கருணையினால் அல்ல!

This entry is part [part not set] of 30 in the series 20090219_Issue

கே.எஸ்.சுதாகர்



உச்சி வெய்யில். ஒரே சனம். கோவில் ஒன்று புதிதாகக் கட்டப்பட்டு பூஜைகள் நடக்கின்றன. கடைசிநாள் பூசை. ஒலிபெருக்கியில் இடைவிடாது மந்திரங்கள் ஒலிக்கின்றன.

கோயிலின் உள்ளே நகரமுடியாதிருந்தது. ஒரு கர்ப்பிணிப்பெண் கஸ்டப்பட்டு உள்ளே புகுந்து சென்றாள். ‘வழி! வழி!!” என்று சத்தமிட்டபடியே ஐயர் ஒருவர்போனார். கோயிலின் உள்ளே அர்ச்சனைக்காக ஒரு சிறிய வரிசையும், வெளியே அன்னதானத்திற்காக ஒரு நீண்ட வரிசையும் காத்திருந்தன. சாப்பாட்டை எடுத்துக் கொண்டு நிழலுக்காக இடம் தேடி, தற்காலிகமாகப் போடப்பட்டிருந்த பந்தலுக்குள் ஒதுங்கினேன்.

திடீரென்று சலசலப்பு. வயது முதிர்ந்த ஒருவர் மயங்கி விழுந்து விட்டார். அவருடன் கூட வந்தவர் அவரை ஒரு வாங்கில் கிடத்திவிட்டு, தனது கைத்தொலைபேசியில் யாருடனோ கதைத்துக் கொண்டிருந்தார். சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருசிலர் கிழவரைச் சூழ்ந்து கொண்டனர். நான் சாப்பாட்டை அருகேயிருந்த பிளாஸ்ரிக் கதிரையொன்றில் வைத்துவிட்டு செய்வதறியாது இருந்தேன். சிலர் இன்னமும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

சற்று நேரத்தில் கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் எல்லாரையும் இடித்துத் தள்ளிக் கொண்டு வந்தார். வெறுமையாய்க் கிடந்த கதிரைகள் ஒவ்வொன்றாக நிலத்தில் விழுந்தன. எனது அன்னதானம் மணலிற்குள் விழுந்து சங்கமமாகியது.

“என்ன நடந்தது? என்ன நடந்தது? அம்புலன்ஸ்சைக் கூப்பிடுங்கோ”
ரெலிபோனில் கதைத்துக் கொண்டிருந்தவரிடமிருந்து ரெலிபோனை பறிக்க எத்தனித்தார் அந்த நிர்வாகி.

“இஞ்சை தாருங்கோ போனை. இது என்ன இது? இத்தினூண்டு. இதிலை காதை எங்கை வைக்கிறது? வாயை எங்கை வைக்கிறது?”
“இது ‘மொபைல் போன் பெரியவரே!”

“அது தெரியுது. நீர் எமர்ஜென்சி எண்டு சொல்லும்”
“கோயில் ரெலிபோன் நம்பர் என்ன எண்டு சொன்னனியள்?”

“9363 1134 இல்லை இல்லை 1164”
“என்ன பெரியவரே நீங்களே கோயில் நம்பரை மறந்து போனா….”

“நீர் ஏன் தம்பி கோயிலுக்கு வயது போனவரைக் கூட்டி வந்தனீர்? அதை முதலிலை சொல்லும். இந்தாரும் இந்த அட்றசிற்கு வரச் சொல்லும். ஏர்ஜண்ட். ஏர்ஜண்ட் எண்டு சொல்லும்” கோபத்தில் கத்தினார். வயது முதிர்ந்தவருடன் வந்தவர் செய்வதறியாது திகைத்தார். கோபம் மற்றைய மனிதர்கள் பக்கம் திரும்பியது.

“இஞ்சை ஒரு வயது முதிர்ந்தவர் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறியளா?
“அன்னதானம் பெரியவரே. அதுதான் சாப்பிடுறம்.”

“அன்னதானம் ஆறிப்போனா சாப்பிடமாட்டியளோ?”

அவர் சண்டை பிடித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய மனைவி அங்கு வந்து சேர்ந்தாள். அவரைச் சமாதானப்படுத்த எத்தனித்தாள்.
“ஏனப்பா இப்படிப் பெரிசா சத்தம் போடுறியள்?

“நான் இந்தக் கோயிலைக் கட்ட எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பன் எண்டு தெரியுந்தானே! அதுவும் கும்பாபிஷேசக் கடைசி நாளண்டு ஆராவது கோயிலிலை செத்துக் கித்துப் போனா?”


kssutha@optusnet.com.au

Series Navigation

கே.எஸ்.சுதாகர்

கே.எஸ்.சுதாகர்