முள்பாதை 36

This entry is part [part not set] of 34 in the series 20100704_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

ராஜியின் திருமணம் நெருங்கிக் கொண்டு இருந்தது. எனக்கு ஏனோ ஒரு தடவை மெலட்டூருக்குப் போய் அவர்கள் எல்லோரையும் பார்த்துவிட்டு வர வேண்டும் என்று தோன்றியது. ஒருவிதமாக பார்த்தால் ராஜேஸ்வரியும், நானும் இருவருமே தோற்றுப் போய்விட்டோம். ராஜி அண்ணனை எதிர்க்கப் போவதாக சொன்னாள். அவளால் முடியவில்லை. இந்தத் திருமணத்தை நடக்க விடமாட்டேன் என்று நானும் சொன்னேன். ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
கடைசி நிமிடத்தில் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொண்ட காரணத்தை என்னிடம் சொல்வதற்கு ராஜி தவிப்பது போல், அவளுடைய திருமணத்தை நிறுத்த முடியாமல் போன என்னுடைய சூழ்நிலையை அவளிடம் விளக்க வேண்டும் என்று நானும் தவித்துக் கொண்டிருந்தேன்.
சாரதியுடன் என் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டால் இனி அந்த ஊருக்குப் போகும் வாய்ப்போ, அவர்களைப் பற்றி பேசக் கூடிய சந்தர்ப்பமோ எனக்கு இருக்கப் போவதில்லை. அதோடு மெலட்டூருக்கு போக வேண்டும் என்று நான் பலமாக விரும்புவதற்கு வேறொரு காரணமும் இருந்தது. கிருஷ்ணனின் பெயரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட நிலத்தின் தஸ்தாவேஜுகளை என் கையால் சுயமாக அவனிடம் தர வேண்டும்.
நான் கொடுக்கும் பத்திரங்களைப் பார்த்ததும் அவன் முகத்தில் எப்படிப்பட்ட உணர்வுகள் பிரதிபலிக்குமோ பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் என் மெலட்டூர் பயணத்தை மேலும் தூண்டிவிட்டது. எப்படியாவது மெலட்டூருக்கு போய் வர வேண்டும் என்று திடமாக முடிவு செய்தேன். மெதுவாக சமயம் பார்த்து அப்பாவிடம் ராஜியின் திருமணத்தைப் பற்றி பேச்செடுத்தேன்.
“டாடீ! ராஜியின் திருமணத்திற்கு நம் வீட்டிலிருந்து யாருமே போகவில்லை என்றால் நன்றாக இருக்காது இல்லையா?”
பேப்பரை புரட்டிக் கொண்டிருந்த அப்பா, நான் மறுபடியும் ஏதோ பிரச்னையைக் கொண்டு வந்துவிட்டது போல் பார்த்தார். “நன்றாக இல்லாமல் போவானேன்? நம் இருவரின் குடும்பங்களுக்கு இடையே போக்குவரத்து இல்லை என்று எல்லோருக்கும் தெரியும்” என்றார்.
“இதற்கு முன்னால் இருந்த நிலைமை அது. நான் போய் வந்த பிறகு அந்த நிலைமை மாறி விட்டது இல்லையா.”
அப்பா ஒரு நிமிடம் என்னை கூர்ந்து பார்த்தார். பிறகு மூக்குக் கண்ணாடியை சரி செய்து கொண்டே “உன் மனதில் இருக்கும் அசல் விஷயம் என்னவென்று முதலில் சொல்லிவிடு” என்றார்.
“நீங்க ராஜியின் திருமணத்திற்குப் போய்விட்டு வாங்க.”
“நானா?”
“ஆமாம்.”
அப்பாவுக்கு சமீபகாலமாக வேலை அதிகமாக இருக்கிறது என்றும், அவரால் போக முடியாது என்றும் எனக்கு நன்றாகவே தெரியும்.
“நான் போக மாட்டேன்” என்றார்.
“ஏன்? போக வர இரண்டு நாட்கள்தானே?”
“இல்லை மீனா! இரண்டு நாட்கள் இல்லை. இரண்டு நிமிடங்களுக்குக் கூட அந்த வீட்டு வாசற்படியை மிதிக்க மாட்டேன். இந்த ஜென்மத்தில் அந்த வீட்டுக்குப் போகக் கூடாது என்று உங்க அம்மா என்னிடமிருந்த என்னிடமிருந்து சத்தியம் வாங்கிக் கொண்டாள்.”
நான் புது விஷயம் கேட்பது போல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“உங்க அம்மாவுக்கு சத்தியம் செய்து கொடுத்த அன்னிக்கே அவர்களைப் பொறுத்தவரையில் நான் இல்லாதவனாகி விட்டேன். இங்கே நான் இவ்வளவு சம்பாதிக்கிறேன். கமலா அங்கே குழந்தைகளுடன் எவ்வளவு அவஸ்தைப் பட்டுக் கொண்டு இருக்கிறாளோ என்று சில சமயம் வருத்தமாக இருக்கும். ஒரு விதத்தில் அவள் அதிர்ஷ்டசாலி. மூத்தாளின் மகனாக இருந்தும் கிருஷ்ணன் சிறு வயது முதல் அந்த வீட்டு பாரத்தை ஏற்றுக் கொண்டான். கண் குளிர கமலாவையும், குழந்தைகளையும் பார்க்கும் கொடுப்பினைதான் எனக்கு இல்லை.”
அப்பாவின் குரலில் வெளிப்பட்ட வேதனையை உணர்ந்த போது என் இதயம் பாரமாகிவிட்டது. அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் மௌனமாக இருந்தேன்.
உரையாடல் முடிந்து விட்டதுபோல் அப்பா மறுபடியும் பேப்பர் பார்க்கத் தொடங்கினார். நான் அறையில் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்த்தேன். என் பார்வைக்கு டிரெஸ்ஸிங் டேபிள் மீது கிடந்த சீப்பின் மீது விழுந்தது. பதினாலு பதினைந்து வயது வரையில் அப்பாவுக்குத் தலையை வாரி விடுவது என்னுடைய பொழுது போக்காக இருந்து வந்தது. ஏற்கனவே அவருக்கு வழுக்கைத் தலை. முடியும் ரொம்ப குறைவாக இருக்கும். நான் தலை வாரி விடுவதாக சொல்லும்போது அப்பா வேண்டாம் என்று கெஞ்சுவார். நான் விடாமல் வாரி விடுவேன். எங்க இருவருக்கும் இடையில் இது ஒரு விளையாட்டாக இருந்து வந்தது.
சிலசமயம் அப்பா என் தொந்தரவு தாங்க முடியாமல் “என் கண் இல்லையா. உனக்கு என்ன வேண்டுமோ கேள். தந்து விடுகிறேன். அந்த சீப்பை மட்டும் கீழே வைத்துவிடு” என்று வேண்டிக்கொள்வார். சமீபகாலத்தில் அப்பா ரொம்ப பிசியாகிவிட்டதாலும், நானும் பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டதாலும் இந்த விளையாட்டு மறந்து போய் விட்டிருந்தது.
அப்பா பேப்பரை பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவருடைய நாற்காலியின் பின்னால் நின்று கொண்டு தலை வாரத் தொடங்கினேன்.
“லாபம் இல்லை மீனா! நான் மெலட்டூருக்குப் போக மாட்டேன்” என்றார் அப்பா.
“போகட்டும். நான் போய் வருகிறேன்.”
“நீயா?”
“ஆமாம். நம் இருவரில் யார் போனால் என்ன? நான் போனால் அத்தையும், ராஜியும் ரொம்ப சந்தோஷப்படுவார்கள்.”
“நீ எப்படிப் போக முடியும்?” வியப்புடன் கேட்டார்.
“நீங்க அனுப்புவதாக இருந்தால் வழி தானாகக் கிடைத்துவிடும்.”
கையிலிருந்த பேப்பரை மேஜைமீது வேகமாக வீசினார். “இதோ பார் மீனா! அம்மாவுக்கும் எனக்கும் நடுவில் சண்டை மூட்டாமல் நீ விட மாட்டாய் போலிருக்கு” என்றார்.
“சண்டை வருவதாக இருந்தால் எப்பவோ வந்திருக்கும். எனக்குத் தெரியும். நீங்க அம்மாவுடன் ஒரு நாளும் சண்டை போட மாட்டீங்க. இரண்டு கைகளும் சேர்ந்தால்தானே சத்தம் வரும்.”
அப்பா சிரித்து விட்டார். உடனே கம்பீரமான குரலில் சொன்னார். “மீனா! உன்னுடன் வாக்குவாதத்தில் இறங்கினால் நான்தான் தோற்றுப்போவேன். உங்க அம்மாவுக்குத் தெரியாமல் நீ மெலட்டூருக்குப் போவது சாத்தியம் இல்லை. அதனால் அந்த எண்ணத்தையே மறந்துவிடு.” பேப்பரை மறுபடியும் கையில் எடுத்துக் கொண்டார்.
“அம்மாவுக்கு தெரியாத விதமாக நான் ஒரு வழி சொல்கிறேன் டாடீ.”
“என்ன?”
“நாளை மறுநாள் நீங்க ஊட்டிக்கு போறீங்க இல்லையா. நானும் உங்களுடன் போகப் போவதாகக் கிளம்புகிறேன். என்னை தஞ்சாவூருக்கு ரயிலில் ஏற்றிவிடுங்கள். திருமணம் முடிந்ததும் திரும்பி விடுகிறேன். நீங்களும் அந்த நேரத்திற்கு ஸ்டேஷனுக்கு வந்து விட்டால் நாம் இருவரும் சேர்ந்து வீட்டுக்கு வந்து விடலாம். நான் மெலட்டூருக்குப் போய் வந்த விவரம் யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை.”
அப்பாவின் கண்களில் பாராட்டு தென்பட்டது. “நல்ல யோசனைதான். முதலில் என்னுடன் ஊட்டிக்கு வருவதற்கு உங்க அம்மாவிடம் பர்மிஷன் கேள். அம்மா ஒப்புக் கொண்டால் பிறகு பார்ப்போம்.”
“ஊஹ¤ம். நான் கேட்க மாட்டேன். நான் கேட்டால் முதலிலேயே காரியம் கெட்டு விடும்.”
“மறுபடியும் என் தலைக்கு ஆபத்து கொண்டு வருகிறாயா?”
“இதுதான் கடைசி தடவை. இனி ஒரு நாளும் உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டேன். டாடீ!” திடீரென்று எனக்கு ஒரு யோசனை வந்தாற்போல் அழைத்தேன்.
என்ன என்பதுபோல் பார்த்தார்.
“சாரதி இன்று இரவு சாப்பிட வருகிறான். அவன் இருக்கும் போது கேளுங்கள். அம்மா மறுக்க மாட்டாள்.” குரலை தாழ்த்தி ரகசியம் பேசுவதுபோல் சொன்னேன். அப்பாவும் ஒப்புக்கொள்வது போல் தலையை அசைத்தார்.
இரவு வந்து விட்டது. சாரதி சாப்பிட வந்திருந்தான். அம்மா எங்களுடன் சாப்பிட அமர்ந்துகொள்ளவில்லை. திருநாகம் மாமி எடுத்துக் கொடுக்கக் கொடுக்க எங்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்தாள்.
அம்மா வழக்கம் போல் சாரதியை பலமாக உபசரித்துக் கொண்டிருந்தாள். அப்பாவும் சாரதியும் அரசியலைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள். அரசியல் பற்றி பேச்சு எடுத்தால் அப்பாவுக்கு வேறு நினைப்பே இருக்காது என்று எனக்குத் தெரியும். எங்களுடைய சாப்பாடு முடியும் தருவாயில் இருந்தது. அப்பாவின் தொரணையைப் பார்த்தால் நான் சொன்ன விஷயத்தை மறந்து விட்டாற்போல் தோன்றியது. நான் அடிக்கடி அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் என் முயற்சி வியர்த்தமாயிற்று. அப்பா என் பக்கம் பார்க்கவே இல்லை. எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. அழுகையும் வரும் போல் இருந்தது.
அம்மா தயிர் எடுத்து வருவதற்காக உள்ளே போன போது, “டாடீ! இங்கே பாருங்க. இது என்னவென்று சொல்லுங்க.” புதிர் போடுவது போல் சொல்லிக்கொண்டே சாப்பிடும் தட்டில் ஊட்டி என்று எழுதினேன்.
