தட்டையாகும் வளையங்கள்

This entry is part [part not set] of 44 in the series 20090813_Issue

திலகபாமா


உரையாடல்கள் நேருக்கு நேர் இருக்கும் நபர்களோடு மட்டும் தானா நிகழ்த்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன. இல்லவே இல்லை. சில நேரம் நேருக்கு நேர் இருக்கின்ற நபர் பேசிக் கொண்டிருக்க , கேட்பவரின் பதிலோ வேறு ஒரு நினைவில் நின்ற நபருக்கு சொல்ல நினைத்த பதிலைச் சொல்லிக் கொண்டே இருக்கும் மனம். அல்லது பதிலை எதிராளிக்கென்று இல்லாது தனக்கே சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கும்

இதோ இப்படித்தான் இன்றைய தீபாவின் உரையாடலும் நிகழ்ந்தது. தனது அலுவலகத்தின் அடுத்த இருக்கை முத்து பேசத் தொடங்கினார்.

சமீப காலமாக தனது செல்லிடப் பேசியை அடிக்கடி எடுப்பதும் அதை உற்றுப் பார்த்து விட்டு சிரித்துக் கொள்வதுமாக இருந்த அவர் இந்த இரண்டு மூன்று நாட்களாக அடிக்கின்ற குறுந்தகவலுக்கான மணியோசையை அலட்சியப் படுத்திக் கொண்டிருந்தார். வழக்கத்தை விட மாறுதலாக நிகழ்வது அவள் கண்ணில் எப்படியும் பட்டு விடுகின்றது சிலநேரம் நல்லதாகவும், சிலநேரம் வேண்டாததாகவும் என்ன செய்ய?

ஆறு மாதம் முன்புதான் பேசியை புதிதாக வாங்கி இருந்தார். அதை உபயோகிப்பது எப்படி என்று கடையில் சொல்லித் தந்தது நினைவில் நிற்கவில்லை என்று புலம்பிய படியே அவர் சிரிக்க நான் அப்போது சொன்னேன் பேசுவதற்கு மட்டும் தானே முத்து சார் செல்லிடைப் பேசி. போடுவது , நிறுத்துவது இவை இரண்டை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் போதும் என்று. வயது தொழில் நுட்பத்தோடு இணைந்து ஓடுவதில்லை என்று சலித்துக் கொண்டார் .

” இப்ப என்ன வயசாயிட்டது. அம்பதை நெருங்குவதெல்லாம் ஒரு வயசே இல்லை சார் இன்னும் எவ்வளவு காலம் கிடக்கு

சொல்லி விட்டு அத்தொலைபேசியின் ஏனைய நுணுக்கங்களையெல்லாம் விட்டு விட்டு பேசுவதற்கானதை மட்டுமே சொல்லிக் கொடுத்தேன் செய்முறை விளக்கங்களோடு. முதன் முதலாக ஒரு முறைக்கு பலமுறை தவறுதலாகவே அழுத்தி வருகின்ற அழைப்புகளைத் தொலைத்த பின்னும் ஒரு மாதிரியாக அத்தொலைபேசியோடு இணக்கமானார்

இந்த ஆறுமாதத்திற்கு முந்தைய கதையெல்லாம் இரண்டு மாதம் போன பின்பு தலைகீழாகிப் போயிருந்தது. என்னேரமும் கட்டைவிரலில் வேகமாகத் தட்டிக் கொண்டேயிருந்தார். தொலைபேசி குறுந்தகவலுக்கான சப்தம் கொடுக்கவும் , வேகமாக எடுத்து பார்ப்பதுவும், முடிக்கையில் நிமிர்ந்து எதிர் அறையில் இருக்கின்ற சுபாவை பார்த்து சிரித்துக் கொள்வதும், மீண்டும் பேசிக்குள் மூழ்கிக் கட்டைவிரல்களால் யோசனையோடு தடவுவதும், முடிக்கையில் அர்த்தங்களோடு மீண்டும் கண்ணாடி அறைக்குள் இருந்தவளை மீண்டும் பார்த்து புன்னகையை உதிரவிட்டு கீழே வைப்பதுவுமாய் இருந்தது ஆயிரம் வேலைகளுக்கிடையேயும் என் கவனத்தில் நின்று கொண்டே இருந்தது. கண்ணாடி அறைக்குள் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த சுபா சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள். புது இரத்தம் , வேலையின் ஈர்ப்பு எல்லாமே அவளிடம் இருந்தது. ஓயாத உழைப்பின் உண்மை அவளை வெள்ளந்தியாக பேசவும், பழகவும் வைத்திருந்தது. அதில் கொஞ்சம் முதிர்ச்சியின்மையின் சாயலும் கூட. காலம் உருள, உருள அனுபவங்களின் அடர்த்தி கூடும் போது அழுத்தமான நடையாக பின்னாளில் மாறிப் போகும் ஆனால் இன்றைய அவளின் விறு விறுப்பு அலுவலக ஆண்களிடம் என் காலத்தைய நெருடல் இல்லாது நெருங்கிய விதம் ஒரு ஆர்வக் கோளாறை விதைத்திருந்ததைதான் இந்த முந்தைய காட்சிகள் எனக்கும், நமக்கும் சொல்லிப் போயின. புதிதாய் கல்லூரிப் படிப்பை முடித்திருந்த அவளுக்கு நிறைய நண்பர்கள். ஏற்கனவே நண்பர்களைப் பிரிந்த இழப்பு இன்று தொலைபேசியிலும் குறுந்தகவலிலும் நிரப்பப் படுவது எவ்வளவு உண்மையோ அவ்வளவு நிஜம் உள்ளார்ந்த உணர்வுகள் இயந்திரமயமாய் அடிக்கப் பட்ட வார்த்தைகளுக்குள் உறைந்து கல்லாய் மாறிப் போயிருக்கின்ற உணர முடியா கல்லிமையும் நிஜம்

அவளின் குறையா உற்சாகத்துடன் நண்பர்கள் அனுப்பி வைக்கின்ற வாசகங்களை எத்தனை பேரின் வாசிப்பு கடந்து தேய்ந்து வர்ணமிழந்து வந்தது என்ற நினைப்பும் இன்றி வார்த்தை ஜாலத்தில் மயங்கி இப்பொழுது அவளது புது அலுவலர்களுக்கெல்லாம் அனுப்பிக் கொண்டிருந்தாள். எனக்கும் அவை வந்த வண்ணமே இருக்க எனக்கோ இயந்திர மயமாகிப் போன இந்த வாசகங்களுக்கிடையே நகைச்சுவை அன்பு, காதல் ஆச்சரியம் எதுவுமே இல்லாது வெற்று கருப்பு வெள்ளை வரிக் கோடுகளாய் தெரிந்து தொலைக்க அழித்து விட்டு அடுத்த வேலைக்குப் போயிருந்தேன். ஆனால் முத்துவுக்கோ வாசகங்களில் கொட்டுகின்ற நட்பாயும் இல்லாத காதலாயும் இல்லாத வாசகத்தின் சுவாரசியங்கள் அதுவும் அது அனுப்புகின்ற நபர் நமக்காக பிரயத்தனமெடுத்து எழுதப் பட்ட வார்த்தைகள் அல்ல எனும் போதும் , அதை அனுப்புவது சுபா எனும் நினைப்பு தந்த சுகத்தில் அதை வாசித்து மிதந்து கொண்டிருந்தார். அதற்கு ஏதாவதொரு அபத்தப் பதிலையும் திருப்பி அனுப்பி வைக்க சுபாவோ அதன் பதில்களில் சுவாரசியமாகி எல்லாரையும் மகிழ்விப்பதாய் நம்பி மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டிருக்க , பார்வேர்ட் செய்யப் பட்ட வாக்கியங்களில் எப்படித்தான் கற்பனை சுவாரசியங்களை ஏற்றிக் கொள்கிறார்களோ தெரியவில்லை.

சரி…. முத்து என்னோடு இன்று துவங்கியிருந்த உரையாடலை சொல்லத் துவங்கிய நான் உங்களை அதன் முன்னோட்டங்களிலேயே மூழ்கடித்து விட்டேனோ

இன்று அலுவலகத்திற்கு முத்து வந்ததிலிருந்து முகம் வாடிப் போய் கிடந்தது .எப்பவும் போல் இல்லை. வழக்கமான தொலைபேசி கையிலெடுப்புகள் இல்லை ஏன் எப்பொழுது பார்த்தாலும் அடிக்கும் குறுந்தகவல் வந்து சேர்ந்த ஓசை மௌனமாகியிருந்தது.

மதிய உணவு இடைவெளியில், சாப்பாடு முடிந்த பின் நான் தனியாக இருக்கின்ற நேரத்தில் அருகில் வந்தார். பேசுவதா வேண்டாமா என அவருள் விழுந்த தயக்கம் எனக்கு நன்றாக வாசிக்கக் கிடைத்தது.

பிரச்சனை இதுதானென்ற அனுமானம் ஓரளவு எனக்குள் இருந்தது.. எதிரிலிருக்கும் நபர் மட்டுமன்றி எதிரிலில்லாத என் கணவரும் என் நினைவின் வழியாக என்னோடவே இருந்தார். அல்லது இந்த பிரச்சனையின் மூலம், எனது இன்னொரு பிரச்சனையின் மூலமாகவும் இருக்க, ஒப்பீடு தவிர்க்க முடியாததாயிருந்தது.

என் முன்னால் வந்து நின்று முத்துவின் குறுந்தகவல் பற்றிய பிரச்சனை என்ற நினைப்பே மறைமுகமாக என் கணவரையும் என் முன்னால் நிறுத்தியிருந்தது. முத்து பேச நினைக்கின்ற , பேசப் போகின்ற விசயங்களுக்கு என் கணவருக்கு சொன்ன, அல்லது சொல்ல நினைக்கின்ற பதில்களாகவே என் வார்த்தைகள் இருந்திருந்தன.

புரியவில்லையா உங்களுக்கும், ஆம் புரிய வேண்டுமென்றால் இரண்டு மாதம் முந்தைய என் வாழ்வுக்குள்ளும் நீங்கள் தலை நுழைக்க வேண்டும். இதோ முத்தை விட 4 அல்லது 5 வயது குறைவானவர் என் கணவர் அது தவிர வேறு பெரும் வித்தியாசமில்லாத அதே ஆண் இனம். ஒரு நாள் இருவரும் சேர்ந்து காரில் பயணமானோம். பிள்ளையார் பட்டி போய் வந்து விடுவது என்று கிளம்பிய பயணத்தின் வழியில் குலைந்து தான் போனேன்.

**

முன்னாலிருந்த முத்து , இன்னைக்கு என் செல்போனை என் மனைவி எடுத்து பார்த்திட்டா அதுல இருந்த குறுந்தகவல் பார்த்ததும் சண்டைக்கு வந்திட்டா

அப்படியா அப்படி என்ன மெசேஸ் இருந்தது

**

காரின் பயணத்தில் அவரது செல் என் கையிலிருக்க அவர் கொஞ்சம் அசந்திருந்த நேரம் மெசேஸ் வந்து சேர்ந்த அதிர்வு கைகளில் தெரிய , அதை திறந்தேன். பாடலை அழைப்பு மணியோசையாக வைக்கச் சொல்லும் விளம்பர குறுந்தகவல் அதை அழித்து விட்டு தேவையில்லாததை அழித்து விட அழுத்தினேன். ஏதேதோ அழுத்தலில் அனுப்பிய விசயங்கள் இருக்கும் இடத்திற்கு போய் என் விரல் நின்று விட அது திறந்து கொண்டது.

I love you so much dearest வாசகம் அனுப்பப் பட்டிருந்தது

**

முத்து குறுந்தகவலை திறந்து காட்டினார். இது ஒன்றும் பிரத்தேயக குறுந்தகவல் இல்லை பலரும் தொடர் சங்கிலியாய் அனுப்பப் பட்டது. இயந்திரத் தனமாய் பரிமாறிக் கொள்வது என்று புரிந்தாலும் அந்த வார்த்தைகளில் இருந்த “ உன்னைத் தேடுகின்றேன் எனச் சொல்லும் விழைவு. சட்டென்று கார் பயணத்தில் எனக்குள் நிகழ்ந்த அடி வயிற்றுப் பிரட்டலை முத்துவின் மனைவிக்கும் தந்திருக்கும் என்று புரிந்து கொள்ள முடிந்தது. அது மட்டுமல்ல இன்றைய இயந்திரத் தகவல்கள் நாளை எப்படி ஆழமாய் வேரூன்றும் என்று எனது கணவனது அனுபவத்தில் இருந்து அறிந்தவள் தான்.

முத்துவுக்கு வக்காலத்து வாங்கக் கூடிய மனோநிலை என்னிலிருந்து விலகி என் கணவரைச் சாடும் மணோநிலைக்கு வந்திருந்தேன். அந்தச் சாடல் முத்து மீது வீழ்ந்து கொண்டிருந்தது.

“சரிதானே சார் அவங்க கோபிக்கிறது. இப்படி ஒரு அழுத்த அர்த்ததோட இருந்தால் மனைவி யோசிக்க மாட்டாங்களா

**

ஆங்கிலத்தில் காதலை உதிர்த்திருந்த வசனம் வெறும் பத்து எண்களை , ஒரு எண்ணாக நாம் சிந்திக்கும் இடத்திற்கு அனுப்பப் பட்டிருந்தது. அடிவயிற்றிலிருந்து குபுக்கென இரத்தம் உச்சந்தலைக்கு ஏறியதா அல்லது உச்சந்தலையிலிருந்து வழிந்து தரையோடு வழிந்து போயிற்றா? பயணத்தில் போகின்ற வேகத்தில் பேச முடியாது, உள்ளிருந்த அழுத்தத்தை கொட்ட முடியாது சாய்ந்து கொண்டேன்.

அப்படியே எழும்பி அந்த குறுஞ்செய்தியை அவனிடம் நீட்டி விட்டு அமைதியாக பார்த்தேன் அவன் முகத்தை. அதுவரை எதிரே பார்வையை

உயர்த்தியிருந்தவன் வேக வேகமாக எனைப் பார்த்து விட்டு பார்வையை கீழிறங்க விட்டான். விழிகள் நிறமற்று இமைதான் எனக்குத் தெரிந்தது.

விரல்கள் வேகமாக அந்த குறுஞ்செய்தியை நீக்கிவிட்டன அதன் பக்கத்திலிருந்து. எனது உள்ளங்கையும் பாதமும் கோபத்தில் சில்லிட்டுப் போயிருந்தன. உடலெங்கும் குது குதுவென ஒரு வெப்பம் எரித்துக் கொண்டேயிருந்தது, எல்லாம் கை நழுவிப் போக பிடிமானம் அற்று உடல் தவிப்பதாய் இருந்தது. வலியில் மயக்கமா? போதையா தெரியாமல் நானோ கிறங்கிச் சாய அவனோ மௌனமாக தொலைத்திருந்தான் தொடர்பு எண்களை

வழியில் போனதும் வந்ததும் விழித்திருந்த பார்வையில் தெரியாமலேயே மறைய வீடு வந்திருந்தது

இதுவரை அமைதிக்குள் இருந்திருந்த கொதிப்பு வாசலில் விட்ட செருப்பில் போய் அறையில் படுக்கையில் விழுந்த அதிர்வில் தெரிந்தது. எழுந்து தண்ணீர் எடுத்து குடித்து விட்டு சோபாவில் அமர்ந்தேன்

**

எதிரில் அவன். நிமிர்ந்து அவனைப் பார்த்தேன். என் முன்னால் இன்று முத்து

அதே அன்று என் கணவரை ஊருருவிப் பார்த்த பார்வையில் முத்துவையும் ஊடுருவினேன். கள்ளத் தனம் தெரிந்தது.

“இப்ப என்ன செய்யனும்?

என் மனைவி வையுறா? இனி குறுந்தகவலோ ,தொலைபேசியோ அவகிட்ட இருந்து வந்தா பத்ரகாளியா ஆயிடுவேன்னு

மெதுவா நீங்க சொல்லுங்க சிஸ்டர் சுபாவிடம் என் மனைவிக்கு பிடிக்கலை அதுனால இனி குறுஞ்செய்திகள் எதுவும் அனுப்ப வேண்டாமுன்னு”

“அப்ப உங்களுக்கு அவ அனுப்புறது பிடிச்சுத்தான் இருக்குதா?”

சட்டென நிமிர்ந்தார் முத்து வார்த்தைகளை தொலைத்து விட்டவராய் தேடினார்.

“இல்லை கேட்குறேன் அப்ப அவளோட பேசுறது , குறுஞ்செய்திகள் உங்களுக்கு பிடிக்குது. இல்லையா..!?”

கேள்வியில் அவள் முகத்தில் எள்ளல் துள்ளியது. உதட்டைப் பிதுக்கியபடி தலையாட்டிக் கொண்டே மேலும் கீழும் பார்த்தபடி இருந்தாள்.

“நிம்மதியும் வேணும் அதுக்கு குறுஞ்செய்திகள் வரக்கூடாது. ஆனா அவ கிட்ட நீங்க நல்லவாரா தொடர உங்க பொண்டாட்டி கெட்டவளா படம் காண்பிச்சரகனும் இல்லையா?”

“எனக்கு பிடிச்சிருக்குது தானே”

“உங்களுக்கு ஏன் பிடிக்காது உங்களுக்கு பிடிச்சிருக்கிறதை அடுத்தவர்கள் உங்களுக்கு தரணும்கிறதுல கவனமா இருக்கின்ற நீங்க என்னைக்காவது இதே காதல் வசனங்களை மனைவிக்கு அனுப்பிச்சி சந்தோசப் படுத்தியிருக்கீங்களா? அல்லது உங்களுக்கு அனுப்புற பொண்ணு அவளுக்காவது அனுப்பி சந்தோசப் படுத்தியிருகீங்களா?”

“அந்தப் பொண்ணுக்கு நான் அனுப்பினா தப்பா ஆயிடாதா?”

“அந்தப் பொண்ணு அனுப்பி நீங்க வாசிச்சி சந்தோசப் பட்டா மட்டும் சரிஎன்று ஆகிடுமா?

என்ன சார் லாஜிக் இது

பழியை பெண்டாட்டி பேர்ல போட்டு அந்தப் பொண்ணை குறுஞ்செய்திகளை நிறுத்தச் சொல்லனுமாக்கும். அதுல அனுதாப அலையில நீங்க துடுப்பு போடுவீங்களாக்கும்

“என்ன தாம்பா செய்யச் சொல்ற . தொலைக் காட்சியில எல்லாம் எத்தனை விதமா குறுஞ்செய்திகள் அனுப்புறாங்க அதுல பாரு எத்தனை விதமான காதல் வசனங்கள்ன்னு அதுவெல்லாம் இயந்திரதனமானதுதானே”

**

ஆனா so much dearest ங்கிறது இயந்திரதனமானதில்லையே

“யாரு அவ?”

“மரியாதையா கேளுப்பா. கூட வேலை பார்க்கிற பொண்ணு குழந்தையெல்லாம் இருக்கு”

“குழந்தையெல்லாம் இருக்குங்கிறது தப்பு செய்யலாங்கிறதுக்கு தகுதியா? இல்லை. தப்பே செய்யமாட்டாங்கங்கிறதுக்கு அடையாளமா?

அவங்க வீட்டுக் காரரு ஒன்னும் சொல்ல மாட்டாரா?”

கனத்த மௌனம் எதிர்பக்கம் உலவியது.பேச்சை மாற்ற என்ன செய்யலாம் யோசனை தெரிந்தது. அவசரமாய் எழுந்து கழிவறைக்குள் போனான். தண்ணீர் சப்தங்களின் பேச்சுக் கிடை வெளியே வந்தான்

விடாது கேட்டாள்

“அவங்க வீட்டுக் காரரு ஒன்னும் சொல்ல மாட்டாரா?”

“அவரு துபாயில் இருக்காரு”

கேட்கவோ பேசவோ ஒன்றுமில்லாது போயிற்று.. எல்லாம் புரியத் துவங்கியது எழுந்தாள் அவன் விரல்கள் நீக்குமுன்பே மனதுக்குள் பத்திரப் படுத்தியிருந்தாள் அந்த செய்தி போய்ச் சேர்ந்திருந்த எண்களை . மறக்கக் கூடிய விசயமா அது. அந்த எண்களை தன் பேசியில் அழுத்தினாள் அடுத்த பக்கம் மணியோசை கேட்டது

பதறினான். தடுமாறியது நாக்கு குழன்றது.

“வேணாம்பா கூப்பிட்டு கேட்காத நிறுத்திடு . இந்த குறுஞ்செய்திகள் எல்லாம் ஒன்றுமே இல்லை கெஞ்சினான் அது சாதாரண குறுஞ்செய்திதான்பா அவ்வளவுதான்”

எதுவும் என்காதில் விழவே இல்லை

தொலைபேசியின் மணியோசை மட்டுமே எங்கெங்கும் நிறைந்திருந்தது

**

“இயந்திரத் தனமானதுங்கிறதை தாண்டி நீங்க ருசிக்கத் தொடங்கிட்டீங்கன்னு தெரியலையா முத்து சார்.உங்க மனைவி குத்தம் சொல்றது அதைத்தான் ஆனா நீங்களோ அந்த பொண்ணுகிட்ட பொண்டாட்டி புரிஞ்சுக்கிறவே இல்லைன்னு பழி போட்டு தப்பிக்க பார்க்குறீங்க

நீ புரிஞ்சுக்கிறவளா இருக்கிறேன்னு சொல்லி சுபா கிட்ட உங்களை அறியாம நெருக்கமா ஆக்கிக் கிட அனுதாப அலை உருவாக்கிகிறீங்க யோசிங்க

நீங்க உள்ளூர அந்த பொண்ணுகிட்ட அனுபவிக்கிறதை உங்க மனைவியிடமும் இதே போல் இன்னொருத்தன் நெருங்கியிருந்தா உங்க பொதுப்புத்தி தாங்காம தவிச்சிருக்கும்

அப்போ இயந்திரத் தனமான dialogன்னு சொல்ல மாட்டீங்க”

**

அடுத்த முனையில் தொலைபேசி தொடர்பில் வந்தாள்

நான் இன்னாரோட மனைவின்னு சொன்னதும் அழுத்தமா ஒரு மௌனமும், பிறகு பதட்டமாய் சொல்லுங்கன்னு ஒரு பெண் குரல்

என்ன என் வீட்டுக் காரருக்கு எதுக்கு குறுஞ்செய்திகள் அனுப்புறே”

“சும்மா நல்ல நண்பராத்தான்”

“I love you so much dearest ங்கிறது friend shipபா”

“தப்பாஎல்லாம் யோசிக்காதீங்க எனக்கு 3 குழந்தைங்க இருக்கு”

ஆனா வீட்டுக் காரருதான் பக்கத்தில் இல்லைன்னு போனில் பேசுறியாக்கும் குழந்தைங்க இருக்குன்னு சொல்லி எதை வேணும்னாலும் நியாயப் படுத்திக்கலாமா?

என் குரலில் முரட்டுத் தனம் கூடியிருந்தது. மூச்சு பெருமூச்சாக மாறி என்னையும் வீழ்த்தும் அளவுக்கு வீசிக் கொண்டிருந்தது. பற்கள் கடிபட்டுக் கொண்டிருந்தது.

“இப்படி நீங்க கடுமையா பேசுறதுனாலதான் என்கிட்ட பேசுறாரு…வேற தப்பா எதுவும் நடக்கலை”

“பேசியே தீர்த்துகிறீங்களாக்கும்”

“அப்படியெல்லாம் பேசாதீங்க எங்க மாமியார் எல்லாருக்கும் தெரிஞ்சா கஷ்டமாயிடும்”

“உன் வீடு எங்க இருக்குன்னு சொல்லு நான் வர்றேன். அவ்ளோ பயம் இருக்கிறவ முதலிலேயே ஒழுங்கா இருக்கனும்”

தொடர்பு துண்டித்துக் கொண்டது

கணவனோ தலையில் கை வைத்தபடி இருந்தான்

“விட்டிருப்பா இதோட ஒன்றுமே நடக்கலை . வெறும் பேச்சுதான்

இனி அதுவும் வேண்டாம் விட்டிடரேன்”.

“ஏன் எதுவும் நடக்கிறதுக்கு சந்தர்ப்பம் கிடைக்கலையா ஐயோ பாவம். கூட்டி வந்து படுக்கை அலங்கரிச்சு தரவா, சாந்தி முகூர்த்தம் நடத்த முகரையைப் பாரு

கோபத்தின் உச்சியில் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தேன்

**

“முத்து சார் உங்கள்ல யாருக்கும் காதல் நட்பு எதையும் சரியா நடத்தத் தெரியறதே இல்லை சார் நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணா எப்பவும் உங்களைச் சுற்றி இருக்க வேண்டும்தானே நினைக்கிறீங்க எப்பவாவது எதிரில் இருக்கின்ற பெண் விரும்புகின்ற ஆணாய் மாறுவது பற்றி யோசித்திருக்கீங்களா?”

கணவரிடம் வெடித்துச் சிதறிப் பேசிய தருணங்களுக்குப் பின் நிதானத்திலிருந்த கேள்விகளை முத்து வின் முன் வீசிக் கொண்டிருந்தாள்.

“சுபாகிட்ட குறுஞ்செய்தி அனுப்புறதை நிறுத்தச் சொல்லச் சொல்றேன் அதை நீங்க சொல்றதா சொல்லிடவா?”

என் கேள்வியில் கேலியும் இருந்தது.

“அப்படி வேணாம்”

“பிறகெப்படி உங்க பெண்டாட்டி வையுறதாத்தான் சொல்லனுமாக்கும். எதுவும் உங்க பேர்ல தப்பில்லைன்னு கரையேறிடனுமாக்கும்”

“அதுதானுங்க உண்மை . உண்மையை சொல்லக் கூடாதா?”

“தெரியுற உண்மை அது தெரியாத உணர்ந்த உண்மைகளை சொன்னா பேசினா உங்க கதி…”

தலையை குறுக்கும் நெடுக்குமாக ஆட்டி விட்டு நகன்றார் முத்து.

**

“உனக்கு வர்ரதில்லையா இது மாதிரி குறுஞ்செய்திகள். சும்மா என்னை மட்டும் கோபிக்காதே”

“அதுவரை முகரையைப் பாரு என்ற என் கோபத்துக்கு பணியப் பார்த்த என் கணவர் உரத்து கையை ஆட்டி சீறினார்.”

“என்ன செய்ஞ்சு தொலைய நானும் பல பேரோட பழகுற வேலை . உன்னை மாதிரி ஆம்பிளைகள் அங்கேயும் இருக்கிறானே.

ஆனா ஒன்னு நிச்சயம் நான் யாருக்கும் I love you so much dearest ன்னு பதில் குறுஞ்செய்திகள் அனுப்பலை . மறைமுகமா எதையும் ஊக்குவிக்கலை . அதுக்காக முறிச்சுக் கிட்டேன்னு சொல்ல முடியாது ஆன உறவுகளை அவர்கள் வேறொரு உச்சத்துக்கு கொண்டு போகும் போது அதை தட்டையாக்குறது எப்படின்னு எனக்குத் தெரியும். . எப்படி இருந்தா வெளிச்சத்தில தயக்கமில்லாம நடமாட முடியுமோ அப்படி நான் உறவுகளை நிறுத்திக்கிறேன்”.

“இனி போன் வராது அவ செத்து போயிட்டா போதுமா?”

“ஏன் செத்து போகனும் நான் யாரோடையும் பழகுறதை நிறுத்திகலியே என் இருப்பு என்னன்னு புரிய வைக்கிறேன் எதிரில் இருக்கும் நட்புகளுக்கு உறவுகளுக்கு. கிடைச்சது சந்தர்ப்பம்னு சுகம் காணத் தொடங்கிடலை அதுல . புரிஞ்சுக்கோ”

கதை முடிவு என்னன்னு கேட்கிறீங்களா?

வாழ்க்கை இன்னும் முடியலையே தொடருதே

சுபா வேறு வேலையில் சேர்ந்து விட்டாள். முத்து இப்பவும் தொலைபேசியில் கட்டை விரலில் எழுதிக் கொண்டிருக்கின்றார். சுவாரசியமான பதில்களுக்காக.

என் கணவரோ குறுஞ்செய்திகளை தடயமின்றி அழிக்கப் பழகியிருக்கின்றார். அல்லது இல்லாமலும் போயிருக்கலாம் . ஆனால் குறுஞ்செய்திகளில் கிடைத்த அனுசரனை என்னிடமும் இன்னமும் அவருக்கு கிடைக்கவில்லை போலும்.

என் வாழ்க்கை தந்த வாதங்களை எல்லா இடங்களிலும் விதைத்த படி நானும் “ஹாய் டியர்” என வரும் வாசகங்களை தட்டையாக்கியபடியே நகலுகின்றேன்.

கல்லூரி ஆசிரியையின் வசனம் அடிக்கடி என் பற்களைக்கிடையில் கல்லாக உறுத்துவதை தவிர்க்க முடியவில்லை.

“ நீ யாருன்னு சோல்லிவிடாதே எதிராளிக்கு , உன்னை சாப்பிடுவதற்கு தயாராக்கிடுவான்”

சரியாக அதை நிகழ்த்தி விட்டேன் போலும் நட்புகளாக நெருங்கி வந்தவர்கள் புரியவில்லையே உங்களை. உங்களை சுற்றி ஒரு வளையம் இருக்கின்றதே என்று சிரிப்போடு மிரளுகின்றன.

உன்னைப் புரிஞ்சிக்க எவனும் வரமாட்டான் சாபமிடும் கணவர்.

ஆசிரியையின் வசனம் கூடிப் போய் விட்டதோ சிரிப்போடு சிந்தித்தபடி கைப்பைக்குள் என் தொலைபேசியைப் போட்டு மூடிக் கிளம்புகின்றேன்


mathibama@yahoo.com

Series Navigation

திலகபாமா

திலகபாமா