வெளிச்சப்புள்ளி

This entry is part [part not set] of 25 in the series 20100411_Issue

சுப்பு


“சார், மக்களவைக்கு நீஙகள் அவசியம் உடனடியாகப் போக வேண்டும். ஏற்கனவே அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுவிட்ட்து. பிரதமர் அலுவலகத்திலிருந்து உங்களை அங்கே போகச் சொல்லி தகவல் வந்திருக்கிற்து” என்றார் அதிகாரி.

பழனிச்சாமி நிமிர்ந்து உட்கார்ந்தார்.

அதிகாரி ‘சங்கரா’ என்று தொடங்கினார். மகான்களுடைய பெயரை பாதுகாப்பு, ராணுவம் சம்பந்தமான விஷயங்களில் பயன்படுத்துவதல் பழனிச்சாமிக்கு சம்மதமில்லை. ஆராய்ச்சி நிறுவன்ங்களுக்கும், அரசுச் செயலகத்திற்கும் இடையே ஒருங்கிணைப்பு செய்து கொண்டிருக்கும் ராணுவத் துறை செயலர் ஒருவரின் மூளையில் பிறந்த சங்கேத மொழி – ‘சங்கரா’.

‘சங்கரா’ ஒரு உளவியல் ஆராய்ச்சித் திட்டம். அச்சிடப்பட்ட அரசாங்க வரவு செலவுக் கணக்கில் வராத ஆராய்ச்சிகள் பல உண்டு. அதில் ‘சங்கரா’வும் ஒன்று.

‘சங்கரா’ கிளைக் குழுவிலுள்ள விஞ்ஞானிகள் மனித எண்ணங்களின் தளத்தை பல வகையாகப் பிரித்திருக்கிறார்கள். மனதின் மேல் தளத்தில் இயற்பியல் நுட்பமும், அதற்குக் கீழே வேதியியலும், அதற்குக் கீழே உயிரியலும், அதற்குக் கீழே உளவியல் நுட்பங்களும் மறைந்திருக்கின்றன என்று அவர்களது பிரேரணை.

மூளையின் வெவ்வேறு பகுதிகளைச் சீண்டி, வெவ்வேறு எண்ணத் தளங்களைத் தொட்டுவிடலாம், விஞ்ஞானப் புதிர்களுக்கு விடை கண்டு விடலாம், என்பது அவர்கள் முயற்சியின் அடிப்படை.

மூன்று வருடங்களாக இந்தச் சோதனை நடந்து வருகிறது. இதுவரை என்ன சாதித்திருக்கிறது என்று தெரியவில்லை. இப்போது இந்த ஃபைலுக்கு என்ன அவசரம் என்றும் தெரியவில்லை. மனது வேறு பக்கம் தாவ ஆரம்பித்தபோது அதிகாரி இடைமறித்தார்.

“நமது விஞ்ஞானி ஒருவரை தீவிரவாதிகள் கட்த்திக் கொண்டு போய்விட்டார்கள். லாகூரில் அவரை வைத்திருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. இது விஷயமாகப் பேச வேண்டுமென்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் கேட்கிறார்கள்.

இன்றைய அஜண்டாவில் இல்லாததால் வேறு துறை பற்றித்தான் பேசமுடியுமென்று சபாநாயகர் சொல்லிவிட்டார். பிரதமரும் சபையில் இல்லை. வடகிழக்குப் பிராந்திய கட்சியோடு தேர்தல் உடன்படிக்கை பற்றி பேசுவதற்காக கல்கத்தாவில் ஒரு திருமணத்திற்குப் போயிருக்கிறார். அமளி அதிகமாக இருப்பதால் நீங்கள் உடனே வரவேண்டுமென்று பார்லிமெண்ட் துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார்“ என்றார் அவர்.

பழனிச்சாம இருக்கையை விட்டு எழுந்தார். ஃபைலைக் கையில் எடுத்துக் கொண்டார். “போகும் வழியிலேயே படித்துக் கொள்ளாலாமே?” என்றார்.

அதிகாரி, “இரண்டு பக்கம்தான் சார். சுருக்க்மாக எழதியிருக்கிறேன். அது கூடத் தேவைப்படாது. கடத்தப்பட்ட விஞ்ஞானியை வைத்துதான் ‘சங்கரா’ பரிசோதனை நடத்தப்பட்டது என்பது இன்னும் வெளியே வரவில்லை. ஒருவேளை நம்மை மீறி விஷயம் வெளியே வந்துவிட்டால் உங்களுக்குத் தேவைப்படும் என்பதற்காகக் கொடுத்திருக்கிறேன்” என்றார்.

பழனிச்சாமியின் முகத்தில் அதிர்ச்சி பரவலாகத் தெரிந்த்து. அவசரமாக வந்த வாக்கியங்களை உள்ளேயே தணிக்கை செய்து “இதை நீங்கள் முதலிலேயே சொல்லியிருக்கலாம்” என்றார்.

அதிகாரி பதில் பேசவில்லை. பழனிச்சாமிக்காக கதவைத் திறந்து விட்டார். வெளியே வந்து செகரெட்டரியிடம் புன்னகைத்து ‘பார்லிமெண்டுக்குப் போகிறேன்’ என்றார் பழனிச்சாமி.

செகரெட்டரி, “சார், சாப்பாடு வந்து விடுமே” என்றார்.

“என்னுடைய தாய்மொழியில் ‘ஒவ்வொரு தானியத்திலும் அதை சாப்பிடுபவனின் பெயர் எழுதியிருக்கிறது’ என்று ஒரு பழமொழி உண்டு. டிரைவரை சாப்பிடச் சொல்லுங்கள்” என்றார் அவர். அவ்வப்போது அவர் சொல்லும் இந்த மாதிரி ஆன்மிகத் துணுக்குகளைக் கேட்டு அந்தப் பெண்மணி கண் கலங்குவது வழக்கம். இப்போதும் கண்கலங்கினார்.

இதைக் கவனிக்காத்துபோல நகர்ந்தார் அதிகாரி. அவரைப் பின் தொடர்ந்தார் பழனிச்சாமி. காரில் ஏறிக் கொண்டு ஃபைலைப் பிரித்தபோதுதான் இந்தக் கார் தனக்கு ராசியில்லை என்பது பழனிச்சாமியின் ஞாபகத்துக்கு வந்தது.

சபை மீண்டும் துவங்கியபோது பழனிச்சாமி தன் இருக்கையில் இருந்தார். ‘நெடுஞ்சாலைகளை அகலப்படுத்துவதற்கான செலவினங்கள்’ குறித்த நிதி ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் கொடுத்திருந்த தீர்மானத்தைப் பற்றிய விவாதம் தொடங்கும் என்றார் சபாநாயகர்.

எதிர்க்கட்சித் தலைவர் இடதுசாரி சிந்தனையுடையவர். பொருளாதார விஷயங்களுக்கு முன்னுரிமை அளிப்பவர். இந்த ஊழல் சம்பந்தமாக ஏகப்பட்ட விவரங்களைச் சேகரித்து, இரவு முழுவதும் தூங்காமல் படித்து வந்திருக்கிறார்.

ஏற்கனவே இரண்டுமுறை நேரமின்மை என்ற காரணத்தின் கீழ் இந்த விவாதம் மறுக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என்று கையிலிருந்த காகிதங்களைச் சரி செய்து கொண்டு அவர் பேச எழுந்தார்.

அவர் பேசத் துவங்குவதற்குள் இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த இளம் பெண் முந்திக் கொண்டார். “கூடாது, கூடாது. வேறு விஷயத்தைப் பேச விடமாட்டோம். விஞ்ஞானி எங்கே? அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.

பழனிச்சாமியின் நெற்றியிலிருந்த சந்தனக் கீற்றையும் அந்தப் பெண்மணியின் நெற்றியிலிருந்த குங்குமத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தார் சபாநாயகர்.

பழனிச்சாமியை அவருக்கு நன்றாகத் தெரியும். அரசியல் நேர்மையாக இருந்த காலத்திலிருந்தே பழனிச்சாமி அமைச்சராக இருக்கிறார். பழனிச்சாமி வீட்டு விசேஷங்களுக்கு சபாநாயகர் போவது உண்டு.

பூஜை, கோவில், சாமியார் தவிர வீண் வம்பளப்பு இல்லாத பழனிச்சாமிக்கு சபாநாயகர் ரசிகர். இந்த மாதிரி அரசியல்வாதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதில் அவருக்கு வருத்தம். சபாநாயகரின் தங்கை மகனுக்கு உடம்பு சுகமில்லாதபோது பழனிச்சாமிக்குத் தெரிந்த ஸ்வாமிஜி ஒருவர்தான் அதைச் சரிப்படுத்தினார்.

“விஞ்ஞானி எங்கே, சபையை மதிக்காத பிரதமர் எங்கே?” என்று கோஷம் இப்போது இன்னும் நாலைந்து பேர் சேர்ந்து கோரஸாக மாறிவிட்டிருந்தது.

அவர்களைப் பார்த்து, “உட்கார வேண்டும், உட்கார வேண்டும்” என்றார் சபாநாயகர். எதிர்க்கட்சித் தலைவரைப் பேசுமாறு சொன்னார் அவர்.

எதிர்க்கட்சித் தலைவர் “இந்தச் சபையின்….” என்று தொடங்கினார்.

இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் ஓடி வந்து சபாநாயகர் இருக்கைக்கு அருகே நின்று கொண்டு “ஊழல் செய்த பிரதமர் உடனே பதவி விலக வேண்டும்” என்றார்.

சபாநாயகர் சிரிப்பை அடக்கிக் கொண்டார். விஞ்ஞானி கடத்தலுக்கும் ஊழலுக்கும் என்ன சம்பந்தம் என்று அவருக்குப் புரியவில்லை. ‘விஞ்ஞானியை விலைக்கா கொடுத்துவிட்டார்கள்?’ “ஒரு நிமிஷம் அமைதியாக இருங்கள்” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அதற்குள் தன் அணுகுமுறையை மாற்றிக் கொண்டுவிட்டார். “நெடுஞ்சாலை நிதி ஒதுக்கீடு ஊழலைப் பற்றிய வாதத்தை அப்புறம் வைத்துக் கொள்ளலாம். விஞ்ஞானி கடத்தலைப் பற்றி பேசலாம்” என்றார் அவர். கை தட்டலில் சபை அதிர்ந்த்து.

பழனிச்சாமி இருக்கையை விட்டு எழுந்தார். அதைப் பார்த்த மத ஆதரவுக் கட்சியினர் தங்களுடைய ஆர்ப்பாட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு சற்று அமைதியாக இருந்தார்கள்.

“விஞ்ஞானி கடத்தலைப் பற்றி பேசுவதற்கு அரசு தயாராக இருக்கிறது” என்றார் பழனிச்சாமி.

“நாளைக் காலையில் அரசு அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படும்” என்றார். நாம் சொல்ல முடிந்ததைச் சொல்லிவிடுவோம். அவர்கள் சொல்ல வந்ததை அவர்கள் சொல்லிவிடட்டும். அதற்கு மேல் இது விஷயமாக எதுவும் கைமீறிப் போய்விடாது என்பது அவரது கணிப்பு.

அரசு நிலையில் ஏற்பட்ட தடாலடி மாற்றத்திற்கு இடதுசாரிக் கட்சி தயாராக இல்லை. உறுப்பினர்களும் சுதாரித்துக் கொள்ள சற்று நேரமாகியது. சபாநாயகர் விஞ்ஞானி கடத்தல் பற்றிப் பேசுமாறு எதிர்க்கட்சித் தலைவரை அழைத்தார்.

அதற்குள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியே இருந்து வந்து சேர்ந்து கொண்டு அவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டிருந்தது. “பிரதமர் எங்கே? பிரதமர் எங்கே? சபையை அவமதிக்கும் பிரதமர் பதவி விலக வேண்டும்” என்று அவர்கள் சபாநாயகர் இருக்கை அருகே அணிவகுத்துக் கோஷமிட்டார்கள்.

இந்தக் கூச்சலில், தான் சொல்வது எதுவும் எடுபடாது என்று பழனிச்சாமிக்குத் தெரியும். அவர் வயிறு சத்தமிட்டு பசியை ஞாபகமூட்டியது. தண்ணீர் குடித்துச் சமாளித்தார்.

பழனிச்சாமியை குறிவைத்துப் பறந்து வந்த பேப்பர் வெயிட் பக்கத்திலிருந்த ‘மனித வள மேம்பாட்டுத்துறை’ அமைச்சரைத் தாக்கியது. வயது முதிர்ந்த அவர் தலையைக் கையால் பிடித்தபடி மேசைக்குக் கீழே குனிந்தார். பழனிச்சாமிக்கு கணநேரம் தன் அரசியல் பாரம்பரியம் மறந்துபோய் கிராமத்து நினைவு வந்துவிட்டது. மேசையைத் தாண்டி வெளியே குதித்தார்.

கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு, தொண்டையில் நரம்பு புடைக்க, “என்னை அடியுங்கள்; இப்போது என்னை அடியுங்கள்” என்று கூவினார். கால்களைப் பரப்பி, மார்பை விரித்து உஷ்ணமாய் அவர் நின்ற காட்சி சபாநாயகருக்கு அதிசயமாக இருந்தது. பழனிச்சாமி சண்டைகூட போடுவாரா என்ன?

சொல்லி வைத்தாற்போல் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பழனிச்சாமியைச் சுற்றி நின்றார்கள். “அராஜகம் ஒழிக, அராஜகம் ஒழிக, எதிர்க்கட்சிகளின் அராஜகம் ஒழிக” என்று இப்போது அவர்கள் குரல் வலுத்த்து.

எதிர்க்கட்சித் தலைவருக்கு பிரச்சினையை திசை திருப்புவதில் சம்மதமில்லை. அவர் எழுந்து பழனிச்சாமியை நோக்கி வந்தார். அடிபட்ட அமைச்சரை தாங்கிக் கொண்டு வந்த இரண்டு பேர் அவரை வழிமறித்தார்கள்.

“இந்த ரத்தத்திற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும். அராஜகம் ஒழிக” என்றார்கள். அவர்கள் பேசும் தோரணையைப் பார்த்தால் ஏதாவது சாக்குச் சொல்லி அவரைத் தாக்க வந்தவர்கள் போல் இருந்தார்கள்.

அடிபட்ட அமைச்சரை எதிர்க்கட்சித் தலைவர் தொட்டுப் பார்த்தார். உண்மையில் ரத்தக் காயம் இல்லை. உச்சந்தலையில் வீக்கம்தான். பயத்தில் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவரை சமாதானப்படுத்தினார் எதிர்க்கட்சித் தலைவர்.

சபாநாயகர் உட்பட எல்லோரும் எழுந்து நின்றுகொண்டு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். யாரும் யார் சொல்வதையும் கவனிப்பதாகத் தெரியவில்லை. அடிக்கடி ஒலித்துக் கொண்டிருந்த மணி சத்தத்துக்கு நடுவே ‘சபையை ஒத்தி வைக்கிறேன்’ என்று சபாநாயகர் சொன்னது பழனிச்சாமிக்குத் தெளிவாகக் கேட்டது. அவர் சபையை விட்டு வெளியேறினார்.

அவருக்கு ராசியான கார் காத்திருந்தது.

ராணுவ ஒத்திகைக்கான முகாம் அது. தலைநகருக்குத் தொலைவில் இருந்தது. சுழலும் ராட்சச இறக்கைகளுக்குக் கீழே அமர்ந்து கொண்டு செய்த ஒரு மணி நேரப் பயணத்தில் பழனிச்சாமியின் வாயுப் பிடிப்பு அதிகமாகிவிட்டிருந்தது. நடு முதுகில் ஆரம்பித்து இடது தோள்பட்டை வரை அது இறுக்கிப் பிடித்திருந்தது. கூட்டம் சீக்கிரம் முடிந்துவிட்டால், வீட்டுக்குப் போய் பூண்டு வைத்தியம் செய்து கொள்ளலாம்.

பூண்டு வைத்தியம் என்பது அவர் மனைவி வைத்த செல்லப் பெயர். பூண்டு துவையலை சாதத்தில் பிசைந்து கொள்வார். பிறகு பூண்டு ரசம். கடைசியாக நெய்யில் வறுக்கப்பட்ட பூண்டை மென்று தின்று விடுவார். அவ்வளவுதான் உடம்பிலிருக்கும் வாயு பூராவும் ஒட்டுதலின்றிப் பிரிந்துவிடும். அவர் மனைவிக்கு மட்டும் பூண்டு வாசனை ஒத்துக் கொள்ளாது. பூண்டு தினங்களில் அவரைக் கிட்டே சேர்ப்பதில்லை.

