எதிர்வீட்டு தேவதை

This entry is part [part not set] of 26 in the series 20090416_Issue

மனுநீதி



பார்க்கும் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் அழகு என் எதிர்வீட்டு தேவதை. அவளின் அப்பன்காரன் கொஞ்சம் சிடு சிடு எதற்கெடுத்தாலும் சண்டைக்கு வருவான். அம்மா கொஞ்சம் பரவாயில்லை ஆனாலும் எல்லாரிடத்திலும் சகஜமாக பேசமாட்டார். இந்த காரணத்தினாலேயே அவள் என்னை பார்த்து சிரித்தாலும் கிட்ட போய் பேச தயங்கினேன்.

அன்று அவள் வீட்டு மாடியில் நண்பர்களுடன் பேசி சிரித்து கொண்டிருந்தாள். திடீர் என்று ஒரே சத்தம். எதோ சண்டை நடப்பதை போல் இருந்தது. அவளின் அப்பா பக்கத்து வீட்டுக்காரரிடம் சண்டை போட்டு கொண்டிருந்தார். அவர் பையன் இனிமே தன் வீட்டுக்கு வர கூடாதென்றும் தன் பெண்ணிடம் இனிமே பேச கூடாதென்றும் கத்தி கொண்டிருந்தார். என்ன நடந்தது என கேட்க ஆர்வம் இருந்தாலும் இந்த வயதில் என்ன நடந்திருக்கும் என யூகிக்க முடிந்து அமைதியானேன் .

இந்த சம்பவத்திற்கு பிறகு அவளை அடிக்கடி வெளியில் பார்க்கமுடியவில்லை. அமாவாசை அன்று நிலவினை தேடி ஏங்கும் பிள்ளை போல் என மனம் அவளை நினைத்து ஏங்கி கொண்டிருந்தது.

அன்று அவள் வீட்டில் ஏதோ விசேஷம். வீடே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னி கொண்டிருந்தது, ஜன்னலுக்கு இடையில் என தேவதையும் தெரிந்தாள். வெளிர்நீல உடையில் தேவதைகளுக்கெல்லாம் தேவதையாக ஜொலித்துக்கொண்டிருந்தாள். தயங்கிவாறு முதல் முறையாக அவள் விட்டுக்குள் சென்றேன். சில பரிச்சயமான முகங்களுக்கு இடையில் அவளின் அப்பா ஒரு செயற்கை சிரிப்பை வரவழைக்க முற்பட்டு தோற்றுகொண்டிருந்தார்.

மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு அவள் அருகே சென்று நின்றேன். பச்.. பச்.. அவளின் ஆப்பிள் கன்னத்தில் முத்தமிட்டேன். யாரும் எதுவுமே பேசவில்லை. அந்த அமைதி என்னை நெருடியது.

கூட்டதிலிருந்து ஒரு குரல்.
“என்ன பஞ்சாபகேசன் சார் உங்க பொண்ணு குழந்தைய கூட்டிட்டு அமெரிக்கா போனதிலேர்ந்து ரொம்ப அமைதியா ஆயிட்டீங்க. இந்த மாதிரி குழந்தைங்க பர்த்டே பங்சன் மத்த விசேஷங்கள் எல்லாம் கலந்துகிட்டீங்கனா கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்குமே ”

“ஆமா இனிமே எல்லாத்துலயும் கலந்துக்கிறேன்” பல்செட் தெரிய சிரித்துகொண்டிருந்தேன்.

manuneedhi@gmail.com

Series Navigation

மனுநீதி

மனுநீதி