மோந்தோ- 2

This entry is part [part not set] of 36 in the series 20090129_Issue

பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா


ஒரு நாள், இவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வெகு அண்மையில் சத்தமேதுமின்றி கறுப்புநிற சரக்குக் கப்பலொன்று போனது.

– அந்த கப்பலுக்கு என்ன பேரு? – மோந்தோ கேட்டான்.

தூண்டில் மனிதர் தனது கையை மடக்கிக் குடைபோல கண்களுக்கு மேலாகப் பிடித்தார்.

– “எரித்ரேயா”- என வாய் திறந்து சத்தமாக படித்துச் சொன்னார். அவருக்குச் சந்தேகம் வந்திருக்கவேண்டும், “உனது கண்களில் ஏதும் பிரச்சினையா? வியப்புடன் கேட்டார்.

– நீங்க நினைக்கிற மாதிரி இல்லை, உண்மையில் எனக்குப் படிக்கத் தெரியாது, – என்பது மோந்தோவின் பதில்.

– அப்படியா? – தூண்டில் மனிதர் மீண்டும் வியப்பில் ஆழ்ந்தார்.

இருவரும் வெகு நேரம் கப்பல் தங்களைக் கடந்து செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

– கப்பலின் அந்த பெயருக்கு என்ன அர்த்தம்- மோந்தோ வினவினான்.

– எரித்ரேயா என்ற பேரா? அதுவொரு நாட்டோட பேரு. செங்கடல் பகுதியைச் சேர்ந்த ஆப்ரிக்க நாடொன்றின் பெயர்.

– அழகான பெயர். அந்நாடுகூட அழகாகத்தான் இருக்கணும் – என்ற மோந்தோ சிறிது நேரம் யோசிப்பதுபோல பாவனை செய்தான்.

– அங்கிருக்கிற கடலை செங்கடல் என்றா சொல்றாங்க?

ழியோர்தன்- தூண்டில் மனிதர் அவனது கேள்வியைக் கேட்டு சிரிக்கிறார்.

– செங்கடலென்றதும், அங்கிருக்கிற கடலும் சிவப்பா இருக்குமென்று நினைக்கிறாயா?

– எனக்குப் பதில் சொல்ல தெரியலை – மோந்தோ.

– சூரியன் மறையும்போது கடலும் சிவப்பா மாறுவது உண்மை. ஆனால் அக்கடலுக்கு அப்படியொரு பெயர்வர வேறு காரணத்தைச் சொல்றாங்க. ஒரு காலத்தில் அங்கிருந்த மனிதர்கள் நல்ல சிவப்பா இருந்தாங்களாம்.

மோந்தோ, சரக்குக் கப்பல் மெல்ல மெல்ல விலகிச்செல்வதை சிறிது நேரம் அவதானித்தான்.

– நீங்கள் சொல்வதுபோல அது ஆப்ரிக்காவிற்குத்தான் போகுதென்று நினைக்கிறேன். .

– ஆமாம். அது வெகு தூரத்திலிருக்கிறது. கடுமையான வெப்பமுள்ள நாடு. வருடத்தில் பெரும்பாலான நாட்கள் சூரியனைப் பார்க்கலாம், கடற்கரைகள்கூட பாலைவனம்போல இருக்கும்.

– கடற்கரைகளில் ஒருவகை பனைமரங்கள் இருக்குமே, அங்குமுண்டா?

– மணல்வெளிகள் நிறைந்த நீளமான கடற்கரைகள் அங்குண்டு. பகல் நேரங்களில் கடல் மிகவும் நீல நிறத்துடனிருக்கும். பாய்விரித்த மீன்பிடிப் படகுகள் சிறகு விரித்து நீந்துவதுபோல கடலோரங்களில், கிராமங்கள் தோறும் மிதப்பதைக் காணலாம்.

– அப்படியென்றால் கடற்கரையில் அமர்ந்தபடி படகுகள் கடந்து செல்வதைப் பார்த்துக்கொண்டிருக்கலாம்? நிழல் பார்த்து அமர்ந்து கடலில் செல்லும் படகுகளைப் பார்த்தபடி ஒருவருகொருவர் கதைசொல்லிகொண்டு உட்கார்ந்திருக்கலாம்?

