மலை உச்சியில் கரையும் மரவீடுகள் ( குறுநாவல் பாகம் 1 )

This entry is part [part not set] of 37 in the series 20090625_Issue

கே.பாலமுருகன்



மூன்று வருடங்களாக அடைத்துக் கிடந்த அந்தப் பெரிய கதவைத் திறந்து 6 மாதங்கள் இருக்கலாம். அருகிலுள்ள பூங்காவையும் மறுசீரமைப்பு செய்து, அழகுப்படுத்தியிருந்தார்கள். உள்ளே நுழையும் ஜீவன்களின் மனம் மேலும் குளிர வேண்டும் என்பதற்கான வரவேற்பு சாமர்த்தியங்கள். வெளியில் நிகழ்த்த முடியாத அதிசியங்களை மலை உச்சியில் அவர்கள் நிகழ்த்திக் கொள்வதற்கு என்றுமே அதன் நிர்வாகம் முதுகுக் கொடுத்து தூக்கி உயரத்தில் நிறுத்தி போபியாக்களைத் தணிக்கிறது.
3 வருடங்களுக்கு முன்பிருந்த நடந்து முடிந்த எந்தவொரு அதிசியங்களும் இனி நடக்காது என்பதற்கு உறுதியளிக்க இந்த நிர்வாகம் பல நாடகங்களை நடத்தி வெற்றிப் பெற்று இன்று மீண்டும் கதவு தாரளாமாக வாய் பிளந்து உர்ரென்று காத்திருக்கிறது. இரவு பகல் பாராமல் அவர்களின் மரவீடுகளில் அதிசியங்கள் மீண்டும் நிரம்ப தொடங்கும் கணங்கள் அவர்களே அறியாமல் பள்ளத்தாக்குகளிலிருந்து கிளம்பி மேலேறிக் கொண்டிருக்கின்றன.
கதவு மீண்டும் திறக்கப்பட்ட நாள் : ஜூன் 2007

முதல் அத்தியாயம்

1
15 டிசம்பர் 2007

மோட்டாரிலேயே கிளம்புவதாகத் தீர்மானமாகியது. முதலில் லீலா உடன்பாடில்லாத முனகலை வெளிப்படுத்தினாள். தொலைப்பேசியில்தான் அந்த முனகலைக் கேட்டேன். பல நம்பிக்கையூட்டக்கூடிய சமரசங்களைப் பயன்படுத்தி அவளைச் சமாதானப்படுத்தவே சில மணி நேரம் தேவைப்பட்டது. வீட்டைவிட்டு இவ்வளவு தூரம் அதுவும் இவ்வளவு உயரம் போவது இதுதான் முதல்முறை. அதனால்தான் அவளுக்கு கொஞ்சம் பயம். யாராக இருந்தாலும் அப்படியொரு தடுமாற்றம் வருவது இயல்புதானே.
“ஹலோ! ஹலோ! யே! என்ன இப்படிப் பயப்படுறே? இதுல என்னா இருக்கு? என்னாலா நீ”
“தெரில மணி! மனசு சரி இல்லெ. அங்க போக வேணாமே”
“ஹலோ! எல்லாம் தயார் பண்ணிட்டேன்! நம்ப போறதுதான் பாக்கி. லீவு சொல்லிட்டேன். சாதரணமா எங்க ஆபிஸ்லே 3 நாள் லீவுலாம் எடுக்க முடியாது, எப்படியோ போராடி லீவு எழுதிக் கொடுத்துட்டேன். இப்பெ என்னா வெளையாடுறியா?”
மறுமுனையில் லீலாவின் மௌனம் கேட்டது. மிகவும் பதற்றமான சுவாசத்தின் அதிர்வை உணர முடிந்தது.
“உனக்கு உயரம்னா பயமா? என்னா லீலா? அது சுற்றுப்பயணிகள் இடம். . என்னா நெனைச்சிக்கிட்டு இருக்கறெ? உன்ன என்னா காட்டுக்கா கூட்டிட்டுப் போறேன்? ஹலோ!”
