மீண்டும் புதியகந்தபுராணம்

This entry is part [part not set] of 31 in the series 20091029_Issue

ஜேபி


(சிறுகதைகளின் துரோனாச்சாரியாரான புதுமைப்பித்தனின் “புதிய கந்தபுராணம்” என்ற கதையை கடன் வாங்கியுள்ளது. அதை உணர்த்தவே பொருட்பிழையான தலைப்பு “மீண்டும் புதியகந்தபுராணம்”)

சத்திய சோதனைகளை கடந்து,”வாய்மையே வெல்லும்” என்ற ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்பதை உணர்ந்துவிட்டதாக உணரும் காலகட்டத்தின் பிரதி-நிதியாக ஒரு அழியா காவியத்தை உங்கள் முன் படைக்க தலைப்படுகிறேன்.காவியத்திற்கு கம்பன் , இளங்கோ போன்ற ஜாம்பவான் கள் எனக்கு முன்னிருந்தாலும் அவர்களின் அடி தொடராமல் – புரிந்தால்தானே தொடர்வதற்கு- எனக்கு தொ¢ந்த, புரிந்த காவிய வடிவையே உபயோகிக்கிறேன் என்பதை பெருமையுடன் முன்னறிவிக்கிறேன்.

நாட்டுப்படலம்

சக்தி சொரூபமான இந்திராகாந்தி அம்மையாருக்கும் , விஷ்ணு அம்சமான ஜெ.பி.நாராயணன் அவர்களுக்கும் நடந்த பாரத யுத்தத்தால் நாட்டில் அவசர நிலை பிரகடனபடுத்தப்பட்டிருந்த போதும், புதுமண தம்பதிகளான ஜெமினி – சாவித்திரி தங்கள் படைப்புத்தொழிலை கர்ம சிரத்தையுடன் மேற்கொண்டதின் தவப்பலனாக , சிவகுமரர் திரு.கந்தசாமி , நள வருடம் 1977 மாசி மாதம் சென்னை பெரு-நகா¢ல் திருஅவதாரம் செய்தார்.

ஆற்றுப்படலம்

“அட ஆறு” என்று காண்பவர் வியக்கும் வகையில் , கருமையை வண்ணமாகவும் தூய்மையை எண்ணமாகவும் கொண்ட கூவம் நதி எழில் நகராம் சென்னைக்கு மேலும் எழில் சேர்த்துக்கொண்டிருந்தது.இந்த நதியின் மூலத்தில் உள்ள சிவஸ்தலங்களான திருவிற்கோளம்,இளம்பயங்கொட்டூர் சம்பந்தா¢ன் தேவார பாடல்களில் இடம்பெற்றிருப்பது இவ்வாற்றின் வரலாற்றுசிறப்பாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி இவ்வாற்றில் நீராடுபவர்க்கு “கதிமோட்சம்” என்ற நம்பிக்கையும் தொன்று தொட்டு வழங்கி வ்ருகிறது.இன்றளவும் இன்னம்பிக்கை – நீராடுபவர்க்கு கதி மோட்சம்- நிலைத்து நிற்பதை நினைத்தால் மனம் சிலாகிக்காமல் இருக்க முடியவில்லை.

நகரப்படலம்

இப்பூனித நதியின் தீரத்தில் உருவான புதிய ஊராம் அடையாறில் ,ஒய்வு பெற்ற அரசு ஊழியர்களும் , நகர நொ¢சலில் இருந்து விடுபட்டு சுகமாக வாழ விழையும் சுகவாசிகளும் குடிபுகுந்தனர்.இவ்வூரின் சிறப்பாக இதுகாறும் சொல்லப்படுவை மூன்று : அடையார் ஆலமரம்,கூவம் நதி , அன்னிபெசன்ட் அம்மையார் அமைத்த தியோஸபிகல் சொஸைட்டி. இனி நான்காவதாக ,அருட்செல்வர் கந்தசாமியின் ஜனனத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

திருஅவதார படலம்

அவசர நிலையின் தடாக்களையும் , பொடாக்களையும் மீறி 1977 வருடம் அடையாறில் உள்ள துர்காபாய் மருத்துவமனையில் , மருத்துவர் நாகம்மையின் கத்தி ராசியால் , சாவித்திரி தேவியின் வயிற்றை கிழித்திக்கொண்டு வெளியேறினார் கந்தசாமி.அறுவை சிகிச்சை மூலம் பிறந்ததாலும் , பிறந்த ஒரு மாதத்தில் நாட்டின் அவசர நிலை தூக்கப்பட்டதாலும் ,”அறு-படை-கந்தன்” என்ற காரணப்பெயர் தொற்றிக்கொண்டது.

அக்கால கந்தனை போல் கார்த்திகை பெண்களிடம் வளராமல் , வீட்டு வேலைக்காரியான செங்கமலத்திடம் சென்னை செந்தமிழ் கற்றும் , சினிமா பாடல்களை கேட்டு ரசித்தும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக நல்ல ஆகிருதியுடன் வளர்ந்தார்.வாழ்ககை என்ற போரில் வாகை சூடுவதற்கு ஒத்திகையாய் , படிப்பு போர் சொல்லி கொடுக்கப்பட்டது.”படி அல்லது செத்து மடி” என்பதே தாயும் தந்தையும் ஓயாமல் ஓதிய மந்திரங்கள்.எவ்வளவுதான் எடுத்தும் , இடித்தும் உரைத்தாலும் நாமகளின் கடைக்கண் கடாட்சம் இல்லாததால் , ஒவ்வொரு வருடத்தையும் முடித்து முன்னேறுவதற்கு பிரம்ம ப்ரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது.தவ்வி,தவ்வி எப்படியோ பொறியியல் பட்டத்தை பெற்றார்.திருமகளின் ஓரக்கண் பார்வை தகவல் தொழில் நுட்பத்தால் இந்தியா மீது பட்டதால் பலனடைந்த லட்சோபலட்ச பேர்களில் கந்தசாமியும் ஒருவர். மாதம் 25,000 ரூபாய் சம்பளத்தில் உத்தியோகஸ்தரானார் கந்தசாமி.

திருமணப்படலம்

புருஷலட்சணமான உத்தியோகம் கைகூடியவுடன் மற்ற வீட்டாரை போல் திருமணப்பேச்சு எடுக்கப்பட்டது.அத்தை மகளான தேவயானியின் கோலங்களை கண்டு சகிக்காமலும் , ஆயலோட்டும் வள்ளியை மடக்க ஒரு அண்ணன்(கணேசன்) இல்லாததாலும் , கந்தசாமி சமர்த்து பிள்ளையாக அப்பா அம்மா பார்க்கும் பெண்ணை மணம் முடிக்க சம்மதித்தார். வலையில் வலை போட்டு தேடி,வித்யா என்ற ஒரு வரனை கண்டு பிடித்தார்கள்.வித்யாபதி ஆக முடியாத கந்த சாமி வித்யாவின் – பதியாகும் சந்தர்ப்பத்தை நழுவ விடுவாரா ? ஒரு சுபயோக சுபதினத்தில் வித்யாவும் கந்தசாமியும் தம்பதியாயினர். ஜாடிக்கேத்த மூடி என்று ஊர் கண்கொட்டியது.

உலாவியல் படலம்

இதற்குள் கந்தசாமியின் அலுவல் நிமித்தமாக கடல் கடந்து தூரதேசம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. டாலர் கனவுகளில் மிதந்து கொண்டிருந்தவர்க்கு இந்த செய்தி தேவாமிர்தமாக இல்லை இல்லை பஞ்சாமிர்தமாக இனித்தது.உடனே ஒரு கையில் மனைவியுடன் , மறு கையில் பெட்டியுடன் வான்வழியாக அமொ¢க்க தேசம் சென்றடைந்தார்.திருமகளின் பா¢பூரண கிருபையில் திளைத்துக்கொண்டிருந்த கந்தசாமிக்கு, அயல் நாட்டுத்தனிமையில் தன் பிறப்பின் காரணமான சூரசம் ஹாரம் நடைபெறவேயில்லை என்ற உண்மை உரைத்தது.ஆனால் சூரபத்ரன் யார் என்ற கேள்வியும் அவரை கூடவே குடைந்தெடுத்தது.இறுதியில் “நேரம்” என்ற சூரபத்ரனை கொல்ல “பேனா” என்ற வேலை எடுத்துக்கொண்டு “பிளாகிங்க்” செய்ய ஆரம்பித்துவிட்டார். கந்தசாமி , இப்பொழுதெல்லாம் தினமும் சூரசம் ஹாரம் நடத்தி கொண்டிருக்கிறார் என்பது செவி வழி செய்தி. அதை மட்டுமே செய்யாததால் அவர் சகதர்மிணி முழுகாமல் இருப்பது உபா¢ செய்தி.

இப்படியாக புதிய கந்தபுராணத்தில் கந்தசாமி இல்லறத்தை நல்லறமாக நடாத்துகிறார்.

சுபம்!சுபம்!சுபம்!

புதிய கந்த புராணம் முற்றிற்று.

திருசிற்றம்பலம்.

=
jayaprakash.samuel@gmail.com

Series Navigation

ஜேபி

ஜேபி