– ஆண்களென்றால் வேலை செய்வார்கள், வலைகளிலுள்ள ஓட்டைகளை தைத்து அடைப்பார்கள், கரையில் நிறுத்தியுள்ள படகுகளில் அடையாளத் தகடு கழன்றிருக்கும் பட்சத்திம் மீண்டும் ஆணியடித்து பொறுத்துவார்கள். படகிலுள்ள ஓட்டைகளை அடைப்பதற்குதவும் வச்சிரம் காய்ச்ச காய்ந்த சுள்ளிகளைத் தேடி சிறுவர் சிறுமியர் போவார்கள்.

தூண்டில் போட்டிருந்த ழியோர்தான் கவனம் மீன் பிடிப்பதிலில்லை, மோந்தேவிடம் சொல்லப்பட்டக் காட்சிகளை நேராகவே பார்த்துவிடுவது என்று தீர்மானித்தவர்போல அவரது பார்வை வெகுதூரத்தில் தொடுவானத்தில் பதிந்திருக்கிறது.

– செங்கடல் பகுதியில் ராட்சத சுறா மீன்களெல்லாங்கூட உண்டா?

– இருக்காதா பின்னே, ஒன்றிரண்டாவது இருக்கும். அவ்வப்போது அவைகள் படகுகளைத் தொடர்ந்து வரத்தான் செய்யும், ஆனால் அங்குள்ள மீனவர்களுக்கு அது பழகிவிட்டது. அதைக்கண்டு அவர்கள் பயப்படுவதில்லை.

– அப்போ, அவைகளால் ஆபத்தில்லை?

– சுறாக்கள் குணத்தில் நரிகள்மாதிரி. படகிலிருந்து தப்பிதவறி ஏதேனும் தண்ணீரில் விழுந்தால் போதும், சட்டென்று கவ்விச் செல்லும். மற்றபடி அவைகளால் பயப்பட ஒன்றுமில்லை.

– செங்கடல் ரொம்ப பெருசா இருக்குமென்று சொல்றீங்க அப்படீத்தானே?

– ஆமாம். நீ நினைப்பதைக்காட்டிலும் ஆகப்பெரியது. கடலையொட்டி நிறைய நகரங்கள், நிறைய துறைமுகங்கள். பெயர்களெல்லாம் மிகவும் வித்தியாசமாக இருக்கும்: பாலுல், பராஸ்சாலி, தெபா…மஸ்ஸாவா. மஸ்சாவா பெரிய நகரம், நகரம் முச்சூடும் வெள்ளை வெளேரென்று இருக்கும். படகுகளெல்லாம் கடற்கரையையொட்டி, இரவு பகலென்று பாராமல் நாட்கணக்கில் பயணித்து வடபகுதியிலுள்ள ராஸ் கஸார் வரை செல்வதுண்டு. ஒரு சில படகுகள் நோரா தீவுக்கூட்டத்தைத் சேர்ந்த தலக் கெபிர் தீவுவரைகூட செல்வதுண்டு, ஏன் சில நேரங்களில் கடலின் மறுகரையிலுள்ள ·பராசன் தீவுக்கெல்லாங்கூட போய்வருவதுண்டு.

மோந்தோ தீவுகளை நேசிக்கிறவன்..

– ஆமாம் ஆமாம், சிவப்பு நிறத்தில் பாறைகளும், மனல் மூடிய கடற்கரைகொண்ட தீவுகளை நானும் பார்த்திருக்கிறேன், அங்கே கடற்கரை ஓரங்களில் ஒருவித பனைமரங்களையெல்லாங்கூட கண்டிருக்கிறேன்.

– மழைக்காலங்களில், புயற்காற்றெல்லாங்கூட வீசும். அந்நேரங்களில் நீ சொல்கிற மரங்களெல்லாம் வேருடன் பிடுங்கி எறியப்படும், வீட்டுக் கூரைகளெல்லாம் காற்றில் பறக்கும்.

– படகுகளெல்லாங்கூட புயலால் தாக்குண்டு உடைந்துசிதறுமோ?

– இல்லை. அது மாதிரி எதுவும் நடப்பதில்லை. பொதுவாக அந்த நேரங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் பாதுகாப்பாக
வீட்டிலேயே இருந்துவிடுவார்கள்.

– அப்போ புயற் காற்று வந்தவேகத்தில் போய்விடும்.