மீண்டும் அந்த மௌனத்தைக் கேட்பதற்கே சங்கடமாக இருந்தது. அவளை மேலும் என்ன சொல்லி சமாதனம் செய்வது என்பதைக் கைவிட்டிருந்தேன். சிறிது நேரம் நானும் அவளுடன் மௌனித்தேன்.
“அப்படி இல்ல மணி! அம்மா அப்பாவுக்குத் தெரியாம இப்படிப் போரது. . .ஏதாச்சம் ஆயிட்டா? மனசு கேக்க மாட்டுது”
“ நீ என்ன பத்தி என்னா நினைக்கறெ? நான் கெட்டவன் இல்ல லீலா! உனக்கே நல்லா தெரியும்! பிளிஸ். உன்கூட அந்த மலை உச்சிலே அந்தக் குளிர்லே, அந்தப் பனி மூட்டத்துலே மூனு நாள் வாழ்றது எவ்ள சந்தோஷம்னு தெரியுமா?”
“சரி! உனக்காகத்தான் வரேன். நீதான் என்ன பத்திரமா பாத்துக்கனும். . உன் மேல இருக்கற நம்பிக்கையெ இழக்க வச்சிறாதே”
“நீ கவல படாதெ. . நாளைக்கு எத்தன மணிக்கு வெளிலெ வர முடியும்?”
“காலைலெ 8? அப்பத்தான் முடியும்.”
“ஓ கண்டிப்பா! நான் வந்து ஏத்திக்கிட்டு, அப்படியே மலைக்குக் கெளம்பிறலாம். துணிலாம் கொஞ்சம் கூடவே எடுத்துக்கோ”
“ஓகே! ஒன்னும் ஆகாதே?”
“ஏய்ய். . ஒன்னும் இல்லெ. சந்தோஷமா இரு. . நல்லா படுத்துத் தூங்கு”
அவள் சம்மதத்தைத் தெரிவிக்கும் பாணியில் நீண்ட ம்ம்ம்ம்ம் கொட்டினாள். அதில் கொஞ்சம் உடன்படாத ஓசையின் அதிர்வும் இருந்தது. அவளுடன் அங்கு இருக்கப் போகும் பேரானந்தத்தின் கணங்களை மன நிழலாக எழுப்பியவாறே மோட்டாரைக் கழுவிச் சுத்தப்படுத்தினேன். துணிப் பையில் 3 நாட்களுக்குத் தேவையான ஆடைகளையும் துண்டையும் எடுத்து வைத்துக் கொண்டேன். இருப்புக் கொள்ளவில்லை. அந்த மலைப் பாதையின் நேர்த்தியின்மை தரக்கூடிய போதையை கண் முன் கொண்டு வந்து நிறுத்தினேன். உணர்வுகள் தள்ளாடியது. அந்த மலை உச்சியைத் தொடக்கூடிய பாதையின் ஒவ்வொரு வலைவும் 90டிகிரியில் மேலோங்கி பனி மூட்டங்களில் காணாமல் போகும் கணம், இந்த உலகத்தை மறக்கடிக்கும். அந்த அடர் குளிர் ஏற்படுத்தக்கூடிய நடுக்கம், அதிலிருந்து கிளம்பும் மயக்கம் என்று அவள் என் முதுகில் ஒட்டிக் கொள்வாள். என்னைக் கட்டியணைத்துக் கொண்டு கண்களை இறுக மூடிக் கொள்வாள். மோட்டார் சக்கரங்கள் பலமின்றி தளர்ந்து தொலையும்போது 2500 மீட்டர் உயரத்தில் நாங்கள் வந்து சேர்ந்திருப்போம்.
வீட்டின் ஜன்னலிலிருந்து இறங்கி வந்த மெல்லிய குளிர் காற்று அந்த மலை உச்சியைக் கொண்டு வந்து அறையில் போட்டது போல இருந்தது. நினைவின் அணுமான சக்திக்கு அப்படியொரு நிகழ்க்காலத்தன்மை. இருத்தலைக் கடந்து இருக்கப் போகும் கணங்களுக்கான வெளியைத் தொட முயற்சிக்கும் ஒரு சாயல். அந்தப் பரவெளியில் நாம் உருவாக்கும் அடுத்தக்கட்ட இருத்தலுக்கான பொய்யான தோற்றங்களெல்லாம் மெய்யுணர்வு பெறும். அப்படித்தான் மலை உச்சியில் நானும் அவளும், எனது இந்த அறையில் நுழைந்து கொண்டிருந்தோம்.

2
அவள் கட்டிலில் வந்து அமரும் பாணியே மிகவும் இரசனைக்குரியதாக இருந்தது. கைகள் இரண்டும் மார்பை அணைத்தப்படி முதுகில் கோர்த்திருந்தன. அவளுடைய கண்கள் மின்னின. புருவத்தை மேலுயர்த்தி என்னை விசித்திரமாகப் பார்த்தாள். அவளை அப்படியே கட்டிக் கொண்டு கட்டிலில் புரள வேண்டும் போல இருந்தது. நினைத்த இடங்களிலெல்லாம் முத்தங்கள் பதிக்க வேண்டும், அதை அவள் தடுப்பதாகப் பொய் போராட்டம் செய்ய வேண்டும். இந்தக் குளிரில் நடுக்கம் மறைந்து உடலில் உஷ்ணம் ஏறி தணிந்து மீண்டும் குளிர் வந்து சேர வேண்டும்.
அறையின் ஜன்னலைப் பார்த்தேன். கண்ணாடிகளை பனி வந்து தட்டிக் கொண்டிருந்தது. எங்களுக்கு மட்டுமே கேட்கும்படியான ஓசை.
“கேட்டியா?”
“என்னா?”
“வெளிலெ பனி சத்தம் போடுதே?”
“இலேசா கேக்குது. .இந்தச் சத்தம். . இதுவரைக்கும் கேட்டதே இல்ல. .வெளில போய் நடக்கலாமா?”
“ஒனக்குப் பயம் இல்ல? ராத்திரி ஆச்சு?”
அவள் அன்பாக முறைத்துப் பார்த்தாள். கைகளை வெளியே எடுத்து என் தோளில் போட்டாள்.
“என்னாடா. இதுக்குலாம் பயப்பட முடியுமா? எனக்கு நைட் னா ரொம்ப பிடிக்கும். தனியாதான் வெளிலலாம் போய் சுத்துவேன். .இங்க உள்ள இந்த ராத்திரியோட சத்தம் மனசுக்குள்ள என்னமோ பண்ணுதுடா. . முடிலே. . போகனும். . வாடா”
மீண்டும் ஜன்னலை எட்டிப் பார்த்தேன். வெளியில் பனி கடந்து செல்லும் ஓசை சன்னமாகக் கேட்டது. யாரோ குரல் இழந்த மனிதனின் கடைசி ஓசையைப் போன்ற ஒர் அமைதியின் முனகலைப் போல இரவு ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது. மனம் இருப்புக் கொள்ளவில்லைதான். கால்கள் நகர துணிவில்லாதது போல கட்டிலின் கால்களுக்கிடையில் போட்டிருந்தேன். அவள் எங்களுக்கிடையே நிலவிய இடைவெளியைக் கொன்றுவிட்டு மேலும் நெருங்கி வந்தாள். அவளுடைய கால்களை என் தொடைகளின் மீது போட்டு என்னைப் பார்த்தத் திசையில் அமர்ந்தாள். இப்பொழுது அவளுடைய முகம் எனக்கு நேர்த்திசையில் நெருக்கமாக இருந்தது. அவளுடைய மூச்சு காற்றில்கூட பனி.
