ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -11

This entry is part of 29 in the series 20100402_Issue

ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா


“பேராற்றல் பெருமிதமோடு நான் அதி விரைவாகத் தாக்கி, உலகத்தை அதிர்ச்சியில் வியக்க வைப்பேன்.”

“செல்வீகக் கொடை (Fortune) என்பது ஓர் எழில் மாது. எத்தனைச் செம்மையாக அவள் எனக்குப் பணி செய்வாளோ அதற்கும் மேலாகச் செய்ய அவளை நான் வற்புறுத்துவேன்.”

“மேற்கத்தியராகிய நாம் மாதரை மிகச் செம்மையாய் நடத்தி ஒவ்வொருவரையும் கெடுத்து விட்டோம். ஏறக்குறையாக நமக்கிணையாய் மாதருக்குச் சமத்துவம் அளித்ததில் நாம் பெருந் தவறைச் செய்து விட்டோம் ! கிழக்கத்தியர் அந்த முறையில் நம்மை விட அறிவோடு இருக்கிறார்.”

நெப்போலியன்.

Fig. 1
The Spy Woman

ஆயுத மனிதன் நாடகத்தைப் பற்றித் துவக்க அறிவிப்பு :

1796 மே மாதத்தில் வட இத்தாலியில் லோதிக்கும் மிலானுக்கும் இடையே உள்ள தஸ்ஸானோ என்னும் இடத்தில் பிரென்ச் இராணுவப் படைக்கும், ஆஸ்டிரியன் இராணுவத்துக்கும் நடந்த போரில் நெப்போலியன் தனது அசுரப் பீரங்கிகளைப் பயன்படுத்தி ஆஸ்டிரியப் படைகளைத் தோற்கடித்தான். அப்போது நெப்போலியனுக்கு வயது 27. அந்த வாலிப வயதில் பீரங்கிகளை முதலில் ஆயுதமாக ஏந்திப் பராக்கிரம பீரங்கி யுத்தம் செய்து இத்தாலியை விடுதலை நாடாய் ஆக்கியவன் பிரெஞ்ச் சக்ரவர்த்தி நெப்போலியன் ! நாடக ஆரம்பத்தில் பிரான்ஸி லிருந்து வரும் அரசாங்கத் தகவல் கடிதங்களை எதிர்நோக்கி நெப்போலியன் அவனது பிரதம படைத் தளபதிகளுடன் தஸ்ஸானோவில் பழையப் பயண விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறான். அவனது லெ·ப்டினென்ட் அந்தக் கடிதங்களைக் அன்றைக்குக் கொண்டு வர வேண்டும். ஆனால் வரும் வழியில் சந்தித்த ஓர் இளைஞன் குதிரையையும், கடிதங்களையும் லெ·ப்டினென்டிடமிருந்து தந்திரமாய்க் களவாடிச் சென்று விட்டான் !

அன்று காலையில் மர்மாக ஓரிளம் பெண் அந்த விடுதிக்கு வந்து தங்குகிறாள்.

நாடகத்தில் பங்கெடுப்பாளர் :

1. நெப்போலியன் (Napolean Bonaparte) : பிரான்சின் போர் ஜெனரல் (27 வயது)

2. கியூஸெப் கிராண்டி (Guiseppe Grandi) : இத்தாலிய பயண விடுதி அதிபர் (Innkeeper) (40 வயது)

3. பிரென்ச் லெ·ப்டினென்ட் : (24 வயது)

4. ஹெலினா : ஓர் ஆஸ்டிரியப் பெண் (30 வயது)

காலம் / நேரம் : மே மாதம் 12, 1796 காலை நேரம்.

இடம் : வட இத்தாலியில் தவஸ்ஸானோ (Tavazzano on the Road od from Lodi to Milan) ஊரில் உள்ள ஒரு உணவுச் சாவடி (பயண விடுதி)

ஆரம்பக் காட்சி :

(விடுதி அதிபர் கியூஸெப் கிராண்டி பரவசமோடு பரப்பரபாக அங்குமிங்கும் ஓடி நெப்போலியனையும், அவனது படைத் தளபதிகளையும் உபசரிக்கிறான். அவர்கள் விடுதி மேஜைகளில் உள்ள உணவுப் பண்டங்களைத் தின்றுக் கொண்டிருக்கிறார். ஒரு மேஜைக்கு முன் நெப்போலியன் அமர்ந்திருக்கிறான். மேஜையில் ஐரோப்பிய வரைப்படம் ஒன்று விரிக்கப் பட்டுள்ளது. எதிர்ப்புறம் தூரத்தில் ஓர் இளம் பெண் முதல் முறையாக நெப்போலியனை நோக்குகிறாள். படத்தைப் பார்த்த வண்ணம் பசி பொறுக்காமல் மேஜை உண்டிகளை வேகமாய் எடுத்து விழுகிறான் நெப்போலியன். மேஜையில் அறுசுவை உணவுத் தட்டுகள் பல பரப்பிக் காணப் படுகின்றன. பழத் தட்டுகளில் கருந் திராட்சைக் கொத்துக்கள் சிறப்பு விருந்தினருக்கு வைக்கப் பட்டுள்ளன. இடையிடையே நெப்போலியன் திராட்சைக் கொத்துக்களை வாயில் தள்ளுகிறான். நெப்போலியன் தொப்பியும், உடைவாளும் மேஜை மீது தெரிகின்றன. கையில் ஒரு கரித் துண்டை வைத்துக் கொண்டு நெப்போலியன் வரைப்படத்தில் அங்குமிங்கும் வட்டமிடுகிறான். வாயிலிருந்து திராட்சைத் தோலை எடுத்துப் படத்தில் ஒட்டுகிறான். நெப்போலியன் எதிர்பார்த்த இராணுவப் படையாளி (லெ·ப்டினென்ட்) பாதையில் தகவல் கடிதங்களைப் பறிகொடுத்துத் தாமதமாக வந்து அவருக்குக் கோபத்தை உண்டாக்குகிறான்.

