முள்பாதை 20

This entry is part [part not set] of 31 in the series 20100312_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

ராஜேஸ்வரியை அன்றுதான் பெண்பார்க்க வரப் போகிறார்கள். அத்தை கேட்டுக் கொண்டபடி ஆசாரி மாமா கும்பகோணம் சென்று மாப்பிள்ளை வீட்டாரை அழைத்து வந்தார். ஆசாரி மாமாவுக்குத் தெரிந்தவர்கள் என்பதால் அன்று இரவு அவர்கள் வீட்டிலேயே தங்கிவிட்டார்கள். அடுத்த நாள் காலையில் ராகுகாலம், யமகண்டம் இருப்பதாகவும், மதியம் மூன்று மணிக்குமேல் நல்ல நேரம் இருப்பதால் அந்த நேரத்தில் பெண் பார்க்கவும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
முதல் நாள் இரவு அவர்கள் நேரம் கழித்து வந்ததால் கிருஷ்ணன் போய் அவர்களைச் சந்திக்க முடியவில்லை. காலை ஒன்பது மணிக்கு ஆசாரி மாமா வந்து கிருஷ்ணனை அழைத்துப் போவதற்காக வந்திருந்தார். கிருஷணன் உடற்பயிற்சி முடித்து, குளித்துவிட்டு பாலை அருந்திக் கொண்டிருந்தான்.
அத்தை, கிருஷணன், ஆசாரி மாமா மூன்று பெரும் சமையலறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நான் குளிப்பதற்காக கொல்லைப்புறம் வரப் போனவள் சமையலறையில் நடந்து கொண்டிருந்த உரையாடலைக் கேட்டு சட்டென்ற நின்று விட்டேன். அவர்கள் என்னைப் பற்றித்தான் பேசிக்கொள்கிறார்கள் என்று உணர்ந்து கொண்ட என் மனம் அதை முழுவதுமாக கேட்டுக் கொள் என்று ஆணையிட்டது.
“இருவரும் சமவயதில் இருப்பவர்கள். அவர்கள் வரும் போது உங்க அண்ணன் மகளை கர்ணம் மாமா வீட்டிற்கு அனுப்பி வைத்தால்…” தாழ்ந்த குரலில் ஆசாரி மாமா சொல்லிக்கொண்டிருந்தார்.
“எப்படிச் சொல்ல முடியும்? விவரம் தெரிந்த பெண். ஏதாவது நினைத்துக் கொள்வாளோ என்னவோ? நீங்க சொன்னதும் சரிதான். இந்த விஷயம் நேற்று இரவே என் மனதில் தோன்றியது.” அத்தையின் குரல் வருத்தத்துடன் ஒலித்தது.
“அம்மா! என்ன பேச்சு இது?” அதட்டுவதுபோல் சொன்னான் கிருஷ்ணன். பிறகு எந்த தடுமாற்றமும் இல்லாமல் அவன் குரல் கணீரென்று ஒலித்தது. “மாமா! மீனா எங்கேயும் போக மாட்டாள். இங்கேயே தான் இருப்பாள். அது மட்டுமே இல்லை. அவர்களுக்குக் காபி, டிபன் எல்லாம் அவள் கையாலேயே கொடுக்கச் சொல்வேன். பையன் ஸ்கூல் •பைனல்கூட பாஸ் செய்யவில்லை. சொத்து சுகம் எதுவும் இல்லை. இந்த நிலையில் அந்தப் பெண்தான் வேண்டும் என்று அவர்கள் மட்டும் எப்படி கேட்பார்கள்? ஆகட்டும். இதுவும் நல்லதற்காகத்தான். தகுதியை மீறிய ஆசைகளை வளர்த்துக் கொள்பவர்களாக இருந்தால் என் தங்கையைக் கொடுக்கவே மாட்டேன். தன் தகுதியை, வந்த வேலையை மறந்து போகிறவர்களைக் கண்டால் எனக்கு எரிச்சல். இதிலிருந்தே பையனுடைய உண்மை சொரூபமும் புரிந்து விடும்.”
“உங்க விருப்பம். இதற்குமேல் நான் என்ன சொல்ல முடியும் என்றார் ஆசாரி மாமா. ‘உங்க விருப்பம்’ என்ற வார்த்தையை அவர் உச்சரித்த விதத்திலேயே அவர் முகம் சுருங்கிவிட்டதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
“எத்தைனையோ நாட்களாக தேடிய பிறகு நம் சக்திக்கு ஏற்ற வரனாக வந்திருக்கு. அவர்கள் வரும் நேரத்தில்தானா அந்தப் பெண் இங்கே வரவேண்டும்? எல்லாம் நம் தலையெழுத்து.”
அத்தையின் குரலில் குடிக் கொண்டிருந்த வேதனை, கவலை என் மனதை அம்புபோல் தாக்கின. சட்டென்று அறைக்குத் திரும்பிவிட்டேன். அந்த அளவுக்குக்கூட இங்கிதம் இல்லாதவள் இல்லையே. நான் அவர்களுடைய பேச்சைக் கேட்டது நல்லதாகிவிட்டது. கிருஷ்ணனின் வெளிப்படையான பேச்சு என்னைக் கவர்ந்தது. அத்தையின் வேதனையும் புரிந்தது.
குளிப்பதற்காக மாற்று உடைகளை கையில் எடுத்துக் கொண்டு போன நான் அந்த முயற்சியை கைவிட்டு விட்டு உடைகளை மாற்றிக் கொண்டு கட்டில்மீது படுத்துக் கொண்டேன்.
“தன் தகுதியை, வந்த வேலையை மறந்து போகிறவர்களைக் கண்டால் எனக்கு எரிச்சல்.” கிருஷ்ணன் சொல்ல வார்த்தைகள் என் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. அவனுக்கு சில விஷயங்களில் திடமான அபிப்பிராயங்கள் இருந்தன. அவற்றை செயல்படுத்துவதிலும் தயக்கம் காட்ட மாட்டான். அம்மாவும் அப்படித்தான்.
ஆனால் அம்மாவுக்கும், கிருஷ்ணனுக்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. அம்மாவைப் போல் எதிராளியின் மீது தன் அபிப்பிராயத்தைத் திணிக்க மாட்டான். மற்றவர்களுக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களை தன் பார்வையில் அல்லாமல் அவர்களுடைய நல்லது கெட்டதை கருத்தில் கொண்டு யோசிப்பான்.
நாட்கள் செல்லச் செல்ல கிருஷ்ணனிடம் புதுப்புது விஷயங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருப்பது போல் தோன்றியது. என் கன்னி மனதில் என்னை அறியாமலேயே அவனைப்பற்றி இனிமையான கனவு ஒன்று உருவாகிக் கொண்டிருந்தது. அப்பாவுக்குப் பிறகு என் மனதிற்கு பிடித்த ஆண்மகன் இவன்தான் என்று பலமாகத் தோன்றியது.
கிருஷ்ணன் ஆசாரி மாமவுடன் அவருடைய வீட்டிற்குப் போகும்முன் எதற்காகவோ அறைக்குள் வந்தான். என்றும் இல்லாத விதமாக பகல் வேளையில் நான் கட்டில்மீது படுத்திருப்பதைப் பார்த்து அவன் கண்களில் வியப்பு வெளிப்பட்டது. படுத்திருந்த என்னைப் பார்த்ததும் தயக்கத்துடன் பின்வாங்கப் போனான்.
“பரவாயில்லை வரலாம்” என்றேன்.
கிருஷ்ணன் உள்ளே வந்து என் தலைமாட்டில் இருந்த அலமாரியிலிருந்து பர்ஸையும், கைக்குட்டையையும் எடுத்து ஜேபியில் வைத்துக் கொண்டே “படுத்திருக்கிறாயே ஏன்?” என்றான்.
“தலையை வலிக்கிறது.” நெற்றிப்பொட்டை அழுத்திக் கொண்டே சொன்னேன்.
“எழுந்து குளித்துவிட்டு சூடாக காபியைச் சாப்பிடு. தலைவலி போய்விடும்” என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றுவிட்டான்.
நான் கட்டிலை விட்டு எழுந்து கொள்ளவே இல்லை. சாப்பாடு கூட வேண்டாமென்று மறுத்து விட்டேன். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஓருவேளை சாப்பிடவில்லை என்றாலும், அதிகமாக யோசித்தாலும் என் முகம் வாடிப்போய் நோய் வாய் பட்டவள் போல் மாறிவிடும் என்று எனக்குத் தெரியும்.
மதியம் ஆகிவிட்டது. அத்தை சமையலறையில் மாப்பிள்ளை வீட்டாருக்காக ரவா கேசரி, பஜ்ஜி தயாரிப்பதில் மும்முரமாக இருந்தாள். உதவி செய்வதற்காக மங்கம்மா வந்திருந்தாள்.
நான் ராஜிக்கு அலங்காரம் செய்வதில் மூழ்கிவிட்டேன். லூஸாக ஒற்றைப் பின்னலைப் பேட்டுவிட்டு, ஒரு பக்கமாக ரோஜாவை வைத்தேன். காதுக்கு என்னுடைய முத்து ஜிமிக்கியும், கழுத்தில் இரட்டை அன்னப் பறவைகள் கொண் பதக்கத்துடன் முத்து மாலையும் அணிவித்தேன். வலது கையில் முத்து வளையலும், இடது கையில் என்னுடைய ரிஸ்ட் வாட்சையும் அணிவித்தேன்.
விலை உயர்ந்த சில்க் புடவையில், அதற்கு ஏற்ற பிளவுசுடன் ராஜேஸ்வரி அப்சரஸை போல் காட்சி தந்தாள். வரப்போகிறவன் யாரோ உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான். ராஜேஸ்வரி கண்ணுக்கு லட்சணமாக இருக்கிறாள் என்பதோடு நிதானமான குணம் கொண்டவள். மனைவியாக வரப் போகும் பெண்ணிடம் ஆண்கள் எதிர்பார்க்கும் பண்பும், பணிவும் நிறைந்தவள்.
கிருஷ்ணன் போய் மாப்பள்ளை வீட்டாரை அழைத்துக் கொண்டு வந்தான். அவன் கிளம்பியபோது ராஜேஸ்வரி முகம் அலம்பி பொட்டையும் மையும் வைத்திருந்தாளே தவிர மற்ற அலங்கராம் எதுவும் தொடங்கியிருக்கவில்லை.
என் கையால் ரானேஸ்வரியை அலங்கரித்து முடித்தப் பிறகு அத்தையை, மங்கம்மாவை அழைத்து வந்து காண்பித்தேன். ராஜேஸ்வரியைப் பார்த்த அத்தை திருப்தியுடன் தலையை அசைத்துவிட்டு உள்ளே போய்விட்டாள்.
மங்கம்மா இரு கைகளாலும் ராஜேஸ்வரியின் கன்னங்களை வழித்து விரல்களை முறித்து திருஷ்டியைக் கழித்தாள். “என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கு. லக்ஷ்மி தேவியைப் போல் இருக்கிறாள்” என்றாள்.
கிருஷ்ணன் வீட்டுக்கு வந்ததும் மாப்பிள்ளை வீட்டாரை ஹாலில் அமரச் செய்து தங்கையைப் பார்ப்பதற்கா அறைக்குள் வந்தான். “அலங்காரம் முடிந்து விட்டதா ராஜீ?”
பதில் சொல்வது போல் கட்டில்மீது அமர்ந்திருந்த ராஜேஸ்வரி எழுந்து நின்றுகொண்டாள்.
ஒரு வினாடி கிருஷ்ணனின் கண்கள் சுறுசுறுப்பாக ராஜேஸ்வரியை தலை முதல் கால் வரையில் பரிசீலித்தன. அந்தக் கண்களில் மகிழ்ச்சியும், வியப்பும் வெளிப்பட்டதை நான் கவனிக்காமல் இல்லை. ஆனால் உடனே நெற்றியைச் சுளித்தான். புருவங்கள் முடிச்சேற லேசான எரிச்சல் கலந்த குரலில் “இந்த அலங்காரம் எல்லாம் என்ன? இப்படிச் செய்து கொள்ளச் சொல்லி யார் உனக்குச் சொன்னது?” என்றான்.
ராஜேஸ்வரி இடி விழுந்தவள்போல் பார்த்தாள். நான் திகைத்துப் போய்விட்டேன்.
“அந்த ஜிமிக்கி, வளையல், செயின் எல்லாவற்றையும் எடுத்துவிடு. புடவையை மாற்றிக் கொள்” என்றான்.
அவன் வாயிலிருந்து பாராட்டு மொழிகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த எனக்கு திடீரென்று அவன் அப்படி எரிந்து விழுந்ததும் என்ன பேசுவதென்று புரியவில்லை.
அதற்குள் அத்தை அறைக்குள் வந்தாள். பின்னால் மங்கம்மாவும் வந்தாள்.
கிருஷ்ணன் விருட்டென்று திரும்பி அத்தையின் பக்கம் கோபமாக பார்த்தான். “என்னம்மா இது? இந்த அலங்கரத்தை எல்லாம் நீங்க பார்த்தீங்களா? இந்தச் சின்ன விஷயத்தைக்கூட நான் உங்களுக்கு சொல்லணுமா? அவளை எப்படி அலங்காரம் செய்யணும் என்றுகூட உங்களுக்குத் தெரியாதா?”
அத்தை வாயடைத்துப் போனவளாக நின்றுவிட்டாள். ஆனால் மங்கம்மா சும்மா இருக்கவில்லை. “ஏண்டாப்பா? ராஜீக்கு என்ன வந்தது? சாட்சாத் லக்ஷ்மி தேவியைப் போல் இருக்கிறாள்” என்றாள்.
“இருப்பாள் இருப்பாள். வரதட்சணை கொடுப்பதற்கு சக்தியில்லை என்று சொல்லிக் கொண்டே பெண்ணை இத்தனை நகைநட்டுடன் மாப்பிள்ளை வீட்டாருக்குக் காண்பித்தால் அது சரியாக இருக்குமா? அதோடு இவ்வளவு அலங்காரம் எதுக்கு? இது அழகுப் போட்டியா என்ன? வீட்டில் பெண் எப்படி இருப்பாளோ அப்படியே காட்ட வேண்டுமே தவிர. ராஜி! யாருக்கோ மூளை இல்லை என்றால் உனக்கு எங்கே போச்சு?” என்று சொல்லிக் கொண்டே வேகமாக துணிமணிகள் வைத்திருந்த பெட்டியிலிருந்து ராஜிக்கு இருந்த ஒரே ஒரு நல்ல புடவையை எடுத்து வந்து கட்டில் மீது வீசினான். “ஐந்து நிமிடங்களில் தயாராகணும். அந்த நகைகளை எடுத்துவிடு. கைக்கு உன் சிவப்பு கண்ணாடி வளையல்களை போட்டுக் கொள். நான் மறுபடியும் இந்த அறைக்கு வரும்போது நீ ரெடியாக இருக்கணும்” என்று ஆணையிட்டான். “அம்மா! வாங்க. இதற்குள் அவர்களுக்கு காபி டிபன் கொடுத்து விடுவோம்” என்றான்.
அத்தையும், மங்கமம்மாவும் கிருஷ்ணனின் பின்னாலேயே சென்று விட்டார்கள். நான் ராஜேஸ்வரியின் பக்கம் பார்த்தேன். ராஜி அழுகையை அடக்கிக் கொள்வது போல் கீழ் உதட்டை பற்களால் அழுத்தி மளமளவென்று நகைகளைக் கழற்றி வைத்தாள். நான் கட்டிவிட்ட புடவையை, சாட்டின் உள் பாவாடையை மாற்றிக் கொண்டு, கட்டில்மீது கிருஷ்ணன் வீசிவிட்டுப் போன புடவையை அணிந்து கொண்டாள். கூந்தலில் சூடியிருந்த ரோஜாப்பூவை பிடுங்கி கட்டில்மீது போட்டாள்.
நேரம் இல்லாமல் போய்விட்டது. இல்லாவிட்டால் பின்னலைகூட அவிழ்த்துப் அருக்காணிப் பின்னலைப் போல் இறுக்கிப் பின்னியிருப்பாள். தோற்றுப் போனாற்போல் இருந்தது எனக்கு. இந்த அவமானம் ராஜேஸ்வரிக்கா இல்லை எனக்கா என்று தோன்றியது. சோர்வுடன் கட்டில் விளிம்பில் அமர்ந்துகொண்டு நகங்களைக் கடிக்கத் தொடங்கினேன்.
முன் அறையில் கிருஷ்ணன் மாப்பிள்ளை வீட்டாரை பலமாக உபசரித்துக் கொண்டிருந்தான். “குடிக்க தண்ணீர் வேண்டுமா? இன்னும் கொஞ்சம் கேசரி சாப்பிடுங்கள். பஜ்ஜி கொண்டு வரச் சொல்லட்டுமா?” என்று பணிவு கலந்த குரலில் வற்புறுத்திக் கொண்டிருந்தான்.
சற்றுமுன் கோபமாக பேசி வாயடைக்கச் செய்த குரலுக்கும் இந்தக் குரலுக்கும் கொஞ்சம்கூட ஒற்றுமையே இல்லை.
கிருஷ்ணனைப் பற்றித் தெரியாதவர்கள் முதலில் நான் நினைத்தது போலவே எவ்வளவு மென்மையான சுபாவம் கொண்டவன் என்று தவறாக நினைக்க வாய்ப்பு இருக்கிறது.
சொன்னது போலவே ஐந்து நிமிடங்களில் கிருஷ்ணன் மறுபடியும் வந்தான். ராஜி பயந்துகொண்டே அண்ணன் பக்கம் பார்த்தாள்.
இந்த முறை கிருஷ்ணனின் கண்களில் திருப்தி வெளிப்பட்டது. அருகில் வந்த ராஜேஸ்வரியின் முகத்தை லேசாக உயர்த்தி “இங்கே பாரு. இந்த பக்கம் மை கொஞ்சம் அதிகமாகிவிட்டது” என்று கைக்குட்டையால் துடைத்தான். பவுடரை லேசாகத் தடவி மைக்கறை தெரியாமல் சரி செய்தான்.
பிறகு சிரித்துக் கொண்டே தங்கையின் தலையில் லேசாக குட்டிவிட்டு “எதுக்கும் பயப்படத் தேவையில்லை. இயல்பாக இரு. அவர்கள் உன்னை கடித்து விழுங்கவோ, தூக்கிக் கொண்டு போகவோ வரவில்லை. அவர்கள் ஏதாவது கேட்டால் உனக்குத் தெரிந்த விதமாக பதில் சொல்லு. தடுமாறினாய் என்றால் உனக்கு திக்குவாய் இருக்கு என்று திரும்பிப் போய் விடுவார்கள். உனக்கு பயமாக இருந்தால் என்னையோ அம்மாவையோ பாரு. புரிந்ததா?” என்றான்.
ராஜேஸ்வரி சிவந்து போன முகத்துடன் தலை குனிந்தபடி சரி என்பதுபோல் தலையை அசைத்தாள்.
கிருஷணன் திடீரென்று என் பக்கம் திரும்பி “இதென்ன தலையைக்கூட பின்னிக்கொள்ளாமல் இப்படி உட்கார்ந்திருக்கிறாயே?” என்று கேட்டான்.
“எனக்கு தலைவலி இன்னும் போகவில்லை” என்றேன் கோபத்துடன்.
கிருஷ்ணன் ராஜேஸ்வரியை உடன் அழைத்துக் கொண்டு போய்விட்டான். மாப்பிள்ளை வீட்டார் வருகிறாகள் என்று ஹாலுக்கும் கிருஷ்ணனின் அறைக்கும் நடுவில் மறைப்பு வேண்டும் என்பதற்காக யார் வீட்டிலிருந்தோ திரைச்சீலையைக் கொண்டு வந்து மாட்டி விட்டார்கள். அது எந்த திரேதா யுகத்தைச் சேர்ந்ததோ, ரொம்ப நைந்துபோய் கிழியும் நிலையில் இருந்தது. வலதுப்பக்கம் ஒரு இடத்தில் எலி வேறு கடித்து விட்டது. திரைச்சீலை முழுவதும் ஆழமான வண்ணத்தில் டிசைன் இருந்ததால் கூர்ந்து பார்த்தால் தவிர அங்கே கிழிசல் இருப்பது தெரியாது.
ராஜேஸ்வரி போன பிறகு நான் திரைச்சீலை அருகில் சென்று அந்த ஓட்டை வழியாக பார்க்கத் தொடங்கினேன். திரைச்சீலை தரையோடு தரையாக புரளுவதால் நானோ, என் பாதங்களோ அந்தப் பக்கம் இருப்பவர்களுக்குத் தெரிந்துவிடுமோ என்று பயப்பட வேண்டியது இல்லை.
முன் அறையில் கட்டில் போட்டிருக்கும் இடத்தில் அதை எடுத்துவிட்டு மூன்று மர நாற்காலிகளைப் போட்டிருந்தார்கள். நாற்காலிக்குப் பக்கத்தில் சின்ன ஸ்டூல் இருந்தது. அதற்கு எதிரே, அறையின் நடுவில் பாய் ஒன்று விரிக்கப் பட்டிருந்தது. அதன்மீது ராஜேஸ்வரியைத் தவிர வயதான பெண்மணியும், மூன்று குமரி பெண்களும் அமர்ந்திருந்தார்கள். முதல் நாற்காலியில், ராஜேஸ்வரிக்கு நேர் எதிரில் உட்கார்ந்து இருப்பவன்தான் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும். சுமார் இருபத்தைந்து வயது இருக்கக்கூடும். அவனுக்குப் பக்கத்தில் அவனுடைய சாயலில் இருந்த பெரியவரும், மூன்றாவது நாற்காலியில் ஆசாரி மாமாவும் அமர்ந்திருந்தார்கள்.
கிருஷ்ணன் ஒரு பக்கமாக சுவற்றில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தான். அவனிடம் ஒரு விதமான மிடுக்கும், பெரிய மனிதன் என்ற தோரணையும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.
பெண்கள் எல்லோரும் ராஜேஸ்வரியை ஏதோ பொருட்காட்சியில் வைக்கப்பட்ட பொம்மையைப் போல் தலைமுதல் கால் வரை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நானும் மாப்பிள்ளையை கவனமாக, கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அவனைப்பற்றி ஒரே வார்த்தையில் சொல்லணும் என்றால் மிருகக்காட்சி சாலையில் இருக்கும் வினோதமான பிராணியைப்போல் இருந்தான். மாநிறத்திற்கும் சற்று குறைவுதான். புருவங்கள் அடர்த்தியாக புதர்போல் இருந்தன.
மூக்கு பலமாக, நீளமாக சற்று பெரிய அளவில் இருந்தது. பார்த்ததுமே முதலில் மூக்குதான் கண்ணில் பட்டுக் கொண்டிருந்தது. கண்கள் சிறியதாக இருந்தன. சிகரெட் பழக்கம் இருக்கும் போலும். இதழ்கள் வெளியே கறுப்பாகவும் உள் பக்கம் சிவப்பாகவும் இருந்தன. ஒரு பக்கமாக வகிடு எடுத்து வேஸலைன் தடவி அழுத்தி வாரியிருப்பதால் தலைமுடி ஒருபக்கம் உயர்ந்தும் இன்னொரு பக்கம் சாதாரணமாகவும் இருந்தது. கறுப்பு நிறத்தில் டைட் பேண்டும், கோடுகள் போட்ட புஷ்ஷர்டும் அணிந்திருந்தான். ஷர்டில் மேல் இரண்டு பட்டன்களையும் போடாமல் விட்டிருந்தான். கால்களில் போட்டிருந்த ஷ¤க்கள் புதுசு போலும். எல்லோருக்கும் தென்படுவதுபோல் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான்.
அவன் உட்கார்ந்திருந்த விதமே எனக்குப் பிடிக்கவில்லை. ஆண்களின் தனித்தன்மை அவர்கள் உட்காரும் விதத்தில், பேசும் முறையில் வெளிப்படும் என்பது என்னுடைய எண்ணம். மாப்பிள்ளையைப் பார்த்ததும் நெற்றியைச் சுளித்துவிட்டு, சட்டெரிப்பதுபோல் பார்வையை வீசிவிட்டு விருட்டென்று எழுந்து உள்ளே வராமல், அங்கேயே அமர்ந்திருந்த ராஜேஸ்வரியின் பொறுமையைக் கண்டு எனக்கு வியப்பாக இருந்தது.
ராஜேஸ்வரியின் சுற்றிலும் அமர்ந்திருந்த பெண்கள் தங்கள் கேள்விகளால் அவளைக் கொலை செய்யாத குறையாக அறுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார்கள்.
“சமைக்கத் தெரியுமா?” வயதான பெண்மணி ஒருத்தி கேட்டாள். ராஜேஸ்வரி நிமிர்ந்து பார்க்காமலேயே வரும் என்பதுபோல் தலையை அசைத்தாள்.
வாசற்படி அருகில் நின்றிருந்த மங்கம்மா பிடித்துக் கொண்டுவிட்டாள். “சமையல் பற்றியா கேட்கிறீங்க. ராஜி முருங்கைகாய் சாம்பார் செய்தாலும், கத்தரிக்காய் வதக்கல் செய்தாலும் அமிருதமாக இருக்கும்.”
“சமையல் பெரிய விஷயமா என்ன? பெண்ணாகப் பிறந்த பிறகு சமையல் செய்துதானே ஆகணும். தையல், பின்னல் எதாவது…” இந்த முறை கேள்வி கேட்பது தன்னுடைய பங்கு என்பதுபோல் சிவப்புநிறப் புடவையை அணிந்திருந்த இளம்பெண் கேட்டாள்.
ராஜேஸ்வரி பதில் சொல்லவில்லை. மறுபடியும் மங்கம்மா பதில் சொன்னாள். “தையல் பற்றியா கேட்டீங்க? அவளுக்க வராத தையலே இல்லை. பத்திரிகையில் பார்த்தால் உடனே போட்டு விடுவாள். ஊரில் இருக்கும் பெண்பிள்ளைகள் எல்லோரும் மதிய வேளையில் மூச்சுகூட விட முடியாதபடி அவளைச் சூழ்ந்து கொண்டு விடுவார்கள்.”
“தைத்தது ஏதாவது இருக்கா?”
“பார்ப்பதற்கு உங்களுக்குப் பொறுமை இருக்கணுமே ஒழிய பெட்டி நிறைய இருக்கு.” மங்கம்மா உள்ளே போய் அத்தையிடம் கேட்டு ராஜேஸ்வரி எம்பிராயிடரி செய்திருந்த தலையணை உரை, க்ரோஷா பின்னல் போட்ட விரிப்பை கொண்டு வந்தாள். அவர்கள் அவற்றை மேலும் கீழுமாக பரிசீலித்து விட்டு பக்கத்தில் வைத்து விட்டார்கள்.
“பாடத் தெரியுமா? எங்க அண்ணாவுக்கு பாட்டு என்றால் ரொம்பப் பிடிக்கும்.” அவனுடைய கடைசி தங்கை போலும். கீச்சுக்குரலில் உற்சாகத்துடன் முன்னால் குனிந்தபடி கேட்டாள்.
மாப்பிள்ளை பையன் குறுகுறுவென்று நகைத்தான்.
வராது என்பதுபோல் ராஜேஸ்வரி தலையை அசைத்தாள். மங்கம்மா உரிமையுடன் ராஜேஸ்வரியைக் கடிந்து கொண்டாள். “பாடத் தெரியாமல் இருப்பதாவது? இப்போ வெட்கப்பட்டால் இனி எப்போ பாடப் போகிறாய்? நல்ல பாட்டு ஒன்றை பாடு” என்று சொன்வள் அவர்கள் பக்கம் திரும்பி “நன்றாகப் பாடுவாள். பாட்டு சொல்லிக் கொடுக்கவில்லையே தவிர சாட்சாத் சரஸ்வதிதான்” என்றாள்.
“சினிமா பாட்டு ஏதாவது பாடச் சொல்லுங்கள்.” நேயர் விருப்பம் போல் மாப்பிள்ளை சொன்னான்.
மங்கம்மா வற்புறுத்திய பிறகு, அத்தையும், கிருஷ்ணனும் “ஏதாவது பாட்டு பாடு” என்று சொன்னபிறகு அடிக்கடி ரேடியோவில் ஒலிக்கும் பாரதியாரின் பாட்டு ஒன்றை பாடினாள்.
பொறுத்துக் கொள்ள முடியாமல் நெற்றியில் கையால் அடித்துக் கொண்டேன். ‘அடி பைத்தியக்காரி! எழுந்து உள்ளே வந்து விடாமல் இன்னும் அங்கே உட்கார்ந்து கொண்டு பாட்டு வேறு பாடுகிறாயா? உன் பாட்டை கேட்கும் தகுதி அவர்களுக்கு இருக்கிறதா என்ன?’ என்னால் ஆவேசத்தை அடக்கிக் கொள்ள முடியவில்லை. ராஜேஸ்வரியின் குரல் அலை அலையாக, மதுரமாக காதில் தேன் வந்து பாய்வது போல் ஒலித்துக் கொண்டிருக்கையில் உலகத்தையே மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது போய் அந்த பட்டிக்காட்டு மாப்பிள்ளை தலையை உயர்த்தி மேற்கூரையை, திரைச்சீலையை பரிசீலித்துக் கொண்டு தேமே என்று உட்கார்ந்திருந்தான். பாட்டு முடிந்துவிட்டது.
“நீ ஏதாவது கேளு தம்பீ” என்றார் ஆசாரி மாமா. உச்சி குளிர்ந்து போன நிலையில் அந்த பட்டிக்காட்டு மாப்பிள்ளை கால்களை தரையில் அழுத்தமாக பதித்து, நாற்காலியில் பின்னால் சாய்ந்து கொண்டு, உடலை விரைப்பாக வைத்தபடி “உன் பெயர் என்ன?” என்று கேட்டான்.
அதற்குள் ஆசாரி மாமா கிருஷ்ணனை அருகில் அழைத்து காதில் ஏதோ சொன்னார். கிருஷ்ணன் நான் இருந்த அறையை நோக்கி வருவதை பார்த்துவிட்டு ஒரே எட்டில் கட்டிலை நெருங்கி படுத்துக் கொண்டேன். தலைவலி தாங்க முடியாதவள்போல் நெற்றியை அழுத்திக்கொண்டிருந்தேன்.
உள்ளே வந்த கிருஷ்ணன் என் தலை மாட்டில் இருந்த அலமாரியிலிருந்து ரசிக்லால் பாக்கை எடுத்துக் கொண்டு போய்விட்டான். நான் மறுபடியும் திரைச்சீலையின் அருகில் செல்லவில்லை. பெண் பார்க்கம் படலம் முடிந்து விட்டது போலும்.
“பெண்ணை இனி உள்ளே அழைத்துப் போகலாம்.” ஆசாரி மாமாவின் குரல் ஒலித்தது.
ராஜேஸ்வரியுடன் மற்ற பெண்களும் வந்திருக்க வேண்டும். மங்கம்மாவின் குரல் கணீரென்று ஒலித்துக் கொண்டிருந்தது.
“இந்த செடி கொடியெல்லாம் எங்க ராஜி நட்டதுதான். அவளுக்கு வராத வேலை எதுவுமே இல்லை. சகலாகலாவல்லி.”
கிருஷ்ணன் சிரத்தையுடன் பராமரித்து வரும் செடி கொடிகளை ராஜேஸ்வரியின் கைவண்ணத்திற்கு எடுத்துக் காட்டாக மங்கம்மா அளந்து கொண்டிருந்தாள். அதைக் கேட்டபோது எனக்கு சிரிப்புதான் வந்தது. திருமணத்திற்கு முன் எல்லா வேலைகளையும் கற்று இருக்க வேண்டுமா? திருமணம் ஆனபிறகு தெரிந்து கொண்டால் போததா? இவர்களுடைய கேள்வி, பதில்கள் எனக்கு வேடிக்கையாக, வித்தியாசமாக இருந்தன.
வந்தவர்கள் கிளம்புவதற்கு அறிகுறியாக விடை பெற்றுக் கொண்டிருந்தார்கள். அவசர வேலை இருப்பதால் தன்னால் அவர்களை வழியனுப்ப வரமுடியாமல் போனதற்கு ஆசாரி மாமா மன்னிப்புகேட்டுக் கொண்டார்.
“பரவாயில்லை. அதான் பையன் வருகிறானே.” மாப்பிள்ளையின் தந்தை சொன்னார்.
“நாளை மறுநாள் கும்பகோணம் வரும்போது தங்களைச் சந்திக்கிறேன்.”
“அப்படியே ஆகட்டும்.” சம்மதம் தெரிவித்தார். பெண்டுகளும் விடைபெற்றுக் கொண்டார்கள்.
யோசித்துப் பார்த்தேன். எனக்கும் இதேபோல் சாரதியுடன் பெண்பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆனால் அதற்கும் இதற்கும் கொஞ்சம்கூட ஒற்றுமையே இல்லை.
அம்மா அன்று ரொம்ப சிரத்தை எடுத்துக் கொண்டு பதுமையைப் போல் என்னை அலங்கரித்தாள்.
இங்கே கிருஷ்ணன் ராஜேஸ்வரியை எந்த விதமான ஒப்பனையும் இல்லாமல் வீட்டில் எப்படி இருப்பாளோ அதேபோல் காண்பித்தான்.
சாரதிக்கு என்னைப் பிடித்து விட்டது உண்மைதான். ஆனால் யோசித்துப் பார்த்தால் இப்போ வேறுவிதமாக தோன்றுகிறது. சாரதிக்குப் பிடித்திருந்தது என்னையா இல்லை அம்மா எனக்குச் செய்திருந்த அலங்கரத்தையா?
கண்களை மூடி யோசித்துக் கொண்டிருந்தவள் அறைக்குள் யாரோ வந்த சத்தம் கேட்டு கண்களைத் திறந்து பார்த்தேன்.
கிருஷணன் உள்ளே வந்தான். ஒரு வினாடி எங்கள் இருவரின் கண்கள் சந்தித்துவிட்டு விடுபட்டு விட்டன. நான் மறுபடியும் கண்களை மூடிக் கொண்டேன். காலையிலிருந்து சாப்பிடாததால் அந்த நிமிடம் எனக்கு உண்மையிலேயே சோர்வாக இருந்தது.
அலமாரியிலிருந்து எதையோ எடுத்துக் கொண்டு கிளம்பப்போன கிருஷ்ணன் கட்டில் அருகில் நின்று “மீனா!” என்று அழைத்தான். நான் பதில் பேசவில்லை.
“தலைவலி இன்னும் குறையவில்லையா?”
இல்லை என்பதுபோல் தலையை அசைத்தேன்.
கிருஷ்ணன் திடீரென்று நான் கனவிலும் எதிர்பாராதவிதமாக கையை நீட்டி என் நெற்றியின் மீது பதித்து, “ஜுரம் இருக்கா?” என்று கேட்டான்.
அவன் தொட்டதும் என் உடலில் மின்சாரம் பாய்ந்தாற்போல் இருந்தது. சட்டென்று கண்களைத் திறந்தேன்.
“ஜுரம் இல்லை. வெறும் தலைவலியாகத்தான் இருக்கும். அவர்களை வழியனுப்பிவிட்டு வரும்போது சாரிடான் வாங்கி வருகிறேன். அதைப் பேட்டுக் கொண்டு சூடாக காபி சாப்பிட்டால் குறைந்து விடும்.” கையை எடுத்துக் கொண்டே சொன்னான்.
“ஏன்? உன்னிடம்தான் பலவிதமாண மருந்துகள் இருக்கே?” என்றேன் பழிப்பதுபோல்.
“உன்னைப் போன்ற பிடிவாதக்காரர்களுக்கு அவைப் பயன்படாது” என்றான் சிரித்துக் கொண்டே.
ஒரு நிமிடம் அவன் மலர்ந்த முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தேன். அவனும் கண்ணிமைக்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நிமிடம் கழித்து தேறிக் கொண்டவன் போல் “அனாவசியமாக பட்டினிக் கிடந்தாய். பாரு… முகம் எப்படி வாடிவிட்டதோ. அம்மாவிடம் சொல்லிவிட்டுப் போகிறேன். சீக்கிரமாக சமைத்து விடுவாள். சாப்பிட்டுவிடு. தேவைப்பட்டால் மாத்திரையை இரவு படுக்கப் போகும் முன் போட்டுக் கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டு என்னிடமிருந்து வேறு எந்த பேச்சையும் கேட்க விரும்பாதவன் போல் விருட்டென்று திரும்பி வெளியேறி விட்டான்.
அவன் போன பிறகும் நான் ரொம்ப நேரம் அந்த வாசலையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஏனோ தெரியவில்லை. என் மனம் முழுவதும் இனிமையான, சந்தோஷமான உணர்வு ஏதோ பரவியது.

(தொடரும்)

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்