முள்பாதை 4 (புகழ்பெற்ற தெலுங்கு நாவல் தொடர்)

This entry is part [part not set] of 35 in the series 20091106_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

இருவரும் வீட்டுக்குத் திரும்பி வந்த போது வாசலிலேயே திருநாகம் மாமி எதிரில் வந்தாள். காரை விட்டு இறங்கி உள்ளே வந்து கொண்டிருந்த நான் மாமியைப் பார்த்தும் பார்க்காதது போல் உள்ளே போகப் போனேன்.
மாமி என் பின்னாடியே வந்து “சின்னம்மா!” என்று அழைத்தாள்.
“என்ன?” என்றேன் திரும்பிப் பார்த்துக் கொண்டே.
கையிலிருந்த காகிதத்தைக் காண்பித்து ஹோவென்று அழத் தொடங்கினாள்.
“என்ன விஷயம்? என்ன நடந்தது?” நானும் அப்பாவும் ஒரே நேரத்தில் கேட்டோம். சட்டென்று மாமியின் கையிலிருந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தேன். அவளுடைய மாப்பிள்ளை கொடுத்திருந்த டெலிகிராம் அது.
“காமாட்சி சீரியஸ். உடனே புறப்பட்டு வரவும்” என்று இருந்தது.
காமாட்சி மாமியின் ஒரே மகள். அவளுக்கு இரண்டு குழந்தைகள். கணவனுடன் காசியில் இருக்கிறாள். கணவன் அங்கே கோவிலில் அர்ச்சகராக இருக்கிறான்.
“பத்து நாட்களுக்கு முன் ஜுரமாக கிடக்கிறாள். எழுந்து நடமாடக்கூட முடியவில்லை என்று மாப்பிள்ளை எழுதியிருந்தார். அப்பொழுதே போகணு என்று என் மனசு கிடந்து தவித்தது. அம்மா சம்மதிக்கவில்லை. நான் போய்விட்டால் இங்கே எல்லோருக்கும் இடைஞ்சலாக இருக்கும், போக வேண்டாம்னு சொல்லிவிட்டாள். இப்போ என்ன செய்வேன்? கடைசி தடவையாக முகத்தைப் பார்க்கக் கூட கொடுப்பினை இருக்கோ இல்லையோ?” என்று மறுபடியும் அழுதாள்.
நானும் அப்பாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். நான் சட்டென்று அருகில் சென்று மாமியின் கையைப் பற்றிக் கொண்டு “அப்படி எதுவும் இருக்காது. பதற்றப் படாதீங்க. நீங்க ஒரு தடவை வந்தால் நன்றாக இருக்கும் என்று இப்படி தந்தி கொடுத்திருப்பாங்களோ என்னவோ” என்றேன் ஆறுதல் சொல்வதுபோல்.
“இல்லை சின்னம்மா! காமாட்சிக்கு அம்மாவின் சுபாவம் நன்றாகத் தெரியும். ரொம்பவும் முடியாமல் இருந்தால் தவிர இப்படி தந்தி கொடுக்க சம்மதிக்க மாட்டாள்.”
அப்பா வாட்சைப் பார்த்துக்கொண்டார். “நீங்க தாமதம் செய்யாமல் உடனே கிளம்புங்கள். ரயிலுக்கு நாழியாகிவிட்டது. ஸ்டேஷனுக்குக் காரில் கொண்டு போய் விடுகிறேன்” என்றார்.
மாமி அப்பாவை கடவுளைப் பார்ப்பது போல் பார்த்துவிடடு உள்ளே போய்விட்டாள்.
நான் அங்கேயே சிலையாக நின்றவிட்டேன். என் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யத் தொடங்கியது. மின்னல் வேகத்தில் யோசனை வந்தது எனக்கு. மாமியுடன் நானும் கிளம்பிப் போனால்? சாரதி வந்த பிறகு அவனிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்குக் கண்ணாமூச்சி ஆடுவதை விட, அவன் வரும் போது நான் இங்கே இல்லாமல் இருப்பது உத்தமம் இல்லையா? யோசனை வந்ததோ இல்லையோ உடனே அப்பாவிடம் சொல்லிவிட்டேன்.
அப்பா முதலில் திகைத்துப் போனார். நான் மூளை இருந்ததான் பேசுகிறேனா என்ற சந்தேகம் வந்துவிட்டது போல் பார்க்கத் தொடங்கினார்.
“பாவம் டாடீ! மாமி ஏற்கனவே மகளைப் பற்றிய கவலையில் இருக்கிறாள். வயதானவள். துணைக்கு யாரும் இல்லாமல் அவ்வளவு தூரம் தனியாக எப்படிப் போவாள்? நம் வீட்டில் ரொம்ப நாளாக வேலை செய்கிறாள். நமக்காகவே உழைத்து வருகிறாள். இந்தச் சின்ன உதவி கூட நாம் செய்யவில்லை என்றால் எப்படி? நானும் மாமியுடன் போகிறேன்” என்றேன்.
அப்பா சிரித்துவிட்டார். “பலோ… பலே. சற்று நேரத்திற்கு முன் நாம் கடைத்தெருவுக்குப் போகும் முன்னால் அந்தம்மாளுடன் பேசிய மீனா நீ தானா? இதற்குள் இவ்வளவு மாற்றம் எப்படி வந்தது? ரொம்ப ஆச்சரியமாக இருக்கே?” என்றார் ஒன்றும் தெரியாத அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டே.
“நான் போகிறேன் டாடீ. சாரதியிடமிருந்து தப்பித்துக் கொள்ள இதைவிட நல்ல வாய்ப்பு என்ன இருக்க முடியும்?” அசல் விஷயத்தைச் சொல்லிவிட்டேன்.
அப்பாவின் முகம் கம்பீரமாக மாறியது. “உன் அம்மாவுக்குத் தெரிந்தால்?”
“தெரியட்டுமே. மிஞ்சிப் போனால் என்ன செய்துவிடுவாள்? நன்றாகத் திட்டுவாள். அவ்வளவுதானே. முதலில் இந்த ஆபத்து நீங்கிவிடும் இல்லையா.”
“இப்படி குறுக்கு வழிகளைத் தேடிக்கொண்டு தொலைவாக போவதைவிட சாரதியிடம் நேருக்கு நேர் உன விருப்பமின்மையைச் சொல்லிவிடுவது நல்லது மீனா.”
“எப்படிச் சொல்ல முடியும் டாடீ? அவனைப் பார்த்தாலே எனக்கு வாயிலிருந்து வார்த்தை வராது. இது போன்ற அப்ரியமான விஷயத்தை எப்படிச் சொல்வது? அதோடு எதுக்காகச் சொல்லணும்? கடைசி வரையிலும் நான் அவனுக்குக் கிடைக்கப் போவதாக பிரமையில் ஆழ்த்தி கடைசி நிமிடத்தில் குட்டை உடைக்கணும். அவனைப் போன்வர்களுக்கு அப்படித்தான் பாடம் கற்பிக்கணும்.”
“அப்படி என்றால் மாமியுடன் காசிக்குப் போவதாக முடிவு செய்து விட்டாய் இல்லையா.”
ஆமாம் என்பது போல் தலையை அசைத்தேன்.
“சரி, உன் விருப்பம்.”
நான் சந்தோஷத்துடன் உள்ளே விரைந்தேன். என்னைப் பார்த்ததும் “இதே முடிந்து விட்டதும்மா” என்று மாமி சொன்னாள், டிரங்க் பெட்டியைப் பூட்டிக்கொண்டே.
“ஒரு நிமிடம் இருங்கள். நானும் உங்களுடன் வருகிறேன்.” நான் சட்டென்று என் அறைக்குள் சென்று சூட்கேஸில் துணிமணி எடுத்து வைக்கத் தொடங்கினேன். சந்தடி கேட்டு மாமி உள்ளே எட்டிப் பார்த்தாள். நான் சூட்கேஸை எடுத்து வைப்பதைப் பார்த்துவிட்டு வியப்புடன் “சின்னம்மா! நீங்களும் ஏதாவது ஊருக்குப் போறீங்களா?” என்று கேட்டாள்.
“நானும் உங்களுடன் காசிக்கு வருகிறேன். அவ்வளவு தூரம் நீங்கள் தனியாக எப்படிப் போக முடியும்? உங்களுக்குத் துணையாக என்னைப் போகச் சொல்லி அப்பா சொல்லிவிட்டார்” என்றேன்.
மாமி கண்களை அகல விரித்துப் பார்த்துவிட்டு இரண்டே எட்டில் அருகில் வந்து என் கையைப் பற்றிக் கொண்டாள். “இதென்ன? நீங்க என்னுடன் வர்றீங்களா? உங்களுக்கு மூளை கலங்கி விட்டதா என்ன? நாளையோ அதற்கு மறுநாளோ மாப்பிள்ளை இங்கே வரப் போகிறார் என்ற விஷயத்தை மறந்து போய் விட்டீங்களா?” என்றாள்.
“வந்தால் வரட்டுமே? உங்களை விடவா?” என்றேன்.
மாமி இரண்டு கன்னத்திலும் கையால் படபடவென்று போட்டுக்கொண்டாள். “என்ன வார்த்தை சொல்லிட்டீங்க? ஒரு நாளும் அப்படிச் சொல்லாதீங்க.” மாமி கண்களில் நீர் நிறைந்து விட்டது. “சின்னம்மா! நீங்க இத்தனை நல்லவங்களாக இருப்பீங்கன்னு கனவில் கூட நினைக்கவில்லை. என் மீது உங்களுக்கு இவ்வளவு அன்பு இருப்பது இதுநாள் வரையிலும் தெரியாது. என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் கருணை நிறைந்த பார்வையும், ஆதரவும் எனக்குப் போதும். அவற்றின் பலத்துடன் எத்தனை தூரம் வேண்டுமானாலும் என்னால் பயணம் செய்ய முடியும்” என்றாள் தழுதழுக்கும் குரலில்.
கால் மணி நேரம் வாதம் புரிந்தும் மாமி என் பேச்சைக் கேட்பதாக இல்லை. துணையாக நான் வருவதற்கு சம்மதிக்கவும் இல்லை. நானும் வருவதாக இருந்தால் தன்னுடைய பயணத்தையே ரத்து செய்து கொள்வதாகத் தீர்மானமாகச் சொல்லிவிட்டாள். எனக்கு ஆத்திரத்தில் உடல் பற்றி எரிவது போல் இருந்தது.
ரயிலுக்கு நேரமாகிவிட்டதென்று அப்பா அவசரப் படுத்தினார். மூவரும் ஸ்டேஷனுக்குப் போனோம். அப்பா டிக்கெட் வாங்கி வந்து மாமியின் கையில் கொடுத்தார். பர்ஸிலிருந்து கொஞ்சம் பணத்தை எடுத்து மாமியிடம் தந்து, மேலும் தேவைப்பட்டால் கடிதம் எழுதச் சொல்லி சொன்னார்.
மாமி எல்லாவற்றுக்கும் தலையை அசைத்துவிட்டு அவசர அவசரமாகப் பெட்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ரயில் காது செவிடாகும்படி விசில் ஊதிவிட்டுக் கிளம்பிவிட்டது. எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் சாமர்த்தியம் இல்லாமல் போய் விட்டதே என்று உள்ளூர நொந்து கொண்டேன்.
எதற்காக இப்படி பயப்படணும்? எதற்காக இவ்வளவு தூரம் யோசிக்கணும்? சாரதி வந்த பிறகு உன்னை எனக்குப் பிடிக்கவில்லை என்று முகத்திற்கு நேராகவே சொல்லிவிட்டால் என்ன? ஊஹ¤ம்… அவன் முன்னிலையில் என் குரல் ஊமையாகிவிடும். என் தைரியமும், துணிச்சலும் எங்கேயோ காணாமல் போய்விடும். ஏனோ தெரியவில்லை. என் விருப்பமின்மையை அவன் லட்சியப்படுத்தமாட்டான் என்று எனக்குத் தோன்றியது.
தோற்றுப் போய் விட்டவள் போல் மௌனமாக உட்கார்ந்திருந்த என்னிடம் வந்த அப்பா “மீனா!” என்று அழைத்தார்.
இயந்திரம் போல் அவர் பக்கம் திரும்பினேன்.
“உண்மையிலேயே நீ எங்கேயாவது போக வேண்டும் என்று நினைக்கிறாயா?”
“கிடைத்த வாய்ப்பு கை நழுவிவிட்டது. இனி எங்கே போக முடியும்?” ஏமாற்றத்துடன் சொன்னேன்.
“நிஜமாகவே போகணும் என்று நீ விரும்பினால் ஒரு இடம் இருக்கிறது. என்னால் உன்னை அங்கே அனுப்பி வைக்க முடியும்.”
மனதின் அடியில் புதைந்து போக இருந்த ஆசை மீண்டும் துளிர்த்தது. “எங்கே அனுப்பி வைப்பீங்க என்னை? யார் இருக்காங்க நமக்கு?” என்றேன்.
“நீ கமலா அத்தையிடம் போய் நாலைந்து நாட்கள் இருந்துவிட்டு வா.”
“கமலா அத்தையா?”
“ஆமாம். கமலாவும், அவள் குழந்தைகளும் உன்னைப் பார்க்கணும்னு ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். உனக்கும் காரியம் ஆனாற்போல் இருக்கும்.”
“கமலா அத்தை என்றால் மெலட்டூர்…” பாதியில் நிறுத்திவிட்டேன்.
கமலா அத்தையைப் பற்றி அம்மா அப்பா பேசிக் கொள்ளும் போது கேள்விப் பட்டிருக்கிறேன்.. அப்பாவுடைய சித்தியின் மகள். தங்கை உறவு. கமலா அத்தையிடம், அவளுடைய குடும்பத்தாரிடம் அம்மாவுக்கு நல்ல அபிப்பிராயம் இருந்தது இல்லை. எங்க இருவரின் குடும்பங்களுக்கு நடுவில் போக்குவரத்தோ, பரஸ்பரம் குசலம் விசாரித்துக் கொள்ளும் பழக்கமோ என்றுமே இருந்தது இல்லை.
“என்ன மீனா?”
“முன்பின் தெரியாதவர்கள் வீட்டுக்கு எப்படிப் போக முடியும்? அதுவும் இது போன்ற சமயத்தில்?” நெற்றியைச் சுளித்தேன். அம்மாவின் பேச்சுக்கள் மூலமாக அவர்கள் மீது எனக்கு ரொம்ப தாழ்வான அபிப்பிராயம் ஏற்கனவே இருந்து வந்தது. படிப்பும், நாகரிகமும் இல்லாத வெறும் பட்டிக்காட்டு ஜென்மங்கள். எங்கள் குடும்பம் வசதியாக இருப்பதைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல் சண்டை போட்டுக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வருவதை நிறுத்தி விட்டவர்கள். அப்படிப் பட்டவர்கள் வீட்டுக்கு நான் எப்படிப் போவேன்? அங்கே ஒரு நாள் என்ன? ஒரு நிமிடம் கூட என்னால் இருக்க முடியாது.
“போய் விட்டு வா மீனா! என் பேச்சை மறுக்காதே.” அப்பா சொன்னார்.
“முன்பின் தெரியாதவர்கள் வீட்டுக்குப் போகணும் என்றால் எனக்கு எப்படியோ இருக்கும் டாடீ.” முணுமுணுப்பது போல் சொன்னேன்.
“அவர்கள் உனக்கு வேற்று மனிதர்கள் இல்லை மீனா. போய்ப் பார்த்தால் உனக்கே தெரியும். நீ அவர்களைப் பார்க்கவில்லையே தவிர அவர்களுக்கு உன்னைப் பற்றி எல்லாம் தெரியும்.” அப்பாவின் முகம் கம்பீரமாக மாறியது. “மீனா! உங்க அம்மா உருவகப்படுத்திச் சொன்ன அளவுக்கு அவர்கள் பட்டிகாடுகள், பழமைவாதிகள் இல்லை.” அப்பாவின் குரலில் அவர்கள் மீது அவருக்கு இருந்த அபிமானம் வெளிப்பட்டது.
“அங்கே யாரெல்லாம் இருக்கிறார்கள்?” தயங்கிக் கொண்டே கேட்டேன்.
“உன் வயதை ஒத்தவள்தான் ராஜேஸ்வரி. எல்லோரும் ராஜி என்று அழைப்பார்கள். அவளுக்குப் பிறகு காமேஸ்வரி. அவளுக்கு அடுத்தது ஒரு பையன். பெயர் மது. கடைக்குட்டி மாணிக்கவல்லி. மணி என்று கூப்பிடுவார்கள். உன்னைப் பார்க்கணும்னு ரொம்ப நாளாகத் துடிக்கிறார்கள். நான் எப்போ போனாலும் மாமா… மீனாவை அழைத்துக்கிட்டு வாங்கன்னு என் உயிரை எடுத்து விடுவார்கள்.”
“என்னை பற்றிக் கேட்பார்களா? நீங்க அங்கே அடிக்கடி போவீர்களா?” வியப்புடன் கேட்டேன்.
அப்பாவின் முகம் சிவந்துவிட்டது. “ஆமாம் மீனா. சிலசமயம் இந்தத் திருட்டுத் தனத்தை நினைத்தால் எனக்கே வெட்கமாக இருக்கும். நான் அங்கே போனது தெரிந்தால் உங்க அம்மா செய்யும் ரகளையை சகித்துக் கொள்வது கஷ்டம். எப்பொழுதாவது தஞ்சாவூர் பக்கம் போனால் சில சமயம் அங்கே போய்விட்டு வருவேன். சமீபகாலத்தில் போய் ரொம்ப நாள் ஆகிவிட்டது.”
“அவர்கள் நம் விட்டுக்கு ஏன் வருவதில்லை டாடீ?”
அப்பா உடனே பதில் சொல்லவில்லை. அவர் முகத்தில் வேதனையும், வருத்தமும் கலந்திருந்தன. அவர் மனதில் சுழன்று கொண்டிருந்த நினைவுகள் அவ்வளவு மகிழ்ச்சிகரமானவை இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். ஒரு நிமிடம் கழித்து அப்பா சொல்லத் தொடங்கினார்.
“ரொம்ப வருடங்களுக்கு முன்பு, அதாவது எனக்குத் திருமணம் ஆன புதிதில் கமலாவும், பாட்டியும் இங்கே வந்தார்கள். அவர்களுக்கு நான் இப்படி வீட்டோடு மாப்பிள்ளையாக வந்ததில் விருப்பமே இல்லை. ஆனால் உங்க அம்மாவின் மீது இருந்த அன்பினாலோ, மோகத்தினாலோ நான் அவர்களுடைய மறுப்பைப் பொருட்படுத்தவில்லை. எனக்கு அவர்களும் வேண்டும், உங்க அம்மாவும் வேண்டும் என்று தோன்றியது. ஒரு தடவை நான் ரொம்ப வற்புறுத்தி கேட்டுக் கொண்ட பிறகு கமலாவும், பாட்டியும் நம் விட்டிற்கு வந்து பத்து நாட்கள் தங்கியிருந்தார்கள். அந்தப் பத்துநாட்களில் உங்க அம்மாவுக்கும் அவர்களுக்கும் இடையே என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஒரு நாள் மாலையில் நான் விட்டிற்கு வந்த போது அவர்கள் பெட்டி படுக்கையை எடுத்து வைத்துக்கொண்டு பயணத்திற்குத் தயாராக இருந்தார்கள். எத்தனை முறை கேட்டாலும் காரணம் சொல்லவில்லை. அவர்களுடன் நானும் கிளம்பி மெலட்டூருக்குப் போனேன். வழியில்பாட்டி நடந்ததையெல்லாம் சொல்லிவிட்டாள். நான் இல்லாத நேரத்தில் உங்க அம்மா அவர்களை ரொம்பத் தாழ்வாக பேசியிருக்கிறாள். பட்டிக்காட்டு ஜென்மங்கள் என்று சிநேகிதிகளிடம் சொல்லி பரிகாசம் செய்திருக்கிறாள். பலவிதமாக இகழ்ந்து பேசியிருக்கிறாள். கடைசியில் “இந்த வீடு ஒரு சத்திரமாகிவிட்டது. கண்ட கண்டவர்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டியதாகிவிட்டது. புதுசாக கல்யாணம் ஆன ஜோடி சந்தோஷமாக வெளியே நாலு இடங்களுக்குப் போக முடியாமல் பாழாய்ப் போன தரித்திரக் கூட்டம் வந்து சேர்ந்துவிட்டது” என்றாளாம்.
இனி மேலும் பொறுத்துக்கொள்ள முடியாமல் என்னிடம் எதுவும் சொல்ல முடியாமல் பாட்டியும், கமலாவும் ஊருக்குப் புறப்பட்டு விட்டார்கள்.
அன்று போனதுதான். அதற்குப் பிறகு கமலா என் வீட்டு வாசற்படி ஏறவே இல்லை. யாருக்குமே வாழ்க்கையில் ஆசைப்பட்டது குறைந்த பட்சம் ஒன்று இரண்டாவது நிறைவேறும். நான் ஆசைப் பட்ட எந்த சின்ன விஷயமும் நிறைவேறாமல் போனது நான் பிறந்த வேளையில் விசேஷம். படிக்கும் நாட்களில் பெரிய வேலையில் சேர்ந்து, நிறைய பணம் சம்பாதித்து கமலாவுக்குப் பெரிய இடத்தில் வரன் பார்த்து அவள் திருமணத்தை என் கையால் நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் வீட்டோட மாப்பிள்ளையாகப் போய்விட்டதால் எதுவுமே நடக்கவில்லை.
திருமணம் ஆனபிறகு பிராக்டீசும் கூடிவிட்டதால் எனக்கு ஓய்வே கிடைக்காமல் போய்விட்டது. நான் ஊருக்கு வரப்போவதாகக் கடிதம் எழுதிவிட்டுப் போகாமலேயே இருந்து விட்டதால் பாட்டி ரொம்ப விரக்தியடைந்து விட்டாள்.
கடைசியில் கமலாவை அந்த ஊரிலேயே முன்சீபாக வேலை பார்த்து கொண்டிருந்த நடுத்தர வயது ஆசாமிக்கு இரண்டாம் தாரமாகக் கொடுத்துவிட்டாள். அந்த வரனைப் பற்றி எனக்கு முன் கூட்டியே பல கடிதங்கள் எழுதியிருக்கிறாள். அவை எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை. பாட்டிக்குக் கோபம் வந்து கல்யாணப் பத்திரிகையை மட்டும் அனுப்பியிருக்கிறாள். அதுவும் எனக்கு வந்து சேரவில்லை. அதனால் நான் கல்யாணத்திற்குப் போகவில்லை. பிறகு யதேச்சையாக நான் ஊருக்குப் போன போது கமலாவுக்குத் திருமணமாகி ஒரு மாதமாகி விட்டிருந்தது. என்னைப் பார்த்ததும் பாட்டி வாய்க்கு வந்தபடி திட்டினாள். பாட்டி எழுதிய கடிதங்கள் கிடைக்கவில்லை என்ற சொன்னால் அவர்கள் யாரும் நம்பவில்லை. சுயகௌரவம் மிகுந்த கமலாவின் விழிகள் குளமாகியிருந்தன. என்னைப் பார்க்கவோ, பேசவோ மறுத்துவிட்டாள்.
வீட்டுக்கு வந்ததும் உங்க அம்மாவை உலுக்கி எடுத்த பிறகு பாட்டி எழுதிய கடிதங்களைத் தான் மறைத்து வைத்து விட்டதாக ஒப்புக்கொண்டாள். கல்யாணம், கார்த்திகை என்ற பெயரில் பிராக்டீஸை விட்டுவிட்டு ஊரில்போய் உட்கார்ந்து விடுவேன் என்று பயந்ததாகக் காரணம் சொன்னாள். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. பிறகு சமயம் கிடைத்த போது ஊருக்குப் போய் வரத் தொடங்கினேன். பாட்டி இறந்து போய்விட்டாள். கமலா பொறுப்புகள் நிறைந்த இல்லத்தரசியாகத் திகழ்ந்தாள். குழந்தைகள் பிறந்தார்கள். நான் உதவி செய்யாவிட்டாலும், நான் விரும்பியது போலவே கமலா சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள்.
எனக்கு பிராக்டீஸ் மேலும் அதிகரித்தது. ஒரு நாள் கூட ஓய்வு கிடைக்காத அளவுக்கு பிசியாகிவிட்டேன். ஒரு நாள் அதிசயமாக கமலாவிடமிருந்து கடிதம் வந்தது. கணவரின் உடல்நிலை ரொம்ப மோசமாக இருப்பதாகவும், டாக்டரிடம் காண்பித்தபோது கான்சர் என்று சொல்லிவிட்டதாகவும், தனக்குக் கைகால் ஓடவில்லை என்றும் எழுதியிருந்தாள்.
உடனே கிளம்பிப் போனேன். நல்ல டாக்டரிடம் காண்பித்தேன். ஆனால் வியாதி ஏற்கனவே முற்றிவிட்டதால் சிகிச்சை பலனளிக்கவில்லை. நான் பணத்தைத் தண்ணீராக செலவழித்தும் அவளுடைய கணவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. முப்பது வயது நிரம்பும் முன்பே விதவையாகி, வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் இழந்து விட்ட கமலாவைப் பார்க்கும் போது என் இதயம் வேதனையால் நிரம்பிவிடும்.
என் வருமானத்தில் மாயமாகிக் கொண்டிருந்த பணத்தைப் பற்றி உங்க அம்மா கேள்வி கேட்டு குடையத் தொடங்கினாள். கடைசியில் ஒரு தடவை பிடிபட்டு விட்டதில் கமலாவுக்குப் பணம் அனுப்பி வருவதாக அசல் விஷயத்தைச் சொல்லிவிட்டேன். அந்தச் சமயத்தில் உங்க அம்மா என்னை ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால் பத்து நாட்கள் கழித்து கமலாவிடமிருந்து இடிபோன்ற கடிதம் வந்தது. “அண்ணா! இத்தனை நாளாக நீ செய்து வரும் உதவி அண்ணிக்குத் தெரியாது என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. இந்த விஷயம் தெரிந்திருந்தால் உன்னிடமிருந்து காலணா காசுகூட பெற்றுக் கொண்டிருக்க மாட்டேன். நீ சம்பாதிக்கும் பணத்தின் மீது உனக்கு உரிமை இல்லை என்று உன் செயலிலேயே எனக்குப் புரிந்து விட்டது. கடவுள் கிருபையால் எனக்குக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் கொஞ்சம் வளர்ந்துவிட்டால் எனக்கு எந்தக் குறையும் இருக்காது. ஏற்கனவே நான் வேதனையில் இருக்கிறேன். உனக்கு என்மீது கடுகளவு பிரியம் இருந்தாலும் எனக்குப் பணம் அனுப்பதே. யாரிடமும் ஏச்சு பேச்சு கேட்டு அவமானப்பட என்னால் முடியாது. உனக்குக் கமலா என்ற தங்கை இருப்பதையே மறந்துவிடு” என்று எழுதியிருந்தாள். அந்தக் கடிதத்தைப் பார்த்த பிறகு ஏறத்தாழ ஆறு மாதங்கள் நான் உங்க அம்மாவிடம் பேசவில்லை.”
அப்பா பெருமூச்சு விட்டுக் கொண்டார். “கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தால் உங்கள அம்மாவுடன் சந்தோஷமாக இருந்த நாட்களைவிட, சண்டை போட்ட நாட்கள்தான் அதிகமாக நினைவுக்கு வரும்.”
அன்று இரவு நாங்கள் ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு முடித்து தூங்கப் போகும் வரையில் அப்பா பல விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு நினைவு தெரிந்த பிறகு அப்பா இப்படி வெளிப்படையாகப் பேசி என்றுமே நான் கேட்டதில்லை. எனக்குத் தெரியாத, தெரிந்தாலும் வேறுவிதமாகப் புரிந்து கொண்ட விஷயங்கள் பல இருந்தன. ரொம்ப நாளாக அவருடைய ஆழ் மனதில் புதைந்து கிடந்த நினைவுகள் வெள்ளமாகப் பொங்கி வெளியேறத் தொடங்கின.

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்