‘ஜென்டில்மென்’ என்று ஆரம்பித்தார் ராணுவத் துறைச் செயலர். அவர் சொல்லும் முன்னுரை எல்லோருக்கும் தெரிந்ததுதான். இருந்தாலும் அதை யார் தைரியமாகச் சொல்வது? தெரிந்த விஷயத்தையே தெரியாதது மாதிரி தலையாட்டி, பாவனையோடு கேட்டுக் கொள்வதுதான் அரசுப் பணியின் அடையாளம்.

மொத்தம் பழனிச்சாமியையும் சேர்த்து ஆறுபேர். ராணுவத்துறைச் செயலர், உளவுத் துறை இயக்குநர், விஞ்ஞானக் குழுத்தலைவர், அவருடைய உதவியாளர்கள் இருவர் ஆகியோர்தான்.

சற்று சாய்ந்து உட்கார்ந்தால் முதுகுப் பிடிப்புக்கு ஏதுவாக இருக்கும். ஆனால், இந்த விஞ்ஞானிகள் ஒரு அமைச்சரைச் சந்திப்பது இதுவே முதன்முறையாக இருக்கலாம். ஆட்சியாளர்களைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள்.

ஏற்கெனவே இந்த ராணுவத்துறை செயலர் வேறு என்னை ஆறாங் கிளாஸ் கூட படிக்காத மக்கு என்று பாவித்துக் கொண்டு, இயற்பியல், வேதியியல் என்று அட்சரம் பிசகாமல் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒருநாள் இவருக்கு நம்மைப் புரியவைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார் பழனிச்சாமி.

எந்தக் கூட்டத்தையும் எப்படி தன்வழி நடத்திச் செல்வது என்று பழனிச்சாமிக்கு நன்றாகத் தெரியும். செயலர் முடிக்கும் வரை காத்திருந்தார். இப்போது அவருடைய முறை.

டம்ளரிலிருந்த தண்ணீரைப் பருகியபோது, ஆர்டர்லி உள்ளே வந்து செயலரிடம் ஒரு கவரைக் கொடுத்துச் சென்றான். கவரைப் பிரித்துக் கடிதத்தைப் படித்த செயலர், எழுந்து நின்று பவ்யமாக அதை பழனிச்சாமியிடம் நீட்டினார்.

’தீவிரவாதிகள் விஞ்ஞானியைக் கொன்றுவிட்டார்கள்’ என்று லாகூரிலிருந்து வந்த செய்தி அந்தக் கடிதத்தில் இருந்தது. அதை மடித்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டு பழனிச்சாமி பேசத் துவங்கினார்.

ஜென்டில்மென், கடைசியாக வந்த செய்தியை முதலில் சொல்லி விடுகிறேன். விஞ்ஞானியை லாகூரில் தீவிரவாதிகள் கொன்றுவிட்டார்கள். ‘சங்கரா’ திட்டத்தை இது எந்த அளவு பாதிக்கும்? நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் எனக்குச் சொல்ல வேண்டும். அரசுத் தரப்பில் இருந்து இந்தத் திட்டத்திற்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். இது பிரதமருடைய விருப்பம்.

பாராளுமன்றக் கூட்டத் தொடரும் ஒத்திவைக்கப்பட்டுவிட்டதால் இன்னும் ஆறுமாதங்களுக்கு அரசியல் தலையீடு எதுவும் இருக்காது என்றார் அவர்.

விஞ்ஞானக் குழுத் தலைவர் செயலருடைய சமிக்ஞைக்காக்க் காத்திருந்தார். அது கிடைத்தவுடன் பேசத் தொடங்கினார்.

‘கெகுலே என்ற வேதியியல் விஞ்ஞானி 19-ம் நூற்றாண்டில் பென்ஸைன் கட்டு பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் இது பற்றிய யோசனையில் இருந்தபோது அவர் அயர்ந்து தூங்கிவிட்டார்.

தன் வாலைத் தானே கவ்விய பாம்பு ஒன்று அவருடைய கனவில் வந்து நடமாடியது. விழித்தெழுந்த கெகுலே, பென்ஸைன் கட்டு அந்தப் பாம்பின் தோற்றத்தைப்போல் இருக்கிறது என்று தெளிவு பெற்றார்.

வேதியியல் புதிருக்கான விடையைக் கனவுக் காட்சியாக பெற முடியும் என்பது விஞ்ஞானத்தின் எல்லைகளை விரிவுபடுத்தியது. விஷயத் தொகுப்பு, அவரவர் மூளையில் ஏற்கெனவே அடங்கியிருக்கிறது என்ற கொள்கைக்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டன. பிரக்ஞையின் தளங்கள் ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒன்றன் கீழ் ஒன்றாக அவை இருப்பது ஆராயப்பட்டது.

இருந்தாலும் அந்தந்த விஷயத் தொகுப்புக்கான மூளைப்பகுதி எது என்று கண்டுபிடிப்பதில் சமீபத்தில்தான் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

பின் மூளையில் இயற்பியல் ரகசியங்கள் பொதிந்திருக்கின்றன என்பது உறுதியாகிவிட்டது. வேதியியல் ரகசியங்கள் நடுமூளையில் இருக்கின்றன என்பதைக் கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டோம்.

‘சங்கரா’ திட்டம் வெற்றிபெற்றால் அதன் பயன்கள் பல துறைகளில் நமக்குப் பயன்படும். கல்வித் துறையில் மிகப் பெரிய முன்னேற்றத்தைச் சாதிக்க முடியும். வளரும் தலைமுறையை குறைந்த காலப் பயிற்சி மூலம் அவர்கள் விரும்பும் துறையில் நிபுணர்களாக்க முடியும்.

ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீடுகளில் பெரும்பகுதியை மிச்சம்பிடிக்க முடியும். எல்லா ஆராய்ச்சிகளையும் மூளைக்குள்ளேயே முடித்துவிடலாம். மற்ற நாடுகளை விட விஞ்ஞான, தொழில்நுட்ப, பொருளாதார முன்னேற்றத்தை வெகு சுலபமாக அடைந்து விடலாம்.

ஆராய்ச்சியின் இந்த நிலையில் நம்முடைய நண்பரை இழந்துவிட்டோம் என்பது வருந்தத்தக்க செய்தியாகும்.

இந்த இழப்பு, ‘சங்கரா’வின் முன்னேற்றத்திற்கு ஒரு தடைக் கல்லாகும்.

பென்டதால் மயக்கத்திலிருக்கும் நபரிடம், அவருடைய மூளையின் குறிப்பிட்ட பகுதியை மின் அலைகளால் சீண்டிவிட்டுக் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இந்தப் பரிசோதனைக்கு உள்ளாகிறவர், பென்டதால் போன்ற ரசாயனங்களால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாதவராக இருக்க வேண்டும். கேள்விகளைப் புரிந்து கொண்டு பதில் தரக்கூடிய அளவுக்கு தொழில்நுட்ப அறிவும் மொழி அறிவும் அவருக்கு அவசியம்.

இதைவிட முக்கியமான விஷயம் அவர் இந்தப் பரிசோதனைக்கு சுயமாக உட்பட வேண்டும். பலவந்தப்படுத்திக் கேட்கப்படும் கேள்விகளுக்கு கனவில் பதில் வருவதில்லை.

மேற்சொன்ன நிபந்தனைகள் எல்லாம் கடத்திச் செல்லப்பட்ட நண்பர் விஷயத்தில் பிரச்சினையாக இல்லை. விஞ்ஞானத்தின் அனைத்துத் துறைகளிலும் அவருக்கு வல்லமை இருந்தது.

பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளும் தியாக மனப்பான்மையும் இருந்தது. அவருக்கு மாற்று ஏற்பாடு செய்வது மிகக் கடினம். உடனடியாக, பரிசோதனைக்கான நபரைத் தேடுவதில் நம் முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டும். அப்புறம் தான் மற்ற வேலை” என்றார் குழுத்தலைவர்.

ஒரு நபரைத் தேர்வு செய்து, உடல்ரீதியாக, உளரீதியாக அவரைத் தயார் செய்வதற்கு ஒரு வருட காலம் ஆகும்.

“ஒரு வருடம் என்பது மிக அதிகம்; அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பாகிஸ்தான் முந்திக் கொள்ளலாம்” என்றார் செயலர்.

“இது பற்றி ஏற்கெனவே நாங்கள் விவாதித்துவிட்டோம்; வேறு வழி எங்களுக்குத் தென்படவில்லை” என்றார் குழுத் தலைவர்.

”அப்படியானால், இந்த நிலைமையைப் பற்றி பிரதமரிடம் தெரிவித்துவிடுகிறேன்” என்று கூட்ட்த்தை ஒத்திவைக்கும் பாணியில் சொன்னார் பழனிச்சாமி. குழுத் தலைவரும், செயலரும் சமிக்ஞையில் ஏதோ பரிமாறிக் கொண்டார்கள்.

பழனிச்சாமியின் புருவம் உயர்ந்தது. வாய்வுப் பிடிப்பு அவஸ்தையோடு இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். இவர்கள் ஏதோ பூடகமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று அவருக்கு எரிச்சல்.

என்ன? என்றார்.

“என்னுடைய உதவியாளர் ஒரு வழி சொல்கிறார். ஆனால், அது சாத்தியமில்லை என்பதால் உங்களுக்கு தெரிவிக்காமல் இருந்துவிட்டோம்” என்றார் குழுத்தலைவர்.

வாய்பேசாமல் பழனிச்சாமி தலையை அசைத்தார். ”இந்தப் பரிசோதனையில் நம்முடைய அணுகுமுறை தவறானது என்பது என்னுடைய உதவியாளரின் கருத்து” என்று சொல்லி குழுத் தலைவர் தன் பக்கத்திலிருந்த சர்தார்ஜியிடம் கை காட்டினார்.

சர்தார்ஜிக்கு முகமெல்லாம் ஜ்வலிப்பு. காலமெல்லாம் இதற்காகக் காத்திருந்தவர் போல் துவங்கினார். சர்தார்ஜிக்கு என்ன வயதிருக்கும் என்று அவசரமாய் மனக்கணக்குப் போட்டார் பழனிச்சாமி.

“மூளையைப் பகுதிபகுதியாகப் பிரித்து, அதைச் சீண்டி விஞ்ஞான நுட்பங்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது தவறான வழி என்று நான் நினைக்கிறேன். இது காலவிரயமும், பொருள் விரயமும், உயிர் சேதமும் கொடுக்கும். இதற்கு மாற்று வழி ஒன்று உள்ளது.

ஏற்கெனவே விஷய ஞானத்தின் எல்லைகளைக் கடந்து மெய்ஞானியாக வாழ்பவர் ஒருவரை ஒத்துழைக்க வைத்தால் விஷயத் தொகுப்பின் விளிம்பில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

வட்டத்தின் வெளிச் சுற்றிலிருந்து மையப் புள்ளிக்குப் போவதை விட மையத்திலிருந்து வெளிச் சுற்றுக்கு வருவது சுலபம் என்பது என் முடிவு” என்றார் அந்த சர்தார்ஜி.

“அதெல்லாம் சரி, பென்ட்தால் ஊசி போட்டுக் கொள்ள எந்த ஞானி ஒப்புக் கொள்ளுவார்?” என்றார் பழனிச்சாமி.

”அதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம். ஆந்திரக் கடற்கரையில் ஐம்பது வருடங்களாகத் தவத்திலிருக்கிறார் ஒரு பெரியவர். வருடத்திற்கு ஒரு முறைதான் மவுனம் கலைத்து, தரிசனம் தருகிறார். போனமுறை அவர் தரிசனம் கொடுத்தபோது, அவரை அணுகி இந்த விஞ்ஞான விருப்பத்தைச் சொன்னேன். ஆசிர்வதித்து விட்டார்” என்றார் சர்தார்ஜி.

கர்சிஃப்பை எடுத்து வாயைத் துடைப்பது போல், புன்னகையை மறைத்துக் கொண்டார், குழுத்தலைவர். ஆனால், செயலருக்கு ஏதோ ஆர்வம் தோன்றிவிட்டது. “தரிசன தினத்தைத் தவிர மற்ற நாட்களில் அங்கு ஆரவாரம் இல்லை. சரியான காட்டுப்பகுதி. காவலுக்கு ஒரு கிழவன் தானிருக்கிறான். அவனைச் சரிகட்டி விடலாம்; அல்லது அகற்றிவிடலாம்” என்றார் அவர்.

“எதற்காகக் காத்திருக்கிறீர்கள். நான் ஆந்திர முதல்வரிடம் பேசிவிடுகிறேன். உடனடியாகப் புறப்படுங்கள்” என்று உத்தரவிட்டார் பழனிச்சாமி. சர்தார்ஜியைப் பார்த்து ‘பெஸ்ட் ஆஃப் லக்’ என்றார். உற்சாகமாக இருக்கையை விட்டு எழுந்தபோது முதுகில் ஒரு மின்வெட்டு. ‘ஆ’ என்றார். மற்றவர்கள் கலவரப்பட்டார்கள். ‘ஒன்றுமில்லை முதுகுப்பிடிப்புதான்’ என்றார் பழனிச்சாமி. சமாளித்துக் கொண்டு டாக்டரை அழைப்பதற்காக ஃபோனை எடுத்த செயலரைத் தடுத்து “என்னிடம் ஒரு நாட்டு மருந்து இருக்கிறது” என்றார் அவர்.

இந்தமுறை குழுத் தலைவர் வாய்விட்டுச் சிரித்துவிட்டார்.

போனை எடுத்தது பழனிச்சாமியின் மனைவி. ராணுவத்துறைச் செயலர் பேசினார். “நமஸ்தே, ஒரு முக்கியமான விஷயத்தை அமைச்சரிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். அவரை அழைக்க முடியுமா?” என்றார் செயலர்.

”அவர் பூஜையில் இருக்கிறார். இன்னும் ஒரு மணி நேரமாகுமே!” என்று சொல்லிக் கொண்டிருந்த போது செயலர் இடைமறித்தார்.

”மன்னிக்க வேண்டும். அவசியமில்லாவிட்டால் நான் அவரைத் தொந்தரவு செய்யமாட்டேன். இல்லாவிட்டால் நான் பிரதமரோடுதான் பேச வேண்டும்; அது இன்னும் பிரச்சினை” என்றார் செயலர்.

“கொஞ்சம் பொறுங்கள்” என்று சொல்லிவிட்டு பூஜை அறைக்கு வந்து பழனிச்சாமியிடம் கார்ட்லெஸ் ஃபோனை நீட்டினார் அவர்.

பழனிச்சாமி முகம் சுளிக்கவில்லை. கை நீட்டி வாங்கிக் கொண்டார். “நமஸ்தே, சார்” என்றார் செயலர். “சார், ஆந்திராவுக்குப் போன இட்த்தில் கலாட்டா ஆகிவிட்டது. பரிசோதனை நடக்கும்போது கட்சிக்காரர்கள் வந்து ரகளை செய்துவிட்டார்கள். பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் குண்டுவீச்சில் இறந்து போய்விட்டார்.

விஞ்ஞானிகள் தப்பி வந்துவிட்டார்கள். பெரியவர் இருந்த அறையைப் பழைய படியே பூட்டிவிட்டோம். கட்சிக்காரர்கள் மீது லோகல் போலீஸ் கேஸ் பதிவு செய்து அவர்களைக் கைது செய்திருக்கிறார்கள்” என்றார்.

“ஒரு மணிநேரம் கழித்து இதைச் சொல்லக்கூடாதா? நான் பூஜையில் இருந்தேன்” என்றார் பழனிச்சாமி.

“மன்னிக்க வேண்டும். அந்த சர்தார்ஜிக்கு என்னவோ ஆகிவிட்ட்து. தரையில் சப்பணம் போட்டு உட்கார்ந்திருக்கிறார். தியானம் செய்கிறார் போலிருக்கிறது. பேச மறுக்கிறார். அவர்வீட்டைச் சுற்றி புது தில்லியில் ஜனத் தொகையில் பாதி கூடி இருக்கிறது. அவரைத் தரிசனம் செய்ய வேண்டுமாம். ஏகப்பட்ட டெலிவிஷன் காமிராக்கள். என்ன செய்வது என்று நீங்கள் சொல்ல வேண்டும்” என்றார் செயலர்.

பழனிச்சாமி, “முதலில் நான் அந்த சர்தார்ஜியைப் பார்க்க வேண்டும்” என்று சொல்லி போனை மனைவியிடம் கொடுத்தார். மனைவியால் அவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை!

Series Navigation

சுப்பு

சுப்பு