முள்பாதை 21

This entry is part [part not set] of 31 in the series 20100319_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

இரண்டு நாட்கள் கழித்து ஆசாரிமாமா கும்பகோணத்திலிருந்து திரும்பி வந்தார். அவர் வீட்டுக்குப் போகாமல் நேராக இஙகே வந்திருப்பதை கையிலிருந்த மஞ்சள் நிறத் துணிப் பையும், குடையும் பறைச்சாற்றிக் கொண்டிருந்தன. வாசலிலிலிருந்தே “கமலாம்மா! கிருஷ்ணா!” என்று உரத்தக் குரலில் அழைத்துக்கொண்டே வந்தார்.
“வாங்க … வாங்க. ஊரிலிருந்து இப்பொழுதுதான் வர்றீங்களா?” என்று கேட்டுக் கொண்டே அத்தை வரவேற்றாள்.
“ஆமாம். இன்னும் வீட்டுக்குக்கூட போகவில்லை.” உள்ளே வந்து கட்டில் மீது அமர்ந்து கொண்டே சொன்னார்.
“போன வேலை என்ன ஆச்சு? காயா பழமா?”
“நான் தலை எடுத்த எந்த காரியமாவது சரியாக வரவில்லை என்று நீ கேள்விப் பட்டிருக்கிறாயா இல்லை பார்த்ததிருக்கிறாயா?” மூக்குப் பொடியைத் திணித்துக் கொண்டே சொன்னார்.
அதைக் கேட்டதும் அத்தையின் முகம் பிரகாசமடைந்தது. அங்கேயே நின்று கொண்டிருந்த நான் அவர்களுடைய பேச்சை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தேன்.
“என்ன சொன்னார்கள்?” மகிழ்ச்சியை வலுக்கட்டாயமாக அடக்கியபடி அத்தை அவசரமாகக் கேட்டாள்.
“என்ன சொல்லுவார்கள்? பெண்ணை அவர்களுக்குப் பிடித்துவிட்டது. கட்டாயம் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால்தான் நானும் அவர்களை அழைத்து வந்தேன்.”
“அப்போ இந்த இடம் முடிந்து விட்டாற்போல்தானா?”
“முடிந்து விட்டாற்போல்தான். மற்ற விஷயங்களை பேசுவதற்கு கிருஷ்ணனை அழைத்து வருவதாகச் சொல்லியிருக்கிறேன். நீங்க எப்போ போகச் சொன்னால் அப்போ போகத் தயாராக இருக்கிறேன்.”
“நல்ல நாளாக நீங்களே பார்த்துச் சொல்லுங்கள். நீங்க எப்போ சொல்றீங்களோ கிருஷ்ணன் உங்களுடன் கிளம்பி வருவான்.”
“கிருஷ்ணன் வீட்டில் இல்லையா?”
“இல்லை. லைப்ரரியில் ஏதோ மீட்டிங் இருக்குன்னு ராஜமய்யர் செய்தி சொல்லியனுப்பி இருந்ததார். காலையிலேயே கிளம்பிப் போனான். வரும் நேரம்தான்.”
“அப்போ நான் கிளம்புகிறேன்.” ஆசாரிமாமா எழுந்து கொண்டார்.
“இருங்க. காபி சாப்பிட்டுவிட்டு போகலாம்.” அத்தை சமையலறைக்குள் விரைந்தாள்.
“இந்த நேரத்தில் காபி எதுக்கு? நான் இன்னும் குளித்துவிட்டு சந்தியா வந்தனம் செய்யணும். இந்த நல்ல செய்தியை உடனே சொல்லணும் என்று முதல் பஸ்ஸிலேயே புறப்பட்டு வந்தேன்.”
“கடவுள் உங்களுக்கு எல்லா ஐஸ்வரியங்களையும் தருவார். உங்களுடைய நல்ல மனதிற்கு எந்தக் குறையும் வராது.” அத்தை சமையலறையிலிருந்தே பதில் சொன்னாள்.
