களம் ஒன்று கதை பத்து – 4 ஆப்பிள் அறிவித்த ஏவாள்

This entry is part [part not set] of 31 in the series 20100613_Issue

ம. காமுத்துரை



அம்மா அவளது அருகில் வரப் பயந்தது போல ஆஸ்பத்திரி வராண்டாவிலேயே நின்று கொண்டது.
“குடியக் கெடுத்த சிறுக்கி… சாகட்டும், அவ செத்துத் தொலையட்டும், நா வர மாட்டேன்…”
கண்ணில் கண்டவர்களிடமெல்லாம் சொல்லிப் புலம்பியது தான் அவளுக்கு அசிங்கமாய் இருந்தது. இதற்கு தன்னைக் காப்பாற்றாமலேயே விட்டிருக்கலாமே… அம்மாவின் பேச்சுப்படி இந்நேரம் செத்துக் கூட தொலஞ்சிருப்பேனே…
இன்னமும் குளுகோஸ் ஏறிக் கொண்டிருந்தது. இந்தப் பாட்டிலோடு போதுமென்றார்கள்.
படுக்கையில் தங்கச்சி மட்டும் உட்கார்ந்திருந்தாள். தம்பி எங்கியோ விளையாடப் போயிருந்தான். அப்பா ஆட்டோவோடு வந்து, அவளை பெட்டில் சேர்த்து விட்டு கையயழுத்துப் போட்டார். ஊசி போடவந்த டாக்டர் கூட கவனிக்கவில்லை. குளுகோஸ் ஏற்ற வந்த நர்சுப்பிள்ளைதான் அதை வெளிக்காட்டிவிட்டது.
காதுல மூக்குல கழுத்துல எதாச்சும் நக நட்டு இருந்தா கழட்டி வீட்ல குடுத்துருமா… ஆயிரம் பேர் புழங்க கூடிய எடம்… பேசிக் கொண்டே ஜாக்கெட்டுக்குள் மறைந்திருந்த கயறை வெளியில் இழுத்தாள்.
குடும்பமே ஆடிப்போனது.
கறுப்புக்கயிற்றில் மஞ்சள் துண்டு.
“ஏம்மா… இதென்னாது… தாலியா…” – நர்சுக்கும் கைநடுக்கம் கண்டது.
நேற்று சாயங்காலம் சென்றாயன் பட்டாளம்மன் கோயிலில் வைத்துக் கட்டிய கயறு.
“என்னா கருப்பா இருக்கு…” – அந்த வெறிச்சியிலும் கூட அவள் அவனிடம் கேட்டாள்.
“கயறா கணக்கு மஞ்சள் இருக்குல்ல…” அவனும் படபடப்பாய்தான் பதில் சொன்னான். அவன் வாங்கிய கடையில் மஞ்சள் கயிறு இல்லை. அவசரத்துக்கு பாவமில்ல… ரிஜிட்ராபிஸ் போகும்போது சரி பண்ணீரலாம் என்றான். திங்கள்கிழமை ரெஜிஸ்திராபீஸ் போய் பதியவேணுமென்றான்.
“நல்லவேள, கிரிட்டிகல் கேசா இல்லாம போச்சு , இல்லேன்னா… எங்கபாடு சிக்கலாயிருந்துருக்கும்…” – நர்ஸ் பெருமூச்சுவிட்டு அவளுக்கு முதல் பாட்டிலை ஏற்றிவிட்டுப் போனார். அவளை ஒத்த வயசுப் பிள்ளைதான் அதுவும்.
அப்பாவும் அம்மாவும் வாயடைத்து நின்றார்கள். உடன் வந்தவர்களுக்கு நிறைய அவல் கிடைத்திருந்தது.
“யார்டீ…”
ஆளாளுக்கு கேட்டார்கள். அந்த பெரியாஸ்பத்திரியே வேடிக்கை பார்ப்பது போல தெரிந்தது. அந்த வார்டில எப்படியும் இருபதுக்குமேல் நோயாளிகள் இருக்கலாம். அத்தனை பேரும் தன்னைக் கவனிப்பதாய் அவளுக்கு உறுத்தியது. எந்த பதிலும் யாருக்கும் சொல்லவில்லை. பேசாமடந்தையாயிருந்தாள்.
“எம்புட்டு நெஞ்சழுத்தம் பாரு” என்றார்கள்.
