விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தைந்து

This entry is part of 36 in the series 20090129_Issue

இரா.முருகன்அதிகாலையிலேயே முழிப்பு தட்டிவிட்டது. எழுந்து உட்கார்ந்தபோது இருக்கப்பட்ட இடமும் ஸ்திதியும் புலப்படவில்லை. ஜெயிலில் இருக்கிறதாகப் பட்டது. இதோ பிகில் சத்தம் கொடுப்பான் பாராக்காரன். எழுந்து மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு வெளியே புதர் மண்டிய பிரதேசத்தில் கவிழ்க்க வேண்டும். அப்படியே விசர்ஜனம் முடித்து தந்த சுத்தி. குளியல். ஆஜர் பட்டியல் எடுப்பு. கம்பங்களி. படிப்பும் வேண்டாம் மசிரும் வேண்டாம் என்று ஒதுங்கிப் போறவனை எல்லாம் இழுத்து உட்கார்த்தி அவன் வாயாற என் பொண்டாட்டி, தாயார், பாட்டி எல்லோரையும் கெட்ட செய்கைக்குக் கூட்டிவரச் சொல்லித் திட்டுவதை வாங்கிக் கட்டிக்கொண்டு நாலெழுத்து போதிக்க வேணும். அது முடிந்தால் எண்ணெய்ச் செக்கை ஓட்டி ஓட்டி அரைத்துக் கூழாக்கி எள்ளெண்ணெய் எடுப்பது, ஈரப் பிண்ணாக்கைக் காயப் போடுவது, தச்சுவேலை, கொத்துவேலை. உடம்பில் ஜீவன் இருக்கும் வரைக்கும் தான் அது எல்லாம்.

சர்க்கார் கடிதாசு இன்னிக்காவது வருமோ? இல்லே சீக்கிரமே எல்லாம் முடிந்து தூக்கில் தொங்கி உசிரை விட வேண்டி இருக்குமா? மனசு மருட்டியது. மூத்திரம் வேறே முட்டிக் கொண்டு வந்தது. உசிர் கிடக்கு. நீர் பிரியட்டும் முதலில்.

சட்டென்று எல்லாம் விளங்கினது. இப்போதைக்கு உயிர் போகாது.

காராகிருஹத்தை விட்டு வெளியே வந்து ஒரு நாள் ஒரு பொழுது முடியப் போகிறது. என் வீட்டில் நான் இருக்கேன். வாசல் திண்ணையில் படுத்து இதோ கண் முழித்து இன்னும் உசிரோடு தான் இருக்கிறேன். இந்த அளவு சந்தோஷமே போதும்.

திண்ணையில் இருந்து உள்ளே போனேன். ராத்திரியில் பூட்டி வைத்திருந்த கம்பிக் கதவு மட்ட மல்லாக்கத் திறந்து கிடந்தது. நீ வீட்டுக்குள் இல்லை என்பது கஷ்டப்படுத்தினாலும், அற்ப சங்கை கழித்து வந்து அதெல்லாம் யோசிக்கலாம் என்று முடிவு செய்து கொல்லைப் பக்கம் நடந்தேன்.

இது நம் அகம் தானே? அப்போ, ஒரு பண்டம், பாத்திரம், துணிமணி இல்லாமல் இதுக்கு எப்படி ஒரு அந்நியமான களை வந்து சேர்ந்தது? ஸ்வாமி மூலைக்கு முன்னால் தோல் செருப்பு ஒண்ணே ஒண்ணு குப்புறக் கிடந்தது. அனாசாரமாக அதை அங்கே விட்டுவிட்டுப் போனது யாராக இருக்கும்? செய்த பாவத்துக்கு அனுபவிப்பதே போறாதா? செருப்பை ஸ்வாமிக்கு முன்னால் விட்டு இன்னும் பாபச் சுமையை மேலே ஏற்றிக்கொள்ள வேணுமா என்ன?