பித்தளை டம்ளர் நிறைய புது டிகாஷனில் காபி கலந்து வெங்கலப் பானையில் கொதித்துக் கொண்டிருந்த உலை நீரில் சுட வைத்து, கொண்டு வந்து தந்தாள். குளிக்காமல் எதையும் சாப்பிட மாட்டேன் என்று மறுத்துக் கொண்டிருந்த ஆசாரிமாமவின் கொள்கை அந்தக் காபியைப் பார்த்ததும் வலுவிழந்து விட்டது. வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே டம்ளரை வாங்கிக் கொண்டார். ஒரு வாய் குடித்துவிட்டு தலையை அசைத்தார். “காபி குடிக்கணும் என்றால் உங்க கையால் கலந்த காபிதான் குடிக்கணும். நானும் எத்தைனையோ வீடுகளில் குடித்திருக்கிறேன். இந்த ருசி எங்கேயும் இருக்கவில்லை. உங்க கையில் ஏதோ மகிமை இருக்க வேண்டும்” என்று வாய் நிறைய பாராட்டினார். சூடாக இருந்த காபியை ஒவ்வொரு வாயாக அவர் பருகிக் கொண்டிருந்த போது அத்தை சீர்வரிசையைப் பற்றி விசாரித்தாள்.
அதேதோ ரொம்ப சாதாரண விஷயம் என்பதுபோல் அவர் சொல்லிக் கொண்டே போனார். “பெரிதாக எதுவும் கேட்டு விடவில்லை. நாத்தனார் மூன்று பேருக்கும் பட்டுப்புடவை, மாமியாருக்கு அகல கரையிட்ட ஜரிகையுடன் பட்டுப் புடவை, வெள்ளியில் குத்து விளக்கு, தட்டு, பஞ்ச பாத்திரம், உத்தரிணி இவையெல்லாம் நமக்குத் தெரிந்தவைதானே. பெண்ணுக்கு பத்து பவுனாவது போடணும். மாப்பிள்ளை பிள்ளையாண்டான் தனக்கு கலர் டி.வி. வேணும்னு வாய்விட்டு கேட்டான். இந்தக் காலத்தில் அது •பேஷனாகிவிட்டது. நம்ப பெண்ணும்தானே அதை அனுபவிக்கப் போகிறாள். சொல்ல மறந்து விட்டேன். உறவுக்காரர்களுக்கு துணிமணி எடுத்துக் கொடுக்கும்போது நான்கு செட் கூட எடுத்துத் தரணுமாம். பையனுக்கு மூன்று அத்தைகள் இருக்கிறார்கள். பெரிய ஹோதாவில் இருப்பவர்கள். அவர்களுக்கு மரியாதை செய்யவில்லை என்றால் நன்றாக இருக்காது. பையனுடைய அம்மா வழி தாத்தா பாட்டி இருக்கிறார்கள். அவர்களுக்கும் மரியாதை செய்யணும். இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் தற்போது பெண்ணுக்கு அவர்களால் நகை எதுவும் போட முடியாதாம். வீட்டில் ஏதோ பொருளாதார பிரச்னைகள். பின்னால் வசதியும் வாய்ப்பும் வந்தால் அப்போ செய்து போடுவார்களாம்.”
“நகைகளுக்கு என்ன வந்தது?” என்றாள் அத்தை. பெண்ணை பிடித்துவிட்டது என்று சொன்னதும் பெட்ரோமாக்ஸ் விளக்கு போல் மலர்ந்த அத்தையின் முகம் சீர்வரிசையைப் பற்றிக் கேட்டதும் எண்ணெய் இல்லாத விளக்கு போல் அணைந்துவிட்டது. அங்கேயே நின்று கொண்டு இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஆத்திரத்தில் உடல் பற்றி எரிவது போல் இருந்தது. அந்தக் குரங்கு மூஞ்சிக்கு இதெல்லாம் வேண்டுமா? அத்தை ஏதாவது நினைத்துக் கொள்ளப் போகிறாளே என்று பின் வாங்கினேனே ஒழிய, இல்லாவிட்டால் “இது போதுமா? வேறு எதுவும் தேவையில்லையா?” என்று பழிப்பு காட்டியிருப்பேன்.
காபி டம்ளரை கீழே வைத்து விட்டு பையையும் குடையையும் எடுத்துக் கொண்டு “போய் வருகிறேன். கிருஷ்ணன் வந்த பிறகு நீங்களும் அவனுமாக பேசி முடிவு செய்து கொண்டு எனக்குச் சொல்லி அனுப்புங்கள்” என்றார்.
அவர் கிளம்பிப் போனபிறகு அத்தை யோசனையில் ஆழ்ந்த விட்டவள்போல் இருந்த இடத்தை விட்டு அசையவே இல்லை. சமையல் விஷயத்தைக்கூட மறந்து விட்டவள் போல் அப்படியே உட்கார்ந்திருந்தாள். பாக்கி சமையல் வேலையை ராஜேஸ்வரி செய்து முடித்தாள்.
மதியம் சாப்பிடும் வேளையில் கிருஷ்ணன் வந்தான். அத்தை அவனுக்கு சாப்பாடு பரிமாறிக்கொண்டே ஆசாரி மாமா சொன்னதை எல்லாம் ஒப்புவித்தாள். சீர்வரிசை பற்றிக் கேட்டதும் நான் எதிர்பார்த்தது போல் அவன் எரிந்து விழவில்லை. சிரித்துக்கொண்டே நிமிர்ந்து பார்த்தான். “போதுமா? இன்னும் எதாவது வேண்டுமா? ஆமாம், வரதட்சணை வாங்கவில்லை என்ற நல்ல பெயரும் கிடைக்கும். சீர்வரிசை என்ற பெயரில் வேண்டியதெல்லாம் கிடைத்துவிடும். நல்ல உபாயம்தான்” என்றான்.
“என்னவோப்பா. எனக்குத் தெரிந்த வரையில் இதைவிட நல்ல வரன் கிடைக்கும் என்று தோன்றவில்லை. ஒருவேளை நல்ல வரன் வந்தாலும் அவர்கள் கேட்கும் சீர்வரிசை, வரதட்சணை நம்மால் கொடுக்கவும் முடியாது. கடவுள் அருளால் இந்த இடம் முடிந்து அவள் கழுத்தில் தாலி ஏறிவிட்டால்…” அத்தையின் குரல் நடுங்கியது.
“என்னம்மா சொல்கிறாய்? கல்யாணம் ஆகாமல் நம் வீட்டிலேயே இருந்து விடப்போகிறாளா என்ன?” என்றான்.
அத்தை வேண்டிக்கொள்வது போல் சொன்னாள். “கிருஷ்ணா! இந்த வரன் விஷயத்தில் நீ எந்த ஆட்சேபணையும் சொல்லாதே. நாம் எப்படியும் பத்தாயிரம் வரையில் வரதட்சணை கொடுப்பதற்குத் தயாராகத்தானே இருந்தோம். அதை சீர்வரிசையாக கொடுத்து விட்டதாக நினைத்துக் கொண்டால் போச்சு.”
” எதற்காக அப்படி நினைத்துக் கொள்ளணும்? வேண்டுமென்றால் வரதட்சணை வாங்கிக் கொள்ளச் சொல்லு. எனக்கு ஆட்சேபணை இல்லை.”
“எனக்குத் தெரியும். காலை முதல் என் மனதில் இந்தக் கவலைதான். உன் பிடிவாதம் எனக்குத் தெரியாதா? நீ ஒப்புக் கொள்ள மாட்டாய் என்று எனக்கு முன்னாடியே தெரியும். அவள் தலையெழுத்து எப்படி இருக்கிறதோ. கல்யாண யோகம் அவள் ஜாதகத்தில் இருக்கிறதோ இல்லையோ?” அத்தையின் குரலில் வேதனையும், இயலாமையும் கலந்திருந்தன.
“அம்மா! என்ன சொல்றீங்க? நான் … அவளுக்கு..” ஆவேசமாக ஏதோ சொல்ல வந்தவன் சட்டென்று நிறுத்திக் கொண்டான். பிறகு நிதானமான குரலில் “உங்களுக்கு விருப்பமாக இருந்தால் ராஜியும் சம்மதம் சொன்னால் எனக்கு எந்த விதமான ஆட்சேபணையும் இல்லை. நீங்க மட்டும் கண் கலங்காதீங்க” என்று சொல்லிவிட்டு சாப்பிட்டு முடித்து எழுந்து போய்விட்டான்.
