வாணிமஹால்

This entry is part [part not set] of 37 in the series 20090625_Issue

க.ராஜம்ரஞ்சனி


1

என் மேசையில் என் கணினிக்கருகே இன்னொரு கணினி. அதை இயக்கிக் கொண்டிருந்தவள் எனக்கு முன் பின் அறிமுகமில்லா என் வயதையொத்த இன்னொரு இளம்பெண். திடுக்கிட்டுப் போனேன்.

‘நீ…. நீ யாரு..?’

திரும்பி பார்த்தவள் ஏதும் சொல்லாமல் நான் அங்கு நிற்பதையோ கேட்டதையோ பெரிது பண்ணாமல் கணினி திரையில் மீண்டும் பார்வையைப் பதிக்க ஆத்திரம் அதிகமானது எனக்கு.

‘உங்கிட்டதான் கேட்கறேன். யார் நீ?’

‘நான்தான் உங்கிட்ட கேட்கனும். நான் இந்த வீட்டு ஓர்னர்’ அவளுடைய பதில் என்னை அதிர வைத்தது.

‘வீட்டு ஓர்னரா…? அப்படினா நான் யாரு?’

‘எங்கிட்ட கேட்டா எனக்கெப்படி தெரியும்?’ கணினியை நோக்கிய அவளது முகத்தைத் திருப்பாமலே சொன்னாள்.

‘எவ்ளோ திமிர் இவளுக்கு’ என மனதிற்குள் எண்ணியவளாய்,

‘நாங்க இந்த வீட்ட வாங்கி ஒரு மாசமாச்சு. நேத்துதான் குடி வந்தேன். தெரியுமா?’ கோபமாக அவளைப் பார்த்துக் கத்தினேன்.

‘ஒரு வாரமா? நான் பொறந்ததுல இருந்து இங்கதான் இருக்கேன். 28 வருஷமா இந்த வீட்ல இருக்கேன். அது தெரியுமா உனக்கு?’

அவள் சொன்னது ஏதும் புரியாதவளாய் அந்த வீடே சரிந்து என் தலையில் விழுந்ததுபோல் இருந்தது.

‘யூ ஆர் டிஸ்தர்பிங் மீ! இது என்னோட ரூம், இது என்னோட பெட், இது என்னோட டேபிள், இது என்னோட அலமாரி. நீ இஷ்டம்போல யூஸ் பண்றே. ஐ ஹேட் இட்! எனக்கு கொஞ்சங்கூட பிடிக்கல’

‘ஸ்டோப் இட்! இது என்னோட வீடு’ ஆத்திரமும் அதிர்ச்சியும் ஒன்று சேர்ந்து கத்த சட்டென்று விழித்தேன். திறந்த விழிகள் மேலே சுழன்று கொண்டிருந்த காற்றாடியைப் பார்த்தன. நேற்றிரவு தொடங்கி பெய்து கொண்டிருந்த மழை இன்னும் ஓயாமல் பெய்து கொண்டிருந்தது. என் உடல் முழுவதும் வியர்வையால் பிசுபிசுத்தது.

2

‘ஹாய், ஐ எம் உமா. அந்த கீரின் கலர் கேட் போட்டிருக்க, அதான் என் வீடு’

‘ஆமாவா? ஐ எம் பாரதி, உள்ள வாங்க’

‘இல்ல பரவால. நான் மார்க்கெட் போகனும். உங்ககிட்ட ஹாய் சொல்லிட்டு போலாம்னு வந்தேன். நீங்க மட்டும்தான் இருக்கிங்களா?’

‘ஆமா, பேமிலி பினாங்குல இருக்காங்க. எனக்கு இங்க வேல கிடைச்சிடுச்சி. அதான்’

‘தைரியமா தனியா இருக்கீங்க?’

‘இன்னும் ஒரு வாரத்துல அப்பாவும் அம்மாவும் இங்க வந்துருவாங்க. நான் வேலையில சீக்கிரமா ஜொயின் பண்ண வேண்டியதா போச்சி. அதான் நான் மொதல்ல வந்துட்டேன். இல்லனா, வீட்ல விட்டிருக்கமாட்டாங்க. அப்பாதான் இந்த வீட்ட வாங்கனாரு. இதுக்கு முன்ன இந்த வீட்ட வாங்கி இருந்த சீனன் அமெரிக்கா போய் செட்டல் ஆவ போறதால இந்த வீட்ட வித்துட்டான். அவன் அப்பாவோட கூட்டாளி. அவன் வெளியூரு போனதால சாமான் எதயும் எடுத்து போகல, எங்களையே யூஸ் பண்ணிக்க சொல்லிட்டான்..’

‘இந்த சாமானுங்க எல்லாம் இந்த வீட்லயே இருந்தது. சீனன் இந்த வீட்ட வாங்கி குடி வரவே இல்ல. மாசத்துக்கு ஒரு தடவ வீட்ட சுத்தம் பண்ண ஆளு வரும், அவ்ளொதான். மொதல்ல இந்த வீட்டுல இருந்தவங்களுக்கு ஒரே ஒரு மக மட்டுந்தானாம். நாலு வருஷத்துக்கு முந்தி ஆக்ஸிடெண்ல மூனு பேருமே இறந்துட்டாங்களாம். அவங்க சொந்தகாரவங்க இந்த வீட்ட வித்துட்டாங்க. மத்தவங்க சொல்லி கேள்வி பட்டுருக்கேன். எனக்கு அவங்கள தெரியாது. நாங்க இங்க வந்து இப்பதான் ரெண்டு வருஷமாச்சி. கேட் முன்னுக்கு அட்ரெஸ் போர்ட்ல வாணிமஹால்னு போட்டுருக்குல்ல, வாணி அவங்க ஒரெ மகளோட பேரு. நீங்க தனியா இருக்கீங்க, ஏதாச்சும் உதவி வேணும்னா கண்டிப்பா கேளுங்க. எனக்கு நேரமாவுது, நான் கெளம்புறேன்.’

3

‘என்னம்மா புதுசா குடி வந்துருக்கயா?’

‘ஆமா பாட்டி. நீங்க இந்த பக்கதான் இருக்கீங்களா?

‘ஆமா, இந்த வரிசையில நாலாவது வீடு. நாங்க பத்து வருஷமா இங்கதான் இருக்கோம். இதுக்கு முன்னாடி மொதல்ல இந்த வீட்டுல இருந்தாங்களே, ஒரே மகளோட…. அவங்க உனக்கு சொந்தமா?’

‘இல்ல பாட்டி, எனக்கு அவங்க யாருன்னுனே தெரியாது. உங்களுக்கு அவங்கள தெரியுமா பாட்டி?’

‘தெரியும்மா. முன்ன பொழுது போலன்னா அப்படியே காலார நடந்து இவங்க வீட்டுக்கு வந்துடுவேன். ரெண்டு பேருமே ரொம்ப நல்லவங்க. அவங்க மக செல்லமா வளந்தா. எட்டு வருஷம் கொழந்த இல்லாம குல தெய்வத்துக்கு வேண்டி பொறந்த புள்ளயாம். அடிக்கடி சொல்வாங்க. இந்த வீட்டுக்கு வந்தப்புறம்தான் வாணி பொறந்தா’

‘ஏன் பாட்டி அப்படி உத்து உத்து என்னையே பார்க்கறீங்க?’

‘அவங்க மக வாணி ஜாடை உனக்கு அப்படியெ இருக்குமா. நீ பேசறது, உன் கண்ணு எல்லாமே வாணி மாதிரியே இருக்கு. ஆமா, உன்கூட பொறந்தவங்க எத்தன பேருமா?’

‘எனக்கு கூட பொறந்தவங்க யாருமில்ல பாட்டி. எங்க அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பிள்ளை’

4

‘என்னை மன்னிச்சிடு., தெரியாம உன்னோட ரூம்ல தங்கி உன் சாமானல்லாம் யூஸ் பண்ணிட்டேன். சொர்ரி, ஐ வோண்ட் டிஸ்தர்ப் யூ. இனிமே என்னால உனக்கு எந்த தொந்தரவும் வராது. நான் மத்த ரூம்ல படுத்துக்கறேன். மத்த யாரையும் உன்னை தொந்தரவு பண்ண வுட மாட்டேன்’

அறைக்கதவை நன்றாக பூட்டினேன். அந்த அறைக்கதவிற்கான ஒற்றை சாவியைச் சாவிக் கொத்திலிருந்து தனியே உருவி காட்டு பக்கமாக நான் வீசி எறிந்தபோது நான் வீசிய வேகத்தைக் காட்டிலும் வேகமாய் நகர்ந்ததை உணர முடிந்த எனக்கு ஏனோ அது பூமியைத் தொடுவதை உணர இயலவில்லை.

க.ராஜம்ரஞ்சனி

மலேசியா

ktrajamranjini@yahoo.co.in

Series Navigation

க.ராஜம்ரஞ்சனி, மலேசியா

க.ராஜம்ரஞ்சனி, மலேசியா