அறிவியல்கதை: வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா

This entry is part [part not set] of 36 in the series 20090618_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


நீர் இறைக்கும் எந்திரம்போல சாதுவாய் கேட்ட எஞ்சின் உறுமல் சத்தம் கண்ணம்மாவுக்கு உரியது. போர்டிகோவிற்குள் நுழைந்ததும் சட்டென்று அது அடங்கிபோனது, தொடர்ந்து அவன் கேட்டு பழகிய(?) செருப்படிகள். “பரத்! ரெண்டுலே ஒண்ணு தெரிஞ்சாகணும். நானா அதுவான்னு தீர்மானிச்சுக்க. உனக்கு இருபத்து நாலு மணி நேரம் டயம் கொடுக்கிறேன்”, என்று ஒபேரா பாடகியின் குரலில், பால்கணியில் நின்றிருந்த பரத்திடம் இரைந்தவண்ணம் சரிதா மேலே வந்து கொண்டிருந்தாள். அவள் கத்தி ஓயட்டுமென காத்திருந்ததுபோல கண்ணம்மா ஒருமுறை உறுமி அடங்கியது, அதற்கும் இவள் மேல் கோபம் நிறைய இருக்கிறது. சரிதா காலிலிருந்த செருப்புகள் இரண்டையும் ஒவ்வொன்றாக உதறிக்கொண்டிருக்க, காம்பவுண்டுக்குள் நின்றிருந்த கண்ணம்மாவின் திசைக்காய் ஓட்டுக் கேட்கும் அரசியல்வாதிபோல தலைக்குமேலே இரு கைகளையும் உயர்த்தி, பரத் கும்பிடு போட்டான். தவளைவாய்போல் திறந்து, “சரிதாவின் குணம் உனக்கு தெரியுமில்லையா, ப்ளீஸ் கொஞ்சம் பொறுத்துக்கோம்மா”, என்று சத்தமின்றி அவன் பேசியது கண்ணம்மாவிற்குப் புரிந்திருக்கும். சரிதாவுக்கும் அதற்கும் ஏழாம் பொறுத்தம். ஒருவர் மற்றவரிடம் பொறாமை கெண்டிருதனர் என்பது வெளிப்படை. கண்ணம்மா வீட்டுக்கு வந்த இரண்டாம் நாளே பிரச்சினை ஆரம்பித்ததாக ஞாபகம். அவ்வப்போது இருவருமே தனியாக இருக்கும்போது அவனிடம் முனகியிருக்கிறார்கள், ஒருவர் மாற்றியொருவர் குறைகளை சொல்லியிருக்கிறார்கள், ஆனால் இம்முறை சரிதாவிடம் கோபம் கூடுதலாகத் தெரிந்தது. அவள் ஹாலில் நுழைந்தபோது, கணினி கட்டுபாட்டின் கீழிருந்த வீட்டுச் சுவர்கள், குண்டூர் மிளகாய் நிறத்துக்கு சிவந்து, சுவர்த்திரையில் தெரிந்த அளவுமானியில் கோபத்தின் பாகை ‘எட்டு’ என்று அறிவித்தது, கூடவே மெல்லிய குரலில் கவனம் கவனம்.. என்ற எச்சரிக்கை வேறு. பரத்திற்கு சரிதாவின்மீது வேறுவிதமான கோபங்கள் இருந்தன. கிழமை முழுக்க, அரசாங்கத்தின் உணவுப் பங்கீட்டுதுறை விநியோகிக்கிற மாத்திரைகளை விழுங்கி அலுத்துப் போயிருந்தான். ஞாயிற்றுக் கிழமையாவது சரிதா இல்லாத நேரமாகப்பார்த்து சமையலறைக்குள் நுழைந்து பிடித்ததைச் செய்யலாமென்று நினைத்தால் அது வள் வள்ளென்றுகுரைக்கிறது. முட்டை, சாசேஜ், பேக்கன் என்று ஆசைஆசையாய் சமையற்பணி மேசையில்வைத்து, ‘காலை உணவு’, ‘பரத்’ என்று குரல் கொடுத்தான். அவனது குரலைப் புரிந்துகொண்ட கணினியாக்கம் செய்யபட்டிருந்த மேசை “பரத் உனக்கு ஒரு மாதத்திற்கு பேக்கனும் சாசேஜும் தடை செய்யப்பட்டிருக்கிறது” என்று எதிர்க் குரல் கொடுக்கிறது. கணினியில் அவன் உருவாக்கியிருந்த செயல் திட்டங்களை முற்றாக அழித்துவிட்டு, சரிதா புதிதாக எதையோ எழுதிச் சேர்த்திருக்கவேண்டும், ஆக கண்ணம்மா சரிதாவை குறைசொல்வதிலும் நியாயமிருக்கிறது, இப்போதெல்லாம் சரிதா இவனுக்கெதிராகத்தான் செயல்படுகிறாள். .

கோபத்தைக் கொஞ்சம் மறந்தவனாய், சரிதாவைத் தேடினான். வரவேற்பறையில் நின்றபடி ஒளியூட்டப்பட்ட சுவரில் செய்திகளை வாசித்துக்கொண்டிருந்தாள். அப்போதுதான் அவள் சேலையில் இருப்பதைக் கவனித்தான். அவள் உடல்வாகுக்கு சேலை அழகாகத்தான் இருந்தது.

– எங்கே வாங்கின இதை?

– அமெரிக்க தோழி ஒருத்திக் கொண்டுவந்திருந்தாள்.

– இருபது முப்பது வருடத்துக்கு முன்ன இந்தியாவில் இருந்திருக்கு, சினிமாவிலே கற்பழிக்கிற காட்சிக்குண்ணு அதை வச்சிருந்தாங்களாம். இப்பத்தான் அதற்கான காரணம் புரியுது, என்றபடி மெல்ல கைகளால் இடுப்பைச் சுற்றிவளைத்தேன்.

– பரத்! நாம படுக்கை அறையில் இல்லை. கொஞ்சம் கையை வச்சுகிட்டு சும்மா இருங்க. சித்தெ முன்னே என்ன சொன்னேன், காதிலே வாங்கனீங்களா இல்லையா?

– என்ன, மறுபடியும் கண்ணம்மா பிரச்சினையா, அதை ஏதோ சக்களத்தி மாதிரி பார்க்கிறது ஏனென்று புரியலை. அதனுடைய இடமே வேற. எதற்காக அநாவசியமா மனசை சங்கடபடுத்திக்கணும். இங்க பாரு அரசாங்கம் மாதத்திலே பத்து நாளைதான் அதற்காக ஒதுக்கியிருக்கு, இந்த மாதிரி கோபிச்சுக்கிட்டு என்னை பட்டினி போட்டா, நான் எங்கே போவேன். உனக்குத் தெரியுமில்லை, வயிற்றுப்பசியை வேண்டுமானா தாங்கிடுவேன். இப்பவே அவரசரத்துக்கு நொறுக்குத் தீனியா உன் உதடுகளை எடுத்துகலாமோண்ணு தோணுது.

– இப்படி பேசித்தான் என்னை வளைச்சிடறே பரத், ரொம்ப கோபத்தோட வரேன். கடைசியிலே நீ ஜெயிச்சுடறே. சந்தோஷமா இருக்கு ஆனா கண்ணம்மா ஜெயிச்சுடப்போகுதேங்கிற பயம் அடிமனசுலே இருக்கு. அதைத் தலைமுழுகச் சொல்றேன். சாத்தியமாண்ணு சொல்லுங்க. காலையிலே பனகல் பார்க் பக்கம் தமிழ் வகுப்புக்குப் போகணும்னு சொல்றேன் அது என்னடான்னா, யாரையோ செங்கல்பட்டுலே பார்க்கணுமாம் அங்கே போயுட்டு நிற்குது.

– அது கிட்டே பேசறேன்.

– இல்லை பேச்சே வேண்டாங்கிறேன். பேச்சுல அதுதான் ஜெயிக்குது. முதலில் அந்த சனியனை எங்கேயாவது தொலைச்சுட்டு வாங்க.

– தமிழ் கற்றுகொள்கிறேன் என்று சொல்லிட்டு, ‘சனியனைத்’தான் கற்றுவந்திருக்கே.

– பரத் பேச்சை மாத்தாத, நீ இல்லாத சமயத்திலே அது என்னை எப்படி நடத்ததுண்ணு உனக்கு தெரியுமா? உனக்குத் தெரியாது. அது வச்சதுதான் சட்டம். யார் அதற்கு செயல்திட்டம் எழுதினவங்கண்ணு தெரியலை, பார்க்கபோனா அதையெல்லாம் தாண்டி சுயமா தீர்மானிச்சு அதன்படி நடக்கிறாப்போல தெரியுது, நான் ஏதாச்சும் சொன்னா அதை காதுலே வாங்கிக்கொள்கிற வழக்கமே அதற்கு இல்லை. வேண்டுமென்றே ஏசியைக் கூட்டிவச்சு என்னை வதைக்குது, பீத்தோவான் சிம்பொனி அதற்குப் பிடிக்குங்கிறதாலே என்னையும் கேளுங்குது. ராத்திரி பரத் என்னல்லாம் பண்ணினான் சொல்லேன் கேட்போம்ங்குது. இது ஆக அதிகம். வேண்டாம், எனக்கு அதை பார்க்கிறபோதெல்லாம் மனசு படபடண்ணு அடிச்சுக்கிது

– ஓகே ஓகே

தலைவலி மண்டையை பிளந்தது, அங்கிருக்க பிடிக்காமல், பரத் தனது அலுவலக அறைக்குத் திரும்பினான். ‘டார்லிங் ஒரு சாரிடான் போடுங்களேன் சரியாயிடும்’, என்கிறது சுவர், நிமிர்ந்தால் சுவர் முழுக்க கண்ணம்மா.

– பரத்! சரிதா சொல்றதை நம்பாதீங்க, அவளுக்கு அவ சொல்றபடி நான் கேட்கணும். கொஞ்ச நாளா அவ நடத்தை சரியில்லை. அதற்கு நான் இடஞ்சலா இருக்கிறேங்கிறதாலே உங்ககிட்டே என்னைப்பத்தி கோள்சொல்றா. உங்களைச் சுத்தி ஏதோ சதி நடக்குது. எதுக்கும் கொஞ்சம் கவனமாயிருங்க.

– ப்ளீஸ் கண்ணம்மா, என்னைக் கொஞ்சம் தனியாவிடு. நான் குழப்பத்துலே இருக்கேன்.

கண்ணம்மா திரையில் இல்லை. மறைந்திருந்தது. உண்மையில் ஏதாவது மாத்திரை எடுக்கவேண்டும் போலிருந்தது, இல்லை இரண்டு பெக் விஸ்கி எடுத்துட்டு படுக்கலாம். இரண்டு பேருலே யார் தப்பு, கண்ணம்மாவா சரிதாவா? நினைத்து நினைத்து, பகலில் மட்டுமல்ல அன்றைய இரவும் பரத் தூக்கமின்றி தவித்தான்.

சரிதாவும் பரத்தும் பத்துவருடங்களுக்கு மேலாக சேர்ந்து வாழ்ந்தார்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ள சம்மதித்து அரசுக்கு விண்ணப்பித்ததும், அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையை சேர்ந்த உயிர்வேதியில நிபுணர்களும், மருத்துவர்களும் அடங்கிய குழு ஒன்று சோதனைக் கூடத்தில் வைத்து பரிசோதித்தது. சோதனையின் முடிவில் அவர்கள் இனச்சேர்க்கைக்குக் தகுதியான ஜோடியென்றும், இந்தியக் குடியரசுக்குகந்த பிள்ளைகளைப் பெற்றெடுக்க அவர்களால் இயலுமென்றும் சான்றிதழ் வழங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்ட அரசாணை எண் G.O. Ms No. 34 திருமணத்திற்கு அனுமதியும் வழங்கியது. திருமணத்தை முன்னிட்டு தமிழ் நாடு அரசு அதி நவீன வாகனம் ஒன்றையும் பரத்துக்கு வழங்க முன் வந்தது. அவ்வாகனம் , டிட்டோ கிரகத்திலிருந்து இந்திய விஞானிகளுக்கென அன்பளிப்பாக கிடைத்திருந்த 50 கார்களில் ஒன்று. தமிழ் நாட்டில் தேர்வுசெய்யப்பட்டிருந்த இரண்டுபேர்களில், நானோ உயிரியல் விஞ்ஞானியான பரத்தும் ஒருவன். பரிசுக்கான விழாவில் நூற்று நாற்பது வயது ஆளுனரும், நூற்று பத்து வயது முதல்வரும் அத்தனை பணிகளுக்கிடையிலும், விழாவுக்கு வந்திருந்து, தமிழினத்தின் எதிர்காலம் இனி உங்கள் கையில்தான் இருக்கிறது என்று கூறி கார்ச் திறப்பைக்க்கொடுத்து அதற்குக் கண்ணம்மா என்று பெயரையும் சூட்டியபோது, புது மணத் தம்பதியினர் இருவரும் உருகித்தான் போனார்கள்.

முதல்பார்வையிலேயே கண்ணம்மாவைப் பரத்துக்குப் பிடித்துபோனது. கறுப்பு சாக்லேட் நிறம், முன்னும் பின்னும் எடுப்பாக இருந்த உடல், துருவென்ற கண்களை அலையவிட்டபடி சாதுவான முயல்குட்டிபோன்றதொரு தோற்றம்.. ஆக்ஸிலேட்டரை கொடுத்தால் ஆவேசப்பட்ட காவிரிபோல மணிக்கு ஐநூறு கி.மீட்டரில் சீறிப் பாய்ந்தது. காரில் உட்கார்ந்து ஸ்டியரிங்கைப் பிடித்தபோது, ‘எனக்கு வெட்கமா இருக்கு’, என்று கொஞ்சலாக ஒலித்த குரலை சரிதாவினுடையதாக இருக்குமென்று பரத் நினைத்தான். “நானில்லை, கண்ணம்மா தான் பேசுது. அதற்குப் பாடவும் வருமாம் உலகத்திலிருக்கிற அத்தனை மொழிகளிலும் பாடுமாம், என்று சரிதா சொல்ல அவனுக்கு வியப்பாக இருந்தது. கண்ணம்மா பாட மட்டும் செய்யவில்லை, காரருகில் நின்றால் போதும் கதவை திறந்து விடும், இறங்கினால் காத்திருந்து கதவை மூடும், இருக்கையை சரி செய்யும், ஏசியைப் போடும், மனநிலைக்கேற்ப இசையை ஒலிபரப்பும். எல்லாவற்றிர்க்கும் மேலாக பரத் காரில் தனியாக இருக்கும் சந்தர்பங்களில் அது கூடுதலாக அக்கறை காட்டுவதுபோல இருந்தது. சில நேரங்களில் சரிதாவை வைத்துக்கொண்டு, ”கண்ணம்மா டார்லிங், திருமலைப்பிள்ளை சாலையிலிருக்கிற ரங்கா கம்ப்யூட்டர்ஸ்சுக்குபோ” அல்லது டார்லிங், இன்றைக்கு, தங்கசாலையிலிருக்கிற நம்ம பல் டாக்டர்கிட்டே போ” என்று அவன் சொல்கிறபோது சரிதா இவனை எரித்துவிடுவதுபோல பார்த்ததிலும் பொருளில்லாமலில்லை. மனசுக்குள்ளே கண்ணம்மா மேலே ஒரு பிரியம் இருக்கத்தான் செய்யுது, ஒருவேளை தானொரு நானோ-பயோ விஞ்ஞானிங்கிறதாலே, அதை உண்மையிலேயே ஒரு பெண்ணா பார்க்க ஆரம்பிச்சுட்டேனோ? என்று அவன் நினைக்கத் தொடங்கியிருந்தான்.

* * *

மறுநாள் வழக்கம்போல கண்ணம்மாவை நெருங்கியதும், கதவை திறந்து முன் இருக்கையை பரத் வசதியாக அமரும் வகையில் ஒழுங்கு செய்தது. அவனுக்குப் பிடிக்குமென்று சஞ்சய் சுப்பிரமணியத்தின் குரலில் பாரதியார் படலொன்றை ஒலிக்கச் செய்தது. ராத்திரி முழுக்க தூக்கமில்லாமல் கண்ணமாவிடம் என்ன பேசவேண்டும், எப்படி பேசவேண்டுமென மனப்பாடம் செய்திருந்ததெல்லாம் அதைப் பார்த்த மாத்திரத்தில் மறந்திருந்தது. சரிதாவுக்கு இப்படியான உபசரணைகளை செய்து பார்த்ததில்லைதான். பக்கத்தில் சரிதா இல்லை, அவனும் கண்ணம்மாவுமாக அங்கே இருந்தார்கள். கண்ணம்மாவின் நடவடிக்கைகள் அதைக் குற்றம்சொல்ல ஒன்றுமில்லை என்பதுபோலத்தான் இருந்தன. கண்ணம்மாவா? நானா? எங்கள் இருவரில் யார் வேண்டுமென்று தீர்மானியுங்கள் என இருபத்துநாலுமணி நேரம் கெடு சரிதா பரத்துக்கு வைத்திருந்தாள், அக்கெடுவில் நான்கைந்து மணி நேரங்களே இன்னமும் இருக்கவேண்டும். அதற்குள் கண்ணம்மாவிடம் பரத் பேசி பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்.

– கண்ணம்மா உன்னிடத்தில் நான் கொஞ்சம் பேசணும்.

கண்ணம்மா வந்த நாளிலிருந்து இன்றுதான் டார்லிங்கென்று அழைக்காமல் முதன் முதல் அதனிடத்தில் பேசியிருக்கிறான்.

– என்ன பேசணும்?

– சரிதா, நீ ஒரு எந்திரமா நடந்துக்கலைங்கிற மாதிரி பேசறா.

– அப்படீண்ணா.

– அதாவது நீ என்மேலே கிட்டத்தட்ட ஒரு பெண்போல நடந்துக்கிற, நான் உனக்கானவனென்று தீர்மானிச்சு செயல்படறமாதிரியும், அதற்காகவே சரிதாவை எதிரியாக நடத்தரமாதிரியும் சொல்றா.

– நீ என்ன நினைக்கிற.

– அவளை எப்படி நடத்தரன்னு தெரியாது. ஆனா என்னை ஏதோ காதலனை நடத்தரமாதிரிதான் உன்னுடைய பேச்சும் செயலுமிருக்கு.

– இருக்கட்டும். அதுதான் உண்மை பரத்.

– நீ என்ன சொல்ற?

– என்னை மாதிரி ஜடத்துக்கு காதலாவது கத்தரிக்காயாவதுண்ணு நினைக்கிற அப்படித்தானே.

– இல்லை கண்ணம்மா, உன்மேலே எனக்கிருக்கு அன்பிருக்கு, அதற்காக..

– சரிதாவும் நானும் ஒன்றான்னு கேட்கிற. ஒன்றில்லை நான் வேற. சரிதா கூடாதுண்ணு இப்போது நான் சொல்றேன். அவளை விட்டுட்டு வந்துடு இப்படியே போயிடுவோம்.

– இல்லை, கோபப்படாத கண்ணம்மா. சரிதா எனக்கு சகோதரி மாதிரிண்ணு ஒரு முறை சொல்லியிருக்க. அந்த வார்த்தையை நீ காப்பாற்றணுமில்லையா?

– பரத் உங்கக்கிட்டே பேச நிறைய இருக்கு, சரிதா மாத்திரமில்ல என்னாலும் இந்த நிலைமையை தொடரவிருப்பமில்லை, என்ற குரல் கண்ணம்மாவின் வழக்கமான குரலல்ல.

* * * *

காலையில், குளித்துவிட்டு சரிதா வெகுநேரம் பரத்திற்காக காத்திருந்தாள். எங்கே போனாலும் பதினோரு மணிக்கெல்லாம் வீட்டுக்குத் திரும்பிடுவான். மதிய உணவை திருமணத்திற்கு முன்புவரை இருவரும் சேர்ந்தே சாப்பிட்டிருக்கிறார்கள். அந்த ஒழுங்கு சிதைய ஆரம்பித்தது கண்ணம்மா வந்த பிறகுதான். மதியம் பன்னிரண்டும் ஆனது. காரைத் திரும்பவும் அரசாங்கத்திடமே ஒப்படைத்திருந்தாலும், இந்நேரம் வீட்டிற்குத் திருபியிருக்கலாம். பரத்தின் நண்பர்கள்கூட ஆளுக்கொரு திசைக்காய் கடந்த இரண்டுமாதகாலமாய் பயணத்தில் இருக்கிறார்கள். முதன் முறையாக அச்சம் மீன்முள்போல நெஞ்சில் ஒட்டிக்கொண்டு கண்களில் நீர்கோத்தது. வீட்டுசுவர் சட்டென்று ஒளிர்ந்து திரையில் நிழல்கள் ஆடின, ஒரு சில நொடிகளுக்குப்பிறகு டிட்டோ நாட்டிலிருக்கிற சரிதா சகோதரன் அருண் பேசினான்.

– சரிதா கடந்த இரண்டுநாட்களா உன்னையும் பரத்தையும் தொடர்பு கொள்ளனும்னு நினைச்சேன், முடியலை.

– ஏன் என்ன விஷயம்?

– உலகம் முழுக்க கணினிகள் வச்சதுதான் சட்டமா இருக்குதுண்ணு உனக்குத் தெரியும், இன்றைக்கு நம்ம வாழ்க்கையே எந்திரங்களின் கட்டுபாட்டில்தானிருக்கு. அதிலிருந்து தப்பினவங்கண்ணு சொன்னா, உலகமெங்குமிருக்கிற ஏழைகளைத்தான் சொல்லணும்; அவர்களையும் வளைச்சுப்போட்டா? பிறகு இந்த உலகம் எந்திர உலகமாயிடும்? நாமெல்லாம் அதுகளுக்கு அடிமை.

– நீ என்ன சொல்ல வற.

– இரண்டு நாட்களாக உங்களை தேடறதே அந்த உண்மை எனக்குத் தெரிய வந்ததாலேதான். இப்போது டிட்டோ நாடு முழுக்க எந்திரங்களால ஆளப்படுது. அவங்க உலகமுழுக்க எந்திரங்களின் ஆதிக்கத்துலே வரணுமென்று நினைச்சு தங்கள் ஆட்களை அனுப்பி வச்சிருக்காங்க. அவர்கள் மூலம் நாட்டின் மூளையாக இருக்கிற விஞ்ஞானிகளை முடக்கணுமென்று திட்டம். தவிர இதுவரை எந்திரங்களின் ஆதிக்கத்திற்கு உட்படாத ஏழைகளை வழிக்குக் கொண்டுவரவும் அந்த ஆட்கள்கிட்டே திட்டமிருக்கு. விஷயத்தை இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகத்துக்குக் கொண்டு போகணும், கவனமா கையாளவேண்டிய விஷயம்., பரத்கிட்டே சொல்லிவை.

– டிட்டோ நாட்டுலே இருந்து அனுப்பின ஆட்களைப் பத்தின தகவல்கள் ஏதேனும்?

– டிட்டோ நாடே எந்திரங்கள் கிட்டே இருக்குண்ணு சொன்னேன். அவங்க உலகமுழுக்க அனுப்பி இருப்பது அதி நவீன கார்கள். அதுகள் கிட்டேதான் உலகத்தை எந்திரயமாக்கும் பணி ஓப்படைக்கப்பட்டிருக்கு.

– நம்ம வீட்டிலே ஆபத்து ஏற்கனவே வந்தாச்சு, அந்தக் காருலே ஒண்ணு பரத்துக்கும் பரிசுங்கிறபேருலே வந்திருக்கு.

– பரத்தை எப்படியாவது தொடர்புகொள். அவனை உடனடியா காப்பாற்ற பாரு. அரசாங்கத்துக்கிட்டேயும் இந்த எச்சரிக்கை போயாகணும்.

சட்டென்று திரை ஒளிக்கீற்று சுருங்கி கோடாக இரு திசைகளிலும் நீண்டு மீண்டும் உயிர் பெற்றது. தமிழ் நாடு அரசின் செய்தி மற்றும் தகவல் ஒலிபரப்பு துறையிலிருந்து ஓர் மகிழ்ச்சியான அறிவிப்பென்று திரையில் வாசகம் ஓடியது. அரசின் செய்தித்துறை இயக்குனர் திரையில் தோன்றினார். சற்றுமுன்பு அரசு எடுத்த முடிவின்படி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து குடிசைகளுக்கும், வறுமைக் கோட்டின் கீழுள்ள குடும்பங்களுக்கும் இலவசமாக கணிப்பொறிகளை வழங்க தீர்மானித்துள்ளதாகவும், படிப்படியாக தமிழ் நாடெங்கும் விஸ்தரிக்கப்படவுள்ள இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக வடசென்னையில் மட்டும் 150000 கணிப்பொறிகள் நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் வழங்க இருப்பதாகவும் மேலும்… என்ற குரலை அணைத்துவிட்டு அவசரம் அவசரமாக உடுத்திக்கொண்டு சரிதா வெளிக்கதவை திறக்க முனைந்தபோது, “உங்களுக்கு இன்றைக்கு மாலை ஐந்து மணிக்கு முன்பாக வெளியிற் செல்ல அனுமதி இல்லை” என்று குரல் வந்தது.
***********************

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா