முள்பாதை 13

This entry is part [part not set] of 26 in the series 20100115_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

நாங்கள் போய்ச் சேர்ந்தபோது பூச்சுட்டல் சடங்கு தொடங்கிவிட்டிருந்தது. அங்கே இருந்த கூட்டத்தைப் பார்த்தால் அந்த ஊரில் இருக்கும் பெண்டுகள் எல்லோரும் அங்கேதான் இருப்பது போல் தோன்றியது. எல்லோரும் உரத்தக் குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். உட்காருவதற்கு இடமில்லாததால் சிலர் நின்று கொண்டிருந்தார்கள். புழுக்கமாக இருந்ததால் கைக்குழந்தைகள் அழத் தொடங்கி விட்டார்கள். தாய்மார்கள் குழந்தைகளைச் சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தார்கள். ஆனால் சாததியப்படவில்லை. குழந்தைகளின் அழுகையைப் பொருட்படுத்தாமல் தாய்மார்கள் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தார்கள்.
கருவுற்றிலிருந்த லக்ஷ்மிமாமியின் மகள் புது பட்டுப் புடவையைக் கட்டிக் கொண்டு தலை நிறைய பூவையும், கழுத்து நிறைய நகைகளையும் சூடிக்கொண்டு தனி அழகுடன் நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.
பழுத்த சுமங்கலிகள் இரண்டு பேர் அவளுக்கு ஆரத்தி எடுப்பதற்காகத் தயாராக இருந்தார்கள். அவ்விருவரில் ஒல்லியாக இருந்த மாது ஆரத்தி பாட்டு பாடத் தொடங்கினாள். ஒரே ஒரு நிமிடம் ஊசி விழுந்தாலும் கேட்கும் அளவுக்கு நிசப்தம் அங்கே நிலவியது. அடுத்த நிமிடமே மறுமடியும் வம்புப் பேச்சுகளும், குழந்தைகளின் அழுகையும், சமாதானப்படுத்துவதும் வழக்கம்போல் தொடங்கிவிட்டன.
அதுவரையில் அந்த அம்மாளை பாடச் சொல்லியும், பாடினால் தவிர விடமாட்டோம் என்றும் வற்புறுத்தியவர்களில் ஒருத்தி கூட அந்த அம்மாளி பாட்டை கவனிக்கவே இல்லை. காது கொடுத்துக் கேட்கவும் இல்லை. அதுவே நானாக இருந்தால் கோபமாக எல்லோரையும் முறைத்துப் பார்த்துவிட்டு பாட்டை டக்கென்று நிறுத்தியிருப்பேன்.
ஆனால் அந்த அம்மாள் ரொம்ப பொறுமைசாலி போலும். எடுத்த காரியத்தை முடிக்கும் வரையில் விடமாட்டாளாய் இருக்கும். யாரும் காது கொடுத்துக் கேட்காவிட்டாலும் தான் பாட்டுக்கு பாடிக் கொண்டே இருந்தாள்.
உட்காருவதற்கு இடம் இல்லாமல் கதவு அருகிலேயே நின்று விட்ட எங்களைப் பார்த்து லக்ஷ்மிமாமி கைவளையல்கள் குலுங்க அருகில் வந்தாள். “என்னடீ ராஜீ? வேற்று மனுஷியைப் போல் வாசலிலேயே நின்றுவிட்டாய்? இவ்வளவு கூச்சப்பட்டால் நாளைக்குப் புகுந்த வீட்டில் எப்படி சமாளிக்கப் போகிறாய்?” என்று கடிந்துகொண்டே எங்களை அழைத்துக் கொண்டு உள்ளே போனாள். முன் வரிசையில் உட்கார்ந்திருக்கும் பெண்களின் தோள்களில் தட்டி “கொஞ்சம் நகர்ந்து கொள்ளுங்கள்” என்று எங்களை உட்காரச் செய்தாள்.
அங்கே வந்திருப்பவர்களில் பெரும்பாலானவர்களின் கண்கள் என்மீதே நிலைத்திருப்பதை உணர்ந்தேன். ஆனால் எதையும் கவனிக்காதவள்போல் ராஜேஸ்வரியுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
ஒரு பெண் எங்கள் கால்களுக்கு மஞ்சளைத் தடவினாள். இன்னொரு பெண் குங்குமம், சந்தனமும் வழங்கினாள்.
யாரோ ஒரு பெண் ராஜேஸ்வரியை பாடச் சொல்லி கேட்டாள். மேலும் இரண்டுபேர் வற்புறுத்தினார்கள். ராஜேஸ்வரி தயக்கத்துடன் மாட்டேன் என்பதுபோல் தலையை அசைத்தாள்.
“பாடு ராஜீ! ரொம்பத்தான் பிகு செய்து கொள்கிறயே?” லக்ஷ்மி மாமி ஆணையிடுவதுபோல் சொன்னாள்.
“உனக்கு பாடத் தெரியுமா?” ராஜியிடம் கேட்டேன்.
“ஏதோ சுமாராகப் பாடுவேன்.” தாழ்ந்த குரலில் சொன்னாள்.
எல்லோரும் சேர்ந்து வற்புறுத்தியதால் வேறு வழியில்லாமல் ராஜி குரலை கனைத்துக்கொண்டு பாடுவதற்கு ஆயத்தமானாள். எனக்கு அவளைப் பார்த்தால் இரக்கமாக இருந்தது. பாவம்… நாலுபேர் சேர்ந்து வற்புறுத்தினால் எந்த வேலையும் செய்து விடுவாள். மாட்டேன் என்று சொல்லும் தைரியம் அவளிடம் இல்லவே இல்லை. இப்போ இவர்கள் பாடச் சொல்லிவிட்டார்கள் என்பதால் பாடத் தெரியாவிட்டாலும், குரல் நடுங்கினாலும் பாட்டை ஒப்பேற்றுவாளாய் இருக்கும். இவ்வளவு வாயில்லாதப் பூச்சியாக இருந்தால் உலகத்தில் எப்படி வாழ முடியும்?
ராஜி மற்றொரு முறை குரலை சரி செய்துகொண்டு பாரதியாரின் “சுற்றும் விழிச் சுடர்தான் கண்ணம்மா” என்ற பாட்டை பாட ஆரம்பித்தாள்.
நான் திடுக்கிட்டேன். எல்லோரும் பேச்சை நிறுத்திவிட்டு பாட்டை கேட்கத் தொடங்கினாகள். நான் வியப்புடன் கண்களை அகல விரித்து, தலை குனிந்தபடி பாடிக் கொண்டிருந்த ராஜியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
காதுகளில் தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது. எவ்வளவு இனிமையான குரல்! அழகான உச்சரிப்பு பாட்டை மேலும் மெருகேற்றியது. பாட்டைக் கேட்பதில் நான் என்னையே மறந்து போய்விட்டேன். பாட்டு முடிந்துவிட்டது. நான் கைகளைத் தட்டப் போனேன். ராஜி சட்டென்று என் கையைப் பற்றி தடுத்துவிட்டாள்.
“இவ்வளவு நன்றாகப் பாடுவாய் என்று நான் கனவில்கூட நினைக்கவில்லை.” என்னால் வியப்பை மறைக்க முடியவில்லை. ராஜேஸ்வரி என் கையை விட்டுவிட்டாள். எல்லோருக்கும் வெற்றிலை பாக்கும், இனிப்புகளும், சுண்டலும் வழங்கினார்கள்.
“மாமீ! எனக்குக் கொடுங்கள். என் தம்பிக்கும் சேர்த்துக் கொடுங்கள்” என்று குழந்தைகள் லக்ஷ்மிமாமியைச் சூழ்ந்துகொண்டு இனிப்புகளைக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள். இதெல்லாம் எனக்கு ரொம்ப வேடிக்கையாக இருந்தது. ராஜேஸ்வரி தனக்குக் கொடுத்த தாம்பூலத்துடன் என்னுடையதும் சேர்த்து கைக்குட்டையில் மூட்டையாகக் கட்டினாள்.
நிறையபேர் என்னையும் ராஜேஸ்வரியையும் சூழ்ந்துகொண்டார்கள்.
“ராஜீ! இது உங்கள் மாமாவின் மகள்தானே?” என்று சிலர் கேட்டார்கள். “நீ கட்டியிருக்கிற புடவை அவளுடையதா?” என்று சிலர் புடவையைத் தொட்டுப் பார்த்தார்கள்.
ராஜேஸ்வரி பெருமையுடன் “ஆமாம்” என்றாள்.
“புடவை என்ன விலை?” என்று என்னிடம் கேட்டபோது தெரியாது என்றேன். உண்மையில் எனக்குத் தெரியாது.
“இன்னும் பத்து நாட்கள் இருப்பாய் இல்லையா. எங்கள் வீட்டுக்கு வாங்க” என்று சிலர் வீட்டுக்கு அழைத்தார்கள். பெரும்பாலான கேள்விகளுக்கு ராஜேஸ்வரி என் சார்பில் பதில் அளித்தாள்.
லக்ஷ்மிமாமி என் கையைப் பிடித்துக் கொண்டு அங்கே இருந்த பெரியவர்களிடம் அழைத்துச் சென்றாள். “நம்ப ஆனந்தனின் மகள்” என்று என்னை அறிமுகப்படுத்தினாள்.
என் மனம் மழை மேகத்தைக் கண்ட மயில் போல் தோகை விரித்தாடியது. இத்தனை வருடங்கள் கழித்து முதல் முறையாக எனக்கு ரொம்பவும் பிரியமான அப்பாவின் மகளாக அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறேன். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நிறைவேற வாய்ப்பே இல்லையோ என்று பயந்த என் விருப்பம் அந்த விதமாக நிறைவேறியது.
விழாவுக்கு வந்தவர்கள் எல்லோரும் கிளம்பிப் போய் விட்டார்கள். ராஜேஸ்வரியும் நானும் கிளம்ப முற்பட்ட போது லக்ஷ்மிமாமி ராஜியயைத் தனியாக அழைத்து ஒரு பொட்டலத்தில் லட்டுக்களையும், சுண்டல் மற்றும் வாழைப்பழங்களை மூட்டை கட்டிக்கொடுத்தாள். “கிருஷ்ணனிடம் சொல்லு ராஜீ. தோட்ட வேலையில் ஆழ்ந்துபோய், வீட்டுப் பக்கம் வருவதையே நிறுத்திவிட்டான். பாட்டி அவன் மீது ரொம்ப கோபமாக இருக்கிறாளாம் என்று சொல்லு” என்றள்.
ராஜேஸ்வரி சரி என்பது போல் தலையை அசைத்தாள்.
“ஊருக்குப் போவதற்கு முன் நீயும், மீனாவும் நம் வீட்டுக்கு சாப்பிட வாங்க. மறுபடியும் சொல்லி அனுப்புகிறேன்.”
ராஜேஸ்வரி மறுபடியும் தலையாட்டினாள். லக்ஷ்மிமாமி வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தாள்.
நாங்கள் வீட்டுக்கு வரும்போது வழியில் இரண்டு மூன்று பேர் தங்கள் வீட்டுக்கு வரச் சொல்லி அழைத்தார்கள். ராஜேஸ்வரி நடையின் வேகத்தை கூட்டிக்கொண்டே “இப்போ நேரமில்லை. இன்னொரு நாள் வருகிறோம்” என்று பதிலளித்தாள்.
வீட்டு வாசற்படியில் ஏறும்போது நான் வேண்டுமென்றே குரலை உயர்த்தி ஏளனமாக “ராஜீ! உங்க அண்ணாவின் அதிர்ஷ்டத்தைப் பாரேன். புடவையைக் கட்டிக்கொண்டு பூச்சூட்டலுக்கு வரவேண்டிய தேவையே இல்லாமல் லட்டுக்களை சுலபமாகப் பெற்றுவிட்டான்” என்றேன்.
ராஜேஸ்வரி அதிர்ச்சி அடைந்தவளாக என் பக்கம் திரும்பினாள். என் வார்த்தைகளால் காயப்பட்ட மனம் அவள் கண்களில் ஸ்பஷ்டமாக தென்பட்டது.
நான் உடனே குரலில் குறும்புத்தனத்தை வரவழைத்துக்கொண்டு “எனக்குத் தெரியும். லக்ஷ்மிமாமி உங்கள அண்ணாவுக்குத் தனியாக லட்டு, வாழைப்பழம் எல்லாம் கட்டிக் கொடுத்ததை நான் பார்த்தேன்” என்றேன்.
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை. லக்ஷ்மிமாமியும், கர்ணம் மாமாவும் அண்ணனை தங்கள் மகனுக்குச் சமமாக நினைக்கிறார்கள். போன வருஷம் அவர்கள் வீட்டில் எல்லோருக்கும் அம்மை போட்டிருந்த போது அண்ணன் எவ்வளவு உதவி செய்தான் தெரியுமா? உறவினர்களும், நன்பர்களும் கூட செய்ய முடியாத அளவுக்கு உதவி செய்திருக்கிறான். அன்றிலிருந்து அண்ணனைத் தங்கள் வீட்டில் ஒருவனாக அவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். அது மட்டுமே இல்லை. கர்ணம் மாமாவுக்கு ஊர் பஞ்சாயத்து விவகாரங்களில் அண்ணன் வலது கரமாக இருந்து வருகிறான். அவர்கள் விட்டில் எது செய்தாலும் மாமி அண்ணாவுக்குத் தனியாக ஒரு பங்கு எடுத்து வைத்து அனுப்பி வைப்பாள்.”
இருவரும் உள்ளே வந்து விட்டதால் மேற்கொண்டு அதைப் பற்றிப் பேச முடியாமல் போய்விட்டது. நாங்கள் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தபோது அத்தை முன் அறையில் அமர்ந்து வாழைக்காயை நறுக்கிக் கொண்டிருந்தாள். கிருஷ்ணன் அத்தைக்கு எதிரே இருந்த கட்டில்மீது தலைக்கு அடியில் கைகளை கோர்த்துக்கொண்டு மல்லாந்து படுத்திருந்தான். மேற்கூரையைப் பார்த்தபடி எதைப் பற்றியோ ஆழமாக யோசித்துக் கொண்டிருந்தான். காய் நறுக்கிக்கொண்டிருந்த அத்தையின் முகமும் சீரியஸாக இருந்தது.
அவர்கள் இருந்த தோரணையைப் பார்த்தால் தாய், மகன் இருவரும் அதுவரையில் எதைப்பற்றியோ சீரியஸாக பேசிக் கொண்டு இருந்துவிட்டு பிரச்னைக்குத் தீர்வு கண்டுபிடிக்க முடியாதவர்கள் போல் கம்பீரமாக இருந்தார்கள்.
எங்களுடைய காலடிச் சத்தம் கேட்டு அத்தை நிமிர்ந்து பார்த்தாள். கிருஷ்ணனும் தலையைத் திருப்பிப் பார்த்தான். இந்த முறை அவன் பார்வை ஒரு வினாடியில் பாதி நேரம் என்மீது நிலைத்தது. அது நிஜம்தானா இல்லை பிரமையோ என்று சந்தேகம் ஏற்படும் அளவுக்கு வேகமாக அவன் பார்வை உடனே ராஜேஸ்வரியின் பக்கம் திரும்பிவிட்டது.
அத்தை எங்களிடம் எதுவும் பேசவில்லை. பூச்சூட்ட¨ல் பற்றிய விசேஷங்கள் எதையும் விசாரிக்கவில்லை. எங்களைப் பார்த்தும் நறுக்கி வைத்த காய்களையும், அருவாள்மனையையும் எடுத்துக்கொண்டு உள்ளே போய்விட்டாள்.
கிருஷ்ணன் எழுந்து உட்கார்ந்துகொண்டான். ராஜேஸ்வரி அண்ணனிடம் லக்ஷ்மிமாமி கொடுத்து அனுப்பிதை நீட்டிக் கொண்டே அந்த மாமி சொல்லச் சொன்னதையும் தெரிவித்தாள். கிருஷ்ணன் ஒரே ஒரு லட்டுவை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றதை வேண்டாமென்று மறுத்துவிட்டான்.
நான் உடைகளை மாற்றிக்கொள்ள உள்ளே வந்துவிட்டேன்.

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்