விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்திநாலு

This entry is part of 23 in the series 20100606_Issue

இரா.முருகன்


1915 ஆகஸ்ட் 14 – ராட்சச வருஷம் ஆடி 30 சனிக்கிழமை

பகவதி ரெண்டு கையையும் குவித்துக் கும்பிட்டாள். அவள் கண்கள் ஆழமான லயிப்போடு கவிந்திருந்தன. போன ஆத்மாக்கள் நல்ல கதிக்குப் போகட்டும். இனி வரும் தலைமுறைகள் அவர்களைக் கூப்பிட்டு உறவாடி, இதமாக வார்த்தை சொல்லி எள்ளும் தண்ணீரும் இறைக்க மாட்டார்கள். அவரவர் பாடு அவரவருக்கு. மருதையனையோ சாமாவையோ சொல்லிக் குற்றம் இல்லை.

போன திதிக்கு பகவதி வீட்டுக்காரன் சங்கரனுக்கு சிரார்த்தம் கொடுக்க சுப்பா சாஸ்திரிகள் நாலு நாள் முன்னதாக ஞாபகப்படுத்த வந்தார். வழக்கமான வருஷா வருஷம் முன்னறிவிப்பு கொடுக்க வருகிறவர்தான்.

கார்த்திகை சுக்ல பட்சம் திரயோதசி. அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வர்றது. உங்க அப்பா தெவசம்டாம்பா. கோதானம், வஸ்த்ர தானம் எல்லாம் எப்பவும் போல ஏற்பாடு பண்ணிடு. சுத்துக் காரியம் செய்யறதுக்கும் வடை தட்டறதுக்கும் மாமியை நான் சொல்லி வச்சுடறேன். விஷ்ணு எலைக்கு அந்த ராமசுப்பன் உண்டு.

பகவதி சிரத்தையாகக் கேட்க, சாமா இடைமறித்தான்.

இந்த வருஷம் தோதுப்படாது போல இருக்கு. திங்கள்லே இருந்து சென்னைப் பட்டிணத்து துரை ஜமாபந்தின்னு ஆர்ப்பாட்டமா வந்து உட்கார்ந்துடறான். அப்பா திவசத்தை ஆர அமர முடிச்சு அப்பம் வடை தின்னு ஏப்பம் விட்டுண்டு ஆபீஸ் போறதுக்குள்ளே அவன் ஆகாசத்துக்கும் பூமிக்குமா எழும்பிக் குதிப்பான்.

விடிகாலையிலேயே வந்துடறேனே. ஆபீசு போறதுக்குள்ளே எலை போட்டுடலாம்.

இல்லே, சரிப்படாது. அந்தச் சாப்பாடும் ஹோமப் புகையும் நாள் முழுக்க தூக்கம் தூக்கமா கண்ணைச் சுழட்டிண்டு வரும். தாசில்தார் தூங்கினா ஆபீஸே தூங்கிடும்.

பகவதி பரிதாபமாக பிள்ளையைப் பார்த்தாள்.

அரசூர் சங்கரய்யரே, உமக்கு இந்த வருஷம் பிண்டப் பிராப்தி இல்லே. எள்ளை இறச்சு தர்ப்பையாலே ஆசனம் போட்டு உபசாரம் பண்ணி உட்கார வச்சுப் பசியாத்தி அனுப்ப சிரமமாம். சமத்தாப் போய்ட்டு அடுத்த வருஷம் வாங்கோ.

சங்கரன் உயிரோடு இருந்தபோது சகலமானதுக்கும் உபயோகப்பட்ட ஊஞ்சலைப் பார்த்தபடி மனதில் சொல்லிக் கொண்டாள் பகவதி.

சங்கரன் ஊஞ்சலில் உட்கார்ந்து இடது காலால் விந்தி விந்தி ஆடியபடி சிரித்தான்.

வாழைக்காயும், சேனைக்கிழங்கும் இந்த விசை கெடையாதா? போறது. பழகிக்க வேண்டியதுதான். நீயாவது இப்படி ஊஞ்சல்லே வந்து உக்காறேண்டி ராஜாத்தி.

கொஞ்ச நாள் பொறுத்துக்குங்கோ. ராஜாத்தி, கண்ணம்மால்லாம் கட்டிப் பிடிச்சுண்டு அழ அங்கேயே வந்து சேர்ந்துடலாம்.

பகவதி அவனிடம் ஏங்கலும் முறையீடுமாக சொல்ல, கண்ணீர் அடக்க முடியாமல் கன்னங்களில் வழிந்தது.

பரவாயில்லே. இரண்ய சிரார்த்தமும் நியம நிஷ்டைப்படியான தெவசம் கொடுக்கற அதே பலன் தான் தரும். சிருங்கேரி மடாதிபதி, இப்போ இருக்கற பட்டத்துக்கு ரெண்டு பட்டம் முந்தினவா இருந்தாளே அந்த மகான் ஸ்பஷ்டமா கிரந்தமா எழுதி வச்சிருக்கா.

சுப்பா சாஸ்திரிகள் ஏதோ சுலோகத்தை அரைகுறையாகச் சொல்லி நிறுத்தினார். அவருக்கும் சந்தோஷம்தான். நாலு மணி நேரம் சமித்தை ஒடித்துப் போட்டு, நெய்யை ஊற்றி அக்னி வளர்த்து கண் எரிச்சலும் உடம்பு முழுக்க தொப்பமாக நனைக்கிற வியர்வையுமாக மெனக்கெட வேண்டாம். வந்தோமா போனோமா என்று நறுவிசாக இரண்ய சிரார்த்தத்தை முடித்து விட்டு, இடுப்பில் வாத்தியார் சம்பாவனையை முடிந்து கொண்டு கிளம்பி விடலாம். கண்ட எண்ணெயையும், நெய்யையும் விட்டுப் பொறித்த அதிரசமும் பாதி சொத்தையான எள்ளைத் திரட்டிப் பிடித்த எள்ளுருண்டையும் இலையிலே சரமாரியாக வந்து விழுந்து அஜீர்ணம் ஏற்படுகிற அபாயமும் இல்லை.

சங்கரனுக்காவது இரண்ய சிரார்த்த பாக்கியம் இருந்தது. ராஜாவுக்கு அதுவும் இருக்கும் என்று பகவதிக்குத் தோன்றவில்லை. மருதையன் கொஞ்ச நாளாகவே நாஸ்திகத்தில் ஒரு காலும், பழகின சம்பிரதாயத்தில் இன்னொரு காலுமாக இருக்கிறதாக சாமா சொல்லியிருக்கிறான். அது ராஜா மரித்த அடுத்த நாள்.

இதென்னடா, இன்னிவரைக்கும் இல்லாத வழக்கமா இவன் புத்தி இப்படிப் போகணுமா? அவனோட அப்பாவை கொலைப் பட்டினி போட்டுடுவானா இனிமே?

அவள் ஆச்சரியப்பட்ட போது சாமா கேட்டான்.

இதென்ன புடலங்கா சமாச்சாரம். உங்க அண்ணா, அதான் எங்க மாமா ஜான் கிட்டாவய்யர் என்ன எள்ளும் தண்ணியுமா வருஷாப்தீகமா வாங்கிண்டு இருக்கார்?

ராஜா விதி அப்படீன்னா பகவதி என்ன செய்ய முடியும்? கிட்டா அண்ணா கதி?

பக்கத்தில் வேதையனும் பரிபூர்ணமும் நிற்பது நினைவுக்கு வர அவர்களை விசனத்தோடு பார்த்தாள் பகவதி. கிட்டா அண்ணாவை மறந்திருப்பார்களோ.

நாங்க இங்கே இருக்கலாமா இல்லே கிளம்பட்டுமா?

வேதையன் மெல்லிய சப்தத்தில் பகவதியைக் கேட்க, அவன் பெண்டாட்டி பரிபூரணம் இதையெல்லாம் முழுக்கப் பார்த்து விட்டுத்தான் போகப் போறேன் என்பது போல் ஓரமாகப் போய் உட்கார்ந்து பனை ஓலை விசிறியால் விசிறியபடி நடக்கிறதை எல்லாம் சுவாரசியமாகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

கிட்டா அண்ணாவுக்கு கிறிஸ்து மகரிஷி சொன்னபடி வேதையன் வருஷா வருஷம் ஏதாவது சடங்கு சம்பிரதாயம் செய்து தீர்ப்பான் என்று பகவதிக்குத் தோன்றியது. அவன் விட்டாலும் அவன் பெண்டாட்டி பரிபூரணம் விடமாட்டாள். கருத்தான பொண்ணு. மதம் ஏதானால் என்ன, அவளும் நல்ல ஈஸ்வர விஸ்வாசி இல்லையோ.

ஜோசியக்காரர் என்ன மந்திரம் என்று தெரியாமல் அரை முணுமு
ணுப்பும் கனைப்புமாக ஏதோ சொல்லிக் கொண்டே போக, வேதையன் கையைக் கூப்பிக் கொண்டு நின்றான். அவன் நிற்கிற சாயல் அசல் கிட்டா அண்ணா தான். விருச்சிகம் ஒண்ணு சாஸ்தா கோவிலுக்கு மாலை போட்டுக் கொண்டு விசாலம் மன்னியை நமஸ்கரிக்க கிட்டாவய்யன் இப்படித்தான் பவ்யமாக நிற்பான்.

அதெல்லாம் எந்த ஜன்மத்தில்? நிஜமாகவே நடந்ததா இல்லே மனசு கற்பனை செய்கிறதா?

பகவதிக்குப் புரியவில்லை. எங்கேயோ ஜனிக்க வைத்து எங்கேயோ வாழ்க்கைப்பட்டு மிச்ச காலம் முழுசும் ஜீவிக்க வைத்து கொஞ்சம் லாபப்பட, நிறைய நஷ்டப்பட வழி செய்து இன்னும் அலையடித்துக் கொண்டு பொங்கிப் போய்க்கொண்டிருக்கும் பெயர் தெரியாத பிரவாகத்தில் அவள் ஒரு துரும்பு.

கிழக்குப் பார்த்து உட்கார்ந்து இந்தப் பூணலைப் போட்டுக்கறேளா?

ஜோசியக்காரர் நீட்டிய பூணூலை மரியாதையோடு தொட்டு வேணாமே என்று சொல்லி விட்டான் மருதையன்.

பகவதிக்காகத் தான் இவ்வளவு வணங்கிக் கொடுத்து வந்து உட்கார்ந்து பித்ரு காரியம் பார்க்கிறான் அவன். அவள் சொன்னால் சாமா கூட எதிர்ப்பேச்சு பேசுவான். மருதையான் மாட்டான்.

ஒரு நாள் தானேடா மருதையா. போட்டுண்டு கழட்டிடேன்.

பகவதி கேட்டு முடிக்கும் முன்னால், அதில்லாட்ட என்ன, பரவாயில்லே என்று தாராள மனசோடு சொல்லி விட்டார் ஜோசியக்காரர்.

பெரிய இடத்துப் பிள்ளைகள். ஆயிரம் ஜோலி இருக்கும். போனவர்கள் போய்ச் சேர்ந்தாச்சு. இந்த படையலும் மற்றதும் அவர்களுக்கு பத்திரமாக ஏதாவது ரூபத்தில் போகுமா என்று ஜோசியக்காரருக்கும் சந்தேகம் தான். தவிரவும் கர்மத்தை செய்து முடிக்க முடியாதபடியான விதி விலக்கு சந்தர்ப்பங்களில் என்ன மாதிரி செயல்படணும் என்று கிரந்தங்களில் சொல்லி இருக்கிறது. அவர் தட்சணையை பத்து ரூபாயாக்கி சாயந்திரம் பனை வெல்லம் கலந்த தயிரை மருதையன் பானம் செய்தால் போதும். பரலோகம் போன ராஜா பங்குக்கு இன்னும் ஒரு வருஷத்து ஆகாரமும் பானமும் அதி விரசாகப் போய்ச் சேர்ந்து விடும்.

மருதையன் இஷ்டமே இல்லாமல் தட்சிணையை கூட்டிக் கொடுக்க ஒப்புக் கொண்டான். பகவதி பனை வெல்லத்துக்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லி கையில் கொண்டு வந்திருந்த அப்பம், வடை, அதிரசத்தை எல்லாம் விரித்து வைத்த வாழை இலையில் பரிமாறினாள்.