அப்பாவுடன் சாரதியும் நான் எழுதியதைப் பார்த்தான். அப்பாவுக்கு எதுவும் நினைவு இல்லை போலும். “அது என்ன?” என்றார்.
“ஊட்டி!” ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த சாரதி புதிரைக் கண்டுபிடித்து விட்டாற்போல் உரத்தக் குரலில் சொன்னான்.
“ஊட்டியா! ஆமாம் ஆமாம். நான் மறந்தே போய் விட்டேன்” என்றார் அப்பா.
நான் கண் இமைக்காமல் அப்பாவையே பார்த்தேன். நினைவுக்கு வந்து விட்டது போல் அப்பா தலையை ஆட்டினார்.
சாரதிக்கு நாங்கள் இருவரும் பேசிக் கொள்வது புரியவில்லை. என்னையும் அப்பாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஊட்டியா! என்ன விஷயம்?” அம்மா தயிரை பரிமாறிக் கொண்டே கேட்டாள்.
அப்பா தலையைச் சொறிந்து கொண்டார். பிறகு என்னை ஒரு முறை பார்த்துவிட்டு தயிர் சாதம் பிசைந்துகொண்டே “மீனா என்னுடன் நாளை மறுநாள் ஊட்டிக்கு வருவாளாம். வேண்டாம் என்று சொன்னால் கேட்க மறுக்கிறாள்” என்றார்.
அப்பா சொன்ன அந்தத் தோரணை எனக்கு ரொம்ப ஏமாற்றத்தைத் தந்தது. என்னுடைய பேச்சை தட்ட முடியாமல் ஒப்புக்கு கேட்டாற்போல் இருந்தது. நான் மெலட்டூருக்குப் போவதில் அப்பாவுக்கே விருப்பம் இல்லையோ என்றுகூட தோன்றியது.
அம்மா என் பக்கம் திரும்பினாள். “அப்பா சொல்வது உண்மைதானா?” என்றாள்.
நான் இமைகளை படபடத்துவிட்டு பயந்து விட்டாற்போல் பார்த்தேன். பிறகு சாதத்தை அளைந்து கொண்டே “ஆமாம் மம்மீ! எனக்குப் பொழுதே போகவில்லை. வெளி ஊருக்குப் போய் இரண்டு நாட்கள் சுற்றிவிட்டு வந்தால்..” அதற்குமேல் எப்படி முடிப்பது என்று தெரியாமல் பாதியிலேயே நிறுத்திவிட்டேன்.
அம்மா என்ன நினைத்துக் கொண்டாளோ தெரியாது. கனிவுடன் என்னைப் பார்த்துவிட்டு, “அதற்கென்ன வந்தது? தாராளமாகப் போய்விட்டு வா” என்றாள். பிறகு சாரதியின் பக்கம் திரும்பி “உங்களுக்கு சௌகரியப்படுமா? முடிந்தால் இருவரும் ஜாலியாக போய் விட்டு வாங்களேன். எல்லோரும் திருமணம் ஆன பிறகு போவார்கள். நீங்க முன்னாடியே போய்விட்டு வாங்க” என்றாள் முறுவலுடன்.
நான் திடுக்கிட்டேன். சாரதியா … எங்களுடனா?
சாரதி என் பக்கம் பார்த்தான். என் தலையில் இடி விழுந்தாற்போல் இருந்தது. சாரதி எங்களுடன் வருவது, மெலட்டூருக்கு போக வேண்டும் என்று நினைத்த நான் வேறு வழியில்லாமல் சாரதியுடன் சுற்ற வேண்டியிருப்பது, அழுமூஞ்சியாக நான் ஊருக்குத் திரும்புவது… இதெல்லாம் காட்சிகளாக என் கண் முன்னே தோன்றின.