கிருஷ்ணன் சம்மதம் தெரிவித்ததும் பெரியதொரு சுமையை இறக்கி வைத்ததுபோல் அத்தையின் முகத்தில் நிம்மதி தெரிந்தது. சந்தோஷத்தில் திக்கு முக்காடியவள் போல் பதற்றத்துடன் நடமாடிக் கொண்டிருந்தாள். எனக்கு சாம்பாருக்கு பதில் ரசம் பரிமாறினாள். ராஜிக்கு சாதம் போடுவதற்கு பதில் நெய்யை ஊற்றினாள். “என்னவோ தெரியவில்லை. எனக்குக் கையும் காலும் ஓடவில்லை” என்று சொல்லிவிட்டு எல்லாவற்றையும் எங்கள் அருகில் வைத்துவிட்டு எழுந்து போனாள்.
மதியம் ஆசாரி மாமா மறுபடியும் வந்தார். சீர்வரிசையைப் பற்றி பேச்சு வார்த்தைகள் நடந்தன. அத்தை வற்புறுத்திய பிறகு கிருஷ்ணன் ஆசாரிமாமா சொன்ன பட்டியலுக்கு சம்மதம் தெரிவித்தான். ராஜேஸ்வரியின் திருமணம் ஏறத்தாழ முடிந்து விட்டாற்போல்தான்.
அத்தையின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. கிருஷ்ணன் திருப்தியுடன் இருப்பதுபோல் தென்பட்டான். ஆனால் எனக்குத்தான் ஏனோ ராஜேஸ்வரியின் முகம் வாடி விட்டாற்போல் தோன்றியது. திருமணம் நிச்சயம் ஆனதைப் பற்றிய சந்தோஷம் அவள் முகத்தில் கொஞ்சம்கூட இருக்கவில்லை. அப்படியும் ஒரு தடவைக்கு பத்து தடவை அவளைக் கூர்ந்து பார்த்தேன்.
இன்னும் சந்தேகம் எதுக்கு? அவளுக்கு அந்த மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை. ஆனால் அவளுடைய அபிப்பிராயத்தைக் கேட்க இங்கே யார் இருக்கிறார்கள்? எனக்கு ராஜேஸ்வரியிடம் இரக்கம் ஏற்பட்டது. அத்தையின் மீதும், கிருஷ்ணன் மீதும் தாங்க முடியாத அளவுக்குக் கோபமும் வந்தது. என்ன மனிதர்கள் இவர்கள்? ராஜேஸ்வரியின் சொந்தத் தாய் அத்தை. உயிருக்கும் மேலாக தங்கையைப் போற்றுவது போல் காட்டிக்கொள்ளும் சகோதரன் கிருஷ்ணன்.
பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையாக இருக்கும் திருமண விஷயத்தில் அவளுடைய அபிப்பிராயத்தை ஏன் கேட்கவில்லை? எப்போடாப்பா சுமையை இறக்கி வைப்போம் என்று வாய்ப்புக்காகக் காத்திருக்கும் மனிதர்களை போல் நடந்து கொள்வானேன்?
என்னால் ஆவேசத்தை அடக்கிக் கொள்ள முடியவில்லை. எங்கே அநியாயம் நடந்தாலும் என்னால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. எதிர்த்து நின்று போராடுவதற்கு ராஜேஸ்வரிக்கு ஊக்கம் தருவேன். தன் விருப்பு வெறுப்புகளை வெளிப்படையாக சொல்லக் கூடிய தைரியத்தையும், துணிச்சலையும் அவளுக்குப் புகட்டுவேன். வாய் பேச்சு வராத ஊமையைப் போல் இருக்கும் அப்பாவி ராஜிக்குத் தேவையான ரோஷத்தை, பிடிவாதத்தைத் தூண்டிவிடுவது என்னுடைய கடமை இல்லையா.
நல்லவேளை, இந்த சமயத்தில் நான் இங்கே இருப்பது நல்லதாகிவிட்டது. கட்டாயத் திருமணத்திலிருந்து ராஜேஸ்வரியைக் காப்பாற்றுவதற்காகத்தான் நான் இந்த ஊருக்கு வந்தேனோ என்னவோ.
ராஜேஸ்வரியிடம் இந்த விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டும் என்றால் எங்க இருவருக்கும் கொஞ்சம் தனிமை வேண்டும். அந்த தனிமை இந்த வீட்டில் கிடைக்க வாய்ப்பு குறைவு. எப்போதும் யாராவது கூடவே இருந்தார்கள். அப்படியும் ஓரிருமுறை முயற்சி செய்து தோல்வியுற்றேன். நேரம் ஆக ஆக என் மனதில் கலவரம் அதிகரித்தது.
மாலையாகிவிட்டது. இரவு சமையலையும் ராஜேஸ்வரி முடித்துவிட்டாள்.
அத்தை அர்ச்சனை கூடையில் தேங்காய், வாழைப்பழம், கற்பூரம் எல்லாம் வைத்துவிட்டு ராஜியிடம் தந்தாள். “கோவிலுக்கு போய் அர்ச்சனை செய்து விட்டு வா ராஜி” என்றாள்.
ராஜேஸ்வரி அவசர அவசரமாக வேலைகளை முடித்துவிட்டு புடவையை மாற்றிக் கொண்டு கிளம்ப முற்பட்டாள்.
“இரு ராஜி! நானும் வருகிறேன்” என்று உடைகளை மாற்றிக் கொண்டு ராஜியுடன் கிளம்பி§ன்ன.
வெளியில் நன்றாக இருட்டிவிட்டது. தெருவில் மின்விளக்குகள் எரியத் தொடங்கிவிட்டன. ராஜேஸ்வரியும், நானும் மௌனமாக அவரவர்களின் யோசனையில் ஆழ்ந்தபடி கோவிலை அடைந்தோம். வேணுகோபால சுவாமி கோவில். கிருஷ்ணன் அறையிலிருந்து ஜன்னல் வழியாக தென்படும் ஆலய கோபுரம் இதனுடையதுதான். கோவிலைச் சுற்றிலும் உயரமான மதில் சுவர் இருந்தது. அதில் சிவப்பும் வெளுப்புமாக பட்டையாக வர்ணம் தீட்டப் பட்டிருந்தது. உள்ளே இடது பக்கம் படிகட்டுடன் குளமும். வலது பக்கம் கல்மண்டபமும், நடுவில் கருவறையும் இருந்தன. நானும், ராஜேஸ்வரியும் குளத்தில் கைகால்களை அலம்பிக் கொண்டு உள்ளே போனோம். மாலை வேளை தீபாராதனை நடந்து கொண்டிருந்தது.
அர்ச்சகர் ராஜேஸ்வரி கொடுத்த கூடையை வாங்கிக் கொண்டு தேங்காயை உடைத்து கற்பூர ஆரத்தி காண்பித்தார். ராஜேஸ்வரியும், நானும் கற்பூரத்தை சிரத்தையுடன் கண்ணில் ஒற்றிக் கொண்டோம். ராஜேஸ்வரி தட்டில் காசு போட்டுவிட்டு என்னையும் போடச் சொல்லி சில்லறையைக் கொடுத்தாள்.
“சீக்கிரமேவ கல்யாண பிராப்திரஸ்து… தீர்க சுமங்கலீபவ.. சுபுத்ர பௌத்ராபி விருத்திரஸ்து.” மந்திரங்களுடன் ஆசீர்வாதத்தையும் சேர்த்து சொல்லிவிட்டு குங்குமத்தையும், பூச்சரத்தையும் தந்தார் அர்ச்சகர்.
அவற்றைப் பெற்றுக்கொண்டு வெளியே வந்தோம். “கோவிலுக்கு வந்தால் கொஞ்ச நேரம் உட்கார்ந்து கொள்ளணும்” என்றாள் ராஜேஸ்வரி.
“அங்கே உட்காருவோமா?” என்றேன் மண்டபத்தை காட்டிக் கொண்டே.