சாமிகளே, கொஞ்சம் சீக்கிரம் உங்க படையலை முடிச்சீங்கன்னா வேறே வேலையை ஆரம்பிச்சுடலாம். அம்மா வேறே பாவம் காலை முச்சூடும் அடுப்படியிலே வெந்து எல்லாம் செஞ்சு எடுத்து வந்திருக்கு.

மருதையன் பகவதியை வாஞ்சையோடு பார்த்தபடி சொன்னான்.

உனக்கு என்னடியம்மா கொறச்சல்? ஒண்ணுக்கு ரெண்டா பிள்ளைகள். இந்த அப்பம் வடையிலே கொஞ்சம் நானும் எடுத்துக்கறேன். ராஜா வேண்டாம்னா சொல்லப் போறார். எத்தனை நாள்பட்ட பழக்கம் ரெண்டு குடும்பத்துக்கும்.

சமித்துப் புகையில் பகவதி கண்ணில் மங்கலாகப் பட்டு சங்கரன் மறைந்து போனான்.

புதுத் துண்டில் காய்கறியை மூட்டை கட்டிக் கொண்டு இலையில் பொதிந்த ஏழெட்டு அதிரசமும் வடையுமாக ஜோசியக்காரர் கிளம்பியபோது அவர் முகத்தில் அலாதியான ஆனந்தம் தெரிந்தது. மருதையன் இருபது ரூபாய் தானம் கொடுத்திருந்தான்.

இவன் கொடுக்கிற கடைசி தட்சணை இது.

அடங்கிக் கொண்டிருந்த ஹோமப் புகையில் திரும்ப எழுந்து வந்த சங்கரன் பகவதி காதில் கிசுகிசுத்தான்.

அடுத்த வருஷம் முழு நாஸ்திகனாயிடுவான் இந்தப் பிள்ளையாண்டான்.

மூணு தலை, ஏழு கை பிறவி மாதிரி மருதையன் ஆகிறதாக பகவதி கற்பனை செய்ய, அதொண்ணும் இல்லை என்றான் சங்கரன் அவள் தோளை ஆதரவாகத் தழுவி அணைத்துக் கொண்டு.

மனுஷ்ய சிநேகியா இருப்பான். அது போறும். ராஜாவோட வம்சத்துக்கு முழுக்க பித்ரு கடன் அடைச்ச புண்ணியம் அவனுக்கு சித்தியாகப் போறது.

இதெல்லாம் இப்போ சாப்பிடறேளாடா இல்லே மதியச் சாப்பாட்டுக்குப் போட்டுக்கறேளா?

பகவதி தூக்குப் பாத்திரத்தோடு கிளம்பும்போது மருதையனையும் சாமாவையும் கேட்டாள்.

ஒண்ணு ரெண்டு எடுத்து வச்சுட்டு பிள்ளைங்களுக்குக் கொடுத்திடுங்கம்மா.

அதுக்கு இன்னும் கொஞ்சம் பண்ணி வச்சிருக்கேனே.

நான் இதெல்லாம் சாப்பிடலாமோ?

வேதையன் சந்தேகத்தோடும் சங்கோஜத்தோடும் கேட்டான்.

ஆஹா, அதுக்கென்ன? வாங்களேன். எல்லோருமா மதியச் சாப்பாட்டை முடிச்சுடலாம்.

மருதையன் சட்டென்று சொன்னான். வேதையன் மனைவி பரிபூரணம் அவன் இப்படி யாசிக்கிறது மாதிரிக் கேட்டதுக்காக சங்கடப்பட்டு வெளியே கிளம்ப யத்தனித்திருந்ததை அவன் கவனித்திருந்தான்.

சரி, இங்கேயே எல்லோரும் உட்காருங்கோ. பரி, நீயும் நானும் அப்புறமா சாப்பிட்டுக்கலாம். ரெண்டு பேரா பரிமாறினா எளுப்பமா இருக்கும். ஒரு கை கொடுடியம்மா.

பரிபூரணம் முகத்தில் உடனே அலாதியான ஆனந்தம் தெரிந்தது. தன்னையும், வீட்டுக்காரனனயும் இங்கே தனியாக ஒதுக்கி வைத்து யாரும் பார்க்கவில்லை. இதுவும் அவளுடைய சொந்த வீடு மாதிரித்தான். நல்ல மனுஷ்யர்கள். அத்தை அவளைச் செல்லமாகப் பரி என்றில்லையா கூப்பிடுகிறாள்.

குதிரைக்கு கொள்ளு தின்னக் கொடுக்கலாமா?

வேதையன் கேட்டபடி பரியைப் பார்க்க, இதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்லே என்றாள் அவள் முகத்தில் சிரிப்பு மாறாமல்.

ஜாதிக் குதிரை மாதிரி ஜிவ்வுனு இருக்கேடி என்று அவன் போக சுகத்தில் பிதற்றுகிறது வழக்கம் தான். இது வேறே மாதிரி பரிவான அழைப்பு அவளுக்கு.

சாமா பிள்ளைகளும் வேதையனோடு சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட இஷ்டப்பட்டார்கள். மலையாளம் கலந்த தமிழில் அந்த மாமன் விஞ்ஞானம், சரித்திரம், லகுவான முறையில் கணிதம் எல்லாம் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். பதிமூன்றாவது பெருக்கல் வாய்ப்பாடை அவர்கள் கரதலப் பாடமாகச் சொல்ல முடியும் இப்போது. இங்கிலீஷிலும் நூதனமான பாட்டுகளை துரைத்தனத்து மெட்டுக்களில் பாட அவர்களுக்குக் கற்பித்திருக்கிறான் வேதையன்.

திவச வீட்டுக்குப் பொருந்தாத கோலாகலத்தோடு அங்கே விருந்து நடக்க, வாசலிலே ஏதோ சத்தம்.

நாடிமுத்துக் கொத்தனாரும், தச்சு ஆசாரியும் இன்னும் யாரோ நாலைந்து பேரும் தலலயை உள்ளே நீட்டிப் பார்த்து விட்டுப் பின்வாங்கினார்கள்.

மகாராஜா போஜனம் பண்றாப்பல இருக்கு. மெதுவா முடிச்சு வந்தாப் போதும். வாசல்லே காத்தாட உக்கார்ந்து வார்த்தை சொல்லிட்டு இருக்கோம்.

நாடிமுத்து கொத்தனார் குரல் மட்டும் வெளியே இருந்து வந்தது.

வேதையன் சிரித்து விட்டான். அவனுக்கு மருதையனை கிரீடம் வைத்த மகாராஜாவாகக் கற்பனை செய்ய உற்சாகமாக இருந்தது.

நாடிமுத்து அண்ணாச்சி, மகாராஜா எல்லாம் இங்கே இல்லே. வெறும் பய மருதையன் தான் அப்பம் வடை சுவியம் தின்னுக்கிட்டிருக்கேன். உங்களுக்கு நாலு எடுத்துத் தரச் சொல்லட்டா?

அய்யோ, மகராஜா என்னத்துக்கு சிரமம்? நாங்க இப்பத்தான் மூக்குப் பிடிக்கத் தின்னு முடிச்சு வரோம். சித்தாள் பொம்பளை பொன்னாத்தா இருக்குல்லே. அதோட மக ருதுமதியான சடங்கு. ஆடு வெட்டி அமர்க்களம் பண்ணிட்டா போங்க. கண்ணு கெறங்குது. அய்யா கூப்பிட்டு விட்டீங்களேன்னு கிளம்பிட்டோம்.

பள்ளிக்கூட விஷயம் பேசத்தானே வந்திருக்காங்க?

சாமா மருதையனை விசாரித்தான்.

சாப்பிட ஆரம்பித்த வேதையன், எந்தப் பள்ளிக்கூடம் என்பது போல் மருதையனைப் பார்த்தான்.

அரண்மனையை இனிமேல் கொண்டு பள்ளிக்கூடமாக்கிடலாம்னு முடிவு செஞ்சிருக்கேன்.

திருப்தியாக இன்னொரு அதிரசத்தை எடுத்துக் கடித்தபடி மருதையன சொன்னான்.

(தொடரும்)

Series Navigation