கடவுளிடமிருந்து பறிக்கப்பட்டவர்கள்

This entry is part [part not set] of 35 in the series 20090926_Issue

ரா.கிரிதரன்


I – கடவுள்

தன் கைகளிலிருந்த கடிதத்தை நம்ப மறுக்கும் இயல்புடன் சுந்தரி இரண்டாம் முறையாகப் படிக்கத்தொடங்கினாள். இப்போதும் இரண்டும் இரண்டும் நான்கு என்பதுபோல் நேரடியாக விஷயத்தைக் கூறியிருக்கலாம் என்றே அவளுக்குத் தோன்றியது. சுற்றி வளைத்து இல்லை எனக் கூறும் வார்த்தைகளை நேரடியாகக் கேட்பதே பழக்கமாயிருந்தபோது ,அவற்றை நிதானமாக படித்து உள்வாங்கியது கடினமாக இல்லை. தங்கள் முடிவை நாசூக்காக விவரிப்பதில்தான் நிறுவனங்களுக்கு எவ்வளவு எளிமையாக இருக்கிறது – வழுக்கியபடி வரிசையாக வரும் ஆங்கில வாக்கியங்கள் அனாவசியமாக படிப்பவர்களை எதையும் நம்ப வைக்கின்றன.

`கடவுள் இல்லம்` என்ற அமைப்பை தன் கணவர் இறந்தபிறகு மேற்கொள்வதில் இருந்த கஷ்டங்கள், அவருடன் வாழ்ந்த வாழ்க்கையையும், அவர் காட்டிய அன்பையும் தினம் அதிகப்படுத்தியது. பணப்பற்றாகுறை, வேலைக்கு ஆட்கள் கிடைக்காதது, இல்லதில் இருப்பவர்களின் உடல் உபாதை – என அவள் வாழ்வில் சிக்கல்கள் தினமும் எட்டிப்பார்க்கும். அப்போது அழுவதெல்லாம் தன் கணவர் இல்லாததைப் பற்றியது மட்டும்தான் எனத் தோன்றும். நிர்வாகம் அவள் கைகளில் திடீரென வந்தபோதுதான் முதல்கட்ட அனுபவங்களின் வலி மட்டுமல்ல, தன் கணவரின் நிதானமும் புரிய ஆரம்பித்தது.

ஜூன் 17, 2004. கடவுள் இல்லம், சிறிய அளவில் கட்டப்பட்ட கனவு. சுந்தரியின் கணவர் தன் ஓய்வூதியம் முழுவதையும் இதில் இரைத்திருந்தார்.தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு வீடும், சில நிலங்களையும் விட்டுச் சென்றதில், மீதமிருந்த பணம் முழுவதையும் இதற்கே முதலீடு செய்திருந்தார். ஆம், முதலீடு – அவரைப் பொருத்தவரை மனநலம் குன்றியவர்களுக்கு தகுந்த முதலீடுகளாக சிகிச்சையும், தனிப்பட்ட கவனமுடன் கூடிய தினச்சேவை மட்டுமே. இதனாலேயே இருபதுக்கும் மேற்பட்டவர்களை தன் இல்லத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை.உடல் உபாதையுள்ளவர்களுக்கு தங்கள் வியாதியைப் பற்றித் தெரிந்திருக்கும். வெளியே தெரியாமலிருக்கும் மன வியாதிகள், குடியிருப்போரிடம் தங்களைப் பற்றி சொல்வதில்லை. மற்றவ்ர்களுக்கே வெளிப்படையாகத் தெரியும்.

இதைப் போன்ற இல்லத்தை நடத்துவது மலையைத் தூக்கியபடி கம்பியில் நடப்பது போன்றது. நிதானம், கவனம், பொறுமை, உடல்/மன/பண தைரியம் என கூட்டு அரசாட்சி. பல என்.ஜி.ஓக்களில் வேலை பார்த்த அனுபவம் அவருக்கு கைகொடுத்தாலும், ஓய்வுக்குப் பின் இதைத் தொடங்க அசாத்திய துணிச்சல், சேவை மனம் வேண்டுமென ஆரம்பத்தில் பயமுறுத்தினார்கள். கிட்டத்தட்ட ஒரு வருட காலம் அறக்கபறக்க வேலைசெய்து, கட்டிடத்தைப் பேசி முடித்து, ஸ்பாஸ்டிக் ஸொஸைடியின் பக்கபலத்துடன் இதைத் தொடங்கிவிட்டார். அங்கேயே இவரின் சேவையைச் செய்யலாம் என்ற யோசனையை ஆரம்பத்திலிருந்தே நிராகரித்து வந்தார். தன் நடுவயதில், ஒரிஸ்ஸா என்.ஜி.ஓவில் வேலைப் பார்த்தபோது அப்பா தன் கனவில் இப்படிப்பட்ட இல்லத்தைத் தொடங்க முடியாமை குறித்து வருத்தப்பட்டார் எனவும், அதனால் இது இரு தலைமுறையின் கனவை நினைவாக்கும் முயற்சி எனவும் கூறினார்.

கவிதா. தங்கள் இயலாமையை சொல்ல வார்த்தையில்லாத பெற்றோர்களின் குழந்தை. பணக் கஷ்டங்களுக்கு நடுவே பதினைந்து வயது வரை வளர்த்துவிட்டார்கள். சிகிச்சையின் சிரமங்களைவிட, அவற்றை மேற்கொள்ளும் தங்கள் பெண்ணின் அவஸ்தைகளை பார்க்க சகிக்காமல் வந்தவர்கள். பலனில்லாத சிகிச்சை, ஆனாலும் பல் விழுந்து பொக்கையாகும் காலம் வரை ஜீவிக்கக்கூடிய வளுவான உடல். ஆற்றாமையில் புழுங்கும் பெற்றோர். குழந்தையைப் போல் நடத்தை, கை-கால் மூளையின் ஆணைக்கேற்ப கோர்வையாக இல்லாதது, உடுத்துவதுமுதல் சுத்தம்வரை மற்றவர்களை எதிர்பார்ப்பது என இரண்டு ஆட்களின் முழு கவனிப்பை நாடுவாள். சுந்தரியின் கணவர் இருபது மணிநேரம் வரை தினமும் இவளுடன் இருந்து, தினப்படி காரியங்களை ஒழுங்கு முறைக்குக் கொண்டுவந்தார். சாப்பிடுவது, தூங்குவது என அடிப்படை தேவைகளுக்கு இவர்களைப் பழகுவதில் இருந்த சிரமங்களை முதலிரு மாதங்களில் சுந்தரி தன் கணவருடன் கூடவே இருந்து பார்த்திருக்கிறாள். அந்த இல்லத்திலேயே முதலில் வந்ததாலோ என்னமோ, இருவருக்கும் கவிதா ரொம்ப செல்லம். கவிதாவின் உடை, குளிப்பது போன்றவை சுந்தரியின் இலாக்கா. ஆறு மாதங்களில் தன்னால் கவிதாவில் பளுவைத் தாங்கமுடியாமல் போகவே வேலைக்காக ஆனந்தியை அமர்த்தியிருந்தார்கள்.ஆனந்தி ஸ்பாஸ்டிக் ஸொஸைட்டி ஆஃப் இந்தியா என்ற அமைப்பில் பல வருடங்கள் வேலை செய்தவள். சுந்தரியின் கணவருக்கு தெரிந்தவர் பெண். ஒரு வருடத்திற்கு கடவுள் இல்லத்தில் வேலை செய்ய ஒத்துக்கொண்டதில் அவருக்கு மகிழ்ச்சி. அந்த இல்லத்தில் இருந்த எட்டு பெண்களுக்கு ஆனந்திதான் அம்மா. அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சில நாட்கள் பதினான்கு மணிநேரம் கூட வேலை செய்வாள்.

இவர்களைத் தவிர பனிரெண்டு ஆண்கள் பலதரப்பட்ட வயதில் இருந்தனர். வயதைப் பற்றிய கவலை சுந்தரி உட்பட யாருக்குமே கிடையாது. குழந்தைகளைப் போல் நடத்தினால் மட்டுமே கொஞ்சமேனும் காரியங்கள் நடக்கும். சக மனிதர்களைப் போல் இவர்களையும் நடத்துங்கள் என ஸ்பாஸ்டிக் ஸொஸைட்டியில் அறிவுறித்தினாலும், குழந்தைகளின் மொழி செய்யும் வித்தைகள் பல என இவர்கள் அனுபவத்தில் கற்றுக்கொண்டார்கள். தனிப்பட்ட கவனத்துடன் பொறுமையாகக் கையாண்டால் மன இருப்பையும், பய உணர்ச்சியையும் போக்க முடியும் என்பதை சுந்தர் தன் நாற்பது வருட வேலையில் உணர்ந்திருக்கிறார்.

ஆனந்திக்கு உதவியாக மனோஜ் என்ற இருபது வயது சேவா சங்க மாணவனும் முழு நேரம் கடவுள் இல்லத்தில் வேலை செய்யத் தொடங்கினான். இவர்களால் சுந்தரியின் கணவனின் வேலை இல்லத்தின் வெளிவேலைகள், சாப்பாடு, துணி, அன்றாட காய்கறி வாங்குதல், பண உதவிக்கு அலைதல் என குறுகியது.ஆனாலும், தினமும் இல்லக் குழந்தைகளிடம் சில மணிநேரங்கள் பேசுவது, அவர்களுடன் குழு விளையாட்டுகளை ஏற்பாடு செய்வது, சில பாடங்கள் கற்றுக்கொடுப்பது என இருந்தால் மட்டுமே, அவருக்கு நிம்மதியாக உறங்க முடியும். வெளி வேலைகளுக்குப் பிறகு இந்தக் காரியங்களே தனக்கு மனநிறைவு தருவதாக சுந்தரியிடம் பலமுறைக்கூறியுள்ளார். அவரின் ரத்த அழுத்தத்தைப் பற்றி சுந்தரி மட்டுமே கவலைப்பட்டாள்.

சுந்தரிக்கு அரசு அலுவலகத்தில் பத்திலிருந்து வேலை செய்ததால், குடும்ப சுமை பற்றிய கவலை இருவருக்குமே இருந்ததில்லை. என்றாவது ஒரு நாள் இந்த இல்லத்தை தான் நிறுவனம்செய்ய நேரும் என்பதை சவுகரியமாக எல்லாருமே மறந்திருந்தனர்.

சுந்தரியின் கணவர் ஒரு காந்தியவாதி. தன் குழந்தைகளுக்கும் தினம் சொல்லும் காந்தி கதைநேரம் அவர் மனதிற்கு நெருக்கமான ஒன்று.

`காந்தியைப் பத்தி இன்னொரு கதை சொல்லட்டா.`

`ம்..ஹூம்` – பல குரல்கள் ஒலித்தாலும் அவர்களுக்கு மிகவும் பிடித்த கதை அதுதான் என அவ்ருக்கும் தெரியும். கை கால்களை ஆட்டியும், முகத்தை வேகமாகத் திருப்பியும் உடல்மொழியால் சந்தோஷத்தைத் தெரிவிப்பார்கள். இதற்கு வெளியே இருக்கும் உலகமக்களின் எண்ணத்தை நினைத்தால் சுந்தரியின் கணவருக்கு சிரிப்பாக இருக்கும். தன் வீட்டருகே இருந்த ஒரு பெண்மணி, படித்த பெண் தான், – `மன நலம் குன்றியவங்களுக்கு ஆஸ்பத்திரி இருக்கே..அவங்க பாத்துக்கமாட்டாங்களா?`- அவள் எந்த மருத்துவமனையைக் குறிப்பிடுகிறாள் எனத் புரியாதா? ஸ்பாஸ்டிக் குழந்தைகள் பற்றி விழிப்புணர்வு வருவது மிகக் கடினம் எனத் தோன்றியது. இவர்களுக்கு விளக்குவதற்கு நேரத்தில் இல்லத்தில் ஏதாவது வேலை செய்யலாமெனத் தோன்றும்.

`நல்ல விஷயங்களுக்கு உண்ணாவிரதம் இருக்கலாம்னு காந்தி எப்போதும் சொல்லுவார். ஆனா அது பலருக்கும் பயன் படும் விஷயமாக இருக்கனும்.சுதந்திரத்துக்காக பலதடவை அவர் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார் தெரியுமா?`

கதை சொல்லி முடித்தவுடன் எல்லாரும் கைதட்டுவதையும் சொல்லிக்கொடுத்தார். சில பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பார்க்க வரும்போது கண்ணீர் விடும் நேரமும் இதுதான்.

II – அசுரன்

ஒரே வருடத்தில் எல்லோருக்கும் இல்லம் பழக்கமாய்ப் போனது. சுதந்திரமாக அனைவரும் சுற்றி விளையாடத்தொடங்கவே இவ்வளவு நாட்கள் ஆனது. இதை ஒரு மகத்தான வேலை எனச் சொன்னால், சுந்தரியின் கணவரும், ஆனந்தி, மனோஜ் ஒட்டுமொத்தமாக சத்தம் போடுவார்கள். மனோஜ் – `எனக்கு பிடிக்காத தமிழ் வார்த்தை சேவை` – நாடக பாணியில் கைகளை உயர்த்தி சொல்லி எல்லாரையும் சிரிக்கவைக்கத் தெரிந்தவன். சுற்றி இருப்போரை மகிழ்வுடன் வைக்கும் வயதுக்காரன்.

சில காட்சிகள்,அவை எந்த காலத்தில் நடந்திருந்தாலும், தூண்டிலென நம்மை பிடித்து நிறுத்தும். சுந்தரிக்கு கவிதா இல்லத்தின் தோட்டப் பகுதியில் நிறைய நேரம் செலவு செய்யும்போதெல்லாம் மிக மகிழ்ச்சியோடு இருப்பாள். சுந்தரி நூறுமுறையாவது கவிதா பட்டாம்பூச்சி பிடிக்க முயற்சிப்பதைப் பார்த்திருப்பாள். அந்த நூறு முறையும் அடையும் முக மாற்றத்தை கவனித்து தன் ஞாபகத்தில் வைத்திருந்தாள். குழப்பம் எப்போது வந்தாலும், அந்த சித்திரத்தை நினைத்துப் பார்த்தால் பட்டாம்பூச்சி தன் நெஞ்சில் பறப்பது போல் தோன்றும். குழப்பம் காணாமல் போகும்.

அதேபோல் ஒரு மழை நாளில், இல்லத்தில் இருந்த அனைவரும் போட்டதைப் போட்டபடியே விட்டுவிட்டு, தோட்டத்திற்கு ஓடியது நினைவுக்கு வருகிறது. சிலரை தூக்கி வரவேண்டியிருந்தது; மழையில் நனைந்தபடி ஓடுவதும், கத்துவதும் அடங்குவதற்கே பல நிமிடங்கள் ஆகிவிட்டன. குதூகலத்துடன் கவிதாவும் கை-கால்களை ஆட்டி ஆர்பரித்தாலும், தன் பட்டாம்பூச்சி என்ன ஆனது எனற பயம் வந்து நின்றுவிட்டாள். சுந்தரியின் கணவர் பேசிப் பார்த்து, பறக்கும் பட்டாம்பூச்சியைக் காட்டிய பிறகே சமாதானம் அடைந்தாள்.

இப்படியாக சில நாட்கள் ஆர்ப்பாட்டங்களும், சில பிரச்சனைகள் நடுவே கடவுள் இல்லம் இரண்டு வருடங்களைத் தாண்டுவிட்டது. பணப்பிரச்சனை ஆரம்பமான நாட்களில், சுந்தரியின் கணவர் தினப்படி வேலைகளில் அதற்கான திட்டத்தை பற்றி மறந்தது நினைவிற்கு வந்தது. பணம் சுரந்துகொண்டேயிருக்க ஓய்வூதியம் அட்சயப் பாத்திரம் இல்லையே?

ஆகஸ்ட் 2006. கடவுள் இல்லத்திற்கு அதுவரை வந்த பணம் திடீரென நின்ற மாதம். அப்படி ஒன்றும் அதிகமில்லை என்றாலும், சில தொண்டு நிறுவனங்களிலிருந்து வந்த பணத்தில் சவுகரியமாக நாட்களை ஓட்ட முடிந்தது. தனிப்பட்ட மக்கள் செய்த உதவி வந்துகொண்டிருந்தபோதும், அவை அன்றாட தேவைகளுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. சுந்தரி வேலைசெய்யும் இடத்தில் வாங்கிய கடன் இல்லத்தின் கட்டட வேலைகளுக்கும், அவள் கணவனின் ஓய்வூதியம் ஆரம்பகட்ட செலவுகளுக்கும் சரியாய்ப் போனது. பின்னர் தொண்டு நிறுவனங்களின் பணம், தன் பென்ஷனிலிருந்து சிறு தொகை, சில பெற்றோர்கள் கொடுக்கும் மாத பணம் என செலவுகளைச் சமாளிக்க முடிந்தது.

தென் தமிழக தன்னார்வு அமைப்பு போன்ற சேவை அமைப்புகள் உதவி செய்வதை அறிந்து சுந்தரியின் கணவர் அவர்களைத் தொடர்புகொண்டார். அவர்கள் சும்மா எடுத்து பணத்தைக் கொடுக்க முடியாதே? முதலில் கடவுள் இல்லத்தை பார்வையிட்டு, தங்கள் சுகாதார மற்றும் சேவை மைய இலக்கணங்களுக்குள் கட்டுப்பட்டால் மட்டுமே உதவி செய்யமுடியுமென கூறிவிட்டனர். அவர்களையும் குறை சொல்ல முடியாது. பல அமைப்புகளிடம் பட்ட சூடு இதை கட்டுப்படுத்துகிறது.

சுகாதாரக் கோட்பாடு, மற்றும் இல்லத்திலிருக்கவேண்டிய ஒழுங்கீனங்களின் பட்டியலுடன் வீட்டுக்கு வந்தபோதே சுந்தரியின் கணவர் தளர்வாய் இருந்தார். பட்டியலைப் பார்த்து கொஞ்சம் கலவரப்பட்டுப் போனாள் சுந்தரி.

`இதுக்கே நமக்கு ஐம்பதாயிரம் வரை செலவு செய்யணும் போலயிருக்கே..`

`நம்மகிட்ட திடீர் செலவுக்கு இருக்கறதே ஒரு லட்சம்தான். அதை குழந்தைகளுக்கு ஏதாவது அவசரம்னா செய்யலான்னு தானே வெச்சிருந்தோம் சுந்தரி..`

`இதுவும் அது மாதிரிதானங்க. கொஞ்சம் செலவு செய்தால், உதவி கிடைக்குமே.`

`உனக்கு புரியலியா. கடைசி பாராவைப் படி. உதவி கிடைக்க ஒரு வருஷம் கூட ஆகலாம்.முதலிலேயே இதெல்லாம் ப்ளான் பண்ணாமப் போய்ட்டேன்..` – முதல் முறையாக அவர் குரல் தழுதழுத்தது.

இரவு முழுவதும் ஜீரத்தின் உச்ச நிலையில் பிதற்றிக்கொண்டிருந்தார். கவிதா, மனோஜ், பட்டாம்பூச்சி என மாறிமாறி முணுமுணுத்துக்கொண்டிருந்தார். அதிகாலை நேரத்தில் தூங்கத் தொடங்கினாலும், ஒரியா மொழியில் சில வார்த்தைகள் பிதற்றிக்கொண்டிருந்தார். பின்னர் தன் தந்தையைக் கூப்பிட்டபடி உறங்கிப்போனார் சுந்தரியின் கணவர்.

அடுத்தடுத்த நாட்களில் ஒன்றுமே செய்யாமல் வீட்டுக்குள்ளே முடங்கிக்கொண்டிருந்தார். தன் நிலை இப்படி ஆனதில் கவலைப்படவில்லை, தன்னை நம்பி இருக்கும் குழந்தைகளைப் பற்றிய நினைப்பு முட்டும்போதெல்லாம் இறுக்கமான முகத்தோடு தலைகவிழும். ஸ்பாஸ்டிக் ஸொஸைடியிடம் பேசி உதவியோ அல்லது சில குழந்தைகளை அங்கு சேர்ப்பதைப் பற்றி பேசலாமே என்ற சுந்தரியின் எண்ணத்தை இடது கையால் தள்ளினார். மூன்று நாட்களுக்குப் பிறகு ஒரு முடிவெடுத்ததுபோல், சுந்தரியிடம் கூடச் சொல்லாமல் வீட்டைவிட்டுக் கிளம்பினார்.

ஒரு தனியார் தொண்டு நிறுவனத்திடம் பேசி அவர்கள் கூறிய ஆறுதல் வார்த்தைகளை நம்பி வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்த மாலை வேளையில் உயர் ரத்த அழுத்தத்தால் அவருக்கு மார்பு வலியில் இறந்துபோனார். மூன்று முறை தாங்குமே, இது எப்படி நடந்தது என சுந்தரி அழாமல் கேட்டகத் தொடங்கியது முடியில் ஓலமாய் மாறியது.`இத என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது` என கடைசி வரை யாருடனோ வாதிட்டுக்கொண்டிருந்தாள். எல்லாம் முடிந்த ஒரு மாதத்தில், இல்லத்தின் நினைப்பு மீண்டும் வந்தது. அதுவரை ஆனந்தி, மனோஜ் இருவரும் திறமையாக நிர்வகித்து வந்தாலும், பணத் தேவை இவளிடம் திரும்ப கொண்டுசேர்த்தது.

தன் மேல் சுமத்தப்பட்ட கடமை, இல்லத்தின் குழந்தைகளைப் பார்த்த போது நெகிழ்ந்து ஓடியது. தன் சமீபத்திய அலுப்பையும் உதறித்தள்ளி சுந்தரி பல இடங்களுக்கு அலையத்தொடங்கினாள். தன்னார்வு மையங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், தன் அலுவலகம் என போன இடத்திலெல்லாம் அவள் நிலைமைக்கு பரிதாபம் மட்டுமே கிடைத்தது.`ச்சூ,ச்சூ` கொட்டியவர்கள் கொடுத்த பணம் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே வரும். தன்க்குத் தேவை நிரந்தமான பண வருகை அல்லது கணிசமான ஒரு தொகை என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது. மனோஜ், கவிதா தங்கள் சம்பளத்தைக் கூட அடுத்த மாதங்களில் பணம் கிடைத்ததும் பெற்றுக்கொள்வதாய் கூறினார்கள். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடிந்தது.

நம்பிக்கைத்தரும் சொற்றொடர்களைச் சொன்னாலும் பல நிறுவனங்களிடமிருந்து எதுவுமே கிடைக்கவில்லை. தென் தமிழக தன்னார்வு அமைப்பிலிருந்து வந்த கடிதமும், தங்களுக்கே உரிய நிறுவன பாஷையில் உதவியை மறுத்திருந்தனர். ஆங்கில சொற்றொடர்களுக்கு ஊடாக அவர்கள் விளக்கியது என்ன? பச்சாதாபமா அல்லது தனித்து நிற்கத் தகுதியைக் குறைகூறும் தொனியா என்பது புரியவில்லை. அந்த காகிதத்தை கிழித்தெறிந்துவிட்டு, ஸ்பாஸ்டிக் ஸொஸைடியை அனுகுவது எனத் தீர்மானித்தாள்.

அடுத்த நாள் காலையில் அங்கு போனபோது அவளுக்கு ஒரு வழி பிறந்திருந்தது. வெளிநாட்டில் இருக்கும் தொண்டு நிறுவனம், தங்கள் சேவை மையத்தை இந்தியாவிலும் தொடங்க இருப்பதாக ஸ்பாஸ்டிக் ஸொஸைட்டி காரியதரிசி தெரிவித்தார். அதற்கு உதவி செய்யும் ஒரு தம்பதி, ஒரு மனநலம் குன்றிய குழந்தையைத் தத்து எடுத்துக்கொள்ளப் போவதாகவும், இதனால் மற்றவர்களுக்கு வழிகாட்டியாய் இருக்க வழிவகுக்கும் என நம்புவதாய் தெரிவித்தார். சுந்தரியைக் கேட்காமலேயே கவிதாவின் புகைப்படத்தையும், அவளைப் பற்றிய விவரங்களையும் ஆனந்தியிடமிருந்து பெற்றுக்கொண்டிக்கிறார்கள்.

ஆனந்தி கடவுள் இல்லத்தின் பிரச்சனைகளைக் கூறியதால் இதைச் செய்வதாகக் கூறினார். எனக்கு முதலில் எல்லாமே குழப்பமாக இருந்தது. இவர்கள் எதற்காக ஒரு மனநலக்குறைவுடைய பெண்ணை தத்தெடுத்துக்கொள்ளவேண்டும்? ஆனந்தி நல்ல முறையில் இதைச் செய்திருந்தாலும், ஏன் தன்னிடம் கேட்கவில்லை? கவிதாவைத் தத்தெடுத்துக்கொண்டு வருடாவருடம் கடவுள் இல்லத்திற்கு பண உதவி செய்வதாய் எப்படிக் கூறுகிறார்கள்? இதை நம்பலாமா என்ற எண்ணம் துளி கூட ஏன் தனக்கு வரவில்லை? தன் கணவர் இந்த முடிவை செய்திருப்பாரா?

தன் முடிவைச் சொல்ல ஒரு நாள் அவகாசம் வேண்டுமெனச் சொல்லிவிட்டு, கடவுள் இல்லத்துக்கு கிளம்பினாள். வழியெல்லாம் பல மனச் சித்தரங்கள் வந்து போயின- இதை ஒரு நல்ல சந்தர்பமாக எடுத்துக்கொள்ளலாம். கவிதாவிற்கு நல்ல வாழ்வு கிடைத்து, ஏன் வெளிநாட்டு ட்ரீட்மெண்டால் குணமாகக்கூட சாத்தியமிருக்கிறது. இந்த வாய்ப்பு ஒரு வரப்பிரசாதம். இதனால் மற்ற குழந்தைகளை நல்ல படியாகப் பார்த்துக்கொள்ளமுடியும். பணப் பிரச்சனை குறைந்தாலே எல்லாம் சரியாக வாய்ப்புண்டு. எல்லாவிதத்திலும் இது ஒரு நல்ல விஷயமாகவே படுவதாக சுந்தரி தன் கணவிரிடம் மானசீகமாகச் சொல்லிக்கொண்டாள்.இத்தனைத் துயரத்திலும் நல்ல விஷயங்களும், மனிதத்துவமும் எங்கோ ஒரு மூலையிலாவது விஞ்சி இருப்பதை நினைத்து சுந்தரி அழதுகொண்டே கடவுள் இல்லத்துக்கு வந்து சேர்ந்தாள்.

ஆனந்தியிடம் கொஞ்சம் கடிந்துகொண்டாலும், அவள் செய்த செயலின் பிண்ணனியை தன்னால் உணர முடிந்தது. அடிப்படையில் நல்ல மனிதர்களிடம், அவ்வப்போது வெளிப்படும் குரூர குணம் போல் – கவிதாவைப் பிரிவது அவளுக்கும் மிகுந்த கஷடத்தைக்கொடுக்கும் எனத் தன் கோபத்தை நொந்துகொண்டாள்.

தோட்டத்தில் செடிகளுக்கு நடுவே கவிதா நின்றுகொண்டிருந்தாள். இவள் ஒருவளால் பலர் செய்ய முடியாத காரியங்கள் நடக்கப் போவது குறித்து சந்தோஷமில்லாதது ஏன் எனத் தெரியாமல், அவளிடம் சென்று நின்றாள்.இவளிடம் விஷயத்தைச் சொல்வது அவ்வளவு சுலபமாக இருக்கப்போவதில்லை. மனதில் அழிக்க முடியாத பிம்பமாக சுந்தரியின் கணவர், ஆனந்தி, மனோஜ் என உலகமே இவர்கள் மட்டும்தான். சுந்தரியின் கணவர் இறந்தைக்கூட இல்லத்தில் யாருக்கும் சொல்லவில்லையென்றாலும். அவர் இருப்பு இல்லாத விளையாட்டுகள் பழையபடி இல்லை. ஏதோரு ஒரு ப்ளாஸ்டிக் போல் விளையாட்டில் ஆனந்தி, சுந்தரியுடன் விளையாட்டில் பங்கு கொண்டார்கள்.

தன்னால் முடிந்தது இவ்வளவுதான் என இவர்களுக்குப் புரிய வைப்பது எப்படி என சுந்தரி விழித்தாள். அவள் கணவனின் இடத்தில் ஒரு பகுதி கூட நிரப்ப முடியாது என்பதை அவள் உணராமல் இல்லை.

இரு கைகளிலிலும் பட்டாம்பூச்சிகளுடன் ஈயென தன் எல்லா பல்லையும் காட்டியபடி சிரித்துக் கொண்டிருந்தாள் கவிதா. இந்தக் காட்சி என் மூளையில் பதிந்த பல அதிசய காட்சிகளில் முதன்மையாக மாறிப்போனது. விஷ்ணு அவதாரம் போல் கைகளை விரித்தபடி, தன் அற்புதமான உலகத்தின் ராணியாகக் காட்சி தந்துகொண்டிருந்தாள்.அகிலத்தை அளக்கும் கைகளில் அவள் குழந்தை சிரிப்பே தோட்டம் முழுவதும் தெரிந்து மறைந்தது.

இன்னும் இதைவிட அற்புதக் காட்சிகளுக்காக காலம் முழுவதும் காத்துக்கொண்டிருக்கத் தீர்மானித்தேன்.


girigopalan@gmail.com

Series Navigation

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்