மூன்று கதைகள்

This entry is part [part not set] of 30 in the series 20091218_Issue

எட்கர் கேரத் (இஸ்ரேல்) தமிழில் எஸ்.ஷங்கரநாராயணன்


1. ஹாட் ட்ரிக்

”அல்லாகஸீம்… அல்லாகஸாம்!” ஆ, இதோ வருகிறது வெளியே.

மாயாஜால நிகழ்ச்சியின் கடைசி வித்தை. தொப்பியில் இருந்து ஒரு முயலை வெளியே இழுக்கிறேன். எப்பவுமே நிகழ்ச்சி முடிகிற போது இதைச் செய்வேன், ஏனென்றால் குழந்தைகளுக்கு பிராணிகளைப் பிடிக்கும். குறைந்தபட்சம் நான் குழந்தையாய் இருந்தபோது பிராணிகளிடம் நான் பிரியம் வைத்திருந்தேன். நிகழ்ச்சி இந்த விதமாய் முடிந்தால் பளிச்னு இருக்கும், அப்படியே முயலை பையன்களிடம் கை கையாக அனுப்பலாம், அவர்கள் கொஞ்சுவார்கள், என்னமாவது அதற்கு ஊட்டி விடுவார்கள். குறைந்தபட்சம், அப்படித்தான் இருந்தது எங்கள் காலத்தில். இப்பத்திய பசங்களை மேய்க்கிறது சிரமம், அவர்கள் எளிதில் இதிலெல்லாம் அயர்கிறார்கள் இல்லை, ஆனாலும் இந்த முயல் ட்ரிக்கை நான் கடைசியாகவே செய்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த வித்தை இது… ஒரு காலத்தில் என்றும் சொல்லுவேன். பையன்களையே கண்ணெடுக்காமல் பார்த்தவாறு, தொப்பிக்குள் துழாவித் தேடி, என் முயல் கஸாமின் காதுகளைப் பிடிக்கிறேன்.

”அல்லாகஸீம்… அல்லாகஸாம்!” ஆ, இதோ வருகிறது வெளியே. பையன்களை கண்விரிய வைக்க நான் தவறியதே இல்லை. அவர்களுக்கு மாத்திரமல்ல, எனக்கே அப்போது ஒரு துள்ளல் கிடைத்தது. தொப்பிக்குள் அந்த வேடிக்கையான காதுகளை நான் ஸ்பரிசிக்கும் போதெல்லாம், எனக்கு நான் வித்தைக்காரனாக்கும், என்கிற மிதப்பு இருக்கும். இந்த வித்தையை எப்படிச் செய்கிறேன், எனக்குத் தெரியும். மேஜையடியில் ஒரு ரகசிய அறை, அதெல்லாம்தான்… எது எப்படியானாலும் அது குறளி வித்தை போலத்தான் ஆச்சர்யமானது.