“வா..போகலாம்” என்றாள். இருவரும் மண்டபத்தில் அமர்ந்துகொண்டோம். பௌர்ணமி கழிந்த இரண்டாவது நாள். நிலா வெளிச்சம் கோவில் பிரகாரத்தில் படர்ந்து கொண்டிருந்தது.
சுற்றிலும் பார்வையிட்டேன். உயரமாக இருந்த மதில்சுவர், நிலா வெளிசத்தில் மின்னிக் கொண்டிருந்த குளத்து நீர், நிர்மலமாக இருந்த சூழ்நிலை. கோவில் என்றால் இப்படித்தான் நிர்மலமாக, மனதிற்கு அமைதியைத் தருவதுபோல் இருக்க வேண்டும்.
பட்டணத்து கோவில்களில் இதுபோன்ற அமைதி கிடைக்காது. நீளமான வரிசைகள். அர்ச்சகர்களின் கைநீட்டல்கள், கூட்டமாக இருப்பதால் நகைநட்டுக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற பயம், நகருங்க… நகருங்க என்ற அதட்டல்கள். கண்குளிர சுவாமியைப் பார்க்கும் வாய்ப்பே இருக்காது. ஏதோ சினிமாவுக்கோ பொருட்காட்சிக்கோ போனதுபோல் எப்போடாப்பா வெளியே வருவோம் என்று தோன்றும்.
ராஜி எதுவும் பேசாமல் மௌனமாக இருப்பதைப் பார்த்துவிட்டு “ஏதாவது பேசு ராஜி” என்றேன்.
“என்ன பேசட்டும்? நீ ஏதாவது சொல்லு.”
“ஒரு விஷயம் கேட்கட்டுமா?”
“கேளு.”
“முந்தாநாள் உன்னை பெண் பார்க்க வந்தானே? அந்த மாப்பிள்ளையை உனக்குப் பிடிச்சிருக்கா?”
திடீரென்று வந்த கேள்விக்கு வியப்படைந்தவள் போல் ராஜி தலையைத் திருப்பி என் பக்கம் பார்த்தாள்.
“உண்மையைச் சொல்லு ராஜி. உன் அபிப்பிராயம் என்ன? அவனைச் சரியாக பார்த்தாயா?”
தலை குனிந்திருந்த ராஜி பார்த்தேன் என்பதுபோல் தலையை அசைத்தாள்.
“உனக்கு அவனைப் பிடிச்சிருக்கா?”
ராஜி பதில் சொல்லவில்லை. கூடையில் இருந்த பூக்களை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
“உனக்கு அவனைக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. என் ஊகம் சரிதானா? உன்னிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று காலை முதல் தவித்துக் கொண்டிருக்கிறேன். சொல்லு ராஜி! உன் மனதில் இருப்பதைத் தயங்காமல் சொல்லிவிடு.”
“தெரிந்துகொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்?” ராஜியின் குரல் வித்தியாசமாக ஒலித்தது.
“நீ அப்படி கேட்டால் என்னால் பதில்சொல்ல முடியாது. ஒரு சிநேகிதியாக உன் மனதில் இருப்பதைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். உன் எண்ணம் என்னவென்று தெரிந்துகொள்ள தவியாய் தவிக்கிறேன். மேலும் கேள்வி கேட்காமல் பதில் சொல்லு ராஜி!”
“என் அபிப்பிராயத்திற்கு என்ன மதிப்பு இருக்கு?”
“ஏன் அப்படி கேட்கிறாய்? திருமணம் செய்து கொள்ளப் போகிறவள் நீ. கழுத்தில் தாலி ஏறியது முதல் வாழ்நாள் முழுவதும் அவனுடன் குடித்தனம் செய்யப் போவது நீ. திருமணம் ஆன பிறகு வரும் கஷ்டநஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியவளும் நீதான். உன் அபிப்பிராயத்திற்கு மதிப்பு இல்லை என்றால் வேறு யாருடைய பேச்சுக்கு மதிப்பு இருக்கும்?” ஆவேசமாக கேட்டேன்
ராஜேஸ்வரியிடமிருந்து எந்த பதிலும் இல்லை. என் பேச்சு காதில் விழுந்தும் விழாதவள் போல் மௌனமாக இருந்தாள்.
“உங்க அண்ணன் உன்னிடம் கேட்காமல் இந்த வரனை முடிவு செய்தது ரொம்ப அநியாயம்.”
ராஜேஸ்வரி முறுவலுடன் என்னைப் பார்த்தாள். “அண்ணனைக் கண்டால் உனக்கு அவ்வளவு கோபம் வருவானேன்? அண்ணா என்னிடம் கேட்கவில்லை என்று யார் சொன்னது? என்னை கேட்ட பிறகுதான் முடிவு செய்தான்.”
“கேட்டானா? எப்போ?” பொய் என்பதுபோல் பார்த்தேன்.
“மதியம் ஆசாரிமாமா வந்தபோது காபி தயாரித்துக் கொண்டிருந்தேன. காபி டம்ளரை எடுத்துப் போவதற்காக சமையலறைக்குள் வந்தான் இல்லையா. அப்போ கேட்டான்.”
“நீ என்ன சொன்னாய்?”
“என்ன பதில் சொல்லப் போகிறேன்? என் நிலைமையில் இருக்கும் எந்தப் பெண்ணும் எந்தப் பதில் சொல்வாளோ அதைத்தான் சொன்னேன்.”
“எல்லாப் பெண்களையும் ஒன்றாகச் சேர்த்து பேசாதே. என்னைப் போன்ற பெண்ணாக இருந்தால் விருப்பம் இல்லை என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக சொல்லியிருப்பேன்.”
“உன் நிலைமை வேறு அண்ணி. வீட்டுக்கு ஒரே பெண் நீ. பணவசதி இருப்பவள். நீ எது சொன்னாலும் செல்லுபடி ஆகும். சாதாரண குடும்பத்தில் நாலு பேருடன் பிறந்தால் நிலைமை வேறு விதமாக இருக்கும். பிறந்து வளர்ந்த சூழ்நிலை குழந்தைகளின் சுபாவத்தை வழிவகுக்கும். என்னுடைய இடத்தில் நீ இருந்தால், குடும்பம் நலிந்துபோயய் பொருளாதா ரீதியான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி வந்தால், குறைந்த பட்சம் தன்னுடைய சுமையாவது இல்லாமல் போனால் நன்றாக இருக்கும் என்று அபிப்பிராயப்பட்டால் நீயும் இந்தப் பதிலைத்தான் சொல்லியிருப்பாயோ என்னவோ.”
“சுமையா? இந்த வீட்டுக்கு நீ ஒரு சுமையா? யாராவது கேட்டால் சிரிப்பார்கள். பெற்றவர்களுக்கு குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு இல்லையா?”
“இருக்கும். பெற்றோர்களுக்கு மட்டுமே அந்தப் பொறுப்பு இருக்கும். அண்ணனுக்கு, அதிலும் மாற்றான்தாய் வயிற்றில் பிறந்தவனுக்கு அந்தப் பொறுப்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் இனி கிளம்புவோமா?” மேற்கொண்டு அந்தப் பேச்சை நீடிக்க விரும்பாவள்போல் ராஜேஸ்வரி எழுந்து கொள்ளப் போனாள்.
நான் அவளை கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக மறுபடியும் உட்கார வைத்தேன். “மாற்றாந்தாய் வயிற்றில் பிறந்த அண்ணன் என்கிறாயே. உங்க அண்ணன்தான் உன்னை உயிருக்கும் மேலாக நினைக்கிறானே.”
“இப்போ மட்டும் இல்லை என்று மறுத்தேனா? ஆனால் அவனுடைய நல்ல தனத்தை வாய்ப்பாக எடுத்துக் கொண்டு சுமக்க முடியாத பாரத்தை அவன் தலைமீது வைப்பது நியாயம் இல்லையே?”
என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ஏனோ ராஜேஸ்வரி தன் மனதில் இருப்பதைச் சொல்லாமல் பேச்சை மாற்றுகிறாள் என்று எனக்குத் தோன்றியது.

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்