“வா போலாம். . உனக்கு இந்த எடத்த காட்டனும்னு எனக்குள்ள ஒரு ஆசைடா. . அதுவும் இந்த இராத்திரிலே இப்படியொரு அமைதிலே. . ஒன்கூட நடக்கனும். . வெளில யாரும் இல்லடா. . இந்தத் தனிமை உலகத்துலே வேற எங்கயும் கெடைக்காது இந்த மாதிரி மலை உச்சியைத் தவிர. .வா ”
இருவரும் எழுந்து கதவை நெருங்கினோம். எனக்கு மனமில்லைதான். இதுதான் முதல்தடவை. முதலில் ஜன்னலின் வழியாக வெளியே எட்டிப் பார்த்தேன். ஆள் நடமாட்டமில்லாத குறுகிய சாலையும் சாலை நெடுக உயர்ந்து வளர்ந்து சாலைக்குக் குடை பிடித்து நிற்கும் செடிகளையும் பார்க்கும்போது நடுக்கமாக இருந்தது. தூரத்தில் நெளிந்து கொண்டிருந்த காற்று முகத்திற்கு நேராக வந்து வீசி இடையிடையே நிற்கும் மரங்களின் கிளைகளை அசைத்துவிட்டு பறந்தது. மரங்கள் சலசலப்பினூடே அவ்வப்போது சத்தமிட்டுக் கொண்டிருந்தன.
இந்த மரவீட்டைச் சுற்றியிருக்கும் எந்த வீட்டிலுமே சின்ன விளக்குகூட எரியவில்லை. பெரும்பாலான வீடுகள் இருளில் அமிழ்ந்து பிம்பம் தொலைந்திருந்தன. எல்லாமும் மரத்தால் செய்யப்பட்ட வீடுகள்தான். சுற்றுப் பயணிகள் தங்குவதற்கான குளிர்க்கால வீடு. மலை உச்சியில் எப்பொழுதும் யாருக்கும் அடங்காத குளிர் ஒன்று சுற்றி அலைந்து கொண்டிருக்கும் போல. இதுதான் மலை உச்சிகளின் பேய்கள். இதைத்தவிர என்னை நடுங்கச் செய்யும் வெறொன்றை நான் இன்னமும் அடையாளம் காணவில்லை.
“போகனுமா? இப்படியே நிண்டுகிட்டு பாக்கலாமே”
“என்னாடா ஆம்பளே? என்னா பயம் போல?”
“அங்க பாரு! எவ்ள இருட்டா இருக்கு! எல்லாம் தூங்கிட்டாங்க போல. . பிளிஸ் மா, இங்கயே இருக்கலாமே?”
“யாருக்கும் தெரியாமே வந்துட்டு. . என்னா வெளையாட்டு உனக்கு? எவ்ள தைரியம்? என்ன யேன் உனக்குப் பிடிச்சிச்சி? பாத்து பழகியே கொஞ்ச நாள்தான் இருக்கும். . எப்படி அதுக்குள்ள என்ன இவ்ள நெருக்கமா ஆக்கிட்டெ?”
அவள் என் கேள்விகளைக் கேட்டு மௌனமாக இருந்தாள். மெல்லிய சிரிப்பு தெரிந்தது. இருவரும் வெளியே பார்த்துக் கொண்டிருந்தோம். கதவின் இடைவெளி காற்று பட்டு இலேசாக விரிந்தது.
“எனக்கு ரொம்ப தைரியம். . பொம்பளெ பிள்ளைனா என்னா பயந்துகிட்டுத்தான் இருக்கனுமா? நான் அப்படிலாம் இல்ல. . . எது தோணுதோ அதை செய்யுவேன். . .யாரைப் பிடிச்சிருந்தாலும் வெக்கம் இல்லாம சொல்லுவேன். . அவுங்ககூட வெளிய போவேன். . .எது வேணும்னாலும் செய்யுவேன்”
அவளுடைய தைரியமும் வெளிப்படையான போக்கும் பிடித்ததற்கு ஒருவேளை அன்றைய இரவும் குளிரும் காரணமாக இருந்திருக்கலாம். அவள் இடுப்பை வளைத்துப் பிடித்தேன். திடீரென்று ஒரு வேகம். அவளை அழைத்துக் கொண்டு கதவை அப்படியே விட்டுவிட்டு வெளியே வந்தேன். சாலை மௌனித்து மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது. இருவரும் இருளுக்குள் நடுங்கிக் கொண்டே நடந்தோம்.

