• Home »
  • கதைகள் »
  • ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -4 பாகம் -2

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -4 பாகம் -2

This entry is part of 24 in the series 20090226_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


“நம் இறைவனின் நன்னாளான இந்த ஜனவரி முதல் தேதியில் (1863) அறிவிக்கப் படுகிறது இது. எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் அடிமைகளாய்க் கட்டுப்பட்டுள்ள கறுப்பருக்கும், அமெரிக்க ஐக்கியத்துக்கு எதிராகப் போராட்டத்தில் கலந்து கொண்டோருக்கும் இந்த அறிவிப்புக்குப் பிறகு நிரந்தர விடுதலை.”

ஆப்ரஹாம் லிங்கன் (அடிமைகள் விடுதலை அறிவிப்பு) (Proclamation of Emancipation of Slavery) (ஜனவரி முதல் தேதி 1863)

Fig 1
Lincoln Cabinet Meeting

“மிஸ்டர் லிங்கன் ஆற்றிய உரையில் இப்படிக் கூறினார் : ‘முதலில் இந்த அரசாங்கம் நமது மூதாதையப் பிதாக்கள் விட்டுச் சென்றபடி விடுதலை மாநிலங்களாகவும் அடிமை மாநிலங்களாகவும் நிரந்தரமாக இருப்பதைப் பொறுத்துக் கொள்ளாது ! ஒன்று எல்லா மாநிலங்களும் அடிமைத் தனத்தை விடுவிக்க வேண்டும். அல்லது எல்லா மாநிலங்களும் அடிமைத்தனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இந்த அமெரிக்க ஐக்கியம் நீடித்திருக்காது.”

ஸ்டீ·பென் டக்லஸ் டெமாகிராட் போட்டியாளர் (அக்டோபர் 15, 1858)

“நமது மூதாதையப் பிதாக்கள் இந்த அரசாங்கத்தைப் பாதி விடுதலையாகவும் பாதி அடிமைத்தனமாகவும் வைத்திருக்க வேண்டும் என்று கருதியதாக ஸ்டீ·பென் டக்லஸ் அனுமானிப்பது உண்மை இல்லை. அடிமைத்தன வைப்புச் செம்மையானது என்றும் அதை அரசியல் ஆட்சி நியதி முன் மொழிகிறது என்று டக்லஸ் அனுமானிப்பதாகத் தெரிகிறது. உண்மை என்ன வென்றால் நம்மிடையே இருந்து வந்த அரசியல் நியதியை அப்படியே அவர்கள் விட்டுவிட்டனர் என்பதுதான். அவ்விதம் விட்டுச் சென்றாலும் அநேக இடங்களில் உடன்பாடில்லாது இருந்ததை அவர்கள் தெளிவாகக் காட்டி இருக்கிறார்.”

ஆப்ரஹாம் லிங்கன் (ஸ்டீ·பென் டக்லஸ் தர்க்கப் பதிலுரை) (அக்டோபர் 15, 1858)

“அமெரிக்க இராணுவப் படையில் 200,000 கறுப்பர்களைத் தேர்ந்தெடுக்க நான் முடிவு செய்திருக்கிறேன். அறிவு மிக்க அமெரிக்க நீக்ரோக்களுக்கும் படைவீரராக நமக்குப் பணிபுரிவோருக்கும் வாக்குரிமை அளிக்க விரும்புகிறேன். அவர்களைத் தவிர மற்ற எல்லாக் கறுப்பரும் வாக்குரிமை பெறத் தகுதி பெற்றவரே ! இவ்விதம் நான் லூயூசியானாவில் கூறியிருப்பது மற்ற மாநிலங்களுக்கும் ஏற்புடையதாகும்.”

ஆப்ரஹாம் லிங்கன் (சாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையில் உள்நாட்டுப் போர் வெற்றியைப் பாராட்டிப் பேசியது) (ஏப்ரல் 11, 1865)

Fig. 2
Union General Ulysses Grant

(செப்டம்பர் 17, 1862)

காட்சி -4 பாகம் -1

பங்கெடுப்போர் :

ஆப்ரஹாம் லிங்கன், மாநிலச் செயலாளர் : வில்லியம் ஸீவேர்டு, போர்த்துறைச் செயலாளர் : எட்வின் ஸ்டான்டன் (Edwin Stanton), நிதிப் பொறுப்புச் செயலாளர் : ஸால்மன் சேஸ், (Treasury Secretary Salmon Chase), அஞ்சல் துறை அதிபர் : மாண்ட்கொமரி பிளேர் (Postmaster General Montgomery Blair), கடற்படைச் செயலாளர் : கிடியான் வெல்லெஸ் மற்றும் அரசாங்க உறுப்பினர் காலப் ஸ்மித் (Galeb Smith), பர்னெட் ஹ¥க் (Burnet Hook) ஆகியோர்.

