முள்பாதை 7 (தெலுங்கு தொடர்கதை)

This entry is part [part not set] of 29 in the series 20091129_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

நான் இறங்கிக் கொண்ட இடத்தில் சாலை ஓரமாக கம்பத்தில் மெலட்டூர் ஐந்து கி.மீ. என்ற பலகை இருந்தது. ஆணி லூசாகி விட்டது போலும். பலகை நேராக இல்லாமல் ஒரு பக்கமாக சாய்ந்திருந்தது. இந்த சாலையில் மக்கள் நடமாடிக் கொண்டுதானே இருப்பார்கள். யாராவது ஒரு ஆணியைக் கொண்டு வந்து அதை சரி செய்தால் என்ன என்று தோன்றியது. சுற்றிலும் பார்வையிட்டேன். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பச்சை வயல்கள்… சில்லென்று வீசும் தென்றல் காற்று.
இங்கே தனியாக எத்தனை நேரம் இருக்க வேண்டியிருக்குமோ? எவனாவது வந்து என் கழுத்தை நெறித்து விட்டால்? திருடன் என்றால் நகைகளைக் கழற்றி கையில் கொடுத்து ஒரு கும்பிடு போட்டு விடலாம். ஆனால்….
ச்சீ… ச்சீ… ஏன் இப்படி கோழையாக யோசிக்கிறேன்? தைரியத்தை திரட்டிக்கொள்ள முயற்சி செய்தேன். பொழுது போவதற்காக நான் பார்த்த டிடெக்டிவ் சினிமாக்கள் அந்த நிமிடம் நினைவுக்கு வந்தன. எவனாவது வந்து கத்தியைக் காட்டி மிரட்டினால்? யாரோ என் முதுகிற்குப் பின்னால் கத்தியால் குத்த வந்தது போல் சட்டென்று திரும்பிப் பார்த்தேன்.
எதிரே பைஜாமா, ஜிப்பா அணிந்திருந்த அதே ஆசாமி தென்பட்டான். நான் சட்டென்று திரும்பியதில் அது வரையில் என்னையே பார்த்துக் கொண்டிருந்தவன் அப்பாவியைப் போல் பார்த்தான்
நான் அவனையே கண்ணிமைக்காமல் பார்த்தேன். இவன் இங்கே எதற்காக இறங்கினான்? என் பின்னால் நின்று கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருப்பானேன்? கண்களில் கறுப்புக் கண்ணாடி அணிந்திருப்பதால் என் கண்களில் தென்பட்ட மிரட்சியை அவன் பார்க்கவில்லை. இல்லாத தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “நான் மெலட்டூருக்குப் போகணும். இங்கே வண்டி ஏதாவது கிடைக்குமா?” என்று அதிகாரம் கலந்த குரலில் கேட்டேன்.
அவன் ஒரு நிமிடம் என்னையே கூர்ந்து பார்த்தான். பிறகு வேகமாக நடந்த அங்கிருந்து போய்விட்டான். நான் கேட்டது அவன் காதில் விழவில்லையா? காது செவிடா? பதில் சொல்லாமல் போவானேன்?
அவன் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அவன் சாலை ஓரத்தில் இருந்த ஒரு கீற்றுக் கொட்டகைக்குள் நுழைவது தென்பட்டது. சுற்று வட்டாரத்தில் மனித நடமாட்டம் இருப்பதற்கு அடையாளம் அந்த கொட்டகைதான். அது காபி ஹோட்டலா அல்லது பெட்டிக்கடையா, அல்லது இரண்டும் சேர்ந்த இடமா என்று தெரியவில்லை. கொட்டகையின் வெளிப்புறம் ஒரு இடம் பாக்கியில்லாமல் சினிமா போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
மாட்டு வண்டி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இறங்கிய இடத்திலேயே மாட்டு வண்டி கட்டாயம் கிடைக்கும் என்று அப்பா சொல்லியிருந்தார். இப்போ என்ன செய்வது? சீரியஸாக யோசித்தபடி நின்றிருந்தேன். கீற்றுக் கொட்டைகையிலிருந்து பத்து பன்னிரெண்டு வயது இருக்கும் சிறுவன் ஒருவன் கையில் சோடா பாட்டிலுடன் வேகமாக ஓடி வந்து என் அருகில் நின்றான். “சோடா குடிக்கிறீங்களா?” என்று கேட்டுக் கொண்டே என் பதிலுக்காக காத்திருக்காமல் பாட்டிலை திறக்கப் போனான்.
