விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி எட்டு

This entry is part of 30 in the series 20100425_Issue

இரா.முருகன்10 ஜூன் 1910 – சாதாரண கர வருஷம் வைகாசி 28 வெள்ளிக்கிழமை

தெரிசா ராத்திரி ஆகாரம் ஏதும் வேண்டாம் என்று சொல்லி விட்டாள். விடுதி வேலைக்காரிப் பெண் வற்புறுத்தி இரண்டு ரொட்டியும் கொஞ்சம் பாலும் கொடுத்துக் கழித்து விட்டுப் போகச் சொன்னாள்.

ஊர் பூரா சுற்றி நடந்து பிரேத ஆத்மாக்களைத் தேட உடம்பில் கொஞ்சம் போல பெலம் ஒட்டிக் கொண்டிருப்பது சிலாக்கியம் என்று விடுதிக்காரனும் சொன்னான்.

வழக்கமாக இந்த மாதிரி இடங்களுக்கு அழைத்துப் போகிற வழிகாட்டிகள் தேடும் ஆவிகள் தவிர இன்னும் நாலைந்து பெயர்களை அவன் சொன்னான். ஐம்பது வருடம் முன்னால் கொடி கட்டிப் பறந்து மர்மமான முறையில் உயிர் விட்டவர்கள் என்று கிடைத்த தகவல்படி அதில் மூன்று இளம் பெண்களும் ஒரு ஆணும் உண்டு. எல்லாரும் வேண்டப்பட்டவர்களாம். முக்கியமாக அந்த ஸ்திரிகள்.

அவங்களைப் பார்த்தால் நீங்க விசாரிச்சதா சொல்றோம்.

சாரா சொல்லி விட்டுச் சிரித்தாள்.

வேணாம், வந்துடச் சொல்லப் போறாங்க. நான் இப்போ கிளம்பற உத்தேசம் இல்லை.

விடுதிக்காரன் மரியாதையாகக் குனிந்து வணங்கியபடி சொன்னபோது அவன் இடுப்பில் ஸ்காட்டிஷ் கில்ட் பாவாடை அவிழ ஆரம்பிக்க, கிளாரா சிரிப்பு உச்சத்தை அடைந்தது.

இவர்களை இப்படியே கூட்டிப் போனால், பியர் குடித்த உற்சாகமான பெண்கள் என்று தான் படுமே தவிர மிஷினரி மகாநாட்டுக்கு வந்த பிரதிநிதிகள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

சிரிப்பை நிறுத்த அவர்களை அவசரமாக அப்பால் நடத்திப் போனாள் தெரிசா.

கிளாராவும், சாராவும் நடந்தே மிண்ட் தெருவுக்குப் போகலாம் என்று ஒருமித்துச் சொல்லி விட்டதால் ராத்திரியில் கோச் வண்டியை வரச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. ராத்திரி பயணத்துக்கு ஏகத்துக்குக் காசு வாங்குகிறதோடு வண்டி ஓட்டி வர ஆள் கிடைப்பதும் கஷ்டம்.

ஊரோடு குடிக்கும் நேரத்தில் இப்படி அற்பமான உத்தியோகம் பார்த்துக் காசு பார்க்கத் தயாரானவர்கள் சொற்பமான இடமாச்சே இந்த எடின்பரோ.

நிலா வெளிச்சத்தில் இடது பக்கத்தில் அமெரிக்க வெள்ளைக்காரியும் வலது வசத்தில் ஆப்பிரிக்கக் கறுப்பியுமாக தெரிசா நடந்தபோது மனசுக்கு இதமாக இருந்தது. ரெண்டே நாள் பழக்கத்தில் அவர்கள் இரண்டு பேரும் நல்ல சிநேகிதிகளாகி இருந்தார்கள்.

வயதில் சின்னவளாக இருந்தாலும் சாரா கறுப்பி தெரிசாவுக்கு அம்மா மாதிரி அவளை கிட்டத்தட்ட ஏவி பிரியத்தைக் காட்டினாள். அம்மா வயசு என்றாலும் கிளாரா சவலைக் குழந்தை மாதிரி தெரிசா கையைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டே வழி முழுக்க நச்சரித்துக் கொண்டு வந்தாள்.

எடின்பரோவிலே ராத்திரி பெண்கள் தனியாப் போகறது பாதுகாப்பு இல்லாத ஒண்ணா?