உள்ளே நுழைந்த இராணுவ அதிகாரி நெப்போலியனைத் தேடி அருகில் வருகிறான். வயது 24 உள்ள வாலிபன். இராணுவ உடையில் இருக்கிறான். பரபரப்பாகத் தடுமாறிய நிலையில் தயங்கிக் கொண்டு குற்ற உணர்வுடன் முன் வருகிறான். வரும் வழியில் ஒர் வஞ்சகனிடம் தன் குதிரை, கடிதங்களைப் பறிகொடுத்து நெப்போலியன் கோபத்துக்கு ஆளாகிறான். ஒற்று வேலை செய்யும் வாலிப மங்கையிடமிருந்து அரசாங்கக் கடிதங்களைப் பெற நெப்போலியன் முயற்சி செய்கிறான்.)

(முன் வாரத் தொடர்ச்சி)

Fig. 2
North Italy Map

ஹெலினா: வெற்றி பெற்றதும் நான் ! தோற்றுப் போனதும் நான் !

நெப்போலியன்: (கடிதங்கள் அனைத்தும் திறக்கப் பட்டிருப்பதைப் பார்த்துக் கோபம் அடைகிறான். வேஜையில் கடிதங்களைப் பரப்பி முக்கியமானதை எடுத்து முதலில் படிக்கிறான்.) யாரிந்த கடிதங்களைத் திறந்தது ? யாரிதைப் படித்தது ? சொல் சின்னப் பெண்ணே ! நீ ஓர் ஒற்று மாது என்று நான் முதலில் சந்தேகப் பட்டது முற்றிலும் சரியே !

ஹெலினா: அப்படி ஒற்று மாது என்றால் இந்தக் கடிதங்களை உமது கையில் கொடுக்க நான் இப்படி நேரே வருவேனா ? எப்போதே எரித்துச் சாம்பலாக்கி இருப்பேன் ! நான் சத்திய மங்கை ! உங்கள் கடிதங்களை உரிய இடத்துக்குக் கொண்டு வந்து சேர்த்த பெண்டு நான் !

நெப்போலியன்: (சீற்றமுடன்) திறக்காமல் கடிதங்களைக் கொடுத்திருந்தால் உன்னை நான் உத்தமி என்று முத்திரை அடிப்பேன் ! உமது ஆஸ்டிரிய அதிகார வர்க்கம் இந்தக் கடிதங்களைப் படித்ததால் உன்னை ஒற்று மங்கை என்றுதான் நான் குற்றம் சாட்டுவேன். கடிதங்களைக் களவாடிய உன்னைச் சிறையில் தள்ள வேண்டும். இந்தக் கடிதங்களை யாரும் படிக்க வில்லை என்று பைபிள் மேல் கைவைத்துச் சத்தியம் செய்வாயா நீ !

ஹெலினா: நிச்சயம் செய்வேன் ! ஆனால் பைபிள் எனது பக்கத்தில் இல்லையே ! நானந்தக் கடிதங்களைப் படிக்க வில்லை ! யார் படித்தார் என்றும் தெரியாது ? கடிதங்களைக் களவாட விட்ட உமது லெ·ப்டினென்ட்தான் தண்டிக்கப்பட வேண்டும். பிரான்ஸின் ஜெனரலுக்கு இப்படி ஒரு மூடப் பணியாள் வேலைக்கு இருப்பது பிரான்சுக்கு மிக்க வெட்கக் கேடு !

