திருப்புமுனை – 2

This entry is part [part not set] of 34 in the series 20090205_Issue

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்



மருமகள் இரண்டு பேருக்கும் காபி கொண்டு வந்து தந்தாள். ‘எதுக்கும் வீண் சிரமம்?’ என்று ராஜாராமன் சொல்வாரோ என்று பார்த்தார் சுவாமிநாதன். முறுவலுடன் அவள் பக்கம் பார்த்துவிட்டு காபியை வாங்கிக் கொண்டார் அவர். ‘தேவையில்லாமல் பேசமாட்டார்போலும்’ என்று நினைத்துக் கொண்டார்.
காபியைக் குடித்துக் கொண்டே “மகள்கள் மூன்று பேரும் சொன்னார்கள், வீட்டை விற்றுவிட்டு அவர்கள் இருக்கும் ஊருக்கு வரச்சொல்லியும், யாராவது ஒருவர் வீட்டுக்கு அருகில் பிளாட் ஒன்றை சின்னதாக வாங்கிக்கொண்டு இருக்கச் சொல்லியும். நான்தான் வீட்டைவிட்டு எங்கேயும் வரமாட்டேன்னு சொல்லிவிட்டேன்” என்றார்.
“மனைவியின் நி¨வுகள் இருக்கும் வீடு இல்லையா.”
ராஜாராமன் சிரித்தார். “நான் கொஞ்சம் வித்தியாசமான ஆள். மனைவியின் நினைவுகள் இல்லாதவன் என்று அர்த்தம் இல்லை. என்னுடைய கண்ணோட்டத்தில் எந்த மனிதனாவது யாருக்காகவோ வருத்தப்பட்டுக் கொண்டு வாழ்க்கையை ஏதோ ஒரு விதமாக கழிக்கிறான் என்றால் வாழ்க்கையின் மதிப்பை சரியாக உணரவில்லை என்று அர்த்தம். உடம்பில் கொஞ்சம் தெம்பு இருந்தாலும், வாழ்க்கையின் அடிப்படை தேவைகள் நிறைவேறக் கூடிய வசதி இருக்கும் ஒவ்வொரு நபரும் ஏதோ ஒரு லட்சியத்தை நோக்கி முன்னேற வேண்டும். நம்முடன் ரயில் பயணம் செய்யும் ஒவ்வொரு பயணியும் நம் கூடவே கடைசி வரையிலும் வரப் போகிறானா என்ன? நேரம் வந்துவிட்டால் யாராக இருந்தாலும் போக வேண்டியதுதான்.”
சுவாமிநாதன் கண்களை அகல விரித்து ‘இவர் யார்? எந்த ஆன்மீக குருவோ இந்த துக்கக் கடலிலிருந்து தன்னை மீட்பதற்காக தன் வீட்டுக்கு வந்திருக்கிறாரா?’ என்பதுபோல் பார்த்துக் கொண்டிருந்தார். இதே வார்த்தைகளை கடந்த ஒரு மாதமாக எத்தனையோ பேர் பலவிதமாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அந்த வார்த்தைகள் எதுவும் தன்னை இந்த அளவுக்கு பாதிக்கவில்லை.
“அப்புறம்?”
“பந்தங்களிலிருந்து விடுதலை கிடைத்ததும் சின்ன மகள் ரொம்பவும் வற்புறுத்தியதால் அவள் இருந்த ஊருக்குப் போனேன். சில நாட்கள் தங்கிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தேன். வழியில் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சிறுவனிடம் பேச்சுக் கொடுத்து அவன் கதை முழுவதும் தெரிந்துகொண்டேன். அவனுடைய பெற்றோரும், நெருங்கிய உறவினர்களும் சுனாமியில் இறந்து போனதாகவும், அன்றிலிருந்து பிச்சையெடுத்து பிழைப்பதாகவும் சொன்னான். அப்படி கிடைத்த வருமானத்திலும் லோக்கல் தாதாவுக்கு பங்கு கொடுத்துக் கொண்டு, அவனிடம் அடியும் உதையும் வாங்கிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தான். இப்படிப்பட்ட கதைகளை இதற்கு முன்னாலும் நான் கேள்விப்படாமல் இல்லை. ஆனால் இப்போ எனக்குப் பிடித்த விதமாக செயல்படுவதற்கு தேவையான சுதந்திரம் இருக்கிறது.”
சுவாமிநாதனுக்கு இந்த வார்த்தைகள் அதர்ச்சியாக இருந்தன.
“அந்தச் சிறுவனை என்னுடன் ஊருக்கு அழைத்து வந்தேன். வேலைக்காரியின் உதவியால் தலைக்கு குளிக்கச் செய்து நன்றாக சாப்பாடு போட்டேன். நான்கு ஜதை உடைகள் தைக்க வைத்தேன். ஒரு வாரம் அவனுக்கு வயிறார சாப்பாடு போட்டு அம்புலிமாமா கதைகளை சொல்லி, அவன் அனுபவங்களை பொறுமையாக கேட்டுக் கொண்டு அவன் என்னிடம் தங்கியிருப்பான் என்ற நம்பிக்கை வந்த பிறகு பள்ளியில் சேர்ப்போம் என்று அழைத்துப்போனேன்.”
“அதற்குப் பிறகு?”
“அவன் வயதிற்குத் தகுந்த வகுப்பில் சேருவதற்கு அவனுக்கு தகுதியில்லை. சின்ன வகுப்பில் சேர்க்கலாம் என்றால் வயது அதிகம் என்று பள்ளியில் சேர்த்துகொள்ள மறுத்துவிட்டார்கள்.”
“பின்னே என்ன செய்தீங்க?”
“என்ன செய்தேனா? இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்து வீட்டிலேயே படிப்பு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். என் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித் தருவதற்கு எனக்கு நேரம் இருக்கவில்லை. பொருளாதார நெருக்கடி இருந்ததால் கார்ப்பொரேஷன் பள்ளியிலேயே அவர்களைப் படிக்க வைத்தேன். புத்திசாலிகளாக இருந்ததால் நன்றாகப் படித்தார்கள். பெண்குழந்தைகளுக்கு பிளஸ் டூ வரையில் இலவசக் கல்வித் திட்டம் வேறு இருந்தது. அதிர்ஷ்டமும் சேர்ந்து கொண்டதால் மேல் படிப்பும், வேலை, திருமணம் எல்லாமே நான் எதிர்பார்த்ததை விட சுலபமாக முடிந்து விட்டன. எல்லோரும் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள்.”
“இப்படி அனாதைப் பையனை படிக்க வைக்கிறேன், வளர்க்கிறேன் என்று சொன்னால் அவர்கள் எதுவும் சொல்லவில்லையா?” இடையில் புகுந்து கேட்டார் சுவாமிநாதன்.
“யாருக்கத் தெரியும்? கொஞ்சம் பிடிக்காமல் இருந்திருக்கலாம். இருந்தாலும் எனக்குத் திருப்தி கிடைக்கும் காரியத்தில் மூழ்கிப்போய், சாதாரணமாக வாழ்ந்து வருவதில் மூன்று பேருக்கும் சந்தோஷம்தான்.”
சற்று நிறுத்தி டீபாய் மீது வைத்திருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தார். மருமகள் உப்புமாவை கொண்டு வந்து இரண்டு பேருக்கும் தந்தாள்.
“முத்த மருமகள்” என்றார் சுவாமிநாதன்.
அப்படியா என்பது போல் அறிமுகப் புன்னகையை உதிர்த்துவிட்டு “நான் காலையில் டிபன் சாப்பிட்டுத்தான் வந்தேன். உங்க மாமனாருக்குக் கொடும்மா. என்னால் சாப்பிட முடியாது” என்றார்.
“கொஞ்சம்தானே. சாப்பிடுங்கள்” என்றார் சுவாமிநாதன்.