அந்தச் செருப்பை அந்தாண்டை தள்ளியபடியே கொல்லைப் பக்கம் வந்து சேர்ந்தேன். ராத்திரி சமைத்து அலம்ப வைத்த பாத்திரமும், குவளையும் இல்லாமல், வெளியே போய் எறிந்துவிட்டு வர பிரப்பங்கூடையில் ராத்திரி சாப்பிட்ட எச்சில் இலை இல்லாமல் கிணற்றடி வெறிச்சென்று கிடந்தது. மாடப்புறையில் பார்த்தேன். பழைய தைல போத்தல். தூசி துப்பட்டைக்கு நடுவே தலையை நீட்டி சவுக்கியமா என்று அது விசாரித்தது. துர்வாடை அடிக்கிற மயில் றெக்கை தைலம். என்னத்துக்கு எனக்கு அது?

எருக்கம் புதரும் கள்ளிச் செடியுமாக கக்கூசுக்குப் போகிற பாதை கிட்டத்தட்ட அடைந்து கிடந்தது. செருப்பு இல்லாமல் அங்கே போனால் முள் தைக்கவோ, பூச்சி பொட்டு கடிக்கவோ செய்யலாம். என்ன பண்ண? நம்ம வீட்டை இப்படிப் பாழடைய வைத்துவிட்டு நான் வெகுகாலம் கம்பங்களி சாப்பிட்டபடி பிண்ணாக்கு உலர்த்திக் கொண்டிருந்துவிட்டேனே. போறது, உசிராவது பிழச்சுதே சொல்லு.

சுத்தப்படுத்தி எத்தனையோ நாள் ஆகியிருந்த அந்த இடத்தின் துர்வாடையை சொல்ல ஒண்ணாது. நாசமாப் போச்சு போ. அங்கே என்ன இலை போட்டு பரசேஷணம் செஞ்சு எள்ளுருண்டையும் உளுந்து வடையுமா தெவசச் சாப்பாடு சாப்பிடவா போறேன்? இங்கே காதில் பூணூலை மாட்டிக் கொண்டு உட்கார்ந்து நீர் முழுக்கப் பிரியும்படிக்கு இறக்கி விடவேண்டியதுதான்.

பூணூல் எங்கே? அதைத் தான் அவிழ்த்து வீசியாச்சே. விட்டது தொல்லை. சந்தியாவந்தனமும் மாத்யானமும் அமாவாசையும் திவசமும் வேண்டவே வேண்டாம். அதுக்கான நேரமும் மிச்சம்.

அற்ப சங்கை கழித்து வெளியே வந்து திரும்ப கூடம் நெடுக நடந்து வாசலுக்கு வந்தபோது வாசலில் யாரோ தலை தட்டுப்பட்டது.

ஐயா, நாகப்பட்டணத்துலே இருந்து வர்றேன். ஞாபகம் இருக்குதா? போன மாசம் அமாவாசைக்கு அடுத்த நாள் வந்தேனே. தோட்ட வேலைக்குப் போறதுக்கு கப்பல் சத்தம் கொண்டாந்திருக்கேன். சொன்ன படிக்கு ஆடி பொறந்ததும் பயணம் வைக்க முடியலை. தப்பா எடுத்துக்க வேணாம். பணம் பொரட்ட சுணங்கிடுத்து. வீட்டோட மாரியாத்தா வந்து இறங்கிப் போனது வேறே. போறதுதான் போறோமேன்னு ரெண்டு மவளையும் கூடவே கூட்டிட்டுப் போயிட்டா. எல்லாம் பறிகொடுத்துட்டு அதான் இப்போ வந்து நிக்கறேன். மூட்டை முடிச்சு கட்டக் கூட ஒண்ணும் கிடையாது. போகுது விடுங்க.. அடுத்த கப்பல் எப்போ சாமி புறப்படுது?

அவன் கேட்டபோதுதான் எனக்கு உறைத்தது. அவன் துக்கம் அவனுக்கு. எனக்கு ஏது மூட்டையும் மண்ணாங்கட்டியும்? என் துணிப்பை என்கிட்டேயே இருக்கட்டும். ஒப்படைக்கவும் திறந்து காட்டவும் யாரையும் தேட வேண்டாம். திறந்து வைத்து என்ன ஆகப் போகிறது? பொத்தி வைத்து போய்ச் சேர இருபத்து அஞ்சு ரூபாய் பணம். நீர்க்காவி ஏறின வேஷ்டி. கொலைகாரப் பட்டம். போதும்.