இடம் : வாஷிங்டன் D.C. வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி கூட்டுரையாடல் அறை.

இப்போதைய காட்சி:

உள்நாட்டுப் போர் மும்முரமாய் நடந்து கொண்டிருக்கிறது. ஜனாதிபதி அரசவைச் குழுவினரைக் கூட்டி (Cabinet Members) கறுப்பர் விடுதலை அறிவிப்பைப் பற்றி உரையாட வருகிறார்.. லிங்கன் வந்ததும் எல்லா அரசாங்க உறுப்பினரும் எழுந்து நின்று குட் மார்னிங் சொல்லி வந்தனம் தெரிவிக்கிறார்.

ஆப்ரஹாம் லிங்கன்: குட் மார்னிங் எல்லோருக்கும். உட்காருங்கள்.

வில்லியம் ஸீவேர்டு: நல்ல செய்தி எங்கள் காதில் விழுந்தது மிஸ்டர் பிரசிடெண்ட் !

Fig. 3
Civil War Picture

ஆப்ரஹாம் லிங்கன்: ஆமாம் ! முதன்முதல் வெற்றிக்கண் நம் பக்கம் திரும்பியுள்ளது ! நான் பாராட்டுத் தந்தி கொடுத்திருக்கிறேன் ஜெனரல் மெக்லாலனுக்கு ! தென்னகத்தின் பராக்கிரமசாலி ஜெனரல் ராபர்ட் லீயைத் தோற்கடித்தது சாதாரணச் செய்தி இல்லை ! அதுவோர் மகத்தான செய்தி ஸீவேர்டு ! அமெரிக்க வரலாறு மாறப் போகிறது ! அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லப் போகிறேன் இப்போது.

பர்னெட் ஹ¥க்: நான் காத்துக் கொண்டிருக்கிறேன் உங்கள் அறிவிப்பைக் கேட்க !

ஆப்ரஹாம் லிங்கன்: முதலில் வேடிக்கை நடிகர் மிஸ்டர் ஆர்டிமஸ் வார்டு (Mr. Artemus Ward) அறிவிப்பைக் கூறுகிறேன். (பையிலிருந்து ஓர் அச்சுத் தாளை எடுத்து வாசிக்கிறார்)

“யுடிகாவில் (Utica) மேலிடத்துக் கொந்தளிப்பு”

எட்வின் ஸ்டான்டன்: (லிங்கனை இடைமறித்து) மிஸ்டர் பிரசிடெண்ட் ! முதலில் அரசாங்கப் பிரச்சனையைக் கேட்க வேண்டும் நாங்கள் !

ஆப்ரஹாம் லிங்கன்: (சிரித்துக் கொண்டு) சரி பேசுவோம் அரசாங்கப் பிரச்சனையை !

Fig. 4
Civil War Soldiers

ஸீவேர்டு: மெக்லாலன் ராபர்ட் லீயை விரட்டிக் கொண்டு போகிறார் !

ஆப்ரஹாம் லிங்கன்: அப்படித்தான் தோன்றுகிறது. முதன்முதல் ராபர்ட் லீயிக்குத் தோல்வி ! ஜெனரல் மெக்லாலன் தீரத்தனம் இப்போது தெரிகிறது ! ஆனாலும் ராபர்ட் லீ முற்றிலும் முறியடிக்கப்பட வேண்டும் ! நிச்சயம் முடிவின் துவக்கம் உதயமாகி விட்டது ! மெக்லாலனால் முடியா விட்டால் ஜெனரல் யுலிஸிஸ் கிரான்ட்டை (General Ulysses Grant) நாம் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால் போர் முடியத் தாமதமாகும் ! தவறில்லை அந்த முடிவெடுத்தாலும் !

மாண்ட்கொமரி பிளேர்: ஜெனரல் கிரான்ட் மிகவும் குடிப்பார் அல்லவா ?

ஆப்ரஹாம் லிங்கன்: என்ன பிராண்டு குடிப்பார் என்று சொல்வீர் ? அவருக்கு வண்டியிலே சில பாரல்கள் அனுப்பி வைக்கிறேன் ! அவர் கால்வைத்த இடமெல்லாம் வெற்றிகள்தான் ! ஜெனரல் என்றால் அவர்தான் உண்மையான ஜெனரல் !

பர்னெட் ஹ¥க்: வேறு ஏதோ அறிக்கை விடப் போவதாகச் சொன்னீர்களே மிஸ்டர் பிரசிடெண்ட் ?

ஆப்ரஹாம் லிங்கன்: ஆமாம் ! சில வாரங்களுக்கு முன் ஸீவேர்டிடம் முதல் பிரதி எழுத்தறிக்கையைக் காட்டினேன் ! அதை அரசாங்க அறிவிப்பாக வாசிக்க வேண்டும் நான் !

பர்னெட் ஹ¥க்: அதன் சாராம்சம் என்ன வென்று கூறுங்கள் மிஸ்டர் பிரசிடெண்ட் ?

ஆப்ரஹாம் லிங்கன்: அமெரிக்க ஐக்கிய மாநிலங்களில் உள்ள எல்லா அடிமைகளுக்கும் விடுதலை அறிவிப்பு !

Fig. 5
Sumter Fort

பர்னெட் ஹ¥க்: (வெல்லெஸிடம் மெதுவாக முணுமுணுத்து) நான் முன்பே சொன்னேன் அல்லவா ? எல்லாரும் கேட்கலாம் இப்போது. (லிங்கனைப் பார்த்து) இப்போது என்ன அவசரம் அந்த அறிவிப்புக்கு ? எல்லாருக்கும் தெரிந்ததே ! இந்த கொடிய போரே அதற்காகத்தானே நடக்கிறது !

ஆப்ரஹாம் லிங்கன்: இப்போது அறிவிக்கத் தேவையில்லை என்பது உமது கருத்து ! கேட்டுக் கொண்டேன் அதை ! ஆனால் தருணம் வந்து விட்டது கோமான்களே ! அறிவிக்கும் தருணம் வந்து விட்டது ! அடிமைகளை விடுவிக்கும் தருணம் வந்து விட்டது ! ஆயிரமாயிரம் கால் விலங்குகள் அறுக்கப்படும் காலம் வந்து விட்டது ! எனக்குத் தெரிகிறது அந்தத் தருணம் ! உங்களுக்குத் தெரியாவிட்டால் என்ன ? எனக்குத் தருணம் வந்து விட்டது ! நான் காத்திருக்க முடியாது ! நூற்றுக் கணக்கான வருடங்களாய் இந்த விடுதலைத் தருணத்துக்கு ஆயிரமாயிரம் கறுப்பு அடிமைகள் காத்திருக்கிறார்கள் ! ஆனால் நான் காத்திருக்க முடியாது !

கிடியான் வெல்லெஸ்: முழு அறிவிப்பையும் முதலில் வாசித்துக் காட்டுங்கள் மிஸ்டர் பிரசிடெண்ட் ! நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்.

ஆப்ரஹாம் லிங்கன்: தருணம் வந்துவிட்டது ! இந்த நேரத்தை நாம் நழுவ விடக் கூடாது ! வரலாறு உருவாகும் தருணம் ! வாசிக்கிறேன் கேட்பீர் !

“நம் இறைவனின் நன்னாளான இந்த ஜனவரி முதல் தேதியில் (1863) அறிவிக்கப் படுகிறது இது. எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் அடிமைகளாய்க் கட்டுப்பட்டுள்ள கறுப்பருக்கும், அமெரிக்க ஐக்கியத்துக்கு எதிராகப் போராட்டத்தில் கலந்து கொண்டோருக்கும் இந்த அறிவிப்புக்குப் பிறகு நிரந்தர விடுதலை.”

இன்னும் மூன்று மாதக் காலம் உள்ளது இந்த அறிவிப்பு நடப்பதற்கு ! மேலும் இந்த அரசியல் நியதிக்குப் பல உப அறிவிப்புகள், நிபந்தனைகள், தண்டனைகள் இன்னும் எழுதப்பட இருக்கின்றன. மேலும் தென்னகக் கோமான்களுக்கு இழப்பீடு, கறுப்பருக்கு நிதி உதவி, இடவசதி, நிலவசதி ஊழிய வசதி, கல்வி வசதி ஆகியவையும் விளக்கமாக எழுதப்பட வேண்டும்.