3
அசதியில் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு கட்டிலில் படுத்திருந்தேன். உடல் அரைநிர்வாணமாகக் கிடந்தது. கைகள் இரண்டையும் தலைமாட்டில் வைத்துக் கொண்டு உடலை நெளித்தேன். குளிருக்கு ஒவ்வொரு அசைவும் ஓர் இதத்தைக் கொண்டு வந்து சேர்த்தது. உடல் கொஞ்சம் உஷ்ணமாக இருந்ததால் அரை நிர்வானத்திலும் குளிரை அவ்வளவாக உணரமுடியவில்லை.
குளியலறையில் அவள் அவளை மறந்து பாடிக் கொண்டிருந்த பாடலின் வரிகள் கதவுக்கடியிலிருந்து புகுந்து என் மீது வந்து கவிழ்ந்து கொண்டிருந்தன. மல்லாந்துவாறே அந்தப் பாடலை இரசித்துக் கொண்டிருந்தேன். அது ஏதோ 80களின் காதல் பாடலைப் போல இருந்தது. இந்த மாதிரி உச்சி மலைகளின் குளிரைப் பற்றி மறந்தும் மறக்காமலும் மயக்க நிலையில் பாடக்கூடிய பாடலாக இருக்கலாம். வழி நெடுக பார்த்தப் பனி சுமந்த காட்டுச் செடிகளின் அடர்த்தியும் மெல்லிய காற்றுக்கு உடல் அசைத்தத் தோரணையும், ஒவ்வொரு மீட்டர் உயரத்திற்கும் தனது அடர்த்தியைப் பெருக்கிக் கொண்டே போகும் வளர்ச்சியையும் மலை உச்சிகளைத் தவிர வேறெங்கிலும் காண முடியாததாகத்தான் இருக்க முடியும்.
அவள் பாடிக் கொண்டே மிகுந்த பரவசத்துடன் குளித்துக் கொண்டிருந்தாள். அவள் தண்ணீரை அள்ளி உடலில் சரியவிடும் சத்தமும், கால்களை மேலே தூக்கி பிறகு கீழே இறக்கும் போது ஏற்படும் சலசலப்பும் தீராத மோகத்தைக் கொடுத்தது. சிறிது நேரத்தில் கதவைத் தள்ளிக் கொண்டு நீர் வடிய வெளியே வந்தாள். துண்டை அழகாகக் கட்டிக் கொண்டு குளிரின் நடுக்கத்தில் அவள் வந்து நிற்கும்போது பனி கூட்டமே நனைந்து தன்னை இழந்த உருவமேனியாக கலைந்து கிடப்பது போல தென்பட்டது.
உடல் அசதியில் அதை அவ்வளவாகப் பொருட்படுத்திக் கொள்ளவில்லை. வெறுமனே படுத்திருந்தேன். அவள் உடுத்திக் கொண்டு என் பக்கத்தில் வந்து அமர்ந்தாள். என் கண்களை உற்று நோக்கினாள்.

“சந்தோஷமா இருந்தியா? இது போதுமா?”
நான் சிரித்து மட்டும் வைத்தேன்.
“சொல்லுடா! இனிமேல நான் உனக்கு இல்லனு ஆச்சி. ஏதோ ஒன்ன 2 வருஷம் காதலிச்சதுக்கு என்னால கொடுக்க முடிந்த சந்தோஷம் இதுதான். இந்த மலை உச்சிக்கு நீ கூப்டோன என்னால வர முடிந்தது. இதுதான் என்னால செய்ய முடியும்டா!”
“ உன்கூட வாழ முடிலைனு ரொம்ப சங்கடமா இருக்கு”
“ நம்ப கைலெ எதுமே இல்லையே! எல்லாத்தையும் நம்பலா முடிவு பண்றம்? ஓகே கெளம்பலாமா? யாருக்கும் தெரியாது வேற. . எங்க இருக்கனும் சொல்லலே.. .வாடா போலாம்”
“கொஞ்ச நேரம் இருக்கலாமே! இதுக்கப்பறம் நினைச்சாலும் இப்படி ஒரு சுகம் இப்படி ஒரு மலை உச்சி கிடைக்காது. . இந்த ராத்திரி நேரத்துலே போகனும்னு என்னா அவசரம்?”
“நான் வேலை முடிய 10 மணி ஆகும்னு சொல்லிட்டேண்டா! எப்படிப் பார்ர்த்தாலும் 11மணிக்கு வீட்டுலே இருந்தாலும் ஓகேதான். . பிளிஸ்டா. . இங்கேந்து வேகமா போனாலும் அரை மணி நேரத்துலே கீழ இறங்கிறலாம். . வாடா”
நான் மௌனமாக இருந்தேன். அவளை விடுவதாக இல்லை. அவளுடைய கைகளை எடுத்து என் மார்போடு வைத்துக் கொண்டேன்.
“வீட்டுக்குப் போன் பண்ணி இன்னும் கொஞ்சம் லேட் ஆகும்னு சொல்லுடா. . இன்னும் ஒரு மணி நேரம் என்கூட இரு. . ஒன்னோட காதலன் ஒன்னும் கோச்சிக்க மாட்டான் இதனால. .”
“அவரு இந்நேரத்துக்குப் பத்து தடவைக்கு மேல வீட்டுக்குப் போன் பண்ணி என்னைக் கேட்டுருப்பாரு. . நல்ல வேல ஆபிஸ் நம்பரே நான் கொடுக்கலே. . அதனாலே அவரு அங்க அடிக்க மாட்டாரு”
“புது காதலன்தானே. . கொஞ்ச நாளு அப்படித்தான் இருப்பான்”
“ஹலோ! என்னைப் பத்தி என்னா நெனைச்சிக்கிட்டு இருக்கெ? இவருதான் என் வருங்கால கணவர். . “
“இங்க பாருடா. . . . ”
“போதும் லைட் தட்டி விடுங்க. யேன் இவ்ள இருட்டு?”
“அதான் பாத்ரூம் லைட் எரியுதே”
“அது போதாது ரொம்ப இருட்டா இருக்கு. . யாருமே இல்லாத மாதிரி. . தொறங்க”
மெதுவாக எழுந்து முன்கதவிற்கு அருகிலிருக்கும் விளக்கைத் தட்டுவதற்காகத் துண்டைப் பிடித்துக் கொண்டே நடந்தேன். கதவை நெருங்கியதும் ஜன்னலின் இடைவெளியில் யாரோ முக்காடு போட்டுக் கொண்டு வெளியில் நடந்து வருவது தெரிந்தது. காற்றின் ஓசையைத் தவிர பெரும் நிசப்தத்தின் ஊடாக அந்த உருவம் என் மரவீட்டைத்தான் நெருங்கிக் கொண்டிருந்தது. மரங்களின் நிழல்பட்டு அந்த உருவத்தின் பிம்பம் தடுமாறியது. பெரிய மரத்தின் உச்சியில் எரிந்து கொண்டிருந்த ஒரே ஒரு விளக்கின் ஒளியை மட்டும் கொண்டு அது யார் என்று அனுமானிக்க முடியவில்லை.
ஜன்னலை மூடிவிட்டு விளக்கைத் தட்டினேன். அவளிடம் அமைதியாக இருக்கும்படி செய்கைக் காட்டினேன். காலடிச் சப்தம் நெருங்கிக் கொண்டே வந்தது.
-தொடரும்-
ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்