பாசத்திற்காக ஓர் ஏற்பாடு

This entry is part [part not set] of 35 in the series 20100305_Issue

முனிஸ்வரன், மலேசியா


இதோ வருகிறேன் வருகிறேன் என்று உறுத்திக்கொண்டிருந்த அழுகை குபுக்கென்று
குதித்து வாய் வாயிலாக வந்துவிட்டது ஓவென்ற ஓசையோடு. அப்பாவைப் பார்க்கப்
பார்க்க எனக்கு மிரட்சியாக இருந்தது. டோமிக்குப் போட்டச் சாப்பாட்டை
விளையாட்டுக்குப் பிடுங்குவதுபோல் செய்தாலும் உர்ர்ர்ரென்று உறுமி விகார
வெறியுடன் முகத்தைக் காட்டி பயமுறுத்துமே, அது மாதிரி இருந்தது அப்பாவின்
முகம். சின்ன வித்தியாசம்தான். டோமிக்கு மீசை மட்டும் இருக்கிறது;
அப்பாவுக்கு மீசையோடு கொஞ்சம் குறுந்தாடியும் இருந்தது.

அம்மா மட்டும் லேசுபட்டவங்களா? அவரும் தனது சக்தியையெல்லாம் ஒன்று
திரட்டி கோதாவில் இறங்கியிருந்தார். எப்போதுமே அப்பா கத்தினால்
அழுதுகொண்டே ஓடி அம்மாவின் மடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டுவிடுவேன்
நிலைமை சீராகிற வரை. இன்று அம்மாவுக்கும் அந்த விகாரத் தோற்றம்
வந்துவிட்டதே; நான் எங்கு போய் சாந்தி தேட என்று தெரிந்தபாடில்லை.
இருவருக்கும் தூரமான, எனக்குப் பாதுகாப்பு என்று உறுதிசெய்துகொண்ட வீட்டு
வாசலிலேயே நின்றுகொண்டேன். சண்டை முடிந்தால் உள்ளே வர; அல்லது சண்டை
முற்றினால் வெளியே ஓட.

சிவன் சாமி மாதிரி வெறியோடு ஆடினார் அப்பா. பார்வதி சாமி மாதிரி
கண்களையெல்லாம் உருட்டி உருட்டி வாயைப் பிளந்தார் அம்மா. அந்தக்
காட்சிகள் மட்டுமே எனக்கு ஆயிரம் சேதிகள் சொல்லின. இதயெல்லாம் ஏதோ பழைய
சாமி படத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால், அவர்கள் வீசிக்கொண்ட
வார்த்தைகள் என் காதுகளுக்கு விளங்கினாலும் மூளைக்கு விளங்கமாட்டேன்
என்கின்றன.

“நீங்க இப்பிடியே பண்ணிகிட்டு இருந்தா அப்பறம் நானும் புனிதாவும்
சங்கீதாவும் ஆத்துல குதிச்சி செத்துப்போயிடுவோம்!” என்றார் அம்மா.
எனக்குக் கொஞ்ச நேரத்தில் திக் பிரமை பிடித்துவிட்டது. அடக் கடவுளே, நான்
என்ன செய்தேன் என்னையும் சேத்துக் கொண்டு தண்ணியில விழுந்து சாகிறேன்
என்கிறார்? முதலில் அம்மாவிடமிருந்துதான் தப்பிக்கவேண்டும் என்று
தோன்றியது. எங்கள் வீட்டுக்கு வருகிற சாலையோரத்தில் இருக்கிற அந்த
சாக்லெட் நிற ஆற்றையா அம்மா சொல்கிறார்? ஐய்யீ… அந்த ஆற்றில்தான் இந்த
தாமானில் இருக்கிற எல்லாரும் குப்பையைக் கொண்டுபோய் கொட்டுகிறார்கள்?
அதில் போய் விழுந்தால் நாற்றம் தாங்காமலேயே செத்துவிடுவேன் நான்!

அம்மா சொல்லி முடிப்பதற்குள் அப்பா அவசரகட்ட சவால் விடுவார். அது நான்
சில தடவை கண்டு பழகிப்போன சங்கதிதான். “பெருசா பேசுடி. ஆனா எதையும்
செஞ்சிடாத! செத்துத் தொலைஞ்சாலாச்சும் சனியன் விட்டுதுன்னு நிம்மதியா
இருப்பேன்…” அதுவரை எனக்கு விளங்கியது. அதற்கப்புறம் ஏதோ ஒரு வினோதமான
வார்த்தையைச் சொன்னார் அப்பா. அது என்னவென்று எனக்கு விளங்கவில்லை.
அநேகமாக ஏதோ கெட்ட வார்த்தையாக இருக்கலாம். நான் சங்கீதாவை நாயே பேயே
என்று திட்டினால் மட்டும் வந்து வாயிலேயே பட்டீரென்று அடிக்கிறார்.
இப்போது அவர் மட்டும் உயர் ரக கெட்ட வார்த்தைகள் பேசலாமா? இருக்கிற
பயத்தில் அந்த வார்த்தையை மூளை உள்வாங்காமல் தப்பிக்க விட்டிருந்தது.
என்ன வார்த்தையாக இருக்கும் அது… சரி, இனிமேல் எல்லாவற்றையும்
உன்னிப்பாய் கேட்கலாம்.

“ஆம்… என்ன என்னா இளிச்சவாயின்னு நெனச்சிங்களா? சொலபமா
செத்துப்போயிட்டு அந்த சிறுக்கியோட சந்தோசமா குடும்பம் நடத்த உட்டுறுவனா
நானு? அது தான் நடக்காது!”

சிறுக்கியா? அந்த சொல் எனது சொல்லகராதிக்கு அந்நியப்பட்ட சொல். ஒருவேளை
இதுவும்கூட கெட்ட வார்த்தையாக இருக்கலாம். அதை மறக்கக் கூடாது.
சங்கீதாவோடு சண்டை போடும்போது இந்த மாதிரி புதிய வார்த்தைகள்
தேவைப்படும். அப்போதுதான் எல்லா சண்டைகளிலும் நானே ஜெயிப்பேன்.

சுவற்றில் கழற்றி மாட்டப்பட்டு வைத்திருந்த நீட்டுக்கால்
சிலுவாரிலிருந்து வார்ப்பட்டையை ஆவேசமாக உறுவினார் அப்பா. எனக்குத்
தெரிந்துவிட்டது அம்மாவுக்குப் பயங்கர அடி இருக்கிறதென்று. அப்பா
வார்ப்பட்டையைப் பார்த்தாலே எனக்குப் பலவகை பயங்கள் வந்துவிடும். அடுத்த
நிமிடம் சாவு வந்து காவு கொண்டு போய்விடுவது போன்ற உணர்வுகள்தான் அவை.

அய்யோ, என்னுடைய தமிழ்மொழி பாட நூலை ஹாலிலேயே விட்டுவிட்டேனே. அது
மட்டும் சண்டையின் வேகத்தில் கிழிந்து போனால் அவ்வளவுதான். ஏற்கனவே போன
தடவை இரண்டாம் ஆண்டு மலாய் பாட நூல் கிழிந்ததுக்கு மேனகா டீச்சர்
ரோத்தான் அடி கொடுத்தது இன்னும் நினைவில் இருக்கிறது. சண்டைக்கு நடுவே
புகுந்து அந்தப் பாடநூலை எடுக்க ஓடினால் அப்புறம் கிழிவது நானாகத்தான்
இருக்கும். ஒருவேளை புத்தகம் பிழைக்கலாம். அதைக் காப்பாற்றப் போய்
அப்பாவிடம் அடிவாங்கிவிட்டு வருவதைவிட, கிழய வைத்துவிட்டு டீச்சரிடமே
அடிவாங்கிக்கொள்ளலாம். டீச்சர் எவ்வளவோ மேல்.

“உன் மூஞ்சையும் மொகறையும் பாத்தியாடி? இதெல்லாம் பாத்துக்குட்டு எத்தன
காலத்துக்குக் குப்பக் கொட்டுறது? சண்டாளி! சகிக்க முடியலடி ஒன்னப்
பாக்க!” என்றார் அப்பா. “இந்த மொகறையப் பாத்துப் பாத்துதான கட்டுனீங்க
என்ன? இப்ப மட்டும் என்னா வந்துச்சு?” என்று அம்மா பதில் கேள்வி கேட்க,
அடித்தாலும் புண்ணியமில்லை என்றோ அல்லது எனக்குப் புரியாத வேறு ஏதாவது
காரணத்துக்காகவோ ஓங்கிய வார்ப்பட்டையைக் கீழே இறக்கிப் பின் வீசி
எறிந்தார். எரியப்பட்ட வார்ப்பட்டை என்னை நோக்கிப் பாய்ந்து வர நான்
யோசிக்காமலேயே என் உடல் அந்த ‘சிறுக்கி’யிடமிருந்து தப்பித்துக்கொள்ள
நகர்ந்துவிட்டது. சிறுக்கி என்ற சொல் இங்கே பொருத்திப் பார்த்ததில்
சரியாகப்பட்டது எனக்கு.

அப்பா வேகமாக வாசலை நோக்கித்தான் வந்தார். அடுத்தது எனக்குத்தான் அடி
விழப்போகிறது என்று எனக்குத் தோன்றியது. எனக்கு மட்டும் ‘அல்ட்ராமேன்’
சக்தி இருந்திருந்தால் அப்பாவை மக்கு மக்கென்று குத்தித்
தள்ளியிருப்பேன். உண்மையில் அப்பாவைப் பார்க்க ‘அல்ட்ராமேன்’ படங்களில்
வரும் வினோத பூதங்களில் ஒன்றைப் போல்தான் இருந்தார். பார்த்தாலே
அறுவருப்பும் திகிலும் அப்பிக்கொண்டது மனசில்.

வாசலின் வலதுபக்க மூலையில் சப்பாத்துகளைக் கழற்றி வைக்கும் அலமாரி ஒன்று
இருந்தது. அதன் பக்கமாக நகர்ந்து சென்று பம்மிக்கொண்டேன்.
அதிர்ஷ்டமிருந்தால் அப்பாவின் கண்களில் சிக்காமல் போவேன்; முதுகு
வார்ப்பட்டையிடமிருந்து தப்பிக்கும்.

ஐயையோ, அப்பா இங்கேதான் வருகிறார். எனக்குக் கைகால்கள் வெடவெடவென
நடுங்கிகொண்டிருந்தன. கண்களை பயம் தெளித்த கண்ணீர் பெருகி விழித்திரையை
மறைத்துக்கொண்டன. பற்களை இருக்கமாகக் கடித்துக்கொண்டேன். எந்த நேரமும்
அடி விழலாம். முன்கூட்டியே மூச்சை டம் பிடித்துக்கொள்வதுதான் நல்ல
முற்போக்குச் சிந்தனை.

நல்ல வேளை. அப்பா என்னை முறைத்துப் பார்த்தாரே ஒழிய என் கிட்ட கூட
வரவில்லை. சப்பாத்தை மட்டும் எடுத்துப் போட்டுக்கொண்டு மோட்டாரில் ஏறி
சொய்ங் என்று கிளம்பிவிட்டார். சே, வெளியே போக சப்பாத்து போட்டுத்தானே
ஆகவேண்டும்? அதை எடுக்கத்தான் இங்கே வந்திருக்கிறார். எது எப்படியோ,
இன்றைக்குத் தப்பித்துவிட்டேன்.

அப்பா வீட்டில் இல்லாத நேரம்தான் எனது சுதந்திர காலம். ஓடிச் சென்று
வாசல் பக்கமாக விழுந்த அந்த வார்ப்பட்டையை மிதிமிதியென்று மிதித்தேன்.
பிறகு அதை கையில் எடுத்துக்கொண்டு பக்கத்துக் காலி வீட்டுக்குச் சென்று
தூக்கி ஒரு மூலையில் வீசினேன்; அங்கே ஏற்கனவே நான் வீசி வைத்திருந்த சில
பெல்ட்டுகளும் ரோத்தான்களும் அப்பக்கரண்டி ஒன்றும் எழுந்து மீண்டும்
வீட்டுக்குள் வர முயற்சி ஏதும் செய்திருக்கவில்லை என்பதை
உறுதிசெய்துகொண்டேன்.

இப்போது எனக்கே வீட்டுக்குப் போக பயமாய் இருந்தது. உள்ளே அம்மா
இருக்கிறார். இத்தனை நாள் நல்லவர் என்று நினைத்திருந்த அம்மா என்னைக்
கொண்டுபோய் குப்பை போடுகிற அந்த சாக்லெட் கலர் ஆற்றில்
வீசியெரிந்துவிட்டால்? முன்னமே அப்பாவிடம் சவால் எல்லாம் விட்டாரே?

ஆனால் இப்போது எனக்குக் கொடுமையான பசி. கடிகாரம் வீட்டுக்கு உள்ளே
இருக்கிறது. எட்டி மணியைப் பார்க்கக்கூட பயமாய் இருக்கிறது. சரி, ஒரு
வேளை அம்மா ரொம்ப நெருங்கி வந்தால் அதுக்கப்புறம் ஓடிவிடலாம். எனக்குச்
சோறு வேண்டும் இப்போதைக்கு. சங்கீதா மட்டும் முன்கூட்டியே
சாப்பிட்டுவிட்டு நன்றாகத் தூங்குகிறாள்.

வீட்டுக்குள் நுழைந்தேன். அம்மாவைக் காணோம். நேராக சமையற்கட்டுக்குப்
போய் சோற்றைப் போட்டு அள்ளித் தின்றேன். அம்மா சமையற்கட்டுக்கு முன்
இருக்கும் அறை ஒன்றில் ஏதோ செய்து கொண்டிருக்கும் ஓசை கேட்டது. ஆனால்
அதையெல்லாம் அனுமானம் செய்கிற திறன் இல்லாத பட்சத்தில் அதை ஒரு பொருட்டாக
மதிக்காமல் வயிற்றுப் பசிக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.

பசி தீர்ந்ததும் கையைக் கழுவிவிட்டு, ஓடிச் சென்று சங்கீதாவின்
பக்கத்திலேயே நானும் படுத்துக்கொண்டேன். அப்பா வந்தால் தூங்குவதுபோல
நடித்துத் தப்பித்துக்கொள்ளலாம். அப்பா திரும்பி வரும் நேரம் வேறு
சரியாகத் தெரியவில்லை.

நடிப்புக்காகத் தூங்கச் சென்று, பின் அசதியில் உண்மையாகவே
தூங்கிப்போய்விட்டேன். மீண்டும் எழுந்தபோதுதான் தெரிந்தது மாலை மணி ஆறை
நெருங்கிக்கொண்டிருந்தது. எனக்குப் பதறிப்போய் விட்டது.

இந்த நேரத்துக்கெல்லாம் நான் குளித்துவிட்டிருக்கவேண்டும். அதற்குப் பின்
பூசைக்குப் பூக்களைப் பறித்து வைக்கவேண்டும். அவற்றை நீரில் அலசி
சாமிக்குப் போட்டு விளக்கேற்ற வேண்டும். குறைந்தது ஐந்து சாமி பாட்டுகள்
பாட வேண்டும். இல்லையானால், அப்பா…

வேக வேகமாகக் குளியல் அறைக்கு ஓடினேன். அம்மா அப்போதுதான் குளித்துவிட்டு
வெளியே வந்திருந்தார். அம்மாவைப் பார்த்ததும் எனக்குத் தூக்கிவாரி
போட்டது. அம்மாவா இது?

எப்போதும் முன் நெற்றியில் முடி ஆரம்பிக்கும் இடத்திலிருந்து வழித்து
இறுக்கமாய்ச் சீவி பின்னால் அந்த முடிக்கொத்துகளைக் கொண்டுபோய் சேர்த்து
சடை கட்டியபடி இருக்கும் அவருடைய தலை சீவல். அம்மாவின் தலையை இருட்டில்
பார்த்தால் முடி இருப்பதே தெரியாது. மொட்டை மண்டை மாதிரி வழித்து
சீவிக்கிடக்கும். அப்பேர்பட்ட முடியை வெட்டி வைத்துவிட்டாரே! நெற்றியின்
எல்லைப்பகுதி முடியை ஒரு கொத்து எடுத்து கொஞ்சம் கட்டையாக வெட்டி அதை
இடமிருந்து வலமாக சீவி கொஞ்சம் எடுப்பாகத் தெரிந்தார். இடுப்பைத் தொட
நெருங்குகிற அளவு இருக்கிற முடியும் தோல்ப்பட்டை வரை
சுருங்கிவிட்டிருந்தது.

“என்னாம்மா முடி இப்பிடி ஆயிரிச்சி?” என்று கேட்டேன் என் ஆச்சரியத்துக்கு
பதில் தேட. அம்மா இப்படிச் சொன்னார், “பழைய மாதிரி இருந்தா ஒங்கப்பனுக்கு
புடிக்க மாட்டிகிது. கொஞ்சம் வேற மாதிரியா இருக்கனும்டி அந்தாளுக்கு!
அதான் முடி ஸ்டைலையும் மாத்திருக்கேன். இந்த ஆளு மொகறைக்கு இது கூட
பத்தலன்னா அப்பறம் இருக்கு!”

எனக்குச் சரியாகப் புரியவில்லை அம்மாவின் புலம்பல். ஆனால், அம்மாவைப்
பார்க்கப் பாவமாக இருந்தது. அந்த சாக்லெட் கலர் அல்லூர் பற்றிய பயத்தில்
பாதி காணாமல் போய்விட்டிருந்தது.

எதையாவது செய்யுங்கள். எனக்கென்ன? எது எப்படியோ, அப்பா வருவதற்குள் நான்
முதலில் குளித்துவிட்டு பூப்பறிக்கப் போகவேண்டும். மணியாகிறது.

ஃ ஃ ஃ

இரண்டு நாட்களாய் அம்மாவும் அப்பாவும் அவ்வளவாகப் பேசிக்கொள்ளவில்லை.
அன்று நான் பள்ளி முடிந்து வீட்டுக்கு வருகிறபோதுதான் பார்த்தேன்
மீண்டும் இரண்டு பேரும் பேசிக்கொண்டதை. அப்பா செல்லமாய் அம்மாவின்
திருத்தம் பெற்ற முன் நெற்றிப்பகுதியின் கொத்து முடியை நீவிவிட்டபடி
சிரித்துக்கொண்டிருந்தார். அம்மாவும் தலையைக் குனிந்து சிரித்தார்
அப்பாவுக்குத் தோதாக. எனக்கே ஆச்சரியமாகிப் போய்விட்டது. இரண்டு பேரும்
சமாதானமாகிப் போய்விட்டார்களோ என்னவோ?

திடீரென எனக்கு ஒரு அற்புதமான யோசனை! அப்பா இனிமேல் என்னை அடிக்காமல்
இருக்க வேண்டுமானால்; அம்மாவிடம் இப்போது காட்டும் பாசத்தைப்போல
என்னிடமும் காட்டவேண்டுமானால், நான் அந்த யோசனையை நடைமுறைப்படுத்தியே
ஆகவேண்டும்.

நேராக ஓடிச் சென்று புத்தகப்பையை என்னுடய அறையில் வீசியெரிந்துவிட்டு
விரைந்தேன் அம்மாவின் சமையலறைப் பக்கத்து அறைக்கு. அம்மாவைப் போல
முடியாவிட்டாலும் ஏதோ என்னால் முடிந்த அளவு முடியை கத்தரிக்கோளால்
வெட்டிக்கொண்டேன். என் நீண்ட சடைபோட்ட கூந்தலை வெட்டிக்கொள்ளவும் முன்
நெற்றி முடியை திருத்திக்கொள்ளவும் ஐந்தே நிமிடம்தான் ஆனது.

புது நம்பிக்கையோடு அப்பாவின் முன் போய் நின்றேன். ஏனென்று தெரியவில்லை;
மீண்டும் அடி விழுந்தது!

நன்றி;
மலேசிய தேசிய பல்கலைக்கழக 13ஆம் சிறுகதைத் தொகுப்பு

ஆக்கம்;
முனிஸ்வரன், மலேசியா

Series Navigation

முனிஸ்வரன், மலேசியா

முனிஸ்வரன், மலேசியா