நீயும் பொம்மை நானும் பொம்மை

This entry is part [part not set] of 27 in the series 20090507_Issue

எஸ். ஷங்கரநாராயணன்



பேர் தண்டாயுதபாணி. வயசும் ஆயாச்சி. என்றாலும் கையில் தண்டு தடி ஊன்ற சம்மதப்பட்டவரல்ல. சிரிப்பற்ற விரைத்த முகம். அலுவலக நிர்வாகமேலாளர் என்பது கௌரவப்பட்ட வேலை. நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் (மனைவியைத் தவிர) அஞ்சாத நெறிகள். எசகு பிசகா படுத்தால் நடந்தால் காலில் சிலபோது நெறி கட்டும். நிலத்தில் அதற்கு அஞ்சித்தான் ஆகவேண்டும். வாயுக் கோளாறு உண்டு. வாய் என்கிற மேல்வாசல் வழியாகவோ ஆசனதுவாரம் வழியாகவோ காற்றுப் பயணம் உண்டு. வாய்வழிப் பயணம் வாயு எனில் மாற்றுவழிப் பயணங்களுக்குப் பேர் தெரியவில்லை. இடுப்புப் பிடிப்பு. பொழுதன்னிக்கும் சுழல்நாற்காலியில் உட்கார்ந்து இருந்த இடத்திலேயே இங்க அங்க அசைதல். யானையாட்டம். மேஜைமேல் மணி. தட்டி வெளியே ஸ்டூல் போட்டு உட்கார்ந்திருக்கும் சேவகனைக் கூப்பிட்டு ”குடிக்கத் தண்ணி குடு” என்பார் தோரணையாய். வலப்புறம் கண்ணாடிக் குடுவை இருக்கிறது. கண்ணாடித் தம்ளரும். கையெட்டும்தான். பியூன் எதற்கு இருக்கிறான்? எதற்கு அவனுக்குச் சம்பளம் தருகிறோம்? சும்மா ஸ்டூலில் உட்கார சம்பளம் தர முடியுமா என்ன? அவர் தண்ணீர் குடிக்குமுன் வாயைத் துடைத்துக் கொள்ள துண்டோடு அவன் காத்திருக்க வேண்டும்.

வீட்டில் அல்ல. அவரது அலுவலக உலகம் அவர்சார்ந்து சுழல்கிறதாக இருக்கிறது. ஆத்துக்காரியைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு அவள் தந்தையின் கம்பெனியை நிர்வகிக்க வந்தவர். அவள் பெயரே லெட்சுமி. தனலெட்சுமி. ஆனால் தனங்கள் சின்னதாய்த்தான் இருந்தன, என்பதில் சிறு ஏமாற்றம் உண்டு அவருக்கு. அவன் பார்த்த மலையாளப் படங்களின் உட்படங்களில் எல்லாம் எப்படி கைக்கு அடங்காத செழுமையாய் இருக்கிறார்கள்… ஆண்டவன் கொஞ்சம் கூடக்கொடுத்திருக்கலாம். பிரசாதமாய்த் தந்து விட்டான். இருந்தாலும் துட்டுப் போக்குவரத்து தாராளம். அவர்கள் ஜாதியில் படித்த பசங்கள் கம்மி. அவன் படித்திருந்தான். வேலை என்று பெரிதாய்ச் சொல்ல ஒண்ணுமில்லை. பெரிய பேர் உள்ள கம்பெனியில் சிறிய வேலை. பதவி உயர்வு வரும் என்று காத்திருந்தான். வராமல் கூடப் போகுமா என்ன? கம்பெனி லாக்கவ்ட் என்று ஆகாமல் இருந்தால் சரி என்றிருந்தது சேர்ந்த பின். காயம் பட்ட யானையாய்த் தள்ளாடியது கம்பெனி.