“வகுத்துல கிகுத்தல எதும் ஏத்தீட்டு வந்திருக்காளா…” அந்தக் கேள்வி மெல்லிசாய் ஒலித்தது. கீச்சுக்குரல் விஜயா அக்காவா… ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. கண்களைத் தாழ்த்தியபடியே படுத்திருந்தாள்.
அப்பா மடார்மடாரென தனது நெற்றியிலே அடித்துக் கொண்டார். அத்தனை களேபரங்களுக்கும் சிகரமாய் அந்தச்செயல் ஆஸ்பத்திரி வார்டில் துல்லியமாய் எதிரொலித்தது. அதுவும் அந்த நெத்தியடி “ச்சப் ச்சப் ச்சப்”
எல்லோரும் அவளை விட்டு அப்பாவைக் கவனிக்கலாயினர். அம்மா ஓடிப்போய் அவரை அணைத்தபடி கையை விலக்கிப் பிடித்தது. அம்மாவின் தொடுகையில் திடீரென கோபம் கொண்டவராய் அம்மாவின் குடுமியைப் பிடித்து தனது தலையால் அம்மாவின் நெற்றியில் முட்டினார். அம்மாவுக்கு தலைகிறுகிறுத்திருக்க வேண்டும். கைகள் இரண்டையும் பரப்பி தடுமாறியது. வனஜாக்காவும் ஓடிப்போய் மயிலம்மாளும் பிடித்துக் கொண்டார்கள். அப்பா ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறினார்.
அம்மாவை வார்டின் வாசலோரமாய் உக்கார வைத்தனர்.
“பெத்தவள இப்பிடி பரிதவிக்கச் செய்றது ரெம்ப பாவம் டீ…”
“இதுக்குத்தே ஒன்னிய பெத்து, ஆளாக்கி விட்டாகளாக்கும்…”
“ஆருன்னு சொல்ல மாட்றா… குசுவுனது எப்படியும் மணத்துக் காட்டீரும்டீ…”
ஒவ்வொருவராய் இடித்தும் புடைத்தும் பேசிவிட்டு வெளியேறினர். வனஜாக்காவும், விஜயாக்காவும் அம்மாவோடு வராண்டாவில் அமர்ந்து எதேதோ சமாதானஞ் சொல்லிக் கொண்டிருந்தனர். “இப்ப ஒண்ணும் கேக்க வேணாம்… உசுர்புடிச்சு வீட்டுக்கு வரட்டும். அங்கவச்சு அவளப் பாத்துக்கிருவம்…”
வேண்டாமென அம்மா தலையாட்டியது. “இவ எனக்கு வேண்டாம். ஊசியப் போட்டு கொல்லச் சொல்லீர்ங்க…”எல்லோரும் அவளைப் பார்த்துப் பார்த்து பேசினார்கள். அவர்களது ஒவ்வொரு பார்வையும் அவளுக்கு தீயாய்ச் சுட்டது. அனல்மேல் படுத்துக் கிடப்பதாய் உணர்ந்தாள். ரெம்பவும் கேவலப்பட்ட ஈனப்பிறவியாய் ஆகிப்போனது போல நெளிந்தாள். ஊசி, ட்யூப் எல்லாவற்றையும் அறுத்துவிட்டு, ஆஸ்பத்திரியை விட்டு – ஊரைவிட்டே ஓடிப்போக வேண்டும் போல நினைத்தாள்.
“அய் லவ்யூ…” – கீரைக்கல் பஜாரில் தேங்காய் வாங்கிக் கொண்டிருக்கும் போது சென்றாயன் சாதாரணமாய்ச் சொல்லி கண்ணடித்த போது… அவனைக் கோமாளி என்றே நினைத்திருந்தாள்.
கோமாளி மாதிரியேதான் பட்டைக்கோடு போட்ட சட்டையும் முக்கால்கால் பேண்ட்டும். கழுத்தில் சுற்றிய மப்ளருமாய் வந்து அவளது பின்புறத்தை இடித்துவிட்டுப் போனான்.
“மூஞ்சியும் மொகரையும் பாரு…” – என்று தான் முகஞ்சுளித்தாள்.
“ரெளடிப்பய…” என்று அவளது பிரண்ட்ஸ் அவனைப் பற்றிச் சொன்னார்கள்.
ஆனால் அதற்கப்புறம் அவள் எங்கே நின்றாலும் சென்றாயனும் அங்கே இருப்பது அவளுக்கு ஆச்சரியமளித்தது. மாவு அரைக்க ரோதை (மாவரைக்கும் மில்)க்கு போனாலும் சரி, பஞ்சாபீசில் அம்மா வேலை செய்த காசுவாங்க தெக்கு தெருவிலிருக்கும் கங்காணியக்கா வீட்டுக்குப் போனாலும் சரி… தம்பியைக் கூட்டிவர பள்ளிக்கூடத்துக்கு வந்தாலும், ஏதாச்சும் ஒரு பக்கமாய் நின்று கொண்டிருப்பான். அவள் பார்க்கும் போது பார்ப்பதும், நண்பர்களோடு கோமாளித்தனமான சேட்டைகள் செய்வதும், தெருவே அதிரும்படி ஹஹ்ஹா என பெரிசாய்ச் சிரிப்பதுமாய் ஸ்டைல் காட்டுவான். ஆனால் வீட்டுப் பக்கம் மட்டும் வந்ததில்லை.
மலக்கார அத்தை வார்டுக்குள் நுழைந்தது. முன்னதாக அம்மாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தது. அம்மா அவரிடமும் உதறி உதறி பேசியது.
“என்னாத்தா… என்னா செய்தூ…” – குளுகோஸ் இறங்கிக் கொண்டிருந்த ட்யூப்பைப் பார்த்துக் கொண்டு கேட்டார் மலக்கார அத்தை.
“ம்..?” – என முகத்தை வெட்டியவள் “நல்லார்க்கு…” என மெல்லச் சொன்னாள்.
“என்னமு சாப்ட்டியா…”
“ம்…” – யாருமே அவளை சாப்பிடக் கேட்கவில்லை. பசிக்கத்தான் செய்தது… அவளது மெளனத்தப் பார்த்து அடுத்த கேள்வி கேட்காமல் கையில் கொண்டு வந்திருந்த தூக்கு வாளியைத் திறந்து அவளிடம் நீட்டியது.
“குடிச்சுக்க… எளநித் தண்ணி தெம்பு குடுக்கும் வயித்துக்கும் எதமா இருக்கும்…”
மெதுவாய் எழுந்து உட்கார்ந்தவள் அம்மாவைப் பார்த்தாள். “டாக்குடருகிட்ட கேட்டுக்கட்டா…”
“எளநியக்குடிக்க எவனக் கேக்கணும்… சும்மா குடி…”
கொஞ்சமாய்த்தான் குடிக்க நினைத்தாள். அதன் இனிப்பும் துவர்ப்பும் கலந்த சுவை, வாயயடுக்கவிடாமல் தூக்கு வாளியை துடைத்துக் கொடுத்தது. குடித்து முடித்ததும் முகம் வியர்த்தது.
“உஷ்ணத்தப்பாரு… கெளப்பி விடுது…” – சொன்னபடி முந்தானையால் முகம் துடைத்து விட்டார்.
“ஆர்ட்டயும் பேச்சுக்குடுத்து ஏமாந்துட்டியா…” நாசூக்காகக் கேட்டது.
வீட்டில் போய்ச் சொல்லிக்கொள்ளலாம் என்றிருந்தாள். அது நடக்காது எதையுமே மனசுக்குள் போட்டு வைக்க முடியாதா… தப்பா…
யார்கிட்டயும் ஏமாறவில்லை என்று சொன்னால் நம்பி விடுவார்களா… பிறகு எதுக்கு மருந்து குடிச்ச எனக் கேள்வி வரும்.
அவளுக்கே அது தெரியவில்லை. ஏன் மருந்து குடிச்சேன்… சென்றாயன் ஏமாத்துச்சா… யோசிச்சுப் பார்த்ததில் எந்த நாளிலும் அப்படி தெரியவில்லை. எதுக்கு ஏமாத்தணும்…? புரியவில்லை.
ஒரே ஒரு நாள் பொம்மையகவுண்டன்பட்டியில் நடந்த சாமிகும்பிடுக்கு ஆடலும் பாடலும் நடத்தியபோது விஜய் வேசத்தில் வருவேன் என்று சொல்லிவிட்டு கமல் பாட்டுக்கு டான்ஸ் ஆடியது. உடன் வந்திருந்த பிரண்டுகளுக்கு பதில் சொல்ல முடியல… ஏற்கனவே குறிப்பிட்ட பாடலுக்கு ஆடுவான் எனச் சொல்லி கூப்பிட்டு வந்திருந்தாள்.
வேற எந்த நாளும் ஏமாத்தினதில்லை. ஏதாச்சும் ஒரு நாள் வெளியூர் போனாலும், வளையல், சடை மாட்டல், ரிங் என்று எதினாச்சும் வாங்கி வருவான்.
வார்டுக்குள் டாக்டர் நுழைந்ததும் பரபரப்பானது. வார்டு முழுக்க சந்தைக் கடையாய் சலசலத்த சப்தம் ஓய்ந்து அமைதியானது. வலது மூலையில் இருந்த ஒரு பெட்டியிலிருந்து சிறுகுழந்தையின் அழுகுரல் – முனிசிபாலிட்டியின் சங்கொலி போல துவங்கியபோது, அதனுடைய அம்மா உடனடியாக ஜாக்கட் பட்டனை அவிழ்த்து மார்புக்குள் குழந்தையின் வாய் புதைத்து சப்தம் அமத்தினாள்.
ஒவ்வொரு நோயாளியாய் விசாரித்து பேச ஒரு டாக்டரும் கட்டிலின் முன்புறம் தொங்கும் நோயின் வரலாறை கவனித்து முன்னவரிடம் தெரிவிக்க ஒரு நர்ஸ், ஊசியில் மருந்தைப் பீச்சியபடி ஒரு நர்ஸ், மருத்திரை டப்பாக்களை ட்ரேயில் ஏந்தியபடி இன்னொரு நர்சுமாய் வந்தனர். இவர்களுக்கெல்லாம் முன்னால், “யேந்திரிங்க யேந்திரிங்க… டாக்டர் வாரார்” என கட்டியம் கூறுகிற வாட்ச்மேன் போல ஒரு வயசாளி… கையில் சின்ன கோலுடன்.
அவளிடம் டாக்டர் வந்த போது அம்மா வந்துவிட்டது. மலக்கார அத்தை அம்மாவுக்குப் பின்னால் நின்று கொண்டது. அவளைப் பரிசோதித்த டாக்டர்.
“ஒண்ணுமில்ல சரியாயிருச்சு. ஒடம்பு ஒப்புக்காக குளுக்கோஸ் ஏறுது… இந்த பாட்டில் முடிஞ்சதும் நீங்க கெளம்பலாம்”. நர்ஸ்… என்று ஊசி, மருந்து இரண்டு நர்சுகளிடமும் எதோ சொன்னவர். “இப்பதக்கி பிரச்சன இல்ல. ஆனா இதுமாதிரி மறுபடி நடக்கமா பாத்துக்கங்க” – என்றவர், “என்னா… எக்சாம்ல பெயிலா…” – என்று குனிந்து அவளது கையில் ஊசி போட்டப்படி கேட்டார் டாக்டர்.
“லவ் பெயிலர் சார்” – டாக்டரிடமிருந்து மருந்து தீர்ந்த ஊசியை வாங்கி நர்ஸ் பதில் சொன்னார்.
“ஓ…!”- என புருவம் உயர்த்திய டாக்டர். “நல்லா கெளன்சிலிங் குடுங்க…” – என்றார்.
புரியாமல் தலையாட்டிய அம்மாவிடம், மாத்திரைகளை அள்ளித்தந்த நர்சம்மா, “வீட்ல வச்சு நல்லவிதமா பேசி சமாதானம் பண்ணுங்கங்கறார்…”என்றார்.
“எந்நேரம் கெளம்பணும்…”
“அதே இந்த பாட்லு எறங்கவிட்டிங்கறாங்கள்ல…” மலக்கரம்மா அம்மாவைக் கடிந்தது.
பாட்டிலை பார்த்த நர்சம்மா… “ஒரு ஒன்னவர் டூ அவர்ஸ் ஆகும்… நாங்க வந்து சொல்லுறம்…”
அடுத்த பக்கம் டாக்டர் நகரவும், அம்மா, மாத்திரைக் குவியலோடு பழைய இடத்திற்கு புறப்பட்டது. “இத வச்சிட்டு வாரே…”.
அம்மாவோடு மலக்கார அத்தையும் நகர்ந்தது. அவளிடம் மட்டும் ரகசியமாய் “இரு” என கை சைகை செய்தது.
தங்கச்சியும் அவளிடம் “நா ஒண்ணுக்குப் போய்ட்டு வரட்டா” – என அனுமதி கேட்டு அகல. அவளுக்கு வெறுமை அதிகரித்தது.
இன்னிக்கே வீட்டுக்குப் போகவா… கும்பல் கூடிவிடும். எத்தனை பேருக்கு என்னன்ன பதில் சொல்ல…
நேற்று மதியம் நல்லதண்ணிக் கிணற்றில் துவைத்துக் கொண்டிருந்தவளிடம் சென்றாயன் வந்தான்.
“இன்னிக்கு நாம கல்யாணம் பண்ணிக்கிறம்…” – என்றான்.
அவளுக்கு புரியவில்லை “எதுக்கூ..” – என்றாள்.
“வீட்ல என்னிய ரெம்பக் கேவலமா பேசிட்டாங்கெ…”
“அதுனால…”
“அதுனால, கல்யாணம் முடிச்சு நா யாருன்னு காமிக்கணும்…”
அவளுக்கு புசுக்கென இருந்தது. “கல்யாணம்னா இவ்வளவுதானா… காசு வேணும்ல…” எனக் கேட்டாள்.
“எதுக்கு…”
“ம்… ட்ரெஸ் எடுக்கணும்… பந்தப் போடணும்.. என்று சொல்லச் சொல்ல ஒவ்வொரு செலவாய் ஞாபகத்துக்கு வந்தது… எல்லார்க்கும் சோறு போடணும்…”
கண்களை மூடி மறுத்தான், “அதெல்லாம் வேஸ்ட்டு, நாம லவர்ஸ் மால… தாலி… அவ்வளவுதான்”. – திடமாய்ப் பேசினான். அந்த நிமிசமே அவளுக்கு உடம்பு, பயத்தால் வெலவெலத்தது. மீதித் துணிகளை சரிவர துவைக்க முடியவில்லை. ஒப்புக்கு அலசி காயப் போட்டாள்.
“நாமளாச்சும் சாப்டணுமே… அரிசி வாங்கணும்.. சீமெண்ண வாங்கணும், கந்து கட்டணும்…”
“நாங்க சம்பாதிக்க மாட்டமா… நம்பிக்க இல்லியா… ரூவாயக் காம்ச்சாத்தே நம்புவியா…” – கேள்வியாய்க் கேட்டான். நம்பிக்கை இருந்தது. போன சித்திரை ஒண்ணு திருவிழாவுக்கெல்லாம் நிறைய ரூவாயைக் காண்பித்தான். எப்பவும் சேப்பில் காசு வச்சிகிட்டுத்தான் இருக்கிறான்.
“லவ் பண்ணுனா கொஞ்சூண்டு கஷ்டப்பட்டுத்தே வரணும்… கெளம்பு”.
“துணிய வீட்ல குடுக்க வேணாமா…”
“போட்டுட்டு… ரூவாகீவா இருந்தா எடுத்துட்டு வா…”
“ரூவ்வாயா…” சுருக்குப்பையில் ஒர்ரூவாயோ ரெண்டு ரூவாயோ இருக்கும்… அவன், வீட்டிலிருந்து எடுத்துவரச் சொன்னான். வீட்ல ரூவாய பார்த்த ஞாபகம் அவளுக்கில்லை.
இருந்தாலும் கந்துகட்ட வச்சிருந்த ரூவாயில் அம்மாவுக்குத் தெரியாமல் ஒரு அம்பது ரூவாயைத் தூக்கிவந்து விட்டாள்.
கோயில் பூசாரிக்கு ஒரு பிராந்தி பாட்டிலும் அவள் கொண்டுவந்த அம்பது ரூவாயும் கொடுத்தான்.
கருப்புக்கயிறைப் பார்த்ததும் பூசாரி சத்தம் போட்டார். “அண்ணாக்கயிற அத்து கட்றியாக்கும்… ஒரு மஞ்சக்கயறு அம்பது காசுக்கு வாங்க முடியலியாடா…”
“யோவ்… நாக்கெமாரெல்லா கருகமணின்னு எந்தக் கயிறுல கட்றாங்க… கடைல இல்லாமத்தான் வாங்கியாந்தே… கட்டட்டும்… நாளைக்கி ரெஜிஸ்டர் ஆபீஸ் போம்போது மாத்திக்கலாம்… கட்றா மாப்ள…” கூடவந்த ஓட்டையன் பூசாரியை மிரட்ட, அதன்பிறகு அவர் பேசவில்லை.
தேனி, மூர்த்தி கடையில் எல்லோரும் முட்டை புரோட்டா சாப்பிட்ட பிறகு அவளை வீட்டிற்கு கூட்டிப் போனான். சென்றாயனின் அம்மா விளக்குமாரோடு அவர்களை வரவேற்றாள்.
“அந்தப் பிள்ளைய அடிக்க ஒனக்கு ரைட் கெடையாது” என்று அம்மாவை தள்ளிவிட்டு அடியை தன்மீது வாங்கிக் கொண்டான் சென்றாயன். “எனக்கும் இந்த வீட்ல பங்கு இருக்கு” என சண்டை போட்டான். அவனது அய்யாவும் வந்துவிட சத்தம் அதிகமானது. “பங்குபாகமெல்லாம் நா இஷ்டப்பட்டாத்தே… அதும் எங்க சாவுக்குப் பிறகுதே…” என்று ஆளாளுக்கு சட்டம் பேச, சென்றாயன் அவளை தன் வீட்டாரிடமிருந்து அடிபடாமல் காப்பது பெரும் பாடானது. கடைசியில் “நீ இன்னி ராத்திரி மட்டும் வீட்டுக்குப் போ… காலைல நா வாரே…”என்று அவளை அனுப்பிவிட்டான். சென்றாயனின் அம்மா அவளை தட்டுவாணி, தேவடியா, அவுசாரி என்று அசிங்கமாக நிறைய திட்டியது.
ரெம்ப நேரம் வீதியிலேயே நின்று கொண்டிருந்தவள் எந்நேரம் தன் வீடு நுழைந்தாள் என நினைவில்லை. நல்ல வேளையாய் இதுவிசயம் அவளது வீட்டார்க்குத் தெரியவில்லை. ராத்திரியயல்லாம் உறங்க முடியவில்லை. பயம்பயமாய் இருந்தது. விடிந்ததும் என்னென்ன நடக்கும் என யோசித்து யோசித்துப் பார்த்தாள்.
விளக்குமாறடிதான் தெளிவாகத் தெரிந்தது.
காலையில் பல்தேய்க்க பல்பொடி தேடிய பொழுது மூட்டைப்பூச்சிக்காக அம்மா வாங்கி வைத்திருந்த உடைக்காத மருந்து பாக்கட் கண்ணில் பட்டதும் முடிவு தெளிவாகியது.
மூட்டை முடிச்சுக்களை அம்மா கட்டிக் கொண்டது. ஆஸ்பத்திரி சிப்பந்திகளுக்கும், நர்சுக்கும் காசு கொடுத்து கையயழுத்துப் போட்டார் அப்பா.
மலக்கார அத்தை அவளுடனேயே வந்தது. இப்போது ஆட்டோ பிடிக்கவில்லை. ஆஸ்பத்திரி முன்னால் வந்த பஸ்சை மறித்து ஏறினார்கள். மலக்கார அத்தையும், அவளும் தனி சீட்டில் அமர்ந்திருந்தனர்.
பேச்சுக்குடுத்த அத்தையிடம் சென்றாயனைப் பத்திச் சொல்லி விட்டாள்.
விக்கித்துப் போனது அத்தை. சந்தேகம் தீர அவனது பூர்வீகம் விசாரித்தது. அவன்தானென உறுதிப்பட்டதும் பஸ் என்றும் பாராமல் அவளை அறைந்தது.
“அவெ ஒரு பிப்பாக்கெட்பய… அவ ஆத்தா ஒரு லவுடி… எப்பேர்பட்ட எடத்துலடி மாட்டீர்க்க… இம்புட்டு நடந்துருக்குல்ல… உசுர் போயி உசுர் பொழச்சுருக்கேல்ல… நல்லபயலா இருந்தா இந்நேரம் வந்து பாத்துருக்கணும்ல… சாகட்டும்ணு தான விட்டுட்டான்…” – மூச்சு வாங்கத் திட்டியது.
அவள் மெதுவாய் மடியிலிருந்து இரண்டு ஆப்பிள் பழத்தை எடுத்துக் காண்பித்தாள்.
“வந்துச்சு… வீட்டுக்குப்போ… நா வருவேன்னு சொல்லுச்சு…”
அவளை மலக்காரம்மாள் அறைந்த காட்சியை அவளது அம்மாவம், அப்பாவும் பின் சீட்டியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

————-
makamuthurai@gmail.com

Series Navigationஏ.தேவராஜன் 2 கவிதைகள் >>

ம.காமுத்துரை

ம.காமுத்துரை