வலி

This entry is part of 34 in the series 20100704_Issue

ஸ்ரீதர் சதாசிவன்– shri.jersey@gmail.com

வெள்ளிக்கிழமை என்றால் கிளாஸில் எல்லோருக்கும் கொண்டாட்டம் தான். பீ. டி பீரியட்! மூணு மணியிலிருந்து நாலு மணி வரை…முழுசாக ஒரு மணி நேரம் ப்ளேகிரவுண்டு கிளாசின் கையில். அடிக்கடி மட்டம் போடும் ஆறுமுகம் கூட வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் ஸ்கூல் வந்துவிடுவான். மதியத்திலிருந்தே பசங்களிடம் பரபரப்பு துவங்கிவிடும்.

” டேய்.. நான் உன் டீம்டா…”,
” இந்த வாரம் நான் கோலி கிடையாது…போன வாரம் கூட நான் தான் நின்னேன்”,
” இன்னிக்கு எப்படியாவது சார்கிட்ட கேட்டு அந்த புது பால வாங்கணும்டா.. 7Dக்கு மட்டும் குடுத்தாரு”

பீ. டி பீரியடிற்கு முன்பு தமிழ் கிளாஸ். தமிழ் அம்மா, சீதா பாட்டி சரியான வில்லி. ஹோம் வொர்க் செய்யவில்லை என்றால் இம்போசிஷன் குடுப்பது அதன் வழக்கம். ஆனால் வெள்ளிக்கிழமை மட்டும் விவரமாக கிளாசிற்கு வெளியே நிறுத்திவிடும். கிளாஸ் முடிந்தவுடன் எல்லோரும் ப்ளேகிரவுண்டிற்கு ஓட,ஹோம் வொர்க் செய்யாதவர்கள் சீதா பாட்டியின் பின்னால் ஸ்டாப் ரூமிற்கு ஓட வேண்டும்.

“அம்மா …சாரிம்மா …….. நாளைக்கு சப்மிட் பண்ணிடறேன்” .
அவசரம் புரிந்தும் வேண்டுமென்றே இழுத்தடிப்பது சீதா பாட்டியின் வழக்கம், “அப்படி என்னடா அவசரம்… பீ. டி பீரியடா? ஒழுங்கா ஹோம் வொர்க் பண்ணியிருக்கலாம்ல?”
அதற்குள் கிரவுண்டில் டீம் பிரித்துவிடுவார்கள், லேட்டாக போனால் உப்புக்குசப்பாணிதான் என்ற பதட்டம் பசங்களுக்கு.”நோட்டு தொலைஞ்சுபோச்சுமா” , ” எனக்கு நைட்டு வயிறு வலிமா” என்று ஆளாளுக்கு சாக்குபோக்கு சொன்னார்கள்.
“சரி சரி.. போங்க.. நாளைக்கு சப்மிட் பண்ணனும்” சொல்லி முடிப்பதற்குள் ஒடதுடங்கினார்கள் பசங்கள். நான் மட்டும் மெதுவாக நகர்ந்தேன்.
“டேய்.. குமார் நில்லு…. என்ன ஆச்சு உனக்கு? நீ எப்பவும் ஒழுங்கா ஹோம்வொர்க் செஞ்சிவடுயே.. என்னாச்சு இன்னிக்கு? ” என்று என்னை நிறுத்தியது சீதா பாட்டி .
” இல்லமா…. நோட் கொண்டுவரலை….மறந்துட்டேன்..” என்று தயங்கினேன் நான்.
” சாப்பிட மறக்குமா? …நானும் பாத்துகிட்டே இருக்கேன் ….கரெக்ட்ஆ வெள்ளிக்கிழமை ஆனா ஹோம் வொர்க் செய்யறதில்லை… ‘ஒலியும் ஒளியும்’ பாக்கறயா? நாளைக்கு உங்க அம்மாவ கூட்டிகிட்டுவா”
” சரி மா” என்று தலையாட்டினேன்.
” சரி .. இப்போ போ”

நான் மெதுவாக ஊர்ந்து,ஊர்ந்து ப்ளேகிரவுண்டிற்கு போனேன். அதற்குள் டீம் பிரித்து முடித்திருந்தார்கள்.’அப்பாடா’ என்று இருந்தது எனக்கு. வழக்கம் போல ‘லேட்’டானதற்கு தண்டனையாக கிரவுண்டை சுத்தி மூணு தடவை ஓடியே பிறகே விளையாடலாம் என்றார் ஆல்வின் சார். “சரி சார்” என்று தலையாட்டினேன் நான்.

மூணு முறை ஓடிவிட்டு, மரத்தடிக்கு சென்று அமர்ந்துகொண்டேன், முடிந்தவரை யார் கண்ணிலும் படாமல் பார்த்துக்கொண்டேன்.சில சமயம் ஆல்வின் சார். ரூமிலிருந்து பார்த்துவிட்டால் கூப்பிட்டு அனுப்புவார்.
போன வாரம் கூட இப்படித்தான்.

” என்னடா…. மரத்தடில என்ன பண்ற ? எந்த டீம் நீ? விளையாடல?”
” இல்லை சார்”
” ஏன்டா… பின்ன எதுக்கு பீ.டி பீரியட்? , சும்மா உக்காரகூடாது” என்று சொல்லிவிட்டு விசில் அடித்து இரண்டு டீம் காப்டனையும் கூப்பிட்டார்.
” டேய் ….. குமார ஒரு டீம்ல சேத்துகோ”
” ஐயோ…… பொட்டை பையன்…….எனக்கு வேண்டாம் சார்” – ஒருவன்
” ஆமாம் சார்! சரியான ஒம்போது இவன்…. விளையாட லாயக்கு இல்லை” – இன்னொருவன்
” டாய்…….உத படுவ… உன் டீம்ல சேத்துக்கோ ” என்று ஒரு டீமில் தள்ளிவிட்டார் ஆல்வின் சார்.
வேண்டாவெறுப்பாக என்னை அந்த டீமில் சேர்த்துகொண்டார்கள். கிரவுண்டுக்கு போனவுடன் பசங்களின் கேலி துடங்கிவிட்டது.

” ஏன்டா… குமாரி…… பொண்ணுங்களோட போய் கொக்கோ விளையாடுடா……இங்க என்ன பண்ணற?”
” பொண்டுக”
” அஜக்கு”
சுட்டெறிக்கும் சொற்கள்! வேறு யாரையோ கேலி செய்கிறார்கள் என்பது போல காதில் வாங்காமல் நடந்தேன்.
” நடையா……இது நடையா” என்று ஒருவன் கல்லை எடுத்து என் இடுப்பில் குறிவைத்தான். சுளீரென்று வலி சுண்டி இழுத்தது.
” அம்மா…” என்று கத்திக்கொண்டே கிரவுண்டில் நான் சறிய, சுற்றி பத்து பேர்.
” பாருடா… ஒரு கல்லடி தாங்கல ”
” நீயெல்லாம் ஆம்பளை.. ” என்று ஒருவன் காலால் உதைத்தான், கத்தினேன் நான்.
” பாருடா.. பொட்டை கத்துது” உதை தொடர்ந்தது.
” பாத்துடா….கொட்டைல படப்போவுது” இன்னொருவன் சிரித்தான்.
” பொட்டைக்கு ஏதுடா கொட்டை….. பாத்துருவோமா…..” என்று ஒருவன் கேட்க, இரண்டு பேர் சேர்ந்து என் டவுசரை இழுத்தார்கள்.
” விடுடா… … விடுடா…அம்மா” என்று கத்திக்கொண்டே எழுந்தேன் நான். விடாமல் இரண்டுபேரும் டவுசரை இழுக்க, சமாளித்து எழுந்து, அவர்களை தள்ளிவிட்டு, வேகமாய் ஓட ஆரம்பித்தேன்
” ஓடு.. பொட்டை…..உனக்கெல்லாம் புட்பால் கேக்குதா?” பத்து பேரும் கொல்லென்று சிரித்தார்கள்.

ஓட்டம் பிடித்து, மரத்தடியில் வந்து அமர்ந்த பொழுது…. மூச்சிரைத்தது. கை கால்கள் நடுங்கின. ஓடிய வேகத்தில் தொண்டை வறண்டது, தொண்டையில் எதோ அடைத்துக்கொண்ட மாதிரி ஒரு வலி. கண்ணீர் கண்களில் முட்டியது. அவமானத்தால் உடல் கூசியது. “அம்மா……. அம்மா……” என்று கத்தியவாறே உடைந்து அழ தொடங்கினேன். கண்கள் இருண்டது…….தலையில் பெரிய சுமையை ஏற்றி வைத்தாற்போல வலி. புல்வெளியில் சரிந்தேன்.

