மென்மையான உருளைக்கிழங்குகள்

This entry is part [part not set] of 37 in the series 20090625_Issue

ரா.கிரிதரன்



பாட்டியைப் பற்றியது உண்மையாக இருக்காததால் கதையாக மட்டுமே இருக்க சாத்தியம் உள்ளது.நீங்களும் நானும் மட்டும் இப்போது அந்தக் கதையைப் பார்த்தால் உண்மையாக இருக்கக் கூடும். ஆனால் அது முடியாத பட்சத்தில் இது வெறும் கதை மட்டுமே.

என்னை என் அம்மாவிடமும், அவளை அவள் ஆத்மாவிடமும், இதையெல்லாம் தாண்டி பலதரப்பட்ட கோடுகளில் நிற்கும் பெண்களை பிரிப்பது – பல கோடி வினாடிகள் மட்டுமே. இந்த பெண்கள் அனைவரும் என் எலும்பிலுள்ள நிழல். அவர்கள் தங்கியிருக்கும் கூடுதான் அது. இதை நீங்கள் படிக்கும் போது நான் எங்கேயோ இருக்கின்றேன். அதனால் இது வெறும் கதைதான்.

இந்தக் கதையில் வரும் பாட்டியை அவளில் எதிர்காலம் மட்டுமல்லாமல், கடந்த காலம், அவளின் வளர்ப்புத் தகவல்கள் அனைத்தும் முடிவில்லாமலேயே இருக்கும். இந்த கதையில் அவள் மட்டும் இருப்பாள் – பக்க வாதத்தில் விழுந்த கைகள், சிறுமியின் முகம், எந்த குறிப்பிட்ட நிறம் அல்லது வடிவம் இல்லாத உடை, அவளைச் சுற்றி இருந்த தெருக்கள் வகைப்படுத்த முடியாத சத்தத்துடன் நிசப்தமாக இருக்கும்.

பாட்டியின் வயதும் இந்த கதையில் தெளிவாக இல்லை. பத்து வயதை விட கம்மியாகவோ, பதிமூன்றைத் தாண்டாமலும் அவள் பெற்றோறின் பல குழந்தைகளில் ஒருத்தியாக இருக்கிறாள். இதுவரை அவர்களில் ஒருவரே இறந்துவிட்டார். எந்த குழந்தை சொந்த நாட்டைவிட்டுச் சென்று கானடாவில் புதைக்கப்படும், எது கல்யாணம் செய்துகொள்ளும், எவன் தற்கொலை செய்து கொள்வான் என்று பாட்டிக்குத் தெரியாது. அவர்களை அவளுக்கு அவ்வளவு நெருக்கமாகத் தெரியாது.

அவளுக்குத் தெரிந்த பல சகோதரர்களில் எட்கார்,ஐவி,சூ மிகப் பிரெத்யேகமானவர்கள்.

சிறுவனாக இருந்தாலும் தலையில் முடியில்லாமல் இருக்கும் எட்கார் , திடகாத்தமாக இருந்தாலும் இடுப்பு நரம்புப் பகுதியில் எப்போதும் வலியுடன் கஷ்டப்படுபவன். எப்போதும் எவருக்கும் பிடிக்காத பறவை வாசனையுடன் மஞ்சள் நிறத்தில் காலணி அணிந்திருப்பான்.

சற்று சதைப்பிடிப்புள்ள ஐவியோ வாத்தியக் கருவிகளை அற்புதமான இசைப்பவள். பதினெட்டு மாத காத்திருப்பிற்கு அவள் இடுப்பு மாற்றும் அறுவை சிகிச்சை செய்யப்படும். அற்புதமாக வேகவைத்த ஆப்பிள் உருளைகளைச் செய்வாள். ஏழை. எல்லா சகோதரர்களும் ஏழையாக இருந்தாலும் இவள் மற்ற எல்லோரைவிட ஏழையாக இருப்பாள்.

