விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது

This entry is part of 38 in the series 20090820_Issue

இரா.முருகன்


ஜனவரி 11 1903 – சுபகிருது வருஷம் , மார்கழி 27 ஞாயிற்றுக்கிழமை

சமையல் ஆக நேரமாகும்னா கொஞ்சம் காப்பியாவது கண்ணுலே காட்டேண்டி கல்பு.

நீலகண்டன் சமையல்கட்டைப் பார்த்துக் குரல் கொடுத்தான்.

இதோ ஆச்சு. அரசூர் அத்திம்பேர் வந்திருக்கார். ஒரு பருப்புப் பாயசமாவது பண்ணிப் போடாம எப்படி? மெட்ராஸ்கார மனுஷா எல்லாம் உறவு சொல்லிண்டு சர்க்கரையா பேசுவா. கை மட்டும் கருணைக்கிழங்குன்னு நினைச்சுட மாட்டாரா?

கற்பகம் சமையல்கட்டிலிருந்தே பதில் கொடுத்தாள்.

நான் எதுக்கு அப்படி நினைக்கப் போறேண்டியம்மா. ஞாயித்துக்கிழமை ஒரு நாளாவது ஓய்வு ஒழிச்சல் உனக்கும் வேணாமா பொண்ணே?

அரசூர் சாமா திண்ணையில் இருந்தே சொன்னான். சாமா பெண்டாட்டி வழியில் அவளுக்கு கற்பகம் ஒண்ணு விட்ட ரெண்டு விட்ட தங்கை உறவு. தலையைச் சுற்றி மூக்கைத் தொடாமல் தனக்கு அவள் மச்சினி என்று அந்தச் சிக்கலை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டான் சாமா. இத்தனை அழகான மச்சினி கிடைக்க அரசூர் சாமாவுக்குக் கசக்குமா என்ன?

இது ஆறு வருடம் முன்னால் திருக்கார்த்திகை நேரத்தில் நீலகண்டய்யனும், கற்பகமும் அரசூருக்கு வந்தபோது நடந்தது.

அந்த மயிலாப்பூர் கற்பகாம்பாளே நேரிலே இந்த கிரஹத்துக்கு வந்த மாதிரி இருக்கு உன் தங்கையைக் காணறபோது. உனக்கு எல்லாம் நன்னா நடக்கும்போ.

அப்போது பகவதியம்மாள் மருமகளிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள். கற்பகம் வயிற்றில் குழந்தையைச் சுமந்திருந்த நேரம் அது.

ஆமா அம்மாவுக்கு நீ மதுரை மீனாட்சி. உன் தங்கை மயிலாப்பூர் கற்பகாம்பாள். நீலகண்டன் சாட்சாத் கபாலீசுவரன். நான் தான் வெட்டிச் சொக்கன்.

நீயா வெட்டி. டிபுட்டி தாசில்தார். சுத்துவட்டாரத்துலே பத்து கிராமம் எழுந்து நின்னு மரியாதை கொடுக்கற பெரிய மனுஷன். என்னை மாதிரியா? செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வெளியிலே நேவிகேஷன் க்ளார்க் நீலகண்டனை எத்தனை பேருக்குத் தெரியும்?

நீலகண்டன் சாமா தோளில் ஓங்கி அடித்தபோது பகவதி அம்மாள் ரெண்டு பேர் தலையையும் ஆதரவாகத் தடவி ஆனந்தப்பட்டாள்.

அவர் இருக்கற வரைக்கும் நெனச்சுண்டா அண்ணாவைப் பாக்கணும் மன்னியைப் பாக்கணும்னு உன் தகப்பனாரையும் தாயாரையும் தேடிண்டு பட்டணத்துக்கு வண்டி ஏறிடுவார். பொடிக்கடை காரியத்தை மேற்பார்வை பார்க்கறதுன்னு நொண்டிச் சாக்கு வேறே. கோமதி மன்னி கலந்து கொடுக்கற காப்பி மாதிரி ஈரேழு லோகமும் கிடைக்காதுன்னு சொல்லிச் சொல்லி மாஞ்சு போவார் மனுஷன். அங்கே எல்லாம் தேடிண்டு இருப்பார் இப்போ அதையெல்லாம்.

கண்கலங்க பகவதி உள்ளே போனவள் பூஜையறை வாசலில் ஒரு வினாடி நின்றாள்.

அந்தப் பிரியமும் வாத்சல்யமும் இனிமேலும் தொடரணும். வந்து போயிண்டு இருங்கோ. என்ன, தெரிஞ்சுதா பொண்ணே?

கற்பகத்திடம் சொல்லியபடி பகவதி மருமகளுக்கு ஒத்தாசையாக சமையல்கட்டில் புகுந்து விட்டாள் அப்புறம்.

நாம அரசூர் போனா பகவதி மாமியும் என் அக்காளும் எவ்வளவு பிரியமா நம்மளை நடத்தியாறது. காலம்பற குளிக்க வென்னீர் மொதல் கொண்டு மாமி கோட்டை அடுப்பிலே வச்சுக் கொடுக்கறா. குளிச்சுட்டு வந்தா மல்லிப்பூ மாதிரி இட்டிலி. கொத்துமல்லி சட்டினி. அப்புறம் மணக்க மணக்க மலையாளக்கரை சமையல். மாமி அம்பலப்புழையை விட்டு வந்து மாமாங்கம் ஆகியும் இன்னும் மலையாள ஸ்திரிதான். நான் எப்படி காவேரிக்கரை பொம்மனாட்டியோ அதுபோல.

கற்பகம் ஒரு சின்னக் குவளையில் பாலும் மற்றதில் காப்பியுமாக உள்ளே இருந்து வந்தாள்.

பால் தானே அத்திம்பேரே?

நினைவு வச்சிண்டிருக்கியே பேஷ். நமக்கு இந்த காப்பி எல்லாம் ஒத்துக்காத சமாச்சாரம்.

அரசூர் சாமா டபராவைக் கையில் வாங்கினான்.

அரசூர் அத்திம்பேரைப் பாருங்கோ. சமத்தா பால் தான் எப்பவும். காப்பிப் பக்கமே போறதில்லை. நம்மாத்துலே ஞாயித்துக்கிழமை ஆச்சுன்னா காலம்பறத் திறந்த காப்பிக்கடையை பொழுது சாயற வரைக்கும் மூடற சமாச்சாரமே கிடையாது.

நீலகண்டன் அவளைக் குறும்புச் சிரிப்போடு பார்த்தபடி குவளையை வாங்கிக் கொண்டான். போன வாரம் அவளை எச்சில் படுத்த வைத்து காப்பி குடிக்க அடம் பிடித்த ஞாபகம் வந்தது ரெண்டு பேருக்கும். ராத்திரி கடை திறக்க அச்சாரம் என்றான் அவன் அப்போது கற்பகத்திடம்.

ஆனாலும் இந்த ஞாயிற்றுக்கிழமை பொழுதும் ராத்திரியும் நீலகண்டனுக்கு வெகு சாதாரணமாகவே போக விதிக்கப்பட்டது.

காலையிலேயே வந்து விட்டான் அரசூர் சாமா. நாளைக்கு தாசீல்தார், டெபுடி தாசீல்தார் வகையறாக்களையும் சப் கலெக்டர்களையும் ஒரே இடத்தில் கூட்டி வைத்து கவ்னர் துரை ஏதோ பிரசங்கம் செய்யப் போகிறாராம். என்ன, எட்வர்ட் சக்கரவர்த்திக்கு விசுவாசமாக எல்லோரும் நடந்து ரூபா அணா பைசா சுத்தமாக வரி வசூல் பண்ணித் தரச் சொல்லி உத்தரவு போடுவாராக இருக்கும் என்றான் சாமா.

இந்தப் பசலிக்கு ஆகக் குறைச்சுத்தான் வரி வசூல் ஆகியிருக்கு. மாகாணம் முழுக்க அதே படிக்குத்தான். மலையாள பூமியிலே மழை பேஞ்சு அழிக்கறது. இங்கேயானா வரண்டு வதங்கி பஞ்சத்திலே பயிர் எல்லாம் கருகிண்டுருக்கு.

சாமா பசும்பாலை சுபாவமாக எச்சில் பண்ணி சாப்பிடுவதைப் பார்த்து தானும் அப்படியே செய்ய ஆரம்பித்தான் நீலகண்டன். இந்த அனாசாரத்துக்கு எல்லாம் கற்பகம் உண்டு இல்லை என்று ஆக்கி விடுவாள். சாமா புண்ணியத்தில் அதெல்லாம் ரெண்டு நாள் கண்டு கொள்ளப்படாமல் போய் ஏதாவது ராத்திரி நல்ல தூக்கத்தில் இருந்து அவளை உசுப்பும்போது பாஷாண்டி என்று கொஞ்சலான வசவில் நினைவு வைக்கப்படும்.

முடிச்சாச்சுன்னா குளிக்கப் போகலாம். அந்தக் காலி டபராவை சித்தெ தாங்கோ.

கற்பகம் திரும்ப உள்ளேயிருந்து வந்தாள்.

அக்காவையும் கூட்டிண்டு வந்தா என்ன குறைஞ்சா போயிடுவேள். நீங்க மட்டும் ராபணான்னு வந்து இறங்கிட்டேளே. அவ கோவிலைக் கண்டாளா குளத்தைக் கண்டாளா? அரசூருக்கு வெளியிலேயும் லோகம் இருக்குன்னு கூட்டிண்டு வந்துதான் காட்டுங்கோளேன் அத்திம்பேரே.

இன்னும் கொஞ்சம் காப்பி தரச் சொல்லிக் கேட்கலாமா என்று யோசித்தபடி நீலகண்டன் காலி லோட்டாவை நீட்டினான் கற்பகத்திடம்.

இன்னொரு டோஸ் காப்பியா? நிச்சயம் கிடையாது. போய்க் குளிக்கற வழியைப் பாருங்கோ. பாஷாண்டி மாதிரி இன்னும் எத்தனை நேரம் தான் ரெண்டு பேரும் வம்படிச்சுண்டு இருப்பேள்?

நீலகண்டன் இடுப்பில் துண்டை சுற்றிக் கொண்டு குளிக்கக் கிளம்பினான். அரசூர் சாமா இன்னும் பசும்பாலைக் குடித்து முடிக்காமல் நூதனமாக அச்சடித்து வந்த நியூஸ்பேப்பரை வரி விடாமல் படித்துக் கொண்டிருந்தான். காலையில் படியேறும்போதே அதோடு தான் உள்ளே நுழைந்தான் அவன்.

கற்பகம் அடுப்பில் எண்ணெயை ஏற்றி அப்பளம் பொறிக்க ஆரம்பித்தாள். வடை தட்டுகிற வாசனையும் நீலகண்டன் மூக்கை எட்டத் தவறவில்லை. வெங்காயம் எல்லாம் இல்லை. வெகு சாதாரண பருப்பு வடைதான் அது என்று தெரியும்.

குளிச்சுட்டு வந்து உங்க கங்கா ஜலத்தை பூஜை மாடத்துலே வச்சுடுங்கோ. மாடத்திலே விளக்கை எடுத்துட்டு இப்ப சிரத்தைக்கு அங்கே வச்சிருக்கேன்.

ரொம்ப நல்லது. அப்புறம் ஏதாவது ஆக்ஞை இருக்கா என் அழகு சுந்தரிக்குட்டி?

சமையல்கட்டுக்குள் எட்டிப் பார்த்துத் தணிந்த குரலில் சொன்னான் நீலகண்டன்.

ஐயோ, சகிக்கலை. வெளியிலோ போங்கோ. அத்திம்பேர் உட்கார்ந்திருக்கார். பட்டப் பகல்லே என்ன சரசம் வேண்டி இருக்கு.

கற்பகம் அவசரமாக கையை அசைத்து அவனை விரட்டினாள்.

நேத்து ராத்திரி எல்லாம் உள்ளே இருந்து ஏதோ சத்தம் வந்த மாதிரி இருந்தது. கங்காதேவியை செம்புலே அடச்சு கோர்ட்டு கச்சேரியிலே எதுக்கு வச்சாளாம்?

நீலகண்டனுக்கு அந்த ஸ்தாலி சொம்பு வீட்டில் இருப்பது அப்போதுதான் நினைவில் உறைத்தது.

நாயுடுவைப் பார்க்க வெள்ளிக்கிழமை மத்தியானத்துக்கு அப்புறம் ஹைகோர்ட்டுக்குப் போயிருந்தபோது கொடுத்தனுப்பினான் அவன். நீலகண்டன் புறப்பட்ட காரியத்துக்குச் சம்பந்தமே இல்லாமல் வெங்காய வடை, எலுமிச்சை ஷர்பத்து, காகிதக் கட்டு, ஸ்தாலிச் செம்பு என்று முடிந்த சந்திப்பு அது.

கோர்ட்டுக் கச்சேரியிலே எதுக்குடா இப்படி கங்கா ஜலத்தை எல்லாம் கைப்பத்தி வச்சிருக்கு?

நீலகண்டன் கேட்டபோது கள்ளியம்பெட்டியில் இருந்து தனியாக உதிர்ந்த ஒரு கடுதாசை எடுத்துப் படித்தான் நாயுடு.

திருக்கழுக்குன்றத்தில் சந்தேகத்து இடமான முறையில் இடுப்பில் வேஷ்டி கூட இல்லாமல் நக்னமாக நடமாடிய இளம் வயசு பிராமணரிடம் கைப்பற்றப் பட்டது அந்தச் செம்பு. இந்தக் குறிப்பு மட்டும் எழுதி சர்க்கார் சீல் வைத்த காகிதம்.

நீலகண்டன் செம்பை அசைத்துப் பார்த்தான். மேலே மூடி இறுக்கமாக ஒட்டி இருந்தது. கிட்டத்தட்ட ஈயத்தைக் காய்ச்சி அதை செம்போடு சேர்த்துப் பூசின மாதிரி இறுக்கம். இவ்வளவு பய பத்திரமாக கங்காஜலத்தை எடுத்துப் போய்க் கொண்டிருந்தது யார்? அவன் மேல் என்னத்துக்கு சர்க்காருக்கு சந்தேகம்?

தெரியலியே என்றான் நாயுடு கள்ளியம்பெட்டி மேல் ஏறி ஜன்னல் கதவைச் சார்த்திக் கொண்டு. ஐகோர்ட்டு கச்சேரியில் அவன் உத்தியோக ஸ்தலத்துக்கு வெளியே ஏதோ பொசுங்குகிற வாடை.

பழைய தஸ்தாவேஜ் எல்லாத்தையும் தகனம் பண்ணியாறது.

நாயுடு மூக்கை மேல் துண்டால் பொத்திக் கொண்டு சொன்னான்.

இந்த காயிதத்தையும் எரிச்சுடுவேளா?

கையில் வைத்திருந்த மலையாள டாக்குமெண்டை காட்டியபடி கேட்டான் நீலகண்டன்.

என்ன கசுமாலம் அய்யரே. வெளியே எரிச்சு பொண வாடை. உள்ளே கலத் தூசி மூக்குலே ஏறுது. கோர்ட்டு கச்சேரியிலே உத்தியோகம் பார்க்கறதுக்கு சதுர்க் கச்சேரி போற தாசிக்கு வெத்தலைப் பொட்டி தூக்கி மாமா வேலை பாக்கலாம்.

பெரிய பாப்பா சின்னப் பாப்பா நினைப்போ என்னமோ நாயுடு கண்ணை மூடி ஆகா என்றான். எதுக்கு பாராட்டு என்று நீலகண்டனுக்குப் புரியவில்லை அப்போது.

இந்த மலையாள கடுதாசியையும் எரிச்சுடுவேளான்னு கேட்டேன்.

நீலகண்டன் கையில் பிடித்திருந்த கசங்கிய காகிதத்தை முன்னும் பின்னும் திரும்பிப் பார்த்தான். அங்கங்கே எண்ணெய் மினுக்கிக் கொண்டு ஒரு அட்சரமும் அழியாமல் இருந்தது அது.

அந்தக் கடுதாசு இருந்த காகிதக் கட்டை எடுத்து அப்படியே நீலகண்டனிடம் கொடுத்தான் நாயுடு.

பாரு அய்யரே, ஆலப்புழையிலே இருந்து கேசு விஷயமா வேறே ஏதோ தஸ்தாவேஜு கேட்டா இதை கைமறதியா முன்குடுமிக்காரன் எவனோ அனுப்பி வச்சிருக்கான். துரை நோட் போட்டு திருப்பி அனுப்பச் சொல்ற கடுதாசு மேலேயே இருக்கு கண்டுக்கிட்டியா?

அனுப்பிட வேண்டியதுதானே?

என்னத்தை அனுப்பி தாலியை அறுக்க? பத்து வருஷம் முந்தின சமாச்சாரம். நோட்டு போட்ட துரை கூட ரிடையர் ஆகி குழிக்குள்ளே போய்ப் படுத்தாச்சு. இனிமே இதுக்கும் தகனம் தான்.

நாயுடு ஜன்னல் பக்கம் பார்த்தான்.

ஏதாவது முக்கியமான டாக்குமெண்டா இருக்கப் போறது.

நீலகண்டன் காகிதக் கட்டைப் பிரித்துப் பார்த்தான். இன்னும் கொஞ்சம் சிரத்தையாக மலையாளம் படித்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதெல்லாம் என்ன என்று நொடியில் விளங்கி இருக்குமே.

என்ன முக்கியம் போ. எர்ணாகுளத்திலேயோ ஆலப்புழையிலேயோ எவனோ நாயரும் நம்பூத்திரியும் தென்னந்தோப்பு குத்தகைக்கு சண்டை போட்டு குடுமியைப் பிடிச்சு அடிச்சுக்கிட்ட வம்பு வழக்கா இருக்கும். என்ன சொல்லு, மலையாளத் தேங்காய்க்கு அடிபிடி தகும்தான். எம்மாம் பெரிசு ஒவ்வொண்ணும்.

போறும்டா ஸ்பஷ்டமா விளங்கறது எல்லாம். நீ இன்னிக்கு குஷாலா சின்னப் பாப்பா, பெரிய பாப்பா, மலையாளத்துத் தேங்காய்னு வம்படிச்சுண்டு இருக்கே. நான் போய்ட்டு இன்னொரு நாளைக்கு வரேன்.

நீலகண்டன் கிளம்பினபோது மகாலிங்க அண்ணா பற்றித் தகவல் போலீஸ் கச்சேரியில் விசாரித்துச் சொல்வதாக வாக்குக் கொடுத்திருந்தான் நாயுடு. அதொண்ணும் நடக்கிற காரியமில்லை என்று ரெண்டு பேருக்குமே தெரியும். ஆனாலும் எங்கேயாவது ஏதாவது துப்பு கிடைத்தால் கூட தேடிப் போய் அதன் அந்தத்தை அறிய நீலகண்டன் தயார்தான்.

சும்மா குப்பையிலே கங்கா ஜலத்தை எறிய வேண்டாம். நான் அடுத்த வருஷம் வாரணாசியிலே எங்க தோப்பனாருக்கு திவசம் கொடுக்க ஏற்பாடு பண்ணிண்டு இருக்கேன். அப்போ இதையும் அங்கே சேர்த்துடறேன். எந்த ஆத்மாவோ புண்ணியமான இடத்துக்குப் போய்ச் சேரட்டும்.

நீலகண்டன் நாயுடுவின் மேஜையில் இருந்து ஸ்தாலிச் செம்பைக் கையில் எடுத்துக் கொண்டான்.

அப்படியே இதையும் கங்கையிலே விட்டுட்டு வா புண்ணியமாப் போகும்.

காகிதக் கட்டையும் சேர்த்து நீட்டினான் நாயுடு.

வாங்கிக்கோடா குழந்தை.

நீலகண்டனிடம் யாரோ அப்போது சொன்ன மாதிரி இருந்தது. பெண் குரல். அம்மா கோமதி குரலா இது? இல்லை, வேறே யாரோ.

நாயுடுவோடு நடத்தின வர்த்தமானங்களை கிரமம் இல்லாமல் மனசில் மறுபடி ஓட்டிக் கொண்டு மாடப்புறையைப் பார்த்தபடி நின்றான் நீலகண்டன்.

இன்னமா குளிக்கலே?

கற்பகம் குரல் நீலகண்டனை கிணற்றடிக்கு விரட்டியது.

என்னை சாமா கிட்டே சேத்துடேன். புண்ணியமாப் போகும்டா குழந்தே. உனக்கு ஒரு குறைச்சலும் வராது.

மாடப்புரையில் இருந்து தான் அந்த சத்தம் கேட்டது. நீலகண்டனுக்கு நிச்சயமாகத் தெரியும். கோர்ட்டு கச்சேரியில் கேட்ட அதே பெண்குரல் தான்.

(தொடரும்)

Series Navigation