டிராகன்

This entry is part [part not set] of 30 in the series 20091218_Issue

ரே பிராட்பரி தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா


(ரே பிராட்பரி(Ray Bradbury): இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கதைக்கள தேர்விலும் கதைத் சொல்லலிலும் தமக்கென ஓர் வகைபாட்டை உருவாக்கிக்கொண்டு சாதனை புரிந்தவர். அறிவியல் புனைவுகள், அதிர்வு புனைவுகளென வரிசைபடுத்தப்படுகிற இவரது கதைகள் வெகுசனவாசிப்புக்கு மட்டுமல்ல இலக்கிய வாசிப்புக்கும் உரியவை. வெகுசனமென்ற சொல்லை இந்தியப்புரிதலில் இலக்கிய ஈர்ப்பற்ற படித்த நடுத்தர வர்க்கமெனலாம். பிராட்பரியின் சிறுகதைகள் இலக்கிய தரத்திலும் உகந்தவைதான், அதாவது இலக்கியமென்பது வாசிக்கும் கணங்கள்தோறும் அறிவும் மனமும் சேர்ந்தாற்போல கொள்ளும் அனுபவமென்று கொள்வோமெனில்.. டிராகன் என்ற தலைப்பிலான இச்சிறுகதை A Medicine for Melancholy(1) என்ற சிறுகதைத் தொகுப்புக்குள் இடம் பெற்றுள்ளது.)

இரவுநேரம்., அநாதைபூமி. செடிகளும் புற்களும் அவ்வப்போது வீசும் காற்றுக்கு அசைந்துகொடுத்தன, அதுவன்றி வேறு அரவங்களில்லை. சோகத்தில் முழ்கி, பரந்துக்கிடந்த வானத்தை சீய்த்துசெல்வதற்குப் பறவையென்று எதுவுமில்லை. அப்படியான காட்சிகளை அப்பூமி விலக்கி வெகு நாளாயிற்று. முடிவற்ற நீட்சியாக இரவு. அரிதாய் சுக்குநூறாகிற ஒரு சிலகற்களின் தூசுமண்டலத்தில் உருவானதொரு தோற்றத்துடன் பூமி. ஒற்றையாய் ஒரு தீமூட்டம், அருகில் இருமனிதர்கள் மண்டியிட்டு அருகருகே உட்கார்ந்திருந்தனர். அவர்கள் சிந்தனையை இரவு ஆக்ரமித்திருந்தது. இருட்டும் அது ஏற்படுத்தி தந்திருந்த கணிசமான அச்சமும் அவர்கள் இரத்த நாளங்களில் பரவி, நாடித்துடிப்பை அதிகரித்திருந்தது. இறுக்கமான அவர்களின் முகங்களில் ஆட்டமிடும் தீச்சுவாலைகள் ஏற்படுத்திய ஆரஞ்சு நிறம் அவர்களின் கண்மணிகளில் மினுங்குகின்றன. வீரர்கள் இருவரும் அச்சத்தில் உறைந்திருந்தார்கள். சுவாசத்தைக் காதில் வாங்கியபடி, தங்கள் இமைகள் பதட்டத்தில் துடிப்பதை ஆர்வத்துடன் பார்த்தார்கள். இருவரில் ஒருவன் தன்வசமிருந்த வாளினால் எரிதழலைகூட்டுவதற்காகச் சீண்டினான்.

– முண்டமே என்ன செய்கிறாய்? நமது இருப்பை உன் செயலால் காட்டிக்கொடுத்துவிடுவாய் போலிருக்கிறது!

– சும்மா இருந்தால் மட்டும் எதுவும் நடவாதா? எத்தனை கி.மீட்டர் தூரமென்றாலும் எளிதில் டிராகன் பிறரைக் கண்டுபிடித்துவிடுமாம், பிறகென்ன? கடவுளே குளிரா இது! இப்படி வந்து அவதிப்படாமல் கோட்டையிலேயே தங்க நேர்ந்திருந்தால்….!

– என்ன நிம்மதியாய் உறங்கியிருப்பாயா? நீ நினைப்பதுபோல இக்குளிர் உறக்கத்தோடு தொடர்புடையதல்ல, மரணம் சம்பந்தமானது. இத்தனைதூரம் எதற்காக வந்திருக்கிறோம் என்பதை மறக்கவில்லையே?

– சரி..சரி! அதற்கு நாம்தானா கிடைத்தோம். இதுவரை அந்த மிருகத்தால் நமது பட்டணத்திற்கு ஏதேனும் பிரச்சினைகளா? இல்லையே!

– நமக்கென்று தனியாகச் சங்கடங்கள் வரவேண்டுமா, அண்டைப் பட்டணங்களில் பிரச்சினைகளென்றால் நமக்கில்லையா? தனித்த வழிப்போக்கர் பலரை இச் சனியன் விழுங்கித் தொலைத்திருக்கிறது.

– யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன. பேசாமல் திரும்பிச் செல்வோம். அதுதான் நமக்கு நல்லது.

– கொஞ்சம் வாயைமூடுகிறாயா? ஏதோ சத்தம் கேட்கிறது பார்.

இருவரது உடலிலும் நடுக்கம். வெகுநேரம் பேச்சின்றி கவனமாய் காதுகொடுத்து கேட்டார்கள். எங்கும் அமைதி, அதைக் குலைப்பதுபோன்று கருமை நிறத்தில் பட்டுபோன்று ஜொலித்த குதிரைச் சேணங்களில் ஏற்பட்ட அதிர்வுகளால், கால்வைத்து ஏற உதவும் வெள்ளிநிற அங்கவடிகளின் சிணுங்கலும், சிறு முரசுகள் எழுப்பிய ஓசையும் கேட்டன. வேறு அரவங்களில்லை.

இரண்டாவது குதிரைவீரன் புலம்பத் தொடங்கினான்.

– ச்சே, இது பாவப்பட்ட பூமி! இந்த மண்ணில் எது வேண்டுமானாலும் நடக்கும்! நாம் நினைத்துப் பார்க்கவியலாத பயங்கரத்திற்கும் வாய்ப்புண்டு. இந்த இரவு விடியாமலே கூட போகலாம். டிராகனைப் பற்றி என்னவெல்லாம் பேசிக்கொள்கிறார்கள் தெரியுமா? கண்களிரண்டும் தீக்கங்குகள்போலிருக்குமாம். மூச்சுவிடுகிறபோதெல்லாம் தீச்சுவாலையுடன் வெண்மூட்டம்போல புகையை எழுப்புமாம், காடு கரம்பைகளில் புகுந்துவெளிப்படுகிறபோது அத்தனையும் தீப்பற்றி எரிய ஏதோ இடியும் மின்னலும் சேர்ந்துபுறப்பட்டதுபோல இருக்குமாம். பார்த்தமாத்திரத்தில் மிரண்டுஓடுவதால் ஒன்றையொன்றை மிதித்து ஆடுகள் சாவதும்;. பெண்களுக்கு சுகப்பிரவசமாவதும்; கோட்டை கோபுரங்கள் இடிந்து விழுவதும் தினசரி சம்பவங்கள் என்கிறார்கள். விடிந்ததும் சென்று பார்த்தால் மலைச்சரிவுகளெங்கும் பலியான மனிதர்கள். அதை வென்று வருகிறேனென்று நம்மைப்போல புறப்பட்டுத் திரும்பாதவர்கள் எத்தனைபேர் தெரியுமா?

– வாயை மூடுகிறாயா?

– உண்மையில், எனக்கு எதையும் ஒழுங்காய்த் திருப்பிச்சொல்ல போதாது. பாழாய்ப்போன இந்தஇரவினால், எந்த வருடத்தில் நாம் இருக்கிறோம் என்பதுகூட எனக்கு மறந்து போகிறது.

– கி.பி 900. இயேசு பிறந்து 900 ஆண்டுகள் கடந்திருக்கின்றன.

– எப்படிச் சொல்கிறாய்? எனக்கென்னவோ நம்பிக்கையில்லை. இந்த நன்றிகெட்ட உலத்தில் காலமாவது ஒன்றாவது. இங்கே முடிவென்பதே இல்லை. நாம் வந்தவழி ஏற்கனவே சென்றவழி, உபயோகித்த பாதை. மீண்டும் வந்த வழியே திரும்புவேனென்றால் நமது பட்டணத்தையே காணமுடியாமற்போகும், நேற்றுவரை அங்கிருந்த மக்கள், இனிதான் பிறந்தாகவேண்டும் என்கிற நிலையிலிருப்பார்கள். பிறவற்றுக்கும் அதுதான் நிலமை: கோட்டையை எழுப்ப உதவிய கற்கள்கூட உடைபடாதமலைகளின் அங்கமாக இருக்கலாம். இழைத்தும், செதுக்கியும் உருவாக்கப்பட்ட தூலங்கள் முழு கடம்பு மரங்களாக காடுகளில் இருக்கலாம். இதையெல்லாம் எனக்கு எப்படித் தெரியுமென்று கேட்காதே. எனக்குத் தெரியும் அவ்வளவுதான். யார் என்னிடத்தில் சொல்லியிருப்பார்களென்று நினைக்கிறாய், பூமிதான். அதற்கு எல்லாம் தெரியும். இங்கே இந்த மண்ணில் தற்போதைக்கு அந்த மிருகத்தையும் நம்மையும் தவிர வேறு உயிர்களில்லை. கடவுள்தான் நம்மைக் காப்பாற்றவேண்டும்.

– உனக்கு இத்தனை பயமென்றால், கவச உடையை அணியலாமில்லையா?

– என்ன பலன்? டிராகன் எந்ததிசையிலிருந்து வருமென்று எப்படி சொல்ல முடியாதோ அதுபோல எங்கே இருக்கிறதென்பதும் புதிர். எப்படி புறப்பட்டு வருகிறதோ அதுபோல மறையவும் செய்கிறது. எங்குதான் போகின்றதென நம்மால் ஊகிக்க முடியவில்லை. நடப்பது அடக்கட்டும். உன் விருப்பபடி கவச உடையை அணிவோம். எப்படியும் சாகத்தான் போகிறோம், கவச ஆடையிலாவது மரணத்தை தழுவுவோமே!

வெள்ளிநிறத்திலிருந்த கவச உடையை எடுத்தணியத் தொடங்கிய இரண்டாவது வீரன், அதை பாதியில் நிறுத்திவிட்டுத் தலையைத் திருப்பினான்.

இரவில் மூழ்கி, சூன்யமொன்றில் அமிழ்ந்து, எந்த பூமியைச் சார்ந்திருந்ததோ அப்பூமியே பிரசவித்ததுப்போல கன்னகறேலென்றிருந்த வெளியில் காற்று சுழன்று அடித்தது. ஆண்டுகள் பலவாகப் பயணித்ததுபோல காற்றுகொள்ள புழுதி மண்டலம். தொடுவானத்தின் மறுகரையில் எரியுண்ட நட்சத்திரங்களும்(black dwarf)(2) பழுத்துதிர்ந்த இலைகளும், சுழற்காற்றில் சிக்கித் தவிக்கின்றன. புடத்தில்(3) உருக்கி எடுத்ததுபோல காட்சிகள்: எலும்புகள் அரக்குபோல இளகின, மூளைகளில் இரத்தம் உறைந்தது. வழிதவறிய அலைக்கழிக்கப்பட்ட ஆயிரக்கணக்காண உயிர்கள் ஒருமித்தகுரலில் புலம்புவதுபோல ஒரு குரல். இருள் மூடிய ஆழமான அடர்த்தியான புகைமூட்டம். மனிதர்கள், காலங்களென்று எதுவுமற்ற சபிக்கப்பட்ட வெளி. வெறுப்பூட்டும் சூன்யம், நடுங்கச்செய்யும் குளிர், அச்சுறுத்தும் சூறைக்காற்று, அகன்ற வெண்திரைபின்னணியில் ஆகாயத்தில் ஒளிப்பட்டையைத் தீட்டியவண்ணம் முன்னேறும் மின்னலென அனைத்துடனும் மோதிப்பார்ப்பதென தீர்மனித்ததுபோல இரு மனித உயிர்கள். இடியுடன், திடீரென்று பெய்த மழையில் பூமி நனைந்தது. அனைத்தும் மூர்ச்சையாயின. வாயடைத்து, பதட்டத்துடன், குளிரைப் போர்த்திக்கொண்டிருந்த அம்மனிதர்களன்றி வேறு ஜீவன்கள் அங்கில்லை.

– அங்கே அங்கே பார்.. கடவுளே!- முதல் வீரன்.

வெகு தூரத்தில் சீற்றத்துடன் கர்ஜித்தபடி வேகவேகமாக டிராகன் வருவது தெரிந்தது.

வீரர்களிருவரும் பேச்சினை நிறுத்திவிட்டு நிலைமையைப் புரிந்தவர்களாய்க் கவச ஆடையை சரிசெய்தவர்கள், தங்கள் குதிரையில் பாய்ந்து ஏறினார்கள்.

நெருங்கி வரவர, ராட்சத மிருகம் இரவைக்கிழித்துக்கொண்டு வருவதுபோல இருந்தது. சரிவில் இறங்குகையில் வேகமெடுக்கிறபோதெல்லாம் கூடுதலாக ஒளிர்கிற குத்திட்ட மஞ்சள்நிறக் கண். இருள் படர்ந்த மலையிலிருந்து வெளிப்பட்ட வேகத்தில் பள்ளத்தாக்குகளில் மறையவும் செய்கிறது; இருட் தொகுதி போன்றிருந்த அதனுடல் சில நேரங்களில் தெளிவாகவும், சில நேரங்களில் குறிப்பாக வளைந்து முன்னேருகிறபோது தெளிவின்றியும் தெரிகின்றன. மொத்தத்தில் வருகின்ற வழியைப்பொறுத்து அதன் தோற்றம்.

– சீக்கிரம் ஆகட்டும்

அருகில் தெரிந்த பள்ளத்தாக்கைநோக்கி குதிரையைச் செலுத்தினார்கள்

– அந்தப் பக்கமாகத்தான் அது போகும்.

இரும்புக் கையுறை அணிந்த கைகளில் ஈட்டியை ஏந்தியவண்ணம் குதிரையிற்பாய்ந்தார்கள்.

-கடவுளே!

– இப்படியான நேரத்தில் அவன் பெயரைத்தான் சொல்லவேண்டும். கடவுள்தான் நம்மைக் காப்பாற்றவேண்டும்.

டிராகன் இப்போது மலையைச் சுற்றிக்கொண்டுவந்தது. இமையேதுமின்றி பொன்மஞ்சள் நிறத்திலிருந்த அதன் கண் அவர்களை அருகில் ஈர்க்கிறது. அணிந்திருந்த கவச ஆடைகள் தீயைத் தழுவுகின்றன. பயங்கரமாக அனற்றிக்கொண்டு மிருகம் வீரர்கள்மீது பாய்ந்தது.

– கடவுளே! எங்களிடம் இரக்கம் காட்டப்பா!

டிராகனுடைய கண்ணுக்கு மேலாக பாய்ந்த முதல் வீரனின் ஈட்டி வளைந்தது. நிலைகுலைந்த மனிதனை மிருகம் வாரிச்சுருட்டித் தரையில் போட்டு, மிதித்துக் கடந்தது. உடல் சின்னாபின்னமானது.

முப்பது மீட்டர்தூரத்தில் மலையொன்றில் தூக்கி எறியப்பட்ட இரண்டாவது வீரனுக்கும் அவனது குதிரைக்கும் ஏற்பட்ட முடிவிலிருந்து மிருகத்தின் தாக்குதல் எத்தனை கடுமையானதென்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

கிரீச்சிட்டக் குரல்; மஞ்சள், ஆரஞ்சு, கபிலவண்ணஒளிக்கலவைகள்; கண்களை குருடாக்கும் அளவிற்கு வெண்புகை; டிராகன் பின்னர் மறைந்துபோனது…

– என்ன நடந்தது பார்த்தாயா? நான் அப்போதே சொன்னேன். உரத்த குரலில் ஒருவன் கூறினான்.

– அட! கவச உடை குதிரை வீரனா அது. உலகத்திலுள்ள அத்தனை பலத்தையும் அடையாளப்படுத்தக்கூடிய ஒரே பெயர்! அவன் மீதா மோதியிருக்கிறது.

– நிறுத்தமுடியுமா?

– ஒருமுறை இதுபோலத்தான் நடந்து நிறுத்தினேன். இறங்கிபார்த்தால் ஒன்றுமே இல்லை. இந்த அநாதைப் பிரதேசத்தில் நிறுத்த விருப்பமில்லை.

– நாம் எதன் மீதோ மோதியிருக்கிறோம்.

– எதையாவது சொல்லு. நீ பார்க்கத்தானே செய்தாய். எச்சரிக்கை சீழ்க்கையை எத்தனை சத்தமாக ஒலிக்கவிட்டேன். பாவி ஒதுங்கவில்லையே! நான் என்ன செய்யமுடியும்.

சிறு சிறு கசிவுகளாக வெளிப்பட்ட நீராவி சூழ்ந்திருந்த பனிமூட்டத்தை இரண்டாகப் பிளந்தது.

– நேரத்திற்குப் போய்சேரவேண்டும். •பிரெட்! கொஞ்சம் நிலக்கரியைக் கூடுதலாக வாரிப்போடு!

அந்த இரவுநேர இரயில் இரண்டாவதுமுறை எழுப்பிய சீழ்க்கையொலி சுத்தமாகத் துடைத்திருந்த வானத்தை அதிரச்செய்தது. காது செவிடுபடும்படியான ஓசையை எழுப்பியவண்ணம் மலைகளுக்கிடையான கணவாயொன்றுள் பாய்ந்து பின்னர் மேலே பயணித்தது, அடுத்த சில கணங்களில் வடதிசையில் மறைந்துபோனது. குளிர்ந்தகாற்றில் கரைந்துபோகாத அடர்த்தியான வெண்புகையை, வந்து போனதன் அடையாளமாக தேங்கச்செய்து, ஓரே அடியாக மறைந்தும் போனது.
————————————————————-
1. A Medicine for Melancholy(1959) -Ray Bradbury -Doubleday and company-USA

2. A star, approximately the size of the earth, that has undergone gravitational collapse and is in the final stage of evolution for low-mass stars, beginning hot and white and ending cold and dark (black dwarf).
3. உலோகங்களை உருக்கும் கலம் -crucible

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா