• Home »
  • கதைகள் »
  • ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -4 பாகம் -1

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -4 பாகம் -1

This entry is part of 30 in the series 20090219_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


“அமெரிக்கத் தேசீய அரசியல் அமைப்பு நியதிப்படி (National Constitution) முதல் ஜனாதிபதி பதவி ஏற்புரை நிகழ்த்தி 72 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த ஆண்டுகளில் 15 பல்வேறு புகழ்பெற்ற உன்னதக் குடிமனிதர் அடுத்தடுத்து அரசாங்கத்தை ஆட்சி செய்தார். அநேக நாட்டு இன்னல்களில் அவர்கள் கடந்து சென்று முடிவில் பெரு வெற்றி பெற்றனர். நான் இப்போது அதே பணியை விசித்திரமான பெரும் இடருக்கு இடையில் நான்கு ஆண்டுகளுக்கு அரசாங்க நியதிப்படிச் செய்ய நுழைகிறேன். இங்கே முன்னால் இருக்கும் ஒரு தவறால் நம் தேசத்தின் ஐக்கியத்தைத் தகர்க்க இப்போது தீவிரமாக முயலப்படுகிறது.”

ஆப்ரஹாம் லிங்கன் (முதல் பதவி ஏற்புரை) (மார்ச் 4, 1861)

“அமெரிக்க இராணுவப் படையில் 200,000 கறுப்பர்களைத் தேர்ந்தெடுக்க நான் முடிவு செய்திருக்கிறேன். அறிவு மிக்க அமெரிக்க நீக்ரோக்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஏற்பாடு செய்கிறேன்.”

ஆப்ரஹாம் லிங்கன் (சாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையில் உள்நாட்டுப் போர் வெற்றியைப் பாராட்டிப் பேசியது) (ஏப்ரல் 11, 1865)

முன்னுரை:

ஆப்ரஹாம் லிங்கன் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து, சுயமாகக் கல்வி கற்று, வழக்கறிஞராகப் பட்டம் பெற்று மாநில, மத்திய சட்ட சபையில் உறுப்பினராகி இறுதியில் 16 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப் பட்டவர். அவரே அமெரிக்காவின் உன்னத ஜனாதிபதியாக வரலாற்று அறிஞர் பலரால் கருதப்படுபவர். அவரது காலத்தில் அமெரிக்காவின் தென்புறத்து மாநிலங்களில் செல்வந்தர் நில புலங்களில் அடிமைகளாய்ப் பணிபுரிந்து வந்த பல்லாயிரம் கறுப்பர்கள் (நீக்ரோ) நசுக்கப்பட்டுச் சமத்துவ நிலை அடையாது இன்னலுற்று வந்தார். அவரது அடிமை வாழ்வை ஒழித்திடக் கொதித்தெழுந்த அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன். அந்தக் குறிக்கோளை நிறைவேற்ற ஜனாதிபதி லிங்கன் தென் மாநிலத்து அமெரிக்கரோடு தவிர்க்க முடியாத உள்நாட்டுப் போரில் இறங்கி (American Civil War) சுமார் நான்கு ஆண்டுகள் போராட வேண்டிய தாயிற்று.

வடபுறத்து மாநிலங்களும் தென்புறத்து மாநிலங்களும் புரிந்த அந்த உள்நாட்டுப் போரில் இருபுறத்திலும் அநேகர் காயமுற்றுச் செத்து மடிந்தாலும், முடிவில் ஆப்ரஹாம் லிங்கனின் வடபுறத்து மாந்தரே வெற்றி பெற்றனர். பிரிந்து போன வடக்குத் தெற்கு மாநிலங்களை மீண்டும் ஒன்று சேர்த்து அமெரிக்க ஐக்கியத்தைக் காப்பாற்றிய பெருமை ஆப்ரஹாம் லிங்கனுக்கே சார்ந்தது. அத்துடன் அடிமை வாழ்வொழித்த அத்தகைய மகத்தான போராட்டத்தில் வெற்றி பெற்ற ஐந்து நாட்களில் வாஷிங்டன் தியேட்டரில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த போது தென்மாநிலத்தைச் சேர்ந்த ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் இரண்டாம் முறை ஜனாதிபதியான ஆப்ரஹாம் லிங்கன் சுடப்பட்டு அமரரானார்.