வாலிபக்களையுடன் பார்க்க சுமாராய் இருந்தான். தேவையில்லா விட்டாலும் அடிக்கடி மணி பார்த்தான். அவன் வாட்ச் கட்டியிருப்பது மற்றவருக்குத் தெரிய வேணாமா? தனலெட்சுமியின் அப்பா விசாரித்தார். கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாதவன். அதற்காகச் செலவழிக்க துட்டு கிடையாது என்பது அவருக்கு அந்நேரம் தெரியவில்லை. பெண்ணும் கொஞ்சம் நிமிர்ந்தவள்தான். அவருக்கே கட்டுப்படுகிறாள் இல்லை. படிப்பும் அத்தனை விருத்தியாய் இல்லை. இரண்டு இலக்கத்துக்கே வரவில்லை… கொஞ்சம் நன்றியுள்ள மாப்பிள்ளையாய் அமைவது நல்லது என நினைத்தார் அவள் அப்பா.

திடுதிப்பென்று கல்யாணமும் ஆகி பெரிய பதவியும் கிடைத்தது அவனு- அவருக்கு. பழனியாண்டி என கோவணக் கோமகனுக்கு தங்கத்தேர் வீதியுலா. ஆகா எனத் திகட்டலாய் இருந்தது. அதுக்காக இப்படியொரு பொம்மைப் பெண்ணிடம் மாட்டிக் கொள்வதா, என பிற்பாடு, கல்யாணத்துக்குப் பிறகு நினைத்திருக்கலாம். நமக்குக் கல்யாணம் என்ற ஒண்ணே ஆகுமோ, இல்லை மலையாள உட்படங்களோடு திருப்திப் படுவதா, என்கிற சந்தேகக் காலத்தில் மாமனார் மடக்கியிருந்தார்.

இப்போது அவர் திருவாளர் தண்டாயுதபாணி. அலுவலகம் போக கம்பெனி கார் உண்டு. கொஞ்சம் தமிழ் ரசிகர். கார் என்றால் கருமை. அவரது காரும் கருப்பு நிறம். என்ன பொருத்தம், என வியந்தார். இவரது புன்னகையைப் பார்த்து மாமனார் ”என்ன மாப்ளே?” என்றார். சொல்ல முடியாது. அவர்களுக்கெல்லாம் தமிழில் பேசுவது, தமிழைச் சீராட்டுவதே ஒவ்வாதது. ஆங்கிலம் பேசார் என்றாலும், லேசாக சமஸ்கிருத ஒலிக்குறிப்பு சிலாக்கியம். ”ஷொல்லுங்கோ!” தமிழில் பேசினாலே திராவிடர் கட்சி என நினைத்தார் அவர். கருப்பு வானத்தில் சிவப்பு நிலா போலக் கொடிக்காரர்கள்.. கடவுளை நம்பினால் முட்டாளாம். இவால்லா நரஹத்துக்குத்தா போவா. (நாங்கல்லா டைரக்ட் சொர்க்கம்!)

நேரந் தவறாமை அவரது கண்டிப்பான நடைமுறை. ஏனெனில் வீட்டில் அவருக்கு இருக்கக் கொள்ளவில்லை. கையில் ஒரு சூட்கேஸ். உள்ளே ஒருநாள் அவர் செய்தித்தாளை வைத்துக் கொண்டபோது தனலெட்சுமி, ”ஆபிஸ் லெட்ரின்ல தண்ணி இல்லன்னா என்ன பண்றதுன்னு பயப்படறேளா?” என்று சந்தேகம் கேட்டாள். செய்தித்தாளுக்கு அதைத் தவிர வேறு பயன் இருக்க முடியுமா என்ன, என்பது அவள் கட்சி. மகா அபூர்வமான அசடு. பொம்மைக்கு அலங்காரம் செஞ்சி வெச்சாப்போல. எரியாத குத்துவிளக்கு. தனக்கும் தெரியாது. சொல்லியும் புரியாது. அன்பு பாசம் நட்பு, எத்தனை வார்த்தைகள் தெரியாது வளர்த்திருக்கிறார்கள். எப்படி முடிந்தது தெரியவில்லை. எதையும் சொல்லிவிட்டு தன்னைத் தானே வியந்து சிரிப்பாள். அதை அலட்சியம் செய்தியானாப் போச்சு. முகம் மாறி குரலும் வார்த்தையெடுப்பும் மாறிவிடும். கீச்சென்ற பூனைப் பிராண்டல். ஆபத்து பயத்தில் தானே வெலவலத்து தாக்க முற்படும் ஆவேசம். பூனை வலப்பக்கம் போனா நல்ல சகுனமா, இடம் போனா நல்ல சகுனமான்னான் ஒருத்தன். அடுத்தவன் சொன்னான் – அட அது மேல விழுந்து பிடுங்காமப் போனாலே நல்ல சகுனம்தான்… அவரது நிலை அதுவே.

பிளாஸ்க்கில் சூடான காபி. அடைத்த சாதம். மணி பார்த்துக் கொள்வார். சமைக்க ஆளிருக்கிறது. எல்லா வேலைக்கும் வீட்டில் ஆள் இருக்கிறது. திங்கவும் தூங்கவும் அதட்டவும் வேலை வாங்கவும் இவள். சிறுதன லெட்சுமி. தொலைக்காட்சியில் டி. ராஜேந்தர் அரட்டை அரங்கம் – ரொம்பத் தரமான நிகழ்ச்சி அது அவளுக்கு – பார்ப்பாள். (உடல் உனமுற்ற குழந்தையைத் தூக்கிக் காட்டி எல்லாரிடம் பண வசூல் செய்கிறான்… சமூகசேவை.) நீயா நானா பார்ப்பாள். அவளைப் பொறுத்தவரை ‘நான்’ மட்டுந்தான். நீ எல்லாம் வேஸ்ட். தூங்கும் நேரம் தவிர டி.வி. பார்த்துக் கொண்டிருந்தாள். பக்கத்து அறையில் எதும் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் டி.வி. ஓடிக்கொண்டே இருந்தது. கல்யாணமான புதிதில் நம்மைத் திரும்பிப் பார்க்க மாட்டாளா என நினைத்தவர், டி.வி.யைக் கண்டுபிடித்தவனை வாழ்த்த ஆரம்பித்திருந்தார் பிற்காலத்தில்.

இன் பண்ணிய சட் + டை. குளிர் கண்ணாடி. சற்று வயதானதும் கோட் சேர்ந்து கொண்டது. மருந்து விற்கிற ஜாதியாகத் தன்னை நினைத்து விடுவார்களோ என்று பயம் இருந்தது. ஆனால் கார் இருக்கே. எந்த மருந்துக் கம்னாட்டி கார்ல வந்து இறங்குவான்? என்றாலும் கார் இல்லாத போழ்து இப்படி சூட்கேஸ்-டை-இன் பண்ணிய சட்டை பாணியைத் தவிர்ப்பது நல்லது. வீட்டில் நீள நேரு ஜிப்பா. பைஜாமா. நீளமான சிகெரெட் வாயில் வைத்திருந்தால் ஒரு களை. நிறைய யோசிக்கிற பாவனை நல்லது.

துட்டு அதுவே மழையாக் கொட்டியது. தனித்தனி சிறு கம்பெனிகளில் வாகன உதிரி பாகங்கள் வாங்கி வரவழைத்து அசெம்பிள் செய்து இன்ஜினாய்த் தர வேணும். என்னதான் திறமையான மேஸ்திரி அமைந்தாலும் புகழ் பொறியாளனுக்குத் தான். வீசியெறியக் காசு இருந்தது. நல்ல பேர். இழுத்து விடப்பட்ட தேர், சுமுகமாக ஓடிக் கொண்டிருந்தது. மிஷினரி சப்ளை பண்ணி அதன் வருடாந்தரப் பராமரிப்பு என்றும் இவர்களே பார்த்துக் கொண்டார்கள். பிரசவம் பார்த்தவளும் அவளே, ஃபேமிலி டாக்டரும் அவளே என்பது போல.

