விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திரெண்டு

This entry is part of 28 in the series 20090702_Issue

இரா.முருகன்


26 அக்டோபர் 1900 – சார்வரி வருஷம் ஐப்பசி 20, வெள்ளிக்கிழமை

முழிச்சுக்கோடி பொண்ணே. அப்படி என்ன பாழாப் போற தூக்கம்? மங்களகரமான திவசத்துலே மூதேவி மாதிரி கிடந்து உறங்கினா சீதேவி எப்படி படி கேரி வந்து தங்குவான்னேன். எழுந்திருடி. இந்தா தந்த சுத்தி சூர்ணம். மூத்ரம் ஒழி. பல் தேச்சுட்டு வந்து உக்காரு. பழைய சாதம் கையிலே பிசஞ்சு போடறேன். பாவாடையை நேராக்கிக்கோடி குடிகேடி. விரிச்சு வச்சுண்டு தர்ம தரிசனமா தரே? லோகத்துலே அவனவன் ஆட்டிண்டு அலையறான் பாத்துக்கோ.

அம்மா அதட்டினாள். அவள் குரல் கடல் நாரை குரல் மாதிரி கீச்சென்று ஒலித்தது. அடுத்த வினாடி அவள் எல்லையற்ற நீலவானப் பரப்பில் றெக்கை விரித்துப் பறக்க ஆரம்பித்திருந்தாள். மேலே இருந்து தெரிசாவைப் பார்த்து கண்ணை விழித்து மிரட்டி, எழுந்து உட்காரச் சொல்லிக் கொண்டிருக்கிறாள் சிநேகேம்பாள். அப்பன் எங்கே?

தெரிசா தலையில் சிநேகாம்பாளின் கூர்மையான அலகு மூர்ச்சையோடு துளைக்கிறதுபோல் குத்திக் கிழிக்க இறங்கி வந்தபோது தெரிசா கலவரத்தோடு விழித்துக் கொண்டாள்.

அம்மா, நீ ஏன் என்னை இப்படி பேடிச்சுப் போக வைக்கறே? நான் உன்னோட முதல் கொழந்தை இல்லையா? பொண்ணாப் பிறந்தாலும் குழந்தை. உன் உதிரம். உன் வயித்துலே பத்து மாசம் கிடந்தவ. புண்ணியமாப் போறதுடி அம்மா. என்னை வையாதே. தொடையில் நிமிண்டாதே. வலி பிராணன் போறது. அம்மா, அடி அம்மா, கேட்கிறாயோடி? வேணாம், எதுக்கு நாரை மாதிரி, கொக்கு மாதிரி, ஆலப்பாட்டு முத்தச்சன் மாதிரி இப்படி பறக்கறே? எதாவது அம்பலத்துக்கு நேர்ச்சையா?

நாரை இறங்கி வந்து காது பக்கத்தில் நாராசமாக இரைந்தது.

பொசை கெட்டவளே, வழிச்சுண்டு தூங்கறியே. பழைய சாதம் ஆகாரம் கழிச்சுட்டு துணி அலக்கி, வீடு முழுக்க அடிச்சுப் பெருக்கணும்னு போதமே இல்லியா? நாளைக்கு புக்காத்துக்குப் போனா கையும் காலும் வழங்குமோ இப்படித் தூங்கினா? நெத்தியைப் பாரு. பாழ் நெத்தி. குங்குமம் வச்சுக்கணும்னு தோணாதோ பொண்ணாப் பொறந்தவளுக்கு. சாந்துப் பொட்டு கூடவா ஆத்துலே இல்லே? என்னத்தை வெட்டி முறிக்கறே தடிச்சி. நான் பாட்டுக்குச் சொல்லிண்டே கிடக்கேன். நீ போடி போக்கத்தவளேன்னு ஏந்திருக்க மாட்டேன்னு ஒரு அடம்.

அம்மா வார்த்தை ஒவ்வொன்றும் முதுகிலும் முகத்திலும் நாரை அலகாகக் குத்தி ரணப்படுத்த தெரிசா விழித்துக்கொண்டாள். அம்மா இல்லை. நாரை மாத்திரம் இருந்தது. ஜன்னல் பக்கம் இருந்து உள்ளே பார்த்து நாராசமாக கத்தியபடிக்கு.

இது அம்பலப்புழை இல்லை. தெரியும். லண்டன் கூட இல்லே. அதுவும் தெரியும். எடின்பரோவிலே தங்கியிருந்த இடத்துலே நேத்து ராத்திரி தீ பிடிச்சுடுத்து. அதுவும் தெரியும். அப்புறம்? கடல் பறவை இளக்காரமாகக் கேட்டபடி எவ்விப் பறந்து சுற்றி விட்டு மரக் கிளையில் உட்கார்ந்தது.

தீ பிடித்த அப்புறம்? எங்கே இருக்கேன் நான்? இது யார் வீடு?

தெரிசா பரபரப்பாகப் பார்த்தபடி எழுந்து உட்கார்ந்தாள். விடிந்து கொண்டிருக்கிற அரை இருட்டு வெளிச்சத்தில் இருக்கப்பட்ட இடம் மனசிலாகவில்லை. ஏதோ ஆம்பிளை வாடை அடிக்கிற பிரதேசம். அது மட்டும் அர்த்தமானது. அடர்த்தியான புகையிலை வாசனை. குப்பியில் பாதி ஒழித்து மிச்சம் வைத்த சாராய வாடை. எங்கேயோ பக்கத்தில் மூத்திர நெடி. ஆம்பிளை மூத்திரம் போக வந்திருக்கிறான்.

அவள் படுத்திருந்த கட்டிலில் இருந்து எழுந்து தடதடவென்று வெளியே ஓடி வந்தாள். அந்த நாரையையே பார்த்தபடி அவள் முன்னால் நகர்ந்தாள்.

அம்மா, கோவிச்சுக்காதே. எங்கேயோ வந்து எப்படியோ படுத்துத் தூங்கிட்டேன். திட்டாதே. என்னைக் காப்பாத்து. வாசல் தெளிக்கறேன். இதோ வரேன். அம்மா, எங்கே இருக்கே. என்னைக் காப்பாத்து அம்மாடி. பறந்து போயிடாதே. வரேன்.

உடுத்திய உடுப்போடு வெளியே வந்தது உரைத்தபோது குளிர் தேகத்தை நடுக்கியது.

உடுத்தியிருக்கிறேனாடி அம்மா? மொட்டைக் கட்டையாக பிறந்த கோலத்தில் வந்துட்டேனோ. படுக்கையில் மூத்திரம் போறேன்னு இப்படியே படுக்க வைச்சுட்டியோ? என் பாவாடையைக் கொடுடி அம்மா. சித்தாடை எங்கே போச்சு?

தெரிசா குனிந்து பார்த்தபோது ராத்திரி அங்கியும் மேலே கம்பளி சட்டையும் அதுக்கும் மேலே கம்பளி சால்வையுமாக உடம்பு முழுக்கப் போர்த்தி இருந்தது கண்ணில் பட சின்னதாக ஒரு ஆறுதல்.

அம்மா உடுப்பைப் பிடுங்கிப் படுக்கப் போடவில்லை. ஆனாலும் பாதம் பனிக்கட்டியில் பதிந்த மாதிரி ரத்தம் கட்டி வலித்தது. செருப்பு எங்கே?

வீட்டுக்குள்ளே செருப்பா? அடி துடைப்பக் கட்டையாலே. பாவாடையை இழுத்துச் செருகிண்டு நெத்திக்கு இட்டுக்கோடி.

நாரை விடாமல் இரைந்தது. தெரிசா தயக்கத்தோடு வாசல் படி தாண்டாமல் நின்றாள். யாரோ அவசரமாகப் படி ஏறி வந்து கொண்டிருந்தார்கள்.

குட் மார்னிங் தெரிசா. நல்ல உறக்கமா சீமாட்டியே? எழுப்பி விட்டுவிட்டோமா நாங்கள் ஏகத்துக்கு இரைச்சல் போட்டு? மனசார மன்னிப்புக் கேட்கிறேன்.

தாமஸ் தொப்பியைக் கழற்றி இடுப்போடு குனிந்து வணங்கி விட்டு நிமிர்ந்தான். பக்கத்திலேயே நாடகம் பார்க்கிற ரசத்தோடு கண்ணை இடுக்கிக் கவனித்துக் கொண்டு புகைவிட்டபடி நின்றவன் நேற்றைக்கு ஓ சோசன்னா நாடகத்தில் கதாநாயகனாக வந்த ஸ்டான்லி கார்டன்.

தாமதாமான வரவேற்புகள் மகாராணி, இந்த என் எளிமையான இல்லத்துக்கு.

கார்டனும் தலையசைத்து சிரித்தான்.

தெரிசாவுக்கு சட்டென்று மனசில் எல்லாம் வந்து சேர்ந்தது. இந்த நாடகக்காரன் வீட்டுக்கு அதுவும் தாமஸ் தடியனோடு அவள் எப்படி வந்தாள்? எப்போது வந்தாள்? அவன் படுக்கையையா பகிர்ந்து கொண்டாள்?

வீட்டுக்கு உள்ளே இருந்து ஒரு மர வாளி நிறைய வென்னீர் நிறைத்து எடுத்துக் கொண்டு நீளப்பாவாடை கட்டிய இளம்பெண் ஒருத்தி வெளியே வந்தாள். தெரிசாவைப் பார்த்து புன்னகையோடு வணக்கம் சொன்னாள் அவள்.

என் தோழி. ஓ சூசன்னா நாடகத்தில் நாலு காட்சியில் தலையைக் காட்டுகிற தோழியாக வருகிறாள் பார்த்திருப்பீங்களே. சிந்தியா. இவள் தான் என் கூட வசிக்கிறவள். தற்போதைக்கு.

கார்டன் தன் சிநேகிதியை தெரிசாவுக்கு அறிமுகம் செய்து வைத்தான். மரியாதைக்கு பதில் வணக்கம் சொன்னாள் தெரிசா.

அது என்ன கல்யாணம் ஆகாமல் உறவு வைத்துக் கொண்டு சிநேகிதியாக சிநேகிதனாகக் காலம் தள்ளுவது என்கிறது? தெய்வத்துக்குக் கிஞ்சித்தும் பிடிக்காத பாவ காரியம் இல்லையா?

அவா அவா பாவ புண்ணியம் என்னன்னு பார்த்துக்கட்டும். நீ உன் ஜோலியைக் கவனிடீ பொண்ணே.

நாரை அலுத்துக் கொண்டு பறந்து மேலே நீல ஆகாசத்துக்கு உயர்ந்து காணாமல் போனது.

சிந்தியாவுக்கு சீமாட்டி சார்பில் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். தன் படுக்கை அறையை அப்படியே ஒதுக்கிக் கொடுத்து விட்டு ராத்திரி முழுக்க வெளியே இருந்த நல்ல மனசு இல்லையா இவளுடையது?

தாமஸ் குறுக்கே வெட்டி வார்த்தை சொல்லி விட்டு சுவாதீனமாக ஸ்டான்லி கார்டனின் கோட்டுப் பையில் இருந்து சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான்.

தெரிசா நன்றியோடு சிந்தியாவைப் பார்த்தபோது மனசில் நாரை வந்து உட்கார்ந்து நொட்டச் சொல் சொன்னது.

என்னத்த படுக்கையை உனக்குக் கொடுத்தா? கூட்டுக்காரனோடு லயிக்க அவன் படுக்கையைப் பகிர்ந்துண்டு இருப்பா. கூறு கெட்டவளே. நீ ஒழுங்கா உடுப்பு விலகாம உறங்கி எழுந்தியோ இல்லே ராத்திரியிலே அந்த தாமஸ் தடியன் மாரைத் தடவிட்டுப் போனானோ?

கம்பளிப் போர்வையை இன்னும் இறுகத் தோளில் சுற்றி இறக்கிக் கொண்டு தெரிசா மிரண்டுபோய் தாமஸை பார்த்தாள்.

மர வாளியை பக்கத்தில் வைத்து விட்டு சிந்தியா பிரியமாகச் சிரித்தாள்.

ராத்திரி தோப்புத் தெரு விடுதியிலே தீ பிடிச்சதும் எல்லோரும் உசிரு பிழைக்க ஓடினாங்க. இல்லே குய்யோ முறையோன்னு கூச்சல் போட்டு சுத்திச் சுத்தி வந்தாங்க. தெரிசா தோட்டத்துக்குப் போய் மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. இதைவிட புத்திசாலித்தனமா ஒரு இக்கட்டை எப்படி சமாளிக்கறது சொல்லு? நீயா இருந்தா என்னை உள்ளே தள்ளி கதவைப் பூட்டிட்டு மேன்செஸ்டர் ஓடியிருப்பே. உங்க அம்மா கிழவி அடுத்த கல்யாணம் பண்ணிக்கறதைக் கண்குளிரப் பார்க்க வேண்டாமா?

கார்டன் சிந்தியாவை சீண்டினான்.

பாவம்டா சும்மா இரு. தெரிசா நிலைமையிலே இருந்தா நானும் அப்படித்தான் மூர்ச்சையாகி விழுந்திருப்பேன். புது இடம். புதுசா அறிமுகம் ஆன மனுஷங்க. வந்த முதல் நாளே இப்படி ஒரு அதிர்ச்சி. விபத்து. என்ன செய்ய முடியும் சொல்லு.

சிந்தியா ஆதரவாக தெரிசாவை அணைத்துக் கொண்டாள். தெரிசாவுக்கு இதமாக இருந்தது. சிந்தியா குனிந்து ஒரு குவளை மிதமான சூட்டோடு வென்னீரை தெரிசாவின் பாதத்தில் கவிழ்த்தாள். மனசில் இனம் புரியாத நிம்மதி. சுகம். இளைப்பாறுகிற உணர்ச்சி.

வெறும் காலோடு நிக்க வேணாம் தெரிசா. பனி வெடிப்பு ஏற்பட்டுதுன்னா ஆறறது கஷ்டம். உள்ளே போகலாம் வாங்க.

அவள் தெரிசாவைக் கையைப் பிடித்து மறுபடியும் வீட்டுக்குள் அழைத்துப் போனாள். நாற்காலியில் அவளை உட்கார வைத்து விட்டு உள்ளே போய் தேநீர் உண்டாக்கிக் கொண்டு வந்து கொடுத்தாள்.

பாலும் சர்க்கரையும் தனித்தனியாக வைத்து எடுத்து வந்த கோப்பைகளில் இருந்து சூடான பாலை மாத்திரம் தேநீரில் கலந்தாள் தெரிசா. இனிப்பு வேண்டி இருக்கவில்லை என்னமோ இப்போது.

பல்லுத் தேய்க்காம கண்டதையும் குடிக்காதேடி.

அம்மா மனசுக்குள் சொன்னபோது தெரிசா சமாதானம் சொன்னாள் – ராத்திரியே பல்லுத் தேச்சுட்டேனே. தேச்சேனா இல்லியா?

எங்கே பல்லுத் தேய்க்க? ராத்திரி தீயில் கருகிப் போனது உடுப்பு, பணம், துணிமணி, பல் தேய்க்கிற பிரஷ், தலை வாரும் சீப்பு இன்னும் என்ன எல்லாமோ.