Fig. 6
Lincoln Visiting the Battlefield

பர்னெட் ஹ¥க்: (முந்திக் கொண்டு) நானிந்த அறிவிப்பை இந்த சமயத்தில் நீங்கள் வெளியிடுவதை எதிர்க்கிறேன். உள்நாட்டுப் போர் முடிந்து இன்னும் புகை மண்டலம் அடங்க வில்லை. அதற்குள் என்ன அவசரம் ? வெற்றி முழுவதும் பெற்ற பிறகு அறிவித்தால் என்ன ? இது நமது ஐக்கியத்தை இன்னும் முறிக்குமே தவிர மேலும் இணைக்காது ! தென்னவர் மனப்புண் ஆறுவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் ! அதற்குள் அடிமைகளை நீக்குவது வெந்த புண்ணில் ஈட்டியைப் புகுத்துவது போலிருக்கும் !

வெல்லெஸ்: எனக்கும் புரிய வில்லை மிஸ்டர் பிரசிடெண்ட் ! எதற்காக இப்பொது திடீரென இந்த அறிவிப்பைத் திணிக்க வேண்டும் ?

ஆப்ரஹாம் லிங்கன்: இது எனது புதிய திணிப்பு அறிக்கை இல்லை ! இந்த பிரிவினைப் போரைத் துவக்கி வைத்த காரணியை வேரோடு பிடுங்க வேண்டும் ! அதுதான் என் குறிக்கோள் ! நான் உயிரோடு உள்ள போதே இதைச் செய்து முடிக்க வேண்டும் ! வேறெவருக்கும் இதைச் செய்யத் துணிவில்லை ! உறுதியில்லை ! ஊக்கமில்லை ! இரும்பு சூட்டோடு கனிந்துள்ள போதே அதை அடித்து வடிவமைக்க வேண்டும் ! இந்தத் தருணமே தக்க தருணம் என்று என் ஆத்மா என்னைத் தூண்டுகிறது !

பர்னெட் ஹ¥க்: ஆறு மாதங்களுக்கு முன் “நியூ யார்க் டிரிபியூன்” (New York Tribune) தெளிவான ஓர் அறிவிப்பை வெளியிடும்படி உங்களை வற்புறுத்திய போது நீங்கள் அவரை உடனே இகழ்ந்தீர்கள் ! நினைவிருக்கிறதா ?

ஆப்ரஹாம் லிங்கன்: நன்றாக நினைவில் உள்ளது ! ஆனால் அது சரியான தருணமில்லை. அதனால்தான் நான் மறுத்தேன் ! போருக்கிடையே என்ன நேரப் போகுதென அறியாத சமயத்திலே அறிவிப்பை வெளியிட எனக்கு விருப்பமில்லை ! இந்தக் கொள்கையில் நீங்கள் எல்லாம் என்னோடு ஒத்துழைக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்.

Fig. 7
Civil War Wounded Soldiers

(தொடரும்)

***************************
தகவல்

Based on The Play :

Abraham Lincoln – Play By : British Playwright John Drinkwater (1882), School Edition
The Copp Clark Company Ltd, Toronto, Canada (1927)

1. Biography of Abraham Lincoln (www.whitehouse.gov/history/presidents/al16.html

2. Chambers Encyclopedia (1968 Edition)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Wordsworth Dictionary of Quotations (1997)

8 The Life of Abraham Lincoln By Stefan Lorant. (1961)

9. Lincoln The Unknown By Dale Carnegie (1959)

10. Great Issues in American History – From the Revolution to the Civil War (1765-1865) By Richard Hofstadter (1958).

11. Abraham Lincoln -The Prairie Years & The War Years By Carl Sandburg -One Volume Edition (1954)

12 The Emergence of Lincoln – Prologue to Civil War (1859-1861) By Allan Nevins (1950)

13. Abraham Lincoln -The Man Behind the Myths By : Stephen B. Oates (1985)

14. The American Civil War – A History By : Mark Saunders (1993)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (February 24, 2009)]

Series Navigation