அதிகார பௌருஷத்துடன் அலுவலகத்தில் அதிக நேரம் தங்கவும் இயலாதிருந்தது. பந்து பந்தாய் ஆர்வத்துடன் கிரிக்கெட் பார்க்கிற ஆசை உண்டு. பரபரப்பான முடிவுகள் நல்ல விஷயம்தான். தொலைக்காட்சி முன் பூதம்போல தனலெட்சுமி பிரிக்கப்பட்ட பாப்கார்னுடன் உட்கார்ந்திருப்பாள். மாடியில் தன்னறையில் சிறு சப்தத்துடன் வைத்துக் கொள்வார். இந்தியா தோற்றுப் போனால் வருத்தப்படுவார். சூரியனை ஒரு பார்வை பார்த்தபடி, மட்டையை வீசி வீசி உடற்பயிற்சி செய்தபடி, ஸ்டம்ப் முன்னால் குதி குதியென்று குதித்து, முதல்பந்தில் அவ்ட். அடச் சே என்றிருந்தது.

செய்தித்தாள் சுவாரஸ்யமாய் இருந்தது. பூகம்பம் என்று அடிக்கடி வருகிறது. ஜனங்கள் கொத்துக் கொத்தாய்ச் செத்தார்கள். வருத்தப்படுவார், என்றாலும் துட்டு உதவி என்று கைநீண்டதில்லை. கைக்காசு வெளியேற மனம் ஒப்பவில்லை. லாகிரி பானங்கள் தன்னறையில் உண்டு. கூட ஆள் இருந்து பேசிக்கொண்டே, அல்லது மனோலயத்தில் உளறிக்கொண்டு சாப்பிடுவதே அதன் லட்சணம். பகிர்ந்துகொள்கையில் தான் உளறலுக்கு நகைச்சுவை அம்சம் வருகிறது. தனியே உளறினால் பைத்தியச் சாயல் அடித்து விடுகிறது அல்லவா? யாரையும் துணைசேர்த்துக் கொள்ளவும் இயலவில்லை. அலுவலக வளாகத்தில் சரிசமமாக யாரையும் அண்ட விடாதவர். வீட்டில் வீட்டுக்கு வரவழைக்கிற அளவில் யாரும் இல்லை. யாரையும் கூப்பிடும் பயத்திலேயே வருடங்கள் ஓடி விட்டன. பெரும் மனிதக் கூட்டத்தில் வேறுகிரக மனிதனாக மாட்டிக் கொண்டாற் போலிருந்தது. திகைப்பாய் இருந்தது வாழ்க்கை.

ஒன்பதரை மணிவாக்கில் வண்டி ஓட்டுநன் நற் சீருடையில் வாசலில் தயாராய்க் காத்திருப்பான். சிறு இருமலும் இல்லாத அமைதியும், விரைப்பும், பணிவும். தாமதமாக வர அவன் நினைக்கவே முடியாது. முதலாளி முன்னால் புகைபிடிக்க முடியாது. அவர் அனுமதி இல்லாமல் காரில் எஃப்.எம். போட முடியாது. அவரும் கேட்க மாட்டார் என்றாலும், அந்த வசதிகள் வைத்துக் கொண்டு மத்தவனை அனுபவிக்க விடாமல் செய்வதில் ஒரு திருப்தி. விமானம் ஏறப் போனால் அவரை விட்டுவிட்டுத் திரும்பும்போதே டிரைவர் சவாரி போட்டான். எஃப்.எம். போட்டான். அவர் முன்னால் எல்லாரும் அடக்கிய மூத்திரத்துடன் ஒருவித சங்கடமும் தத்தளிப்புமாய் நடமாடினாப் போலிருந்தது, அவர் கண்ணில் இருந்து மறைந்ததும் அவர்கள் நடந்துகொண்ட விதம்.

தொலைக்காட்சி அலுத்தால் மனைவி வந்து வாசலில் நிற்பாள். ”நான் போய்க்கறேன்…” என்று புன்னகைத்தால், ”இல்ல இருட்டிக் கெடக்கே, மழை வருதான்னு பாக்குதேன்” என்பாள். மழை வந்தால் என்ன செய்யப் போகிறாள்? அதொண்ணுமில்லை.

கல்யாண வாழ்க்கை அவளிடம் எந்த மாற்றத்தையும் கிளர்ச்சியையும் கொணரவில்லை என ஓர் ஆச்சர்யத்துடன் உணர்ந்தார் தண்டாயுதபாணி. குழந்தை பெற்றுக்கொள்ளக் கூட ஆர்வம் இல்லாத தத்தி. எதிலும் சுவாரஸ்யமோ பிடிப்போ இல்லாமல் எப்படி இவளால் இருக்க முடிகிறது தெரியவில்லை. நேரம் நிறைய மடிமீது பாப்கார்ன் பொட்டலமாய்க் கிடந்தது. திரும்பத் திரும்ப அதைக் கொறிக்கிறதைத் தவிர, தின்று தீர்ப்பதைத் தவிர மனுசனால் ஆகக் கூடுவதுதான் என்ன, அவளுக்குத் தெரியவில்லை.

முதலிரவு அன்றே தன் அறைக்குப் படுத்துக் கொள்ளப் போவதாகச் சொல்லி விட்டாள். அவளுக்கு ஒரு அறை, அவனுக்கு ஒரு அறை என்பதே அயர்த்துவதாய் இருந்தது தண்டாயுதபாணிக்கு. அவர்கள் வீட்டில் ஏழு பேர். எல்லாருக்குமே ஒரே அறைதான். பொது வாழ்க்கையில் பார்த்து கல்யாணத்துக்குத் தலையாட்டியிருக்க வேண்டும். அந்தரங்க விஷயங்கள் தெரியாது. அட இழவே ஆர்வமும் இல்லை. படங்கள் கிடங்கள் பார்த்து அபாரத் தயாரிப்புடன் அவன். சரி என்று காத்திருந்தான். வேறு வழி தெரியவில்லை.

மறுநாள் அவள் தனறையில் – அறையொட்டியே குளியல் அறையும் இருந்தது. குளித்துவிட்டு வருகிறாள் – ஆர்வத்துடன் எட்டிப் பார்த்தபோது ”அறிவிருக்கா? பொம்பளையாள் டிரஸ் மாத்தும்போது எட்டிப் பார்க்கறீங்களே?” என்றாள். அவளுக்கே தெரியாமல்தான் பார்க்க முடியும் போலிருந்தது.

இந்த இத்துனூண்டுக்கே இந்த அலட்டல்!

தொலைக்காட்சியில் சினிமாவில் சிறிதுதான் காட்டுகிறார்கள். டூயட் என்று முகத்துக்கு முகம் கிட்-ட்ட வருகிறார்கள். சட்டென்று ரெண்டு பூ உரசிக் கொள்வதுபோல் காட்சி மாறிவிடுகிறது. அவளுக்கு என்ன புரியும்? எருமைமாடு போல, பூ சொறிஞ்சிக்கறதாக அவள் நினைக்கலாம்!

இதில் வரம்புகள் மீறுவதில்தான் சிக்கலே. தெரியாத்தனமாய் மாமனாருக்கு தெய்வத்துக்கு நிகராக ஒரு மரியாதை கொடுத்துத் தொலைத்திருந்தான். அவரிடம் புகார் என்று நிற்க முடியாதிருந்தது. அந்த நாய்க்கு இதெல்லாம் தெரியாதா என்ன? அம்மா இல்லாமல் வளர்ந்த பெண். வேலைக்கு வைத்தவள் இவளைத் தனியே விளையாட்டு சாமான்களுடன் உட்கார்த்தி வைத்துவிட்டு தான் பாட்டுக்கு வீட்டு வேலையோ, பக்கத்து வீட்டு வேலைக்காரியுடன் அரட்டையோ, அட ஒரு ஹாயான தூக்கமோ போட்டிருக்கலாம். பொம்மைகள் பருவத்தில் தானே பொம்மையாய் ஆகிப் போனாளோ. பிற்பாடு வயசுப்பருவத்தில் டி.வி. அதை ஓர் உயிர்ப்பாத்திரமாக்கி அதனோடு பேசுவாள் தனம். ”தென்மேற்குப் பருவக் காற்றழுத்த மண்டலம் உருவாகி…. நாளை மழை பெய்யும்” என்று செய்தி வாசித்தால், சிரித்தபடி ”ஆமா இப்டிதான் நேத்தி சொன்ன, எங்க பெஞ்சது?” என்பாள் சிரித்தபடி. என்ன அறிவு இவளுக்கு, என நாம் வியந்து கூட ரசித்து மகிழ வேண்டும். அவள் அப்பா வீட்டில் இருந்தால் அதைச் செய்தார். இல்லாட்டி கையில் கிடைத்ததை எடுத்துச் சாத்தி விடுவாள். நல்ல குடும்பம்டா என்றிருந்தது. பெருமூச்சு விடத்தான் முடிந்தது. ஆனா இந்தச் சனியன்கள் கிட்ட எப்டி இவ்ள துட்டு மாட்டியது, அதுதான் ஆச்சச்சரியம்!

துட்டு இருந்து அப்பாவும் பெண்ணும் ஒட்டுதல் இல்லாமல் போனார்கள் என்றால், துட்டுக் கஷ்டத்தில் இவர் வீட்டில் ஏழு பேரும் சிதறிப் போனார்கள். பணம் சார்ந்த பிரமைகள் வந்ததுமே, கல்யாண வரன் அமைந்ததுமே தண்டாயுதபாணி தன் குடும்பத்தை விட்டு உயர்ந்த பிறவியாகத் தன்னை வரித்துக் கொண்டுவிட்டான். வீட்டோடு மாப்பிள்ளை என்ற அளவில் தன்வீட்டுக்குப் போக அவன் நினைக்கவே இல்லை. வழிகள் தூர்ந்து விட்டன இப்போது. ஒரே அறை. பெரிய அறையில் ஏழு பேரும் ஒண்ணாய்ப் படுத்துத் தூங்க வேண்டும். இந்த லெட்சணத்தில் எப்படி அப்பாவும் அம்மாவும் ஏழு பெற்றார்கள் என்பதே ஆச்சச்சரியம். ரயில்வே பெர்த் சிஸ்டத்தில் படுத்துக் கொண்டார்களா…

பெண்ருசி என்பது இப்படி அநியாயத்துக்கு இல்லாமல் போகும் என்று எதிர்பார்க்கவேயில்லை. அவளுக்குக் கல்யாணமே தேவையில்லை. ம், அப்பாவையே மதிக்கவில்லை என ஒரு பிறவி. அப்பாதான் ஒருவேளை கல்யாணம் மாற்றங்களைக் கொணரும் என நம்பியிருக்கலாம். அவர் தயாரித்த மிஷினரியில் மிகச் சிறந்தது எது?…

தனலெட்சுமிதான்!

ஆக தன்னையும் ஒரு விரைப்புடன் பூட்டிக் கொண்டார் தண்டாயுதபாணி. சுத்தமாக ஷேவ் எடுத்த முகம். அடர்த்தியான மீசை. மேல்பார்க்க வாரி வகிடெடுத்த சிகை. பட்டைக் கண்ணாடி. திருநீறு பூசி குங்குமம் வைக்க நினைத்தார். அத்தோடு கோட் ஒட்டாது – கைரேகை ஜோஸ்சீயம்… என்று தெருவில் வருகிற அன்னாடங்காய்ச்சி போலத் தோன்றும், வேணாம் என்று விட்டுவிட்டார். தங்க ஃபிரேம் கண்ணாடி. வளையல் (பிரேஸ்லெட்) கைக்கடிகாரம் தங்கம். பளபளவெனப் பொலியும் ஷு. நடையில் அழுத்தமான ஒரு டக் டக் ஒலி. கூர்க்கா கம்பைத் தட்டிக்கொண்டே ராத்திரி இப்படிப் போவான். உஷார் சமிக்ஞை அது.

ஷோபா என்றொரு பெண்ணை குறிப்பெடுக்க, கடிதங்கள் எழுத என்று பக்கத்தில் வைத்துக் கொண்டிருந்தார். அதுவே மாமனார் என்ன சொல்வாரோ என்று பயந்து பயந்து பத்து இருபது வருடங் கழித்து, அதுவும் அவர் மண்டையைப் போட்டபின் வைத்துக் கொண்டது. வேலைதேடி வந்தவர்களில் அவளுக்கு உடல் வாளிப்பு ஒரு தகுதி எனத் தனியே சொல்லத் தேவையில்லை. உருண்டை முகம். எளிமையாய்ச் சிரித்தாள் அவள். கல்யாணம் ஆகி இத்தனை வருடத்திற்குப் பிறகு அவருள் தீயை மூட்ட ஆரம்பித்திருந்தாள். ஒரு ஃபைலை அவளைக் கூப்பிட்டு எடுக்கச் சொன்னபோது கிட்ட வந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் வாசனை சியக்காய்த் தூள் அல்லவா இது – பெண் வாசனைக்கு மனம் விழித்த கணம் அது. உடம்பைப் பாதியாய் வளைத்து முன் குனிந்தாள். அவர்பார்க்க எம்பிய பின்புற வாளிப்புகள். சுனாமியாய் மனசு கொந்தளித்த பெருங்கணம். கிட்டத்தட்ட ஒரு தற்கொலைக்காரனின் உள்ளாவேசம். தன்னைமீறி இயக்கப் பட்டாப் போல நிலை. அந்நேரம் பார்த்து ட்ர்ரிங் ட்ர்ரிங் எனத் தொலைபேசி ஒலியில் பதறிப் போனார். பதட்டத்துடன் பாய்ந்து தொலைபேசியை எடுத்து ”ஹலோ?” என்னுமுன் ஷோபா வெளியேறி யிருந்தாள்.

அவர் வெறியேறியிருந்தார் என்றாலும், தலையை இப்படியும் அப்படியுமாய் உதறிக் கொண்டார். யார் அவர்? முதலாளி. அதிகார பீடம். அவளிடம் தன்னைத் தாழ்த்திக் கொள்வதா என்றிருந்தது. தன்னால் முடியாது என்றே தோன்றியது. தண்டு, என்று தன்னையே கூப்பிட்டுக் கொண்டார். இனி இந்த விரைப்பில் இருந்து தன்னை மீட்டுக்கொள்ள முடியுமா என்றே திகைப்பாய் ஆசையாய் இருந்தது.

இந்தப் பதவி அதிகாரம் திமிர்… தானே போட்டுக்கொண்ட வேலிகள். அவராலேயே உதற முடியாத வேலிகள்.

பெண்ருசி எக்காலமும் தனக்கு இல்லை என்றுதான் நினைக்க முடிந்தது. எழுந்துபோய்க் கண்ணாடி பார்த்தார். டை அடித்த நெருக்கமான கேசம். வாரிச் சுருட்டிய மீசை. தங்கவிளிம்புக் கண்ணாடி. கிட்டே போய்ப் பார்த்தார்… கண்ணாடியை நீக்கிப் பார்த்தார். கண்ணோரங்களில்…

அழுகிறாரா என்ன?


(Yugamayini monthly  May 2009)

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்