முள்பாதை 3 (தொடர்நாவல் மூன்றாம் அத்தியாயம்)

This entry is part [part not set] of 31 in the series 20091029_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

ரொம்ப நேரம் கழித்து வாசற்படியில் சத்தம் கேட்டது. நான் நிமிர்ந்து பார்க்கும் முன்பே “மீனா!” என்ற அப்பாவின் குரல் கேட்டது.
திடுக்கிட்டவளாக சட்டென்று கண்களைத் துடைத்துக்கொண்டு சரியாக உட்கார்ந்து கொண்டேன். அப்பா உள்ளே வந்தார். என் கண்களில் நீர் தளும்புவதைப் பார்த்தால் அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. வரண்டப் புன்னகையை உதிர்க்க முயன்று தோற்றுவிட்டேன். எத்தனை அடக்கி வைத்தாலும் கண்ணீர் வெளியேறத் தொடங்கியது. சட்டென்று தலையைக் குனிந்துகொண்டேன்.
ஒரு நிமிடம் யோசித்தபடி நின்றவர் பிறகு “மீனா! ஒரு வேலை விஷயமாக கடைத்தெரு பக்கம் போகிறேன். நீயும் வருகிறாயா?” என்று கேட்டார்.
“நீங்க வரச்சொன்னால் வருகிறேன்.”
“ஐந்து நிமிடங்களில் தயாராகணும். சட்டென்று முகம் அலம்பி புடவையை மாற்றிக் கொண்டு சீக்கிரம் வா.” வாட்சைப் பார்த்துக் கொண்டே சொன்னார்.
“இதோ வருகிறேன்.” சட்டென்று எழுந்து உள்ளே ஓடினேன். வேண்டுமென்றே நான் தலையை வாரிக்கொள்ளவில்லை. புடவையையும் மாற்றவில்லை. அம்மா மட்டும் இப்போ இங்கே இருந்திருந்தால் இப்படிச் சாதாரணப் புடவையில், தலையைக் கூட வாரிக் கொள்ளாமல், முகத்தில் பவுடர் கூட பூசாமல் கடைத் தெருவுக்குக் கிளம்பிவிட்ட என்னைப் பார்த்து நினைவு தப்பி கீழே விழுந்திருப்பாள். இல்லையா என் இரண்டு கால்களையும் முறித்து ஒரு மூலையில் உட்கார வைத்திருப்பாள்.
விட்டில் நாம் எப்படி இருந்தாலும் வெளியில் போகும் போது நமக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்டாயம் நேர்த்தியாக உடுத்திக் கொண்டு, அழகாக ஒப்பனை செய்து கொண்டு போக வேண்டுமென்பது அம்மாவின் கொள்கை. “நீ உற்சாகமாக இருந்தால் பத்து பேர் உன்னுடன் சேர்ந்து கொண்டு அந்த உற்சாகத்தைப் பகிர்ந்துகொள்ள முன் வருவார்கள். நீ முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு இருந்தாயானால் உன் அருகில் கூட யாரும் வரமாட்டார்கள்.” அம்மா கிளப்புக்கு வரும் பெண்களை உற்சாகமாக இருக்கச் சொல்லி பலவிதமாக ஊக்கப்படுத்துவாள். யாராவது ஏனோ தானோ என்று இருந்தால் அவர்களிடம் ஓரளவுக்காவது அறிமுகம் இருந்தாலும் உரிமையுடன் கடிந்துகொள்வாள். எனக்கென்னவோ வீட்டிலேயும், வெளியிலேயும் எப்போதும் ஒரே விதமாக இருக்க வேண்டும் போல் தோன்றும்.
வெளியில் போகும்போது சினிமா நடிகைகளைப் போல் தயாராகி வீட்டில் இடும்பியைப் போல் இருக்கும் பெண்கள் நிறையபேரை நான் பார்த்திருக்கிறேன். மணிக்கணக்காக நிலைக்கண்ணாடியின் முன்னால் அமர்ந்துகொண்டு, சிகை அலங்காரமும், முக ஒப்பனையும் செய்து கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள். பார்ட்டீ, விழா போன்ற இடங்களில் கவனமாக நடந்துகொள்ளவில்லை என்றால் மேக்கப் கலைந்து விடுமோ என்ற பயத்தில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு செயற்கையாகப் பேசி, சிரித்து சந்தோஷமாக இருப்பது போல் நடிக்கும் பெண்களையும் பார்த்திருக்கிறேன். அவர்களைப் பார்த்தால் எனக்கு இரக்கம்தான் தோன்றும். இந்த நாகரிகம், ஒப்பனை இவையெல்லாம் நாம் உருவாக்கியவைதானே. எப்படி அலங்காரம் செய்து கொண்டாலும் நம் கைகால்கள் தாராளமாக அசைய வேண்டும். முகத்தில் இருக்கும் புன்னகை இயற்கையாக இருக்க வேண்டும். நாம் நடக்கும் போது, உட்காரும்போது உண்மையான சந்தோஷம் வெளிப்பட வேண்டும்.
என் முகத்தில் சிரிப்பு எப்படி இருக்கோ, அசல் இருக்கோ இல்லையோ என்று பார்ப்பதற்காக நிலைக்கண்ணாடி அருகில் சென்று என் உருவத்தைப் பார்த்துக்கொண்டேன். கண்கள் சிவந்து லேசாக விங்கியிருந்தன. கழுத்தில், காதில் எந்த விதமான நகையும் இல்லாததால் வெறிச்சென்று இருந்தது. கண்ணாடியில் தென்பட்ட என் பிம்பத்தை நோக்கி ஆள்காட்டி விரலை உயர்த்தி மனதிலேயே இவ்வாறு நினைத்துக் கொண்டேன்.
“இதோ பாருடீ பெண்ணே! இந்த நிமிடம் முதல் எல்லாம் என் இஷ்டம்தான். யாருடைய பேச்சையும் நான் கேட்கப் போவதில்லை. என் மனதிற்குப் பிடித்தாற்போல் நடந்து கொள்வேன். எது நல்லது என்று என் மனதிற்குப் படுகிறதோ அதைத்தான் செய்வேன். அம்மா ஊரிலிருந்து திரும்பி வந்ததும் என்னிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்தைப் பார்த்துப் பைத்தியமாகி விட வேண்டும். எத்தனையோ முறை அம்மா கட்டுப்பாடு என்ற பெயரில் என்னை அழ வைத்திருக்கிறாள். இனி அம்மாவை அழ வைப்பது என்னுடைய பங்கு.”
“மீனா!” வெளியே இருந்து அப்பாவின் குரல் கேட்டது.
“வந்துவிட்டேன்.” சட்டென்று வெளியே வந்தேன்.
வராண்டாவில் நின்றபடி சாலையின் பக்கம் பார்த்துக் கொண்டிருந்த அப்பா என் செருப்பு சத்தம் கேட்டதும் திரும்பிப் பார்த்து ஏமாற்றமடைந்தவர் போல் “இதென்ன? மறுபடியும் மனதை மாற்றிக்கொண்டு விட்டாயா? என்னுடன் வரப் போவதில்லையா?” என்றார்.
“வருகிறேன். கிளம்புங்க போகலாம்” என்றேன்.
“புடவையை மாற்றிக் கொள்ளவில்லையா?” வியப்புடன் கேட்டார்.
“ஊஹ¤ம். இந்தப் புடவை நன்றாகத்தான் இருக்கு.”
என் கண்களில் தென்பட்ட பிடிவாதத்தைப் புரிந்துகொண்டவர் போல் முறுவலுடன் “சரி உன் விருப்பம். கிளம்பு. மனதிற்குப் பிடித்தாற்போல் நடந்து கொள்வது நாம் செய்த பாக்கியம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.
இருவரும் கீழே வந்தோம். ஹாலைத் தாண்டி வராண்டாவில் காலடி எடுத்து வைக்கும் போது திருநாகம் பின்னாலேயே ஓடிவந்தாள்.
“சின்னம்மா! எங்கே போறீங்க?”
நான் பின்னால் திரும்பி நேராக மாமியின் முகத்தைக் கூர்ந்து பார்த்தேன். “இதோ பாருங்க. இதுதான் உங்களுக்கு முதலும் கடைசியுமாகச் சொல்கிறேன். எங்கேயாவது கிளம்பும் போது இப்படி பின்னாலேயே வந்து எங்கே போறீங்க? எப்போ வருவீங்க? என்ன வேலை? இது போன்ற வேண்டாத கேள்விகளைக் கேட்காதீங்க. நாங்கள் எங்கே போகிறோம், எப்போ திரும்பி வருவோம் இதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லாத சமாசாரங்கள். உங்க வேலையை நீங்க பாருங்கள்” என்றேன் அதிகாரம் கலந்த குரலில்.
மாமி முதலில் திகைத்துப் போனவள் போல் பார்த்தாள். உடனே கறுத்துப் போன முகத்துடன் “நல்லாயிருக்கும்மா நீங்க சொல்வது. ஒரு சின்ன கேள்விக்கு இப்படி விபரீதமாக அர்த்தம் எடுத்துக் கொள்வீங்க என்று தெரிந்தால் கேட்டிருக்கவே மாட்டேன். நீங்க எங்கே போனால் எனக்கென்ன? எப்போ திரும்பி வந்தால் எனக்கென்ன? முன்னாடியே சமையல் செய்து வைத்தால் ஆறிப்போய்விடுமேன்னு கேட்டேன்” என்றாள்.
“உங்களுடைய சமையலை சூடாக சாப்பிடணும் என்று நினைத்தால் முன்னாடியே வந்து விடுகிறோம். ஒருக்கால் வருவதற்குத் தாமதமானால் ஆறிப் போனதையே சாப்பிடுகிறோம். மறுபடியும் சூடு பண்ணச் சொல்லி உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டோம். சரிதானே?”
மாமி பதில் சொல்லத் திராணியற்றவளாக விழிகளை உருட்டி என்னையே பாத்துக் கொண்டிருந்தாள். நான் சட்டென்று திரும்பி டக் டக் என்ற செருப்பை சத்தப்படுத்திக் கொண்டே வந்து காரில் ஏறிக் கொண்டேன்.
“அய்யா…” மாமி அப்பாவின் பின்னால் வரப் போனாள்.
“சின்னம்மா சொல்லிவிட்டாளே.” சுருக்கமாகச் சொல்லிவிட்டு அப்பாவும் காரில் ஏறிக்கொண்டார். நான் எதிர்பார்த்தாற்போல் அப்பா என் சார்பில் மாமியிடம் பேசவோ, சமாதானப்படுத்தவோ முயற்சி செய்யாதது எனக்கு வேடிக்கையாக இருந்தது.
தெருவில் மக்கள் நடமாட்டத்தையும் சந்தடியையும் பார்த்த பிறகு மனதில் பரவியிருந்த எரிச்சல் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி அமைதி ஏற்படத் தொடங்கியது. தெருவில் சந்தோஷமாக உற்சாகமாக நடமாடிக் கொண்டிருக்கும் மக்கள் எல்லோருக்கும் பிரச்னைகள் இல்லாமல் இருக்காது. பிரச்னைகள் இல்லாமல் மனித வாழ்க்கையே இல்லை. ஆனால் பிரச்னை வந்தால் ஓடிப் போகாமல், ஏமாற்றமடைந்து உட்கார்ந்து விடாமல் அதை ஜெயிக்க முயற்சி செய்ய வேண்டும்.
சாரதியைத் திருமணம் செய்து கொள்வது எனக்கு விருப்பம் இல்லை. அம்மா அவனைத்தான் மாப்பிள்ளையாக்கிக் கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறாள். அம்மா முடிவு செய்துவிட்டாள் என்பதற்காக நான் சோர்ந்து போய் உட்காரந்து விட்டால் என்ன பிரயோஜனம்? ஏதாவது ஒன்று செய்ய வேண்டும். என்னுடைய புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி எப்படியாவது இதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வழியைத் தேட வேண்டும். பெற்ற தாயுடன் விரோதம் ஏற்படுவது எவ்வளவு வேதனையான விஷயம்?
என் எண்ணங்களின் ஓட்டத்தைப் புரிந்து கொண்டு விட்டவர் போல் அப்பா கையை நீட்டி என் கையின்மீது பதித்துவிட்டு மென்மையான குரலில் சொன்னார். “மீனா! ஒரு விஷயம் சொல்லட்டுமா?”
“ஒன்று என்ன? ஆயிரம் சொல்லுங்கள். என் மனதை புதிய யோசனைகளுடன் நிரப்பிவிட்டால் தவிர இன்று ஏற்பட்ட ஏமாற்றத்திலிருந்து மீள முடியாது.”
“இந்த உலகில் உன் நலனை விரும்புகிறவர்களில், உன் எதிர்காலத்தில் அக்கறைக் கொண்டவர்களில் உன் அம்மாவை மிஞ்சியவர்கள் வேறொருவர் இருக்க முடியாது. அதை நீ நம்ப வேண்டும்.”
சட்டென்று தலையைத் திருப்பி அப்பாவைப் பார்த்தேன். போக்குவரத்து அதிகமாக இருந்த சாலையில் கவனமாக டிரைவ் செய்து கொண்டிருந்த அப்பா என் பக்கம் திரும்பவில்லை.
“ஒரு விதமாக யோசித்துப் பார்த்தால் உங்க அம்மா ஒரு முட்டாள்தான். உன் மனதைப் புரிந்துகொள்ள மறுக்கிறாள். அது எனக்கும் தெரியும். ஆனால் அதற்காக அம்மாவிடம் உனக்கு இருக்கும் மதிப்பும், மரியாதையும் குறைந்துவிடக் கூடாது என்பது என்னுடைய வேண்டுகோள்.”
நான் உடனே பதில் சொல்ல வில்லை. அப்பா எப்போதுமே இப்படித்தான். என் சார்பில் அம்மாவுடன் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார். ஆனால் நான் அம்மாவிடம் கொஞ்சம் எதிர்ப்பு தெரிவித்தாலும் உடனே என் மனதைப் புரிந்து கொண்டு விட்டவர் போல் மகளுக்கு உரிய கடமைகளை நினைவுப்படுத்துவார்.
“என்ன சொல்கிறாய் மீனா?” மறுபடியும் கேட்டார்.
“என்ன சொல்லப் போகிறேன்? அன்பு என்ற பெயரில் இதயத்தை எப்போதும் ஈட்டியால் குத்திக்கொண்டே இருந்தால் தாங்குவது கஷ்டம் இல்லையா?” என்றேன்.
“இல்லை இன்று சொல்லவில்லை. அந்த வேதனையைச் சகித்துக் கொள்ளவோ இல்லை தப்பித்துக் கொள்ளவோ முயற்சி செய்ய வேண்டும். இந்த உலகில் தாயை விட அற்புதமான சுருஷ்டி வேறொன்று இல்லை. மீனா! போகப் போக ஒருநாள் உனக்கே புரியும். ஒன்பது மாதங்கள் வயிற்றில் சுமந்து, உயிர் போகிற வேதனையை அனுபவித்து ஒரு பெண் தாயாக மாறுகிறாள். அந்தத் தாயைக் குறை சொல்லும் அதிகாரம் அந்தக் குழந்தைக்குக் கிடையாது. தாய் எப்படிப் பட்டவளாக இருந்தாலும், குழந்தையிடம் எப்படி நடந்துகொண்டாலும் அவளை மதிக்கும் கடமையும், பொறுப்பும் குழந்தைகளுடையதுதான்.”
அப்பா முழுக்க முழுக்க அம்மாவின் பக்கம் பேசத் தொடங்கியதும் எனக்கு விரக்தியும், சலிப்பும் ஏற்பட்டன. அப்பாவிடம் எனக்கு இருந்த உரிமையைப் பயன்படுத்திக்கொண்டு கொஞ்சம் துடுக்காகவே பதில் சொன்னேன். “தாயை தெய்வமாகப் போற்றணும். தந்தையை கௌரவிக்கணும். கணவனிடம் பக்தியோடு இருக்கணும். நண்பர்களிடம் நேர்மையுடன் நடந்து கொள்ளணும். இந்த உரிமைகள், பொறுப்புகள், உறவு முறைகள் எல்லாம் மனிதனாக எற்பாடு செய்து கொண்டவைதானே? தாய்க்குக் குழந்தையிடம் அன்பு இல்லாத போது குழந்தைக்கு மட்டும் தாயிடம் அன்பு எப்படி வரும்? எங்கிருந்து வரும்?”
“சுயநலம் பிடித்த மனிதர்கள் செய்யும் வாதம் இது. உன்னிடம் அன்பு செலுத்துபவர்களிடம் நீ திருப்பி அன்பு செலுத்துவது பெரிய விஷயம் எதுவும் இல்லை. உனக்கு வேண்டியவர்கள் தெரிந்தோ தெரியாமலோ உன்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றால் உன் புத்திசாலித்தனத்தால் அவர்களிடம் மாற்றம் கொண்டு வந்து உன்னைச் சரியாக புரிந்துகொள்ளும்படிச் செய்யணும். அது உன் கடமையும்கூட.”
“அதற்குண்டான பொறுமையும், புத்திசாலித்தனமும் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?”
“கொஞ்சம் முயற்சி செய்தால் பொறுமை தானாகவே வந்து விடும். புத்திசாலித்தனம் என்கிறாயா? அது இல்லாதவர்களிடம் பேசிக் கொண்டிருக்கத் தேவையே இல்லை.”
அப்பாவுக்குக் கடைத் தெருவில் எந்த வேலையும் இல்லையென்றும், என்னைக் கொஞ்ச நேரம் வெளியில் அழைத்துச் சென்று உற்சாகப் படுத்துவதற்காகத்தான் இப்படி அழைத்து வந்திருக்கிறார் என்றும் தோன்றியது.
என் எண்ணம் சரியானதுதான் என்பதுபோல் டாய் எம்போரியம் முன்னால் நிறுத்தினார். அந்தக் கடையை ஏற்கனவே எனக்குத் தெரியும். நினைவு தெரிந்த பிறகு பல முறை இங்கே வந்து பொம்மைகள் வாங்கியிருக்கிறேன். இத்தனை பெரியவளாக வளர்ந்த பிறகும் எனக்கு பொம்மைகள் மீது ஆர்வம் குறையவில்லை. இபபொழுதும் சில சமயம் எனக்குப் பொழுது போகவில்லை என்றால் அலமாரியிருந்து பொம்மைகளை எடுத்து சுற்றிலும் பரத்திக் கொண்டு உட்கார்ந்து கொள்வேன். அவை என் கண்களுக்கு வெறும் பொம்மைகளாகத் தென்படாது. யார் யார் எந்த சந்தர்ப்பங்களில் எந்த பொம்மையைத் தந்தார்களோ இப்பவும் எனக்கு நினைவு இருக்கிறது.
“வா மீனா! இந்தக் கடைக்கு வந்து ரொம்ப நாள் ஆச்சு. புதிதாக ஏதாவது பொம்மை வந்திருக்கிறதோ பார்ப்போம்” என்றார் அப்பா.
எப்போதும் விதவிதமான பொம்மைகளுடன், அவற்றை வாங்க வந்த கஸ்டமர்களுடன் சந்தடியாக இருக்கும் கடை இன்று வெறிச்சோடி இருந்தது.
கடையில் மேனேஜர் இருக்கும் இடத்தில் புதிதாக யாரோ இருந்தார்கள். எங்களைப் பார்த்ததும் ஒல்லியாக, கறுப்பாக இருந்த குமாஸ்தா ஓடிவந்தார்.
“வாங்க… வாங்க… ரொம்ப நாட்களுக்கு பிறகு வந்திருக்கீங்க” என்று வரவேற்றுக்கொண்டே தோளில் கிடந்த துண்டால் நாற்காலிகளை தூசி தட்டிவிட்டு “உட்காருங்கள்” என்றார்.
“என்ன ஆச்சு? கடையில் ஆட்களே இல்லையே? விற்பனை குறைந்துவிட்டதா?” சுற்றிலும் பார்வையிட்டுக் கொண்டே அப்பா வியப்புடன் கேட்டார்.
எனக்கும் என்னவோ போல் இருந்தது. எப்போதும் மக்கள் கூட்டத்துடன் களையாக இருந்த கடை இன்று தூசி படிந்து வெறிச்சென்று காட்சியளித்தது.
குமாஸ்தா அப்பாவிடம் வாய் ஓயாமல் சொல்லத் தொடங்கினார். அப்பா அவர் சொல்வதை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார். அவருடைய கட்டைக் குரலை இரண்டு நிமிடங்கள் கேட்டதுமே எனக்க சலிப்பு ஏற்பட்டது. எழுந்து போய் கண்ணாடி அலமாரியிலிருந்த பொம்மைகளைப் பார்வையிடத் தொடங்கினேன். அப்பாவிடம் பேசிக்கொண்டே அந்தக் குமாஸ்தா அலமாரியிலிருந்து பொம்மைகளை எடுத்து கீ கோடுத்து அவற்றின் செயல்முறைகளை காண்பித்துக் கொண்டிருந்தார். அவருடைய பேச்சிலிருந்து எனக்குத் தெரிந்தது என்னவென்றால் அந்தக் கடைக்கு முதலாளியாக இருந்த அண்ணன் தம்பி இருவரும் லாபத்தைப் பகிர்ந்துகொள்ளும் போது சண்டை வந்து கோர்ட்டுக்குப் போய்விட்டார்கள் என்றும், ஒரு காலத்தில் ரொம்ப ஒற்றுமையுடன் இருந்த அண்ணனும் தம்பியும் இந்த சண்டையின் காரணமாக பரம விரோதிகள் ஆகிவிட்டார்கள் என்றும், ஒருவரை ஒருவர் கொலை செய்யவும் பின் வாங்கவில்லை என்றும்…
எல்லாவற்றையும் சிரத்தையாக கேட்டுக் கொண்ட அப்பா பெருமூச்சு விட்டார். “இந்தக் காலத்தில் பணத்தின் பாதிப்பு அப்படித்தான் இருக்கு. கடவுளால் படைக்கப் பட்ட மனிதன் கடவுளையே மிஞ்சி விட வேண்டும் என்று நினைப்பது போல் மனிதனால் உருவாக்கப்பட்ட இந்தப் பணம் மனிதனையே விழுங்க வேண்டும் என்று பார்க்கிறது” என்றார்.
“பாழாய்ப் போன பணம். அது இல்லாவிட்டாலும் நிம்மதியாக இருந்திருக்கும். ராமலக்ஷ்மணர்களைப் போல் இருந்த அண்ணன் தம்பியைப் பிரித்துவிட்டது. இருவருக்கும் இடையே இருந்த பந்த பாசம் எங்கே காணாமல் போய்விட்டதோ தெரியவில்லை. நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கு.” கன்னத்தில் ஒரு கையும் இடுப்பில் ஒரு கையும் ஊன்றிக் கொண்டே சொன்னார் குமாஸ்தா.
“பந்த பாசம் எங்கேயும் போகாது. பணம் வந்து அதை கல்மிஷமாக்கிவிட்டது, அவ்வளவுதான்.” அப்பா சொன்னார்.
“பணம் பத்தும் செய்யும் என்பார்கள் பெரியவர்கள். இதுதான்போலும்.”
“இந்தப் பணம் என்ற ஏணி கிடைத்துவிட்டால் அதில் ஏறிக்கொண்டு பெயரும் புகழும் சம்பாதித்து ராஜபோகத்தை அனுபவித்து விடலாம் என்று நிறைய பேர் தவிப்பார்கள். ஆனால் அந்த ஏணியின் இருபக்கமும் துக்கம், அமைதியின்மை என்ற இரண்டு விஷ சர்ப்பங்கள் பிணைந்திருக்கும் என்றும், அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வது ரொம்ப கஷ்டம் என்றும் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.”
குமாஸ்தா இரண்டு கைகளையும் உயர்த்தி கும்பிடுப் போட்டார். “அய்யா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. இந்தப் பணம் இருக்கே, இது கொடுக்காத சுகம் இல்லை. கொடுக்காத வேதனையும் இல்லை.”
“அப்பா! இனி கிளம்புவோமா?” தாழ்ந்த குரலில் கேட்டேன்.
இருந்த பொம்மைகளில் ஒன்றை வாங்கிக் கொண்டு கடையிலிருந்து வெளியே வந்தோம்.

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்