இரண்டாம் உலகப் போர் நடக்கும் போது சூவிற்கு தன் வீட்டின் பின்னே இருக்கும் தெருவில் சிதைக்கப்பட்ட தலை ஒன்று கிடைக்கும். சக்கரை ஆலையை தகர்க்க வந்த குண்டு விழுந்த மறுநாள். அவள் அந்த தலையை என்ன செய்தாள் என நமக்குத் தெரியாது, ஆனால் டண்டீ என்ற இடத்தில் நடக்கும் கார் விபத்தில் துண்டான தலையை என் அம்மாவிற்கு ஞாபகம் இருக்கும். சூ யாரையுமே நினைவு வைத்ததில்லை.

எலும்பும் தோலுமாய் நிலையான புகைப்படமான பாட்டியின் அம்மா, என் அம்மாவை ஒவ்வொரு முறை பல் மருத்துவரிடம் போகுமுன் விளக்கெண்ணை குடிக்க வைக்கத் துறத்துவார். ஒருமுறை வீட்டுப் பூனையின் சல்லாப விளையாட்டை வேடிக்கைப் பார்த்ததற்காகவும், கருத்தரித்த ஒருத்திக்கு குழந்தை பிறக்கப் போகிறது என சொன்னதற்காகவும் என் அம்மாவை வீடு முழுவதும் துறத்தினாள். இது சிறுமிகள் பேசக்கூடிய விவரணைகளுக்குக் கட்டுப்பாடிருந்த காலம். அந்தக் கட்டுப்பாடும் மிகக் குடூரமான முறையில் பின்பற்றப்படும்.

இதைப் போன்றதொரு நாளில் – ஒல்லியான,நீளமான விரல், பெரிய கால் , கிட்டத்தட்ட பதிமூன்று வயதான பாட்டி வேலைக்குச் செல்வதற்க்காக காலையில் விழித்துக்கொள்வாள். அவள் தாய் சொல்லியிருந்தால் போலும்.

பாட்டியின் படிப்பை முடித்துக்கொண்டு வேலைக்குச் சென்று சம்பாத்தியத்தைக் கொண்டுவர வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. ஒரு மென்மையான வீட்டில், மென்மையான குடும்பத்தில், மென்மையான ஒருவளுக்கு சமைக்கவும், வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கவும் சேர்ந்தாள். அதிக தொலைவில் இல்லாமல் இருந்ததால், பாட்டி தன் வீட்டிற்கும் தினமும் திரும்ப வரமுடியும். தன் வீட்டுக் கட்டிலிலேயே இரவு பொழுதைக் கழிக்க முடியும். இது நல்ல வேலையாக இருந்ததால் பாட்டிக்கு பிடித்திருக்க வேண்டும்.

பாட்டி சந்தோஷமாக இல்லை. சமையல் அறை கூரையை ஏற்கனவே சுத்தம் வெள்ளை அடித்திருந்தாலும், இரண்டு அடிக்கருகே இரண்டு வாளி முழுவதும் துங்ப்பதற்கான விஷயங்கள் வந்து சேர்ந்தன. தான் சலவையையும் சுத்தமாகச் செய்திருந்தாள். இருந்தாலும் வேலை எனும் சவுக்குக் கயிறு அவளை துறத்தி வந்து சேர்ந்தது. அவளும் அதில் மாட்டிக்கொண்டாள்.ஆனால் சுத்தமில்லாததுபோல மீண்டும் அழைத்து சுத்தம் செய்யச் சொன்னார்கள். தன் வாழ்க்கையில் எந்த இடத்தில் நிற்கிறோம் எனத் தெரியாமல், அசெளகரியமாக இருந்தும் அந்த வேலையை செய்துவந்தாள்.

அதிக உந்துதலில் தான் வீட்டு வாசலிலிருந்து, தெருவின் வழியாக சென்று, திருப்பத்தில் திரும்பி, பாட்டியை தன் முதல் நாள் வேலைக்குச் செல்ல வைத்தது. இது நடக்கும் வேளையில் காரணம் தெரியாமல் அழுதுகொண்டே இருந்தாள். இப்படியாக எவ்வளவு முயற்சி செய்தும் தொலைந்துபோகாமல், தன் புது எஜமானனின் வீட்டை பத்திரமாக அடைந்தாலும், பார்க்க ரொம்ப பாவமாக இருந்தாள். முயல் கண்களில் பஞ்சு மிட்டாய் போல் ஈரம், மொத்தத்தில் எலும்பும் தோலுமாய் உருவம்.