கிளாரா கேட்டாள்.

வாஷிங்டன்லே பகல்லேயே அப்படியாமே?

சாரா அவளைச் சீண்டினாள்.

நான் வீட்டை விட்டு வெளியே போனாலே மோட்டார் வண்டியிலே போய் இறங்கிடுவேன். வண்டி ஓட்டிப் போறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு டிரைவர் தேட வேண்டிப் போச்சு.

ஏன், காசு விட்டெறிஞ்சா நிறையப் பேர் வரிசையா வீட்டு வாசல்லே வந்து நிப்பாங்களே

சாரா கேட்டாள்.

நிப்பாங்க தான். வேலை பார்க்க எடுக்கறதுலே ஜாக்கிரதையா இருக்கணும். ஊர்லே இருக்கற கறுப்பு.

அவள் சட்டென்று நிறுத்தி காலில் செருப்பு கடிக்கிறது என்று குனிந்து முனகிய போது முதல் தடவையாக தெரிசாவுக்கு சிரிப்பு வந்தது.

ஹோலிராட் அரண்மனை பக்கம் இவர்கள் வந்து சேரும் முன்பே பிரேத ஆத்மாக்களைச் சந்தித்துக் குசலம் விசாரிக்க அங்கே ஒரு கூட்டம் தயாராக நின்றார்கள்.

மூணு சீட்டு குறைச்சுதுன்னியே ஜாக், வந்தாச்சு.

கல்யாண விருந்துக்குப் புறப்படத் தயாரானவன் போல் உடுப்பணிந்து இருந்த கிழவன் பக்கத்தில் நின்ற பையனைப் பார்த்துச் சொன்னான். அவனை செயிண்ட் ஜான் தேவாலய வாசலில் அழிக் கம்பியை நனைத்துக் கொண்டு நின்றபடிக்கு பார்த்ததாக தெரிசாவுக்கு என்னமோ நினைப்பு.

என்ன கர்மாந்திரமோ. இருந்து விட்டுப் போகட்டுமே. இந்த விருந்தாளிப் பெண்டுகள் சுற்றிப் பார்த்து முடிக்கிற வரை இதை எல்லாம் பொறுத்துக் கொள்வதால் ஒன்றும் குடி முழுகிப் போகாது.

தெரிசா அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களைப் பார்த்தாள். கிட்டத்தட்ட எல்லோரும் ஐம்பது வயசு கடந்த ஆசாமிகளாக இருந்தது வேடிக்கையாக இருந்தது. ஒவ்வொருத்தராகக் கூப்பிட்டுக் குறுக்கு விசாரணை செய்தால் அதில் கிட்டத்தட்ட எல்லோரும் மிஷனரி மகாநாட்டுக்காக வந்தவர்களாக இருக்கலாம்.

இந்தத் தெருவிலேயே ஆரம்பிக்கலாமா? முன்னூறு வயசுக்கு மேலே ஆன சில பேரை உங்களுக்கு பரிச்சயப்படுத்தலாம்னு பார்க்கறேன். அதுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும். என்ன ஒரு அரை மணி நேரம் போல. வர வேண்டிய விருந்தாளிகள் எல்லாம் வரவேண்டாமா?

அவன் கால் தரையில் பரவாது நடக்கிறதாக பாவனை காட்டியபடி கைக்கடியாரத்தைப் பார்த்தான். நேரம் பார்த்து வந்து போகிற புண்யாத்மாக்களோடு தினசரி சுமுகமாக வார்த்தை சொல்லிப் பழகின கைபோல.

அதுக்கு முன்னாடி தெம்பா பக்கத்துலே ஹார்டி பார்லே ஒரு பியர் அடிச்சுட்டு வரதுன்னா நல்லது. நம்ம சீட்டைக் காட்டினா, கடையிலே கணிசமாக தள்ளுபடி உண்டு.

அட, இப்படியும் ராத்திரியிலே ஒரு கூட்டுக் களவாணி வியாபாரமா? தெரிசாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஸ்காட்லாந்தில் பணம் பண்ண என்ன எல்லாம் செய்கிறார்கள். இங்கிலீஷ்காரர்களுக்கு இந்த சாமார்த்தியம் கிடையாது.

இருந்தால் பீட்டர் மெக்கன்சியின் அப்பா மாதிரி வீட்டுப் பெயரில் இவ்வளவு கடன் வாங்கிக் குடித்தே அழித்திருப்பாரா?