கண் விழித்த பொழுது வானம் இருட்ட ஆரம்பித்திருந்தது. அவசரமாய் எழுந்து ‘பேக்’கை மாட்டி கொண்டு வேகவேகமாய் நடந்தேன். வீட்டிற்கு வந்த பொழுது, வாசலில் அப்பா.
” நில்லுடா” என்று என்னை நிறுத்தினார்
” அப்பா”
” ஏன்டா லேட்?”
” பீ. டி பீரியட்பா ”
” அது தெரியும்.. நான் இப்போ தான் சேகர் வீட்டிலேர்ந்து வரேன்”. சேகரின் அப்பாவும், என் அப்பாவும் நண்பர்கள்.
“…………….”
” ஏன்டா….. ஒரு ….புட்பால் விளையாட தெரியாதா? ”
” ஹ்ம்ம் ……..” என்று சுவரோரம் நெளிந்தேன் நான்.
“என்ன நெளியற .. இங்க வா ” என்று கையை பிடித்து இழுத்தார் அப்பா
” ஒழுங்காதனே உன்ன பெத்தேன்…… ஏன் மானத்த வாங்கற….. அது என்ன நடை… பொட்டை மாதிரி?” என்று தலையை கட்டாயமாக அமுக்கி முதுகில் ஓங்கி ஒரு அறை.

இடிவிழுந்தார் போல இருந்தது, ” அம்மா” அலறினேன், “அப்பா வேண்டாம்பா…அடிக்காதீங்கபா”
” அடுத்ததரம்…… அப்படி நட, காலை உடைக்கறேன் ” இன்னொரு அடி பலமாய். ” இனிமே அந்த பக்கத்துக்கு வீட்டு பூங்குழலியோட விளையாடறத பாத்தேன், தொலைச்சேன்” காதை பிடித்து திருகினார் அப்பா.
” வேண்டாம்பா….இனிமே விளையாட மாட்டேன்பா.. அடிக்காதீங்கபா… ” வலி பொறுக்காமல் கெஞ்சினேன்.

அதற்குள் அம்மா அடுக்களையிலிருந்து ஓடி வந்தாள். “வேண்டாங்க, விடுங்க.. பாவம் பையன்” என்று என்னை இழுத்து அணைத்து கொண்டாள்.
” நீ செல்லம் குடுத்து குடுத்து தான் கெட்டுபோறான் ” என்று என்னை முறைத்துவிட்டு வெளியே நடந்தார் அப்பா. நான் தேம்பி தேம்பி அழுதேன்.

அம்மா என் கண்ணை துடைத்து, பேக்கை இறக்கினாள். “சரி வா……டிபன் தரேன்”
சுட சுட தோசை , தேங்காய் சட்டினி. பசி தாங்காமல் விண்டு விண்டு விழுங்கினேன்.

” ஏன்பா…..உனக்கு பூங்குழலிய விட்டா பசங்க யாரும் பிரெண்ட்ஸ் இல்லையா?” அம்மா கேட்டாள்.
” இல்லம்மா”
” நல்ல பசங்களா பாத்து பிரெண்ட்ஸ் புடிச்சிக்கோ .. இனிமே பூங்குழலி கூட விளையாடதே….. ஆம்பளை பையன் நீ அப்படி நடக்க வேண்டாமா?”
“சரிம்மா” என்றேன் நான்.

அம்மா என்ன சொல்கிறாள்? எப்படி நடக்க வேண்டும்? நான் என்ன தப்பாக செய்கிறேன்?

எதற்காக எல்லோரும் என்னை கேலி செய்கிறார்கள் என்பதே முதலில் புரியவில்லை.

மற்ற பசங்களை போல தானே நானும்? என் நடையில் என்ன பிழை? ஏன் என்னை “பொட்டை” என்று ஏசுகிறார்கள்?
ஏன் பசங்களில் யாருக்கும் என்னை பிடிக்கமாட்டேங்கிறது? ஏன் என் கூட யாரும் பிரெண்ட்ஸ்ஆக இருப்பதில்லை?

ஒன்றும் விளங்கவில்லை.

டெய்லி ஸ்கூலில் நரக வேதனைதான். நின்னால் கிண்டல், நடந்தால் கிண்டல், பேசினால் கிண்டல்! இதற்காகவே காலையில் எல்லோருக்கும் முன்னாடி ஸ்கூலிற்கு போய், என் சீட்டில் அமர்ந்துகொள்வேன். தண்ணி , பாத்ரூமிற்கு கூட அவ்வளவாக நகர மாட்டேன். பயம் …. வெட்கம் …கலக்கம்!

அப்பாவிடம் சொல்லுவது நடக்காத காரியம். அம்மாவிடம் ஒரு முறை ஸ்கூலில் பசங்களின் கிண்டல் தாங்க முடியவில்லை என்று அழுததற்கு,
” பாரு… பொட்டைபிள்ளை மாதிரி அழக்கூடாது….. பசங்கன்னா கிண்டல் பண்ணத்தான் செய்வாங்க, இதுக்கெல்லாம் அழலாமா? ” என்று என் வாயை மூடிவிட்டாள்.
கண்ணாடி முன் நின்று என்னையே திரும்ப திரும்ப பார்த்தேன். என்ன செய்வதென்று தெரியவில்லை. யோசித்து யோசித்து, தலை வலி அதிகமாகியது.மெதுவாக படுக்கையில் படுத்து கண்களை மூடினேன். ஸ்கூலுக்கு போகவே இஷ்டம் இல்லை. நாளை எதாவது சாக்கு சொல்லிவிட்டால் சனி ஞாயிறு லீவு… திங்ககிழமை வரை நிம்மதி.

———-

அப்பா சீக்கிரமே ஆபிசுக்கு போய் விட்டார். அம்மாவிடம் தாஜா பண்ணி, ஸ்கூலுக்கு மட்டம் போட்டேன்.

” பக்கத்து வீட்டுக்கு நேத்திதான் புதுசா குடி வந்திருக்காங்க… அவங்க வீட்டு பையன் கணேஷ் கூட உங்க ஸ்கூலுக்கு தான் வரப்போறான்” என்றாள் அம்மா
” அப்படியா?”
” ஆமாம் .. இன்னிக்கு வீட்டுலதான் இருக்கான், போ.. போய் பேசு… பிரெண்டு பிடிச்சிக்கோ” என்றாள் அம்மா.
நான் குளித்து, இட்லி சாப்பிட்டு பக்கத்துக்கு வீட்டுக்கு போனேன்.
” டேய் குமாரு” என்று சிரித்தாள் பூங்குழலி. இவள் இங்கே என்ன செய்கிறாள்?
” இவன்தான்டா கணேஷ் ……., கணேஷ் இவன் தான் குமார், பக்கத்து வீடு” என்று இரண்டு பேரையும் அறிமுகம் செய்து வைத்தாள்.
” நீ இன்னைக்கு ஸ்கூலுக்கு போல?” என்றேன் நான் குழலியிடம்.
” போலடா… எங்க அப்பா கடைல பூஜை ” என்றவள் ” கணேஷ் கூட உங்க ஸ்கூல்தான் வரப்போறான்” என்று அவனை பார்த்து சொன்னாள்.

கணேஷ் என்னை பார்த்து நட்போடு சிரித்தான். சராசரி உயரம் , சிவப்பு தோல்.பாக்க நல்ல பையனாக தெரிந்தான்.
” 7C” என்றான்
” நானும் 7C தான்” எனக்கு ஒரே குஷி.
” ஹய்……ஒரே கிளாஸ் ….” என்று குதித்தாள் குழலி.
” ஆமாம்” என்று இளித்தேன் நான்.
மூவரும் ஒன்றாக வீட்டிற்கு வெளியே ஓடினோம். “விளையாடலாம் டா” என்றாள்.
“சரி வா” – நான்.
” நானும் குமாரும் ஒரு செட்டு” என்று என் பக்கத்தில் வந்து நின்றான் கணேஷ்.
என்னால் என் காதுகளையே நம்ப முடியவில்லை.மனதிற்குள் ஒரே பூரிப்பு. இதுவரை எந்த பையனும் என்னை செட்டு சேர்துகொண்டதில்லை.பரம சந்தோசம் எனக்கு. மூவரும் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் ஓயாது விளையாடினோம்.

குழலி அம்மா வந்து அவளை கடைக்கு போகவேண்டும் என்று கூட்டிக்கொண்டு போனாள். கணேஷ் அவன் வீட்டுக்குள் என்னை அழைத்து சென்றான்.
அவன் அப்பா புதுசாக வாங்கி குடுத்த ரேஸ் கார் பொம்மையை காட்டினான். அவன் பழைய ஸ்கூல் பத்தி பல கதைகள் சொன்னான். பின்பு அவன் சைக்கிளை காட்டினான்.
” நல்ல இருக்குடா”
” உன்கிட்ட இருக்கா?”
” இல்லையே” என்றேன் நான்.
” ஸ்கூலுக்கு நடந்தா போற?”
” ஆமாம்”
” ஏன் உனக்கு சைகிள் ஓட்ட தெரியாத?”
” தெரியாது”
” வா நான் சொல்லித்தரேன் ” என்று என் கைகளை பிடித்து அதில் உட்கார வைத்தான்.
” வேண்டாம்டா ” எனக்கு சற்று பயம்.
” டேய் … நீ என் பிரெண்டா இல்லையா”
” பிரெண்டுதான்டா” என்று சிரித்தேன் நான்.
” அப்போ உக்காரு” என்று என்னை அமர்த்தி, சைக்கிளை பின்னால் பிடித்துகொண்டான். ” பெடல் போடு”.
நான் மெதுவாக அமுக்கினேன்.. சைக்கிள் ஒரு அடி முன்னே போக, ‘தொபக்கடி’ என்று கீழே விழுந்தேன், சைக்கிள் என்மேல்!
” பரவாயில்லை … முதல அடிதான் படும்” என்றவன் சைக்கிள்ளை பிடித்து தூக்கினான். நான் சமாளித்து எழுந்தேன்.
” உக்காரு” என்றாள் சைக்கிளை காட்டி
” போதும்டா.. ” எனக்கு கீழே விழுந்த அசிங்கம்.
” டேய்… ஒன்னும் ஆகாதுடா” என்று என்னை பிடித்து மீண்டும் அமர வைத்தான். இந்த முறை மூன்றடி …… திரும்பி ‘தொபக்கடீர்’!
இப்படியே பல முறைகள்.. பெரிதாக எதுவும் முன்னேற்றம் இல்லை.
“நாளைக்கு வா….. சொல்லித்தரேன்” என்றான்
” தாங்க்ஸ் டா” என்றேன் நான்
” சரி டா நாளைக்கு பாக்கலாம்டா…” என்று சைக்கிளை உள்ளே தள்ளி கொண்டு போனான்.
அவனை நிறுத்தி “டேய் கணேஷ்…. கிளாஸ்ல என் பக்கத்துக்கு சீட்டு காலிதான்.. நீ என்கூட உக்காரலாம்” என்றேன் நான், எனக்கும் ஒரு நண்பன் கிடைத்த குஷியில்.
” சரி டா.. டாடா”
அவனுக்கு டாடா சொல்லிவிட்டு வீட்டை நோக்கி நடந்தேன்.

” என்னடா , கணேஷ் என்ன சொன்னான்?” அம்மா கேட்டாள்.
” நல்ல பையன்மா … எனக்கு பிரெண்ட் ஆயிட்டான்” என்றேன் நான் பெருமிதத்தோடு.
” நல்லது போ! ” அம்மாவுக்கும் சந்தோசம்.
எனக்கு திங்கள்கிழமை எப்பொழுது வரும், ஸ்கூலிற்கு எப்பொழுது போவோம் என்றிருந்தது.
———-
இரண்டாவது பீரியட் ஆரம்பத்தில் கணேஷ் அப்பா அவனை கிளாஸில் கொண்டுவந்துவிட்டார். மிஸ் அவன் அப்பாவிடம் பேசிகொண்டிருக்க, நான் என் பெஞ்சிலிருந்து எழுந்து கணேஷை நோக்கி கையாட்டினேன். அவனும் என்னை பார்த்து கையாட்டி சிரித்தான். நான், என் கையை காலியாயிருந்த என் பக்கத்துக்கு சீட்டை நோக்கி காட்டி, “இங்கே வா” என்று ஜாடை காட்டினேன்.
சிறிது நேரத்தில் அவன் என் பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்டான்…. எனக்கு ஒரே ஜாலி. மிஸ் கிளாஸ் நடத்த ஆரம்பிக்க, கணேஷிடம் புத்தகம் இல்லை,
” இந்தடா… என் புக்க பாரு” என்று பகிர்ந்து கொண்டேன்.