“இல்லைங்க. எங்கள் ஆசிரம நிபந்தனைகளில் மிக முக்கியமானவை இரண்டு. முதலாவது தினமும் யோகாசனம் செய்வது. வெஜிடேரியன் உணவை வேளை தவறாமல் சாப்பிடுவது. இந்த இரண்டையும் கட்டாயமாக கடை பிடிப்ப§ன். ஒரு நாளைக்கு இரண்டு முறை காபி குடிப்பேன். அது என்னுடைய வீக்னெஸ். இன்று இரண்டாவது டோஸ் குடிக்காமல் வந்தேன். ஒரு வேளை நீங்கள் கொடுத்தால் மாட்டேன்னு சொல்ல வேண்டாமே என்றுதான்.”
“இந்த ஆசிரமம் எப்படி தொடங்கியது?”
“என்னுடைய தத்தப் புத்திரன் என்னுடைய பயிற்சியில் ஆங்கிலம், தமிழ், சம்ஸ்கிருதம் நன்றாகவே கற்றுக் கொண்டான். கணக்குப் பாடமும், விஞ்ஞானமும் கற்றுக் கொடுப்பதற்காக ட்யூஷன் மாஸ்டரை ஏற்பாடு செய்தேன். ஒரே வருடத்தில் ஐந்தாம் வகுப்பு நுழைவுத் தேர்வுக்கு தயாராகிவிட்டான். மூன்றாவது ரெங்க பெற்று பள்ளியில் சீட் வாங்கிவிட்டான்.” பெருமையுடன் சிரித்தார்.
“நான் விரும்பியது போலவே நல்ல பள்ளியில் அவனை சேர்த்துவிட்டேன். அந்த சமயத்திலதான் பணவசதி இருந்தும் அன்புக்காக ஏங்கும் சில வயதானவர்களை மார்னிங் வாக் போகும் போது சந்தித்தேன். தங்களுடைய வருத்தங்களை, வேதனையை என்னிடம் பகிர்ந்துகொண்டார்கள். பணத்தால் அன்பை விலைக்கு வாங்க முடியாதே தவிர எத்தனையோ நல்ல காரியங்களை செய்யமுடியும் என்று அவர்களிடம் எடுத்துச் சொன்னேன். எந்த அன்புக்காக நீங்க தவிக்கிறீங்களோ அந்த அன்பை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். உங்களுடைய எல்லைக்குள் முடிந்த உதவியைச் செய்யுங்கள். உங்களுக்குத் தேவையான அன்பு அவர்களிடமிருந்து கிடைக்கும் என்று சொன்னேன். ஐந்தாறு பேர் ஒரு குரூப் ஆக சேர்ந்துகொண்டோம். எல்லோரிடமும் தேவைக்கு மிஞ்சிய வருமானம் இருந்தது. ஆளுக்கொரு அனாதைக் குழந்தையை வளர்த்து வருகிறோம். அவனுடைய படிப்பு, உணவு, நடத்தை எல்லாம் கவனித்துக் கொண்டு, பள்ளியிலிருந்த வந்ததும் ஒரு தாய் குழந்தையை எப்படி பராமரிப்பாளோ, சிரத்தையாக தயார் செய்து எப்படி பள்ளிக்கு அனுப்புவாளோ அதேபோல் அவரவர்களின் பேரன்களை வளர்த்து வருகிறோம். என் வளர்ப்பு பேரன் அடுத்த வருடம் பத்தாம் வகுப்புக்கு வந்துவிடுவான். அதேபோல் இன்னும் இரண்டு குழந்தைகள் பிளஸ் டூ முடிக்கப் போகிறார்கள். அதற்குப் பிறகு இன்னொரு பேட்ச் குழந்தைகளை சேர்த்துக் கொள்ளலாம்னு இருக்கிறோம். இதுதான் எங்களுடைய புது வசந்தம். இரண்டு வருடங்களுக்கு முன்னால் இந்த நிறுவனத்தை ரிஜிஸ்டர் செய்திருக்கிறோம். இப்போ இருபத்தைந்து தாத்தாக்களும், இருபத்தைந்து பேரன்களும் இதில் மெம்பர்கள்.” ராஜாராமன் முகத்தில் இனம் புரியாத சந்தோஷம்.
“தினமும் காலையில் யோகா மாஸ்டர் வருவார். வயோதிகத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு யோகா கற்றுக் கொடுப்பதில் ஆர்வமும், திறமையும் மிகுந்தவர். காலையில் ஐந்தரை முதல் ஆறரை வரையில் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் தனித் தனியாக யோகா பயிற்சியளித்துவிட்டுப் போவார். அதற்குப் பிறகு குழந்தைகள் பள்ளிக்குத் தயாராகி ஏழரை மணிக்கெல்லாம் உணவுக்கூடத்திற்கு வந்து விடுவார்கள். எங்களிடம் இரண்டு சமையல்காரர்கள் இருக்கிறார்கள். பால், காபி, டிபன் அவரவர்களுக்கு வேண்டிய விதமாக எடுத்துக் கொள்வார்கள். நிர்வாகப் பொறுப்பை எல்லோரும் முறையாக பங்கு போட்டுக்கொண்டு பார்த்துக்கொள்கிறோம்.”
“மெம்பர்கள் அதிகமானபோது பிரச்னைகள், இடையூறுகள் வரவில்லையா?”
“சின்னச் சின்ன பிரச்னைகளை எளிதாகவே பேசி தீர்த்துக் கொள்வோம். தனிமை வாழ்க்கையின் துன்பத்தை அனுபவித்தவர்கள் என்பதால் கூடியவரையில் சேர்ந்து சந்தோஷமாக வாழத்தான் விரும்புவார்கள். ரொம்ப அரிதாக சண்டை மனப்பான்மை கொண்ட ஆசாமியாக இருந்துவிட்டால், பிரச்னையை தீர்க்க முடியாமல் போய்விடும். அப்படிப்பட்ட சமயத்தில் அந்த ஆளையே நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஒரு முறை அப்படித்தான் நடந்தது. ஒரு நபரின் நடவடிக்கையால் ஆசிரமத்தின் சூழ்நிலை மாசடைவதில் எனக்கு விருப்பம் இல்லை. என் வீடே ஆசிரமமாக இருப்பதால் என் பேச்சு எடுப்பட்டுக் கொண்டிருக்கிறது இத்தனை நாளும்.” சிரித்தார். “ஜனநாயக முறையை எவ்வளவு தவறாக பயன்படுத்த முடியுமோ நாம் நாட்டைப் பார்த்து கற்றுக்கொள்ளலாம். அதிர்ஷ்டவசமாக அதுபோன்ற பெரிய பிரச்னைகள் எதுவும் வரவில்லை. மெம்பர்கள் எல்லோரும் ஆசிரம நிபந்தனைகளை கட்டாயம் பின்பற்றித்தான் ஆகணும். அந்த விஷயத்தில் நான் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்” மறுபடியும் சிரித்தார் அவர்.
“குழந்தைகளின் படிப்பு எப்படி போய்க் கொண்டிருக்கிறது?” ஆர்வத்துடன் கேட்டார் சுவாமிநாதன்.
“தனிப்பட்ட முறையில் ஆதரவும், கவனமும் கிடைக்கும்போது ஒவ்வொரு குழந்தையும் நன்றாகவே படிக்கும் என்று என் அனுபவம் சொல்கிறது. தாத்தாகளுக்கு நடுவில் போட்டி, யாருடைய பேரன் நன்றாக படிப்பான் என்று. அதற்காக அடிதடி சண்டை எதுவும் கிடையாது. போன கோடையில் ஒரு பெரியவர் ஒவ்வொரு மாலையிலும் பஞ்சதந்திரக் கதைகளை, நீதிக் கதைகளை சொன்னபோது குழந்தைகள் மட்டுமே இல்லை பெரியவர்களும் நன்றாக ரசித்தோம். நான்கு குழந்தைகள் படிப்பில் கொஞ்சம் பின் தங்கியிருக்கிறார்கள். அவர்களுடைய ரசனையை பொறுத்து ஒருவனுக்கு மிருதங்கம், ஒருவனுக்கு ப்ளூட், மேலும் இருவரை டென்னிஸ் கோட்சிங் வகுப்பில் சேர்த்திருக்கிறோம். ஒரு மாணவன் இண்டர் ஸ்கூல் டென்னிஸ் போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்டு ஸ்கூலுக்கு ரோலிங் ஷீல்ட் பெற்றுக்கொடுத்தான்.