ஒவ்வொரு தடவை லண்டன் போகும்போதும் பீட்டருடைய பாங்க் கணக்கில் இருந்து கணிசமான தொகை அந்தக் கடனை அடைக்கப் போயிருப்பதை பேங்கில் நுழையும்போது சொல்கிறார்கள். கண்டம் விட்டுக் கண்டம் போய், யாரையோ எதிர்த்து என்னத்துக்கோ யுத்தம் செய்து கூலி வாங்கி அவன் சேர்க்கிற காசு இப்படியா வீணாகப் போகவேண்டும்?

மாமனார் மக்கென்சி குடல் அழுகிக் கெட்டுப் போய் இறந்தபோது கென்சிங்க்டன் வீட்டுக் கடன் பாதிதான் அடைந்திருந்தது என்று நேரம் கெட்ட நேரத்தில் தெரிசாவுக்கு நினைவு வந்தது.

பீட்டர், நீ இன்னும் எத்தனை வருஷம் எல்லா சவுகரியத்தையும் விட்டுப் பிரிஞ்சு போய் காசு சம்பாதிக்கறதுக்காக தனியா இருக்க வேணுமோ. உனக்குப் பிரியமான தேவ ஊழியம் செய்யறதுக்காவது எனக்கு உடம்பிலே தெம்பு வேணும். பியர் குடிச்சு வர்ற தெம்பு இல்லே அது. மனசில் தானே பீறிட்டுக் கிளம்புவது.

தேவ ஊழியத்தில் பிசாசு பிடிக்கறதும் உண்டா என்று பீட்டர் உரக்கச் சிரித்தபடி அவன் மார்பை அழுத்தினான்.

ஏய், நடுத் தெருவிலே என்ன விளையாட்டு. கையை எடுறா.

காயா, பழமா பார்க்கறேண்டி, கொஞ்சம் பொறு.

உதுந்து போற ஸ்தானத்திலே இருக்குடா ஸ்தனம் ரெண்டும். கையை எடுடா உதவாக்கரை.

மனசு தான் எப்படி எல்லாம் குறக்களி காட்டுகிறது.

தெரிசா சட்டென்று மேல் சட்டையைப் போர்த்தியிருந்த கம்பளிச் சால்வையை இறுக்க இழுத்து மூடிக் கொண்டாள்.

குளிருக்கு இதமா ஜின்னும் லெமனும் சாப்பிடலாமா என்றாள் சாரா.

அவள் குரல் கேட்டு வழிகாட்டிக் கிழவன் பக்கத்தில் தயங்கி நின்றான்.

சீமாட்டிப் பெண்டு பிள்ளைகள் தனியாக பத்திரமாக உட்கார்ந்து ஜின் அப்புறம் இன்னும் வேறே நாசுக்கான சமாச்சாரம் பலதும் சாப்பிட வசதி இருக்கு அம்மணி.

அவன் நிச்சயம் மதுக்கடையில் தினசரி கூலி பியராக வாங்கி மாந்தி விட்டுத் தேவாலய வாசலுக்கு உடுப்பைத் தளர்த்திக் கொண்டு நடக்கக் கூடியவன்.

ஐயோ போதையான வஸ்து ஒண்ணும் வேணாம். அப்புறம் நாளைக்கு காலையிலே மகாநாட்டுக்குப் போய் உட்கார முடியாது.

கிளாரா அவசரமாக முட்டுக்கட்டை போட்டாள்.

இல்லாவிட்டாலும் இந்த மூன்று பேரில் ஒருத்தரும் கடை வாசல்படி ஏறி ஒரு துள்ளி பானம் கூடப் பண்ணப் போவதில்லை. மூணு பேருக்குமே அது தெரியும்.

பக்கத்தில் நகரசபை கட்டடம் இருளில் மூழ்கிக் கிடந்தது. சாரா அங்கே போய் எப்படி இருக்கிறது ராத்திரியில் சபை என்று பார்க்கலாம் என்றாள்.

கிளாராவுக்கு பயமாக இருந்தாலும், ஆள் ஒழிந்த அந்த பிரம்மாண்டமான கட்டிடம் இருட்டில் எப்படி தட்டுப்படும் என்று தெரிந்து கொள்ள ஆசையாக இருந்தது என்று அவள் ஆர்வமாக தெரிசாவைப் பார்த்ததில் இருந்தே தெரிந்தது.

அங்கே கதவெல்லாம் அடைத்து வச்சிருப்பாங்களே என்றாள் தெரிசா.

தேவையில்லாமல் அவசியம் இல்லாத இடத்தில் எல்லாம் நேரம் கெட்ட நேரத்தில் போய்வர அவளுக்கு உண்டான சஞ்சலம் அம்பலப்புழையில் இருந்து அவள் கட்டி எடுத்து வந்தது.

இதென்னடி கூத்து. கன்யகையான ஸ்திரி அகால நேரத்துலே தெருவிலே நடக்கறதுக்கு மிந்தி ஒண்ணு தீர யோசிக்கணுமின்னே உனக்கு போதமாகாதா? நீ கிறிஸ்து பகவானை தொழுதா என்ன, ஸ்ரிகிருஷ்ணனை சந்தியா காலம் கழிஞ்சு அம்பலம் போய் தொழுதா என்ன, பொண்ணுன்னா ஒரு விவஸ்தை வேணாமோடீ?

அம்மா சிநேகாம்பாள் வீட்டு வாசல் படி இறங்க நினைக்கும்போதே குரலால் கட்டிப் போட்டது. இன்னும் கட்டு அவிழவில்லை.

வா தெரிசா, இந்த மிடாக் குடியன்மார் எல்லாம் கடையிலே இருந்து படி இறங்க இன்னும் அரை மணிக்கூறாவது ஆகும். அதுக்கு அப்புறம் பிசாசு வேட்டை.

சாரா தெரிசாவைக் கையைப் பிடித்து அழைத்தபடி நகராட்சி கட்டடத்துக்குள் நுழைந்தபோது கிளாரா அவசரமாக தெரிசாவோடு ஒட்டிக் கொண்டு புறப்பட்டாள்.

தெரிசா எதிர்பார்த்ததற்கு மாறாக கட்டடம் மட்ட மல்லாக்கத் திறந்து கிடந்தது. சர்க்கார் கட்டிடத்தில் ராத்திரியில் நுழைந்து அதை இதை கிளப்பிக் கொண்டு போவது இதுவரை நடக்காத ஒன்று போல.

முணுக் முணுக் என்று லஸ்தர் விளக்கு ஒன்று விஸ்தாரமான நடு மண்டபத்தில் கண் சிமிட்டிக் கொண்டிருந்தது.

உள்ளே நுழைந்தபோதே என்னமோ தெரியலை தெரிசாவுக்குத் தலை சுற்றி கண் அயர ஆரம்பித்து விட்டது. இன்னும் நடக்க ஆரம்பிக்கவே இல்லை. அதுக்குள்ளே இப்படி ஒரு ஆயாசமா?

வரிசையாகப் போட்டிருந்த நாற்காலி ஒன்றில் அவள் ஒரு வினாடி உட்கார்ந்தாள்.

கொஞ்சம் இப்படியே உட்கார்ந்து வார்த்தை சொல்லிக் கொண்டிருந்து விட்டு, கூட்டத்தோடு மிச்ச நேரத்தைக் கழிக்கலாமே.

அவள் பக்கத்தில் நின்ற இரண்டு பேரையும் பார்த்தாள். இந்த ஊர் சுற்றல் முடிய ராத்திரி பனிரெண்டு மணிக்கு மேலே ஆகிவிடும். அப்புறம் விடுதிக்குப் போய்ப் படுத்துத் தூங்கி, ஏழு மணிக்கு எழுந்திருந்து. மலைப்பாக இருந்தது.

தெரிசா, நீ வேணும்னா இப்படியே உட்காரு. நானும் கிளாராம்மாவும் ஒரு சுத்து சுத்தி வந்துடறோம்.

நான் வரல்லே. தெரிசாவை தனியா விட்டுட்டு எங்கேயும் போகமாட்டேன். பேய் உலாவற நேரம் வேறே. அந்நிய நாட்டுக்காரி நாம் ரெண்டு பேரும். வம்பு ஏன்?

கிளாரா தப்பிக்கப் பார்த்தாலும், சாரா அவளை விடவில்லை.