கிளாஸ் முடிந்ததும், மத்த பசங்கள் கணேஷை சுத்தி கொண்டார்கள்.
” உன் பெயர் என்னடா” என்றான் ரகு
” கணேஷ்”
” எந்த ஸ்கூல்?”
” ஆர்.வீ” என்றான் கணேஷ்.
” என்ன இந்த பொட்டை பயல உனக்கு முன்னாடியே தெரியுமா?” என்று சிரித்தான் ரகு
” என்ன?” கணேஷ்க்கு ஒன்றும் புரியவில்லை
” இவன்தான்டா…குமாரி… அவன் பக்கத்துல உக்காந்திருக்க……..நீயும் பொட்டையா?” சீண்டினான் ரகு.
கணேஷ்க்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.
” யார பாத்து பொட்டைனு கூப்பிடற..” என்று எழுந்தவன் ரகுவின் கன்னத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டான். ரகு வலி தாங்காமல் “ஆ ஆ” என்று அலறினான். பின்பு சுதாரித்து கணேஷின் கைகளை பிடித்து முறுக்கினான். இரண்டு பேரும் கட்டிபிரண்டு உருள ஆரம்பித்தார்கள். பசங்கள் எல்லோரும் அவர்கள் இருவரையும் சுற்றி வட்டமடித்து, கத்த ஆரம்பித்தார்கள்.”அடிடா”, “நல்லா குத்து”, “விடாதே” என்று ஒரே கூச்சல்.நான் பயந்து,செய்வது அறியாமல் திகைத்து போயிருந்தேன்

அதற்குள் அடுத்த பீரியட் மிஸ் வந்துவிட, இரண்டு பேரும் விலகினார்கள், ஒரே அமைதி. மிஸ் இரண்டு பேர் கன்னத்திலும் “பளார்”, “பளார்” என்று அறை விட்டு, வெளியே நிறுத்தினாள்.அன்னிக்கு நாள் முழுவதும் வெளியே நிற்கவேண்டும் என்று தண்டனை. கணேஷ் எரிச்சலில் முறைத்து கொண்டிருந்தான். எனக்கு அவனை பார்க்க பாவமாய் இருந்தது. திமிரெடுத்த ரகு! அவன் சைக்கிள் காத்தை பிடுங்கி விட வேண்டும் என்று கறுவினேன்.

———-
சாயங்காலம் ஸ்கூல் முடிய, கணேஷை காணவில்லை. சீக்கிரம் கிளம்பியிருப்பான். நான் வீட்டுக்கு போய் உடை மாற்றி , அம்மாவிடம் மிட்டாய் வாங்க காசு கேட்டேன்.
” எதுக்குடா எட்டணா? ரெண்டு மிட்டாய்யா? பல்லு கெட்டுபோகும்”
” அம்மா.. கணேஷ்க்குமா , குடுமா” என்று கெஞ்சினேன்.
” சரி இந்தா”

வேகமாய் தாதா கடைக்கு போய் இரண்டு தேன் மிட்டாய் வாங்கிகொண்டு, கணேஷின் வீட்டிற்கு விரைந்தேன்.
” கணேஷ்” என்று கத்திவிட்டு, அவன் சைக்கிளில் ஏறி அமர்ந்தேன்.
இரண்டு நிமிடத்தில் அவன் வெளியே வந்தான்.
” இந்தாடா மிட்டாய்” என்று இளித்துக்கொண்டே அவனிடம் நீட்டினேன்.
” என் சைக்கிள விட்டு இறங்குடா” என்றான் கணேஷ் கோபமாய்.
” டேய்.. ஏன்டா?” ஒன்னும் புரியவில்லை எனக்கு.
” பொட்டை பையனோட எல்லாம் எனக்கு பிரெண்ட்ஷிப் வேண்டாம்.. இறங்கு”
தூக்கிவாரி போட்டது எனக்கு.
” டேய்.. கணேஷு.. பசங்க சும்மா கிண்டல் பண்றாங்கடா.. ” என்று குரலை தாழ்த்தி கெஞ்சினேன்.
” இறங்குடான… ஒம்போது” என்றவன் என்னை பிடித்து கீழே தள்ளினான். நான் நிலைகுலைந்து விழ, மிட்டாய் இரண்டும் மண்ணில் சிதறி ஓடியது
” அம்மா! ” கத்தினேன்.
” போடா… இனிமே இங்க வராத” என்று ஒரு உதைவிட்டான்.
” அம்மா…” நான் வலி பொறுக்காமல் கத்தினேன், அழுகை அழுகையாய் வந்தது.
அவன் சைக்கிளை சரி செய்துவிட்டு உள்ளே போனான். நான் கீழே விழுந்து கிடந்தேன். கைமுட்டி சிராய்த்து, ரத்தம் கசிந்தது. எழுந்துகொள்ள முடியவில்லை…எழுந்துகொள்ள மனம் வரவில்லை. வலி…. அப்படி ஒரு வலி…..என் மனதில்!
———

Series Navigation