இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினெட்டாவது அத்தியாயம்

This entry is part of 47 in the series 20090828_Issue

அலெக்ஸாந்தர் சோல்செனிட்ஸன் தமிழில்: ரா.கிரிதரன்


சுகாவ் சுற்றிப் பார்த்து, தன் குழுத்தலைவரைக் கண்டுபிடித்தான். டியூரின், கடைசி ஐந்து கைதிகளில் ஒருவராய் நடந்து கொண்டிருந்தார். அகலமான தோள்களும்,அதற்கிணையான முக வடிவையும் கொண்டவர். இறுக்கமான முகத்துடன் நின்றுகொண்டிருந்தார். ஒரு சிரிப்பில்லை, களிப்பில்லை. ஆனாலும், தன் குழுவுக்கு போதுமான அளவில் சாப்பாடு கிடைக்க பாடுபடுவார். இரண்டாவது முறை முகாமில் வேலை செய்து கொண்டிருக்கிறார். குலாக்(முகாம் முறைமை அலுவல்) என்ற அமைப்பின் உண்மையான ஊழியன். அதனாலேயே முகாமைப் பற்றி எல்லாமே தெரியும்.

முகாம்களில் குழுத் தலைவர்களே கைதிகளுக்கு முதன்மையானவர்கள்; நல்லவன் இரண்டாவது வாழ்வு கொடுத்து வெளியே அனுப்புவான், கெட்டவனோ சவக்குழியில் போட்டடைப்பான். ஆண்ட்ரீ டியூரினை சுகாவுக்கு உஸ்டிஸ்மாவின் காலகட்டத்திலேயே தெரியும். ஆனால், டியூரின் குழுவில் அப்போது அவன் இல்லை.ஆனால், அரசியல் காரணங்களுக்காக கைதி செய்தவர்களை வேறொரு முகாமிற்கு மாற்றும் போது, டியூரின் சுகாவை தன் குழுவில் சேர்த்துக் கொண்டான்.குழு அமைப்பிற்கோ, பிபிடி என்ற குழு நிற்வாக அமைப்புடனோ சுகாவிற்கு எந்த தொடர்பும் இல்லை.அதெல்லாம் குழுத் தலைவனின் வேலை. இரும்பு கவசம் போல அவர்களை காப்பாற்ற குழுத் தலைவனால் முடியும். இதற்கு கைமாறாக, டியூரின் புருவத்தை உயர்த்தினாலோ, விரலை அசைத்தாலோ – உடனே நீங்கள் அவனுக்காக ஓடி வேலை செய்வீர்கள்.

முகாமில் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம். ஆனால், குழுத் தலைவனை மட்டும் ஏமாற்றக் கூடாது. அப்போதுதான் வாழ முடியும்.

டியூரினிடம் அதற்கு முன் தினம் வேலை செய்த எடத்திலே வேலை செய்ய வேண்டுமா அல்லது புதிய இடத்திற்கு செல்ல வேண்டுமா என சுகாவ் கேட்க நினைத்தான். ஆனால், அவன் எண்ணங்களைத் தடையாக இருக்குமோ எனக் கேட்கவில்லை.சோஸியலிஸ்ட் வாழ்வுமுறை குடியிருப்பில் வேலை செய்வதை இப்போது தான் தவிர்த்திருந்தான். தன் குழுவின் ஐந்து நாள் சாப்பாட்டி டேஷனை நிர்ணையிக்கும் வழிமுறையில் சிக்கிக்கொள்வோமோ என்ற பயம் ஏற்பட்டது.

டியூரின் முகத்தில் பல கவலை ரேகைகள் தெரிந்தன. காற்றை எதிர்நோக்கி நின்றுகொண்டிருந்தாலும், எந்த தசைகளும் அசையவில்லை. மரப்பட்டைகளைப் போல் அவன் தோல் தடிமனாயிருந்தது.

திடலில், கைதிகள் கைகளைத் தட்டிக்கொண்டும், கால்களால் மிதித்துக்கொண்டும் இருந்தனர். காற்றும் பலமாக இருந்தது. `கிளிகள்` எனக் கைதிகளால் அழைக்கப்படும் கோபுர காவலாளிகள் ஆறு கோபுரங்களிலும் நின்று கொண்டிருந்தனர். ஆனாலும் கைதிகளை உள்ளே அனுமதிக்கவில்லை. கண்காணிப்பின் மூலம் உயிரை எடுத்து விடுவார்கள்.

இதோ வந்து விட்டனர். தலைமைக் காவலாளி வேலை-சோதனைக்காக ஒரு கோபுரத்திலிருந்து வெளியே வந்தான்.கதவின் இரு பக்கங்களிலும் நின்று கொண்டனர். கதவு அகலமாகத் திறந்து கொண்டது.

`ஐந்தைந்தாய் நில்லுங்கள். ஒன்று, இரண்டு, மூன்று…`

வரிசைப் படி, அணிவகுப்புபோல் , கைதிகள் நடந்து சென்றனர். உள்ளே சென்றுவிடவேண்டும் – அது மட்டுமே அவர்களுக்கு வேண்டும். அதற்குப் பிறகு என்ன செய்ய வேண்டுமென யாரும் சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை.

கண்காணிப்பு வீட்டிற்குப் பிறகே அலுவலகம் இருந்தது. அதற்கு அருகே வேலைச் செயலர் அலுவலகம். குழுத் தலைவர்களை உள்ளே வரச் சொன்னார்கள். டெர் கூட அங்கிருந்தான். அவன் பழைய குற்றவாளி. ஆனால் இப்போது கண்காணிப்பாளன் வேலை. அரக்கன். கைதிகளை நாயை விட கீழ்த்தரமாக நடத்துவான்.

எட்டு மணி. ஐந்து நிமிடம் கழிந்திருந்தது.கைதிகள் அங்குமிங்கும் அலைந்து பிரிந்து போய்விடுவார்களென காவலாளிகளுக்கு பயமாயிருந்தது. கைதிகளுக்கோ நிறைய சமயம் இருந்தது. கட்டடங்கள் இருக்கும் இடத்தில் நுழையும் அனைவரும் சுள்ளிகளைப் பொறுக்கத் தொடங்கினர் – நெருப்புக்கு பயன்படும்.

டியூரின் பாவ்லோவையும் தன் கூட அழைத்து அலுவலகத்தினுள் நுழைந்தான்.ட்சேசாரும் உள்ளே நுழைந்தான்.ட்சேசார் வசதி படைத்தவன். ஒரு மாதத்தில் இரண்டு பொட்டலங்கள். யார்யாரை காக்காய் பிடிக்க வேண்டுமே பிடிப்பான். இந்த அலுவலகத்திலே நல்ல நிலைமையில் வேலை செய்து வருகிறான்.

குழுவில் மற்றவர்கள் ஒதுக்குப்புரமான ஒரு இடத்தில் உட்கார்ந்தனர்.

யாருமற்ற அந்த பாலைவனத்தில் சூரியன் சிகப்பாய் எழும்பியது. ஓரிடத்தில் கத்தையான கதிர்கள் பனியை உருக்கத்தொடங்க, மற்றொரு இடத்தில் மரத்துண்டுகளைப் போட்டு நெருப்பு கொளுத்திக்கொண்டிருந்தனர். இங்கு ஒரு இரும்பு கம்பி, அங்கு தேவையில்லாத இரும்புகள் சிதறி இருந்தன. அந்த இடத்தில் பலதரப்பட்ட குழிகளும், மேடுகளும் அங்கிமிங்கும் இருந்தன. வண்டிகளை பழுது பார்க்கும் கட்டிடத்தில் கூரையை போட தயாராக இருந்தது. ஒரு மேடான இடத்தில் நின்றிருந்த மின்நிலையத்தில் இரண்டாவது மாடியை எழுப்பிக்கொண்டிருந்தனர்.

இப்போது ஒருவரும் அருகில் இல்லை. ஆறு கண்காணிப்பாளர்கள் கோபுரங்களிலும், சிலர் அலுவலகத்தினுள் அலைந்து கொண்டும் இருந்தனர். அந்த நொடி கைதிகளுக்குறியது.
girigopalan@gmail.com

Series Navigation