இங்கே உட்காரலாமா?

அவன் திண்ணையைக் காட்டிக் கேட்டான். உட்காரச் சொல்ல நான் யார்?

நான் இப்போது இருப்பது என் வீடு இல்லை. ஸ்தூலமாக எனக்குச் சொந்தமானதாக இருக்கும். அதுவும் கூட இல்லாமல் போயிருக்கலாம். இந்த நிமிஷத்தில் எனக்கு பாத்தியதை இல்லாத இடம் இது. சாப்பாட்டுக் கடை போல், ஜெயில் போல், பெஞ்சி போட்டு நாலு பேர் குந்தி இருக்கிற தெரு வீடு போல் அந்நியமான இன்னொரு இடம். யாரும் எங்கேயும் இஷ்டம் போல் குத்த வைக்கட்டும்.

நான் முணுமுணுப்பாக அவனுக்கு ஏதோ பதில் சொல்லி விட்டு இருக்கச் சொல்லித் திண்ணையைக் காட்டினேன்.

நேரம் பிடிக்குமா சாமிகளே? அப்போ குளிச்சுக் கோவில் வாசல்லே நின்னபடிக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு ஓடியாந்துடறேன். போற இடத்துலே கோவிலும் குளமும் எங்கே இருக்கப் போவுது?

அவன் சொன்னபடிக்கு வந்த வழியே திரும்ப எனக்கும் யோசனை வந்தது. குளிக்க கோவில் தெப்பக் குளத்துக்குப் போனால் என்ன? பக்கத்திலேயே பிரம்ம சௌசத்தையும் முடித்துக் கொள்ளலாம். போகிற வழிக்கு வைத்து கொஞ்சம் கரித்தூளோ மரத்தில் எட்டிப் பறிக்கிற உசரத்தில் வேப்பங்குச்சியோ கிடைத்தால் பல் விளக்கவும் சரிப்பட்டு வரும்.

நான் கோவில் பக்கம் வந்தபோது குளக்கரையில் ஒன்று ரெண்டாக ஜனங்கள் ஸ்நானம் முடித்து இடுப்புத் துணியை நனைத்து உலர வைத்தபடி கோவிலுக்குப் போகக் காத்திருந்தது கண்ணில் பட்டது. மலையாள பூமியில் ஈர உடுப்போடு ஸ்வாமி தரிசனம் பண்ணப் போவதில் தடையேதும் இல்லை தெரியுமோ? இங்கேயானால், பித்ரு காரியத்துக்காக, சரியாகச் சொன்னால் சம்ஸ்காரம் பண்ணும்போது மட்டும் ஈரத் துணி உடுத்துக் கொள்வது உசிதம். மற்றபடி அனாசாரம் இல்லையோ அது.

சுவாமி, சவரம் பண்ணலாமா? தலை மயிரையும் நறுவிசா வெட்டி விடறேன். ஒரு அணா தான். போணி பண்ணிட்டுப் போங்க, புண்ணியமாப் போகும்.

குளக்கரையில் ஒருத்தன் கத்தியை தோல்வாரில் தீட்டிக் கொண்டு விசாரித்தான்.

தாடையைத் தடவிப் பார்த்தேன். சாமியார் போல் முகத்தில் ரோமம் மண்டிக் கிடந்தது. தலையிலும் நமைச்சலும் அரிப்பும் தாங்க முடியவில்லை. எல்லாம் மொத்தமாக வெட்டிக் களைந்தால் என்ன? சௌசம் முன்னாடி. பிரம்ம சௌசம் அப்புறம்.

ஷவரம் பண்ணி தலையை முண்டிதமும் செய்யச் சொல்லி அவனிடம் சொல்லி விட்டு முன்னால் உட்கார்ந்தேன்.

அவன் ஒரு வட்டக் கண்ணாடியை என் கையில் பிடித்துக்கொள்ளக் கொடுத்தான். அதில் தெப்பக்குளமும், தண்ணீரும், உதய காலத்து சூரிய வெளிச்சமுமாக பார்க்க ரம்மியமாக இருந்தது. அப்புறம் என் முகம். எனக்கே பிடிக்காமல் போன ஆனாலும் சுமந்து அலைந்து தொலைக்க வேண்டிய முகம் அது. உடம்பு இது.

கரகரவென்று தலையை மொட்டை அடித்து ஒரு குத்து சந்தனத்தை வேறே வெறுந் தலையில் பூசிவிட்டான் நாவிதன். முகத்திலும் தாடி மீசை ஒழிந்து போனது.

ஆள் நடமாட்டம் இல்லாத மூலையில் குத்த வைத்துவிட்டு வந்தேன். வரும் வழியில் ஆலமரத்தில் குச்சி ஒடித்துப் பல் துலக்கிக் கொண்டு குளத்தில் மூழ்கிக் குளித்தேன். எப்போதும் ஏற்படாத அலாதியான ஆனந்தத்தையும் மன சமாதானத்தையும் அந்தக் சுத்தமான குளிர்ந்த பச்சைத் தண்ணி கொடுத்தது.

கோவிலுக்குள் நுழைந்து ஒரு தடவை பிரகாரம் சுற்றுவதற்குள் வயிறு பசிக்க ஆரம்பித்தது. இன்னும் ஒரே ஒரு சன்னிதி. நவகிரகத்தையும் ஒரே ஒரு தடவையாவது பிரதிட்சணம் வைத்து சண்டிகேஸ்வரரிடம் கையைத் தட்டிச் சொல்லிக் கொண்டு கிளம்ப வேண்டியது தான். அதை எல்லாம் சாவகாசமாக இன்னொரு நாள் வச்சுக்கலாம். இப்ப நான் தான் பிரதானம் என்றது வயிறு.

கோவில் பக்கம் சாப்பாட்டுக் கடையில் ராயன் ஒருத்தர் இட்டலியும் ரவை உப்புமாவும் பித்தளைப் பாத்திரத்தில் வைத்து விற்றுக் கொண்டிருந்தான். உட்கார்ந்து சாப்பிட அங்கே இருக்க இடம் இல்லாத காரணத்தால் பூவரசம் இலையில் ரெண்டையும் வாங்கி மேலேயே புளிக்குழம்பையும் துவையலையும் போடச் சொல்லிக் கையில் பிடித்தபடி குளக்கரைக்குத் திரும்ப வந்து சேர்ந்தேன்.

சாப்பிட்டு முடித்து வீட்டுக்கு நடந்தபோது பெரிசாக இரைச்சல் கேட்டது. தலைப்பாகை தரித்து அல்பாகா கோட்டு போட்ட ஒருத்தன் உள்ளே பார்த்துச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தான்.

வாசல் கதவை ராபணான்னு திறந்து போட்டுட்டு எங்கே போய்த் தொலைஞ்சீர்? எவனாவது கஜப் போக்கிரி குரிச்சியையும், அலமாரியையும் மட்டுமில்லே, கல்லாவைத் திறந்து காசையும் எடுத்துட்டு ஓடப் போறான். அப்புறம் எஜமானியம்மாவுக்கு நீர் தான் பதில் சொல்லியாகணும். தாணாக்காரன் லட்டியாலே இதமாப் பதமாத் தட்டி முட்டியைப் பெயர்த்துட்டு விசாரிப்பான். உம்மைத் தான். என்னை இல்லே. வயசான காலத்துலே தேவையா இதெல்லாம்?

உள்ளே இருந்து வந்த விருத்தனைத்தான் நான் நேற்று ராத்திரி ஒரு நிமிஷம் தீபத்தைக் கொளுத்திப் பிடித்தபடிக்குப் பார்த்தது. இவன் இங்கே காவல் இருக்க நியமிக்கப்பட்டவன் போல் இருக்கு. அப்படியானால் காலையில் நான் சர்வ சுதந்திரமாக உள்ளே போனபோது இவன் எங்கே காணாமல் போனான்?

பின் வாசல் பக்கமா சுருட்டு வாங்கப் போனேன். இப்பத்தான் கிளம்பினேன். செருப்பை வேறே காணோம். தேடிக்கிட்டு இருக்கச் சொல்ல நீங்க வந்துட்டீங்க.

அவன் வினயத்தோடும் கையில் ஒற்றைச் செருப்போடும் நின்றான்.

இன்னொரு செருப்பு நான் அலமாரிக்கு அந்தாண்டை சமையல் கட்டுப் பக்கம் தள்ளி விட்டு விழுந்துகிடக்கிறது என்று சொல்ல நினைத்தேன். பைத்தியமா என்ன? சும்மா இரு என்று மனசு அதட்ட வெறுமனே பார்த்துக் கொண்டு நின்றேன்.

நீர் யாரையா? உமக்கு என்ன வேணும்?

அல்பாகா கோட்டுக்காரன் என்னை மேலும் கீழுமாகப் பார்த்தபடி கேட்டான்.

வேலை தேடி வந்திருக்கேன். தெலுங்கு பிரதேசத்துக் காரன். நாலு எழுத்து, ரெண்டு பாஷை தெரியும். கணக்கு வழக்கெல்லாம் செய்யக் கூடியவன். உடனடியா என்ன வேலை கிடைக்கும்னு தெரிஞ்சா தேவலாம். எங்கேன்னாலும் பரவாயில்லே.

நான் கவனமாக இங்கிலீஷில் பதில் சொன்னேன். அதில் தப்பு இருக்கலாம். என்றாலும் பாதகம் இல்லை. அவன் ஒரு மரியாதையோடு என்னைப் பார்த்ததே போதும்.

நாலு வார்த்தை இங்கிலீஷ் பேசினால் பட்டணத்தில் ஒரு மரியாதை ஏற்பட ஆரம்பித்து வெகு காலம் ஆகிறது. பாதிரி பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காகப் போயிருந்தால் நானும் கரதலபாடமாக அந்த பாஷையைக் கற்றுத் தேர்ந்து நேவிகேஷன் கிளார்க் ஆகியிருப்பேன். ஜெயிலில் தச்சு வேலை செய்து கொண்டு மூத்திரச் சட்டியைக் குப்புறக் கவிழ்த்துக் கொண்டிருக்க மாட்டேன். கொடுப்பினை இல்லாமல் போச்சே, என்ன செய்ய?

சார், கொஞ்சம் வாசல் திண்ணையில் உட்காருங்கோ. முதலாளி வந்துடுவார். கப்பல் வரும் திங்கள்கிழமை தான் கிளம்பறது. சமயம் ஏகத்துக்கு இருக்கு.

அவன் கைகாட்ட, வாசலுக்கு வந்து உட்கார்ந்தேன். என் பின்னாலேயே அந்த காவல்காரக் கிழவனும் வந்தான். அரவமா என்று விசாரித்தான். தெலுங்கு என்றேன். வெகு பிரியமாகச் சிரித்தான். அவனுக்கு இங்கிலீஷ் எல்லாம் எதுக்கு?

இந்த வீட்டுலே ஒரு தமிழ் பிராமணன் இருந்தானே? அவனும் வீட்டுக்காரியும் மட்டும் இருந்த ஞாபகம். கருப்புப் பட்டணத்திலே பொடிக்கடையோ ஏதோ வச்சு ஜீவனம் நடத்திட்டு வந்தான். ஒரு தடவை குண்டூர்லே இருந்து ரெண்டு சாக்கு மிளகாய் கொண்டு வந்து கொடுத்திருக்கேன். அது ஏழெட்டு வருஷம் முந்தி.

ஜாக்கிரதையாகப் பொய் சொன்னேன். இனி மிச்ச வாழ்நாள் முழுக்க வரதராஜ ரெட்டியாக இருக்க வேணும். அதோடு கூட லலிதாம்பிகையும் இந்த வீடும் வேணும். ரெட்டிக்கு உடமையானது இல்லை ரெண்டுமே. மகாலிங்க ஐயன் பாத்யதை கொண்டாட வேண்டியது. பொறுப்பாக வைத்துக் காப்பாற்ற வேண்டியது.

கிழவன் என்ன என்று புரிபடாத மாதிரி தலையை ஆட்டினான். காக்கிச் சட்டைப் பையில் இருந்து ஒரு சுருட்டை எடுத்து ஆசையோடு முகர்ந்து விட்டுத் திரும்ப அங்கேயே வைத்தான். அந்த வாடை இதமாக இருந்தது. பொடிக்கடையில் சதா வரும் நல்ல வாசனை அது. பத்திரத்தையும், பாதுகாப்பையும் கொடுக்கக் கூடியது.

இந்த வீட்டுக்குக் குடக்கூலி வாங்க அப்பப்ப பக்கத்து கிராமப் பிரதேசத்துலே இருந்து வயசான ஒரு பிராமணர் வந்துட்டுப் போவார். பார்த்திருக்கேன்.

அவன் திரும்ப சுருட்டை எடுத்துக் கையில் வைத்து உருட்டினபடிக்குச் சொன்னான்.

எங்கே இருந்து வருவார்? எப்படி இருப்பார்?

நான் பரபரப்பாகக் கேட்டேன். கழுக்குன்றத்தில் இருந்து உன் சார்பாக வாடகை வாங்கிப் போக யாரையாவது அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறாயோடீ லலிதா?

தாட்டியான மனுஷன். ஊர்லே யாரோ பொம்பளைக்குப் போக வேண்டிய காசாம்.

அந்தப் பொண்ணு வந்திருக்காளா எப்பவாவது? நீர் பார்த்திருக்கீரா? என்ன வயசு?

என் குரலில் பரபரப்பு கூடியதை நானே புரிந்து கொண்டேன். இங்கே இன்னும் சில தினங்கள் இருந்தால் அல்லது திருக்கழுக்குன்றம் ஒரு விசை போய்வந்தால் நீ கிடைக்கக் கூடும் என்று தோன்றியது.

இதானே வேணாங்கிறது. பொம்பளைன்னதும் வாயைப் பொளக்கறீரே. குட்டி ஷோக்கு வேண்டியிருக்குதா? கரும்புத் தோட்டத்துலே இளுத்து வச்சு அறுத்து உப்புத் தண்னியிலே போட்டுடுவான். எதுக்கும் மூட்டையிலே இன்னொரு ஜாமானை வாங்கிச் சொருகி வச்சுக்கும். பட்டணத்திலே காசு கொடுத்தா எதுவும் கிடைக்கும். புரியுதா?

கிழவன் எகத்தாளமாகச் சொல்லியபடி சுருட்டை வாயில் வைத்துச் சுவைத்தபடி வீட்டுக்குள் நடந்தான். அல்பாகா காரியஸ்தன் எங்கே போய் ஒழிந்தான். இந்தக் கிழட்டுக் கம்மனாட்டி பல்லைத் தட்டி நாக்கை அறுத்து ஜெயிலில் போட வேண்டாமோ?

அம்மா வந்தாச்சு.

அல்பாகா கோட்டுக்காரன் குரல் வாசலில் கேட்டது. ஒரு ஜட்கா வண்டி வந்து நிற்க கருத்த, தாட்டியான நடுத்தர வயசு பெண் ஒருத்தி இறங்கினாள்.

யாரு? அந்த மொட்டையா? இங்கிலீசு தெரியுமாமா? நல்லதாப் போச்சு. பிரஞ்சும் பேசுவானான்னு கேளு.

என்னை குத்துமதிப்பாகப் பார்த்தபடி பேசியபடிக்கு அவள் உள்ளே போக, காரியஸ்தன் என் கையைப் பார்த்தான்.

பச்சை குத்தியிருந்த எழுத்துகளை ஒரு வினாடி உற்று நோக்கிவிட்டுக் கேட்டான்.

வரதராஜ ரெட்டி, உமக்கு பிஜித் தீவுக்குப் போக சம்மதமா? அம்மா கேக்குது. சொல்லும். பிரஞ்சு பாஷை பேசுவீரா? இங்கிலீஷ் மட்டும் தானா?

(விஸ்வரூபம் தொடர் சிறு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடரும்)

Series Navigation