அமெரிக்காவிலே இருந்து எங்க ஊருக்கு தலைமுறை தலைமுறையா வந்து ஆள் பிடிச்சுப் போன பேயை விட இங்கே இருக்கற பேயும் பிசாசும் தன்மையானதாத்தான் இருக்கும் கிளாராம்மா. இல்லேன்னா, நான் அதுகளை வேண்டியபடிக்கு கைகாரியம் செஞ்சுடறேன். ரொம்ப அலட்டிக்கிட்டா கட்டிப் பிடிச்சு ஒரு முத்தம். மிஷனரி பொண்ணு முத்தம் சுவர்க்கத்திலே கொண்டு போய் விடுமாக்கும். உதட்டுலே கரி படிஞ்ச படிக்கே போனாலும் குத்தமில்லே.

தெரிசாவுக்கு அந்த சூழ்நிலையிலும் சிரிப்பு வந்தது. கறுப்பிக்கு மதமும், நம்பிக்கையும், நிறமும், இனமும் எதுவும் பொருட்டில்லை. மிஷனரி மகாநாட்டுக்கு வந்தாலும் ஊர் சுற்றிப் பார்க்க சும்மா வந்து சேர்ந்தாலும் இதே மனோநிலைதான் அவளுக்கு இருக்கும். ஆனாலும் அபிசீனியாவில் அதிகம் மத மாற்றம் ஏற்படுத்திய இயக்கத்தை வழி நடத்திப் போகிறவள் அவள் என்று பிஷப் சொல்லி இருக்கிறார்.

சரி, நானும் வரேன். வா, சீக்கிரம் சுத்திட்டு திரும்பி வந்துடலாம். இல்லே மத்த பிசாசு எல்லாம் நம்மளை விட்டுட்டு வேறே மதுக்கடைக்குப் போயிடும்.

தெரிசா மெல்ல எழுந்தாள். மனசு சந்தோஷமாக இருந்தாலும் உடம்பு இன்னும் ஒத்துழைக்க மாட்டேன் என்று நாற்காலியோடு கட்டிப் போட்டு இருக்கிறது.

ஆனாலும் இது ஒரு வித்தியாசமான ராத்திரி. அவள் உடம்பு அசௌகரியத்தைப் பொருட்படுத்தப் போவதில்லை. எழுந்திருக்க இந்த ரெண்டு பேரில் யாராவது கைகொடுத்தால் போதும்.

உடம்பு ஒத்துழைக்க முடியாது என்று ஒரே சண்டித்தனம் செய்தது. உட்கார்ந்த படிக்கே கொஞ்சம் தூங்கினால் என்ன?

சாரா, தெரிசாவை கொஞ்சம் இளப்பாற விட்டுட்டு நாம் போய்ட்டு வந்துடலாம் வா.

கிளாரா கிளம்பினாள். தெரிசா ஒரு வினாடி அவர்களைப் பார்த்து விட்டு கண்களை மூடிக் கொண்டாள். தெரு சத்தங்கள் தேய்ந்தும் உரத்து ஒலித்தும் அவளுக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருக்க மனம் சூனியமான பிரதேசத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. இப்படியே மிச்ச வாழ்க்கையும் போகுமானால் என்ன?

சாரா, மெல்ல, மெல்ல.

கிளாரா குரல் எங்கேயோ கேட்டு விட்டு அஸ்தமித்துப் போனது. அவர்கள் போய்விட்டிருந்தார்கள்.

கிளாராவும் சாராவும் முதல் மாடிப்படி ஏறும்போது லஸ்தர் விளக்கு அணைந்து போனது. அது கூட தெரிசாவுக்குப் போதமானது. எப்படி? தெரியவில்லை.

எங்கேயோ யாரோ மெழுகுவர்த்தியை ஏற்றும் வாடை நாசியில் தீர்க்கமாக படிந்தது. அப்புறம் தெரிசாவுக்கு ஒரு போதமும் இல்லை.

மினுக் மினுக் என்று மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஒரு இந்தியப் பெண்ணும் சிறிய வயசில் ஒரு பெண் குழந்தையும் முதல் மாடியில் எதிர்ப்பட்ட அறையில் உட்கார்ந்திருந்தார்கள்.

சேச்சியுடெ கூட்டுக்காரிகள் அல்லே நிங்ஙள் ரெண்டு பேரும்?

அவள் மலையாளத்தில் தான் பேசினாள். ஆனால் கிளாராவுக்கும் சாராவுக்கும் ஸ்பஷ்டமாகப் புரிந்தது அந்தப் பெண்மொழி.

(தொடரும்)

Series Navigation