நெப்போலியன்: (கடிதம் படிப்பதை நிறுத்தி சினத்துடன்) என்ன சொன்னாய் ? உன் நாக்கைத் துண்டாக்க வேண்டும் ! மறுபடியும் நீ என் பொறுமையைச் சோதிக்கிறாய் ! அளவுக்கு மிஞ்சி உனது நாக்கு நீள்கிறது. இந்தக் கடிதங்களில் உள்ள செய்தி எனக்குத் தெரியாது என்று நினைக்காதே ! எனது முதல் தகவல் : ஆஸ்டிரிய இராணுவ தளபதி பியூலிவ் பின்வாங்குவது (Beaulieu’s Retreat)*. அதை இருமுறைகளில்தான் அவன் செயற்படுத்த முடியும் ! தோல் மண்டை மூடத் தளபதி அவன் ! மாண்டோவா (Mantova) நகரில் அவன் முடங்கிப் போவான்; அல்லது பெஸ்சீராவைப் (Peschiera) பிடித்துக் கொண்டு வெனிஸ் (Venice) நகர நடுமை நிலைக்கு இடர் விளைவிப்பான். நீயும் தோல் மூளையுள்ள போலி மங்கை ! உன்னைப் போன்ற ஒற்றர் தலைகள் உடனே வெட்டப்படும் ! வஞ்சிக்கப் பட்டதாய் உமது ஆஸ்டிரியன் தளபதி எண்ணிக் கடிதங்களைக் களவாட உன்னை அனுப்பி யுள்ளான். என்னிடமிருந்து அது தன்னைக் காக்கும் என்று நினைத்தான் அந்த முட்டாள் ! கடிதங்கள் பல எனக்குத் தனிப்பட வந்தவை. அவற்றால் உனக்கோர் பயனுமில்லை. எவருக்கும் பயனுமில்லை !

Fig. 3
Napoleon Bonaparte

ஹெலினா: நமக்குள் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளலாமா ? ஆஸ்டிரிய இராணுவத்தைப் பற்றி உமது ஒற்றர் பெற்ற தகவலை நீவீர் வைத்துக் கொள்வீர் ! பாரிஸ் தகவலை மட்டும் என்னிடம் தந்துவிடுவீர் ! அதற்கு நான் உடன்படுகிறேன்.

நெப்போலியன்: (ஏளனமாக) மேடம் ஹெலினா ! ஏதோ எனது கடிதங்கள் எல்லாம் உனது உரிமைச் சொத்தாய் நீ நினைக்கிறாய் ! நானதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் ! என்னோடு ஒப்பந்தம் பேச உனக்குத் தகுதியும் இல்லை; எந்த அதிகாரமும் இல்லை.

ஹெலினா: உமது கடிதங்கள் வேண்டாம். அரசாங்கக் கடிதங்கள் தேவை யில்லை எனக்கு ! அந்தக் கடிதக் கட்டில் ஒரே ஒரு திருட்டுக் கடிதம் உள்ளது. ஒரு பெண் ஆடவனுக்கு எழுதியது ! ஆனால் அவன் அவளது கணவன் அல்லன் ! அது ஓர் அவமானக் கடிதம் ! பெயரைக் கெடுக்கும் கடிதம் !

நெப்போலியன்: என்ன ? ஒரு காதல் கடிதமா ?

ஹெலினா: (அருவருப்புடன்) காதல் கடிதத்தைத் தவிர வேறு எதுவாக இப்படி வெறுப்பை ஊட்டுவதாக இருக்க முடியும் ?

நெப்போலியன்: ஏன் அந்தக் கடிதம் எனக்கு அனுப்பப் பட்டது ? அவள் கணவன் கை ஓங்க நான் உதவி செய்வதற்கா ?

ஹெலினா: இல்லை ! இல்லை ! உமக்கொரு பயனும் இல்லை அந்தக் கடிதத்தால் ! என்னிடம் அதைக் கொடுத்து விடுவீர். ஒரு சிரமமும் இல்லை உமக்கு ! ஏதோ ஒரு வெறுப்பால் யாரோ ஒருவர் அனுப்பி விட்டார் உமக்கு. எழுதிய பெண்ணின் மனதைக் காயப்படுத்தச் செய்த சூழ்ச்சி இது !

நெப்போலியன்: கணவனுக்கு அனுப்பி யிருக்கலாம் அந்தக் கடிதத்தை எனக்கு அனுப்பாமல்.

ஹெலினா: (தளர்ந்து போய் மனமுடைந்து) ஓ ! எனது மனத்தைக் குழப்புகிறீர் ! ஏன் இப்படிப் பேசுகிறீர் ? எனக்குப் புரியவில்லை ! (அயர்ந்து போய் நாற்காலியில் அமர்கிறாள்.)

(தொடரும்)

***************************
Beaulieu’s Retreat*
The Battle of Borghetto, near Valeggio sul Mincio in the Veneto of northern Italy, occurred during the War of the First Coalition , part of the French Revolutionary Wars . On 30 May 1796, a French army led by General Napoleon Bonaparte forced a crossing of the Mincio River in the face of opposition from an Austrian army commanded by Feldzeugmeister Johann Beaulieu . This action compelled the Austrian army to retreat north up the Adige valley to Trento , leaving the fortress of Mantua to be besieged by the French.

***************************

தகவல் :

Based on The Play :

(A) The Man of Destiny – Plays Pleasant By : Bernard Shaw, Penguin Plays (1966)

(B) The Life & Times of Napoleon -Curtis Books (1967)

(C) The Horizon Book of The Age of Napoleon (1963)

(D) The Age of Napoleon By : Alistair Horne (2004)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 31, 2010)

Series Navigation