அந்த சனி மதியம் ஊரொட்டிய கிராமத்தில் இதே தொப்பி வித்தையைக் கடைசியாக என்று வைத்திருந்தேன், என் வழக்கப்படி. அந்த பிறந்தநாள் விழாவுக்கு வந்திருந்த பிள்ளைகள் எல்லாம் அடங்காப்பிடாரிகள். அவர்கள் என்னை கண்டுகொள்ளவே இல்லை. சில பையன்கள் ஸ்வார்சனேகர் படத்தை டி.வியில் பார்த்தபடி எனக்கு முதுகு காட்டிக்கொண்டிருந்தார்கள். பிறந்தநாள் கொண்டாடும் பையன், அவன் அந்த அறையிலேயே இல்லை, புது வீடியோகேம் விளையாடிக்கொண்டிருந்தான் அவன். அத்தனை கூட்டத்தில் என்னை கவனிக்கிறவர்கள் எண்ணி நாலே பிள்ளைகள். ரொம்ப எக்குத்தப்பான நாள். வித்தைக்கார கெட்டி உடைக்குள் கசகசவென வியர்த்துக் கொட்டியது எனக்கு. சட்டுபுட்டுனு முடித்துவிட்டு வீடுபோய்ச் சேரலாம்… மூணு கயிறுமுடிச்சு வித்தைகளை ஓரங்கட்டிவிட்டு நேரே தொப்பி நிகழ்ச்சிக்கு வந்தேன். என் கையைத் தொப்பிக்கு ஆழத்தில் விட்டபடியே, ஒரு கண்ணாடி மாட்டிய கொழுகொழு குழந்தையின் கண்ணோடு பொருத்திய என் பார்வையை எடுக்கவேயில்லை, கஸாமின் மெல்லிய காதுகளைத் தொட்டது எப்போதும் போலவே என்னை ஆச்சர்யப்படுத்தியது, ”அல்லாகஸீம்… அல்லாகஸாம்!” இன்னும் ஒரே நிமிஷத்தில், அந்தப் பிறந்தநாள் விழா நடத்தும் அப்பங்காரனின் கையிலிருந்து 300 ஷெகல் செக்கை வாங்கிப் பையில் வைத்துக் கொண்டு, ஜுட்! காதைப் பிடித்து கஸாமை வெளியே இழுக்… என்னவோ மாறுதல், கனமே இல்லையே!.. என் கையைக் காற்றில் வீசினேன். பார்வை எதிர்க் கூட்டத்தில் அப்படியே நிலைத்திருந்தது. அப்பத்தான்… என் மணிக்கட்டில் ஈரந் தட்டி, அப்பத்தான் அந்தக் கொழுகொழுப் பெண் அலறினாள். என் கையில் கஸாமின் முகம், பிடித்துத் தூக்கிய காதுகள், வெறித்த கண்கள்… வெறும் தலை மாத்திரம், உடம்பே இல்லை. தலையும், எக்கச்சக்க, கசகசக்கிற ரத்தக் குளம். குண்டுக் குழந்தை வீறிட்டாள். எனக்கு முதுகுகாட்டி டி.வி பார்த்துக் கொண்டிருந்த பிள்ளைகள் திரும்பினார்கள். அவர்கள் கைதட்ட ஆரம்பித்தார்கள். பிறந்தநாள்க் குழந்தை கையில் வீடியோகேமுடன் அடுத்த அறையில் இருந்து வெளியே வந்தான், துண்டிக்கப்பட்ட அந்தத் தலையைப் பார்த்ததும் அவன் விசிலடித்து ஹ¨ங்கரித்தான். எனக்கு தின்னசோறு தொண்டைக்கு எகிறிவிட்டது. வாந்தி வந்தது, தொப்பியிலேயே வாந்தியெடுத்தேன், அப்படியே அதைத் திரும்ப மறைத்தேன். பிள்ளைகள் ஆரவாரித்தார்கள்.

அந்த ராத்திரி எனக்குப் பொட்டுத் தூக்கம் இல்லை. திரும்பத் திரும்ப யோசித்துப் பார்த்தேன். என்ன நடந்திருக்கும் என்றே புரிபடவில்லை. காஸாமின் உடம்பும் கிடைக்கவேயில்லை. அடுத்தநாள் காலையில் வித்தை சாமான்கள் வாங்கும் கடைக்குப் போய், அவர்களிடம் எல்லாம் சொன்னபோது அவர்களும் பதில் தெரியாமல் திகைத்தார்கள். இன்னொரு முயலை விலைக்கு வாங்கிக் கொண்டேன். அந்த வியாபாரி எப்படியாவது ஒரு ஆமையை என் தலையில் கட்டப் பார்த்தான். ”முயல் வித்தைல்லாம் அரதப் பழசு அண்ணே. இப்ப ஆமைதான் ஜோர். இது நிஞ்ஜான்னு சொல்லு. பசங்க வாயைப் பொளப்பாங்க…”

ஆனால் நான் முயலையே வாங்கிக் கொண்டேன். இதற்கும் கஸாம் என்றே பேர் வைத்தேன். வீடு திரும்பிப் பார்த்தபோது என் தொலைபேசியில் ஐந்து தகவல்கள் காத்திருந்தன. எல்லாமே மாயாஜால நிகழ்ச்சிக்காக. அந்த முந்தைய நிகழ்ச்சியைப் பார்த்த குழந்தைகள் வீட்டிலிருந்து. ஒரு குழந்தை, போன நிகழ்ச்சியைப் போலவே எங்க வீட்டிலும் நிகழ்ச்சி முடிந்ததும் முயல் தலையை அப்டியே விட்டுட்டுப் போயிறணும், என்று கேட்டது. அப்பதான் எனக்கே தெரிந்தது, அடடா கஸாமின் தலையை நிகழ்ச்சி முடிந்து அங்கேயே போட்டுவிட்டு வந்துவிட்டேன்.

அடுத்த நிகழ்ச்சி புதனன்று. எங்கள் வீட்டுப் பக்கமே, நல்ல வசதியான குடும்பத்து ஒரு பத்து வயசுப் பையனின் பிறந்த நாள். நிகழ்ச்சி பூராவும் நான் வெலவெலத்திருந்தேன். கவனம் சிதறித் தடுமாறினேன். ஒரு சீட்டு மேஜிக் செய்கையில் உதறலெடுத்தது. தொப்பியைப் பற்றியே திரும்பத் திரும்ப யோசனை வந்து கொண்டிருந்தது. இப்போது தொப்பிவித்தையின் நேரம். ”அல்லாகஸீம்… அல்லாகஸாம்!” பார்வையாளரின் மேல் என் கூர்த்த பார்வை தொப்பிக்குள் நுழைகிறது கை. காதுகள் கிடைக்கவில்லை. ஆனால் உடம்பு கனமாய் இருந்தது. அத்தோடு திரும்பவும் அந்த அலறல். கூட கரகோஷமும். நான் பிடித்திருந்தது… முயல் அல்ல. அது இறந்த ஒரு குழந்தை.

அதே வித்தையை இனியும் செய்ய எனக்குத் திராணியில்லை. எனக்குப் பிடித்தமான ஜாலம்தான், என்றாலும் இப்ப அதை நினைக்கவே கை நடுங்குகிறது. என்னென்ன கோர சம்பவங்கள் எல்லாம் நடந்து விட்டன. இனி இந்த வித்தை வேணவே வேணாம்… தொப்பிக்குள்ளாற இன்னும் என்னென்ன விபரீதம் காத்திருக்கிறதோ. நேத்து ராத்திரி ஒரு கனவு, தொப்பிக்குள்ள கை விடுகிறேன், எதோ ராட்சச மிருகத்தின் வாய்க்குள் என் கை சிக்கிக்கொண்டாப்போல. அந்த இருண்ட பகுதிக்குள் கை விடவே எனக்கு எப்படி தைரியம் வந்தது தெரியவில்லை. அதுக்கப்பறமும் கண்ணை எப்படி மூடி, திரும்ப எப்படித் தூங்கினேன் தெரியாது.

நான் மேஜிக் செய்கிறதையே நிறுத்தி விட்டேன். போனால் போகட்டும். இப்ப எனக்குச் சோத்துப் பாடு திண்டாட்டம்தான், ச் அதுனால என்ன. வீட்டில் அந்த மாஜிக் செய்கிற போது மாட்டிக் கொள்கிற உடைகளைப் போட்டுப் பார்ப்பேன், சும்மா ஒரு இதுவுக்காக. தொப்பிக்குக் கீழே மேஜைக்குள் இருக்கிற ரகசிய அறை, அதைத் துழாவிப் பார்ப்பேன், ஆனால் அத்தோட அவ்வளவுதான். அது தவிர எதையும் செய்கிறதில்லை, விட்டுத் தலைமுழுகிவிட்டேன். இதைத் தவிர வேறெதும் வேலைகீலை செய்யவும் இல்லை. தூங்காமல், அந்த முயல் தலையையும், குழந்தை உடலையும் பத்தி யோசித்துக் கொண்டு படுத்துக் கிடக்கிறேன். அவை ஒரு விடுகதையை விடுவிக்கும் துருப்புகளாகத் தோணுகிறது. யாரோ என்னவோ என்னிடம் சொல்ல வருகிறார்கள், இது முயல்களுக்கும், அத்தோடு குழந்தைகளுக்கும் ஏற்ற சூழல் அல்ல. வித்தைகாட்டுகிறவர்களுக்கும் இது உகந்த நேரம் கிடையவே கிடையாது, என்று யாரோ சொல்ல வருகிறார்கள்.

* * *

2. ஷ¨க்கள்

என் அடிடாஸ் ஷ¨வின் பட்டிகளைத் தொட்டுப் பார்த்தபோது தாத்தா ஞாபகம் வந்தது.

அந்த ஹோலோகாஸ்ட் அஞ்சலி நாளில், எங்கள் ஆசிரியர் சாரா எங்களை 57ம் பஸ்சில் ஏறச் சொல்லி, ஓலின் நினைவு அருங்காட்சியத்துக்குக் கூட்டிப் போனாள். அந்நாள் என் வாழ்நாளில் பொன்னாள். என்னுடன் படித்த மற்ற பிள்ளைகள் எல்லாருக்கும் அப்பா அம்மா பூர்விகம் ஈராக். இதில் விடுபட்டவர்கள் நான், என் மச்சான் தவிர இன்னொரு பையன், துருக்கிக்காரன். எனக்கு மாத்திரம்தான் இப்படி, என் தாத்தா ஹோலோகாஸ்ட்டில் இறந்து போனார். ஓலின் நினைவு அருங்காட்சியகம் அருமையான கட்டடம். பூராவும் ரொம்ப விலை ஜாஸ்தியான கரும் பளிங்கு கொண்டு கட்டப்பட்டது. அங்கே சோகமாய் நிறைய கருப்பு வெள்ளைப் படங்கள் இருக்கின்றன. ஏராளமான மனிதர்களின், பிரதேசங்களின், பலியானவர்களின் பட்டியல் இருக்கிறது. நாங்கள் ரெவ்வெண்டு பேராய்க் கைகோர்த்து சுவர் பக்கமாய் ஒவ்வொரு படமாகப் பார்த்தபடி நகர்ந்தோம். டீச்சர் அது எதையும் தொடக் கூடாது என்று எச்சரித்தாள், ஆனாலும் ஒரு படத்தை நான் தொட்டேன். அட்டையில் ஒட்டிய புகைப்படம். அதில் ஒரு வெளிறிய வத்தக்காச்சியான ஆள் கையில் ரொட்டியைப் பிடித்தபடியே கதறி அழுது கொண்டிருந்தான். நம்ம ஆஸ்ஃபால்ட் தெருவின் போக்குவரத்துக் கோடுகள் போல அவன் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீர்த் தடம். ”ஏய் என்ன பண்றே? டீச்சர்ட்டச் சொல்லுவேன்…” என்றாள் என்னுடன் கைகோர்த்து விடப்பட்ட ஒரித் சேலம் என்ற பெண். ”சொல்லு, யார்ட்ட வேணாச் சொல்லு. பெரியடீச்சர்ட்டக் கூட சொல்லிக்கோ. எனக்கு பயமில்லை.” அது எங்க தாத்தா படம், என் இஷ்டம். நான் அதைத் தொடுவேன்.

படமெல்லாம் பார்த்த பின்னால் எங்களை ஒரு பெரிய கூடத்துக்குக் கூட்டிப்போய் திரைப்படம் ஒண்ணு காட்டினார்கள். ஒரு லாரி நிறையப் பிள்ளைகள் ஏற்றப்படுகிறார்கள். கடைசில அவர்கள் எல்லாத்தையும் விஷவாயு பாய்ச்சி மூச்சுத் திணறத் திணற சாகடித்தார்கள். படம் முடிந்த பிறகு ஒரு வயசான மெலிந்த ஆசாமி மேடையேறி நாஜிகள் நம்மை எப்படியெல்லாம் காட்டுத்தனமாக நடத்தினார்கள், கொன்று குவித்தார்கள்… என்றெல்லாம் பேசினான். அவர்களை எதிர்த்து ‘அவன்’ தாக்குப் பிடித்தான், தாக்கினான் என்றெல்லாம் சொன்னான். ஒரு நாஜி படைவீரனை வெறும் கையாலேயே அவன் அடிச்சிக் கொன்னான்.

என் பக்கத்தில் ஜெர்பி, டூப்… என்றாள். இந்த ஜென்மத்துல அவனால ஒரு படைவீரனைக் கூட தொட முடியாது, என்றாள். ஆனால் அவன் கண்ணில் அந்தக் கோபவெறி, நான் அவனை நம்பினேன். அவனுக்கு உலகத்தின் எந்தப் பெரிய குண்டுமழையும் ஜுஜுபி., சாகத் துணிஞ்சவனுக்கு சமுத்திரம் முழங்கால்னாப்ல…,

ஹோலோகாஸ்டில் அவன் சாகசங்களைச் சொல்லி முடித்ததும் அவன் தான் சொன்ன அத்தனையும் மிக முக்கியமான விஷயங்கள் என்றான். எல்லாம் அப்பத்தைய காலத்துக்கு அல்ல, இப்பவும் அதெல்லாம் நாம மறந்துறக் கூடாது. ஜெர்மானியர்கள் இன்னமும் உசிரோட நடமாடுகிறார்கள், அவர்களுக்கு ஒரு நாடும் இருக்கு. அவங்களுக்கு மன்னிப்பே கிடையாது. நீங்களும் அவர்களை மன்னிக்க மாட்டீர்கள்னு நம்பறேன். கடவுளாணை, நீங்க அங்கெல்லாம் போகவே கூடாது. ஏன்னு சொல்றேன் கேளுங்க – நானும் என் குடும்பத்தாட்களும் ஒரு அம்பது வருஷம் முன்னாடி ஜெர்மெனி போனம். அப்ப எல்லாம் நல்லபடியாத் தான் தோணியது, ஆனால் முடிவு? நாராசமாப் போச்சு. மனுசர்களுக்கு மறதி ஜாஸ்தி. குறிப்பா மோசமான நினைவுகளை அவங்க மற்ந்துர்றாங்க. விடுய்யான்றாங்க. அவங்க பழையதையெல்லாம் மறக்க விரும்பறாங்க. ஆனால் நீங்க மறக்கப்டாது. எப்ப ஒரு ஜெர்மானியனைப் பாத்தாலும், ஒவ்வொரு தடவை பாக்கறப்பவும், நான் சொன்னது உங்களுக்கு ஞாபகம் வரணும். எந்த ஜொமானிய சாமான் பார்த்தாலும், அது டி.வி.ப் பொட்டியானாலும் சரித்தான், ஏன்னா டி.வி.ப் பொட்டியோ வேறெதும் சாமானோ ஜெர்மெனிலேர்ந்துதான் வருது, அதன் பிக்சர் டியூபோ வேற மேல பளபளப்பா மூடிக் கொடுத்த சாமானோ எதுவுமாகட்டும்… எல்லாமே எப்டி வந்தவைன்னு நினைக்கே, யூதர்களின் உடம்பில் இருந்து எடுத்த எலும்புகள், சதைகள் மற்றும் தோல்லேர்ந்து வந்தவைன்னு நினைக்கணும், விளங்குதா…

நாங்கள் வெளிய வந்தபோது ஜெர்பி, அந்தாளு சண்டைல அத்தக் கிழிச்சேன் இத்தக் கிழிச்சேன்னு தன் சட்டையையே கிழிச்சுக்குவான், என்றாள். எங்க வீட்டு ஃப்ரிட்ஜ் ஞாபகம் வந்தது, அது இஸ்ரேல் பொருள்தான், வம்பு இல்லை, என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.

ரெண்டு வாரம் கழித்து, வெளிநாட்டிலிருந்து திரும்பிய என் பெற்றோர் ஒரு ஜோடி விளையாட்டு ஷ¨ வாங்கி வந்தார்கள். அண்ணன் எனக்கு ஷ¨ வேணும் என்று சொல்லியனுப்பி, பாத்துப் பாத்து ஆசையா அம்மா அதை வாங்கி வந்திருந்தாள். அதைக் கொடுத்தபடியே புன்னகைத்தாள். பைக்குள்ள என்ன வெச்சிருக்கான்னு எனக்குத் தெரியாது, என அவளுக்கு அபார நம்பிக்கை. அந்த அடிடாஸ் சின்னம், அதைப் பாத்தே என்னால சொல்ல முடியாதா என்ன? பையிலிருந்து ஷ¨பெட்டியை எடுத்துக்கொண்டேன். ”தாங்ஸ்ம்மா.” நீள் செவ்வகப்பெட்டி, சவப்பெட்டி போல. உள்ளே இரண்டு வெள்ளை ஷ¨க்கள், இரண்டிலும் மூணு நீலப் பட்டைகள். பக்கவாட்டில் அடிடாஸ் ரோம் என எழுதியிருந்தது. ”போட்டுப் பாக்கலாம் வா. ”அம்மா மேலே சுற்றிய காகிதத்தைப் பிரித்தாள். ”அளவு சரியா இருக்கா பாப்பம்.” அம்மாவுக்கு முகம்பூரா சிரிப்பு, என் உள்ளே ஓடும் எண்ணங்களே அவளுக்குப் புரியவில்லை.

”அது ஜெர்மேனியத் தயாரிப்பு, உனக்குத் தெரியாதா?” நான் அவள் கையைப் பிடித்து அழுத்தினேன்.

”தெரியாம என்னடா?” என்றாள் அம்மா. ”அடிடாஸ்தான் உலகத்லயே ஷ¨வுக்கு பெஸ்ட்.”

”தாத்தாவும் ஜெர்மனிதான்…” நான் கோடிகாட்டினேன்.

”உங்க தாத்தா போலந்துகாரர்லா?” என்ற அம்மா முகம் வாடியது, சட்டென சகஜமானபடி, என் காலில் ஷ¨ லேஸைக் கட்டிவிட ஆரம்பித்தாள். நான் ஒண்ணும் சொல்லவில்லை. இனிப் பேசிப் பிரயாஜனமில்லை, என்றிருந்தது. நான் ஏன் இப்படிப் பேசினேன் என்று அம்மாவுக்குத் தெரியவில்லை. ஓலின் நினைவு அருங்காட்சியகம் அவள் போய்ப் பார்த்ததேயில்லை. அதைப் பத்தி யாரும் அவளிடம் சொன்னதும் கிடையாது. அவளைப் பொருத்தமட்டில் ஷ¨ன்னா வெறும் காலணி, ஜெர்மெனின்றது போலந்து, அவ்ளதான். அவள் காலில் ஷ¨ மாட்டிவிடட்டும் என்று பேசாமல் காட்டிக் கொண்டிருந்தேன். எதும் சொன்னால் இன்னும் வருத்தந்தான் படுவாள்.

திரும்பவும் ஒருமுறை நன்றி சொல்லிவிட்டு, அம்மாவின் கன்னங்களில் முத்தந் தந்துவிட்டு, வெளியே விளையாடப் போய்வர்றேன், என்று சொன்னேன். ”பார்றா அவனை…” அப்பா உள்கூடத்தில் நாற்காலியிலிருந்து லந்தடிக்கிறார். கால்ல மாட்டியதும் விளையாடக் கிளம்பியாச், என்கிற சிரிப்பு அவருக்கு. ”எலேய் பாத்து ஒரேநாள்ல நாசம் பண்ணிப்டாதே. சுத்தமா வெச்சிக்க.” வெளிறிய வண்ணத்தில் இருந்த அந்த கான்வாஸ் ஷ¨வை இன்னொரு தடவை பார்த்துக் கொண்டேன். ஒரு நாஜிப் படைவீரனை நொங்கைப் பிதுக்கினானே அந்தாள் ஞாபகம் வந்தது. (எலேய் நான் சொன்னதெல்லாம் மறந்துறாதே.) ஷ§வின் பட்டைகளைத் தொட்டபோது, அட்டையில் ஒட்டிய என் தாத்தாவின் புகைப்படம் ஞாபகம் வந்தது. ”டேய் சரியா இருக்கா,” என்று கேட்டாள் அம்மா. ”ஏன் சரியாய்த்தான் இருக்கு…” எனக்கு முந்தி அண்ணா சொன்னான். ”எலேய் சாதாரண உள்ளூர் மட்டமான ஐட்டம்னு நினைக்கண்டாம் கேட்டியா, குரூயிஃப் மாதிரி பெரிய பெரிய ஆட்டக்காராள்லாம் மாட்டிக்கிட்டு விளயாடற ஐட்டம்டா.” மெல்ல, ஷ¨வை அழுத்தாதபடிக்கு, எவ்வளவு முடியுமோ அவ்வளவு மெல்ல குதிகாலில் வாசலை நோக்கி நடந்தேன். சுதந்திரப் பூங்கா வரை இதே நடைதான். வெளியே போரோசொவ் துவக்கப் பள்ளிப் பிள்ளைகள் மூணு குழுக்களாக அணிசேர்ந்து கொண்டிருந்தார்கள். ஹாலந்து, அர்ஜென்டினா மற்றும் பிரேசில் கால்பந்தாட்ட அணிகள். ஹாலந்து அணியில் ஒராள் குறைவாய் இருந்தது, பொதுவாக வேறு பள்ளிப் பிள்ளைகளை அவர்கள் சேர்த்துக்கொள்வது கிடையாது, என்றாலும் எனக்கு இடம் அளித்தார்கள்.

விளையாட்டு ஆரம்பமானது. ஷ¨ நுனியால் பந்தை எத்தப்டாது, தாத்தாவுக்கு வலிக்குமே என்று யோசனை. ஆனால் விளையாட விளையாட எல்லாம் (அந்தக் கிழவன் ஓலின் அருங்காட்சியகத்தில் சொன்னது சரிதான்.) மறந்து போய்விட்டது. டைபிரேக்கரில் நான் கோல்நோக்கி பந்தை செமத்தியாக ஒரு டிஷ்யூம்.. விளையாட்டெல்லாம் முடிந்தது, நான் குனிந்து என் ஷ¨க்களைப் பார்த்துக்கொண்டேன். திடீர்னு அவை ரொம்ப சுகமானவையாக எனக்குத் தோன்றின. என்ன மெத்து என்ன மிருது. பெட்டிக்குள்ள இருந்ததைவிட காலுக்குப் பழகப் பழக இன்னும் ஜோராக ஆகியிருந்தன. என்ன எத்து இல்ல, செத்தாண்டா எதிரி… வழில என் தாத்தாவை நினைத்து எனக்குள் பேசிக்கொண்டே வந்தேன். அந்த கோலிக்குப் பொறி கலங்கிப்போச்சில்ல… தாத்தா ஒண்ணும் சொல்லவில்லை. ஆனாலும் எனது துள்ளல், அவருக்கு சந்தோஷந்தான் என்று தோன்றியது.

* * *

3. பந்தயம்

ஒரு பெண் ராணுவ வீராங்கனையைக் கொன்ற அரபுக்காரனுக்கு மரண தண்டனையளித்து ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொலைக்காட்சியில் சொன்னார்கள். உடனே ஆளாளாக் கூப்பிட்டு டி.வியில் பேட்டிகள், விவாதங்கள் என அல்லோல கல்லோலப் படுத்தியதில், பததரை வரை செய்தி நிகழ்ச்சிகளே ஆக்ரமித்துக் கொண்டதில், நிலாவெளிச்சம் நிகழ்ச்சி காட்டப்படவே இல்லை. அப்பாவுக்கு அதில் செம கடுப்பு. நாற்றம் அடிக்கிற புகைக்குழாயை அவர் பற்றவைத்துக் கொண்டார், பிள்ளைங்க முன்னால் புகைபிடிப்பது தகாது, பசங்க கெட்ருவாங்க, அவங்க வளர்ச்சி பாதிக்கப்படும் என்பது ஐதிகம், என்றாலும் அவர் அப்போது அதை சட்டைபண்ணவில்லை. அம்மாவைப் பாத்து அவர் கத்தினார், நீயும் உன்னை மாதிரி பைத்தாரிகளும் வலது சாரிக்கு ஓட்டுப் போட்டீங்க, நாடே ஈரானைப்போல ஆயிட்டது, அங்கயிருந்து தானே பெர்சியர்கள் வந்து குடியேறிப் பாட்டக் கிழிச்சது. இது இப்டியே போயிறாதுடி, என்றார் அப்பா. நம்ம வீரத்துக்கும் அப்பால – என்ன வீரம் இதுல இருக்கு, எனக்கு விளங்கவில்லை – அமெரிக்காக்காரன் இதைப் பார்த்துட்டுச் சும்மா படுத்துக் கிடக்க மாட்டான்…

அடுத்த நாள் பள்ளிக்கூடத்தில் எங்களிடம் இதைப் பத்திப் பேசினார்கள். ட்சியான் ஷிமேஷ் சொன்னான், ஒராளைத் தூக்கில் போடும்போது அவன் டிங்டாங் நீலப் படங்கள்ல வர்றா மாதிரி வெறைச்சுக்கும். அதனால்¢ ட்சில்லா, எங்கள் வகுப்பாசிரியை, அவனை வெளியே எத்தித் துரத்தினாள். பிறகு எங்களிடம் அவள் சொன்னாள். மரண தண்டனைன்னு வந்திட்டால் கருத்துகள் ரெண்டு பக்கமாயும் ஏற்பட்டு விடுகின்றன. அதை ஆதரித்தோ, எதிர்த்தோ எப்படி எத்தனை அழகா வாதம் செய்தாலும், எல்லாம் மனசு என்ன சொல்லுதோ அதான் முக்கியம், என்றாள். அப்போது ட்சாச்சி, அசட்டுக் குப்பன் அவன், ஏற்கனவே ரெண்டு முறை அவனைப் பள்ளிக் கூடத்திலிருந்து வெளிய அனுப்பியாச்சு, அவன் சிரித்தபடி சொன்னான். எல்லாமே மனசைப் பொருத்தது, யார் மனசை? அராபியன் மனசைப் பொருத்தது, ஆனா அந்த மனசு நின்னுரும், கழுத்துல சுருக்கு மாட்டித் தொங்க விட்டால்… ஆக ட்சில்லா அவனையும் வெளியே துரத்தியடித்தாள். இந்த மாதிரி முட்டாத்தனமாப் பேசறதை இனியும் அவளால சகிச்சிக்க முடியாது, என்றாள் அவள். நாம வழக்கமாப் படிக்கிற பாடத்துக்கு வரலாம். அவள் பாடம் நடத்திவிட்டு ஒரு டன் அளவு வீட்டுப்பாடமும் தந்தாள்.

பள்ளிக்கூடம் விட்டதும் பெரிய பிள்ளைகள் அதைப் பத்திப் பேசி விவாதித்தார்கள். ஒராளைத் தூக்கில் போட்டால், அவன் மூச்சுத் திணறிச் சாகிறான், அல்லது கழுத்து எலும்பு முறிந்து செத்துப் போகிறான். எப்படிச் சாகிறான் என்று அவர்களுக்குள் பந்தயம் வைத்தார்கள். எக்கச் சக்கமான சாக்லேட் பால் பந்தயம். அவர்கள¢ ஒரு பூனையைப் பிடித்து பாஸ்கெட்பால் வளையத்தில் அதைத் தொங்கவிட்டார்கள். காரே பூரே என அது அலறியது. கடைசியில் அதன் கழுத்து நிசமாகவே நொறுங்கியது. ஆனால் பந்தயத்தில் தோற்றுப் போன மிக்கி சாக்லேட் பால் வாங்கக் காசு தர மாட்டேன் என்று டபாய்ச்சிட்டான். போடா, கேபி வேணுன்னே அதைப் பிடிச்சி இழுத்தான், அதான் அது செத்துட்டது, இன்னொரு பூனையைக் கொண்டு வா, அது எப்பிடிச் சாகுதுன்னு யாருமே தொடாமப் பாப்பம்… என்று அழுகுணி ஆட்டம் ஆடினான். அவன் ஒரு கழிசடைன்னு எல்லாருக்கும் தெரியும். அவர்கள்அவனை விடவில்லை, பிடிச்சி இறுக்கித் துட்டு வாங்கிவிட்டார்கள். நிசிமும் ஸவ்வும் சேர்ந்து ஷிமேஷை அடிக்கப் போனார்கள், செத்துப் போகும்போது பூனையின் ஆண்குறி விறைக்கவேயில்லை. வகுப்பிலேயே அழகான பொண்ணு மிச்சல் அந்தப் பக்கம் வழியாக வந்தபோது, எல்லாம் திருட்டுக் கம்னாட்டிங்க, என எங்களை வைதாள். நீங்கள்லா மனுசங்களே இல்ல, மிருகங்கள். நான் அவர்களை விட்டு ஒதுங்கினேன், அது அவள் சொல்லிட்டாளே என்பதற்காக இல்லை.

* * *

Hat trick, Shoes. A Bet
three stories by Etgar Keret/ISRAEL
– ஹிப்ரு மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மிரியம் ஷ்லீசிங்கர்

தெளித்துக் கோலம் போட்டாப் போல பளிச்சென்று சுருக்கமாகவும் நுணுக்கமாகவும் எழுதுகிறார் கேரத். சர்ரியலிச பாணிக் கதைகள். யதார்த்தம், அரசியல், தன் பார்வை என எல்லாவற்றையும் கோர்த்து சம்பவ ஊடாகக் கதை சொல்வது தனி கவனத்துடன் செய்ய வேண்டிய விஷயம். இவர் செய்கிறார். தற்போது சினிமாத் துறையிலும் பங்களித்து பரிசுகள் குவித்து வருகிறார். வன்முறைக்கு எதிரான அழுத்தமான குரல் இவர் எழுத்தின் அடிநாதம்.

(நன்றி – அகநாழிகை டிசம்பர் 2009)

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்