ஒவ்வொரு வாரமும் ஒரு மனநல நிபுணரும், மருத்துவரும் வருவார். எல்லோரையும் மருத்துவ பரிசோதனை செய்வதற்காகவும், கௌன்ஸிலிங் தேவைப்பட்டவர்களுடன் பேசுவதற்காகவும். குழந்தைகள் பள்ளிக்கு போனபிறகு கணக்கு வழக்குகளை பார்த்து விட்டு, சாப்பாட்டை முடித்துக் கொண்டு சிலர் ஓய்வு எடுத்துக்கொள்வார்கள். சிலர் நூலகத்திற்கு போவார்கள். ஆசிரமத்திற்கு அருகிலேயே ஒரு கோவில் இருக்கிறது. அங்கே மாலை வேளையில் கதா காலட்சேபம் நடக்கும். விருப்பமுள்ளவர்கள் அங்கே போவார்கள். நாலுமணிக்கு குழந்தைகள் பள்ளியிலிருந்து வருவார்கள். அவர்களுக்கு டிபன் காபி கொடுத்துவிட்டு விளையாட அனுப்புவோம். ஹோம்வர்க் முடித்த பிறகு பஜன், பாட்டு வகுப்புகள் நடக்கும்.” சற்று நிறுத்திய ராஜாராமன் “அடடா! உங்கள் கண்களில் கண்ணீர்” என்றார்.
தாரையாக கன்னங்களில் வழிந்துகொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே “நீங்க ரொம்ப உயர்ந்த மனிதர் ராஜாராமன். உங்களுடைய அறிமுகம் கிடைத்தது என் அதிர்ஷ்டம். உங்கள் ஆசிரமத்தில் எனக்கு கொஞ்சம் இடம் கொடுங்கள்” என்றார் சுவாமிநாதன்.
ராஜாராமன் எழுந்து அருகில் வந்து சுவாமிநாதனின் தோளில் தட்டிக் கொண்டே “நல்லா சொன்னீங்க போங்க. நீங்கள்தான் புது வசந்தத்திற்கு இடம் கொடுக்கணும்” என்று சிரித்தார்.
“கட்டாயம். நம் தேவைகளுக்கு தகுந்தாற்போல் ஏதாவது மாற்றங்கள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். பெரிய ஹால் தேவையாக இருந்தால் ஏற்பாடு செய்துவிடலாம்.”
“அவசரப்படாதீங்க. உங்க மகன்களுடன் கலந்து யோசித்து பிறகு முடிவு செய்யுங்கள். சமீபத்தின் எங்கள் ஆதிரமத்திற்கு … அதாவது நம் ஆசிரமத்திற்கு சிஸ்டா என்ற மருந்துக் கம்பெனி பொருளுதவி செய்வதற்கு முன் வந்திருக்கிறது. நம் ஆசிரமத்தில் சில மெம்பர்களுக்கு குழந்தையின் படிப்பு மற்றும் இதர செலவுகளை ஏற்றுக் கொள்ளும் பொருள் வசதி இல்லை. ஆரம்பகாலத்தில் அப்படிப்பட்டவர்களை மெம்பர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஏன் என்றால் தங்குவதற்கு இலவசமாக இடம் கொடுக்க முடிந்ததே தவிர மற்ற செலவுகளை தாங்கும் சக்தி எனக்கு இல்லை. ஒவ்வொரு சீனியர் மெம்பரும் தன்னுடைய செலவுகளுக்காகவும், தான் பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ள குழந்தையின் செலவுகளுக்காகவும் நாலாயிரம் ரூபாய் கட்டணும். அந்த தொகையில் பாதியை ஏற்றுக்கொள்வதற்கு மருந்து கம்பெனி முன் வந்துள்ளது. வங்கி ஒன்று என் பழைய வீட்டை இடித்து எல்லா வசதிகளுடன் புதிய கட்டிடத்தை கட்டுவதற்காக கொஞ்சம் நன்கொடையாகவும், வட்டியில்லாத கடனாக கொஞ்சமும் உதவி செய்வதாக சொல்லியிருக்கிறது. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் சிலர் தாராளமாக நன்கொடை தந்திருக்கிறார்கள். வயதான பெண்கள் சிலர் தங்களுக்கு ஆசிரமத்தில் இடம் கிடைக்குமா என்று கேட்டுக் கொண்டிருக்கிறாகள். இதுவரையில் நம் ஆசிரமத்தில் பெண்களுக்கு இடம் ஒதுக்கவில்லை. உங்களுக்கு பரிபூர்ண சம்மதம் என்றால் ஒரு வீட்டில பெண்களுக்கும், இன்னொரு இடத்தில் ஆண்களுக்கும் தனித் தனியாக ஏற்பாடு செய்துகொள்ளலாம். இவை எதுவும் அவசரப்பட்டு எடுக்கக் கூடிய முடிவுகள் அல்ல. நன்றாக யோசித்துவிட்டு செய்ய வேண்டிய காரியங்கள்.”
மந்திரத்திற்கு கட்டுண்டவர்போல் ராஜாராமனின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த சுவாமிநாதன் “நீங்கள் சொல்வதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். மகன்கள் என்னுடைய பேச்சை தட்ட மாட்டார்கள். இருந்தாலும் அவ்களுடன் கலந்தாலோசித்துவிட்டு அவர்களும் சம்மதித்த பிறகே முன்னால அடியெடுத்து வைப்போம்” என்றார்.
“நல்லது. ஒருமுறை ஆசிரமத்திற்கு போய்விட்டு வருவோமா?” என்று கேட்டபடி எழுந்துகொண்டார் ராஜாராமன்.
தானும் எழுந்துகொண்டு மருமகளிடம் ஒரு வார்த்தைச் சொல்லிவிட்டு ராஜாராமனைத் தொடர்ந்தார் சுவாமிநாதன்.
வழியில் போய்க் கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி ஏறிக் கொண்ட பிறகு “இன்றைக்கு என் மருமகளுக்கு நிம்மதியாக தூக்கம் வரும், கிழவனின் தொல்லை விட்டது என்று” என்றார் சுவாமிநாதன்.
ராஜாராமன் மறுப்பது போல் தலையை அசைத்துவிட்டு “அழுது வடியும் முகத்தை, துக்கம் நிறைந்த பார்வையை யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது சுவாமிநாதன். வயதான பிறகு எங்கள் பாட்டி…. அப்பாவின் அம்மா, எங்க அம்மாவை அடிக்கடி கூப்பிட்டுக் கொண்டும் சதா தொணதொணத்துக் கொண்டும் இருப்பாள். அம்மாவை ஒரு நிமிஷம்கூட நிம்மதியாக இருக்கவிட மாட்டாள். பொழுது போகாமல் சதா சர்வகாலமும் அம்மாவைப் பிடுங்கியெடுத்தாள். உடம்பில் தெம்பு இருந்த காலத்தில் பாட்டி எங்க அம்மாவை ரொமப ஹீனமாக நடத்தி வந்தாளாம். அதனால் அம்மாவுக்கு பாட்டியிடம் வெறுப்பு. அது போலவே என் மனைவிக்கும் எங்க அம்மாவுக்கும் நடுவில் ஒற்றுமை இருந்தது இல்லை. சதா ஏதாவது சண்டை சச்சரவுகள் இருந்துவந்தன. நாம் சாதாரணமாக எதிராளியை நிம்மதியாக சுதந்திரமாக செயல்படுவதற்கு வாய்ப்பு தரமாட்டோம். அவர்களுடைய நித்தியப்படி காரியங்களில் நமக்கு உரிமை இருப்பது போல் மூக்கை நுழைத்துக்கொண்டும், விமரிசித்துக் கொண்டும் இருப்போம், நம்மை யாராவது இதுபோல் நடத்தினால் நமக்கு எவ்வளவு வேதனையாக இருக்குமோ யோசித்துப் பார்க்க மாட்டோம். பிறத்தியாரை குற்றம் சொல்வதை குறைத்துக் கொண்டு, மனச்சாட்சிக்கு நேர்மையாக நடந்துகொண்டால் இந்த உலகம் இன்னும் அழகாக காட்சியளிக்கும். இப்படிச் சொன்னதற்கு தவறாக நினைக்காதீங்க.”
திகைத்துப் போனார் சுவாமிநாதன். ஒரு நிமிஷம் மனதிற்கு கஷ்டமாக இருதது. யோசனையில் ஆழ்ந்தார். அவர் சொன்னதும் உண்மைதான். விசாலிக்கு அம்மாவைக் கண்டால் பிடிக்காது. அம்மாவும் விசாலியில் காதில் விழுவதுபோல் சதா எதாவது குற்றம் குறை சொல்லிக்கொண்டே இருப்பாள். அம்மாவின் கண்களில் ஒருநாளும் விசாலியின்பால் அன்போ, நெருக்கமோ தென்பட்டது இல்லை. அதேபோல் விசாலியும். கடந்த காலத்தில் நடந்த சில கசப்பு நிகழ்ச்சிகள் மனதின் ஏற்படுத்திய பாதிப்பால் மருமகளிடம் தன்னால் வாஞ்சையுடன் இருக்க முடியவில்லை. சின்ன வயதில் தந்தையின் கட்டுப்பாடுகள் தனக்குப் பிடிக்காமல்தான் இருந்தன. ஆனால் அந்தக் கட்டுப்பாடுகளால் தனக்கு நல்லதுதான் நடந்தது. நன்றாகப் படித்தார். வாழ்க்கையிலும் முன்னுக்கு வந்தார். அதைத்தான் ராஜாராமனிடமும் சொன்னார்.
“குழந்தைகள் வளரும் வயதில் அவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதில் தவறு இல்லை. ஆனால் கல்யாணமாகி அவர்கள் ஒரு குடும்பமாக வாழ்ந்துகொண்டிருக்கும்போது அவர்களை நண்பர்களாக நடத்தணும். அன்பாக பழகணும். மனதில் அன்பு இல்லாதபோத வாய் பேசும் மொழி செயற்கையாக இருக்கும். என்னிடம் பிரியம் இல்லாதவர் எவ்வளவு அன்பு கலந்து பேசினாலும் என்னால் கண்டு பிடித்துவிடமுடியும். அவர்களிடமிருந்து விலகியே இருப்பேன்.” சொன்னார் ராஜாராமன்.
“உண்மைதான்.” ஒப்புக்கொள்வது போல் சொன்னார் சுவாமிநாதன். அதற்குள் ஆட்டோ புது வசந்தம் கட்டிடத்தின் முன்னால் வந்து நின்றது. பதினைந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஐந்தாறுபேர் ஓடோடி வந்தார்கள்.
“இன்றைக்கு நம் வீட்டுக்கு புது தாத்தா வந்திருக்கிறார். பார்த்தீங்களா?” என்றார் ராஜாராமன்.
“தாத்தா! வெல்கம்” என்றார்கள் எல்லோரும் ஒரே குரலில்.
சுவாமிநாதனுக்கு புல்லரிப்பதுபோல் இருந்தது. உடல் தள்ளாடியது. சட்டென்று ஒரு பையன் முன்னால் வந்து அவருடைய கையைப் பற்றிக் கொண்டான். எல்லோரும் சேர்ந்து உள்ளே போனார்கள்.

*******************************************************************

ஒருமாதம் கழிந்துவிட்டது. மூத்தமகன் குடும்பத்துடன் அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டான். உலகமே தனக்கு சூனியமாகிவிடும் என்று எண்ணியிருந்த சுவாமிநாதனின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது. தன்னுடைய பெரிய வீட்டை புது வசந்தமாக மாற்றிய பிறகு சுவாமிநாதனின் போக்கில் நிறைய மாற்றம் வந்துவிட்டது.
படிக்கும் நாட்களில் நிறைய மதிப்பெண்களை பெற வேண்டும், மேற்படிப்பு படிக்கணும், நல்ல வேலையில் சேர வேண்டும், அழகான பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும், குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும்.. இதுபோன்ற தற்காலிக லட்சியங்களுடன் அவற்றை சாதிக்க வேண்டுமென்ற தவிப்புடன், எதிர்பார்ப்பு ஏமாற்றங்களுக்கு நடுவில் பாதி வாழ்க்கை கழிந்து போய்விட்டது. குழந்¨தைகள் பெரியவர்களான பிறகு வெளிநாட்டில் ஸ்திரப்பட்டு விட்டதால் இடைவெளி மனதளவிலும் ஏற்பட்டுவிட்டது. அந்த விஷயத்தில் தனக்கும் விசாலிக்கும் கொஞ்சம் மன வருத்தம் இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் என்று வாழ்ந்துகொண்டு நிம்மதியைத் தேடிக் கொண்டார்கள். இப்படிபட்ட நிலையில் விசாலியின் இழப்பு தன்னையும் மரணத்தை எதிர்நொக்கி காத்திருப்பதுபோல் உணரச்செய்தது. இப்பொழுது இந்த அனாதைக்குழந்தைகளுக்கு தான் புகலிடம் கொடுத்ததைவிட அந்தக் குழந்தைகள்தான் தனக்கு பற்றுக்கோலாக மாறிவிட்டார்கள்.
நள்ளிரவில் திடீரென்று விழிப்பு வந்த சுவாமிநாதனுக்கு பக்கத்திலேயே கட்டில்மீது படுத்திருந்த ஆறுவயது நந்தூ ரொம்ப நெருக்கமானவனாக தோன்றினான். தன் கழுத்தை சுற்றியிருந்த அவன் கைகள் பிரிக்க முடியாத பந்தங்களாகத் தோன்றின. தாத்தா தாத்தா என்று நாள் முழுவதும் சுவாமிநாதனையே சுற்றிச் சுற்றி வருவான். அவனை பள்ளிக்கு தயார் செய்து அனுப்புவதும், வந்த பிறகு வீட்டுப்பாடத்தை சொல்லித் தருவதும் இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கப் போகும் வரையில் அவருக்கு ஒரே தவிப்பு.
கள்ளங்கபடமற்ற அவன் சிரிப்பில், மின்னும் கண்களில் அவருக்குக் கிடைக்கும் நிம்மதியும், திருப்தியும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. ஜன்னல்வழியாக வந்து விழுந்த நிலா வெளிச்சத்தில் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே கலைந்த முடியை சரிசெய்து, நெற்றியில் மென்மையாக முத்தம் பதித்தார். தூக்கக் கலக்கத்தில் அவன் “தாத்தா தாத்தா” என்று கைகளால் துளாவினான். “தூங்குடா கண்ணா! இங்கேதான் இருக்கேன்” என்றபடி லேசாக தட்டிக் கொடுத்தார். கவலை நீங்கியதுபோல் அவன் மறுபடியும் தூங்கிவிட்டான். சுவாமிநாதனும் தூக்கத்தில் ஆழ்ந்துபோனார்.

முற்றும்

தெலுங்கில் வாரணாசி நாகலக்ஷ்மி
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்