ஆழமாக என்னைப் பார்த்த பிறகு சாரதி சாதத்தைப் பிசைந்து கொண்டே, “ஊஹ¤ம். இப்போ எனக்குத் தோதுபடாது. பின்னால் எப்பொழுதாவது சௌகரியப்பட்டால் பார்க்கிறேன்” என்றான்
அப்பாடா! என் இதயத்திலிருந்து பெரிய பாரம் நீங்கியதுபோல் இருந்தது. அம்மா பாதி நிஷ்டூரமாகவும், அரை முறுவலுடனும் சொன்னாள். “பார்த்தீங்களா! என்ன இருந்தாலும் தந்தையும் மகளும் ஒன்று. யாராக இருந்தாலும் முதலில் தாயிடம் சொல்லி தந்தையிடம் கேட்கச் சொல்வார்கள். எங்க வீட்டில் நிலைமை நேர்மாறு” என்றாள். அம்மாவின் குரலில் ஏதோ இயலாமை, தனிமை வெளிப்பட்டன. சாரதி அம்மாவை இரக்கம் ததும்ப பார்த்தான். உண்மையில் அம்மாவும் அவனிடமிருந்த அதைத்தான் எதிர்பார்க்கிறாளோ என்று தோன்றியது.
சாப்பாடு முடிந்த பிறகு அம்மா சாரதிக்கும் அப்பாவுக்கும் பாக்கைக் கொடுத்துவிட்டு வரச் சொன்னாள். அப்பா ரேடியோவில் செய்திகளை கேட்டுக் கொண்டிருந்தார்.
சாரதியிடம் சென்றேன். நான் நீட்டிய டப்பாவிலிருந்து பாக்கை எடுத்துக் கொள்ளப்போனவன் சற்று நின்று “மீனா! குறைந்தபட்சம் எனக்கு தாங்க்ஸாவது சொல்லக் கூடாதா?” என்றான். இல்லாத ஏமாற்றத்தைக் குரலில் வெளிப்படுத்த அவன் செய்த முயற்சி எனக்குப் புரியாமல் இல்லை.
“தாங்க்ஸா? எதுக்கு?” திகைத்துப் போனவள் போல் நிமிர்ந்தேன்.
“உன்னுடன் ஊட்டிக்கு வர முடியாது என்று மறுத்து விட்டதற்கு.”
பிடிபட்டுவிட்டவள் போல் பார்த்தேன்.
சாரதி சிரித்துக் கொண்டே மேலும் சொன்னான். “ஆமாம் மீனா! நீ எப்படியும் என் மனதை புரிந்தகொள்ளும் முயற்சி எதுவும் செய்யவில்லை. குறைந்த பட்சம் நானாவது உன் மனதை புரிந்து கொள்ளவிட்டால் எப்படி?”
“என்ன விஷயம்?” யதேச்சையாக அங்கே வந்த அம்மா விஷயம் புரியாமல் கேட்டாள்.
“ஒன்றுமில்லை. நான் அவளுடன் ஊட்டிக்கு வர மாட்டேன் என்று சொன்னதற்கு மீனாவுக்குக் கோபம் வந்துவிட்டது.” என்றான் பாக்கை வாயில் போட்டுக் கொண்டே.
“போய்விட்டுத்தான் வாங்களேன்.” அம்மா மற்றொரு முறை வலியுறுத்துவது போல் கேட்டாள்.
“நேரமே இல்லை. சாரி மீனா! தவறாக நினைக்காதே. என் மீது கோபம் எதுவும் வைத்துக் கொள்ளாமல் ஜாலியாக சுற்றி விட்டு வா” என்றான்.
அம்மா எங்கள் இருவரையும் திருப்தியுடன் பார்த்தாள். ஏன் என்றால் சாரதி இப்படி அம்மா அப்பாவின் முன்னிலையில் என்னிடம் நேராக பேசுவது இதுதான் முதல் தடவை.
சாரதி லேசுப்பட்ட ஆள் இல்லை என்று எனக்குத் தோன்றியது. எனக்கு விருப்பம் இல்லை என்பதை கண்டுபிடித்து விட்டான். ஆனால் என்னை ஜெயிக்க வேண்டும் என்றோ, என் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்றோ சிறு முயற்சிகூட செய்யாமல் இருப்பானேன்?
உண்மையிலேயே அவனுக்கு என்மீது அன்பு இருந்தால் இப்படி விட்டேற்றியாக இருப்பானா? இல்லை எனக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவனுடைய மனைவியாகி விடுவேன் என்ற ஆணவமா? இந்த எண்ணமே ரொம்ப பயங்கரமானதாக இருந்தது.

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்