மரியாதையான அந்த பெண்மணி தன் வீட்டினுள் அழைத்து, அவளது கடமைகளை ஜாக்கிரதையாக விவரித்தாள். அந்த மென்மையான குடும்பம் வேறுஒருவருக்குப் பணம் கொடுத்து துவைப்பதற்கு மட்டும் வைத்திருந்ததிலிருந்து , முழுநேரம் வீட்டு வேலைக்கு ஆள் வைக்கும் நிலைமைக்கு முன்னேரியுள்ளனர். அதனாலேயே மிகக் கட்டுப்பாடான விதிகளை விதித்துகொள்வது மட்டுமில்லாமல், அவற்றை புதிதாக வருவோர் அதைப் பணியும் படி வைப்பதில் முக்கியத்துவம் கொடுத்தனர்.

அந்த மென்மையான பெண்மணி கொஞ்சமாக சிரித்தார், வெடவெடவென , மெலிதாக நின்ற பாட்டிக்கான மென்மையான சிரிப்பு.

வேலை கடினமுமில்லை சுலபமுல்லை; பழக்கமான ஒன்றுதான். பாட்டிக்கு இந்த வேலை பிடிக்காமலில்லை; ஏற்கனவே வீட்டில் செய்த வேலைகள்தான் – ஆனாலும் இந்த வேலை மிகக் களைப்பான வெட்கத்தையே அவளுள் நிரப்பியது. சமையல் செய்வதிலோ, சுத்தம் செய்வதிலோ வெட்கமில்லை;பிடித்த வேலையை செய்வதில் என்ன வெட்கம்.தன் வேலையப் பற்றி தனக்கு ஒரு அபிப்ராயம் இருந்தால், அந்த மென்மையான பெண்மணிக்கு வேறொன்று இருப்பது தான் பாட்டிக்கு பிடிக்காமல் இருந்ததாகத் தெரிகிறது. இந்த வித்தியாசத்தை குறிப்பிட்டு சொல்வதிலேயே வெட்கமாக இருந்தது.
கு
இந்த வெட்கமும், வித்தியாசமும் தன் மூளையில் இருந்தாலும் அவள் தேய்பதையும், பளபளபாக்குவதையும், தூசி தட்டுவதையும் நிறுத்தாமல் தன் மென்மையான பளபளப்போடு எல்லாவற்றையும் பளபளவென தேய்த்துவந்தாள்.அப்போது இரவு சாப்பாட்டு நேரம்.

அந்த மென்மையான சமையலறையில் பெரிய கறுப்பு நிற செப்புப் பாத்திரங்கள் பல வடிவங்களில் பாட்டியின் முயற்சியால் ஜொலித்துக்கொண்டிருந்தன. குடும்பத்திற்கும் தனக்கும் இரவு சாப்பாட்டை சமைக்கவேண்டுமென அப்போதுதான் புரியவைக்கப்பட்டது. மென்மையான உருளைக்கிழங்குகள் இருந்தன; அதைத் தவிர தனக்குத் தனியாகவும் சிலது இருந்தது.மென்மைக்குப் பெயர் போன அந்தப் பெண்மணி சீக்கிரமே வந்து வேலை நடப்பதை மேற்பார்வை இடக்கூடும்.

அந்த வீட்டின் எஜமானிக்கு விவரம் முழுவதும் தெரியாது போலும். யாருக்கும் தெரியாததுதான், இந்த விஷயத்தில் அவளது அறியாமையே அவளுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கும்.

அவளுக்குத் தெரியாதது என்ன?

ஏன், நமக்குத் தெரிந்தது தான்.

இப்போது எண்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்தாலும் பாட்டி தன் வாழ்வில் ஒரு நாள் கூட சாப்பிடும் படியாக சமைத்ததே கிடையாது.இந்தப் பாட்டிக்கு வாழ்வில் எந்த கட்டத்தில் இருக்கிறோம் என்றுத் தெரியாமல் தவிக்கும் ஆன்மா ..

அதன் அர்த்தம் என்னவெனில், இவள் சமைத்தால் இந்த மென்மையான குடும்பத்திற்கு விஷம் வைப்பதுபோல் இல்லாவிட்டாலும், மிகுந்த கொடுமைக்கு ஆளாவார்கள். இரவு சாப்பாடும் தயாராகது என்பது இதன் அர்த்தம், ஏனெனில் பாட்டி இப்போது அந்த மென்மையான உருளைகழங்குகளை சோதித்துப் பார்க்கப் போகிறாள்.

மிக மென்மையான உருளைக்கிழங்குகள் பெரிய மூட்டையில் இருந்தன. சற்றே பச்சையாக இருந்தது.சில நசுங்கியும் இருந்தது.தன்னிடமிருந்த உருளைக்கிழங்குகளும் பச்சையாக , அழுகி இருந்தது. இரண்டு புதிய தழைக்கவும் தொடங்கிவிட்டது. பாட்டிக்கு உருளைக்கிழங்குகளைப் பற்றித் தெரியும். சிறு சிறு உருளைகளை தன் வீட்டிலும் வளர்த்து வந்தார்கள். இந்தக் கிழங்குகளால் மிக ஆச்சர்யமடைந்த அவள், தனக்காக ஒதுக்கப்பட்ட கிழங்குகளால் இன்னும் ஆச்சர்யமடைந்தாள்.

தன் இடது லையில் அந்தக் குடும்பத்தின் கிழங்குகளை அள்ளிக் கொண்டாள். வலது கையில் தனக்கென ஒதுக்கப்பட்ட இரண்டை வைத்துக்கொண்டாள். அழுகிப்போன ஒன்று தன் கையில் ஒழுகத் தொடங்கியது. கைகவசம் போட்டுக்கொண்டு தன் எஜமானியைப் தேடிச் சென்றாள்.

தன் எஜமானியிருந்த மண்டபத்திற்குள் வெடித்து நுழைந்து பாட்டி அவளை ஊடுருவிப் பார்த்தாள். ஒரு நாள், அதே பார்வை தீவிரமான பாதிரியாரையும் இரநூறு அடியில் வெலவெலக்க வைத்துவிடும்.

`இவற்றைப் பார்தீர்களா?`

நடுத்தர வர்க்க கிழங்குகளை தன் கையிலிருந்து நழுவ விட்ட படியே கூறினாள் – `எங்கள் பன்றிகளுக்குக் கூட இதை போட மாட்டோம்`

அந்தக் குடும்பம் சில பன்றிகளை வளர்த்து வந்தார்கள்.

`இவைகள்…’

இந்த வேலைக்கார கிழங்குகள் மெத்தென தரைவிரிப்பின் மேல் விழுந்தன. பாட்டியும் தன் பின்னே உருவான நிசப்தத்தில்,அந்த இடத்தை காலி செய்தாள். இந்த வேலையை விடுவெதென தீர்மானித்துவிட்டாள். அந்த மென்மையான பெண்மணி என்ன சொன்னாலும் – கண்டிப்பாக பலதும் பேசப் போகிறாள் – பாட்டி வேலையை விடப்போவதை யாராலும் மாற்ற முடியாது. தானகவே நெஞ்சை நிமிர்த்தி, மறக்காமல் தன் மேல் அங்கியை எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டுப் போனாள். நடக்கும் போது எந்த விதமான வெட்கமும், வித்தியாசமும் இல்லாமல் போனது. அந்தக் கவலைகள் எல்லாம் நிம்மதியாக முடிக்கப்பட்டுவிட்டது.

பாட்டியின் அம்மா சீக்கிரமாகவே அவள் வீட்டிற்கு வருவதைப் பார்பத்து தன் சவுக்கை எடுத்து வருவாள்.பாட்டி புரிய வைக்க முயற்சித்தாலும் அது இன்னும் மோசமாகிப் போகும். சாப்பிடாமல் தூங்கப் போவாள். தன் சகோதரிகளுக்கு முதுகைக் காட்டி படுத்துக் கொண்டே அழுவாள்.

இதுவல்ல அவளுக்குத் தண்டனை. அடுத்த வாரம் ஒரு பிரெஞ்சு சலவைக்காரனிடம் வேலைப் பழகுபவராக சேருவாள். அவன் குடிகாரனானதால், மிகக் கொடுமையாக நடந்து கொள்வான்.பாட்டிக்கு தானும் ஒரு பெரிய குடிகாரியாவாள் எனத் தெரியுமென்பது இதைவிடக் கொடுமை. பல மாதங்ளுக்கு மருந்தை வாய் வழியே குடித்து, பற்கள் வழியாகத் துப்ப வேண்டும். பல மாதங்களுக்கு மிகக் களைப்பாக இருக்கும்.

ஆனால் பாட்டி காப்பாற்றப்படுவாள். மூக்கிள் தெளிக்கும் கை மருந்தை யாரோ கண்டுபிடிப்பார்கள். இதனால் அவளுக்கு ஆண்கள் செய்யும் தன் வேலை பிடித்துவிடும்.ஒவ்வொரு விதமான மரங்களையும் எவ்வளவு மறைந்திருந்தாலும் கண்டுபிடிக்கத் தொடங்கிவிடுவாள். எஸ்கிமோக்கள் பனிமலையின் வித்தியாசத்தை உணர்வதுபோல் ஒவ்வொரு விதமான காக்கி நிறத்தையும் கண்டுகொள்வாள். தன் வாழ்வை இதைப்போன்ற நுண்ணிய வித்தியாசங்களினால் செதுக்கியபடியே வாழ்வாள். பட்டுத் துணியில் படும் மூச்சுக் காற்றைப் போன்ற துள்ளியத்தில் மென்மையான முறையில் எல்லா மேற்பரப்பையும் மாற்றுவாள். அதற்குப் பிற்கும் அது கரடுமுரடென இருப்பதாய் அலுத்துக் கொள்வாள்.

முதல் முறை திருமணம் செய்யும்போது, அவள் கணவன் கான்சர் நோயில் இறப்பான் என யாரும் அவளிடம் சொல்ல மாட்டார்கள். திருமண நாளுக்கு அடுத்த நாள் காலையில் அவளருகே இறந்து கிடப்பான். ஒரு கெட்ட நகைச்சுவையைக் கேட்பது போல் இருந்தாலும், அதற்குப் பிறகு எதையுமே நம்ப முடியாமல் போகும். பல நாட்கள் அவள் வீட்டினுள்ளேயே தனியாக வசிக்க முடியாமல் போகும்.மழையில் சாலையில் போக வருபவர்கள் பக்கத்தில் இருப்பதற்காக தானாகவே உட்கார்ந்து கொள்வாள்.

அதற்குப் பிறகு தாத்தா அவளைத் மிகவும் காதலித்து திருமணம் செய்துகொள்வாள். எல்லாமே சிறிது மேன்பட்டாலும், பழைய வாழ்க்கைக்குத் திரும்ப முடியவில்லை.ஒரே போன்ற உடை, தலையலங்காரம் செய்து கொள்வார்கள். அவளின் முதலும் ஒரேகுழந்தையுமானது பெண்ணாகவும், அவளின் முதலும் ஒரே குழந்தை நானாகவும் இருக்கும்.

பாட்டியும் நானும் சந்திப்பதற்கும் இந்த கதையை நான் தொடங்குவதற்குமுன் இவ்வளவும் நடந்திருக்கும்.


ரா.கிரிதரன்
http://beyondwords.typepad.com

மூல ஆசிரியர் பற்றி :

’Night Geometry and Garscadden trains’ என்ற சிறுகதை தொகுப்பு ஏ.எல்.கென்னடிக்கு (A.L.Kenndey) முதல் சிறுகதைத் தொகுப்பாகும்.அதில் வந்த Genteel Potatoes என்ற கதையே இங்குள்ள தமிழாக்கம். Granta இதழால் சிறந்த எழுத்தாளர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பல சிறுகதைகள் மற்றும் புதினங்களை எழுதியுள்ளார்.மிக வித்தியாசமான நடையிலும், அவர் வரிகளில் வந்துவிழும் சொற்களும் வசீகரமாகவும், சில ஆழமான/வித்தியாசமான உருவகங்களை உருவாக்கும் தன்மையுடையது.

மேடை நகைச்சுவை நிகழ்ச்சிகளும் செய்யும் இவர் வசிப்பது ஸ்காத்லாந்தில். சிறந்த சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ளார்.

வலைத்தளம் – http://www.a-l-kennedy.co.uk

Series Navigation

ரா.கிரிதரன்

ரா.கிரிதரன்