நான் உடனே தடுத்துவிட்டு “வேண்டாம்” என்றேன்.
“வேண்டாமா? அவர் கொடுக்கச் சொன்னாரே?” என்றான்.
“அவரா? யார் அவர்?” என்று கேட்டேன்.
“கிருஷ்ணன் சார்.”
“யாரந்த கிருஷ்ணன்?”
என் குரலில் தென்பட்ட கடுமைக்கு அந்தப் பையன் திகைத்துப் போய் ஓரடி பின்னால் வைத்தான்.
“சோடா கீடா குடிப்பதற்கு நான் ஒன்றும் வயிற்றுவலியால் துடிக்கவில்லை என்று சொல்லு” என்றேன். ராஸ்கெல்! என் பின்னாலேயே பஸ்ஸை விட்டு இறங்கியதோடு குடிக்க சோடா வேறு அனுப்புகிறானா? நான் இந்த இடத்திற்குப் புதியவள் என்று தெரிந்துவிட்டது போலும். அதான் உரிமை எடுத்துக் கொள்ளப் பார்க்கிறான். அருகில் வரட்டும். நன்றாகப் பாடம் கற்பிக்கிறேன். மனதிலேயே கறுவிக் கொண்டேன்.
சோடா பையன் என்ன நினைத்தானோ தெரியவில்லை. மறுபேச்சு பேசாமல் திரும்பி ஓடினான்.
“தம்பி! உன்னைத்தான்.” பின்னாலிருந்து அழைத்தேன்.
அவன் திரும்பிப் பார்த்தான். சோடா வேண்டுமென்று கேட்கக்கூடும் என்று நினைத்தானோ என்னவோ.
“இங்கே வண்டி எதுவும் இல்லையா?” என்று கேட்டேன்.
“வழக்கமாக இரட்டை மாட்டு வண்டி இருக்கும். ஆனால் இப்போ இல்லை. சவாரிக்கு போயிருக்கு. இப்போதைக்கு திரும்பி வராது” என்று சொல்லிவிட்டு ஓடி விட்டான். அங்கே அவன் என்ன சொன்னானோ தெரியாது. கிருஷ்ணன் என்று அழைக்கபட்ட அந்த ஆசாமி சிரித்துக் கொண்டே திரும்பி என் பக்கம் பார்த்துவிட்டு சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்து கடை முதலாளியிடம் கொடுத்தான்.
கீற்றுக் கொட்டகைக்குப் பின்னாலிருந்து இரட்டை மாட்டு வண்டி ஒன்று ஒய்யாரமாக சாலை மீது வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் என் முகம் மலர்ந்தது. வண்டியும் காலியாக இருந்தது. இந்த வண்டியில் ஊருக்குப் போய்ச் சேர்ந்து விடலாம் என்ற தைரியம் வந்தது. மாடுகள் உயரமாகவும், பலம் மிகுந்தவைப் போலவும் தென்பட்டன. வண்டிக்கு பொருத்தப் பட்டிருந்த கூரை புதியதாகவும், அழகாகவும் இருந்தது. உளளே மெத்தென்று ஜமக்காளம் விரிக்கப் பட்டிருந்தது. வண்டிக்கு முன்னால் சற்று குள்ளமாக, முழங்காலுக்கு மேல் மடித்து கட்டிய வேட்டியுடன், வாயில் சுருட்டுடன் ஒருவன் நடந்து கொண்டிருந்தான். அவன் மூக்கணாங்கயிற்றை பிடித்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் மாடுகள் வளர்ப்பு பிராணிகளைப் போல் அவன் பின்னாலேயே வந்து கொண்டிருந்தன.
“இதோ … உன்னைத்தான்.” கைகளை தட்டி அழைத்தேன்.
அவன் அருகில் வந்தான். வண்டியும் அவன் பின்னாலேயே வந்து நின்றது.
“இந்த வண்டி யாருடையது? எங்கே போய்க் கொண்டிருக்கிறது?” என்று கேட்டேன். வாயிலிருந்த சுருட்டு கீழே விழுந்து விடுமோ என்பது போல் அவன் வியப்புடன் பார்த்தான்.
“உன்னைத்தான் கேட்கிறேன். நான் மெலட்டூருக்குப் போகணும். இந்த வண்டி அங்கே போகுமா?”
“ஆமாம். அங்கேதான் போகிறது. நீங்க இந்த வண்டியில் ஏறிக் கொள்ளலாம்.” பின்னாலிருந்து குரல் கேட்டது.
திரும்பிப் பார்த்தேன். கிருஷ்ணன் என்று சொல்லப்பட்ட அந்த வில்லன் பேர்வழி வண்டியை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவன் இரு கைகளிலிலும் என் பெட்டி படுக்கை இருந்தன.
என்ன நிர்பந்தம் இது? என்னிடம் கேட்காமல், என் விருப்பு வெறுப்புகளை லட்சியம் செய்யாமல் சாமான்களை வண்டியில் ஏற்றிய அவனுடைய உரிமை மீறலுக்கு எனக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. கசப்பை விழுங்கியவள்போல் முகத்தை வைத்துக் கொண்டேன்.
“ஏறுங்க” என்றான்.
வண்டியின் பக்கம் பார்த்தேன். ரொம்ப உயரமாக இருந்தது. எப்படி ஏறுவது?
“நான் உதவி செய்யட்டுமா?” மரியாதை கலந்த குரலில் கேட்டான்.
“உதவியா? எப்படி?” என்றேன்.
அவன் என் பின்னால் வந்து நின்று கொண்டான். என்ன செய்யப் போகிறான் என்று நான் உணருவதற்குள் இரண்டு கைகளாலேயும் என் இடுப்பைப் பற்றிக்கொண்டு உயரே தூக்கி அப்படியே வண்டிக்குள் தள்ளி விட்டான். சட்டென்று உள்ளே இருந்த கம்பியைப் பிடித்துக் கொண்டேன். இல்லாவிட்டால் தொபேலென்று விழுந்திருப்பேன். அவ்வளவு அலட்சியமாக ஏதோ பொருளை கடாசுவதுபோல் வண்டிக்குள் ஏற்றிவிட்டான்.
வண்டிக்குள் சரியாக உட்கார்ந்து கொண்ட பிறகு கறுப்புக் கண்ணாடியைக் கழற்றி பின்னால் திரும்பி கண்ணாலேயே எரித்து விடுவது போல் முறைத்துப் பார்த்தேன். ஆனால் என்ன பயன்? அவன் என் பக்கம் திரும்பவே இல்லை. வண்டிக்கு அந்தப் பக்கமாக போய் விட்டான். இடியட்! இன்னும் ஒரு நிமிடம் என் கண் முன்னால் இருந்திருந்தால் என் கை அவன் கன்னத்தைப் பதம் பார்த்திருக்கும்.
“சாமிகண்ணு! நீ நடந்து வா. வண்டியை நான் ஓட்டுகிறேன்” என்ற குரல் கேட்டது.
“சரிங்க அய்யா.” சாமிகண்ணு பதில் சொன்னான்.
நான் வெளியில் எட்டிப் பார்த்தேன். யாருமே தென்படவில்லை. மறுபடியும் இந்தப் பக்கம் திரும்பிய போது கிருஷ்ணன் வண்டி சக்கரத்தைப் பிடித்துக் கொண்டு முன்னால் உட்கார்ந்து கொள்வது தென்பட்டது.
என்ன? இவனும் என்னுடன் வரப் போகிறானா? திகைப்பும் வியப்பும் ஒன்றுசேர சிலையாகி விட்டேன். வழியில் இவன் போக்கிரித்தனமாக நடந்து கொண்டால்? சாமிகண்ணு கூட வரும் போது அப்படி நடந்து கொள்வதற்கு துணிச்சல் இருக்குமா என்ன? மனதை திடப்படுத்திக் கொண்டேன். சாமிகண்ணு என்னுடைய மெய்காப்பாளன் போல் வண்டியின் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தான்.
தொலைவில் ஆணும் பெண்ணுமாக வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்த என்னால் சுற்றிலும் இருந்த பசுமையை ரசிக்க முடியவில்லை. கறுப்புக் கண்ணாடியை விரல்களுக்கு நடுவில் சுழற்றிக்கொண்டே ஏதோ யோசனையில் ஆழ்ந்தேன். கிருஷ்ணன் என் பக்கம் திரும்பியது போல் தோன்றவே திரும்பிப் பார்த்தேன். அவன் முறுவலுடன் ஏதோ சொல்ல வந்தான். பார்வையாலேயே எரித்து சாம்பலாக்குவது போல் கோபமாக பார்த்தேன்.
அவன் முகத்தில் சிரிப்பு மறைந்து விட்டது. புருவங்களை உயர்த்தி வினோதமாக என் பக்கம் பார்த்தான். ஏதோ சொல்ல வந்தவன், பிறகு என்ன நினைத்துக் கொண்டானோ தெரியவில்லை. சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
நான் மட்டும் அவனை கவனமாக பார்க்கத் தொடங்கினேன். பின்னாலிருந்து பார்க்கும் போது அவன் உருவம், தலையை வாரிக்கொண்ட விதம், கம்பீரமாக உட்கார்ந்திருந்த தோரணை எல்லாம் அழகாகத்தான் இருந்தது. வில்லன்களில் அழகானவர்கள் இல்லையா என்ன?
வில்லன்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். பெரிய மீசை, சிவந்த கண்கள், குடித்து குடித்து உப்பிவிட்ட கன்னங்கள்… பார்க்கவே பயங்கரமான தோற்றத்துடன் இருப்பார்கள் முதல் வகையைச் சேர்ந்தவர்கள். ஆனால் இரண்டாவது பிரிவைத் சேர்ந்தவர்களோ அழகான தோற்றத்துடன், பெரிய மனிதர்களாக சமுதாயத்தில் நடமாடிக் கொண்டிருப்பார்கள். புத்தி மட்டும் விஷநாகம்தான். இந்தக் கிருஷ்ணன் என்பவன் இரண்டாவது பிரிவைச் சேர்ந்தவனாக இருக்கக்கூடும்.
இப்படிப்பட்டவர்களை அடையாளம் கண்டுகொள்வது ரொம்ப கஷ்டம். மெலட்டூருக்குப் போனதும் இந்தக் கிருஷ்ணன் யாரென்று விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை வாட்சைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
தொலைவில் ஊர் ஏதோ இருப்பது போல் கண்ணுக்குத் தெரிந்தது. வயல்வெளி முடிந்ததும் வலது பக்கம் பெரிய தோட்டம் தென்பட்டது. அதைச் சுற்றிலும் முள் கம்பி வேலியிருந்தது. மாம்பழத் தோட்டம் போலும். உயரமாக அடர்த்தியாக மாமரங்கள் தென்பட்டன. உள்ளே ஏதாவது செடி கொடிகள் இருக்குமோ என்னவோ. தோட்டத்தின் பக்கத்திலிருந்து வண்டி போகும் போது பலவிதமான பூக்களின் நறுமணம் காற்றில் பரவியிருப்பதை உணர முடிந்தது.
“சாமிகண்ணு! நான் இங்கே இறங்கிக் கொள்கிறேன். சின்னம்மாவை வீட்டுக்கு அழைத்துப் போ.” கிருஷ்ணன் சொன்னான்.
“சரிங்க அய்யா.” சாமிகண்ணு வண்டியின் முன் பக்கம் போன்னான். கிருஷ்ணன் வண்டியை விட்டு இறங்கி¡ன்.
சாமிகண்ணு வண்டியின் முன்னால் நடக்கத் தொடங்கினான். மாட்டு வண்டி அவன் பின்னால் போகத் தொடங்கியது. கிருஷ்ணன் வேகமாக தோட்டத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். நடுவில் ஒரு தடவை திரும்பிப் பார்த்தால் முறுவலுடன் நன்றியைத் தெரிவிப்பதுபோல் பார்ப்போம் என்று நினைத்தேன்.
ஆனால் அவன் திரும்பிப் பார்க்கவே இல்லை. போகட்டும். அவன் தலையெழுத்து அப்படி. எனக்கென்ன வந்தது? தலையைத் திருப்பிக் கொண்டு சாலையைப் பார்க்கத் தொடங்கினான்.
வண்டி நூறுகஜம் தாண்டி முனை திரும்பியதோ இல்லையோ ஊர் தொடங்கிவிட்டது. ஊரின் எல்லை என்பதாலோ என்னவோ அந்த சுற்று வட்டாரத்தில் அதிகமாக வீடுகள் இருக்கவில்லை. சாலையின் வலது பக்கம் பெரிய கிணறு ஒன்று தென்பட்டது. கிணற்றைச் சுற்றிலும் பெண்கள் நிறைய பேர் கும்பலாக இருந்தார்கள். சிலர் கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் கிணற்றடியில் அமர்ந்து கொண்டு பித்தளை குடங்களை பளபளவென்று தேய்த்துக் கொண்டிருந்தார்கள். சிலர் புடவையை குறுக்காக கட்டிக் கொண்டு மற்றவர்களுடன் பேசிக் கொண்டே குளித்துக் கொண்டிருந்தார்கள்.
நான் பயணம் செய்து கொண்டிருந்த வண்டி கிணற்று பக்கம் போய்க் கொண்டிருந்தது. கிணற்றடியில் குடத்தை தேய்த்துக் கொண்டிந்த அம்மாள் வண்டியையும், வண்டியில் இருந்த என்னையும் பார்த்துவிட்டு பக்கத்தில் இருந்தவளை முழங்கையால் இடித்தாள். அந்த அம்மாள் திரும்பிப் பார்த்துவிட்டு மேலும் இரண்டு பேருக்கு ஜாடைகாட்டி என்னை சுட்டிக் காட்டினாள். மொத்தத்தில் எல்லோரும் தங்களுடைய வேலையை நிறுத்திவிட்டு இந்தப் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நானும் முறுவலுடன் அவர்கள் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களை முழவதுமாக பார்ப்பதற்குள் வண்டி அந்த இடத்தைத் தாண்டிவிட்டது. பின்னாலிருந்து ஒரு அம்மாள் குரல் கொடுத்தாள்.
“சாமிகண்ணு! யார் அது?”
“சின்னம்மா.” பின்னால் திரும்பிப் பார்க்காமலேயே பதிலளித்தான்.
“எந்த ஊரு?”
“பட்டணம்.”
சாமிகண்ணு சொன்ன பதிலைக் கேட்டதும் எனக்குச் சிரிப்புதான் வந்தது. உண்மையில் என் பெயரோ, ஊரோ அவனுக்குத் தெரியாது. ஆனால் அந்த விஷயம் வெளியில் தெரியாத வகையில் அவன் பதில்கள் சாமர்த்தியமாக இருந்தன.
வண்டி ஊருக்குள் நுழைந்தது. எல்லாமே சின்னச்சின்ன வீடுகள்தான். ஓலை குடிசைகளும் இருந்தன. வீட்டு வாசலில் உட்கார்ந்து கொள்வதற்கு வசதியாக திண்ணை இருந்தது. பசுமாடுகளை கறவைக்குக் கொண்டு போகும் இடையர்கள் சிலர் வண்டியின் பின்னாலேயே கொஞ்ச தூரம் ஊர்வலமாக வந்தார்கள்,
கடைத்தெருவில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை. ஓரிருவர் அப்பொழுதுதான் எழுந்து கொண்டதற்கு அடையாளமாகத் திண்ணையில் அமர்ந்து வாயைக் கொப்பளித்துக் கொண்டிருந்தார்கள். கிராமங்களில் எல்லோரும் விடியற்காலையில் எழுந்து வேலைக்குப் போய் விடுவார்கள் என்று அப்பா சொல்ல பலமுறை கேட்டிருக்கிறேன். சோம்பேறியாக இருப்பவர்களுக்கு பட்டணம் கிராமம் என்ற வித்தியாசம் இருக்காதோ.
நான் பேக்கைத் திறந்து அப்பா எழுதிக் கொடுத்த பேப்பரை எடுத்துப் பார்த்தேன். தெருவின் இடது பக்கம் பஞ்சாயத்து ஆபீசு தென்பட்டது. அதற்கு அடுத்ததாக வரும் நூலகத்திற்கு எதிரே இருந்த சந்தில் நுழைந்து வலது பக்கம் திரும்பணும்.
வண்டி தெருவுக்குள் நுழைந்ததும் என் இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. இனம் புரியாத ஆர்வம், தவிப்பு என்னை ஒரு நிலையில் இருக்க விடவில்லை. என் கண்கள் அந்தத் தெருவில் இடது புறமாக பெரிய அரச மரம் இருந்த வீட்டைத் தேடிக் கொண்டிருந்தன. அதே வரிசையில் இரண்டு வீடுகளுக்கு முன்னால் அரச மரம் இருந்தது. இந்த இரண்டில் எந்த வீடாக இருக்கும்? முதலாவது அரசமரம் இருந்த வீட்டு வாசலில் வயதான கிழவி ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். இரணடாவது வீட்டு வாசற்படியில் நான்கு பெண் குழந்தைகள் நின்றிருந்தார்கள். அந்த வீடாகத்தான் இருக்க வேண்டும். வண்டியைப் பார்த்ததும் அவர்களில் ஒருத்தி உள்ளே ஓடினாள். வண்டி சரியாக அந்த வீட்டு வாசலுக்கு முன்னால் வந்து நின்றது.

(தொடரும்)

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்