ஆப்ரஹாம் லிங்கன் 1809 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் பிறந்தார். அவரது தாயார் நான்சி ஹாங்க்ஸ், லிங்கன் ஒன்பது வயதாகும் போது காலமாகி விட்டார். தச்சு மரவேலை செய்த தந்தையார் தாமஸ் லிங்கன் இரண்டாம் தாரமாக மணந்த மாற்றாந் தாய் லிங்கனைப் பரிவோடும் கனிவோடும் வளர்த்தார். தனது 23 ஆவது வயதில் முதன்முதல் ஆப்ரஹாம் லிங்கன் “பிளாக் காக் போரில்” (Black Hawk War) கலந்து காப்டனாகப் பணியாற்றியது அவருக்குப் புதியதோர் பாதையைக் காட்டியது.

1834 இல் ஆப்ரஹாம் லிங்கன் இல்லினாய்ஸ் மாநில மக்கள் மன்றத்தில் கீழ் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் அரசாங்கப் பணியில் வேலை செய்தார். லிங்கன் தனது 33 ஆவது வயதில் (1842) மேரி டாட் (Mary Todd) என்னும் மாதை மணந்தார். அவருக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன. 1847 -1849 ஆண்டுகளில் அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினராக ஒரு தவணைப் பணிபுரிந்தார்.

1860 இல் ரிப்பபிலிகன் நியமிப்பாளியாகி ஜனாதிபதித் தேர்வில் வெற்றி பெற்று 1861 மார்ச்சில் 16 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். லிங்கன் பதவி ஏற்புக்குச் சில மாதங்கள் முன்பு ஐக்கிய அமெரிக்காவிலிருந்து (Union) தென்பகுதியில் அடிமைக் கொள்கையை ஆதரிக்கும் ஏழு மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விலகிச் சென்றன ! அதன் பிறகு மற்றும் நான்கு மாநிலங்கள் அவற்றுடன் சேர்ந்து கொண்டன. 1863 ஜனவரி முதல் தேதி ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்கக் கூட்டு மாநிலங்களில் (Confederacy) அடிமைகளை நிரந்தரமாய் விடுவிக்கப் புரட்சிகரமான “விடுதலைப் பிரகடனம்” (Emancipation Proclamation) ஒன்றை வெளியிட்டார். அதை எதிர்த்து நிராகரித்த 11 தென்பகுதி மாநிலங்களுக்கும், வரவேற்ற மற்ற வடபகுதி மாநிலங்களுக்கும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது !

அடிமைகள் ஒழிப்புப் பிரச்சனையில் பிளவுபட்ட ஐக்கிய மாநிலங்களை போரிட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பது ஆப்ரஹாம் லிங்கனின் பெரும் பிரச்சனையாகி, நீண்ட போராட்டமாகி விட்டது. 1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிஸ்பர்க் பேருரையில் (Gettysburg Speech) கூறியது : “விடுதலை உணர்ச்சியுள்ள ஐக்கிய அமெரிக்காவைப் பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப் படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப் பட்டவர் என்னும் உன்னத வாசகம் மேற்கொள்ளப் படுகிறது. மக்களுக்காக அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் இந்தப் பூதளத்திலிருந்து அழிந்து போகா.”

1864 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் 400,000 ஓட்டுகள் மிகையாகப் பெற்று இரண்டாம் தடவைப் போர் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் தேர்ந்தெடுக்கப் பட்டு வெள்ளை மாளிகை வேந்தராக நீடித்தார். அடுத்த ஒரு மாதத்தில் போர் நின்றது. உள்நாட்டுப் போரில் மகத்தான் வெற்றி பெற்று தென்பகுதி மாநிலங்களின் போர்த் தளபதி ராபர்ட் லீ (Robert Lee) வடப்பகுதி இராணுவத் தளபதி கிரான்ட் (General Grant) முன்பு சரணடைந்த ஐந்தாம் நாள், ஆப்ரஹாம் லிங்கனை வாஷிங்டன் நாடகத் தியேட்டரில் ஜான் வில்கிஸ் பூத் (John Wilkes Booth) சுட்டுக் கொன்றான். பிரிந்து போன வடதென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன ! தென் பகுதி அமெரிக்க அடிமைக் கறுப்பருக்கு எல்லாம் விடுதலை கிடைத்தது ! ஆனால் வரலாற்று முக்கியத்துவம் உள்ள மகிழ்ச்சிகரமான அந்த வெற்றியைக் கண்டுகளிக்க அவற்றின் ஆக்க மேதை ஆப்ரஹாம் லிங்கன் அப்போது உயிரோடில்லை !

*************************

ஆப்ரஹாம் லிங்கன்
(வரலாற்று நாடகம்)

(பத்து மாதங்களுக்குப் பிறகு)

காட்சி -4 பாகம் -1

பங்கெடுப்போர் :

ஆப்ரஹாம் லிங்கன், மாநிலச் செயலாளர் : வில்லியம் ஸீவேர்டு, போர்த்துறைச் செயலாளர் : எட்வின் ஸ்டான்டன் (Edwin Stanton), நிதிப் பொறுப்புச் செயலாளர் : ஸால்மன் சேஸ், (Treasury Secretary Salmon Chase), அஞ்சல் துறை அதிபர் : மாண்ட்கொமரி பிளேர் (Postmaster General Montgomery Blair), கடற்படைச் செயலாளர் : கிடியான் வெல்லெஸ் மற்றும் அரசாங்க உறுப்பினர் காலப் ஸ்மித் (Galeb Smith), பர்னெட் ஹ¥க் (Burnet Hook),

இடம் : வாஷிங்டன் D.C. வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி கூட்டுரையாடல் அறை.

இப்போதைய காட்சி:

உள்நாட்டுப் போர் மும்முரமாய் நடந்து கொண்டிருக்கிறது. ஜனாதிபதியின் அரசவைச் குழுவினரைக் கூட்டி (Cabinet Members) உரையாடுகிறார்..

வில்லியம் ஸீவேர்டு: (வந்து கொண்டே) இன்று முக்கியச் செய்தி ஏதேனும் இருக்கிறதா ?

எட்வின் ஸ்டான்டன்: ஆமாம் ! மிக முக்கியத் தகவல் ! மகிழ்ச்சி தரும் தகவல் ! நமது ஐக்கியப் படைகளுக்கு வெற்றி ! பெரும் வெற்றி ! நமது ஜெனரல் ஜியார்ஜ் மெக்கிலாலன் தென்னகத்தின் ஜெனரல் ராபர்ட் லீயை ஆன்டியெட்டம் (Antietam) என்னும் இடத்தில் தோற்கடித்தார். படு தோல்வி ! பலத்த வீழ்ச்சி தென்னவருக்கு ! இனியவர் மீள முடியாது என்று தெரிகிறது ! அலையடிப்பு இப்போது திரும்பி விட்டது !

மாண்ட்கொமரி பிளேர்: (ஸ்டான்டனைப் பார்த்து) பிரஸிடெண்ட்டைக் கண்டு பேசினீரா ?

ஸ்டான்டன்: பிரஸிடெண்ட்டை இப்போது பார்த்த பிறகுதான் இங்கு வருகிறேன் !

கிடியான் வெல்லெஸ்: பிரஸிடெண்ட் என்ன சொன்னார் ?

ஸ்டான்டன்: வெற்றிச் செய்தி கேட்டுப் பெரு மகிழ்ச்சி அடைந்தார் ! அவர் கூறியவை : கடேசியில் கடவுள் நம் மேல் கருணை பூண்டார். நமது குறிக்கோள் நேர்மையானது என்பதற்குக் கடவுள் சாட்சியாக நின்றார் ! வெற்றி நமது நேர்மையை நிரூபித்தது என்று பூரிப்பு அடைந்தார் ! இங்கு வந்து கொண்டிருக்கிறார்.

பர்னெட் ஹ¥க்: அடுத்து விடுவிக்கப் போகும் அவரது “பூரண விடுதலை” (Emancipation) உரையை முழக்கப் போகிறார் ! என் கருத்து : அந்த அறிவிப்பு தவறு என்பது ! இப்போது அறிவித்துப் பிரசிடெண்ட் தனது பெயரைக் கறைப்படுத்திக் கொள்வார் ! அமெரிக்க மக்களின் வெறுப்பைத் தேடிக் கொள்வார் ! அதை நாம் நிறுத்த வேண்டுமே !

ஸீவெர்டு: இதுவரையில் நாம் கற்றுக் கொண்டது என்ன ? நம்மவரில் உன்னத மனிதர் பிரசிடெண்ட் என்பது ! நம்மைப் புறக்கணித்து அவரது போக்கிலே அவர் சென்றாலும் அவர் அடுத்தடுத்து வெற்றி அடைவதைக் காண்கிறோம் ! இது நான் பெற்ற அனுபவம் !

பர்னெட் ஹ¥க்: நாட்டில் எங்கும் அவரை வெறுப்பவர் அதிகமாகி விட்டதென்பது நானறிந்தது !

பிளேர்: அமெரிக்காவர் நேர்மையான திசையில் இழுத்துச் செல்பவர் பிரசிடெண்ட் ஒருவர்தான் ! அதில் எந்த சந்தேகமும் இல்லை எனக்கு !

பர்னெட் ஹ¥க்: அவருக்கு எதிராய்ப் பலர் கிளம்பி இருக்கிறார் என்பது ஒற்றர் மூலமாக நான் அறிந்தது !

ஸீவேர்டு: ஆனால் அந்த எதிர்ப்பு நிச்சயம் இங்கில்லை என்பது என் யூகம் !

பர்னெட் ஹ¥க்: நானிதைச் சொல்ல அருகதை அற்றவன் ! நான் கேட்கிறேன் ! பூரண விடுதலை அறிவிப்பு என்றால் என்ன ? என் புரிதல் இதுதான். நாம் போரிடுவது அமெரிக்க ஐக்கியத்தைப் பாதுகாப்பதற்கு ! அடிமத்தன ஒழிப்புச் சட்டத்தை உகந்த காலத்தில் கொண்டு வருவது. இப்போது பூரண விடுதலையை அவரது தனிப்பட்ட வேட்கையாய்க் காட்டிக் கொள்வது சரியா ? அமெரிக்க ஐக்கியம் முதலில் நிலைநாட்டப்பட வேண்டும் ! அதற்குப் பிறகுதான் கறுப்பருக்குப் பூரண விடுதலை கிடைக்கும் ! விடுதலை என்றால் எனக்குப் புரிகிறது ! பூரண விடுதலை என்றால் எனக்குப் புரியவில்லை ! உங்களுக்குப் புரிகிறா ? எனக்குக் குழப்பமாக உள்ளது !

ஸீவேர்டு: பர்னெட் ! நீ சொல்வது தவறு ! அவருக்குச் சிறிதும் குழப்பமில்லை ! குழப்ப மெல்லாம் உம்மைப் போன்று புரியாதவருக்கு ! அவர் பல தடவை அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார். அமெரிக்க ஐக்கியமே அவரது முதல் மூச்சு ! அடிமைத்தன ஒழிப்பைப் பற்றி அவரது கருத்தில் எந்த மாறுபாடும் இல்லை ! இப்போது அமெரிக்க ஐக்கியம் இறுக்கிக் கட்டப்படப் போகிறது ! அடுத்த அடுத்த மூச்சு விடுதலை அளிப்பு ! விடுதலை அறிவிப்பு ! சுடச்சுட விடுதலை அறிவிப்பை அவர் விடுவிப்பது அவரது கடமை ! விடுதலையில் பாதி விடுதலை என்பதில்லை ! பூரண விடுதலை என்பது எனக்குப் புரிகிறது ! உமக்கு அவரது முன்னைப் பேச்சு நினைவிருக்கிறதா ? “அடிமைகளில் எவரை விடுவிக்காமல் போனாலும் சரி நான் அமெரிக்க ஐக்கியத்தைப் பாதுகாப்பேன் ! எல்லாக் கறுப்பரையும் விடுவிப்பதால் ஐக்கியம் பாதுகாக்கப்படும் என்றாலும் நானதைச் செய்து முடிப்பேன் ! சிலரை விடுவித்துப் பலரை விடுவிக்காமல் போனாலும் சரி நான் ஐக்கியத்தைக் காக்கச் செல்வேன்.” பிரசிடெண்ட் மிகவும் தெளிவாக இருந்தார் ! இருக்கிறார் ! அவரது அசையாத தீர்மானம் இப்போது அடிமை நீக்க அறிவிப்பு ! அதில் கால தாமதம் செய்ய மாட்டார் !

பர்னெட் ஹ¥க்: எனக்குப் புரிகிறது அது ! ஆனால் அதை வேறு விதமாகச் செய்யக் கூடியவரும் இருக்கிறார் என்பது என் கருத்து.

பிளேர்: அவரெல்லாம் இவரைப் போல் தீர்க்க தெரிசனத்துடன் செய்திட மாட்டார் என்பது என் கருத்து.

எட்வின் ஸ்டான்டன்: எனக்கும் பிரசிடெண்ட் கொள்கை மீது பூரண உடன்பாடில்லை ! ஆனால் அவர் ஒருவரது போக்குதான் நேர்மையாகத் தெரியுது எனக்கு ! இந்த இக்கட்டான கட்டத்தில் நெஞ்சம் தளராமல் நிமிர்ந்து நின்று போரைத் திறமையாக நடத்தி வருகிறார். இப்போது அதன் நற்பலனை அனுபவிக்கிறார் ! ஐக்கியப் பிணைப்புக்கு வெற்றி ! அடிமைக் கறுப்பருக்கு விடுதலை ! அவரது குறிக்கோள் நிறைவேறியது !

பர்னெட் ஹ¥க்: ஆனாலும் போர் முடிந்து தோரணம் கட்டுவதற்குள் பூரண விடுதலை அறிவிப்பை விடுவிக்க வேண்டுமா ?

வெல்லெஸ்: உனக்கு நிச்சயமாகத் தெரியுமா ?

பர்னெட் ஹ¥க்: ஆமாம் ! இன்று அவர் அறிவிக்கப் போகிறார் நிச்சயம் !

வெல்லெஸ்: அப்படியானல் என் ஆதரவு அவருக்கு உண்டு !

ஸீவேர்டு: மிஸ்டர்ஸ்டான்டன் ! ஜெனரால் ராபர்ட் லீயின் படை வீழ்ந்து விட்டதா ?

ஸ்டான்டன்: இன்னும் முடியவில்லை ! ஆனால் அவரது படையினர் பலர் மடிந்தனர் ! சிலர் ஓடிப் போயினர் ! ஒரு சிலர் களத்தில் இன்னும் காலூன்றிப் போரிடுகிறார் ! எந்த சமயத்திலும் அவர் சரணடைந்து வெள்ளைக் கொடியை ஏந்திக் காட்டலாம் !

(அப்போது பணியாள் வந்து பிரசிடெண்ட் லிங்கன் வருவதை அறிவிக்கிறான். அனைவரும் அமைதியாக வாசலை நோக்குகிறார். ஆப்ரஹாம் லிங்கன் அறைக்குள் நுழைகிறார். அனைவரும் எழுந்து நிற்கிறார்.)

(தொடரும்)

***************************
தகவல்

Based on The Play

Abraham Lincoln – Play By : British Playwright John Drinkwater (1882), School Edition
The Copp Clark Company Ltd, Toronto, Canada (1927)

1. Biography of Abraham Lincoln (www.whitehouse.gov/history/presidents/al16.html

2. Chambers Encyclopedia (1968 Edition)

3. Encyclopaedia Britannica (1973 Edition)

4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5. Britannica Concise Encyclopedia (2003 Edition)

6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7. The Wordsworth Dictionary of Quotations (1997)

8 The Life of Abraham Lincoln By Stefan Lorant. (1961)

9. Lincoln The Unknown By Dale Carnegie (1959)

10. Great Issues in American History – From the Revolution to the Civil War (1765-1865) By Richard Hofstadter (1958).

11. Abraham Lincoln -The Prairie Years & The War Years By Carl Sandburg -One Volume Edition (1954)

12 The Emergence of Lincoln – Prologue to Civil War (1859-1861) By Allan Nevins (1950)

13. Abraham Lincoln -The Man Behind the Myths By : Stephen B. Oates (1985)

14. The American Civil War – A History By : Mark Saunders (1993)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (February 18, 2009)]

Series Navigation