ராத்திரி நாடகம் முடிஞ்சு வந்தபோது தோப்புத் தெருவிலே களேபரமா தீ பற்றி எரிந்தபடிக்கு இருந்தது. சட்டுன்னு உன் நினைப்பு. உள்ளே தூங்கிட்டு இருக்கியோன்னு பயம். தீயைப் பத்திக் கவலைப்படாமல் ஓடி உள்ளே போனேன்.

தாமஸ் சொன்னான். அவன் பார்வையில் நேசம் தெரிந்தது. மனுஷர்கள் நல்லவர்கள். அவ்வப்போது சாத்தான் குடியேறி ஒரு நிமிஷம் அரை நிமிஷம் ஆட்கொண்டாலும் தேவன் மிச்ச நேரம் சுத்தமாக்கிப் போட வந்துவிடுகிறான்.

என்னத்தை உள்ளே ஓடினே. வயிறு முட்டக் குடிச்சுட்டுன்னா வந்தே? அப்படியே உள்ளே போயிருந்தா படுத்தே கருகிச் செத்திருப்பே. உன்னை வழிமறிச்சு இழுத்துப் பிடிச்சுக்க நாலு பேர் வேண்டியிருந்தது. தெரிசா தெரிசான்னு நீ அலறினது லண்டனுக்கே கேட்டிருக்குமோ என்னமோ ராணியம்மாவோட ஹோலிராட் அரண்மனைக் கதவைக் கடந்து கேட்டு எழுப்பி இருக்கும் எல்லோரையும்.

ஸ்டான்லி கார்டன் தாமஸைப் பார்த்துக் கண் அடித்தான். தாமஸ் தலையைக் குனிந்து கொண்டான்.

தெரிசாவை அவன் தொட்டுத் தூக்கி வரவில்லை. ஆனால் என்ன? அவளுக்கு ஒன்றும் ஆகக் கூடாது என்று உள்ளபடிக்கே கவலைப் பட்டிருக்கிறான். தெய்வ அனுக்கிரகத்தில் அவன் நல்லபடிக்கு குடும்பம் வைத்து க்ஷேமமாக இருக்கட்டும்.

தெரிசா தேவ ஊழியம் செய்ய வந்த பரிசுத்த ஆத்மாவாக அவனை ஆசீர்வாதம் செய்தாள்.

தெரிசா, நீங்க தோட்டத்திலே மயக்கம் போட்டு விழுந்து கிடந்ததை என் கூட வந்த சிந்தியாதான் முதல்லே பார்த்தா. அப்படியே நானும் அவளும் கைத்தாங்கலா ஒரு சாரட்டுலே ஏத்தி இங்கே கொண்டு வந்துட்டோம். தாமஸையும் போதையிலேயே வண்டியிலே அடைச்சு எடுத்து வந்து என் அறையிலே போட்டுட்டேன். இப்பத்தான் எழுந்தான்.

சிந்தியா காலி தேநீர்க் கோப்பைகளோடு உள்ளே போனவள் அதே வேகத்தில் திரும்ப வந்தாள்.

சொல்லவே மறந்துட்டேன். நடு ராத்திரிக்கு வாசல் கதவை யாரோ பலமா இடிச்சாங்க. பயத்தோடு திறந்து பார்த்தா தோப்புத் தெரு விடுதியிலே வேலை பார்க்கிற பொண்ணு நின்னுட்டிருந்தா. கையிலே இந்தப் பெட்டி.

தெரிசா சிந்தியா கையில் பிடித்திருந்த தோல்பெட்டியைப் பார்த்தாள். அவளுடையதுதான்.

அந்தப் பணிப் பெண் எங்கே? காசு விலை மதிப்பு என்று பார்த்தால் ஒன்றும் இல்லாத பெட்டிதான் அது. உள்ளே உடுப்பும் பீட்டரின் புகைப்படம் ஒன்றும் அம்பலப்புழை கிருஷ்ணன் படமும் எந்தக் காலத்திலேயோ பட்டணத்துக்கு வந்தபோது பறித்துப் போட்ட உலர்ந்து போன நந்தியாவட்டை சருகின் சருகும் இருக்கப்பட்ட பெட்டி அது. கிறிஸ்துவ தோத்திரப் பாட்டுக்கள் அடங்கிய புத்தகமும் அதிலே உண்டு. கர்னாடக சங்கீத ரீதியில் சிட்டைப்படுத்தி அப்பன் கடுதாசியாக எழுதி அனுப்பிய நாலைந்து தமிழ் கானங்களும் அந்தப் பெட்டியில் இருந்தன. கிறிஸ்து நாதர் விஷயமான பாட்டு.

அந்த வேலைக்காரப் பொண்ணு நடு ராத்திரியிலே வீட்டுக் கதவைத் தட்டிக் கொடுத்ததே ஆச்சரியம். அதை விட ஆச்சரியமா அவ ஒண்ணு சொன்னாளே பாக்கணும்.

சிந்தியா கொஞ்சம் நிறுத்தி தெரிசாவைப் பார்த்தாள். அவள் இன்னொரு ஆச்சரியத்தை எதிர்பார்த்தாள். இது வழக்கமான ஆச்சரியமாக இருக்கப் போகிறது என்றது மனம்.

நிஜத்துக்கும் மாயத்துக்கும் நடுவிலே அவள் ஊசலாட ஆரம்பித்து கொஞ்ச காலமாகிறது. எல்லாவற்றையும் நம்பச் சொல்லுகிறது ஒரு மனசு. இல்லை, எதையும் யாரையும் நம்பாதே என்று எச்சரிக்கிறது இன்னொன்று. இப்போது எந்த மனசு முன்னால் வந்து நிற்கப் போகிறதோ தெரியவில்லை.

நல்ல கருப்பிலே இந்தியாக்காரச்சி போல உடுப்பு அணிஞ்ச ஒரு ஸ்திரியும், கூடவே அரைகுறையா உடுத்த ஒரு பெண்குழந்தையும் அவள் கிட்டே இந்தப் பெட்டியைக் கொடுத்து இங்கே தெரிசாவிடம் சேர்ப்பிக்கச் சொல்லிட்டுப் போனாங்களாம். தீ விபத்து நடந்த கலவரத்துலே அவ யாரு, எங்கேயிருந்து வந்தா, எங்கே போனான்னு எதையும் விசாரிக்க முடியலியாம்.

தாமஸ், நீதான் கொட்டகையிலே வந்து மூக்கு முட்டக் குடிச்சுட்டு தடுமாறினேன்னா, இங்கே பாரு, விடுதியிலே ஒரு வேலைக்காரப் பொண்ணு பிராந்தி எடுத்துக் குடிச்சுட்டு ரகளை பண்ணியிருக்கா. அவளைச் சொல்லிக் குற்றம் இல்லை. அபாயமும் நெருக்கடியும் பயமும் சேர்ந்து ஆட்டி வச்சிருக்கு. கையிலே கிடைச்ச குப்பியைத் திறந்து கடகடன்னு குடிச்சுட்டா. போகுது. தெரிசா அது உன் பெட்டிதானா பாரு.

கார்டன் சொன்னான்.

பெட்டியைத் திறக்காமலேயே தெரிசாவுக்குத் தெரியும். அவள் பெட்டிதான் அது. கொண்டு வந்து கொடுக்கச் சொல்லிக் கொடுத்து அனுப்பியதும் யார் என்று அவளுக்குத் தெரியும். அம்பலப்புழைக்காரிப் பெண். குழந்தையோடும் பசியோடும் வந்த பிராமணப் பெண்.

சேச்சி. பசி பிராணன் போறது.

நாரை திரும்ப தாழப் பறந்து தோட்டத்துக்குள் நுழைந்தபடி கூவியது.

வந்துட்டேன். இதோ மூத்ரம் ஒழிச்சுட்டு தந்த சுத்தி செஞ்சுண்டு வந்து ஆகாரம். பழையது போடறேன்னா அம்மா. சாப்பிடுவேளோ இல்லியோ?

(தொடரும்)

Series Navigation