– ஒருமுறை, சிறிய தீவொன்றிலிருந்த கடற்கரை குப்பத்தில், பனையோலை வேய்ந்த குடிசையில் மீனவக் குடும்பமொன்று வசித்துவந்தது. அவரது மூத்த மகன் நன்கு வளர்ந்திருந்தான், அநேகமாக உன் வயதிருக்கும். தன் தந்தை மீன்பிடிக்க போகிறபோதெல்லாம், துணைக்கு அவனும் செல்வான், தந்தையுடன் சேர்ந்து வலைவீசவும் செய்வான். கரை திரும்புகிறபோது நிறைய மீன்களுடன் வருவார்கள். தகப்பனுடன் மீன் பிடிக்கவென்று கடலிலிறங்க அவன் தயங்குவதேயில்லை. பையன் திடகாத்திரமாக இருப்பான். காற்றிருந்து பாய்மரப் படகை செலுத்த அறிந்தவன். கால நிலை நன்றாக இருக்கிறபொழுது, கடலும் அமைதியாக இருக்குமென்றால் அருகிலுள்ள தீவுகளுக்குக் குடும்பத்தினருடன் சென்று உறவினர்களையும் நண்பர்களையும் பார்த்துவருவது தகப்பனின் வழக்கம்.

– படகு தன்பாட்டுக்கு முன்னேறும், எந்த சந்தமும் கேட்காது. கதிரவன் மேற்கில் மறையும் நேரமென்பதால் செங்கடலும் கூடுதலாகச் சிவந்திருக்கும்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கிறபொழுதே, எரித்ரேயா என்ற பெயர்கொண்ட சரக்குகப்பல் நன்கு வளைந்து திரும்புகிறது, முன்பகுதி நீரகிழித்துக்கொண்டு முன்னேற, சங்கொலியை ஒருமுறை சட்டென்று உயர்த்தி ஒலிக்கச்செய்து விடைபெறுகிறது.

– நீங்க எப்போது அங்கே திரும்பப் போகணும்? – மோந்தோ கேட்டான்.

– எங்கே செங்கடலிருக்கும் ஆப்ரிக்காவிற்கா? தூண்டிலுடந் மீன் பிடித்துக்கொண்டிருந்த ழியோர்தன் சிரிக்கிறார். நான் அங்கேயெல்லாம் போகமுடியாது. இங்குதான் இருந்தாகவேண்டும், இதோ இந்த கல்தான் எனக்கு எல்லாம்.. இதைத் தவிர வேறுலகம் தெரியாது. .

– ஏன்?- ஆர்வத்துடன் பதிலை எதிர்பார்த்தான்.

– அது அப்படித்தான், நான் ஏழை மீனவன், எங்கிட்டே சொந்தமா படகென்று எதுவுமில்லை.- சொன்னவர் கவனம் மீண்டும் தூண்டிற் கழிக்குத் திரும்பியது.

சூரியன் தொடுவானத்திற்கு அருகில் வந்தபோது, தமது கையிலிருக்கும் தூண்டிற்கழியை கல்லில் கிடத்தினார். தமது பையிலிருந்து சாண்ட்விச் ஒன்றை எடுத்து பாதித் துண்டை மோந்தோவிடம் நீட்டினார். சூரிய ஒளி கடலில் பிரதிபலிப்பதை இரசித்தபடி இருவரும் ரொட்டியைக் கடித்துத் தின்றார்கள்.

இருட்டுவதற்கு முன்பாக மோந்தோ புறப்பட்டாக வேண்டும். இரவைக் கழிக்க எங்கேயாவது இடம் தேட வேண்டும். .

– அப்போ நான் புறப்படறேன்

– நல்லது.

மோந்தோ விடை பெற்றான். அவன் சிறிது தூரம் சென்றிருப்பான், தூண்டில் மனிதர் உரத்த குரலில் சொன்னார்.

– திரும்பவும் ஒரு நாளைக்கு வா. படிப்பதற்குச் சொல்லித் தருவேன். ரொம்பச் சுலபம்.

நன்கு இருட்டும் வரை மீன் பிடித்துக்கொண்டிருந்தார். கலங்கரை விளக்கு நான்கு நொடிகளுக்கொருமுறை சீரான குறியொளியூடாக திசைகாட்டத் தொடங்கியது.

(தொடரும்)

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா