வந்திருக்கிறீர்கள். நன்றி- டாம்க்கின்ஸ் முகம் ஒரு சிலவிநாடிகள் மகிழ்ச்சியில் திளைத்தது.

– இல்லை. இப்படியொரு அனுபவத்தைத் தந்தமைக்காக நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். போய்வருகிறேன். பிறகு சந்திப்போம், நன்றி..

கடையிலிருந்து வெளியேறிய வைய்ன் மீண்டும் வந்தவழியே இடிபாடுகளுக்கிடையில் நடந்தார். கண்ணுக்கெட்டியவரை திரும்பிய திசையெல்லாம் குவியல் குவியலாய் சாம்பல், கறுப்பு, பழுப்புநிறங்களில் பரவிக்கிடந்த இடிபாடுகள், பேரழிவைச் சந்தித்த நகரத்தின் எஞ்சிய அடையாளங்கள்; பட்டொழிந்த மரங்கள், காய்ந்து சருகுகளான செடிகொடிகள்; கடந்தகாலத்தில் ஜீவனுடனிருந்த அவ்வளவும் நுண்துகள்களாய், தூசிக்குவியலாய், புழுதியாய், நூலாம்படையாய் காட்சியளித்தன.

– ஏமாற்றமில்லை. வாங்கிய கட்டணத்துக்கு நிறைவான சேவை!

கடந்தகால பயணத்திற்கென அவர் கொடுத்தவிலை மிக அதிகம். தமது உயிர்வாழ்க்கையின் பத்தாண்டுகால சேமிப்பை மொத்தமாக இழந்திருக்கிறார்.

எல்லாம் கனவுகளா? கனவோ நிஜமோ வருத்தபட ஒன்றுமில்லை. நிகழ்காலத்தில் அவர்வாழ்க்கையில் எஞ்சியதென்று எதுவுமில்லை. ஜேனட், பிள்ளைகள்… என்று வாழ்ந்தது ம் அதுவொருகாலம். ட்டாம்க்கின்ஸ் தயவு செய்தால் ஒரு வேளை அக்கடந்தகாலத்தை நிரந்தரமாக மீட்க முடியும். அதுவரைத் தம்மையன்றி வேறு நாதிகள் அவருக்கில்லை.

அணிந்திருந்த கைகர் உபகரணங்கொண்டு இடிபாடுகளுக்கிடையில் பயன்பாடற்றிருந்த பாதையொன்றைக் கண்டார். இருட்டுவதற்குள் குடியிருப்பிற்குத் திரும்பியாகவேண்டும், இல்லையெனில் தங்கள் வளைகளிலிருந்து எலிகள் வெளியேறி நடமாட ஆரம்பித்துவிடும். உரிய நேரத்திற்குள் திரும்பவும் வேண்டும், தவறினால் இரவு உணவுக்கென்று வினியோகிக்கப்படும் கிழங்குகள் கிடைக்காது.
———————————————————————————

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா