அச்சம் தவிர்

This entry is part [part not set] of 44 in the series 20090813_Issue

அதிரை தங்க செல்வராஜன்


முற்றத்தின் பாதியில் தொடங்கி தாழ்வாரத்தில், அவித்து காய்ச்சலில் கிடந்த நெல்லின்
மேல் ஊர்ந்து கொண்டிருந்தது நிலா. அழுக்கு மஞ்சளாய் மூலையில் எரியும் நாப்பது
வாட்ஸ் பல்பின் மேல் தொங்கும் ஒட்டடை, காற்றின் அசைவில் பல புரியாத
பிம்பங்களை உருவாக்கி, அழித்து கொண்டிருந்தது. பென்டுல கடிகாரத்தின் ஒலி பத்தோ,
பதினோரு முறையோ அடித்து ஓய்ந்தது. மோட்டுவளையில் கீரிப்பிள்ளை
ஒன்றையொன்று துரத்திக்கொண்டு ஓடியது. ஊஞ்சல் சங்கிலி உராயும் சப்தம்
விகாரமாய் க்ருக் க்ரீக் என அமைதியை கெடுத்தது.

அம்மாவின் ரெண்டு பக்கத்திலும் தம்பியும் தங்கையும் தூக்கத்தில், கசங்கிய துணி போல்.
அப்பாவின் அறையில் ரேடியோவின் மெல்லிய கொர்ர்ர் சத்தம், ஆ·ப் செய்யாமல்
தூங்கியிருக்க வேண்டும். நாளை மறுநாள், மீண்டும் கல்லூரிக்குச் செல்லும்
நினைப்பே என் தூக்கத்தை துரத்திவிட்டது. ஒரு நிமிட ஊஞ்சல் சத்தமும், மறு
நிமிட பேரமைதியும் வயிற்றை என்னமோ செய்தது. எழுந்து ஊஞ்சலை நிறுத்திய
போது, ஏம்பா தூக்கம் வல்லையா என்றது அம்மாவின் குரல்.

ஊஞ்சலிலிருந்து இறங்கி அம்மாவின் காலில் தலை வைத்து படுத்துக் கொண்டேன்.
ஹாஸ்டலுக்கு போகலைம்மா, எல்லாரையும் விட்டுட்டு போறது கஷ்டமாயிருக்கு.
அம்மாவிடமிருந்து எந்த பதிலுமில்லை. கொல்லையிலுள்ள வளைந்த தென்னையின்
நிழல் பூச்சான்டி போல் முற்றத்தின் நடுவில் உட்கார்ந்திருந்தது.

மீண்டும் நான் போகலைம்மா என்றேன்.

போகலைங்கிறத்துக்கா இத்தனை கஷ்டபட்டு படிச்சே.

அப்பா எத்தினி சிரமத்துல பணம் கட்டினாங்கன்னு தெரியுமா உனக்கு?

தெரியும், இருந்தாலும் கேலி பன்றதை தாங்க முடியலம்மா.

என்ன பெரிசா கேலி பன்ன போறாங்க, நீ என்ன பொம்பளை புள்ளையா?

இன்னிக்கு க்ளாஸ்ல வந்து, டேய் சாமியாரே வெளில வாடான்னு கூப்டாங்க,
மொத்த க்ளாஸ¤ம் கொல்லுன்னு சிரிச்சாங்க, செத்துல்லாமான்னு இருந்துச்சு.

சாமியார்னா என்ன கெட்ட வார்த்தையா, இதுக்கு ஏன் கவலைபடுறே. யார்தான்
இந்த காலத்துல சாமி கும்பிடாம இருக்காங்க.

என்னைத்தவிர, நீங்க சொல்ற மாதிரி ஹாஸ்டல்ல யாரும் சாமி கும்பிடலை, கும்பிடற
எனக்குத்தான் கஷ்டம்.

சரி நீயும் கும்பிடாதே போ.

முடியல பயமாயிருக்கு, ப்ரே பன்னலைனா சாமி பழி வாங்கிடுமோன்னு.

சாமிக்கு பழிவாங்கிறத்துக்கெல்லாம் நேரம் இல்லை தம்பி. உன்னோட ·ப்ரென்ட்ஸ்
யாரும் கும்பிடலேங்கிற, அவங்கெல்லாம் பயப்படறாங்களா என்ன?

தப்பில்லைன்னா ஏன் என்னை சின்ன வயசுலேந்து சாமி கும்பிடச் சொன்னீங்க.

முதல்ல புரிஞ்சுக்கோ, சாமி கும்பிடறதுங்கிறது காரியம் சாதிக்கிறதுக்கில்லே.
கடவுள் எங்கயும் பேப்பர் திருத்தி மார்க் போட போறதில்லை. மனச ஒரு நிலையில
வைக்கனும், எப்ப எங்க எது நடந்தாலும் அதை அப்படியே ஏத்துக்கற பக்குவம்
வரனும்னுதான் சாமி கும்பிடுறோம்.

கால் மரத்து போச்சு, கொஞ்சம் தலைய இறக்கி வச்சுக்கோ.

இன்னிக்கு இத யோசிச்சா சரியா தப்பான்னு குழப்பம்தான் மிஞ்சும். கொஞ்ச நாள்
கழிச்சு சுத்தி ஆள் இருந்தாலும் தனியா இருக்கிற மாதிரி தோனும், அப்ப புரியும்
ஏன் சாமி கும்பிடச் சொன்னோம்னு.

என்னை பிரியறதுல உங்க யாருக்கும் வருத்தமே இல்லையா?

கஷ்டமாதான் இருக்கு, இருந்தாலும் உன் எதிர்காலம்னு ஒன்னு இருக்குதுல்ல, அதை
யோசிச்சு பாக்கனும்ல.

அதையும் இதையும் நெனைச்சு மனச போட்டு அலட்டிக்காம தூங்கு.

தூக்கம் வரலைம்மா, தனியா போய்டுவேனோன்னு பயமா இருக்கு.

அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது. மாற்றத்தை ஏத்துக்க யோசிச்சாதான்
புத்தி இப்படி அலை மோதும். பயப்படாதே, பயந்தா எதையுமே அடையவோ,
அனுபவிக்கவோ முடியது.

நீ வேணா பாரு, அடுத்த வருஷம் வார விடுப்புக்கு கூட வீட்டுக்கு வர மாட்டே.
படிச்சு வேலைக்கு போனப்புறம் தீபாவளி, பொங்கலுக்குத்தான் வீட்டுக்கு வருவே.
கல்யாணமாச்சுன்னா, உன் முகத்தை பாக்காவே நானும் அப்பாவும் தவமிருக்கனும்.

பத்தாயத்தின் இடுக்கில் குழந்தை அழுவது போல் பூனை கத்திக் கொண்டிருந்தது.
அம்மா எழுந்து அதை விரட்ட, திறந்த அலமாரிக்குள் பாய்ந்து, கலர் கோல மாவு
டப்பாக்களை உருட்டி, பத்தாயத்தின் மேல் தாவி ஓடி ஒளிந்தது.

சித்த தொணைக்கு வாடா, என்ற அம்மாவின் பின்னால் எழுந்து கொல்லைக்கு
ஓடினேன். ஆள்அரவத்தில் மாடு எழுந்து உடலை நெளித்து சிறுநீர் கழித்தது.
சுருங்கிய செம்பருத்தி பூக்கள் விழுவதா வேண்டாமா என காற்றில் அலைமோதின.
துவைக்கிற கல்லின் மேல் ரெண்டு கால்களையும் கட்டிக்கொண்டு உட்கார்ந்தபோது
இளம் குளிருக்கு இதமாய் இருந்தது. பாத்திரம் கழுவுமிடத்தில் தேங்கியிருந்த நீரில்
நிலா நடுங்கி கொண்டிருந்தது. வைக்கல்போரின் நடுவில் தொங்கிய பிரியின் நிழல் காற்றில்
பாம்பென வளைந்தது. அம்மாவின் காலில் ஊற்றிய நீர் எனக்கு குளிர்வது
போலிருந்தது. வேலியோரம் விழுந்து கிடந்த நெத்து தேங்காயை பொறுக்கி கொண்டு,
வா போலாம் என்றார்.

அம்மா நான் போமாட்டேன், சொல்லிட்டேன் என்றதற்கு, நிலவொளியில் அம்மாவின்
புன்னகை மட்டுமே தெரிந்தது. சார்பில் தேங்காயை போட்டுவிட்டு, கிணற்றோடு
ஒட்டியிருந்த சிமென்ட் தொட்டியின் மேல் தாவி உட்கார்ந்த போது அம்மா என்
விளயாட்டு தோழனாய் தெரிந்தாள்.

தாத்தாவின் கடைசி பெண், ஆம்பிள பிள்ளையாட்டம் வளர்ந்து ஆசிரியையான கதை,
சலித்ததேயில்லை. பத்து நிமிடத்தில் மனதில் புதிய பாதைகளின் தடம் தெரிந்தது.
அம்மாவின் தேர்ந்தெடுத்த வார்த்தைகள் எப்போதும் போல் என் பயம் கொத்தி
வெளியே எறிந்தது.

நீ என்னவாகனும்னு ஆசைபட்டியோ, அது வேணும்னா போய்தான் ஆகனும்.
பயம், பிரிவு இதெல்லாம் நாம நம்மோட கடமையிலேந்து தப்பிச்சுக்க சொல்ற
சால்ஜாப்புகள்தான்.

சின்ன வயசுல உனக்கு நான் ஒரு மந்திரம் சொல்லிக்கொடுத்தேனே, அது ஞாபகமிருக்கா?

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.

பாரதியின் சாகா வரிகள் அம்மாவின் குரலில் என் பய முடிச்சுகளை மெல்ல மெல்ல
அவிழ்த்தெரிந்தன.

Series Navigation

அதிரை தங்க செல்வராஜன்

அதிரை தங்க செல்வராஜன்